வியாழன், அக்டோபர் 18

புதியபாதைகளில் சென்றால்தான் இடிந்தக்கரையை அடையமுடியும்... ஆதவன் தீட்சண்யா


மாம், புதியபாதைகளில் சென்றால் மட்டுமே இடிந்தக் கரையை அடைய முடியும்... ஏற்கனவே போடப்பட்ட பாதைகள் இடிந்தக்கரைக்கு பதிலாக வேறேங்கெங்கோ இழுத்துப் போகும் கெடுவாய்ப்புகளுடன் விரிந்திருக் கின்றன. அந்தச்சாலைகளில் நீங்கள் உங்கள்  உழைப்பையும் அறிவையும் விற்பதற்காக ஊர்விட்டு ஊர் போய் வரலாம். அல்லது சரக்கு பரிவர்த்தனை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்களேகூட சரக்காக மாறி உங்களையே விற்றுக் கொள்வதற்கும் கூட போய் வரலாம். ஆனால் அரசாங்கம் அந்தச் சாலைகளை வேறு நோக்கங்களுக்காகத்தான் அமைத்திருக்கிறது. மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தேவைப்பட்டால் தனது படைகளை விரைந்தனுப்பி அவர்களை ஒடுக்கவும் ‘பேரமைதியையும் சட்ட ஒழுங்கையும் நிலைநாட்டவும்’ என அரசின் விரிவான திட்டங்களுடன் சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அதிகாரப்பூர்வமான சாலைகள் எப்போதும் அரசின் தேவைகளுக்கானவை என்பதறிக. அவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்படுத்த முடியும். அதற்குப்பிற்கு நீங்கள் சுயமான பாதைகளை உருவாக்கிக்கொண்டால்தான் இலக்கை அடைய முடியும்.  அதல்லாமல் அரசாங்கப் பாதைகளை முழுசுமாக நம்பிப்போனால் ஏதாவதொரு போலிஸ் சோதனைச்சாவடியில் கொண்டுபோய் உங்களை அடைத்துவிடும். பிறகென்ன, நீங்கள் கட்டாயம் தேசத்துரோகிதான். உங்களுக்குத் தெரியும்தானே, எல்லோரது நெற்றியிலும் குத்தவதற்கு காவல்துறையிடம் அந்த ஒரேயொரு முத்திரைதான் இருக்கிறது.

இப்படி மனசிலும் உடம்பிலும் ஏழு தேசத்துரோக முத்திரைகள்   குத்தப்பட்ட தோழர்.சுப.உதயகுமாரையும் அவரது ஒருங்கிணைப்பில் அணுஉலையை எதிர்த்துப் போராடி வருகிற மக்களையும் சந்திப்பதும்கூட அரசின் பார்வையில் தேசத்துரோகம்தான். ஆகவே, இந்த தேசம் நமக்கெல்லாம் இழைத்துவரும் துரோகங்களுக்கு பதிலடியாக ஒரு எதிர்க்கணக்கை தொடங்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் உடனடியாக செல்லவேண்டிய இடம் இடிந்தக்கரைதான். தேசம், துரோகம், விசுவாசம் என்பவற்றின் இன்றைய வரையறைகளையும் சமன்பாடுகளையும் மாற்றிவிட விரும்புகிறவர்களும்கூட இடிந்தக்கரைக்கு சென்று தேசத்துரோகிகளின் எண்ணிக்கையை பெரும்பான்மையாக்கிவிட வேண்டிய தேவை இருக்கிறது.

தமது வாழ்வாதாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் உயிர் வாழும் உரிமைக்காகவும் அறவழியில் சமரசமின்றி போராடிக்கொண்டிருக்கும் மக்களோடு எமக்கிருந்த ஒருமைப்பாட்டை தெரிவிக்க இடிந்தக்கரைக்கு கிளம்பினோம். நாங்கள் செல்வதற்கு முந்திய நாள்தான், உண்மையறிய வந்திருந்த பதினோரு பேர் கொண்ட குழுவினரை மாவோயிஸ்டுகள் என்று சித்தரித்து  கைது பண்ணியிருந்தது காவல்துறை. (மாவோயிஸ்டுகளாகவே இருக்கட்டுமே, அதற்காக அவர்களை கைதுசெய்துவிடுவது என்ன நியாயம்?).  எனவே இன்று கெடுபிடிகள் கூடுதலாக இருக்கும் என்று நுட்பமறிந்தவர்கள் எம்மை எச்சரித்தார்கள். 

வழிகளை மறித்து காவல்துறை ஆங்காங்கே நிறுவியிருந்த சோதனைச் சாவடிகளில் சிக்காமல் எங்களை இடிந்தக்கரைக்கு அழைத்துப்போகும் பொறுப்பை தோழர்.நாறும்பூநாதன் ஏற்றிருந்தார். இதற்காக அவர் முதல்நாளே பலவழிகளிலும் சுற்றிக்கொண்டு இடிந்தக்கரைக்கு சென்று நோட்டம்விட்டு திரும்பியிருந்தார். தோழர்.புஷ்பராயன் போன்றவர்கள் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், எளிதில் பிடிபட்டுவிடாத வழியொன்றை அவர் தேர்ந்தெடுத்து அழைத்துப்போனார். செல்லும் வழியின் உடனடி நிலவரம் குறித்து அவரும் கிருஷியும் ஆங்காங்கு பலரை தொடர்புகொண்டு விசாரித்த வண்ணமிருந்தனர். ஒருவேளை பிடிபட்டுவிட்டால் தப்பிப்பதற்காக சொல்ல வேண்டிய பொய்கள் ஒரு பாடம்போல எங்கள் நுனிநாக்கில் இருந்தது.  இடிந்தக்கரைக்குப் போய்வந்த குற்றத்திற்காக இந்த வண்டிமீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் இன்றைய கதி என்னவாகுமோ தெரியவில்லை என்றும் தனது கவலையை பகிர்ந்துகொண்டார் ஓட்டுநர். கண்டம் விட்டு கண்டம் வந்து ஒரு கம்பனி தனது உயிர்க்கொல்லி உலைகளை பகிரங்கமாக நிறுவிவிட்டு  சவடால் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதேநாட்டின் குடிமக்களை இதேநாட்டு குடிமக்கள் சந்திப்பதற்கு ஏதோ வேறுநாட்டு எல்லையை சட்டவிரோதமாக கடப்பதுபோல ஒளிந்தும் பதுங்கியும் செல்ல வேண்டியிருக்கிறதே என்கிற அங்கலாய்ப்பு எனக்கு. இவ்வளவு கெடுபிடிகளை ஒரு அரசாங்கம் தன் சொந்த மக்கள் மீது திணிப்பதன் மூலம் அது வேறு யாருக்கான அரசாங்கமாகவோ இங்கிருந்து செயல்படுகிறது என்பது மறுபடி நிரூபணமாகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஆர்மி செக்பாயிண்ட்டுகளால் நிறைக்கப்பட்ட கொடூரபூமியாம் இலங்கைக்கு சென்று வந்த நினைப்பு எனக்குள் திடுமென தெறித்து நின்றது.

ஒருவழியாக இடிந்தக்கரையை நெருங்கிவிட்டிருந்தோம். ஆனால் அப்போதும் ஆபத்திருந்தது. நல்லெண்ணம் கொண்ட ஜீப்காரர் ஒருவர் எங்களை செம்புழுதி புரளும் கொடித்தடம் ஒன்றில் அழைத்துப்போயிருக்காவிட்டால் போலிசிடம் மாட்டித்தானிருப்போம். போலிசுக்கு சிக்காமல் தப்பித்து வந்துவிட்ட சாகச மனநிலைக்குப் பதிலாக எந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற கேள்வியே எங்களை அலைக்கழித்தது. அவமானமாக இருந்தது.

