மாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 27

நெனப்பு பொழப்பை கெடுத்தக் கதை

உங்களுக்கு ஏற்கனவே  தெரிந்த   இந்தக் கதையின் நாயகன் திருவாளர் எகச்சு.உண்மையில் அவரது பெயர் எக்ஸ். ஆனால் தீவிர வடமொழி புறக்கணிப்பு உணர்வினால் ஸ்டாலின் என்பதை சுடாலின் என்று விளிக்கும் பாரம்பரியத்தில் வந்தவராதலால் தன் பெயரை எகச்சு என்று மாற்றிக்கொண்டார்.

ஆளை விழுங்கும் அளவுக்கான பசியில் கிறுகிறுவென மயக்கம் வந்தது திருவாளர் எகச்சு.  அவர்களுக்கு. சாலையோர மோரிக்கல் ( பாலம்) ஒன்றில் தலைசாய்த்து அப்படியே படுத்துவிட்டார். அன்னாடம் இப்படி அடுத்த வேளை வயித்துப்பாட்டுக்கு அல்லாடும் நிலையில் இருநது தப்பிக்க வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். அரணாக்கயிறு கோமணமில்லாம அலைந்த அம்பானி, அதானியெல்லாம் ஏதேதோ தில்லாலங்கடி திலுப்பாமாரி வேலை செய்து இன்னிக்கு பெரிய பணக்காரனுங்களா இருக்கறப்ப தன்னால் ஏன் ஆகமுடியாது என்று யோசிச்சுக்கிட்டே இருந்தவர் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

ஊரில் இரண்டு கல்யாணம். ஒரு கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு மற்றொரு கல்யாணத்தில் சாப்பாட்டைபொட்டலமாக கட்டிக்கொண்டு வந்து யாருக்காவது விற்று அதில் வருகிற காசில் ஒரு கோழிக்குஞ்சு வாங்கி வளர்த்து, அது முட்டையிட்டு குஞ்சுபொறிச்சால் அஞ்சாறு உறுப்படியாகிவிடும். அதுகளை விற்று வருகிற காசில் ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வளர்த்து அது சினையாகி குட்டிப்போட்டு அப்படியே பல்கிப்பெருகிவிடும். ஆடுகளை விற்று மாடு வாங்கி அது விருத்தியான பின்பு விற்று காடுகழனி வாங்கவேண்டும். ஆடு, மாடு, காடு எல்லாம் கண்டதற்குப் பிறகு வீடொன்று கட்டிவிட்டால்  இப்படி பாலத்துமேல் படுத்துக்கிடக்க வேண்டியதில்லை. வீடு கட்டியதும் தேக்குமரத்தில் கட்டில் செய்து இலவம் பஞ்சு மெத்தை போடவேண்டும். இவ்வளவு சொகுசும் வந்தப் பிறகு ஒத்தையில் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்வா? லட்சணமான பெண்ணொருத்தியை கல்யாணம் செய்துகொள்ளனும். முதல் இரவில் படுக்கையறைக்குள் நுழைகிற அவள், இப்படி மொத்த கட்டில்லயும் ஒத்தையாளா படுத்துக்கிட்டா நான் எங்கே படுக்குறதாம்? கொஞ்சம் நகர்ந்து படுங்கன்னு சிணுங்கனும். உனக்கில்லாத இடமாடி செல்லம்னு நான் இப்படி தள்ளிப் படுப்பேனாம்... என்று தள்ளிப்படுத்த அவர் பாலத்தின் மீதிருந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டாராம். வீ ணுக்கு யோசனை பண்ணி இப்படி விழுந்து தொலைச்சிட்டோமேன்னு அங்கலாய்ச்சுக்கிட்டே ஆ ற்றுக்குள்ளே முழுகிப்போனாராம்.

இந்தக் கதைக்கும் " அன்புமணி முதல்வர், பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர்" என்கிற பாகப்பிரிவினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னா நீங்க ஒத்துக்கவா போறீங்க?
- ஆதவன் தீட்சண்யா

செவ்வாய், டிசம்பர் 22

அழும்பு - ஆதவன் தீட்சண்யா

கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக்கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒருநாள் ரெண்டுநாளுன்னா சமாளிக்கலாம். வாரம், பத்து நாளுன்னா என்ன பண்ண முடியும்... மூச்சு முட்டி திணறி தவிக்குது ஊர் ஜனமே.

திடீர்னு மழை நின்னு தூறலா தனிச்சு சிறுத்து பளீர்னு வெளி வாங்கும். கூண்டை திறந்து விட்டதும் குப்பைமேட்டுக்கு ஓடுற கோழிகளாட்டம் ஜனங்க பறக்கும். அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை. இன்னேரம்வரைக்கும் வயிறுமுட்ட அடக்கிவச்சிருக்கிற மூத்திரம் பேயணும்... கோணப்பன் கடைக்கு ஓடி சூடா போண்டா வடை தின்னு டீ குடிச்சு கதகதப்பா பீடி பத்தவைக்கணும்... மேங்காட்டுத்தண்ணி வயல்ல நின்னு சவுக்கு எடுக்காம இருக்கிறதுக்கு வாய்க்கா வெட்டி ஓடைக்குத் திருப்பணும்... மாடுகன்னுக்கு தீனி போடணும்... ராத்திரிக்கு கரண்ட் போயிடும். அதனால் சிம்னிக்கும் ராந்தலுக்கும் சீமெண்ணய் வாங்கணும்... முக்யமா யாரையாச்சும் பாத்து அஞ்சோ பத்தோ கடன் கேட்கணும்... ஜனங்க அதுக்கும் இதுக்கும் பறந்து வேலையை முடிக்கிறவரைக்கும் பொறுக்காது. கிர்ருன்னு மேகம் கூடி கரைஞ்சி அடர்த்தியா இறங்கும்.

மழைக்கு முன்னாடி, தினத்துக்கும் ஆளாளுக்கு அண்ணாந்து பாக்குறதும் மோவாயை சொறிஞ்சிக்கிட்டு உதட்டைப் பிதுக்குறதுமா கவலை கொண்ட ஜனங்கள், நிலாவை சுத்தி வளையத்தைக் கண்டதும் மழை கிட்டத்தில் இருப்பதாக பேசிக் கொண்டார்கள். ரேடியோவிலும் பேப்பரிலும் சொல்வதில் அவர்களுக்கு பிடிப்பில்லை. அவர்களுக்கென்று தனியான அடையாளங்களும் குறிகளும் யூகங்களுமிருந்தன.

''முந்தாநேத்து ராத்திரி ஒசூர்ல மம்மானியான மழை. ஒம்பது மணிக்கு புடிச்சது காலைல விடிஞ்சுதான் நின்னுச்சு. பஸ் ஸ்டாண்டுல மொழங்காலம்புட்டுக்கு தண்ணீன்னா எப்பிடி பேஞ்சினிக்கும்னு பாத்துக்கோ...'' ஒசூர் கம்பனியில் வேலைபார்க்கும் சின்னமுத்து லீவில் வந்தப்ப சொன்னதும் கந்தசாமிக்கு சுர்ரென்று வந்தது ''அக்காண்டா பைய்யா... அங்க மழ பேயாம கட்டமும் கம்பெனியும் அப்பிடியே காய்ஞ்சி தீஞ்சிருச்சு. அதுக்கொசரம் அங்க மழ பேஞ்சினுக்குது... ஏண்டா வெகாளம் கௌப்புற... காட்டுல கரம்புல பேஞ்சித் தொலைக்க மாட்டன்னுதே... மாடு கன்னெல்லாம் பில்லுக்கு மோந்து பாத்து மண்ண நக்கினு திரியுது...''

பசேல்னு பாக்க எதுவுமில்லாமல் போனது ஊரும் கொல்லைகளும். செடியும் கொடியும் பயிரும் பச்சையுமாய் தெரிந்த வட்டாரம் இப்போது செத்தையும் சருகுமாகி பழுப்புநிறத்தில் தெரிந்தது.

