வெள்ளி, டிசம்பர் 31

ரைட்டர்: வாழ்வை அதிகாரம் சூறையாடும் போது நீங்கள் பார்வையாளரா பங்குதாரியா? -ஆதவன் தீட்சண்யாசைரனை அலறவிட்டபடி தலைதெறித்தோடும் காவல்துறை/ ராணுவ வாகனங்கள் யாரையோ காப்பாற்வோ ஏதோவொரு குற்றத்தை தடுத்திடவோ தான் ஓடுகின்றன என்று நம்பிவிடாதீர்கள். ஒருவேளை அவை உங்களது அப்பாவி பிள்ளைகளை கண்காணா இடங்களுக்குக் கடத்திப்போய் குற்றவாளிகள் என்று பொய்முத்திரை குத்தி என்கவுண்டரில் சுட்டுத்தள்ளவும் ஓடக்கூடும்.

என்கவுண்டரில் போலி அசல் என்கிற பகுப்புகள் அர்த்தமற்றவை. அனேகமா  என்கவுண்டர்கள் இட்டுக்கட்டப்பட்டகுற்றச்சாட்டுகளின்பேரிலான படுகொலைகளே. 20 இலட்சம் ரூபாய் விருதுத்தொகையைப் பெற்றுவிடும் பேராசையில் காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் அப்பாவி இளைஞர்கள் மூவரை சுட்டுக்கொன்றுவிட்டு ‘தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை’ என்று ராணுவத்தார் நாடகமாடினர். நாகாலாந்தில் பணிமுடித்துவந்த சுரங்கத்தொழிலாளர்கள் தீவிரவாதிகள் என ராணுவத்தாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பனிமூட்டத்தில் மங்கலாக கண்ணுக்குத் தென்பட்ட மாத்திரத்திலேயே தேசவிரோதி என்று துப்பறிந்து உயிரெடுத்துவிடுகிறார்கள்.

குடிமக்களுக்கு எதிராக எந்த பழிபாவத்தையும் செய்துவிட்டு நாட்டின் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டால் நியாயமாகிவிடும் என்கிற தைரியம் போலிசாருக்கும் ராணுவத்தாருக்கும் எங்கிருந்து வருகிறது? உரிமைகளுக்காகப் போராடும் குடிமைச்சமூகம் நாம் முறியடித்தாக வேண்டிய புதிய போர்முனையாக உருவெடுத்துள்ளது’ என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் வெறியேற்றி அனுப்பப்படும் போலிஸ் அதிகாரிகள் மக்களை தேசவிரோதிகளாகவும் குற்றவாளிகளாவும்தானே அணுகுவார்கள்? குடிமக்கள் தமது உடல்மீது முழுவுரிமை கோரமுடியாது என்று கொக்கரிக்கும்  ஓர் அரசின் ஏவல்படையினர் இவ்வாறு துள்ளுவதில் வியப்பேது! 

இங்கு தேசப்பாதுகாப்பின் பெயரால் நிறைவேற்றிடும் சட்டங்கள் யாவும் தேசத்தைப்  பாதுகாப்பற்கானவையல்ல. அச்சட்டங்கள் ஆளும் வர்க்கத்தினரின் குறுகிய நலன்களை பாதுகாப்பதற்காகவோ அவர்களது தனிப்பட்ட பகைமைகளை தீர்த்துக் கொள்ளவோ கருத்தியல் எதிராளிகளை "அப்புறப்படுத்தவோ" நிறைவேற்றப்பட்டதாகவும் இருக்கலாம்.

ஆள்தூக்கிச் சட்டமான ஊபாவின் கீழ் சிறையில் வாடும் ‘பிகே16’ குற்றவாளிகள் இந்நாட்டின் மதிக்கத்தக்க மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களுமாவர். முன்னதாக, அவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும்படியான கோப்புகள் அவர்களது கணிணிகளிலும் செல்பேசிகளிலும் ஊடுருவிய மர்மநபர்களால் ஊன்றப்ட்டன. பின் அக்கோப்புகளை அவர்களுக்கெதிரான சான்றுகளாக்கி தேசியப்புலனாய்வு நிறுவனம் கைது செய்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கல்விவளாக உரிமைகளுக்காக, ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடிய பலரையும் இந்த ஊபாவின் கீழ் கைதுசெய்து சொல்லொணா கொடூரங்களுக்கு ஆட்படுத்துவதெல்லாம், "கருத்தியல் எதிராளிகளை அப்புறப்படுத்துவது" தானே!. அன்றாட பரபரப்புகளாக நம்மைக் கடக்கும் இத்தகைய நடப்புண்மைகளை நினைவூட்டும் விதமான கதையமைத்து, சகமனிதர்களின் வாழ்வை அதிகாரம் சூறையாடும் போது நீங்கள் பார்வையாளரா அல்லது பங்குதாரியா என்கிற கேள்வியை  எழுப்பி் நம் காலத்தின் அரசியல் படமாக உருவெடுத்துள்ளது ரைட்டர்.

ரைட்டர், தனிமனிதரிடமும் சமூக நிறுவனங்களிலும் அரசியந்திரத்திலும் வெவ்வேறு அளவிலும் வடிவிலும் நிலைகொண்டுள்ள அதிகாரமானது, தம்மிலும் எளியோர்க்கு எதிராக இயங்கும் நுண்தளங்களின் நேர்சித்திரமாகும். ஆணாதிக்கமும், சாதியாதிக்கமும், பதவியாதிக்கமும் காவல்துறைக்குள் இயங்கும் விதமானது, அத்துறைக்குள்ளேயே அடுத்தடுத்த படிநிலைகளில் கீழேயுள்ளவர்களுக்கும் குடிமக்களுக்கும் எதிராக எத்தகைய கொடூரங்களை நிகழ்த்தும் என்பதை துணிவுறப் பேசி் தனது கலையாற்றல் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவதற்கானதே என உணர்த்தியுள்ளார் ப்ராங்க்ளின். தமிழ்த் திரையுலகிற்கு புத்தூட்டம் ஏற்றிட தோழர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுகமான இயக்குநர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை வரிசையில் இப்போது ப்ராங்க்ளின்.

குற்றங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கிவிட்டு இந்தச் சமூக அமைப்புக்கு முட்டுக்கொடுக்கும் அவலத்திற்குள் சிக்காதிருக்கும் அரசியல் தெளிவு கொண்ட இக்கதையை திரையில் உயிர்ப்பித்திட கலைஞர்களும் தொழில்நுட்பர்களும் பேருழைப்பை நல்கியுள்ளனர்.   

ரைட்டரின் கதைமாந்தர்கள், சுதந்திரமடைந்த ஒரு நாடு ஏற்றுக்கொண்டுள்ள மக்களாட்சியின் மாண்புகளை உள்வாங்கிச் செயல்படுத்தும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தோல்வியிலிருந்து உருவானவர்கள். ஒப்புரவோடும் மனிதத்தன்மையோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தகுதியற்றதாக இந்தச் சமூகம் பாழ்பட்டிருப்பதை அவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். நிலவரத்தை அம்பலப்படுத்துவதானது, அச்சமூட்டி அடிபணியச் செய்வதற்காக அல்லாமல் ந்த இழிநிலைக்கு எதிராக இயன்றளவில் போராடுங்களென பார்வையாளர்களின் பொதுமனசாட்சியை அவர்கள் தூண்டுகிறார்கள்.கல்விக்கூடங்களில்நிலவும் சாதியத்தடைகள் ரோஹித்வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா என பலரை காவுகொள்வதைப் போலவே அத்தடைகளையும் தாண்டி கல்வி பயின்று வேலைக்கு வருவோரில் பலரை பணியிடங்களில் நிலவும் பாகுபாடுகள் காவுகொள்கின்றன.  அப்படி காவல்துறையின் நிறுவனப்படுகொலை’க்கு ஆளான விஷ்ணுப்ரியா உள்ளிட்டோரின் கூட்டுமுகமே ரைட்டரில் வரும் பெண்போலிஸ் சரண்யா.

குதிரையேற்றத்தில் வல்லவரான சரண்யாவின் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்ற பணியை- அவரது சாதியின் மீதான வெறுப்பினால் மறுத்து குதிரையின் லத்தியை அள்ளவைக்கும் உயரதிகாரி சர்மாவின் குரூரம், பட்டியல் சமூக மாணவர்களை கல்விக்கூடத்தின் துப்புரவுப்பணிகளில் ஈடுபடுத்தும் வன்கொடுமையை நினைவூட்டுகிறது. சர்மாவின் சாதிவெறியையும் ஆணாதிக்கத்தையும் நிலைகுலையச் செய்யும் பதிலடியைக் கொடுத்துவிட்டு சரண்யா செத்துப்போகிறாள்.  

தேவகுமார் என்கிற ஆய்வுமாணவர், எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்கள் என்பது போன்ற நுண்மான் நுழைபுலமிக்கத் தலைப்பிலோ, ஆய்வுப்புலத்தை மடக்கி அக்குளில் செருகிக்கொள்ள விரும்பும் சங்கிகளுக்கு உவப்பானதொரு தலைப்பிலோ ஆய்வை மேற்கொண்டிருந்தால் எளிதாக முனைவராகியிருப்பார். தொந்தரவில்லாத இந்தச் செக்குமாட்டுத்தனத்திற்குள் முடங்காத தேவகுமாரோ, ‘போலிஸ்துறையில் தொடரும் தற்கொலைகள்’ பற்றி ஆய்ந்திட முனைகிறார். சரண்யாவை தற்கொலைக்குத் தூண்டிய தனது அட்டூழியங்கள், தேவகுமாரின் ஆய்வினால் வெளிப்பட்டுவிடக்கூடாது என்றஞ்சும் சர்மா, அதற்காகவே தேவகுமாரை தேசவிரோதியாக சித்தரித்து வேட்டையாடுகிறான். நடுக்குறும் நம் மனம், இக்கொலையில் தானுமொரு கூட்டாளியாக சிக்கிக்கொண்டது குறித் குற்றவுணர்வில்  வாதையுறும் ரைட்டர் தங்கராஜ், அதிலிருந்து விடுபட மேற்கொள்ளும் எத்தனங்களால் ஆசுவாசமடைகிறது.    

எந்தவொரு ரைட்டரை விடவும் ஸ்டேசன் ரைட்டர்கள் நம்பத்தகுந்த புனைவுகளை எழுதக்கூடியவர்கள் என்பதை தங்கராஜியும் பலவாறாக உறுதிப்படுத்துகிறார். ஆனால் அந்தப் புனைவுத்திறனை அப்பாவி தேவகுமாரின் உயிரைப் பறித்திட தனது மேலதிகாரியான சர்மா பயன்படுத்திக்கொண்டதை உணரும் ஆவேசத் தருணத்தில்தான், தங்கராஜ் சர்மாவை சுட்டுக்கொன்றுவிட்டு சிறையேகுகிறார். அதிகாரக்கொடுக்கினால் சூழலையே விஷமயமாக்கி வந்த  சர்மாவின் சாவு பொருத்தமானதொரு குறியீடுதான்.

இந்துமதக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்திட கிறிஸ்தவம் தழுவி பிற்படுத்தப்பட்டோராகிவிட்ட தலித்துகளின் வாழ்நிலை, காவல்நிலையத்திற்கு வெளியேயுள்ள ரகசிய கொட்டடிகள், போலிஸ் அத்துமீறல்களுக்கு உடந்தையாகும் நீதித்துறை என படம் தொட்டுச்செல்லும் பிரச்னைகள் கவனம்கொள்ளத்தக்கவை.

நாகரீகச் சமூகத்தின் இருப்புக்கு போலிஸ் கடும் அச்சுறுத்தலாகிவிட்ட நிலையில், “போலிஸ் இல்லாத உலகம்” என்கிற முழக்கம் பரவலாகி வருகிறது. இதனிடையே போலிஸ்காரர்களுக்கு சங்கம் வேண்டும் என்கிற கோரிக்கை, அவர்களும் இயல்பான மனிதவாழ்க்கைக்கு உரிமையுடையவர்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டது. அதற்கான போராட்டத்தை, தேவகுமாரை ஒருமுறை கைநீட்டி அடித்துவிட்டதற்காக அரற்றியழும் அந்தந்த காலத்து தங்கராஜ்கள் நடத்துவார்கள் என்கிற ப்ராங்க்ளினின் நம்பிக்கையை உடனடியாய் புரிந்துகொள்ள முடியாதபடி போலிசார் பலரும் அதிகாரபோதையில் திளைத்திருக்கக்கூடும். போதை என்பது தெளியக்கூடியதுதானே? 

நன்றி: தீக்கதிர் நாளிதழ் 31.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய வரைபடம் - ஆதவன் தீட்சண்யா

நிபந்தனையற்று வெம்மையீந்தும் சூரியன் 149600000 கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கிறது அந்த நிலாவும் அப்படியொன்றும் கிட்டத்தில் இல்லாதபோதும்...