போராட்டக்குழு பொறுப்பாளர் ஒருவர் எங்களை வரவேற்று அழைத்துப் போனார். போராட்டத்திடலின் பந்தலில் அமர்ந்திருந்த பெண்களும் குழந்தைகளும் ஆண்களும் யாரென்றே தெரியாத எங்களை கைதட்டி வரவேற்றார்கள். இவ்வளவு தூரம் தேடி வந்துவிட்டவர்கள் கட்டாயம் தங்களை ஆதரிக்கிறவர்களாகத்தான் இருக்க முடியும் என்று அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து கை தட்டி வரவேற்றார்கள்.

லேட்டாக வருகிறவர்களை வெளியே துரத்தி முட்டிப்போட வைக்கும் பள்ளிக்கூட வழக்கப்படி பார்த்தால், உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 425 நாட்கள் கழித்து மிகமிக தாமதாமாக வந்திருக்கிற நம்மை முட்டிப்போட வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களோ நம்மை இப்படி நேரடியாக மேடை ஏற்றுகிறார்களே என்றேன் தோழர்.ச.தமிழ்ச்செல்வனிடம். தப்பு செய்கிறவர்களையும் தாமதமாக வருகிறவர்களையும் பெஞ்ச் மீது ஏற்றுகிற வழக்கமும் நடப்பில் இருக்கிறதுதானே, இது அப்படியானதென விளங்கிக்கொள் என்றார் அவர்.  அப்படியுமல்ல, ...நாண நன்னயம் செய்கிறார்கள் போலும் என்றே நினைத்துக்கொண்டேன்.

நாங்கள் வந்த சேர்ந்த தகவல் கிடைக்கப்பெற்ற சிறிதுநேரத்தில் சுப.உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட தோழர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அணு உலையைத் தடுக்க சட்டரீதியாக போராடிவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், வெற்றிச்செல்வன், ‘பூவுலகின் நண்பர்கள்’ வழக்கறிஞர் சுந்தரராஜன், பொறியாளர் சுந்தராஜன், வள்ளியூர் செம்மணி ஆகியோரும் வந்தனர். நான் கீழே இறங்கி ஓடிப்போய் உதயகுமாரின் கைகளைப் பிடித்துக்கொண்டேன். எதுவும் பேசத்தோன்றவில்லை. பரவசத்தினாலோ பிரேமையினாலோ அல்லாமல் நான் வாழுங்காலத்தின் மெய்யான போராளிகளுள் ஒருவரான அவரிடம் என் தோழமையை தெரிவித்துவிட்டது போன்றதான ஒரு நிம்மதியில் விளைந்த மௌனம் அது.  தமுஎகச தோழர்கள் அனைவருமே என்னொத்த இதே மனநிலைக்குத்தான் ஆட்பட்டிருந்தார்கள். புதுவிசை இதழ்களை கொடுத்தபோது மிகுந்த வாஞ்சையோடு பெற்றுக்கொண்டார்.

இடிந்தக்கரைப் பெண்கள் தொழிலையும் போராட்டத்தையும் ஒரேகளத்தில் இணைத்திருந்தார்கள். உண்ணாவிரதத்தில் பங்கேற்றபடியே பீடி சுற்றிக் கொண்டிருந்த அவர்கள் உரைகளை கேட்கத் தயாரானார்கள். பத்திரிகையாளர் கவிதா முரளிதரனும் எழுத்தாளர் சந்திராவும் அவர்களோடு கலந்து உட்கார்ந்திருந்தார்கள். அக்டோபர்29ம் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை முற்றுகைப் போராட்டத்திற்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குப் போனவர்களைத் தவிர எஞ்சியிருந்த ஆண்களும் பந்தலுக்குள் குழுமியிருந்தார்கள். நாட்டுமக்களிடையே போராடும் குணமும், சூடும் சொரணையும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும், நாட்டுப்பற்றும் வளரவேண்டும் என்பதற்காக இடிந்தக்கரை மக்களின் கால்பட்ட மணலை  அள்ளிப்போய் இந்த நாடு முழுதும் தூவிவிட்டு வரவேண்டும் போலிருந்தது எனக்கு.

கூட்டம் தொடங்கியது. எங்களை, ஒவ்வொருவரது பெயரையும் சொல்லி வரவேற்றார்கள். எளிமையும் தெளிவும் தீர்க்கமும் ஆவேசமும் செறிந்த தனது உரையினூடாக உதயகுமார் சொன்னார் ‘‘இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்...’’ போராட்டம் தொடங்கி இவ்வளவு காலம் கழித்து இப்போது எதற்கு வந்தீர்கள் என்று அவர் கோபப்பட்டிருந்தாலோ குத்திக்காட்டியிருந்தாலோ கூட நாங்கள் தலைவணங்கி நின்றிருந்திருப்போம். ஆனால் அவரது வார்த்தைகளை கவனியுங்கள், ‘‘இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்...’’. இவ்வளவு ஆற்றல் மிகுந்த சொற்களை தெரிவு செய்து பேசுவதற்காக அவர் மெனக்கெடவில்லை. மனசின் ஆழத்திலிருந்து ஆற்றொழுக்காக சொற்கள் வந்து கவ்வுகிறது எம்மை. வெற்றியை நோக்கி போராட்டத்தை உந்தித்தள்ளுவதில் மெய்யான அக்கறையுள்ள ஒருவரால் மட்டும்தான் இப்படியான அரவணைப்புடன் பேசமுடியும் என்று நம்புகிறேன்.  தங்களிடம் வந்திருக்கும் யாரையும் இழந்துவிடக்கூடாது, எவ்வளவு குறைவான பலம் கொண்டவர்களையும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தம்மோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவரது அணுகுமுறை எந்தவொரு மனிதமனத்தையும் வென்றெடுக்கும் வல்லமை கொண்டது.

நாட்டின் சுதந்திரமும் சுயசார்பும் இறையாண்மையும் ஏகாதிபத்தியங்களுக்கு பலியிடப்படுவதையும் அதை எதிர்க்கும் தேசப்பற்றுள்ள குடிமக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதையும் ஆனாலும் பணியாத மக்களின் போர்க்குணத்தையும் விவரித்து மேலேறியது அவரது உரை. தனக்குள் இருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை அங்கிருந்தவர்களின் மனதிலெல்லாம் ஊறச் செய்து கொண்டிருந்த அவரைத்தான் அந்நிய ஏஜண்ட் என்று நாரவாயணசாமிகள் அவதூறு பொழிகிறார்கள். திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திப்பிடிக்க வந்தவனைப் பார்த்து திருடன் திருடன் கத்தினானாமே அப்படித் தான் இது. ஆட்சியாளர்களைவிட இந்த நாட்டின் நலனுக்கு ஆகப்பெரும் அச்சுறுத்தலாக வேறு யார் இருந்துவிட முடியும்?

