இடிந்தகரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடிந்தகரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 18

புதியபாதைகளில் சென்றால்தான் இடிந்தக்கரையை அடையமுடியும்... ஆதவன் தீட்சண்யா


ஆமாம், புதியபாதைகளில் சென்றால் மட்டுமே இடிந்தக் கரையை அடைய முடியும்... ஏற்கனவே போடப்பட்ட பாதைகள் இடிந்தக்கரைக்கு பதிலாக வேறேங்கெங்கோ இழுத்துப் போகும் கெடுவாய்ப்புகளுடன் விரிந்திருக் கின்றன. அந்தச்சாலைகளில் நீங்கள் உங்கள்  உழைப்பையும் அறிவையும் விற்பதற்காக ஊர்விட்டு ஊர் போய் வரலாம். அல்லது சரக்கு பரிவர்த்தனை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்களேகூட சரக்காக மாறி உங்களையே விற்றுக் கொள்வதற்கும் கூட போய் வரலாம். ஆனால் அரசாங்கம் அந்தச் சாலைகளை வேறு நோக்கங்களுக்காகத்தான் அமைத்திருக்கிறது. மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தேவைப்பட்டால் தனது படைகளை விரைந்தனுப்பி அவர்களை ஒடுக்கவும் ‘பேரமைதியையும் சட்ட ஒழுங்கையும் நிலைநாட்டவும்’ என அரசின் விரிவான திட்டங்களுடன் சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அதிகாரப்பூர்வமான சாலைகள் எப்போதும் அரசின் தேவைகளுக்கானவை என்பதறிக. அவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்படுத்த முடியும். அதற்குப்பிற்கு நீங்கள் சுயமான பாதைகளை உருவாக்கிக்கொண்டால்தான் இலக்கை அடைய முடியும்.  அதல்லாமல் அரசாங்கப் பாதைகளை முழுசுமாக நம்பிப்போனால் ஏதாவதொரு போலிஸ் சோதனைச்சாவடியில் கொண்டுபோய் உங்களை அடைத்துவிடும். பிறகென்ன, நீங்கள் கட்டாயம் தேசத்துரோகிதான். உங்களுக்குத் தெரியும்தானே, எல்லோரது நெற்றியிலும் குத்தவதற்கு காவல்துறையிடம் அந்த ஒரேயொரு முத்திரைதான் இருக்கிறது.

இப்படி மனசிலும் உடம்பிலும் ஏழு தேசத்துரோக முத்திரைகள்   குத்தப்பட்ட தோழர்.சுப.உதயகுமாரையும் அவரது ஒருங்கிணைப்பில் அணுஉலையை எதிர்த்துப் போராடி வருகிற மக்களையும் சந்திப்பதும்கூட அரசின் பார்வையில் தேசத்துரோகம்தான். ஆகவே, இந்த தேசம் நமக்கெல்லாம் இழைத்துவரும் துரோகங்களுக்கு பதிலடியாக ஒரு எதிர்க்கணக்கை தொடங்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் உடனடியாக செல்லவேண்டிய இடம் இடிந்தக்கரைதான். தேசம், துரோகம், விசுவாசம் என்பவற்றின் இன்றைய வரையறைகளையும் சமன்பாடுகளையும் மாற்றிவிட விரும்புகிறவர்களும்கூட இடிந்தக்கரைக்கு சென்று தேசத்துரோகிகளின் எண்ணிக்கையை பெரும்பான்மையாக்கிவிட வேண்டிய தேவை இருக்கிறது.

தமது வாழ்வாதாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் உயிர் வாழும் உரிமைக்காகவும் அறவழியில் சமரசமின்றி போராடிக்கொண்டிருக்கும் மக்களோடு எமக்கிருந்த ஒருமைப்பாட்டை தெரிவிக்க இடிந்தக்கரைக்கு கிளம்பினோம். நாங்கள் செல்வதற்கு முந்திய நாள்தான், உண்மையறிய வந்திருந்த பதினோரு பேர் கொண்ட குழுவினரை மாவோயிஸ்டுகள் என்று சித்தரித்து  கைது பண்ணியிருந்தது காவல்துறை. (மாவோயிஸ்டுகளாகவே இருக்கட்டுமே, அதற்காக அவர்களை கைதுசெய்துவிடுவது என்ன நியாயம்?).  எனவே இன்று கெடுபிடிகள் கூடுதலாக இருக்கும் என்று நுட்பமறிந்தவர்கள் எம்மை எச்சரித்தார்கள். 

வழிகளை மறித்து காவல்துறை ஆங்காங்கே நிறுவியிருந்த சோதனைச் சாவடிகளில் சிக்காமல் எங்களை இடிந்தக்கரைக்கு அழைத்துப்போகும் பொறுப்பை தோழர்.நாறும்பூநாதன் ஏற்றிருந்தார். இதற்காக அவர் முதல்நாளே பலவழிகளிலும் சுற்றிக்கொண்டு இடிந்தக்கரைக்கு சென்று நோட்டம்விட்டு திரும்பியிருந்தார். தோழர்.புஷ்பராயன் போன்றவர்கள் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், எளிதில் பிடிபட்டுவிடாத வழியொன்றை அவர் தேர்ந்தெடுத்து அழைத்துப்போனார். செல்லும் வழியின் உடனடி நிலவரம் குறித்து அவரும் கிருஷியும் ஆங்காங்கு பலரை தொடர்புகொண்டு விசாரித்த வண்ணமிருந்தனர். ஒருவேளை பிடிபட்டுவிட்டால் தப்பிப்பதற்காக சொல்ல வேண்டிய பொய்கள் ஒரு பாடம்போல எங்கள் நுனிநாக்கில் இருந்தது.  இடிந்தக்கரைக்குப் போய்வந்த குற்றத்திற்காக இந்த வண்டிமீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் இன்றைய கதி என்னவாகுமோ தெரியவில்லை என்றும் தனது கவலையை பகிர்ந்துகொண்டார் ஓட்டுநர். கண்டம் விட்டு கண்டம் வந்து ஒரு கம்பனி தனது உயிர்க்கொல்லி உலைகளை பகிரங்கமாக நிறுவிவிட்டு  சவடால் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதேநாட்டின் குடிமக்களை இதேநாட்டு குடிமக்கள் சந்திப்பதற்கு ஏதோ வேறுநாட்டு எல்லையை சட்டவிரோதமாக கடப்பதுபோல ஒளிந்தும் பதுங்கியும் செல்ல வேண்டியிருக்கிறதே என்கிற அங்கலாய்ப்பு எனக்கு. இவ்வளவு கெடுபிடிகளை ஒரு அரசாங்கம் தன் சொந்த மக்கள் மீது திணிப்பதன் மூலம் அது வேறு யாருக்கான அரசாங்கமாகவோ இங்கிருந்து செயல்படுகிறது என்பது மறுபடி நிரூபணமாகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஆர்மி செக்பாயிண்ட்டுகளால் நிறைக்கப்பட்ட கொடூரபூமியாம் இலங்கைக்கு சென்று வந்த நினைப்பு எனக்குள் திடுமென தெறித்து நின்றது.

