புதன், டிசம்பர் 8

கதைகளற்ற பால்யம் கொண்டவன் கதையெழுத வந்த கதை - ஆதவன் தீட்சண்யா

தாத்தாவிடமும் பாட்டியிடமும் கதை கேட்டு வளர்ந்ததாக பீற்றாத ஆளில்லை. உண்மையில் அப்படி எல்லோருக்கும் வாய்க்கிறதா, என் வாழ்வில் அப்படியேதும் நடந்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன். எனக்கு கதை சொல்லவேண்டிய காலத்தில் எனது தந்தைவழிப் பாட்டியும் தாத்தனும் எங்கோ தொலைதூரத்து நெடுஞ்சாலை ஒன்றுக்காக தமது கேங் ஆட்களுடன் சேர்ந்து பெரும்பாறைகளை ஜல்லிகளாய் நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். தகிக்கும் வெயிலிலும் நடுக்கும் குளிரிலும் காலில் சாக்கு சுற்றிக்கொண்டு தார் காய்ச்சி கொதிக்க கொதிக்க சாலையில் ஸ்பிரே செய்து அதன் மீது ஜல்லியை நிரவி ரோலரை விட்டு மிதித்தழுத்தி சமன் செய்துகொண்டிருந்தார்கள். பொழுதும் உழைத்தக் களைப்புடன் சாலையோர புளிய மரத்தடியில் கூழையாக அமைத்திருந்த சாளைக்குள் உடம்பை நுழைத்துக் கொண்டு அடித்துப் போட்டாற்போல தூங்கி அதிகாலையில் எழுந்து இந்த அன்றாட வழமைக்குத் திரும்புவார்கள். 

உள்ளூர் வாரச்சந்தை என்றைக்கோ அன்றைக்கு தான் இந்த வேலைக்காட்டில் வார ஓய்வு. அன்றைக்கு கொத்துக்காரியான என் தாத்தம்மா (பாட்டி) வேலையாட்களுக்கு பணப்பட்டுவாடா செய்துவிட்டு நேரமிருந்தால் வீட்டுக்கு வரும். அன்றைக்குப் பேசுவதற்கென்று பெரியவர்களுக்கு ஆயிரம் பழமைகள் இருக்கும். இந்த நேரக்கஷ்டத்தில் கதையாவது கத்திரிக்காயாவது!  என்னை அருகில் அமர்த்திக் கொண்டோ அல்லது மடியில் கிடத்திக்கொண்டோ தலையை வருடிவிடுவதில் உணர்த்தப்பட்ட பாசத்தைவிடவும் நெகிழ்வான கதையேதும் இருக்குமா என்பதறியேன். வேலைக்காடு அருகாமையிலிருந்தால் நானங்கே சென்று ஓரிரு தடவைகள் தங்கியதுமுண்டு. அப்போதெல்லாம் தாத்தம்மா என்னிடம் நிறைய பேசியதாக நினைவு. ஆனால் அதில் கதையேதும் இருந்ததாய் நினைவிலில்லை. 

கிட்டத்தட்ட இதே நிலைதான் எனது தாய்வழிப் பாட்டிக்கும் தாத்தனுக்கும். அவர்கள் வேறு ஊரில் இருந்தார்கள். கால்பரிட்சை அரைப்பரிட்சை முழுப்பரிட்சை லீவ் என்று எதுவாக இருந்தாலும் நான் போகுமிடம் அதுவாக மட்டுமே இருந்தது. அவர்களுடையது கூட்டுக் குடும்பம். நஞ்சை புஞ்சையென்று நிறக்க நிலமிருந்தது அவர்களுக்கு. ஐந்து குடும்பத்திலும் நிறைந்திருந்த ஆட்கள் போதாதென்று கூலிக்கு ஆளமர்த்தியாக வேண்டிய அளவுக்கான நிலம். பிறகு அவர்களுக்குள் பாகப் பிரிவினை செய்துகொண்டு தனிச்சமையல் தனிப்பண்ணையம் என்றாகி விட்டாலும் நான் எல்லா வீட்டிலும் தின்று செழிக்கும் செல்லப்பிள்ளையாகத்தான் இருந்தேன். 

சர்க்கார் தோட்டி அல்லது தலையாரி எனப்படும் எனது தாத்தா அன்றாடம் அதிகாலையில் எழுந்து ஆட்டுப்பட்டிக்கும் மாட்டுப்பட்டிக்கும் சென்று அங்கு இராக்காவலில் படுத்திருக்கும் ஆள்காரர்களையோ குடும்பத்து இளவட்டங்களையோ எழுப்பிக்கொண்டு அந்த இடங்களைச் சுத்தம் செய்வார். காலை கரண்ட்டாக இருந்தால் தண்ணியெடுத்து விட்டு வயல்களுக்குப் பாய்ச்சுவார். வெயிலேறும் முன்பாக ஏர் பூட்டி உழவடிப்பார். பிறகு வீட்டாள்கள் எல்லோருக்கும் வேலை சொல்லிவிட்டு காலை 8 மணிக்கெல்லாம் முன்சீப்பையோ கர்ணத்தையோ பார்க்க கிளம்பிவிடுவார். பொழுதிருக்க வீடு திரும்புவது அபூர்வம். பெரும்பாலும் அவர் வந்துசேரும் நேரத்தில் நானெல்லாம் அரைத்தூக்கத்தில் இருப்பேன். என்னை எழுப்பி வாங்கிவந்த நொறுவாய்களைக் கொடுத்து தின்னடிப்பார். நான் வாங்கிவரச் சொல்லியனுப்பிய நொறுவாய் ஏதாவதொன்றை வாங்காமல் மறந்துவிட்டு வரும் நாளில், அந்த கடைக்காரன் செத்துப் போயிட்டான் என்று பொய் சொல்வதை அவரும் அதை நம்புவதை நானும் வழக்கமாய் கொண்டிருந்தோம். எந்நேரத்துக்கு வந்து சேர்ந்தாலும் பொடக்காலிக்குப் போய் தண்ணி வார்த்துக்கொண்டு தான் இராச்சாப்பாட்டுக்கு அமர்வார். பொழுதும் கண்ட அலுப்புக்கு அப்படி தூங்குவார். அவர் மட்டுமல்ல, எனது சின்ன தாத்தாக்கள், மாமன்கள் கூட இப்படி நாள் முழுக்க சலிப்பின்றி உழைத்தே கிடப்பார்கள். ஏர் ஓட்ட, அண்டை கழிக்க, பார் பிடிக்க, பறம்படிக்க என விவசாய வேலைகளை ஓரளவுக்கு அங்கு அவர்கள்தான் எனக்கு பழக்கினார்கள். 

தாத்தாக்களுக்கு இணையான வேகத்திலும் அளவிலும் பாட்டிகளுக்கும் சித்திகளுக்கும் மற்றாள்களுக்கும் வேலைகள் உண்டு. தொழுவத்தில் உள்ள பால்மாடுகளுக்கு தீனிவைத்து கன்று விடுவது (பால் கறப்பதல்ல கன்றுவிடுவது- கன்று குடித்தது போக கறப்பார்கள்) காலையும் மாலையும் அவர்களது வேலையாய் இருக்கும். மோர் சிலுப்புவது, பெரிய மொடாவில் கூழ் காய்ச்சுவது, வரகு/சாமை/ தினை/ கம்பு/ சோளம்/ அரிசி என ஏதாவதொன்றில் சோறாக்குவது, சொந்தத்தில் விளைந்த துவரை/ அவரை/ கொள்ளு/ காராமணி பருப்பில் சாறு காய்ச்சுவது, கீரை கடைவது என அடுப்படி வேலையே அவ்வளவு இருக்கும். அத்தனையும் செய்துவிட்டு வேலை நடக்கும் வயற்காடுகளுக்கு கூழும் மோரும் சோறுமெடுத்துப் போவார்கள். இதில்லாமல் நாத்தெடுப்பு, பயிர்நடவு, களையலசல், கதிரறுப்பு, கதிரடிப்பு என அவர்களுக்கு நிமிர நேரமிருக்காது. பொழுதமர வீடு சேர்ந்தால் மறுபடியும் அடுப்படி. வயக்காட்டிலும் களத்துமேட்டிலும் அடுப்படியிலுமான இந்த வேலைகளில் பெண்களுக்குள் சீரான ஒரு வேலைப்பிரிவினை இருக்கும். அத்தனையும் முடித்து அவர்கள் ஆற அமர உஸ்ஸோன்னு ஓய்ந்து உட்கார்கிறார்கள் என்றால் அது சாப்பிடும் நேரம் மட்டும்தான். மொதக்கோழி கூப்பிடும் போது ஆம்பிளைகளுக்கு முன்பாக எழுந்து வாசல் தெளித்து தண்ணிதளுப்பு எடுத்து அன்றைக்கான வேலையைத் தொடங்கும் இவர்களின் கெடுபிடியான நிகழ்ச்சிநிரலில் எனக்கு கதை சொல்வதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்? 

எங்கள் குடும்பம் வேறொரு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து இப்போதுள்ள இடத்திற்கு வந்து நிலம் வாங்கி- நிலத்திலேயே ஒண்டிக்கொட்டாயில்- குடியமர்ந்தது. சொந்தபந்தங்கள் என்று அருகாமையில் யாருமில்லை. எப்போதேனும் அரிதாக உறம்பரைகள் வந்து செல்வதுண்டு. மற்ற நாட்களில் எதுவானாலும் எங்கள் குடும்பத்திற்குள் பேசிக்கொண்டால் உண்டு. அண்டை அயலாருடன் பேசிப் பழக அதற்கேயானதொரு காலம் தேவையாக இருந்தது. அப்போதும் கூட யாரும் கதைகள் சொன்னதாக எனக்கு நினைவில்லை. 

இப்போது திரும்பிப்பார்த்தால் கதை என்று அவர்கள் நேரடியாக எதையும் சொல்லவில்லை தான். ஆனால் அவர்களது வாழ்க்கை எனக்கு ஆயிரம் கதைகளைச் சொல்வதாக இருக்கிறது. அந்த ஆயிரம் கதைகளில் ஒன்றையாவது நான் இதுகாறும் உருப்படியாய் எழுதியிருக்கிறேனா என்று இப்போதுதான் தீவிரமாக யோசிக்கிறேன். கதைகளற்றதாக கழிந்தது எனது பால்யம் என்பதே கூட விரிவாக சொல்லப்பட வேண்டிய ஒரு கதைதான். என்னிடம் சொல்வதற்கென்றே இவர்கள் தமது நினைவுச் சேகரத்தில் வைத்திருந்து சொல்லாமலே போய்விட்ட கதைகளுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று எழுதிப் பார்ப்பதும் இதேயளவுக்கு துயரார்ந்த மற்றொரு கதைதான். ஆனால் இதையெல்லாம் எழுதாமல் நான் முதன்முதலில் ஃப்ளாஷ் என்றொரு கதையை எழுதினேன். 

வீட்டு விசேடங்களில் நமது உறவினர்களிலேயே வசதி குறைவானவர்களை நாம் எவ்வாறு புறக்கணிக்கிறோம், அதனால் அவர்களுக்கு ஏற்படும் அவமானத்தையும் மனஉளைச்சலையும் பொருட்படுத்தாமல் எப்படி ஜம்படித்துக் கொண்டு கொண்டாட்டங்களில் மூழ்கித் திளைக்கிறோம் என்பதையும் பற்றியது அக்கதை. அது யாரையோ குத்திக்காட்டுவதற்காக எழுதியிருப்பதாக தோன்றியபோது அதற்காகவெல்லாம் ஒரு கதையை எழுதவேண்டுமா என்று என்னையே கேட்டுக் கொண்டேன். 