‘‘... அடுத்து என்னதான் செய்வது என்று நாங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்... கடலுக்குள்ளும் இறங்கிவிட்டோம். மணலுக்குள்ளும் புதைந்துவிட்டோம். இந்த அரசாங்கம் எதற்கும் செவிசாய்யக்கவில்லை... இனி, மேலே மண்னெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொள்வது மட்டும் தான் எங்களுக்கு மிச்சமிருக்கும் வழியா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள்... தாமதமாக வந்துவிட்டதாக நினைத்து வருத்தப்படாதீர்கள். மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இடதுசாரிகளாகிய நீங்கள் எங்களின் Natural ally’’ என்று எங்களை விளித்தச் சொன்ன அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், ‘இவர்கள் நமது இயற்கையான சொந்தங்கள்... இவர்கள் இங்கு வந்திருப்பது நமக்கு பலம். இவர்கள் தமது எழுத்தாலும் பாட்டாலும் பேச்சாலும் நடிப்பாலும் அணுஉலையின் தீமைகளையும் நம் போராட்டத்தின் நியாயங்களையும் உலகெங்கும் கொண்டு செல்வார்கள்...’ என்று. ஆமோதிப்பதுபோல மக்கள் கரவொலி எழுப்பினார்கள். இந்த வார்த்தைகளுக்கெல்லாம் நாங்கள் எந்தளவு பொருத்தமானவர்கள் என்கிற கேள்வி என்னை உலுக்கியது. மற்ற தோழர்களும்கூட அவ்வாறே உணர்ந்திருக்கக்கூடும்.     


தமுஎகச மாநிலக்குழு சார்பில் சென்றிருந்த 14 பேர் சார்பாக மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வனும், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசனும், நானும் அந்த மக்களிடையே பேசினோம். கடலிறங்கிப் போராடுகிறவர்களுக்கு ஆதரவாக கரையிலேயே நின்று கொண்டு பேசுவதில் உள்ள சங்கடங்களாலும் உளைச்சல்களாலும் நாங்கள் இயல்பாக பேசமுடியாமல் திண்டாடினோம். அந்தந்த ஊரில் உள்ள நீர்நிலைகளில் ஆதரவாக ஏன் இறங்கவில்லை என்கிற கேள்வி உள்ளுக்குள் வாதிட்டுக்கொண்டிருக்கும்போது எப்படித்தான் இயல்பாக பேசமுடியும்? இது குற்றவுணர்ச்சியினால் எம்மை தாழ்த்திக்கொண்டு அமுங்கியக் குரலில் தரப்படும் வாக்குமூலமல்ல. எங்களது மனநிலையை அப்பட்டமாக இப்படித்தான் வெளியில் வைக்கமுடியும்.

வழக்கறிஞர் குழுவுக்கு எளிய பாராட்டுதல்களும் அவர்களது ஏற்புரைகளும் முடிந்த பின் தோழர்.புஸ்பராயனின் உரையோடு கூட்டம் நிறைவுற்றது. 425வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்துவரும் இடிந்தக்கரை மக்கள் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் நாணும் படியாக அவர்கள் இப்படியாக நன்னயங்களை செய்து கொண்டேயிருந்தார்கள். மாலையில் திருநெல்வேலியில் நடக்கவிருந்த கண்டனக்கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டியிருந்ததால் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
தோழர்.ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த கண்டனக்கூட்டத்தில் தஞ்சை, குமரி, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டதோழர்கள் திரளாக பங்கேற்றிருந்தனர். இடிந்தக்கரை சென்றவர்களில் சென்னை கலைக்குழு அசோக்  தவிர மற்ற தோழர்களாகிய சு.ராமச்சந்திரன், எஸ்.கருணா, உதயசங்கர், இரா.தெ.முத்து, ஜேசுதாஸ், ஈரோடு தி.தங்கவேல், எஸ்.இலட்சுமணப்பெருமாள், நாறும்பூநாதன்,  தேனி சீருடையான், பேரா.கணேசன், லட்சுமிகாந்தன், ஆனந்தன், நான், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினோம். முரசு கலைக்குழு ஆனந்தனும், கரிசல் கிருஷ்ணசாமியும் தம் பாடல்களால் வலுவூட்டினர். இடிந்தக்கரை மற்றும் திருநெல்வேலி கூட்டங்களில் நாங்கள் பேசியவற்றின் தொகுப்பு: 
அணுஉலையை எதிர்ப்பது தேசத்துரோகம் என்றால்,  இங்கு அணுஉலைதான் தேசமாக உருவகிக்கப்படுகிறதா? அந்தளவுக்கு நச்சும் நாசகாரத்தன்மையும் கொண்டததான் இந்த தேசம் என்றால் அதை ஒப்புக்கொள்ள மறுத்துப் போராடுகிறவர்களோடு நாங்கள் ஒருமைப்பாடு கொள்கிறோம்.

எதிர்க்கவேண்டும் என்பதற்காக இம்மக்கள் அணுஉலையை எதிர்க்கவில்லை. அது தங்களது உயிர்வாழும் உரிமையையும் வாழ்வாதாரங்களையும் பறிக்கக்கூடியது என்பதை உலகளாவிய அனுபவங்களிலிருந்து உணர்ந்துகொண்டதனால் எதிர்க்கிறார்கள். அவ்வாறு எதிர்ப்பதற்கும் போராடுவதற்கும் அவர்களுக்குள்ள ஜனநாயக உரிமையை மறுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அடக்குமுறைகளை ஏவுகின்றன. அறவழியில் போராடிய அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரைக் கொன்றிருக்கிறது காவல்துறை. தமிழக மீனவர்களை தினம்தோறும் கடல்வெளியில் தாக்கி சித்திரவதை செய்கிற இலங்கை ராணுவத்தினரை விரட்டுவதற்கு ஒருமுறைகூட தனது விமானத்தைப் பறக்கவிடாத மத்திய அரசு அணுஉலைக்கு எதிராக போராடுகிறவர்கள்மீது விமானத்தை மோதவிட்டு ஒருவரைக் கொன்றது. எளிய மக்களை ஒடுக்க முப்படைகள். யார் பயங்கரவாதிகள் என்பதற்கு இங்கு விளக்கம் எதுவும் தேவையில்லை.

ஒரு சின்னஞ்சிறு காவல் நிலையத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை பதிந்து கேடுகெட்டவகையில் ஒரு உலகச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  ஒருவேளை, அணுஉலை விசயத்திற்கு ஒரு தீர்வு வந்துவிட்டாலும்கூட இந்த மக்கள் வாழ்நாள் முழுக்க காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்துக்கும் அல்லாடிச் சாகுமளவுக்கு  ஒவ்வொருவர் மீதும் பல வழக்குகள். இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்துசெய்யுமாறும், தொடரும் கைது நடவடிக்கைகளை நிறுத்துமாறும், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் ஆட்சியாளர்களின் மென்னியைப் பிடித்துக் கேட்கும் திராணி கொண்ட பேராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

போராடும் மக்களுக்கு ஆதரவாக பேசுவதோ இயக்கம் நடத்துவதோ திருநெல்வேலி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல வெளியார் யாரும் இடிந்தக்கரைக்கு சென்றுவிட முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். மீறிச் செல்பவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். இடிந்தக்கரைக்கு வாகனங்களை அனுப்பக்கூடாது என்று எல்லா டாக்ஸி ஸ்டாண்டுகளுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அணுஉலை எதிர்ப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு இடம் தரக்கூடாது என்று மண்டபங்களும் எச்சரிக்கப்பட்டுள்ளன. வழக்கு வாய்தா சிறை என்று அச்சமூட்டி நாட்டின் இதரபகுதி மக்களை இடிந்தக்கரை பக்கம் திரும்பவொட்டாமல் செய்கிற தந்திரத்தை போலிஸ் கையாள்கிறது. திருநெல்வேலி மாவட்டம் போலிசுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு அங்கு கருப்புச்சட்டங்களும் ஆள்தூக்கும் கொடுமைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. சோதனை என்கிற பெயரில் கொள்ளையர்களைப்போல நள்ளிரவுகளில் கதவுடைத்துப்புகும் போலிசார் பெண்களிடம் அத்துமீறி நடப்பதையும் ஆபாசமாக பேசுவதையும் கண்டு பதறாதவர்களுக்கு மனசாட்சி என்று ஏதேனும் இருக்கிறதா? தேவாலயத்தில் நுழைந்து வழிபாட்டுக்குரிய சிலையை சேதப்படுத்தி அதன் தலையில் மூத்திரம் பெய்யுமளவுக்கு வக்கரித்துப்போனவர்களுக்கு காவல்துறை என்று பெயர் வைத்த மூடர்கள் யார்? அறவழியில் போராடிக்கொண்டிருப்பவர்களை இப்படியெல்லாம் ஆத்திரமூட்டி ஒரு நேரடி மோதலுக்குள் இழுத்துவிட்டு நரவேட்டையாடுவதற்கு காவல்துறை தந்திரமாக வேலைசெய்தவருகிறது.

