நீட் விசயத்தில் தலையிட தமிழக அரசுக்கும் மக்களுக்கும் இன்னமும் வாய்ப்பிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் விதமாக தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு எழுதிய பதிவு இது.
நண்பர்களே! தோழர்களே!
"நீட்" குறித்த சில விவரங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
1. துறைவாரியான நாடாளுமன்ற நிலைக்குழுவின் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை) 92வது அறிக்கை 2016, மார்ச் 8 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
2. இந்த அறிக்கை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்திடவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்திடவும் அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வை (CMET) பரிந்துரைத்தது. அது தான் தற்போதைய "நீட்" என்ற வடிவத்தை.பெற்றுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு நுழைவுத் தேர்வு தான் பரிந்துரைத்ததே தவிர 'தகுதிக் தேர்வை'அல்ல.
3. பத்தி 5.26 யில் உள்ள இந்த பரிந்துரையில் இத்தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விளக்களித்திடவும் அவ்வாறு விலக்களிக்கப்பட்ட மாநிலங்கள் பிறகு இத்தேர்வை ஏற்க முன்வந்தால் அதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
4. 2016 மே மாதம் "நீட்" கட்டாயமாக்கும் குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் பிரப்பிக்கப்பட்டது.
5.2016 ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதவில் "நீட்" கட்டாயமாக்க IMC சட்டத்தில் பிரிவு 10 D சேர்க்கப்பட்டது.
6. இதே சட்டத்தில் 2016-17 ஆண்டிற்கு மட்டும் இத்தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களிக்கப்பட்து.
7. அவ்வாறு விலக்களிக் கூறப்பட்ட காரணங்களில் ஒன்று சில மாநிலங்கள் ஒர் ஆண்டு விலக்கு கேட்டன என்பதாகும். தமிழ் நாட்டை பொறுத்தவரை இது உண்மையன்று. தமிழ் நாடு நிரந்தர விலக்கையே தொடக்கத்திலிருந்து கோரி வந்துள்ளது. தமிழ் நாடு கோரியதை நாடளுமன்றத்திற்கு தெரிவிக்காமல் சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தை தவராக வழிநடத்தியுள்ளார்.
8. விலக்களிக்க கூறப்பட்ட இரண்டாவது காரணம் மாநில அளவிலான தேர்விற்கான பாடத்திட்மும் "நீட்" பாடத்திட்டமும் வெவ்வேறானவை.
9. 2016 - 17 யில் +1 படித்தவர் 2017-18யில் +2 படிப்பார். மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டம் என்பது +1, +2 இணைந்ததே. 2016-17யில் இருந்த நிலை தான் 2017-18க்கும். அவ்வாறு இருக்க 2016-17க்கு விலக்களித்தது போல் 2017-18க்கும் விலக்களித்திருக்க வேண்டும். விலக்களிக்காதது மாணவரை வஞ்சிக்கும் செயலாகும்.
10.Modern Dental College வழக்கில் 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு 2016 மே 2 யில் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக மருத்துவ மாணவர் சேர்கை மத்திய பட்டியலில் வராது பொதுப்பட்டியலில் தான் வரும் என கூறியுள்ளது. பொதுப் பட்டியலில் வருவதனால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அவசியமாகிறது. அத்தகைய சூழலில் மத்திய மாநில அரசுகள் இணக்கத்துடனும் சுமூகமாகவும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. (It should be settled harmoniously between the centre and the State under the touchstone of Article 254).
11. தமிழ் நாடு சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள 2 சட்டங்களுக்கும் மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க எந்த தடையும் இல்லை.
12. தமிழ் நாடு அரசு கோரிப் பெற்ற சட்ட ஆலோசனையிலும் (Legal Opinion from a Senior Counsel of Supreme Court) இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
13. மத்திய அரசு அரசமைப்புச் சட்டத்தையும், நீதிமன்றத்தையும், நாடாளுமன்ற நிலைக்குழுவையும் மதிக்காமல் பெரும் பகுதி மக்களின் நலனுக்கு எதிராக நடக்கிறது.
14. மத்திய அரசின் மக்களாட்சி மாண்பிற்கெதிரான, கூட்டாட்சித் தத்துத்திற்கெதிரான நடவடிக்கையை கண்டித்தும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்றுத்தந்திட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து நேராடியான இயக்கத்தை உடனடியாக நடத்துவது தமிழ் நாடு அரசின் உரிமையை காத்திடவும், மாணவர் நலன் பேனவும், அரசு மருத்துவமணைகளை காத்திடவும் உதவும்.
15.குடியரசுத் தலைவர் தேர்தல் நடவடிக்கை ஜீன் 14 தொடங்குகிறது, ஜீன் 14 முதல் சட்டமன்றக் கூட்டம் நடை பெறவுள்ளது, ஜீன் 26க்குள் தமிழ் நாடு அரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
+2வில் சிறந்த மாணவராக திகழ்ந்து நல்ல மதிப்பெண் பெற்றும் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாணவர் அவர் தம் பெற்றோர்களின் அவதிகளை புரிந்துக் கொண்டு அரசியல் கட்சிகள் தங்கள் உட்பகையை மறந்து மக்கள் நலன் காக்க களம் காணவேண்டும்.
தோழமையுடன்,
பிரின்ஸ் கஜேந்திர பாபு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக