தீக்கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீக்கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 31

ரைட்டர்: வாழ்வை அதிகாரம் சூறையாடும் போது நீங்கள் பார்வையாளரா பங்குதாரியா? -ஆதவன் தீட்சண்யா



சைரனை அலறவிட்டபடி தலைதெறித்தோடும் காவல்துறை/ ராணுவ வாகனங்கள் யாரையோ காப்பாற்றவோ ஏதோவொரு குற்றத்தை தடுத்திடவோ தான் ஓடுகின்றன என்று நம்பிவிடாதீர்கள். ஒருவேளை அவை உங்களது அப்பாவி பிள்ளைகளை கண்காணா இடங்களுக்குக் கடத்திப்போய் குற்றவாளிகள் என்று பொய்முத்திரை குத்தி என்கவுண்டரில் சுட்டுத்தள்ளவும் ஓடக்கூடும்.

என்கவுண்டரில் போலி அசல் என்கிற பகுப்புகள் அர்த்தமற்றவை. அனேகமான  என்கவுண்டர்கள் இட்டுக்கட்டப்பட்டகுற்றச்சாட்டுகளின்பேரிலான படுகொலைகளே. 20 இலட்சம் ரூபாய் விருதுத்தொகையைப் பெற்றுவிடும் பேராசையில் காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் அப்பாவி இளைஞர்கள் மூவரை சுட்டுக்கொன்றுவிட்டு ‘தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை’ என்று ராணுவத்தார் நாடகமாடினர். நாகாலாந்தில் பணிமுடித்துவந்த சுரங்கத்தொழிலாளர்கள் தீவிரவாதிகள் என ராணுவத்தாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பனிமூட்டத்தில் மங்கலாக கண்ணுக்குத் தென்பட்ட மாத்திரத்திலேயே தேசவிரோதி என்று துப்பறிந்து உயிரெடுத்துவிடுகிறார்கள்.

குடிமக்களுக்கு எதிராக எந்த பழிபாவத்தையும் செய்துவிட்டு நாட்டின் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டால் நியாயமாகிவிடும் என்கிற தைரியம் போலிசாருக்கும் ராணுவத்தாருக்கும் எங்கிருந்து வருகிறது? ‘உரிமைகளுக்காகப் போராடும் குடிமைச்சமூகம் நாம் முறியடித்தாக வேண்டிய புதிய போர்முனையாக உருவெடுத்துள்ளது’ என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் வெறியேற்றி அனுப்பப்படும் போலிஸ் அதிகாரிகள் மக்களை தேசவிரோதிகளாகவும் குற்றவாளிகளாவும்தானே அணுகுவார்கள்? குடிமக்கள் தமது உடல்மீது முழுவுரிமை கோரமுடியாது என்று கொக்கரிக்கும்  ஓர் அரசின் ஏவல்படையினர் இவ்வாறு துள்ளுவதில் வியப்பேது! 

இங்கு தேசப்பாதுகாப்பின் பெயரால் நிறைவேற்றிடும் சட்டங்கள் யாவும் தேசத்தைப்  பாதுகாப்பதற்கானவையல்ல. அச்சட்டங்கள் ஆளும் வர்க்கத்தினரின் குறுகிய நலன்களை பாதுகாப்பதற்காகவோ அவர்களது தனிப்பட்ட பகைமைகளை தீர்த்துக் கொள்ளவோ கருத்தியல் எதிராளிகளை "அப்புறப்படுத்தவோ" நிறைவேற்றப்பட்டதாகவும் இருக்கலாம்.

ஆள்தூக்கிச் சட்டமான ஊபாவின் கீழ் சிறையில் வாடும் ‘பிகே16’ குற்றவாளிகள் இந்நாட்டின் மதிக்கத்தக்க மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களுமாவர். முன்னதாக, அவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும்படியான கோப்புகள் அவர்களது கணிணிகளிலும் செல்பேசிகளிலும் ஊடுருவிய மர்மநபர்களால் ஊன்றப்பட்டன. பின் அக்கோப்புகளை அவர்களுக்கெதிரான சான்றுகளாக்கி தேசியப்புலனாய்வு நிறுவனம் கைது செய்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கல்விவளாக உரிமைகளுக்காக, ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடிய பலரையும் இந்த ஊபாவின் கீழ் கைதுசெய்து சொல்லொணா கொடூரங்களுக்கு ஆட்படுத்துவதெல்லாம், "கருத்தியல் எதிராளிகளை அப்புறப்படுத்துவது" தானே!. அன்றாட பரபரப்புகளாக நம்மைக் கடக்கும் இத்தகைய நடப்புண்மைகளை நினைவூட்டும் விதமான கதையமைத்து, சகமனிதர்களின் வாழ்வை அதிகாரம் சூறையாடும் போது நீங்கள் பார்வையாளரா அல்லது பங்குதாரியா என்கிற கேள்வியை  எழுப்பி் நம் காலத்தின் அரசியல் படமாக உருவெடுத்துள்ளது ரைட்டர்.