போன வெள்ளிக்கிழமை மத்தியானம், தோல் பொசுங்குற அளவுக்கு அடிச்சினுருந்த வெயில் திடீர்னு தணிஞ்சு குளுமையா காத்தடிச்சதும் மறுபடியும் வானம் பார்த்து யூகம் பேசினார்கள். பொசபொசன்னு கொஞ்சம் தூறல்.

வறண்டு மிதிபட்டு பொடியாகியிருந்த புழுதியில் ஈரம்பட்டதும் கும்மென்று வாசனை கிளம்பியது. சொறி படிந்த உடம்பில் தூறல்பட்டு கரும்புள்ளி செம்புள்ளி குத்தியமாதிரி தெரிந்தார்கள் சின்னப்பசங்கள். இங்கு தூறும்போதே சாணங்கொல்லையில் வெயிலடித்து மின்னியது. ''...ஹைய்யா... காக்காய்க்கும் குருவிக்கும் கண்ணாலமாம்... காக்காய்க்கும் குருவிக்கும்..." குஷாலாய் கத்தித் திரிந்தார்கள் சிறுசுகள்.

மழையை எங்கோ நெட்டித்தள்ளிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பரவி வெயில் மட்டுமே மிச்சமாய் நின்றது.

"வேட்டி கூட நனையாத மழை பேஞ்சா வெள்ளாமையா பண்ணமுடியும்... சனியன் வந்ததுதான் வந்துச்சு கொஞ்சம் கனக்க பேஞ்சிட்டா என்னாயிடும்... இப்பிடி அஞ்சாறு தூத்தல்போட்டு கீற சூட்டையும் கௌப்பியுட்டுரும்..." இதையே வெவ்வேறுமாதிரி சொல்லி அங்காலாய்த்தார்கள். இன்னும் சிலர், யாரோ எதிரில் இருக்கிறவனிடம் பேசுகிற பாவனையில் கை காலை ஆட்டி நவரசம் கூட்டிப் பேசினார்கள். எல்லாம் பொய்த்து அண்ணாந்து பார்ப்பதை வெறுத்து குனிந்த போதுதான் சடசடத்து இறங்கியது.

ஒரு காற்று கலக்கமில்லாத மழை. கூரையடி மறைப்பில் ஒளிந்து கொண்டு வெளியே கை நீட்டி லங்கட்டியை பிடித்து பக்கத்தாள் தலையில் போட்டு மகிழ்ந்தார்கள். முறையானவர்கள் பக்கத்திலிருந்தால் ஆலங்கட்டியை எடுக்கமுடியாத இடங்களில் போட்டுவிட்டு பார்த்து ரசிக்கலாமே என்று ஏங்கினார்கள். "சளி புடிச்சிக்கும்...காய்ச்ச வரும்..." எச்சரிக்கைகளை மீறி "கத்திக்கப்பல் காயிதக்கப்பல்" விட்டு விளையாடின சிறுசுகளை பொறாமையோடும் சந்தோசத்திலும் தாவாரத்தில் உட்கார்ந்து ரசித்துப் பார்த்திருந்தார்கள்.


எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் இருக்கமுடியும்... சாக்குப்பையில் கொங்காடை செய்து மாட்டிக்கொண்டும் குடையோடும் பஞ்சாயத்து பிசுக்கு கொஞ்சம் பேர் வந்து சேர்ந்தார்கள். அப்பன் அம்மாளுக்கு தெரியாமல் பீடி குடிக்க வந்தவர்களே அதிகம்.
"எப்பிடியோ இப்பவாச்சும் பகவான் கண் தொறந்தானே..."

"ஏன் காய்ஞ்சு தீய்ஞ்சு கருவாடாட்டம் நாறினு கெடக்குறப்ப உங்க பகவான் பாதாளம் தோண்டி படுத்துணுந்தாரா..."

"யப்பா சாமி...உன்...இதுக்கு ஒரு கும்புடு. நீ அகடவிகடம் பேசினு திரியறவன்...உன்னான்ட நான் பேசல்றா யப்பா..."

"பேயட்டும்....பேயுட்டும்... இப்பிடி ஆறஅமர பேஞ்சாத்தான் பூமி குளுந்து மண்ணுல சேக்கம் நிக்கும்... நல்லா ஊத்து பொங்கினு வர்ற மாதிரி பேயுட்டும்..."

"மச்சான் மேல் அணப்பு நெட்டுக்கும் கல்லக்கா போட்டுட்டு மிச்சத்துக்கு கெழங்கு குச்சி ஊனியுட்டுரு. எறங்காட்டு மண்ணுக்கு சும்மா ஆட்டம் போட்டுனு வரும்..."

"இவன் ஒருத்தன்டா... ஆடு அறுக்கறதுக்கு மின்னயே..." 

"அதான் ரெண்டு மூணு ஒழவு மழை பேய்ஞ்சிருக்கில்ல..."

இப்படியாக தொடங்கிய வாத பிரதிவாதங்கள் கைவசமிருந்த பீடியும் பொகலையும் முடியும்வரை நீண்டு முடிந்தது. மழையும் நிற்கவில்லை கரண்ட்டும் வரவில்லை. தட்டுத்தடுமாறி இருட்டுக்குள்ளேயே புழங்கி பழகி அடங்கிப் போனது ஊர் முன்னிரவில்.

முதல் ரெண்டுநாள், விட்டுவைத்திருந்த கூலிபாக்கி வாங்கியும், கையிலிருந்த சொச்சத்திலும் காலம் ஓடியது. இப்ப நின்னுடும் அப்புறம் நின்னுடும்னு பார்த்து பார்த்து ஒன்பது நாளாயிடுச்சு.

சூட்டுப்பானையில் விழுந்த ஆமை, ஆரம்பத்தில் கிடைத்த இதத்தில் சந்தோசப்பட்டு மயங்கி கிடந்து, சூடேற சூடேற வெந்து தவித்ததை சில பெரிசுகள் மழையோடு ஒப்பிட்டு கதை சொன்னார்கள். ஈரத்தில் நமுத்து சொதசொதக்கும் கூரையில், அடுப்படியிலிருந்து எழும்பி தடம்பிடித்து உயர்கிற புகையைக் கண்டு " எங்கூடு பீடி குடிக்குது..." " எங்கூட்டு மேல ரயிலு ஓடுது" என்று கை தட்டி எகிறிகுதித்து விளையாடின சிறுசுகள் இப்போது வெளியே வருவதில்லை. வேட்டி எதையாவது இறுக்கிப் போர்த்திக்கொண்டு அடுப்புத்திட்டு கனப்புக்கு சுருண்டு கிடந்தார்கள். ஈரவிறகில் கஞ்சி காய்ச்சுவதும் களி கிண்டுவதும் பெரும்பாடாகி கண்ணை கசக்கிக்கொண்டு விறகோடு குமைந்தார்கள் பொம்பளைகள். தூங்கிக் கொண்டிருந்தவர்களை தூக்கிப்போய் எங்கோ மழைநாட்டில் வீசிவிட்ட மாதிரி வெறுப்பான வெறுப்பாகி விட்டது பொழப்பு.

கூலிநாழிக்குப் போன ஜனங்களை வீட்டோடு முடக்கியாச்சு. கொட்டுற மழையில் என்ன வேலை பார்க்க முடியும்... ஒருத்தர் முகத்தை இன்னொருவர் முறைத்து என்ன வரும்... மழை நின்னாகணும். எதுக்கும். எல்லாருக்கும். எங்கும் புழங்க முடியவில்லை. பைனான்ஸ்காரர்கள் தினக்கந்து மட்டும் தான் கொடுப்பது வழக்கம். ரொம்பவும் நம்பிக்கையானவங்களா இருந்தா மட்டுந்தான் வாரக்கந்து, மாசக்கந்து. இப்ப அதுக்கும் அல்லாட்டம். போனவாரம் வாங்குன கந்துக்கு வட்டி பணத்தை இந்த மழையிலயும் குடைபுடித்து வந்து கேட்டார்கள். வட்டிக்கு வட்டி ஏறியது. ரசிப்பின் வட்டத்திலிருந்து வசவின் கோடுகளுக்குத் தாண்டியது மழை. மாதம்மாளோ வசவின் எல்லைக்கே தாவிவிட்டாள்.
"கெரகம்... ஒண்ணா காய்ஞ்சி கெடக்குது. இல்லங்காட்டினா பேய்ஞ்சி கெடுக்குது... சீவனத்த கெடுக்குற சிங்காரம் எதுக்கு...கண்ணு, வெளிய எட்டிப் பாரு சாமி..."

வாசப்படியில் மறைப்புக்கு கட்டியிருந்த தெத்துப்படலை விலக்கி எட்டிப்பார்த்தான் சீனு.

"யம்மோவ்...இருட்டினுக்கீதுயா..."

கட்டாந்தரையிலிருந்த மாடு குளிர்தாளாமல் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து இவனைப் பார்த்தது. வாலை ஒரு கோணலா முறுக்கி நிட்டி உடம்பே சிறுத்து குறுகின மாதிரி நின்றிருந்தது.

"முன்னாடியெல்லாம் தண்ணி மேல உழுந்தா உருண்டுனு கீழ வந்துரும். அப்பிடி மினுமினுன்னு நெகப்பாயிருந்த மாடு இப்பிடி டொக்குடொக்காயிருச்சு... ம்ஹ¥ம்... ஆனானப்பட்ட தெக்கித்தியான்வூட்டு மாடுங்களே மேய்ச்சலும் தீனியுமில்லாம 'பட்' ஆடாயிட்டப்புறம் இதெல்லாம் எங்கித்தி மூலைக்கு..". என்று நினைத்துக் கொண்டான்.

இவன் நாலாவது படிக்கும்போது தான் சினையாக வந்தது. ஒரு பட்டி நெறைய மாடு இருந்தது தாத்தனுக்கு. மகன்களுக்கு சொத்து பிரிக்கிறப்ப மகளுக்குன்னு சீதனமா கொடுத்தது. வந்த மூணாம் மாசத்தில் கன்னு போட்டது. கெடா கன்னுதான். அப்பத்தான் இவன் மொதமொதல்ல சீம்பால் தின்னது. அதுக்கப்புறம் மாட்டோடும் அதன் பாலோடும் சேர்ந்தே அவனுக்கு எல்லாம் நேர்ந்தது. பிடித்துமிருந்தது.
படுக்கையிலிருக்கிறப்பவே சொம்புக்குள் "சொய்ங் சொய்ங்'னு பால் இறங்குவதும் ரெண்டு மூணு இழுப்புக்கப்புறம் சொர் சொர்னு நுரைக்குள்ள பீச்சியடிக்கிறதும் கேட்கும். பால் கறக்கறது அவங்கம்மா வேலை. விட்டுக்கு வச்சது போக, மீதியை கொண்டு போய் டீக்கடைக்கு ஊத்துவது இவன் வேலை. திரும்பி வர்றப்ப மோர் சிலுப்பும் சத்தம் கேட்கும். அவசரமாய் ஓடி பக்கத்தில் நின்னுக்கவான். அவனும் பல நாள் சொல்லிப்பார்த்தும் முடியவில்லை. ம்ஹூம்... மத்துக்காம்பில் சுற்றியிருக்கும் கயிறு முன்னும்பின்னும் சுற்றிச்சுழன்று அம்மாவின் கைவாகுக்கு இழைகிறபோது எழும்புகிற அந்த சத்தத்தை இவனால் சொல்லிப்பார்க்கவே முடியலை.

ஒவ்வொரு சிலுப்புக்கும் ஒவ்வொரு சத்தம். அதுக்கேத்தாப்ல அம்மா உடம்பும் ஆடும். ரொம்பநாளாய் தயிர் கத்துகிற சத்தம் இதுன்னு நினைத்திருந்தான். அப்புறம் மத்து மீது சந்தேகம். கொஞ்சநாள் கழித்து அம்மா வாயை கவனித்தான். அவள் சில நேரங்களில் அமைதியாகவும் சில நேரங்களில் இவனோடு பேசியபடியும் சிலுப்பினாள். கயிறு, மத்து, சட்டி, தயிர், பிரிமனை, அம்மா இழுக்கும் லாவகம் எல்லாம் சேர்த்தே இந்த சத்தம்னு புரிய நெடுநாளாகிவிட்டது. சிலுப்ப சிலுப்ப சோப்பு நுரையாட்டம் குமிழியிட்டு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா கெட்டியாகி சடார்னு உடைஞ்சி பதமாகி திரள்கிற வெண்ணையில் மத்து மின்னும். மெதுவா உருட்டி தண்ணிக்குள்ளயோ மோர்லயோ விட்டதும் பந்தாட்டம் மிதக்கும் இவனிடம் தப்பி மிச்சமிருந்தால். நெய்யும் அப்படித்தான். காய்ச்சினால் சும்மா அப்படியே ஊரையே கூப்பிடும்.

சனி ஞாயிறில் மேய்க்கிறதும், கடிச்சிக்கிட்டிருக்கிற 'தொனசி'களை பிடித்து கிள்ளி நெருப்பில் போடுவதும், கழுவிவிடுவதும் பிடித்தமான வேலை. கழுவினதும் வெயிலில் நிப்பாட்டிவிடணும். இல்லேன்னா இழுத்துக்கிட்டு ஓடி குடுகுடுன்னு உடம்பை ஒரு ஆட்டுட்டி சிலுக்கும். நடுங்குறதாட்டம் பாவலா செய்யும். கைவச்சு நீவ ஆரம்பிச்சதும் 'ஏமாந்துட்டியா'ன்னு சும்மா சுகமா நிக்கும். இப்ப பாவம் மழையில தொப்பலா நனைஞ்சு...

"ஏ யம்மா, மாட்டுக்கு குளுருதாட்டங்கீதுயா... புடிச்சினு வந்து உள்ளாற கட்டுட்டுமாயா..."

"ஆங், அத்த புடிச்சினு வந்து வூட்ல கட்டிப்புட்டு அது மடியில பூந்து படுத்துக்க... ஒங்கொப்பன் ஒம்புது தூலம் போட்டு கட்டினுக்கீற இந்த பங்களாவுல அதொண்ணுதான் பாக்கி... எனுக்கு குளுருதுடா சீனுன்னு இவனாண்ட வந்து அது சிணுங்குச்சாம்... ஆளப்பாரு அவனப் பாரு... இங்கயே வூடு பூரா ஓதம் ஏறிக்குனு வரகம்பில்லு ஒதறிப்போட்டு படுத்துணுக்கீறம். இதல அதக் கொண்ணாந்து கட்டி சாணியிலயும் கோமியத்துலயும் சீப்பட்டுனு இருக்கணுமா... படல சாத்தினு உள்ளாற வாடா..."

பாதத்திலிருந்த சேத்துப்புண்ணை வரட்டு வரட்டுனு சொறியும் ஆத்திரத்தில் கத்திய அம்மா மேல் கோபம் கோபமாய் வந்தது. இப்ப திருப்பி ஏதாச்சும் பேசினால் அடி விழுந்தாலும் விழும்.

பால் நின்னதிலிருந்து இந்த அம்மா இப்படித்தான். கவனிப்பும் கரிசனமும் காணாமல்போய் வெறுப்பும் எரிச்சலும் காட்டுகிறாள். அப்பன் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு 'புடிச்சினு வாடா சீனு'ன்னு சொல்லியிருக்கும். மாட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் பாக்கத்தெரியாது அப்பனுக்கு.