இடிந்தக்கரை மக்களை தனிமைப்படுத்தி சோர்வடையச் செய்து பணியவைக்கும் இத்தகைய இழிமுயற்சிகளுக்கு எதிராகப் போராடாமல் இருப்பவர்களும் மௌனம் காப்பவர்களும் ஆட்சியாளர்களைவிடவும் ஆபத்தானவர்கள்.   17 தலித்துகள் தாமிரபரணிக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட நாளிலும்கூட வழக்கம்போலவே அல்வாவும் மிக்சரும் தின்று கொண்டிருந்த திருநெல்வேலியின் மிஸ்டர்.பொதுஜனத்திற்கும் விதவிதமான காரணங்களை கண்டுபிடித்து தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு  செயலற்று கிடப்பவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. உலகமயமாக்கலின் மூன்றாம் பத்தாண்டுக்குள் நாடு நுழைந்திருக்கும் இவ்வேளையில், மக்களின் வாழ்வாதரங்களை அபகரிபபதும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும் தீவிரமடைவது தவிர்க்கவியலாதது. எனவே மக்களும் வாழ்வா சாவா என்று போராட களமிறங்கும் காலமிது. போராடுவதற்கான வெளியை- உரிமையை தக்கவைத்துக்கொள்வதன் அடையாளமாக இடிந்தக்கரை மக்களின் போராட்டம் வெற்றிபெற்றாக வேண்டும். அவர்களது உழைப்பும் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் வீணாகிவிடக்கூடாது.  இந்த மக்களின் போராட்டம் தோற்றுப் போகுமானால் எல்லா நிலைகளிலும் நாமே நம்மை தோற்கடித்துக்கொள்ள தயாராகிவிட்டோம் என்று அர்த்தம்.

மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அவர்களை பயந்தாங்கொள்ளிகள் போல சித்தரிப்பவர்கள் உண்மையில் அவர்களை தம்மையறியாமலே அவமதிக்கிறார்கள். இவ்வளவு அட்டூழியங்களை இழைக்கின்ற போலிசையும் அடக்குமுறைகளை ஏவுகிற மத்திய மாநில அரசுகளையும் அவர்களின் முப்படைகளையும், அரசு சார்பு ஊடகங்களின் அவதூறுகளையும் எதிர்த்து சமரசமில்லாது சற்றும் அஞ்சாது போராடிவரும் இடிந்தக்கரை மக்கள் கேவலம் இந்த அணுஉலையைக் கண்டா அஞ்சுகிறார்கள்? இல்லை, அவர்களது அச்சம் அணுஉலை பற்றியதல்ல. அது, அணுஉலையின் தீமைக்கு பலியாகிவிடக்கூடாதே என்று மனிதகுலதத்தின் மீது கொண்டிருக்கும் அச்சம். உலகளாவிய மானுட நேயத்திலிருந்தும் இதர உயிர்களையும் இந்த புவிக்கோளத்தையும் நேசிப்பதிலிருந்தும் எழுகிற  அச்சம். அவர்கள் தமது சொந்த உயிர் பற்றி பயந்திருந்தால் இவ்வளவு கொடிய அடக்குமுறைகளுக்கு தாக்குப்பிடிக்காமல் என்றைக்கோ சரணடைந்திருப்பார்களே?

இவ்வளவு எதிர்ப்புக்கிடையிலும் அணுமின்உலை பாதுகாப்பானது என்கிறார்கள் ஆட்சியாளர்கள். அப்படியானால் சர்வதேச நிபுணர்களும் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளூர்ச்சமூகத்தினரும் அங்கம் வகிக்கிற சுயேச்சையான ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கலாமே? பாதுகாப்பு ஏற்பாட்டில் எவ்வளவு அசட்டையாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் உளறியதே சாட்சியமில்லையா? அணுமின் உலை பாதுகாப்பானது என்றால், குடியரசுத்தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புப்பகுதிகள், ஆளுநர் மாளிகைகள், சட்டமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர் விடுதிகள் போன்ற இடங்களில் அததற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்திச் செய்யுமளவிலான அணுமின் உலைகளை நிறுவி அவை உண்மையிலேயே பாதுகாப்பானவை என்று நிரூபிக்கும்பட்சத்தில் உதயகுமாரும் போராட்டக் குழுவினரும் இடிந்தக்கரை மக்களும் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக் கொள்வார்கள். கோன் எவ்வாறோ குடிமக்கள் அவ்வாறு. தலைவர்களே, நாடாள்பவர்களே, இப்போதாவது, இந்த விசயத்திலாவது உதாரணப் புருஷர்களாகவும் புருஷிகளாகவும் நடந்து காட்டுங்கள், நாங்கள் உங்களை பின்பற்றி வருகிறோம்.

13 ஆயிரம் கோடியை செலவிட்டு அணுமின் நிலையத்தைக் கட்டியாச்சு, அவ்வளவு பணத்தை விரயமாக்கினால் நாடு தாங்காது, எனவே அணுமின் உலை இயங்கட்டும் என்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. 700 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தமிழக சட்டமன்றக் கட்டிடம் இப்போது பாம்பு பல்லி பாச்சை தவக்களை விளையாடுவதற்காக கைவிடப்பட்டுள்ளது. சூழலியலாளர்களது எச்சரிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி தொடங்கப்பட்ட சேதுக்கால்வாய் திட்டம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விழுங்கிவிட்டு இப்போது மதவாதப்பார்வையினால் மணலேறி தூர்ந்துகொண்டிருக்கிறது. வருடாவருடம் பட்ஜெட்டில் முதலாளிகளுக்கும் வர்த்தகச்சூதாடிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகைகள் எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது நிதியமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். வாராக்கடன் என்று தள்ளுபடி செய்யப்படும் தொகையைக்கூட அவர் மட்டுமே அறிவார். இப்போதெல்லாம் இங்கு ஊழல்களும் கூட லட்சங்கோடிகளுக்கு குறைவாக  நடப்பதேயில்லை. தனிநபர்களின் கௌரவப் பிரச்னைக்காகவும் மதவாதத்திற்காகவும் லாபவெறியினாலும் இந்த நாட்டு மக்களின் பணம் லட்சலட்சங்கோடி நாசமாகிக் கொண்டிருப்பதுடன் ஒப்பிடும் போது 13 ஆயிரம் கோடி என்பது அற்பத்தொகை. 13ஆயிரம் கோடி பெரிதா ஒரு உயிர் பெரிதா என்றால் எழுத்தாளர்களும் கலைஞர்களும் உயிரின் பக்கமே நிற்போம்.