ரைட்டர், தனிமனிதரிடமும் சமூக நிறுவனங்களிலும் அரசியந்திரத்திலும் வெவ்வேறு அளவிலும் வடிவிலும் நிலைகொண்டுள்ள அதிகாரமானது, தம்மிலும் எளியோர்க்கு எதிராக இயங்கும் நுண்தளங்களின் நேர்சித்திரமாகும். ஆணாதிக்கமும், சாதியாதிக்கமும், பதவியாதிக்கமும் காவல்துறைக்குள் இயங்கும் விதமானது, அத்துறைக்குள்ளேயே அடுத்தடுத்த படிநிலைகளில் கீழேயுள்ளவர்களுக்கும் குடிமக்களுக்கும் எதிராக எத்தகைய கொடூரங்களை நிகழ்த்தும் என்பதை துணிவுறப் பேசி் தனது கலையாற்றல் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவதற்கானதே என உணர்த்தியுள்ளார் ப்ராங்க்ளின். தமிழ்த் திரையுலகிற்கு புத்தூட்டம் ஏற்றிட தோழர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுகமான இயக்குநர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை வரிசையில் இப்போது ப்ராங்க்ளின்.

குற்றங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கிவிட்டு இந்தச் சமூக அமைப்புக்கு முட்டுக்கொடுக்கும் அவலத்திற்குள் சிக்காதிருக்கும் அரசியல் தெளிவு கொண்ட இக்கதையை திரையில் உயிர்ப்பித்திட கலைஞர்களும் தொழில்நுட்பர்களும் பேருழைப்பை நல்கியுள்ளனர்.   

ரைட்டரின் கதைமாந்தர்கள், சுதந்திரமடைந்த ஒரு நாடு ஏற்றுக்கொண்டுள்ள மக்களாட்சியின் மாண்புகளை உள்வாங்கிச் செயல்படுத்தும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தோல்வியிலிருந்து உருவானவர்கள். ஒப்புரவோடும் மனிதத்தன்மையோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தகுதியற்றதாக இந்தச் சமூகம் பாழ்பட்டிருப்பதை அவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். நிலவரத்தை அம்பலப்படுத்துவதானது, அச்சமூட்டி அடிபணியச் செய்வதற்காக அல்லாமல் இந்த இழிநிலைக்கு எதிராக இயன்றளவில் போராடுங்களென பார்வையாளர்களின் பொதுமனசாட்சியை அவர்கள் தூண்டுகிறார்கள்.



கல்விக்கூடங்களில்நிலவும் சாதியத்தடைகள் ரோஹித்வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா என பலரை காவுகொள்வதைப் போலவே அத்தடைகளையும் தாண்டி கல்வி பயின்று வேலைக்கு வருவோரில் பலரை பணியிடங்களில் நிலவும் பாகுபாடுகள் காவுகொள்கின்றன.  அப்படி காவல்துறையின் ‘நிறுவனப்படுகொலை’க்கு ஆளான விஷ்ணுப்ரியா உள்ளிட்டோரின் கூட்டுமுகமே ரைட்டரில் வரும் பெண்போலிஸ் சரண்யா.

குதிரையேற்றத்தில் வல்லவரான சரண்யாவின் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்ற பணியை- அவரது சாதியின் மீதான வெறுப்பினால் மறுத்து குதிரையின் லத்தியை அள்ளவைக்கும் உயரதிகாரி சர்மாவின் குரூரம், பட்டியல் சமூக மாணவர்களை கல்விக்கூடத்தின் துப்புரவுப்பணிகளில் ஈடுபடுத்தும் வன்கொடுமையை நினைவூட்டுகிறது. சர்மாவின் சாதிவெறியையும் ஆணாதிக்கத்தையும் நிலைகுலையச் செய்யும் பதிலடியைக் கொடுத்துவிட்டு சரண்யா செத்துப்போகிறாள்.  