ஒருவழியாக இடிந்தக்கரையை நெருங்கிவிட்டிருந்தோம். ஆனால் அப்போதும் ஆபத்திருந்தது. நல்லெண்ணம் கொண்ட ஜீப்காரர் ஒருவர் எங்களை செம்புழுதி புரளும் கொடித்தடம் ஒன்றில் அழைத்துப்போயிருக்காவிட்டால் போலிசிடம் மாட்டித்தானிருப்போம். போலிசுக்கு சிக்காமல் தப்பித்து வந்துவிட்ட சாகச மனநிலைக்குப் பதிலாக எந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற கேள்வியே எங்களை அலைக்கழித்தது. அவமானமாக இருந்தது.

போராட்டக்குழு பொறுப்பாளர் ஒருவர் எங்களை வரவேற்று அழைத்துப் போனார். போராட்டத்திடலின் பந்தலில் அமர்ந்திருந்த பெண்களும் குழந்தைகளும் ஆண்களும் யாரென்றே தெரியாத எங்களை கைதட்டி வரவேற்றார்கள். இவ்வளவு தூரம் தேடி வந்துவிட்டவர்கள் கட்டாயம் தங்களை ஆதரிக்கிறவர்களாகத்தான் இருக்க முடியும் என்று அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து கை தட்டி வரவேற்றார்கள்.

லேட்டாக வருகிறவர்களை வெளியே துரத்தி முட்டிப்போட வைக்கும் பள்ளிக்கூட வழக்கப்படி பார்த்தால், உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 425 நாட்கள் கழித்து மிகமிக தாமதாமாக வந்திருக்கிற நம்மை முட்டிப்போட வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களோ நம்மை இப்படி நேரடியாக மேடை ஏற்றுகிறார்களே என்றேன் தோழர்.ச.தமிழ்ச்செல்வனிடம். தப்பு செய்கிறவர்களையும் தாமதமாக வருகிறவர்களையும் பெஞ்ச் மீது ஏற்றுகிற வழக்கமும் நடப்பில் இருக்கிறதுதானே, இது அப்படியானதென விளங்கிக்கொள் என்றார் அவர்.  அப்படியுமல்ல, ...நாண நன்னயம் செய்கிறார்கள் போலும் என்றே நினைத்துக்கொண்டேன்.

நாங்கள் வந்த சேர்ந்த தகவல் கிடைக்கப்பெற்ற சிறிதுநேரத்தில் சுப.உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட தோழர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அணு உலையைத் தடுக்க சட்டரீதியாக போராடிவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், வெற்றிச்செல்வன், ‘பூவுலகின் நண்பர்கள்’ வழக்கறிஞர் சுந்தரராஜன், பொறியாளர் சுந்தராஜன், வள்ளியூர் செம்மணி ஆகியோரும் வந்தனர். நான் கீழே இறங்கி ஓடிப்போய் உதயகுமாரின் கைகளைப் பிடித்துக்கொண்டேன். எதுவும் பேசத்தோன்றவில்லை. பரவசத்தினாலோ பிரேமையினாலோ அல்லாமல் நான் வாழுங்காலத்தின் மெய்யான போராளிகளுள் ஒருவரான அவரிடம் என் தோழமையை தெரிவித்துவிட்டது போன்றதான ஒரு நிம்மதியில் விளைந்த மௌனம் அது.  தமுஎகச தோழர்கள் அனைவருமே என்னொத்த இதே மனநிலைக்குத்தான் ஆட்பட்டிருந்தார்கள். புதுவிசை இதழ்களை கொடுத்தபோது மிகுந்த வாஞ்சையோடு பெற்றுக்கொண்டார்.

இடிந்தக்கரைப் பெண்கள் தொழிலையும் போராட்டத்தையும் ஒரேகளத்தில் இணைத்திருந்தார்கள். உண்ணாவிரதத்தில் பங்கேற்றபடியே பீடி சுற்றிக் கொண்டிருந்த அவர்கள் உரைகளை கேட்கத் தயாரானார்கள். பத்திரிகையாளர் கவிதா முரளிதரனும் எழுத்தாளர் சந்திராவும் அவர்களோடு கலந்து உட்கார்ந்திருந்தார்கள். அக்டோபர்29ம் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை முற்றுகைப் போராட்டத்திற்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குப் போனவர்களைத் தவிர எஞ்சியிருந்த ஆண்களும் பந்தலுக்குள் குழுமியிருந்தார்கள். நாட்டுமக்களிடையே போராடும் குணமும், சூடும் சொரணையும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும், நாட்டுப்பற்றும் வளரவேண்டும் என்பதற்காக இடிந்தக்கரை மக்களின் கால்பட்ட மணலை  அள்ளிப்போய் இந்த நாடு முழுதும் தூவிவிட்டு வரவேண்டும் போலிருந்தது எனக்கு.

கூட்டம் தொடங்கியது. எங்களை, ஒவ்வொருவரது பெயரையும் சொல்லி வரவேற்றார்கள். எளிமையும் தெளிவும் தீர்க்கமும் ஆவேசமும் செறிந்த தனது உரையினூடாக உதயகுமார் சொன்னார் ‘‘இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்...’’ போராட்டம் தொடங்கி இவ்வளவு காலம் கழித்து இப்போது எதற்கு வந்தீர்கள் என்று அவர் கோபப்பட்டிருந்தாலோ குத்திக்காட்டியிருந்தாலோ கூட நாங்கள் தலைவணங்கி நின்றிருந்திருப்போம். ஆனால் அவரது வார்த்தைகளை கவனியுங்கள், ‘‘இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்...’’. இவ்வளவு ஆற்றல் மிகுந்த சொற்களை தெரிவு செய்து பேசுவதற்காக அவர் மெனக்கெடவில்லை. மனசின் ஆழத்திலிருந்து ஆற்றொழுக்காக சொற்கள் வந்து கவ்வுகிறது எம்மை. வெற்றியை நோக்கி போராட்டத்தை உந்தித்தள்ளுவதில் மெய்யான அக்கறையுள்ள ஒருவரால் மட்டும்தான் இப்படியான அரவணைப்புடன் பேசமுடியும் என்று நம்புகிறேன்.  தங்களிடம் வந்திருக்கும் யாரையும் இழந்துவிடக்கூடாது, எவ்வளவு குறைவான பலம் கொண்டவர்களையும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தம்மோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவரது அணுகுமுறை எந்தவொரு மனிதமனத்தையும் வென்றெடுக்கும் வல்லமை கொண்டது.

நாட்டின் சுதந்திரமும் சுயசார்பும் இறையாண்மையும் ஏகாதிபத்தியங்களுக்கு பலியிடப்படுவதையும் அதை எதிர்க்கும் தேசப்பற்றுள்ள குடிமக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதையும் ஆனாலும் பணியாத மக்களின் போர்க்குணத்தையும் விவரித்து மேலேறியது அவரது உரை. தனக்குள் இருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை அங்கிருந்தவர்களின் மனதிலெல்லாம் ஊறச் செய்து கொண்டிருந்த அவரைத்தான் அந்நிய ஏஜண்ட் என்று நாரவாயணசாமிகள் அவதூறு பொழிகிறார்கள். திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திப்பிடிக்க வந்தவனைப் பார்த்து திருடன் திருடன் கத்தினானாமே அப்படித் தான் இது. ஆட்சியாளர்களைவிட இந்த நாட்டின் நலனுக்கு ஆகப்பெரும் அச்சுறுத்தலாக வேறு யார் இருந்துவிட முடியும்?

‘‘... அடுத்து என்னதான் செய்வது என்று நாங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்... கடலுக்குள்ளும் இறங்கிவிட்டோம். மணலுக்குள்ளும் புதைந்துவிட்டோம். இந்த அரசாங்கம் எதற்கும் செவிசாய்யக்கவில்லை... இனி, மேலே மண்னெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொள்வது மட்டும் தான் எங்களுக்கு மிச்சமிருக்கும் வழியா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள்... தாமதமாக வந்துவிட்டதாக நினைத்து வருத்தப்படாதீர்கள். மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இடதுசாரிகளாகிய நீங்கள் எங்களின் Natural ally’’ என்று எங்களை விளித்தச் சொன்ன அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், ‘இவர்கள் நமது இயற்கையான சொந்தங்கள்... இவர்கள் இங்கு வந்திருப்பது நமக்கு பலம். இவர்கள் தமது எழுத்தாலும் பாட்டாலும் பேச்சாலும் நடிப்பாலும் அணுஉலையின் தீமைகளையும் நம் போராட்டத்தின் நியாயங்களையும் உலகெங்கும் கொண்டு செல்வார்கள்...’ என்று. ஆமோதிப்பதுபோல மக்கள் கரவொலி எழுப்பினார்கள். இந்த வார்த்தைகளுக்கெல்லாம் நாங்கள் எந்தளவு பொருத்தமானவர்கள் என்கிற கேள்வி என்னை உலுக்கியது. மற்ற தோழர்களும்கூட அவ்வாறே உணர்ந்திருக்கக்கூடும்.     


தமுஎகச மாநிலக்குழு சார்பில் சென்றிருந்த 14 பேர் சார்பாக மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வனும், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசனும், நானும் அந்த மக்களிடையே பேசினோம். கடலிறங்கிப் போராடுகிறவர்களுக்கு ஆதரவாக கரையிலேயே நின்று கொண்டு பேசுவதில் உள்ள சங்கடங்களாலும் உளைச்சல்களாலும் நாங்கள் இயல்பாக பேசமுடியாமல் திண்டாடினோம். அந்தந்த ஊரில் உள்ள நீர்நிலைகளில் ஆதரவாக ஏன் இறங்கவில்லை என்கிற கேள்வி உள்ளுக்குள் வாதிட்டுக்கொண்டிருக்கும்போது எப்படித்தான் இயல்பாக பேசமுடியும்? இது குற்றவுணர்ச்சியினால் எம்மை தாழ்த்திக்கொண்டு அமுங்கியக் குரலில் தரப்படும் வாக்குமூலமல்ல. எங்களது மனநிலையை அப்பட்டமாக இப்படித்தான் வெளியில் வைக்கமுடியும்.

வழக்கறிஞர் குழுவுக்கு எளிய பாராட்டுதல்களும் அவர்களது ஏற்புரைகளும் முடிந்த பின் தோழர்.புஸ்பராயனின் உரையோடு கூட்டம் நிறைவுற்றது. 425வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்துவரும் இடிந்தக்கரை மக்கள் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் நாணும் படியாக அவர்கள் இப்படியாக நன்னயங்களை செய்து கொண்டேயிருந்தார்கள். மாலையில் திருநெல்வேலியில் நடக்கவிருந்த கண்டனக்கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டியிருந்ததால் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
தோழர்.ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த கண்டனக்கூட்டத்தில் தஞ்சை, குமரி, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டதோழர்கள் திரளாக பங்கேற்றிருந்தனர். இடிந்தக்கரை சென்றவர்களில் சென்னை கலைக்குழு அசோக்  தவிர மற்ற தோழர்களாகிய சு.ராமச்சந்திரன், எஸ்.கருணா, உதயசங்கர், இரா.தெ.முத்து, ஜேசுதாஸ், ஈரோடு தி.தங்கவேல், எஸ்.இலட்சுமணப்பெருமாள், நாறும்பூநாதன்,  தேனி சீருடையான், பேரா.கணேசன், லட்சுமிகாந்தன், ஆனந்தன், நான், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினோம். முரசு கலைக்குழு ஆனந்தனும், கரிசல் கிருஷ்ணசாமியும் தம் பாடல்களால் வலுவூட்டினர். இடிந்தக்கரை மற்றும் திருநெல்வேலி கூட்டங்களில் நாங்கள் பேசியவற்றின் தொகுப்பு: 
அணுஉலையை எதிர்ப்பது தேசத்துரோகம் என்றால்,  இங்கு அணுஉலைதான் தேசமாக உருவகிக்கப்படுகிறதா? அந்தளவுக்கு நச்சும் நாசகாரத்தன்மையும் கொண்டததான் இந்த தேசம் என்றால் அதை ஒப்புக்கொள்ள மறுத்துப் போராடுகிறவர்களோடு நாங்கள் ஒருமைப்பாடு கொள்கிறோம்.