நாட்டுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக இந்த 13 ஆயிரம் கோடி விரயம்தான் ஆகட்டுமே, என்ன குடிமுழுகிவிடப் போகிறது? அட, அப்படியேதான் 13ஆயிரம் கோடி விரயத்தால் இந்த நாடு நாசமாகிக் போய்விடும் என்றால் போய்த் தொலையட்டும், வாழ்கின்ற வேட்கையில் எமது மக்கள் தங்களுக்கான ஒரு வலிய நாட்டை விருப்பம்போல உருவாக்கிக்கொள்வார்கள்.

26 கருத்துகள்:


  1. வணக்கம் தோழரே! உம்மை வாழ்த்தி வரவேற்கிறோம்! அங்கே நடப்பது என்ன எனபதை
    நாடறியச் செய்துள்ளீர்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. //மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அவர்களை பயந்தாங்கொள்ளிகள் போல சித்தரிப்பவர்கள் உண்மையில் அவர்களை தம்மையறியாமலே அவமதிக்கிறார்கள்//.இந்தப்பதிவு தாமதமானதாக உணர்கிறேன். ஆனாலும் சரியானதைச்சொல்லி மேலே கோடிடப்பட்ட கருத்தை செரிக்க முடியாமல் இருந்த நிலைமையை கட்டுரை மாற்றியிருக்கிறது. 5 லட்ஷம் கோடி பண முதலைகளுக்கு சலுகை வழங்கியவர்கள் இந்த13ஆயிரம் கோடியையும் அதே போல நினைத்து திட்டத்தை நிறுத்தி விடலாம்...

    பதிலளிநீக்கு
  3. தனிமனிதன் ஸ்பெக்ட்ரம் ஊழல் நிலஊழல் ராணுவதளவாட ஊழல் என கோடிகளை மனிதத்தன்மையே இல்லாமல் விழுங்கும் போது 13ஆயிரம் கோடி என்பது மக்கள் நலனை கருத்தில் கொள்ளும் போது ஒரு விரைய செலவே அல்ல

    பதிலளிநீக்கு
  4. ஸ்பெக்ட்ரம் ஊழல்
    நில ஊழல்
    கிரானைட் ஊழல்
    ராணுவ தளவாட ஊழல்
    எழுநூறு கோடி சட்டமன்ற மூடல்
    இதெல்லாம் பார்க்கையில்
    13ஆயிரம் கோடி விரயமா? அதுவும் இந்திய அரசியல்வாதிக்கு! இதெல்லாம் ஒரு amountey இல்ல
    என்ன மக்கள் நலனுக்காக விரயமாகுதேங்குறது தான் அவனுங்க கவலை

    பதிலளிநீக்கு
  5. //அணுமின் உலை பாதுகாப்பானது என்றால், குடியரசுத்தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புப்பகுதிகள், ஆளுநர் மாளிகைகள், சட்டமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர் விடுதிகள் போன்ற இடங்களில் அததற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்திச் செய்யுமளவிலான அணுமின் உலைகளை நிறுவி அவை உண்மையிலேயே பாதுகாப்பானவை என்று நிரூபிக்கும்பட்சத்தில் உதயகுமாரும் போராட்டக் குழுவினரும் இடிந்தக்கரை மக்களும் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக் கொள்வார்கள். // என்ன தோழர் எவ்வளவு பெரிய அறிவுஜீவி நீங்கள்... இப்படிப் போய் ஒரு வாதத்தை வைத்திருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  6. //முகேஷ் அம்பானி மலபார் மலைப்பகுதியில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு பெரிய வீடு கட்டியிருப்பதாக செய்தித்தாள்களின் மூலம் அறிந்தேன். அந்த வீட்டிற்கு மாதம் 6 இலட்சம் யூனிட் பொது மின்சாரம் தேவைப்படுமாம். ஒரு நல்ல வாழ்க்கை வாழத் தேவைப்படும் மின்சார அளவு எவ்வளவு? சிலருக்கு மும்பாயிலே இவ்வளவு மின்சாரம் தேவையானால் இந்த அணுமின் நிலையத்தை ஏன் மலபார் ஹில்ஸில் கவர்னர் மாளிகை இருக்கும் மேட்டுப்பகுதியில் அமைக்கக்கூடாது. நீங்கள் சொல்வதைப்போல அணு மின்சாரம் பாதுகாப்பானதாக, மலிவானதாக, தூய்மையானதாக இருக்குமானால், நாங்கள் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருப்போமானால் ஏன் இதை நீங்கள் மெத்தப்படித்த மலபார் ஹில்ஸ் படித்தவர்களிடம் புரியவைத்து அங்கேயே அமைப்பது எளிதாக இருக்கும் தானே? // என்கிறார் ஜைதாப்பூரில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவேக் மொண்டீரோ. அவரை விடவா நாங்கள் பெரிய அறிவுஜீவி?

    பதிலளிநீக்கு
  7. ’ட்ரன்ஸ்பரன்சி இண்டெர்நேஷனல்’ என்ற அமைப்பு 2005ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி முக்கியமான 11 அரசுத்துறைகளில் மட்டும் புழங்கக்கூடிய ஊழல் பணம் மட்டும் 21068 கோடி ரூபாய்! இது பழைய ஆய்வு! அதன் பின் தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளத்தக்க வகையில் ஒரே ஊழலில் மட்டும் 172000 கோடி புழங்குகின்றது, அப்புறம் க்ருஷ்ணா-கோதாவரி வாயுப்படுகையில் ரிலையன்ஸ் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல்...இப்படி புதுசா புதுசா பெருமைகள்! செய்தவர்கள் செய்கின்றவர்கள் காங்கிரசும் பிஜேபியும். இந்த ஊழல் பணத்தில் ஒரு சல்லிக்காசு கூட 1948க்குப் பிறகு ஊழல் செய்தவனிடம் இருந்து மீட்டெடுத்த்தாக சரித்திரம் இல்லை; இப்படி இந்தியமக்களின் பல லட்சம் கோடி பணத்தை சுரண்டித்தின்று கொழுத்த கமிசன் லாபி நாய்களின், சுவிஸ் வங்கிகளில் கறுப்புபணத்தை பதுக்கி வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடாமல் பாதுகாக்கும் மக்கள் விரோத மன்மோகன்,சிதம்பரம்,நாராயணசாமி கும்பலின் வாதமான் ‘ஏற்கனவே 13000 கோடி ரூபாய் கூடன்குளத்துக்கு கொட்டி அழுது விட்டோம், அதை எப்படி நிறுத்துவது’ என்று இடும் கூச்சலை, மக்கள் நலனுக்காக நிற்கும் கம்யூனிஸ்டுக்கள் அப்படியே எதிரொலிப்பது நியாயம் அல்ல. ஒரு சில தேசவிரோதிகள் வாழ பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை இந்த அரசுகள் இப்படி கேள்வி கணக்கு இன்றி தியாகம் செய்யும் எனில் ஒரு தேசத்தின் பல லட்சம் மக்கள் வாழ 13000 கோடி ரூபாய்தான் மண்ணோடு மண்ணாய் போகட்டுமே? வானம் இடிந்துவிடாது ...இக்பால்