"கறக்க கறக்க கைதான் வலிக்கும். ஆறு ஈத்து போட்டப்புறம் அதுந்தான் என்னா பண்ணும்... தாயிக்கே மாரு சுருங்குறப்ப மாடுமட்டும் சொரக்குமா"...ன்னு பரிஞ்சு பேசும் - எல்லாக் கன்னும் கெடாவாகி ஜாதி விருத்தி காத வருத்தம் இருந்தாலும்.

"காத்தால போன மனுசன் இன்னேரங்காட்டியும் வூடு வந்து சேரலன்னா என்னாத்த சொல்றது. போனா போன எடம், நின்னா நின்ன எடம்... ஆச்சு, செத்தநேரம் போனா பைனான்சுக்காரன் வருவானே நான் என்னா ஜவாப்பு சொல்றது... பொம்மனாட்டி எப்பிடி சமாளிப்பாள்னு ஒரு ரோசனை வேணாமா ஆம்பளைக்கு. ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளையும்..." நீட்டி முழக்கி புலம்பிக் கொண்டிருந்தவள், படலை தள்ளிக்கொண்டு நுழைந்த புருசனைக் கண்டதும் விசுக்கென்று நிறுத்திவிட்டாள்.

"ஏப்பா மாதேசு, ஏன் மழையில வெளிய நின்னுன்குனு... உள்ளாற வா... அட பரவால்ல வா... வாப்பா... இந்தா புள்ள, அந்த மனையை எடுத்து இப்பிடி போடு..."

வாசப்படிக்கு எட்டிப்பார்த்து அப்பன் கூப்பிடுவது யாரை என்று தெரியாமல் முழித்தான் சீனு. புது ஆள்.

"அந்த ஆளு போனதும் மாட்டை உள்ளாற கட்டணும்னு அப்பனாண்ட சொல்லணும்".

"உனக்கு தெரியாதது ஒன்னுமில்லீண்ணா... இப்ப சரக்கோட போனாலியும் மானம் காய்ஞ்சாத்தான் மொதுலு கைக்கு வந்து சேரும். ரொம்ப நெருக்கடின்னு சொல்றதால தான் நான் அட்வான்ஸ் குடுக்க ஒத்துக்கினேன்..."

"என்ன பண்றது மாதேசு... நானும் உருண்டு கொஞ்சும் பொரண்டு கொஞ்சம் பொரட்டிரலாம்னு தான் இருந்தேன். எங்கயும் சிக்குல. பிரசரண்டு கிட்டயும் ஒன்னும் பேரல. நாயி எலக்சனப்ப பேசின மாரியா பேசறான்... வெதைக்கு வச்சிருந்த சோளத்த குத்தி ரெண்டு நாளா கஞ்சியாவுது. பைனான்ஸ்காரன் வந்தான்னா வாயில வந்ததெல்லாம் பேசுவான்... மானம் மரியாதய வுட்டுட்டு மத்தது எதுக்குன்னு தான் விக்கிறேன்... பாத்து சொல்லு..."

குரல் உடைந்து தன்னையே அறுத்து தராசில் நிறுத்தி விலை பேசுகிற தொனியில் புருசன் பேசியதன் அர்த்தம் புரிந்தது மாதம்மாளுக்கு.

"சரிண்ணா, முக்கால்ல முடிச்சிக்கலாம்னா..."

"...தா பாரு மாதேசு, எத்தினி பேசினாலயும் ஒண்ணு தான். தின்னா பத்து ரூவா நீ தின்னு இல்ல நான் திங்கறேன். குறுக்கால தரகன் எதுக்குன்னு தான் நேரா பேசறோம். கொஞ்சம் ஏறி வா..."

"இந்தாண்ணா அட்வான்ச புடின்னா, ரவுண்டா முடிச்சிக்கலாம்..."

"மீதி எப்ப..."

"மானம் காய்ஞ்சா, ஒரு வாரமா இல்லாததுக்கு ஞாயித்துக்கெழம அறுப்பு கொஞ்சம் அதிகமாத்தான் உழும். முடிஞ்சா தள்ளியுடறேன். அன்னிக்கு சாயந்திரமே மீதிய வாங்கிக்க. அதுல என்னா இருக்கு. ஆனா கூட கொஞ்சம் ஜாஸ்தியாத் தான் ஒத்துக்கிட்டேன்னு தோணுது. அங்க பாருங்க பரியெலும்பெல்லாம் தூக்கிணுக்கீது. வாங்கினுப்போற ரொணத்துக்கு தோல் விக்கிறதுல தான் அஞ்சோ பத்தோ மீறும்...''

''சரி, காலைல வந்து புடிச்சினு போ. இன்னிக்கு வாணாம், வெள்ளிக்கெழமை. வூட்டாண்ட கீற லச்சுமிய ஓட்டறது நல்லதில்ல...''

"இதப் புடிங்க..."

நெடுநேரமாய் நீட்டிக்கொண்டிருந்த அட்வான்சை வாங்க ஒருவருக்கும் கை நீளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது.

பால் கரக்கும் சத்தமும் மோர் சிலுப்பும் சத்தமும் பேரோசையாகி காதடைக்க, தொங்கும் உரியில் கறுத்துக்கிடக்கும் பழைய நெய்ச்சட்டியை வெறித்துப் பார்த்திருந்தான் சீனு.

வெளியே மாடு கத்திக்கொண்டிருக்கிறது.

புதன், நவம்பர் 16

ரகசியத்தில் பாயும் நதி –ஆதவன் தீட்சண்யா

பருவங்கெட்டு பெய்து கொண்டிருந்தது மழை. முனிமலை மேலிருந்து பாறாங்கல் உருண்டு வருவதைப் போல, அடர்ந்தடர்ந்து கிடுகிடுக்கும் இடியோசைக்கு குலை நடுங்கியது. சாளைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரோமக்கால் சிலிர்ப்பில் மண்டியிருந்தது குளிர். பழஞ்சீலையை மேலுக்குப் போர்த்தி சாக்குப் பைக்குள் கழுத்துவரைக்கும் நுழைத்துக் கொண்டாலும் வெடவெடப்பு குறையவில்லை. விளையாட்டுக்கு ஒரு மோதுமோதினாலும் இற்று விழுந்துவிடுமளவுக்கு சாளையின் சுவர்களில் ஓதமேறிவிட்டது. கூரையிலிருந்து விழும் மரவட்டைகள் காதுக்குள் நுழைந்துவிடுமோ என்கிற பயத்தில், அரைமயக்கத் தூக்கமும் அவ்வப்போது தடைபட்டது.
 
காடுகரையெல்லாம் ஊறி ஊற்றெழும்பித் தளும்பியது. கிணறுகளில் நீர்மட்டம் பிடுவைத் தாண்டி தொலைக்குழி வழியே கோடி போனது. புடையெடுக்கும் நெல்லங்காட்டில் தெப்பக்குளமாட்டம் முழங்காலமுட்டுத் தண்ணி நின்றது. மேட்டு அணப்புகளில் நட்டிருந்த குச்சிக்கிழங்கு அழுகி நொதிக்கும் நாற்றம் குமட்டியெடுத்தது காற்றை.

‘எம்மக்க பட்டப்பாடெல்லாம் இப்பிடி பதராப் போச்சே... ஒரு போகத்து வெள்ளாமையழிஞ்சா தாங்குமா குடும்பம்...' என்ற மழையிறக்கம் கண்ட நாளிலிருந்து சாக்குப் பைக்குள் முடங்கிக் கொண்டு அங்கலாய்த்துக் கிடக்கிறாள் பொன்னுருகிப் பாட்டி. ‘நான் கொமரியாவறதுக்கு முன்னாடி சின்னப்பிள்ளையா இருந்தப்ப ஒருதபா இப்படித்தான் பேஞ்சது. இப்ப என்னை அடிச்சினு போறதுக்குத்தான் திரும்ப வந்துனுக்கீதாட்டங்கீது.....' என்று ஊதக்காற்றுக்குத் தாங்காமல் நடுங்கும் குரலில் தனக்குத்தானே தன் பிராயத்தை சொல்லிக் கொள்வதைப் போல் முனகிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு இப்போதும் எல்லாமே ஞாபகத்தில் இருக்கிறது. பேயாத மழை பேய்ந்து பெரியநத்தம் ஏரி உடைந்து ஊரும் காடும் வெள்ளத்தில் முழுகியது அப்போதுதான். ஏரிக்கு கீழ்க்கரையில் இருந்த பூங்கரடு, பவளனூத்து, வேட்டக்குடி, வெள்ளிமுறி நாலு ஊருக்கும் சென்மத்தில் காணாத சேதாரம். சுவர் இடிந்தும் கூரை அமுங்கியும் நாலைந்து பேர் செத்துப் போனார்கள். வெள்ளாமை முழுசுக்கும் அழிமானம். விவரந்தெரிந்த நாளிலிருந்து வெளேரென்ற மணல்தட்டிக் கிடந்த மணியாற்றில் கரையைத் திமுத்து ஓடியது தண்ணி. செங்காமூட்டுப் பனையில் பாதி தண்ணிக்குள்ளிருந்தது. அப்படியொரு கோலத்தில் ஆற்றைப் பார்க்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஊரே திரண்டு குமிந்தது கரையில். இவளும் சவ்வுக் காகிதத்தை தலையில் கொங்காடையாக மாட்டிக் கொண்டு, சித்தப்பனோடு பார்க்கப் போயிருந்தாள். காணியம்மன் தேருக்குக்கூட இப்படியொரு ஜனம் குமிந்து அவள் பார்த்ததில்லை. கரை முழுக்க ஜனமான ஜனம். பண்ணாடிகளும்கூட குடைபிடித்து வந்து வெப்பால மரத்தைத் தாண்டி கருங்கண்ணன் காட்டோரம் இருந்த பாறைகளில் ஏறி நின்று பார்த்தார்கள். இவள் உயரத்துக்கு தெரியாததால் சித்தப்பன் தோளேற்றிக் கொண்டான். ரண்டுப்பக்கமும் தாண்டுகால் போட்டு உட்கார்ந்து கொண்டு இவளும் பராக்கு பார்த்தாள்.

முனிமலை உச்சியிலிருந்து வகிடு மாதிரி தாழ இறங்குகிறது மணியாறு. எப்போதோ ஒரு காலத்தில் அது பொங்கிப் பெருகி பாய்ந்திருப்பதை இருமருங்கு கரையோரப் பாறைகளில் படிந்திருக்கும் நீர்த்தாரையைப் பார்த்தாலே தெரியும். ‘இப்படி அனாமத்தாய் ஓடி சமுத்திரத்தில் எதுக்கு கலக்கணும்...' என்று ஒரு வெள்ளைக்காரன் நடுவாந்தரத்தில் வளைத்து நொய்யங்குழி அணை கட்டின பிற்பாடு, நிலைமை தலைகீழாகி விட்டது. மழைக் காலத்தில் மட்டும் முடி உதிர்ந்தவள் சடையாட்டம் சன்னமாய் கொடிவாய்க்கால் அளவுக்கு மணலை நனைத்துக் கொண்டு ஈரம் தெரியும். அப்படி இருந்த ஆறா இது... என்று அரட்டிக் கொண்டு ஓடியது இப்போது.

பாறைகளில் வெள்ளம் மோதித் தெறிக்கும் திவலைகள், புகையாட்டம் ஆற்றுக்கு மேல் மிதந்து நகர்ந்தது. செங்கரட்டிலிருந்து வடியும் தண்ணீரும் பாலக்குட்டை கணவாயில் ஆற்றோடு சேர்ந்து புதுவெள்ளத்தின் நிறத்தை செம்மண் குழம்பு போலாக்கியிருந்தது. நேரமாக ஆக தண்ணி மட்டம் ஏறியது மேலுக்கு. அதுவரை பயமும் திகிலும் பரவசமுமாய் கரையிலிருந்தக் கூட்டம் தன்னையறியாது அடியடியாய் பின்வாங்கி நின்றது. மணல் மூட்டைகளை அடுக்கி முட்டுக் கொடுத்திருந்த வண்ணம் பாளையம் ஏரியும் உடைந்து விட்டிருக்கலாம் என்று பேசிக் கொண்டனர். அது உடைந்திருந்தால் பத்திருவது ஊர்கள் ஜலசமாதிரிதான் என்றும் ஒரு குஞ்சுகுளுவான்கூட மிஞ்சாது என்றம் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் சித்தப்பன். ஜவுரிக்கு முடி வாங்கிக் கொண்டு பட்டாணியும் பலூனும் தருகிற கப்பக்காலிக்கு வண்ணம்பாளையம்தான் ஊர். அவள் இனி வருவாளோ, மாட்டாளோ என்ற கவலை இவளுக்கு. தாவாரத் தண்டையில் சொருகி வைத்திருக்கும் முடிச்சுருணையை இனி யார் வாங்கிக் கொள்வார்கள் என்று யோசித்தாள்.

பாறைகளில் வெள்ளம் விளாறியடித்து ஓடும்போது ஏற்படும் சத்தம் ஓங்காரமாய்க் கேட்டது நெடுந்தூரத்துக்கு. பராக்குப் பார்க்கப்போன பிள்ளை இன்னும் திரும்பாத பதட்டத்தில் கூட்டிப்போன கொழுந்தனைக் கறுவிக் கொண்டே அவள் அம்மாவும் கரைக்கு வந்து விட்டிருந்தாள். மகளைத் தேடி வந்தவள் பெருக்கெடுத்துப் பாயும் செந்தண்ணியைக் கண்டதும் சின்னப்பிள்ளை மாதிரிரி மிரண்டு போனாள். அவளும் ஆயுசுக்கு இப்படிப் பார்த்தவளில்லையே...’ஆத்துக்குன்னு ஒரு வழியிருக்கு, அது நம்ம மேல வந்து ஏறாது'ன்னு கொழுந்தன் தைரியம் சொன்னான். ‘பயத்துல புள்ளைக்கு காய்ச்ச குளுரு வந்தா ஒங்கொண்ணனுக்கு ஜவாப்பு சொல்றது யாரு...' என்று நொடித்துக்கொண்டே ‘வா யம்மா சாளைக்குப் போலாம்' என்று மகளை அழைத்தாள். மறுத்து தலையாட்டியபடி சித்தப்பனின் உச்சிமுடியை கோர்த்துப் பிடித்தாள் இவள். ‘சின்னப்பிள்ளையாட்டம் தோள்மேல ஒக்காந்துனு ரெம்பவும்தான் செல்லங் கொஞ்சறே... ஏய் இறங்கி வாடி' என்று அம்மா அதட்டியதும் இவள் அடம் பிடித்து அழுததும் எப்டியோ போய்த்தொலை என்று அவள் விட்டுவிட்டதும்கூட இவளுக்கு மறக்கவில்லை.

மரம் மட்டை செடி செத்தை இன்னதென்றில்லாமல் எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் மிதந்தோடிப் போய் மறைகிறதாயிருந்தது ஆறு. சாளையின் கூரைகள் பாதி மூழ்கியும் மூழ்காமலும் ரங்கவட்டம் சுற்றிக்கொண்டு ஓடுவதைப் பார்த்து கூட்டம் அரற்றியது. அடித்துக்கொண்டுபோன ஆடு மாடு உருப்படிகள் ஒண்ணா ரண்டா...? நாயொன்று கரையேற மாட்டாமல் தத்தளித்துக் கொண்டு அண்ணாந்து ஊளையிட்டபடி ஆற்றின் போக்கில் போய்க்கொண்டிருந்தது. தீத்தான்கொல்லை பக்கத்தில் கரையிலிருந்த வாகை மரமொன்று பெருஞ்சத்தத்தோடு ஆற்றின் குறுக்கே சாய்ந்தது. நல்லவேளையாய் அந்த மரத்துக்குக் கீழே நாய் நின்றிருக்கவில்லை. பெருங்கூட்டு மரம் என்பதால் வெள்ளத்தை கிடையாய் மறித்துக்கொண்டு நின்ற அவ்விடத்தில் சுழிபோல ஆறு பொங்கி எதுக்களித்து ஓடியது திசைதப்பி. மேங்காட்டிலிருந்து அடித்துக் கொண்டு வந்த ஒரு மாட்டின் கொம்பு, மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டது. அது மேற்கொண்டு நகரமுடியாதபடி செருமிக் கொண்டு தீனமாய் கத்தியது.

சித்தப்பனும் அவனது சேக்காளிகளும் எதையோ குசுகுசுத்தார்கள். பின், உங்கம்மா கையைப் பிடிச்சுக்க கண்ணு என்று தோளிலிருந்த இவளை இறக்கி அவளிடம் விட்டுவிட்டு எங்கோ ஓடியவன், இரண்டு கயித்துச் சுருணைகளை தூக்கிவந்தான். பெத்தய்ய நாய்க்கர் காட்டோரமிருந்த விளாமரத்தில் ஒண்ணுங்கீழ் ஒண்ணாய் கயிறுகளைக் கட்டி மறுமுனையை இடுப்பில் கட்டிக் கொண்டான். இவளும் இவங்கம்மாளும் சனங்களும் போட்ட கூப்பாட்டை அவன் சீந்தவேயில்லை. கீழேரிப்பள்ளம் தெக்கத்தியான் காட்டில் பண்ணையத்தில் இருந்தபோது, பெண்ணையாற்றில் ஆற்றுநீச்சல் பழகிய தைரியம் அவனுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால், காட்டாற்றுக்கு கரையுமில்லை வரையுமில்லை என்பதால்தான் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்குகிறான். எதற்கு இவன் ஆற்றுக்குள் இறங்குகிறான் என்று தெரியாத கூட்டம், அவனது சேக்காளிகளைத் திட்டிக்கொண்டே சேற்றுக்கட்டிகளை எடுத்து வீசி கரைக்கு அழைத்தது.

அவன் ஆற்றின் போக்கில் கைகளை நீளநீளமாய் விளாவிப்போட்டு, ஒரு தக்கையைப்போல மிதந்து மரத்தை நெருங்கினான். இப்போது ஆற்றின் போக்கை மறித்துக் கொண்டு குறுக்குவாட்டமாய் மரத்தை நோக்கி அவன் கடக்க வேண்டியிருந்தது. வெள்ளம் அவனை உந்தித்தள்ளி இழுத்தது. நீந்தவும் முடியாமல் கால்பாவவும் ஏலாமல் பிடிமானமற்றுத் தத்தளித்தவன் மரக்கிளையொன்றைப் பற்றிக் கொள்வதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. தவ்வித்தவ்வி நகர்ந்து மாட்டின் கழுத்தில் ஒரு கயிற்றால் படிமுடிச்சிட்டான். இன்னொரு கயிற்றை பின்னங்கால் பக்கம் போட்டு, முதுகுப்பக்கம் இழுத்துக்கட்டி விட்டால் மாட்டை இழுப்பது சுளுவாயிருக்கும். ஆனால், தண்ணிக்குள் முழுகினால்தான் உண்டு. கலக்கங்கண்ட புதுத்தண்ணியாயிருப்பதால் முழுகினாலும் எதுவும் நெப்பு நிதானம் தெரியவில்லை. ஆனது ஆகட்டுமென்று சீக்கையடித்தான். கரையிலிருந்த அவனது சேக்காளிகள் கயிற்றை இழுக்க, பின்னாலிருந்து இவன் உந்தித் தள்ளினான். மாட்டை கரை சேர்ப்பது பெரும்பாடாகிவிட்டது. அது உயிரோடிருந்தது.

கயிற்றோடு மீண்டும் ஆற்றில் இறங்கப் போனவனை ‘மறுக்கா எதுக்குப் போறே காளீப்பா...' என்று இவளம்மா தடுத்தாள். ஒண்ணும் ஆகாது என்று சொல்லிக்கொண்டே அவன் போய் மரத்தின் ஒரு கிளையில் வாகாக உட்கார்ந்து கொண்டான் இப்போது. மிதந்துவந்த சீலையொன்றை இழுத்துச் சுருட்டி கரைக்கு வீசினான். அது பாதியிலேயே விழுந்து சாயத்தண்ணி மாதிரிரி ஓடியது. தலைகுப்புறக் கவிழ்ந்து தக்கையாட்டம் தேலிக்கொண்டு வந்து ஒரு பிணத்தைக் கண்டு திகீரென்றானவன் என்ன செய்ய என்ற யோசிப்பதற்குள் அது கடந்து போய்விட்டது. கரையிலிருந்து அதப்பிடிடா பிடிடா என்று கூப்பாடிட்டனர். பிணத்தை எடுத்து எதற்காகும்... ஆள் யார் ஊர் எது என்று இந்த மழையில் தேடிக் கண்டுபிடித்து கொடுக்கிற பாடும் தன் அண்ணனுக்குத்தான் சேர்ந்துத் தொலையும் என்று நினைத்துக் கொண்டதும்கூட, அவன் அந்தப் பிணத்தை போட்டுமென்று விட்டதற்கு காரணமாயிருக்கும்.

‘ஒரு பறப்பயனுக்கு இருக்கிற தகிரியம் நம்மள்ல ஒருத்தனுக்கும் கெடையாதா...' என்ற மீசை கடித்த வேங்கான் மகன் சொக்கனிடம் ‘ஆத்தோட போற மாட்டை அறுத்துத் தின்னா எவன் கேக்கப் போறாங்கிற துணிச்சல்ல எறங்கிப் புடிச்சிட்டான். மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுதானாம் பறையன் கொழுப்புக்கு அழுதானம்கிற கதையா இருக்கு இவனுகங்க பண்றது... இதுல நீயும் நானும் போட்டிப் போடணுமா...' என்றான் வெள்ளை. நம்ம கண்ணு முன்னாடியே எத்தினி ஆடுங்க அடிச்சினு போச்சு... ஒண்ணையாவது மறிச்சு தூக்கணும்னு நமக்குத் தோணலியே... அவன் என்னடான்னா பராக்கு பாக்க வந்த எடத்துல வூட்டுக்கு ஒருகூறு கறிக்கு வழி பண்ணிட்டான் பாத்தியா...' என்று மறுபடி கொதித்தான் சொக்கன். ‘அதுக்கு ஏண்டா மருகா ஆத்ரப்படறே... அவங்களுக்கு ஒரு மாட்டைப் பிடிச்சவன் நமக்குன்னு ஒரு ஆட்டைப் பிடிக்காமலாப் போயிடுவான்... கரைக்கு வரட்டும் பாத்துக்கலாம்...' என்று சமாதானம் சொன்னான் வெள்ளை. அவன் வாய் முகூர்த்தம் பலித்த மாதிரிரியே அடுத்தடுத்து ஒரு செம்பிலியாட்டையும் மான் ஒன்றையும் மடக்கி கரைக்கு ஏற்றிவிட்டு தானும் கரை திரும்பினான் இவள் சித்தப்பன்.