எதிர்க்கவேண்டும் என்பதற்காக இம்மக்கள் அணுஉலையை எதிர்க்கவில்லை. அது தங்களது உயிர்வாழும் உரிமையையும் வாழ்வாதாரங்களையும் பறிக்கக்கூடியது என்பதை உலகளாவிய அனுபவங்களிலிருந்து உணர்ந்துகொண்டதனால் எதிர்க்கிறார்கள். அவ்வாறு எதிர்ப்பதற்கும் போராடுவதற்கும் அவர்களுக்குள்ள ஜனநாயக உரிமையை மறுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அடக்குமுறைகளை ஏவுகின்றன. அறவழியில் போராடிய அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரைக் கொன்றிருக்கிறது காவல்துறை. தமிழக மீனவர்களை தினம்தோறும் கடல்வெளியில் தாக்கி சித்திரவதை செய்கிற இலங்கை ராணுவத்தினரை விரட்டுவதற்கு ஒருமுறைகூட தனது விமானத்தைப் பறக்கவிடாத மத்திய அரசு அணுஉலைக்கு எதிராக போராடுகிறவர்கள்மீது விமானத்தை மோதவிட்டு ஒருவரைக் கொன்றது. எளிய மக்களை ஒடுக்க முப்படைகள். யார் பயங்கரவாதிகள் என்பதற்கு இங்கு விளக்கம் எதுவும் தேவையில்லை.

ஒரு சின்னஞ்சிறு காவல் நிலையத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை பதிந்து கேடுகெட்டவகையில் ஒரு உலகச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  ஒருவேளை, அணுஉலை விசயத்திற்கு ஒரு தீர்வு வந்துவிட்டாலும்கூட இந்த மக்கள் வாழ்நாள் முழுக்க காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்துக்கும் அல்லாடிச் சாகுமளவுக்கு  ஒவ்வொருவர் மீதும் பல வழக்குகள். இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்துசெய்யுமாறும், தொடரும் கைது நடவடிக்கைகளை நிறுத்துமாறும், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் ஆட்சியாளர்களின் மென்னியைப் பிடித்துக் கேட்கும் திராணி கொண்ட பேராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

போராடும் மக்களுக்கு ஆதரவாக பேசுவதோ இயக்கம் நடத்துவதோ திருநெல்வேலி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல வெளியார் யாரும் இடிந்தக்கரைக்கு சென்றுவிட முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். மீறிச் செல்பவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். இடிந்தக்கரைக்கு வாகனங்களை அனுப்பக்கூடாது என்று எல்லா டாக்ஸி ஸ்டாண்டுகளுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அணுஉலை எதிர்ப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு இடம் தரக்கூடாது என்று மண்டபங்களும் எச்சரிக்கப்பட்டுள்ளன. வழக்கு வாய்தா சிறை என்று அச்சமூட்டி நாட்டின் இதரபகுதி மக்களை இடிந்தக்கரை பக்கம் திரும்பவொட்டாமல் செய்கிற தந்திரத்தை போலிஸ் கையாள்கிறது. திருநெல்வேலி மாவட்டம் போலிசுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு அங்கு கருப்புச்சட்டங்களும் ஆள்தூக்கும் கொடுமைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. சோதனை என்கிற பெயரில் கொள்ளையர்களைப்போல நள்ளிரவுகளில் கதவுடைத்துப்புகும் போலிசார் பெண்களிடம் அத்துமீறி நடப்பதையும் ஆபாசமாக பேசுவதையும் கண்டு பதறாதவர்களுக்கு மனசாட்சி என்று ஏதேனும் இருக்கிறதா? தேவாலயத்தில் நுழைந்து வழிபாட்டுக்குரிய சிலையை சேதப்படுத்தி அதன் தலையில் மூத்திரம் பெய்யுமளவுக்கு வக்கரித்துப்போனவர்களுக்கு காவல்துறை என்று பெயர் வைத்த மூடர்கள் யார்? அறவழியில் போராடிக்கொண்டிருப்பவர்களை இப்படியெல்லாம் ஆத்திரமூட்டி ஒரு நேரடி மோதலுக்குள் இழுத்துவிட்டு நரவேட்டையாடுவதற்கு காவல்துறை தந்திரமாக வேலைசெய்தவருகிறது.

இடிந்தக்கரை மக்களை தனிமைப்படுத்தி சோர்வடையச் செய்து பணியவைக்கும் இத்தகைய இழிமுயற்சிகளுக்கு எதிராகப் போராடாமல் இருப்பவர்களும் மௌனம் காப்பவர்களும் ஆட்சியாளர்களைவிடவும் ஆபத்தானவர்கள்.   17 தலித்துகள் தாமிரபரணிக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட நாளிலும்கூட வழக்கம்போலவே அல்வாவும் மிக்சரும் தின்று கொண்டிருந்த திருநெல்வேலியின் மிஸ்டர்.பொதுஜனத்திற்கும் விதவிதமான காரணங்களை கண்டுபிடித்து தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு  செயலற்று கிடப்பவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. உலகமயமாக்கலின் மூன்றாம் பத்தாண்டுக்குள் நாடு நுழைந்திருக்கும் இவ்வேளையில், மக்களின் வாழ்வாதரங்களை அபகரிபபதும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும் தீவிரமடைவது தவிர்க்கவியலாதது. எனவே மக்களும் வாழ்வா சாவா என்று போராட களமிறங்கும் காலமிது. போராடுவதற்கான வெளியை- உரிமையை தக்கவைத்துக்கொள்வதன் அடையாளமாக இடிந்தக்கரை மக்களின் போராட்டம் வெற்றிபெற்றாக வேண்டும். அவர்களது உழைப்பும் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் வீணாகிவிடக்கூடாது.  இந்த மக்களின் போராட்டம் தோற்றுப் போகுமானால் எல்லா நிலைகளிலும் நாமே நம்மை தோற்கடித்துக்கொள்ள தயாராகிவிட்டோம் என்று அர்த்தம்.

மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அவர்களை பயந்தாங்கொள்ளிகள் போல சித்தரிப்பவர்கள் உண்மையில் அவர்களை தம்மையறியாமலே அவமதிக்கிறார்கள். இவ்வளவு அட்டூழியங்களை இழைக்கின்ற போலிசையும் அடக்குமுறைகளை ஏவுகிற மத்திய மாநில அரசுகளையும் அவர்களின் முப்படைகளையும், அரசு சார்பு ஊடகங்களின் அவதூறுகளையும் எதிர்த்து சமரசமில்லாது சற்றும் அஞ்சாது போராடிவரும் இடிந்தக்கரை மக்கள் கேவலம் இந்த அணுஉலையைக் கண்டா அஞ்சுகிறார்கள்? இல்லை, அவர்களது அச்சம் அணுஉலை பற்றியதல்ல. அது, அணுஉலையின் தீமைக்கு பலியாகிவிடக்கூடாதே என்று மனிதகுலதத்தின் மீது கொண்டிருக்கும் அச்சம். உலகளாவிய மானுட நேயத்திலிருந்தும் இதர உயிர்களையும் இந்த புவிக்கோளத்தையும் நேசிப்பதிலிருந்தும் எழுகிற  அச்சம். அவர்கள் தமது சொந்த உயிர் பற்றி பயந்திருந்தால் இவ்வளவு கொடிய அடக்குமுறைகளுக்கு தாக்குப்பிடிக்காமல் என்றைக்கோ சரணடைந்திருப்பார்களே?

இவ்வளவு எதிர்ப்புக்கிடையிலும் அணுமின்உலை பாதுகாப்பானது என்கிறார்கள் ஆட்சியாளர்கள். அப்படியானால் சர்வதேச நிபுணர்களும் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளூர்ச்சமூகத்தினரும் அங்கம் வகிக்கிற சுயேச்சையான ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கலாமே? பாதுகாப்பு ஏற்பாட்டில் எவ்வளவு அசட்டையாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் உளறியதே சாட்சியமில்லையா? அணுமின் உலை பாதுகாப்பானது என்றால், குடியரசுத்தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புப்பகுதிகள், ஆளுநர் மாளிகைகள், சட்டமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர் விடுதிகள் போன்ற இடங்களில் அததற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்திச் செய்யுமளவிலான அணுமின் உலைகளை நிறுவி அவை உண்மையிலேயே பாதுகாப்பானவை என்று நிரூபிக்கும்பட்சத்தில் உதயகுமாரும் போராட்டக் குழுவினரும் இடிந்தக்கரை மக்களும் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக் கொள்வார்கள். கோன் எவ்வாறோ குடிமக்கள் அவ்வாறு. தலைவர்களே, நாடாள்பவர்களே, இப்போதாவது, இந்த விசயத்திலாவது உதாரணப் புருஷர்களாகவும் புருஷிகளாகவும் நடந்து காட்டுங்கள், நாங்கள் உங்களை பின்பற்றி வருகிறோம்.

13 ஆயிரம் கோடியை செலவிட்டு அணுமின் நிலையத்தைக் கட்டியாச்சு, அவ்வளவு பணத்தை விரயமாக்கினால் நாடு தாங்காது, எனவே அணுமின் உலை இயங்கட்டும் என்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. 700 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தமிழக சட்டமன்றக் கட்டிடம் இப்போது பாம்பு பல்லி பாச்சை தவக்களை விளையாடுவதற்காக கைவிடப்பட்டுள்ளது. சூழலியலாளர்களது எச்சரிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி தொடங்கப்பட்ட சேதுக்கால்வாய் திட்டம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விழுங்கிவிட்டு இப்போது மதவாதப்பார்வையினால் மணலேறி தூர்ந்துகொண்டிருக்கிறது. வருடாவருடம் பட்ஜெட்டில் முதலாளிகளுக்கும் வர்த்தகச்சூதாடிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகைகள் எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது நிதியமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். வாராக்கடன் என்று தள்ளுபடி செய்யப்படும் தொகையைக்கூட அவர் மட்டுமே அறிவார். இப்போதெல்லாம் இங்கு ஊழல்களும் கூட லட்சங்கோடிகளுக்கு குறைவாக  நடப்பதேயில்லை. தனிநபர்களின் கௌரவப் பிரச்னைக்காகவும் மதவாதத்திற்காகவும் லாபவெறியினாலும் இந்த நாட்டு மக்களின் பணம் லட்சலட்சங்கோடி நாசமாகிக் கொண்டிருப்பதுடன் ஒப்பிடும் போது 13 ஆயிரம் கோடி என்பது அற்பத்தொகை. 13ஆயிரம் கோடி பெரிதா ஒரு உயிர் பெரிதா என்றால் எழுத்தாளர்களும் கலைஞர்களும் உயிரின் பக்கமே நிற்போம்.

நாட்டுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக இந்த 13 ஆயிரம் கோடி விரயம்தான் ஆகட்டுமே, என்ன குடிமுழுகிவிடப் போகிறது? அட, அப்படியேதான் 13ஆயிரம் கோடி விரயத்தால் இந்த நாடு நாசமாகிக் போய்விடும் என்றால் போய்த் தொலையட்டும், வாழ்கின்ற வேட்கையில் எமது மக்கள் தங்களுக்கான ஒரு வலிய நாட்டை விருப்பம்போல உருவாக்கிக்கொள்வார்கள்.

வெள்ளி, அக்டோபர் 5

பாலைக் காக்குமா பூனை? - நா.ரகுராம்


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் 400 நாட்களைக் கடந்து விட்டது. தமிழகக் காவல் துறையுடன் சேர்த்து நான்கு மாநில காவல்துறையும், மத்தியப் படையும், விமானப் படையும், நவீன ஆயுதம் தாங்கிய படை என 6000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூடங் குளம், இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மத்திய அரசும், மாநில அரசும் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையைத் துவக்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, அமைதியாக நடக்கும் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் சுமார் 4 மணிநேரம் கூடங்குளம் அணுஉலையை சுற்றிப்பார்த்த ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம் "அணு உலை மிகவும் பாதுகாப்பாக" உள்ளது எனச் சொல்லிவிட்டார் எனவும், அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் (Atomic Energy Regulatory Board AERB) சொல்லிவிட்டதெனவும் கூறி எரிபொருள் (யுரனியம்) நிரப்புவதற்கு அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தி வைக்க இயலாது என்று முதலில் கூறினாலும் செப்டம்பர் 27ஆம் தேதி அன்று நடந்த விசாரணையில் எவ்வளவு செலவு செய்யப்பட்டிருந்தாலும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லையென்றால் அத்திட்டத்தை கைவிடுவதே நல்லது என்று கூறியுள்ளது. அணு உலையை ஆதரிக்கும் அறிவுஜீவிகள் பலர் நம் முன்வைக்கும் பொதுவான கூற்று "கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலை அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாகப்பட்டுள்ளது என்றும், அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்பதாகும். மேலும் இந்தியா வல்லரசாக மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் எனவும், மின் உற்பத்திக்கு அணுசக்தியே சிறந்தது என்றொரு மாயையை உண்டாக்கி வைத்துள்ளனர். இத்தகைய அபத்தமான பொய்யை மக்களிடம் கொண்டு செல்ல நாடாளுமன்ற விஞ்ஞானியும், ஏவுகணை விஞ்ஞானியும், அணு விற்பன்னர்களும், அரசின் கைக்கூலியாக செயல்படும் காவல்துறையினரும், இந்து முன்னணி அமைப்புகளும் தங்களால் இயன்றதை செய்து, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு தகுந்த உதரணமாக, இந்திய அணுசக்தி கழகம் (NPCIL - Nuclear Power Corporation India Ltd) மே 22, 2011 இல் வெளியிட்ட நூல் ஒன்றில் "அணுக்கதிர் வீச்சு மனிதகுலத்தின் எதிரியல்ல, நண்பன்தான் "என்றும் அதற்கு உதாரணமாக மருத்துவத்துறையில் உபயோகப்படுத்தப்படுகின்ற sonographyயால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் sonographyல் ஓலிஅலைகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓலிஅலைக்கும், அணுக்கதிர்வீச்சுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களைத்தான் "விஞ்ஞானிகளாக" நம்நாடு பெற்றுள்ளதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டிய அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புகுசிமா அணுஉலைப் பேரழிவிற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் நிலநடுக்கம், ஆழிப் பேரலை, இதர காரணங்களால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி குறிப்புகளிருந்தாலும், புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றிய சிறு குறிப்பைக் கூட காண முடியவில்லை.