தேவகுமார் என்கிற ஆய்வுமாணவர், எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்கள் என்பது போன்ற நுண்மான் நுழைபுலமிக்கத் தலைப்பிலோ, ஆய்வுப்புலத்தை மடக்கி அக்குளில் செருகிக்கொள்ள விரும்பும் சங்கிகளுக்கு உவப்பானதொரு தலைப்பிலோ ஆய்வை மேற்கொண்டிருந்தால் எளிதாக முனைவராகியிருப்பார். தொந்தரவில்லாத இந்தச் செக்குமாட்டுத்தனத்திற்குள் முடங்காத தேவகுமாரோ, ‘போலிஸ்துறையில் தொடரும் தற்கொலைகள்’ பற்றி ஆய்ந்திட முனைகிறார். சரண்யாவை தற்கொலைக்குத் தூண்டிய தனது அட்டூழியங்கள், தேவகுமாரின் ஆய்வினால் வெளிப்பட்டுவிடக்கூடாது என்றஞ்சும் சர்மா, அதற்காகவே தேவகுமாரை தேசவிரோதியாக சித்தரித்து வேட்டையாடுகிறான். நடுக்குறும் நம் மனம், இக்கொலையில் தானுமொரு கூட்டாளியாக சிக்கிக்கொண்டது குறித்த குற்றவுணர்வில்  வாதையுறும் ரைட்டர் தங்கராஜ், அதிலிருந்து விடுபட மேற்கொள்ளும் எத்தனங்களால் ஆசுவாசமடைகிறது.    

எந்தவொரு ரைட்டரை விடவும் ஸ்டேசன் ரைட்டர்கள் நம்பத்தகுந்த புனைவுகளை எழுதக்கூடியவர்கள் என்பதை தங்கராஜியும் பலவாறாக உறுதிப்படுத்துகிறார். ஆனால் அந்தப் புனைவுத்திறனை அப்பாவி தேவகுமாரின் உயிரைப் பறித்திட தனது மேலதிகாரியான சர்மா பயன்படுத்திக்கொண்டதை உணரும் ஆவேசத் தருணத்தில்தான், தங்கராஜ் சர்மாவை சுட்டுக்கொன்றுவிட்டு சிறையேகுகிறார். அதிகாரக்கொடுக்கினால் சூழலையே விஷமயமாக்கி வந்த  சர்மாவின் சாவு பொருத்தமானதொரு குறியீடுதான்.

இந்துமதக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்திட கிறிஸ்தவம் தழுவி பிற்படுத்தப்பட்டோராகிவிட்ட தலித்துகளின் வாழ்நிலை, காவல்நிலையத்திற்கு வெளியேயுள்ள ரகசிய கொட்டடிகள், போலிஸ் அத்துமீறல்களுக்கு உடந்தையாகும் நீதித்துறை என படம் தொட்டுச்செல்லும் பிரச்னைகள் கவனம்கொள்ளத்தக்கவை.

நாகரீகச் சமூகத்தின் இருப்புக்கு போலிஸ் கடும் அச்சுறுத்தலாகிவிட்ட நிலையில், “போலிஸ் இல்லாத உலகம்” என்கிற முழக்கம் பரவலாகி வருகிறது. இதனிடையே போலிஸ்காரர்களுக்கு சங்கம் வேண்டும் என்கிற கோரிக்கை, அவர்களும் இயல்பான மனிதவாழ்க்கைக்கு உரிமையுடையவர்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டது. அதற்கான போராட்டத்தை, தேவகுமாரை ஒருமுறை கைநீட்டி அடித்துவிட்டதற்காக அரற்றியழும் அந்தந்த காலத்து தங்கராஜ்கள் நடத்துவார்கள் என்கிற ப்ராங்க்ளினின் நம்பிக்கையை உடனடியாய் புரிந்துகொள்ள முடியாதபடி போலிசார் பலரும் அதிகாரபோதையில் திளைத்திருக்கக்கூடும். போதை என்பது தெளியக்கூடியதுதானே? 