கரைக்கு வந்தவன் தான் மீட்ட உருப்படிகளை ஒரு நோட்டம் விட்டான். அவை தண்ணியிலிருந்து மீண்டு தப்பித்த உணர்வின்றி இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தன. மாட்டின் உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. அதன் வயிறு உப்பசம் கண்டது போலிருந்தது. அடிக்கடி வாலைத் தூக்கி மூத்திரம் பெய்து கொண்டேயிருந்தது. சும்மாவே செருமிக்கிடக்கும் ஆடு நிலைகொள்ளாமல் துள்ளித்துள்ளி செருமி குடித்துவிட்டிருந்த ஆத்துத் தண்ணியை வெளித்தள்ள பாடாய் பட்டுக் கொண்டிருந்தது. பயத்தில் புழுக்கையிடுவதற்குப் பதில் கழிச்சலைப் பீய்ச்சியது. மனிதர்களைக் கண்ட மிரட்சியில் மானின் காதுகள் விடைத்துக் கிடந்தன.

குடை பிடித்து நின்றிருந்த பண்ணாடிகள், அவர்களுக்குள் குசுகுசுத்துவிட்டு ‘நல்ல காரியம் பண்ணிட்டடா காளீப்பா... என்று பாராட்டினார்கள். பேச்சு இங்குமிங்குமாய் சுற்றியடித்து உருப்படிகளைப் பங்கு பிரிப்பதில் வந்து நின்றது. மாட்டை நீங்க எடுத்துக்குங்க... ஆடும் மானும் எங்களுக்கிருக்கட்டும்' என்பதாயிருந்தது பண்ணாடிகள் விருப்பம். ‘உசுரை தண்ணி மேல எழுதி வச்சிட்டு ஆத்துல இறங்கினது நான். கரையிலிருந்து இழுத்துப் போட்டது எங்காளுங்க. இதுல பங்கு பாகம்னு கேட்கிறது பண்ணாடிமாருக்குத் தகுமா சாமி...' என்றான் காளியப்பன். ‘அடே, உங்கிட்ட யாரும் பஞ்சாயத்து பேசல. நாங்க பிரிச்சியுடறோம். அவ்வளவுதான்...' என்றான் வெள்ளை. ‘பாத்தாலே தெரியலீங்களா பண்ணாடி அது செனைமாடுன்னு. வளக்க வேண்டிய சிசு அது வயித்துல இருக்கும்போதுஅறுத்துத் திம்பாங்களா யாராச்சும்... இந்த மாட்டை வேணும்னா பிடிச்சுக்கிட்டுப் போய் உங்க பட்டியிலியோ கட்டாந்தரையிலியோ கட்டிக்குங்க. எங்க பொண்டு புள்ளைங்க வயித்துல ஈரங்கண்டு ரண்டு நாளாச்சு. ஆடும் மானும் எங்களுக்கு வேணும்.....' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குடையை வீசியெறிந்துவிட்டு அவன் மீது பாய்ந்தான் சொக்கன். காளியப்பன் விலகிக் கொள்ளவும் நிலைகுலைந்து விழுந்த சொக்கன், அவமானம் தாங்காமல் எழும்பும் நினைப்பற்று சேற்றிலேயே கிடந்தான். கூட்டம் ரெண்டுத் தரப்பாய் கிழிந்து முறுக்கியது.

‘செத்தமாட்டைத் திங்கற நாய்ங்க செனமாட்டுக்கு கருணை காட்டுதுங்களேன்னு பொருமாதீங்க பண்ணாடி... பாவம் ரட்டைச் சீவன். இந்த மாட்டுக்கு ஒரு நாம்பு புல்லறுத்துப்போட எங்களுக்குன்னு கோமணத்தமுட்டு நெலம் நீச்சுகூட கிடையாது. அதனால அதை நீங்களே பிடிச்சுக்குங்க' என்ற சொல்லிவிட்டு, ஆட்டையும் கேளையையும் பிடித்துக் கொண்டு சேக்காளிகளோடு சேரிக்குத் திரும்பினான். இவளும் இவள் அம்மாவும் பின்னாலேயே ஓடினார்கள். பண்ணாடிங்கள பகைச்சிக்கிட்டா அவங்க நம்மள சும்மா விடுவாங்களா...? என்று வழிநெடுக புலம்பிக் கொண்டே வந்தாள் அம்மா.

கரையில் நடந்த சண்டையே மிச்சப்பொழுதின் பேச்சாயிருந்தது. கறியாக்கித் தின்னும் ஆசை யாருக்கும் தோன்றவேயில்லை. அடுப்பு மூட்ட காய்ந்த ஒரு சிமிறுகூட சேரிக்குள் யார் வீட்டிலும் இல்லாத நிலையில், இப்போதைக்கு கறியறுக்க வேண்டாம் என்று பெண்கள் சிலர் சொன்னதும் சரியென்றே பட்டது. விபரீதமான சூழலுக்குப் பொருந்த முடியாமலும் புரியாமலும் காளியாத்தா கோயில் நடையில் மேமே என்ற ஆடு கத்திக் கொண்டேயிருந்தது. இதுவரையிலும் பார்த்தேயிராத மானைச் சுற்றிக் குமிந்து பசியை மறக்கத் தொடங்கியிருந்தனர் குழந்தைகள். குளிரில் சிலிர்க்கும் மேனியில் புள்ளிவட்டங்கள் வினோதமாய் மாறும்போது மான் இன்னும் வேடிக்கைக்குரியதாயிருந்தது.

அந்தி சரியும்போது மீண்டும் மின்னல் வெட்டிக் கொண்டு மழையடிக்கத் தொடங்கியது. காலையிலிருந்து சிணுங்கிக் கொண்டிருந்த தூறல், இப்போது சடசடவென்று பெருமழையாகி இறங்கியது. ரெண்டுபக்கமும் திண்ணை வைத்து தரைக்கு காரை பூசியதாயும் மங்களூர் ஓடு போர்த்தியதாயும் இருந்த கோயில் மட்டுமே சேரியில் ஒழுகாததாய் இருந்ததால், மொத்தசனமும் அங்கேதான் அடைக்கலமென வந்து அண்டியிருந்தனர்.

அன்றிரவும் பிள்ளைகள் சோளப்பொறியைக் கொறித்து வயிறுமுட்ட தண்ணீரைக் குடித்துவிட்டு மானைச் சுற்றி சுருண்டு கிடந்தனர். பண்ணாடிமாருக்கும் இவங்களுக்கும் காலங்காலமாய் நடந்த சண்டைச் சச்சரவுகள், பஞ்சாயத்துகள், தீர்ப்புகள், தண்டனைகள் பற்றி தங்களது ஞாபகத்தைக் கிளறி கிளறி பெரியவர்கள் ஆளாளுக்கு ஒன்றாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பழையவை உண்டாக்கின பயமும் கோபமும் இருட்டில் வினோத உருவங்களாகி அலைந்து, அவர்களின் தூக்கத்தைப் பறித்து விழுங்கின. பொன்னுருகியும்கூட கண்ணை மூட பயந்து இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்நேரம் இவ்விடத்தில் அப்பன் இருந்திருந்தால், அணைத்துக் கொண்டு தூங்கியிருக்க முடியு மெனத் தோன்றியது அவளுக்கு. ஆனால், சர்க்கார் தோட்டியான அவள் அப்பன், உடைந்து விட்ட ஏரியைப் பார்க்கப்போன முன்சீப்பையருடன் நேற்று சாயங்காலமே போக வேண்டியதாயிற்று. தண்ணிக்குள் முழுகிச் செத்தவர்களின் பிணங்களை போலிஸ் வந்து எடுத்துப் போகும்வரை, அங்கேயே இருந்து பிணங்களுக்கு பந்தோபஸ்து கொடுக்க வேண்டிய சர்க்கார் தோட்டி தன் மகளைத் தூங்க வைப்பதற்காக எப்படி வரமுடியும்?