மின்சக்தி உற்பத்திக்கு அணுசக்தியே சிறந்தது எனக் கூறுவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று இது மிகவும் அதிநவீன அறிவியல் வளர்ச்சி என்பதாகும். இத்தகைய நிலையில் அணு விஞ்ஞானம் அறிவியலின் வளர்ச்சி என்று சொல்கின்றவர்களுக்கு முன்வைக்கவேண்டிய கேள்வி, இது முழுமையடைந்த அறிவியல் வளர்ச்சியா? அறிவியல் என்பது பல செய்முறைப் பயிற்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்றதா, மனித இனத்துக்கு உகந்ததா என நுட்பமாக ஆராய்வதே அறிவியலாகும் என்பது எனது கருத்து. இத்தகைய நிலையில் அணுவைப் பிளப்பதன் மூலம் கிடைக்கும் அபரிதமான சக்தியை மட்டும் கருத்தில் கொண்டு அதனைத் தொடர்ந்து வரும் விளைவுகளையும், ஆபத்துகளையும் சிறிதளவும் எண்ணாமல் இருப்பது அறிவியலா? அல்லது அறிவீனமா?

இன்று கூடங்குளத்து தெருக்களில் விளையாடும் குழந்தைகளுக்குத் தெரிந்த அடிப்படை விஞ்ஞானம் கூட நாட்டை ஆளும் வர்க்கத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்பவர்கள் எனக் கூறும் விஞ்ஞானிகளுக்கும் தெரியாமல் போனது அறிவியலா? அல்லது அறிவீனமா? இன்று கூடங்குளத்தில் நடக்கும் போராட்டம் அணு விஞ்ஞானம் என்ற அறிவியலுக்கெதிரான போராட்டமல்ல,  அறிவீனத்திற்கெதிரான போராட்டமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இன்று அரசியல் தலைவர்களும், அணுசக்தித்துறை "விஞ்ஞானிகளும்", உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூடங்குளம் அணுஉலைக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்வைக்கும் வாதம் "அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் (AERB) ஒப்புதல் அளித்துவிட்டது"  என்பதாகும். இந்நிலையில் நாம் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம்:

அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் 1983ஆம் ஆண்டு அணுசக்தித் துறையால் (DAE- Department of Atomic Energy) அணு ஆற்றல் சட்டம் (Atomic Energy Act) 1962ஐ அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டது. அணுசக்தி ஆணையத்தின் (Atomic Energy Commission - AEC) நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் வருகின்றது. அணு ஆற்றல் சட்டம் 1962வரையறையின்படி AERBன் மிக முக்கியமான பணி, அணுஉலைப் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்தல், கதிர்வீச்சின் அளவை நிர்ணயித்தல், தொடர்ச்சியாக அணு உலைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை ஆராய்தல், அணு உலையை நிரந்தரமாக மூடும் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வரையறுத்தல் போன்ற முக்கியமான நடவடிக்கைகளாகும். அணு உலையை இயக்கும் இந்திய அணுசக்தி கழகமும் (Nuclear Power Corporation of India Ltd.) அணுசக்தி ஆணையத்தின் (atomic energy commission - AEC) நேரடிக் கட்டுப்பாட்டில் வருகிறது. தனித்தனியாக நிர்வகிக்கப்பட வேண்டிய அணுசக்தி ஆணையம், இந்தியா அணுசக்தி கழகம் மற்றும் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உண்மை நிலை என்னவென்றால், அணுசக்தி ஆணையத்தின் இயக்குனரும், இந்தியா அணுசக்தி கழகத்தின் தலைவரும் ஒருவரே. அதாவது அணுஉலையை இயக்குபவரும், அது பாதுகாப்பாக செயல் படுகின்றதா என்று ஆராய்வதும் ஒரே நபர்!. தனி ஒரு அலுவலகக் கட்டிடம்கூட இல்லாத இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் நிதி, அணு விஞ்ஞானிகள், பிற தேவைகளுக்கு அணு சக்தி ஆணையத்தையே சார்ந்துள்ளது. தனித்து சுதந்திரமாக செயல்படும் நிலையுமின்றி, அதிகாரமும் ஏதுமில்லாத பெயரளவில் மட்டுமே இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இயங்கிவருகிறது.

உலகிலேயே இந்தியாவில் மட்டுமே அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இத்தகைய அவலநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சர்வதேச அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டில் (Convention on Nuclear Safety - CNS) கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ள இந்தியா "அணுசக்தி பாதுகாப்பு மன்றம்" வரையறுத்துள்ள முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் நடைமுறைப் படுத்தாமல் உள்ளது என்ப‌தை எந்த‌ அணு விஞ்ஞானியும் ந‌ம்மிட‌ம் கூற‌ப்போவ‌தில்லை. "அணுசக்தி பாதுகாப்பு மன்றம்" வரையறுத்துள்ள அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கியமான வேலைதிட்டங்க‌ள்
1)தேவையான அதிகாரத்தை அளித்தல்
2)தேவையான பொருளாதார வசதி, தொழில்நுட்ப வல்லுநர்களை அளித்தல்
3)அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணுசக்தி கழகத்திடமிருந்து தனியாக பிரித்து சுதந்திரமாக செயல்படுமாறு நிர்வகித்தல்.
4)அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் தனது ஆய்வறிக்கை, பிற அறிக்கைகளை பொதுமக்களுக்கு வெளியிடுதல்.