நன்றி: தீக்கதிர் நாளிதழ் 31.12.2021

வியாழன், அக்டோபர் 1

கௌரவக் கொலை தடுப்பு மசோதா - அ.சவுந்தரராசன் அவர்களால் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது


தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவை விதி எண் 123-ன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா - 2015” சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் அ. சவுந்தரராசன் (29.9.2015) பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட மசோதா பேரவைச் செயலகத்தின் ஆய்வில் உள்ளது. அதன் நகல் இங்கு தரப்படுகிறது.  (நன்றி: தீக்கதிர் 01.10.2015)

சாதி, மத, இன வகுப்பு அடிப்படையில் உயர்வும், மேன்மையும் பாதிக்கப் பட்டதாக கருதி கௌரவம் பார்த்து கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், வகை செய்வதற்கான ஒரு சட்டம்.சமீப காலமாக “கௌரவம்” என்ற பெயரால் அதிக எண்ணிக்கையிலான கொலைகள், குற்றங்கள் ஒரு குடும்பம் அல்லது குறிப்பிட்ட சாதியினர் அல்லது சமூகத்தினரிடையே நடைபெறுகிறது.

“கௌரவம்” என்ற பெயரால் நடைபெறும் குற்றமானது மனரீதியான, உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறை மற்றும் பிற நிர்ப்பந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக உள்ளது. இதுபோன்ற ஒவ்வொரு குற்றத்திலும் தன் விருப்பப்படி திருமணம் செய்வதற்கான உரிமையைப் பயன்படுத்தும் பெண்ணின் குடும்பம் அதிகமாக ஈடுபடுகிறது. இக்குடும்பம் சிலவேளைகளில் தாமாகவோ அல்லது பெரும்பாலும் தமது உறவினர்/நண்பர்கள் உதவியுடனோ அல்லது சாதிய அல்லது சமூகத்தினரை உள்ளடக்கிய பஞ்சாயத்து நடவடிக்கைகள் மூலமோ இக்கொலை மற்றும் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நிகழ்வுகளில், இதுபோன்ற கொலைகள் மற்றும் குற்றங்களில் “சாதிய” அல்லது சமூக பஞ்சாயத்தினரே முக்கியக் குற்றவாளிகளாக செயல்படுகின்றனர்.

இதுபோன்ற பஞ்சாயத்து அல்லது சாதிய அமைப்புகள் பல்வேறு வகையான கட்டாய அல்லது தண்டனை நடவடிக்கைகள் மூலம் பயத்தை உருவாக்கி அதன் மூலம் சுயவிருப்ப திருமணங்களை அல்லது உறவுகளை தடுத்து நிறுத்த விரும்புகின்றனர். இருப்பினும், இது போன்ற குற்றங்கள் “கௌரவம்” என்ற கருத்தோடு நடைபெற்று அதற்கு பலகாரணங்கள் கூறப்பட்டாலும், பொதுவாக பழக்கவழக்கம், சம்பிரதாயம், மரபுபோன்றவற்றால் நியாயப்படுத்தப் படுகின்றன. நம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், குறிப்பாக தன் உடலின் மீதான சுதந்திரம் மற்றும் யாருடன் இருக்க வேண்டும், வாழவேண்டும் என்ற உரிமையை இதுபோன்ற செயல்கள் மீறுகின்றன. பெற்றோர்களின் இச்செயல்கள் ஒரு பெண் / ஆண் தான்விரும்பும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுத்து அதன் விளைவாக அவள்/அவன் கருத்து சுதந் திரத்தை முடக்குகின்றன.

ஒரு திருமணம் நடைபெற சட்டப்படி முழு சம்மதம் முக்கியமான தேவை. இருப்பினும் “கௌரவம்” என்ற பெயரால் நடைபெறும் கொலை மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. தவிர சாதிய மத அமைப்புகள் அல்லது சமூக பஞ்சாயத்துகளால் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் கொடூர குற்றச்செயல்கள், அவற்றில் ஈடுபடும் பஞ்சாயத்துகளை / நபர்களை தண்டிக்க சட்டம் ஏதும் இல்லை. சில குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால், “கௌரவம்” என்ற பெயரால் நிகழ்த்தப்படும் சட்டத்திற்கு புறம்பான மொத்த கொடூரங்களையும் கணக்கில்கொண்டு தகுந்த தண்டனைகளை வழங்க இவை போதுமானதாக இல்லை. எனவே, ஒரு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டிய கட்டாய சூழல் உரு வாகியுள்ளது.இந்திய குடியரசின் அறுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழக சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்
1. (அ) இச்சட்டம் கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015 என வழங்கப்பெறும்.(ஆ) இந்த மசோதா மாநில அரசால் அரசிதழில் அறிவிக்கை செய்யப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும்.
\
செயல்பரப்பு
 2. தமிழ்நாடு எல்லை முழுவதும்.