    பதிலளிநீக்கு
  8. பணிகள் பல்லாயிரம் இருக்கலாம். ஆனாலும் உழைப்பால் முன்னேறும் கூடங்குளம் மக்களின் உண்மைகளையும் அணு உலை எதிர்ப்பாளர்களின் வாழ்க்கையையும் நேரில் சென்று ஆய்வுக்களம் செய்ய முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நேரம் இப்போதாவது கிடைத்ததே எனும் போது பாராட்டவா? கடமையைச் செய்வதற்குக் கூட அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் இவர்களை முறையாக நம்ப முடியவில்லை என்பது அடியேனின் மனத்தில் ஊறிப் போன எண்ணம்.முற்போக்கு எழுத்தாளர்கள் எவராவது அல்லது இவர்களின் கூட்டமாவது அணு உலையால் வரும் கேடுகளைப் பற்றித் துண்டறிக்கையாவது வெளியிட்டுள்ளார்களா? எனக்குத் தெரியவில்லை? ஏன் இத்தனை நாள் கழித்து வந்ததை மிகைப் படுத்துகிறார்கள் எனப் புரிய இல்லை. இவர்களைப் பற்றி அடித்தட்டு மக்களும் உழைக்கும் மனிதர்களும் எப்படி நினைத்துள்ளார்கள் எனக் கூடத் தெரியாத நிலையில் இவர்கள் இன்பச் சுற்றுலா போய் வந்ததைப் போல் பதிக்கிறார்கள்.எப்படித்தெரியுமா? கூட்டம் போட்டு. அதுவும் எங்கே தெரியுமா? ஓர் அரங்கத்தினுள் சுகமாக அமர்ந்துக் கொண்டு.எங்களுக்கும் தெரியும் இவர்கள் நடத்தும் நாடகம் என்னவென்று. எதுவரை நடக்குமென்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடங்குளத்தில் அணுமின் உலை ஆரம்பிக்கப்போவதாக அரசாங்கம் அறிவிக்கும் முன்பாகவே அதை எதிர்த்துப் போராடுவதற்கு அங்கே கத்திக்கபடா, ராக்கெட் லாஞ்ச்சரோடு துன்பச்சுற்றுலாவாக போய் சேர்ந்துவிட்டவர் கி.இளம்பிறை. அப்பேர்ப்பட்ட அதிஉக்கிரப் போராளியை அன்றைக்கு இடிந்தக்கரையில் பார்க்கவே முடியவில்லை. எங்கே என்று விசாரித்தேன், கடலுக்கடியில கண்ணிவெடி பதிக்கப் போயிருக்கிறார் என்றார்கள். எப்ப கரைக்கு வருவார் என்று விசாரித்தேன், வாய்ப்பே இல்லை கூடங்குளம் உலையை குண்டுவைத்துப் பிளந்துவிட்டுத்தான் கரையேறுவார் என்றார்கள். கல்தோன்றா மண்தோன்றா காலத்தே வாலோடு முன் தோன்றிய அந்த மூத்தப்போராளி அங்கே அன்னந்தண்ணி ஆகாரமில்லாமல் கிடக்க நாங்களோ ''ஓர் அரங்கத்தினுள் சுகமாக அமர்ந்துக்கொண்டு" கூட்டம் மன்னிக்கனும் நாடகம் நடத்தினால் அவருக்கு கோவம் வரத்தானே செய்யும்? (பைக் ஓட்டினால் கூட நின்றுகொண்டுதான் ஓட்டுவாராம் இளம்பிறை. ஏன்னா உட்கார்ந்தா அது சுகமாகிவிடுமாம்). ஆனால், இளம்பிறை நாங்கள் இடிந்தக்கரைக்குப் போனதைவிடவும் லேட்டாக நீங்கள் பின்னூட்டம் போட வந்திருக்கிறீர்கள். உங்களை இன்னும் முதலில், இன்னும் இன்னும் முதலில் எதிர்பார்த்தேன். அதாவது நான் பதிவு போடுவதற்கு முன்பே...

      நீக்கு
  9. தோழர் காலதாமதம் தான் என்றாலும் இந்த காலத்தில் மெல்ல மெல்ல உங்கள் மனதில் உண்மை சேகரமாகியிருக்கிறது என்பதை உங்கள் பதிவு காட்டுகிறது. இது இந்த நேரத்தில் நிச்சயம் நம் தோழர்கள் வாசிக்க வேண்டிய பதிவு, நிச்சயம் நீங்கள் உங்கள் கட்சியின் நிலைபாடுகளை எல்லாம் தொகுக்காமல் இப்படி இயல்பாக உங்கள் மனதில் இருந்து எழுப்பும் கேள்விகள் எல்லாம் நியாயமானவை, இந்த உலகம் இந்த கேள்விகளை எல்லாம் பல வடிவங்களில் பல ஆண்டுகளாக பல முறை கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அம்பானியின் மின்சார தேவைகள் எல்லாம் நம் பொது தொகுப்புகளில் இருந்து தான் வழங்கப்படுகிறது, அதை விட அவன் வாஸ்து காரணமாக அந்த வீட்டில் இன்னும் குடியேறவில்லை என்பது கூடுதல் உண்மை. கேள்விகள் கேட்காவிட்டால் இது கோமாளிகள் தேசமாக மாறிவிடும்

    பதிலளிநீக்கு
  10. கூடங்குளம் அணு மின் உலை திறக்கலாம் என்கிறீர்களா ? வேண்டாம் என்கிறீர்களா? இவ்வளவு நாள் வேண்டும் என்று இருந்தது ஏன்?அறியாமையா? பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் வேண்டும் என்பதும் உறுதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பின் ஏற்போம் என்று கூறியிருந்தால் எல்லோரும் சேர்ந்து போராடியிருக்கலாமே?என்ன ஆனாலும் கூடங்குளம் வேண்டாம் என்பது என்ன வகையான கோரிக்கை?மற்ற வாதங்கள் எல்லாமே உணர்ச்சி வசப்படுத்தவும் வசப்பட்டும் வைப்பவை.போராட்டக்களத்தில் இருக்கும் மக்கள் முன்னே உணர்ச்சிவசப்படுவது இயல்பே ஆனாலும் இயக்க வ்ழி இருப்பவர்கள் இப்படியா ? மு எ க ச நிலைபாடு இதுவா ? மாறிவிட்டதா? இப்போதும் பொய்வழக்குகள் ,பாதுகாப்பு அச்சம்,அடக்குமுறை எதிர்ப்பு ,தொடர்ந்த உறுதியான போராட்டம் போன்றவற்றில் அவர்களோடு தொடர்ந்து உடன்படலாம் ஆனால் மூடு என்பதில் முஎ க ச சேர்ந்து குரல் கொடுப்பது என்று எங்கே எப்போது முடிவு எடுத்தீர்கள்? உணர்ச்சி யில்லாமல் இருக்கக்கூடாது என்று கிண்டல் செய்வது எளிதாக இருக்கலாம்..அதையும் தாண்டி உண்மைகள் மற்றும் நியாயம் இருக்கும் என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் வேண்டும் என்பதும் உறுதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பின் ஏற்போம் என்று கூறியிருந்தால் எல்லோரும் சேர்ந்து போராடியிருக்கலாமே?// - யார் இதை உங்களிடம் வந்து மனு கொடுத்து மன்றாடிச் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதே கோரிக்கைகளை வைத்து நீங்கள் போராடுவதை யார் தடுத்தார்கள்? பாதுகாப்பு அம்சங்கள் பற்றி வண்டிவண்டியாக கதைத்தாயிற்று. சுப்ரீம்கோர்ட்டில் பேந்தபேந்த முழிக்கிறது அரசாங்கம். போபாலில், செர்னோபிலில், புகுசிமாவாவில் கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்காவாக இருப்பதாகத்தான் சொன்னார்கள். என்னாச்சு? புகுசிமா இழப்புகளை ஈடுகட்ட 5 லட்சம் கோடி டாலர் வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் வெறும் சாமிபடம் போட்ட தகரடாலர் கூட கொடுக்கமுடியாது என்கிறது ரஷ்ய நிறுவனம். சுயேச்சையான சர்வதேச நிபுணர் குழு ஒன்று ஆய்வு செய்யவேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முடிக்கும்வரை உலைச்செயல்பாடுகளை நிறுத்து என்றாவது போராடுங்கள், காலம் தாழ்ந்துவிடவில்லை. அல்லது, பாண்டிச்சேரியிலும் கடல் இருக்கிறது, இங்கு வந்து அணு உலையைக் கட்டுங்கள் என்றாவது போராடுங்கள். அடுத்தவர் உயிர்மீது பந்தயம் கட்ட நமக்கென்ன உரிமை இருக்கிறது?