மேற்கூறிய எந்த வரைமுறைகளையும் அணுசக்தி ஆணையம் (AEC) இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(AERB) வழங்கியதில்லை மாறாக பொருளாதார வசதிக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (AERB) எப்போதும் அணுசக்தி ஆணையம் (AEC), இந்திய அணுசக்தி கழகத்தையே (Nuclear Power Corporation of India Ltd.) சார்ந்துள்ள அவலநிலையில் உள்ளது. இன்று ஒரு சாதாரண தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள்கூட தரக் கட்டுப்பாட்டுக் (Quality Control Team)குழுவை தனித்தே வைத்துள்ளது. மிகவும் ஆபத்து நிறைந்த அறிவியல் கண்டுபிடிப்பு என்பதை உணர்ந்தும், AERB ஒரு விதிவிலக்காக உள்ளது. மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய தராப்பூர் 1 மற்றும் 2 அணுஉலைகள் 40ஆண்டுகளுக்கு மேலாகியும்(ஒரு அணு உலையின் உயர்ந்தபட்ச ஆயுட்காலம்40 ஆண்டுகள் மட்டுமே) அதை தொடர்ந்து இயக்க AERB எத்தகைய அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளது? இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை என்னவென்றால் AERBயிடம் அணு உலையை மூடுவதற்கான எந்த வித செயல்திட்டமும் இல்லை!!!.

வளர்ந்த நாடுகளில் தகுந்த அதிகாரத்துடனும், சுதந்திரமாகவும் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. பாலுக்கு பூனையை காவலாக நிறுத்தியுள்ளது இந்தியா.அணு உலையை இயக்கும் நிறுவனத்தின் கீழ் அதை கட்டுபடுத்தும் நிறுவனம் உள்ளது ! இந்த நிறுவனம் கொடுக்கின்ற அறிக்கைகளை தான் உச்ச, உயர் நீதிமன்றங்கள் அடிப்படையாக கொண்டு தீர்ப்புகளை வழங்குகின்றன என்பது இந்திய மக்களின் அடிப்படை பாதுகாப்பு என்ப‌தையே கேள்விக்குறியாக்குகின்றது, எனினும் இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம் 1993, 1996 க்கு இடைப்பட்ட காலங்களில் Dr.கோபாலகிருஷ்ணன் தலைமையின் கீழ் பாராட்டும் படியாக பல பணிகளை செய்துள்ளது. அணு உலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, 700 க்கும் மேற்ப்பட்ட அணுசக்தித்துறையின் (DAE) ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கையொன்றை தயார் செய்து 1995 ஆம் ஆண்டு நவம்பர் 7 தேதி அணு சக்தி ஆணையத்திடம்(AEC) சமர்ப்பித்தது. அவ்வறிக்கையின்படி 130வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அதில் 95 வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது எனவும் அணு சக்தி ஆணையத்திற்கு (AEC) பரிந்துரைத்தது. அணுசக்தி ஆணையமும் (AEC), இந்திய அணுசக்தி கழகமும் (NPCIL), AERBன் இவ்வறிக்கையை நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்ற வழக்கமான காரணத்தைக் கூறி, அதை பொதுமக்களுக்கு வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது. Dr.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஜூன் 18 ,1996 இல் பணி ஓய்வு பெற்று வெளியேறும் போது "AERB மிகவும் அவலநிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது எனவும், எவ்வித அதிகாரம் இன்றி பெயரளவில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவும், அணுசக்தித் துறைக்கு தங்கள் வரியின் மூலம் பொரளாதார உதவி செய்யும் இந்திய மக்களுக்கு அத்துறையின் ஒவ்வொரு அறிக்கையும் கிடைக்க செய்ய வேண்டுமெனவும்" பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

இதுநாள் வரை AERB இந்திய அணு உலைகளை 3 முறை ஆய்வு செய்து தனது அறிக்கைகளை அணுசக்தித் துறையிடம் (DAE) சமர்பித்துள்ளது. அனைத்து அறிக்கைகளும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்று ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. முதல் ஆய்வு 1976 இல் அமெரிக்காவில் த்ரீ மைல் தீவில் (Three Mile Island) நிகழ்ந்த அணு உலைகள் விபத்திற்குப் பிறகு 1979 ஆம் ஆண்டும், இரண்டாவது ஆய்வு 1986 இல் ரஷ்யாவில் உள்ள செர்நோபில் உள்ள அணு உலை விபத்திற்குப் பிறகு 1986ஆம் ஆண்டு AERB ஆல் நடத்தப்பட்டது. மூன்றாவது ஆய்வு Dr.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையின் கீழ் AERBஇருந்த போது நடத்தப்பட்டது. சமீபத்தில் புகுசிமா அணுஉலைப் பேரழிவிற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மார்ச் 14, 2011 அன்று நாட்டின் அனைத்து அணு உலைகளும் ஆய்வு செய்யுமாறு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இவ்வுத்தரவின் படி குழு ஒன்றை அமைத்து ஆகஸ்ட் 31, 2011இல் அனைத்து அணு உலைகளும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை ஒன்றை AERB சமர்ப்பித்தது. இந்த ஆய்வின்போது கல்பாக்கம் அணு உலைகளில் அவசர காலங்களில் அணுஉலை சூடாகாமல் பாதுகாக்க தானாக இயங்கக்கூடிய ECCS (Emergency Core Cooling System) என்ற வகை குளிர்சாதனம் ஆய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் கைகாவில் உள்ள அணு உலையில் 2009 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட விபத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் நவம்பர் 29 , 2010 இல் AERB வெளியிட்ட அறிக்கையில் 2 தொழிலாளர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டது.

இந்திய தலைமை தணிக்கைக்குழுவின் அறிக்கை:

அண்மையில் அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தை தணிக்கை செய்து சுமார் 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையொன்றை இந்திய தணிக்கைக்குழு வெளியிட்டது. இவ்வறிக்கையில் அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல், அதிகார வரம்பு, சட்டரீதியான நிலைப்பாடு, அணுஉலைப் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், அணுக்கதிர்வீச்சின் அளவை நிர்ணயித்தல், அணு உலைகளை நிரந்தரமாக மூடும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 2012 இல் தனது அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின் வாயிலாக CAG தெரிவித்துள்ள சில முக்கிய தகவல்கள்.