குற்றச் செயல்
3.அனைத்து இளம் வயது ஆண், பெண் இரு பாலருக்கும் தமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும், தமது உடல் மீதானஉரிமையும் உண்டு. அவர்களுக்கு திருமண பந்தத்திலோ அல்லது எவ்விதத்திலோ தம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. இவ்வித உரிமைகளைத் தடுக்கும் எந்தவித துன்புறுத்தல்களும், வன்முறைகளும், செயல்களும் இந்தச் சட்டத்தின்கீழ் குற்றமாக கருதப்படும்.

தண்டனை
4. (அ) தனிநபர் அல்லது நபர் கள், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது அவர்களுடன் கூட்டாக சேர்ந்து செயல்படுபவராக இருக்கலாம், அல்லது அக்குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் அல்லது நபர்களின் வேண்டுகோளின் பேரிலோ அல்லது ஒரு அமைப்பிலுள்ள உறுப்பினர் அல்லது சாதி அல்லது பிரிவு அல்லது குழு அல்லது சமுதாய பஞ்சாயத்தின் (எந்த விதமான பெயரில் அழைக்கப்பட்டாலும்) பேரிலோ, பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை செயல்படுத்த விரும்பும் ஒரு பெண்ணையோ அவளது துணைவரையோ (அல்லது அவளோடு உறவாடும் நபர் அல்லது நபர்களையோ) கொலை செய்தால் இபிகோ பிரிவு 302ன் கீழ் கொலைக்குற்றமாக கருதப்பட்டு அதற்குரிய தண்டனை வழங்கப்படும்.(ஆ) பிரிவு 3 - இன் கீழ் தனது உரிமையை நிலை நாட்டிய தம்பதி மீதோ அல் லது அவர்களில் ஒருவர் மீதோ அல்லது அவரது குடும்பத்தினர் மீதோ அல்லது அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர் மீதோ நிகழ்த்தும் துன்புறுத்தல் அல்லது கொலை அல்லது எந்தவிதமான வன்முறையையும், புகழ்கிற அல்லது பகிரங்கமாக ஆதரிக்கிற எந்த ஒரு நபர் அல்லது நபர்கள் அல்லது ஒரு குழுவினர் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும், ரூபாய் ஒரு இலட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

விளக்கம் -1
இந்தப் பிரிவில் மரணத்தை உண்டாக்கும் செயல் உத்தரவிடப்பட்டபோது அங்கு இருந்த, சாதிய மற்றும் சமூக பஞ்சாயத்தில் பங்கேற்ற, அனைத்து உறுப்பினர்களும் கொலைக் குற்றம் செய்தவராகவே கருதப்படுவர். 5.தனிநபர் அல்லது நபர்கள், பாதிக்கப் பட்டவரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது அவர்களுடன் கூட்டாகசேர்ந்து செயல்படுபவராக இருக்கலாம், அல்லது அக்குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் அல்லது நபர்களின் வேண்டு கோளின் பேரிலோ அல்லது ஒரு அமைப்பிலுள்ள உறுப்பினர் அல்லது சாதி அல்லது பிரிவு அல்லது குழு அல்லது வகுப்பு அல்லது சமுதாய பஞ்சாயத்தின் (எந்த விதமான பெயரில் அழைக்கப்பட்டாலும்) பேரிலோ, பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை செயல்படுத்த விரும்பும் ஒரு பெண்ணையோ அவளது துணைவரையோ (அல்லது அவளோடு உறவாடும் நபர் அல்லது நபர்களையோ) துன்புறுத்தினாலோ அல்லது அந்த உரிமைகளை செயல் படுத்துவதை தடுத்தாலோ குறைந்த பட்சம் 1 ஆண்டு தண்டனையும் அதிகபட் சம் 10 ஆண்டுகள் தண்டனையும் அபராத மும் வழங்கப்படும்.