      நீக்கு
  11. அருமையான பதிவு.வாழ்த்துகள்.1986லிருந்து அணு உலைகளுக்கு எதிராகக் கருத்துப் பிரச்சாரம் செய்து வருபவன், தொடர்ந்து பல்வேறு கலாசார, அரசியல் பிரச்சினைகளில் இடதுசாரி அரங்குகளில் தோழமையுடன் பங்கேற்பவன் என்ற உரிமையில் ஒரு கேள்வி.தோழர் அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்கச் செய்யப்பட்டது போல த.மு.எ.க.ச தோழர்களும் நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்? அன்புடன் ஞாநி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குமுதத்துக்கே எழுதப்போனதுக்கு இன்றுவரை விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பதும், வி.எஸ்.மன்னிப்புக் கேட்டதுமான நிலை எல்லோருக்கும் வரவேண்டுமென்று ஏன் நினைக்கிறீர்கள் ஞாநி?

      நீக்கு
    2. ஞாநியை திட்டாதீர்கள் ஆதவன், அவர் மட்டும் தான் கேள்வி கேட்பார், அவரை யாரும் கேள்வி கேட்க கூடாதாம், அவரது வழக்கறிஞர் பாஸ்கர் சக்தி கடந்த வாரம் அவரை கேள்வி கேட்டவர்களை எல்லாம் முகநூலில் ஒரு கை பார்த்துவிட்டார்.

      நீக்கு
    3. தமிழ் அய்யனார், ஆதவன் தீட்சண்யாவுக்கு என்னை நீங்கள் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பரஸ்பரம் நன்கு அறிந்த நண்பர்கள்.நிற்க நான் யாருக்கும் வழக்கறிஞர் அல்ல. முகநூலில் நான் தமிழில் எழுதியதை சரியாகப் புரிந்து கொள்ள இயலாவிட்டால் அது உங்கள் வாசிப்பின் பலவீனம்.ஞாநியை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றோ கேள்வி கேட்கக் கூடாது என்றோ நான் அதில் சொல்லவே இல்லை. எதையாவது தப்பர்த்தம் செய்து கொண்டு குழந்தைத் தனமாக எழுதாதீர்கள்.பாஸ்கர்சக்தி

      நீக்கு
  12. நாட்டுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக இந்த 13 ஆயிரம் கோடி விரயம்தான் ஆகட்டுமே, என்ன குடிமுழுகிவிடப் போகிறது? அட, அப்படியேதான் 13ஆயிரம் கோடி விரயத்தால் இந்த நாடு நாசமாகிக் போய்விடும் என்றால் போய்த் தொலையட்டும், வாழ்கின்ற வேட்கையில் எமது மக்கள் தங்களுக்கான ஒரு வலிய நாட்டை விருப்பம்போல உருவாக்கிக்கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
  13. //ஜைதாப்பூரில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவேக் மொண்டீரோ. அவரை விடவா நாங்கள் பெரிய அறிவுஜீவி?// இதை யார் எழுப்பியிருந்தாலும் எனது கேள்வி அதுதான்... விவேக் மொண்டிரோவை விட ஆதவனைப் பற்றிக் கூடுதலாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்... முல்லைப்பெரியார் விவகாரத்திலும் எங்கள் தலை மீது ஏன் சுமத்துகிறீர்கள் என்று அந்தப் பகுதி மக்கள் கேட்கிறார்களே... அதற்கும் இதுதான் பதிலா...??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடங்குளம் பிரச்னையில் உங்களது நிலைப்பாடு என்ன, முல்லைப்பெரியார் விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு என்ன என்று தெளிவாக முன்வையுங்கள். அதன்மீது பேசுவோம். ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்மான்னு எதிர்கேள்விக்கு இங்கு ஒரு தேவையும் இல்லை.

      நீக்கு
    2. ஆதவன்...//அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்கச் செய்யப்பட்டது போல த.மு.எ.க.ச தோழர்களும் நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்?// என்ற என் எளிய கேள்விகளுக்கு பதில்கள் என்ன ? நிப்பந்திக்கப்படும் வாய்ப்பு இல்லை என்று சொலல்லாம்.அல்லது வாய்ப்பு உண்டு.ஆனால் நாங்கள் மன்னிப்பு கேட்கமாட்டோம் என்று சொலல்லாம். அல்லது மன்னிப்பு கேட்கச் செய்தாலும் கூடங்குளம் மக்கலுக்கு தன் ஆதரவு உண்டு என்று வி.எஸ் சொன்னதைப் போலவே நாங்களும் செய்வோம் என்று சொல்லலாம். இதில் ஒன்றைக் கூட சொல்ல இயலாத நிலையை மறைக்க, ஏன் குமுதம் விஷயத்தை இழுக்கிறீர்கள்? நான் தனி நபர். நீங்கள் இயக்கம். நான் குமுதத்தைக் கண்டித்தது அது படைப்பாளிகளின் பதிப்புரிமையை பறித்த விஷயத்தில்தான். அதற்காக அப்போதும் சரி இன்றுவரையும் சரி உங்கள் த.மு.எ.ச உட்பட யாரும் குரல் எழுப்பவில்லை. நான்தான் எழுப்பினேன். என்னை எழுதக் கேட்டபோது என் பதிப்புரிமையை விட்டுத் தரமுடியாது, அவர்களுடைய விதி என்னைக் கட்டுப்படுத்தாது என்ற என் நிபந்தனையை அவர்கள் ஒப்புக் கொண்டபின்னர்தான் எழுதினேன்.இது பற்றி நான் ஒன்றும் இன்றுவரை யாருக்கும் விளக்கம் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இல்லை. இது தொடர்பாக தகவல் பிழைகள் இணையத்தில் வெளியாகி என் கவனத்துக்கு வந்தால் அவற்றைத் திருத்துகிறேன். அவ்வளவுதான்.நான் தனி நபர்தான்.ஆனாலும் பொது வாழ்வில் இருப்பதால் என் தொடர்பான சந்தேகங்கள் பொறுப்பான தொனியில் எழுப்பப்படும்போது பதில் சொல்வதை தவிர்ஃப்ப்பதே இல்லை. அவதூறுகளை மட்டுமே புறக்கணிப்பேன். நீங்கள் இயக்கம்.நீங்கள் ஒரு சமூகப் பிரச்சினையில் முரண்பட்ட நிலைகளை எடுக்கும்போது எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லித்தான் தீரவேண்டும்.நான் கேட்ட இரு கேள்விகளும் இப்போதும் உங்கள் பதில்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அன்புடன் ஞாநி