தொழிலாளி ஒருவர் காலையில் பணிக்குச் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி இறந்துபோனார். உயிரோடிருக்கும்வரை அவரது உழைப்பை ஒட்டச் சுரண்டிய தொழிற்சாலை நிர்வாகம் இறந்துவிட்ட அவருக்கு முறையான அஞ்சலியைக் கூட தெரிவிக்கவில்லை என்பதை மையப்படுத்தி “அவர்கள் அவர்களே தான்” என்றொரு கதையை எழுதினேன். அது பிரசுரமுமாகிவிட்டது. நடந்த கொடூரத்தை அப்படியே அச்சுஅசலாக படம்பிடித்துவிட்டீர்கள் என்று சிலர் பாராட்டிய போதுதான், அது அந்த விபத்தைப் பற்றிய துல்லியமான வர்ணனை தானே தவிர கதையல்ல என்கிற தெளிவு கிடைத்தது. அதன் பிறகு எழுதிய சிதைவுகள் கதை செம்மலர் போட்டியில் பரிசு பெறவில்லையானாலும் பிரசுரிப்பதற்கு தேர்வானது. 

விவசாய குடும்பத்துப் பிள்ளைகளுக்கான நொறுவாய், அவர்களது வெள்ளாமைத் தானியங்கள் தான். ஊறவைத்த பச்சரிசி, முளை கட்டிய கம்பு, சோளப்பொரி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த குச்சிக்கிழங்கு, பயித்தமாவு உருண்டை, தாளிச்ச பயறுகள், கேழ்வரகு மாவு ரொட்டி என்று பருவத்துக்கும் வசதிக்கும் தக்கினதாக மாறும். எதுவும் இல்லாதபோது தெள்ளிய நயம் தவிட்டை வறுத்து வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்துத் தருவோருமுண்டு. இப்படியான எதுவுமில்லாத வீடொன்றில் சிறுமியொருத்தி, அம்மா வயல்வேலைக்குச் சென்றிருந்த சமயத்தில் பசியாற்றிக் கொள்ள ஏதும் கிடைக்குமா எனத் தேடுகிறாள். அடுக்களைப் பானைகளை உருட்டி அதிலொன்றில் கம்பு இருப்பதை கண்டறிகிறாள். பூச்சியரித்துவிடக்கூடாதென்று பூச்சிக்கொல்லிப்பொடி கலந்து வைக்கப்பட்டிருந்த விதைக்கம்பு என்பதை அறியாமல் தின்னும் அந்தச்சிறுமி பற்றிய கதை அது. சற்றே கவனம் பெற்றது என்றாலும் கதையென நான் உருவகித்து வைத்திருந்ததை எழுத்தாக்கியதில் மனம் நிறைவு கொள்ளவில்லை போல, கதை எழுதுவதைத் தொடராமல் மளாரென கவிதைப்பக்கம் போய்விட்டேன். 

பிறகென்னவோ ரொம்பநாள் கழித்து ஒரு தீவிரத்தில் எழுதிய “அன்னய்யா” அடுத்தடுத்து பல கதைகளை எழுதுவதற்கான உந்துதலாகிப் போனது. இடம், காலம், மாந்தர்கள், அவர்களது மனவோட்டங்கள், தர்க்கம் என கதையின் மூலகங்களும் அவற்றின் சேர்மான விகிதமும் இந்தக் கதையில் தான் எனக்கு பிடிபட்டது என்கிற தன்கணிப்பு எனக்குண்டு. அரசு மருத்துவமனையின் பிணக்கிடங்கில் சடலக் கூறாய்வென பிணமறுத்துக் கொண்டிருந்த அன்னய்யா என்கிற தொழிலாளியின் உழைப்பில் ஓய்வறியா உழைப்பாளிகளாகிய எனது முன்னோர்களின் சாயலை ஒருவேளை என் மனம் கண்டுகொண்டிருக்கலாம். அவர்களை எழுதக் காத்திருந்த என் மனம், அன்னையாவை எழுதி தொடங்கிவைத்த புதுக்கணக்கு இன்றும் தொடர்கிறது.

நன்றி: சிறுகதை இதழ், டிசம்பர் 2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விதைகளை ஊன்றிவைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுத்துக் கொள்ளும் - ஆதவன் தீட்சண்யா

புகைப்படம்: ஆண்டிப்பட்டி முருகன் புதிய புத்தகம் பேசுது 2022 ஜூலை இதழுக்காக  தோழர் ஆயிஷா இரா.நடராசன் என்னிடம் நடத்திய நேர்காணல்.   ·        த...