1. அணு உலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வரையறுக்கும் அதிகாரம் இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இல்லை.

2.அணுஉலைப் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் அபராதத்தொகையை நிர்ணயிக்கும் அதிகாரமும், அபராதத்தொகையை வசூலிக்கும் அதிகாரமும் அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குக் கிடையாது.

3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாதுகாப்பு அம்சங்களை வரையறுக்கும் மிக முக்கியமான பொறுப்பை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரமின்றி செயலிழந்து இருக்கின்றது.

4. மெக்கோனி (Meckoni) கமிட்டி மற்றும் ராஜாராமண்ணா கமிட்டியின் பரிந்துரைகளின் படி 27 வகையான பாதுகாப்பு ஆவணங்களை இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இதுநாள் வரை தயாரிக்கவில்லை.

5. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவத்துறையில் அணுக்கதிர்வீச்சின் பாதிப்பை அறியவும், கட்டுப்படுத்தவும் ஒவ்வொரு மாநிலத்திலும் கதிர்வீச்சுப் பாதுகாப்புக் குழுமம் (Directorate of Radiation Safety - DRS), இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்பட வேண்டும். கேரளா மற்றும் மிசோரம் மாநிலங்களில் மட்டுமே இத்தகைய கதிர்வீச்சுப் பாதுகாப்புக் குழுமத்தை (DRS)அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் நிறுவியுள்ளது.

6. அணுஉலையை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யவும், தொடர்ந்து கண்காணிக்கவும் போதுமான அதிகாரம் இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இல்லை.

7. அணுஉலைக் கழிவுகளை அப்புறப்படுத்தவும், அணு உலைகளை நிரந்தரமாக மூடும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வரையறைகள் இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இல்லை.

8. இதுநாள் வரை சர்வதேச அணுசக்திக் கழகம்(International Atomic Energy Agency IAEA) பரிந்துரைத்த பாதுகாப்பு அமசங்களைப் பெருவதில் முறையான வழிகளின்றி இந்திய அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இயங்கி வருகிறது.

புகுசிமா விபத்திற்குப் பிறகு அணுசக்தியைப் பெருமளவு சார்ந்திருக்கும் வளர்ந்த நாடுகளான பிரான்சு, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல நாடுகள் புதிய அணுஉலைகளை அமைக்கும் முடிவைக் கைவிட்டுள்ளனர். தனது மொத்த மின்உற்பத்தியில் 30%ற்கும் மேலாக அணுசக்தியைச் சார்ந்திருக்கின்ற ஜப்பான் தனது நாட்டில் இயங்கிவந்த 52 அணுஉலைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இன்னும் "30 ஆண்டுகளில்" அணு உலை இல்லா ஜப்பான் நாட்டை படைப்பதாகவும் உறுதிபூண்டுள்ளது. மொத்த மின் உற்பத்தியில் 75% இக்கு மேலாக அணு சக்தியை சார்ந்திருக்கின்ற பிரான்சு அணுஉலைகளை நிரந்தரமாக மூடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜெர்மனி 2022 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து அணுஉலைகளும் மூடப்பட்டுவிடுமென அறிவித்துள்ளது. மொத்த மின் உற்பத்தியில் வெறும்2.7% இக்கு குறைவாகவே அணு சக்தியை சார்ந்துள்ள இந்தியாவோ அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பாக உள்ளது என்ற பொய்யான அறிக்கையொன்றை சமர்ப்பித்து பல புதிய அணு உலைகளை அமைக்கும் பணியில் எவ்வித முன் ஆய்வுமின்றி மிகத் தீவிரமாக‌ இறங்கியுள்ளது. அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமும் எந்தொவொரு நாட்டிலும் இதுநாள் வரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அணு விஞ்ஞானம் அறிவியல் துறையில் முன்னோடி என்னும் ஒரு மாயயை ஆளும் வர்க்கமும், அதற்கு விசுவாசமாக உள்ள விஞ்ஞானத் துறையும் ஏற்ப்படுத்தி வைத்துள்ளது. இதை உலகிற்கு எடுத்துரைக்கும் தலையாய கடமை நமக்குள்ளது.

பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட ஒரு அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறப்பட்ட ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி அரசியல் தலைவர்களும், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூடங்குளம் அணு உலைகளை இயக்கி சொற்ப அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவின் அணைத்து அணுஉலைகளும் பாதுகாப்பாக உள்ளது எனக் கூறுவதென்பதும், இந்தியா இன்னும் 5 ஆண்டுகளில் வறுமையை ஒழித்துவிடும் என்பதும் ஒன்றே. உண்மையென்னவென்றால் எந்தவொரு அணு உலையும் பாதுகாப்பானது அல்ல மாறாக மனிதகுலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் மோசமான ஆபத்துகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்பது மட்டும் உறுதி.

குறிப்பு நூல்கள் மற்றும் கட்டுரைகள்:

1.
நீரஜ் ஜெயின் அவர்களால் எழுதப்பட்ட "Nuclear Energy Technology from Hell" என்ற நூல்.
2.
அணு சக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தை தணிக்கை செய்ப்பட்ட இந்திய தணிக்கை குழுவின் அறிக்கை.
3 .
உலகளாவிய அணு சக்திக்கு எதிரான போராட்டங்களைப் பற்றியும் அப்போராட்டங்களை ஆதரிக்கும் கட்டுரைகளை வெளியிட்டுள்ள dianuke.org என்ற இணையதளம்.
4 .
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் செய்தியை வெளியிட்ட செய்தித்தாள்கள்
http://www.thehindu.com/news/national/no-stay-on-fuel-loading-but-sc-will-examine-risk-factor/article3892860.ece
http://www.thehindu.com/news/national/stay-commissioning-of-kudankulam-till-safety-steps-are-applied-bhushan-urges-court/article3918476.ece
http://www.thehindu.com/news/states/tamil-nadu/will-stop-kudankulam-if-its-found-unsafe-supreme-court/article3942238.ece

thecolloquium.net/colloquium/index.php?option=com_content&view=article&id=183:nuclear-jaitapur&catid=76:in-focus&Itemid=308
http://www.guardian.co.uk/world/2012/sep/14/japan-end-nuclear-power
http://www.ndtv.com/article/india/pm-orders-review-of-safety-at-indian-nuclear-plants-91588



துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...