விளக்கம் -2
இப்பிரிவில் துன்புறுத்தல் மற்றும் தடுத்தல் என்பதற்கு உடல் ரீதியிலான மற்றும் மன ரீதியிலான கீழ்க்காணும் நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும். 1. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை சகோதரன், சகோதரி என்று அறிவித்தல். 2. அவர்கள் வசிக்கும் கிராமம் அல்லது பகுதியிலிருந்து திருமணம் செய்துகொண்ட தம்பதி அல்லது அவர் குடும்பத்தினர் அல்லது உறவினர்களை வெளியேற்றுதல். 3.தம்பதி அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை அபராதம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துதல்  4.தம்பதி அல்லது அவர்களது குடும் பத்தினர் அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் மீது சமூக தடை விதித்தல் அல்லது சமூக புறக்கணிப்பு செய்தல்.

5.தம்பதி அல்லது அவர்களது குடும்பத்தினர் அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் மீது பொருளாதார தடை விதித்தல் அல்லது பொருளாதார புறக்கணிப்பு செய்தல். 6.தம்பதி அல்லது அவர்களது குடும்பத்தினர் அல்லது அந்த ஆணின் குடும்பத்தினரின் நிலம் அல்லது சொத்து மீதான அவர்தம் உரிமையை மறுத்தல் அல்லது வெளியேற்றுதல். 7.தம்பதியையோ அல்லது அவர்களில் ஒருவரையோ பரஸ்பரம் சந்திக்க விடாமலும் அல்லது இணைந்து வாழவிடாமலும், நேரடியாக மிரட்டுவது அல்லது இதர தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி மிரட்டுவது, உடல்ரீதியான, மனரீதியான உளைச்சலை ஏற்படுத்துவது. 8.தம்பதியையோ அல்லது அவர்களில் ஒருவரையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ அல்லது அவர் களோடு தொடர்பில் உள்ள எவரையும் தண்டிப்பதாக மிரட்டுதல். 9.அந்தப் பெண் அல்லது அவரது துணைவர் அல்லது அவர்களோடு தொடர் பில் உள்ள எவருக்கும் துன்பம் அல்லது காயங்கள் ஏற்படுத்துதல் 10. அந்தப் பெண்ணிற்கோ அல்லது அவரது கணவருக்கோ வேறு ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைத்தல்குற்றம் நிரூபிக்கும் பொறுப்பு 6. பிரிவுகள் 4 (அ), (ஆ), மற்றும் 5-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட நபர்அல்லது நபர்கள், தங்கள் மீது சுமத்தப் பட்ட குற்றம் ஏற்புடையது அல்ல என்பதைநிரூபிக்கும் பொறுப்பு அவர்களையே சாரும்.

முன்தடுப்பு அதிகாரமும்தண்டனையும்
7.(அ) மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவர் பிரிவுகள் 4 (அ), (ஆ) மற்றும் 5-இன் கீழ் குற்றங்கள் நடைபெறும் என்று கருதினாலோ அல்லது தகவல் பெற்றாலோ, ஒரு தடை உத்தரவின் மூலம் அத்தகைய குற்றச் செயல்களை செய்ய வாய்ப்பு உள்ளதாக கருதப்ப டும் நபர் அல்லது நபர்கள் சந்திப்பதற்கு தடை விதிக்கலாம்.(ஆ) உட்பிரிவு (அ)ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எவரொருவர் மீறினாலும் அவருக்கு 6 மாதத்திற்கு குறை யாத சிறைத்தண்டனையும், அதிகபட்சம் 2 வருடங்கள் வரை அபராதத்துடன் நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

தம்பதியின் உறுதிமொழி
8. (அ) திருமணம் செய்து கொள்ள விரும்பும் எந்த இரு நபர்களோ அல்லது ஒருவரோடு ஒருவர் உறவில் உள்ள இருநபர்களோ தமது வயது மற்றும் சேர்ந்து வாழ விரும்பும் சம்மதத்தை வாய் மொழியாகவோ, எழுத்து மூலமோ ஒரு காவல் அதிகாரி அல்லது அரசு அதிகாரியிடம் தெரிவித்திட வேண்டும். அதை அவர்கள் அருகில்உள்ள காவல்நிலையத்திற்கு அறிவித்திடல் வேண்டும். அந்த தம்பதி மீது காவல் துறை அல்லது மற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.(ஆ) அவ்வாறு உட்பிரிவு (அ) இன் கீழ்உறுதிமொழி அளித்த தம்பதி மீது காவல்துறை அதிகாரிகளால் ஏதேனும் நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குற்றமாகக் கருதப்பட்டு - ரூபாய் ஒரு லட்சம் அபராதத்துடன் கூடிய - 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.
கைது செய்தல்

9. இச்சட்டத்தின் கீழ் வரையறை செய்யப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடியதும், பிணையில் விட முடியாததும், இசைந்து தீர்க்கவியலாததுமான குற்றமாக கருதப்படும்.