தங்ளையும் மீறி சிலருக்கு கண் சொக்கும் நேரத்தில் மாட்டின் பெருஞ்சத்தம் கேட்டது. திண்ணையிலிருந்து இறங்கிவந்து தாவாரத்தில் நின்று உற்றுக் கேட்டான் கசாப்பு கோயிந்தன். வெள்ளத்தின் பேரிரைச்சலையும் மீறி ஆற்றங்கரைப் பக்கமிருந்து பேரோலமாய் எழுந்தது மாட்டின் கத்தல். நெடுநேரம் ஆற்றுக்குள் நின்றிருந்ததால் உடம்பில் ஏறிய சில்லிப்பில் வெடவெடத்து முடங்கியிருந்த காளியப்பனை உசுப்பி எழுப்பினான் கோயிந்தன். மாடு கத்தன சத்தம் கேட்டுச்சாடா உனக்கு...? என்றான். ‘அவனுங்க அங்கயே உட்டுட்டுப் போய்ட்டாங்களாட்டங்கீது. ஆத்தங்கரையிலயேத்தான் இருக்காட்டங்கீது' என்றான். ‘நாம காப்பாத்தின உசுரை அவங்களை நம்பி உட்டுட்டு வந்தது தப்பாப்போச்சே...' என்று கலங்கிய காளியப்பன் ‘போய் பாத்துட்டு வரலாமா' என்றான். சித்தப்பனை கூப்பிட நினைத்தவள் அமைதியானாள்.

அடித்த கூதலில் ராந்தல் நெடுந்தூரம் தாங்கவில்லை. அப்படியும் இப்படியுமாய் அளைந்து கடைசியில் அந்த கைவிளக்கும் அணைந்துவிட்டது. கையிருப்பிலிருக்கும் தீக்குச்சிகள் விரயமாவதில் அவர்களுக்கு சம்மதமில்லை. ஜம்பமாய் கூத்தாடி முருகன் கொண்டுவந்திருந்த மூனுகட்டை பேட்டரி மின்னாம்பூச்சியாட்டம் மங்கியடித்தது. பந்தமாவது கொளுத்தி வந்திருக்கலாமென்றான் கணவதி. அந்த எண்ணையிருந்தா ஒரு நாள் சாளையில் வெளக்கெரிக்க ஆவும் என்று வாயடைத்தான் கொண பாலன். வேறுவழியில்லாமல் நடந்து பழகிய நெப்பிலும் கொடியோடப் படரும் மின்னல் வெளிச்சத்திலும் கரையை நோக்கி உத்தேசமாய் நடந்தார்கள். மழைக்காலிருட்டில் பாதை வழுக்கியது. நதானங்கெட்டு கால் வைத்தால் ஊறிக்கிடந்த பூமி உள்ளிழுத்தது. கவனம் கவனம் என்று கடக்க வேண்டியதாயிற்று ஒவ்வொரு அங்குலத்தையும்.

மாடு மறுபடி கத்தாமலிருப்பது கிறுத்து காளியப்பனுக்கு சற்றே ஆசுவாசம் வந்தது. கரையை நெருங்க நெருங்க மாட்டின் பெருமூச்சு சீரற்று இரைந்து கேட்டது. வெள்ளத்தில் சிக்கி இழுபட்டு வந்ததில் சினை தங்காமல் இறங்கியிருக்குமோ... பூச்சிப்பொட்டு எதாச்சும் கடித்திருக்குமோ... என்று பலவாறாய் தனக்குள் புலம்பி நடந்தான். வெள்ளத்தின் பேரிரைச்சல். இடி மின்னல். இருட்டு. தனியாக் கெடந்து என்ன தவுதாயம் பட்டதோ மாடு என்று நினைத்துக் கொண்டபோது, அவனுக்குத் தன் மீதே வெகாளம் பாய்ந்தது. ஆனது ஆகட்டுமென்று சாயங்காலமே அதையும் இழுத்து வந்து கோயிலடியில் கட்டியிருக்கணும் என்ற நினைப்பை அறுத்துக்கொண்டு யாரோ ஓடுவது கேட்டது.

யார்ரா அது என்ற கத்திக்கொண்டே காலடியோசையை விரட்டிப்ப பாய்ந்தார்கள் இருட்டுக்குள்ளேயே எல்லோரும். தாங்கள் விரட்டுவது மனிதனையா, விலங்கையா, எதுவுமற்ற நினைப்பையா என்று யோசிக்க அவகாசமில்லை அவர்களுக்கு. யாரோ விழுந்து அலறியதைப் பொருட்படுத்தாது ஓடிய உருவத்தின் மூச்சிரைப்பையே அவர்கள் துரத்த வேண்டியதாயிற்று. ஒரு மின்னல் வெட்டில் ஓடிக்கொண்டிருந்த சொக்கன் எல்லோருக்கும் பிடிபட்டுப் போனான்.

காளியப்பன் பிடி அவன் உடம்பில் ஈரக்கயிற்றைப் போல் இறுகிக் கொண்டிருந்தது. என்னைத் தொட்டுப் பிடிக்கிற தைரியம் வந்துருச்சாடா ஒங்களுக்கு என்று திமிறினான் சொக்கன். உன்னைத் தொட்டதால இப்ப நீ கருகிட்டியா இல்ல நாங்கதான் கருகிட்டமா... என்ற கணவதி, சொக்கன் கையிலிருந்த பேட்டரியை பிடுங்கிக் கொண்டு மாட்டை நோக்கிப் போனான். பிடியைத் தளர்த்தாமல் சொக்கனை இழுத்துக்கொண்டு காளியப்பனும் அவனுக்குப் பின்னே மற்றவர்களும் நடந்தனர். என்னை விடுடா தேவிடியா பெத்ததே என்று திமிறிக் கொண்டே இருந்தான் சொக்கன். ‘பறையன் தானம் பண்ணித்தான் எங்க பண்ணையத்துல மாடுகன்னு பெருகணுமாடா' என்று பொருமினான். ஒருவரும் மறுவார்த்தை பேசவில்லை.

மாடு சரிந்து கிடந்தது. அதன் வயிற்றில் கடப்பாறை மின்னியது. கடப்பாறை இறங்கிய இடத்திலிருந்து ரத்தம் கொப்பளித்து பெருகிக் கொண்டிருந்தது. எங்களுக்குன்னு கொடுத்த மாட்டை நாங்க எதுவுஞ் செய்வோம் என்றான் சொக்கன். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. ஆவேசம் வந்தவனாகி அவனை குண்டுக்கட்டாக தூக்கி ஆற்றின் திசையில் வீசினான் காளியப்பன்.

தெறித்து விழுந்தத் தண்ணீரை துடைத்துக் கொள்ளவும் நினைப்பில்லாமல் அங்கேயே கொஞ்சநேரம் நின்றிருந்தவர்கள் எதுவும் பேசிக் கொள்ளாமல் திரும்பினர்.

மாட்டைக் கொன்றுவிட்டு சொக்கன் எங்கோ ஓடிப் போய்விட்டான் என்றே இன்றும் பேச்சிருக்கிறது ஊருக்குள். இத்தனை வருஷங்கழித்து இப்படி பெருக்கெடுத்தோடும் மணியாற்றில் அவன் பிணம் மிதந்து வந்தால் எப்படியிருக்கும் என்று பொன்னுருகிக் கிழவி நினைத்துக் கொண்டபோது அவளுக்கு சிரிப்புதான் வந்தது. ஒழிஞ்சது பீடை என்று சொல்லிக்கொண்டே தூங்கடா பொண்ணு என்று மார் மீது கிடத்திக் கொண்ட சித்தப்பனின் நினைப்பு அவ்விடத்தில் கதகதவென்று பரவியது. மானின் புள்ளிவட்டங்களை கண்விரியப் பார்த்து வியந்த பொன்னுருகி என்னும் குட்டிப் பெண்ணாக தான் மாறிக் கொண்டிருப்பதாய் நினைத்துக் கொண்ட கிழவிக்கு இப்போது குளிரவில்லை.




துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...