      நீக்கு
    3. "இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்" என்று எங்களை ஒரு நேசசக்தியாக உள்ளிழுத்துக் கொள்வது பற்றியதாகத்தான் அவர்களது அக்கறையாக இருந்தது. ஞானி கேட்பது போன்ற வாக்குமூலங்கள் எதுவும் தோழர்.உதயகுமாருக்கோ அல்லது இடிந்தக்கரை மக்களுக்கோ தேவைப்பட்டிருக்கவில்லை. அமைப்பாக இயங்கி செழித்த அனுபங்களைப் பெற்றிருக்கிற அவர்கள் ஒரு அமைப்பினர் இங்கே எவ்வாறு வந்து சேர்ந்திருப்பார்கள் என்பதை வெகுலகுவாக புரிந்துகொண்டார்கள். இந்தப் புரிதல்தான், எழுப்பவேண்டிய கேள்விகள், தீர்த்துக் கொள்ள வேண்டிய சந்தேகங்கள் , நேர்செய்யவேண்டிய குற்றச்சாட்டுகள் என்பனவற்றுக்கு முன்னுரிமை வழங்காது - தம்மிடம் வந்தோரை தம்மோடு இணைத்துக்கொண்டு செல்வதற்கான அணுகுமுறையை அவர்களுக்கு உருவாக்கி இருக்கிறது. தங்களோடு சேர்ந்து யார்யாரால் எவ்வளவு தூரம் உடன்வரமுடிந்தாலும் தங்களுக்கு பலமே என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த அறிதலை அவர்கள் அமைப்பாக இயங்குவதன் வழியே பெற்றிருக்கிறார்கள். குறைந்தபட்சம் மாரியாத்தா கோயிலில் கூழ் ஊத்துகிற கமிட்டியிலாவது இன்னொரு மனிதரோடு சேர்ந்து வேலை செய்து கூட்டுமனப்பான்மையையும் சகிப்புணர்வையும் அடுத்தவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கிற பக்குவத்தையும் பெறாத - தான் மட்டுமே சரி என்பதால் தன் நிழலைக்கூட உடனழைத்துச் செல்வதற்கு தயாரில்லாத தனிமனிதர்களுக்கு இந்த அறிதல்நிலை வாய்க்காது. நிலைபாட்டில் மாற்றம் என்று நேர்நிலையாக பார்க்கத்தெரியாமல் முரண்பட்ட நிலை என்று எதிர்நிலைக்குத் தள்ளுவதும்கூட இந்த அறிதல் வாய்க்காததன் கெடுவிளைவுகளில் ஒன்றுதான்.

      நீக்கு
  14. நன்றி தோழரே!உண்மையின் குரலின் வலிமையை உங்கள் எழுத்தில் உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  15. கேள்வி கேட்பவர்களிடமும் சந்தேகம் எழுப்புபவர்களிடமும் கோபமோ ஆத்திரமோ கொள்ளாமல் நேரடியாக உங்கள் கருத்தை பதிலாகச் சொல்லப் பழகுங்களேன்.

    தோழமையுடன்
    சீனி மோகன்

    பதிலளிநீக்கு
  16. கேள்வி கேட்பவர்களிடமும் சந்தேகம் எழுப்புபவர்களிடமும் நேரடியாக உங்கள் கருத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும். அவர்கள் குறைகளைப் பட்டியலிடுவது தான் உங்கள் நோக்கமோ என்று தோன்றும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

    தோழமையுடன்
    சீனி மோகன்

    பதிலளிநீக்கு
  17. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கும் மற்றும் தமுகஎச தோழர்களுக்கும்,
    உஙகள் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றான விஞ்ஞானப் பார்வையையும் விஞ்ஞான நோக்கையும் வளர்த்தெடுப்பது என்பது எனக்கு மிகவும் விருப்பமான விடயமானதால் நான் தமுகஎசவின நடவடிக்கைகளை நீண்டகாலமாக உன்னிப்பாக கவனித்து வருகிறவன். இந்த நோக்கம் முற்போக்கானது என்றாலும் இது நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் பிரிவு 51ஏ(எச்)ன் படி இந்தியக் குடிமகனின் கடமையாகும். உங்கள் கட்டுரையைப் படித்தபின் எனக்கு கீழ்வரும் கேள்விகள் எழுகிறது.
    போராடும் அணுஉலை எதிர்ப்பாளர்களை நசுக்க முயற்சிக்கும் அரசின் முயற்சி கீழ்த்தரமானது என்பதை ஐனநாயக விரும்பிகள் எதிர்க்கிறார்கள். அந்த வகையில் நசுக்கப்படும் போராளிகளுடன் தமுகஎச போன்ற ஐனநாயகத்திற்காக போராடும் அமைப்பு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவது வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில் போராடுபவர்களின் வாதம் அனைத்தும் நியாயம் என்று தமுகஎச ஏற்றுக் கொள்கிறதா? அணுமின்சாரம் என்பது கூடவே கூடாது என்பதுதான் தமுகஎசவின் நிலைப்பாடா?
    கூடங்குளம் அணுமின்நிலையம் இயங்கினால் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் உயிர்வாழும் உரிமை பறிக்கப்படும் என்று தமுகஎச நம்புவதற்கு ஏதாவது அடிப்படைக் காரணங்கள் இருக்கிறதா? அல்லது வழக்கமான அணுஉலை பற்றிய மூட நம்பிக்கைகளுக்கு தமுகஎசவும் தாளம் போடுகிறதா? தோழர் உதயகுமாரின் கூற்றான அணுஉலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அணுப்பிளவு பொருட்களான ரேடியோ சீசியம் போன்றவை காற்றில் கலந்து கதிர்வீச்சு உண்டாக்கும் என்பதை தமுகஎச எப்படி நம்புகிறது? விஞ்ஞானப் பார்வையுடைய தமுகஎச அப்படி நம்புவதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?
    தோழர் புஷ்பராயன் கூற்றுப்படி கடலில் உள்ள மீன்கள் இறந்துவிடும் என்ற கூற்றிற்கு இந்தியாவை விட்டுவிடுங்கள் உலகில் வேறு பல நாடுகளில் கடலோரம் இயங்கும் அணுஉலைகளால் ஏதேனும் மீன்வளம் குறைந்ததற்கான புள்ளிவிபரங்கள் உண்டா? அல்லது உலகில் இன்றுவரை உலா வந்து கொண்டிருக்கும் நடமாடும் அணுஉலைகளான (80லிருந்து 150 மெகாவாட் திறனுள்ள) நீர்மூழ்கி கப்பல்களால் மீன்கள் செத்து விழுந்ததாக ஏதேனும் தகவல் உண்டா? இந்தியாவில் இருக்கும் ஒரே அணுஉலை நீர்மூழ்கிக்கப்பல் விசாகப்பட்டினத்தில் நீண்டகாலம் தங்குகிறதே, அங்கு மீன்கள் செத்துபோனதாக ஏதேனும் தகவல்கள் தமுகஎசவினரிடம் உண்டா?
    தோழர் உதயகுமாரின் விருப்பப்படி அணுஉலையின் தீமைகளையும் கூடங்குளம் போராட்டத்தின் நியாயங்களையும் உலகெங்கும் தமுகஎச கொண்டு செல்லப் போகிறதா? அணுஉலையின் தீமைகள் என்று எவற்றையெல்லாம் தமுகஎச பட்டியலிடுகிறது?
    விஜயன்

    பதிலளிநீக்கு
  18. ஞானி அவர்களுக்கு /த.மு.எ.க.ச தோழர்களும் நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பு உள்ளதா? அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்?நான் தனி நபர். நீங்கள் இயக்கம்./ ஞானி அவர்களே சொல்வதுபோல் அப்படி ஒரு நிலை வரும் எனில் இயக்கம் அதை சரியான முறையில் அணுகும், இதில் (தனி நபரான) ஆதவனை ‘நீ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்’ என (தனி நபரான) ஞானி வற்புறுத்துவது நியாயமாக தெரியவில்லை. இக்பால்

    பதிலளிநீக்கு

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...