குற்றவாய்ப்பு தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய கடமைகள்
10. (அ) அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளும் இச்சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். (ஆ) அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவரால் குறிப்பிடப் படும் மற்ற அதிகாரிகளும், அப்பகுதியில் வசிப்பவர்களும் பிரிவுகள் 4 (அ), (ஆ) மற்றும் 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் நடைபெறப் போவதாக அறிந்தாலோ அல்லது அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலோ அது குறித்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். (இ) உட்பிரிவுகள் 10 (அ) அல்லது (ஆ)-ஐ யார் மீறினாலும் அவர்களுக்கு 2 வருடங்கள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மற்ற சட்டங்களுக்கு முரணல்ல11. இச்சட்டத்தின் பிரிவுகள் மற்றசட்டப்பிரிவுகளோடு இணைந்து இருக்குமே தவிர நடைமுறையில் உள்ள மற்ற சட்டங்களுக்கு முரணானவை அல்ல. நடைமுறை12. இச்சட்டத்தில் உள்ள நடைமுறைகள் அனைத்தும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 இன் கீழ் உட்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மேல்முறையீடு
13. (அ) இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீர்ப்பு அல்லது உத்தரவுக்கான மேல்முறையீடு உயர்நீதிமன்றங்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும். (ஆ) இப்பிரிவின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு மேல் முறையீடும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தரவு அல்லது தீர்ப்புபெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.(இ) மேலே குறிப்பிட்ட விஷயங் களைத் தவிர, எந்த ஒரு மேல்முறையீடோ அல்லது சீராய்வு மனுவோ வேறு எந்த நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட முடியாது. (ஈ) உட்பிரிவு (அ)-ன் கீழ் தாக்கல்செய்யப்படும் ஒரு மேல்முறையீட்டை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.

விதிகள் உருவாக்கும் அதிகாரம்
14. (1) அரசு அறிவிக்கையின் வாயிலாக இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது எதனையும் நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம். 2. (அ) இந்தச் சட்டத்தின்படி செய்யப் பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும். மற்றும் அவை நாள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடை முறைக்கு வரும். (ஆ). இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் நாள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட் டிருந்தாலன்றி அவை வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வரும். 3. இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையொட்டி வரக்கூடிய கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லதுஅத்தகைய விதியோ அல்லது அறிவிக்கையோ அல்லது ஆணையோ செய்யப்படுதலாகாது அல்லது பிறப்பிக்கப்படுதல் கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவுசெய்யுமாயின் அதன்பின்பு அந்த விதியானது அந்த அறிவிக்கையானது அல்லது ஆணையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே செல்திறம் பெறும் அல்லது நேர்விற்கேற்ப செல்திறம் பெறாது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது அழித்தறவு எதுவும் அந்த விதியின்படி அல்லது அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும். 4. இந்தச் சட்டத்தின் வகை முறையை செயல்படுத்துவதில் இடர்பாடு ஏதேனும் எழுமானால் அரசு ஆணைமூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் இடர்பாட்டை நீக்குவதற்குத் தேவையானவையென்றோ உகந்தவையென்றோ தனக்குத் தோன்றுகிற அத்தகைய வகை முறையைச் செய்யலாம். 

நோக்க - காரண விளக்கவுரை
தமிழகத்தில் மனம் ஒத்து சாதிமறுப்பு திருமணம் செய்ய விழைகிற தம்பதிகளை சாதி, மத, இன, வகுப்பு அடிப்படையில் உயர்வும், மேன்மையும் பாராட்டி கௌரவம் பார்த்து அத்தம்பதியினரை அச்சுறுத்து வது, துன்புறுத்துவது, வன்முறைக்கு உள்ளாக்குவது, கொலை செய்வது அதிகரித்து வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி ஒடுக்கலுக்கு இதிலும் உள்ளாகிறார்கள். அரசியல் சட்டப்படியான சமத்துவம் மறுக்கப்படுகிற இந்த வன்கொடுமை குற்றத்திற்கு எதிராக தனிச்சட்டம் தேவைப்படுகிறது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன தேவைக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.


துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...