கூடங்குளம் ஒரு புதினத்திற்கான அத்துணை தன்மையையும் தன்னுள் கொண்டிருக்கிறது. சமபலத்துடன்கூடிய இரு சக்திகள் ஒன்றையொன்று வீழ்த்த விட்டுக் கொடுக்காமல் நடத்தும் போர்போன்ற தோற்றத்தையும் கொண்டிருக்கிறது.
கூடங்குளம்
போராட்டம் ஒரு நாடகம் போன்று தோற்றமளிக்கிறது. இந்த நாடகம் இதுவரை எழுதப்பட்ட எல்லா வரலாற்று நாடக கதைகளையும், வழக்கமான நாடக கதைகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் தன்மையுடையதாய் இருக்கிறது. முதலில் இது அனுசக்தி பற்றி மட்டும் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஒரு வட்டத்திற்குள் மட்டும் இந்த பிரச்னையை தள்ளிவிட்டு, இந்த போராட்டத்தினுடைய மேலான நெறிகளை தொலைத்து விட்டோம்.கூடங்குளம் என்பது இந்த தேசத்தோடு சமுதாயங்கள் நடத்தும் போராட்டம் ஆகும். தனித்தன்மையோடு கூடிய ஒரு சமூகம்/சமுதாயம் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று தேடுகிறது. தானே அதை சொந்தமாய் வடிக்க வேண்டும் என்று கேட்கிறது. கூடங்குளம் பேச்சு சுதந்திரத்திற்கானது மட்டுமல்ல தன்னுடைய வாழ்வாதாரத்தை ஒருவன் நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டம். வாழ்வாதாரம் என்பது வேலையை விட மேலானது. பொருளாதார நுண்கணிதத்தில் வேண்டுமானால் வேலை என்பது மாற்று ஏற்பாடாக பொருந்தலாம். ஆனால் வாழ்வாதாரம் ஒரு வாழ்விடத்திற்கான உணர்வை கேட்கிறது, அது ஒரு வாழும் இயல், அதுவே உலக பார்வையையும் கூட. கூடங்குளம் இப்பூவுலகம் முழுதும் வாழும் மீனவர்களுக்கான பார்வையோடு தன் வாதத்தை முன்வைக்கிறது.
சிந்தனையியல்
படி பார்த்தால், மீன்பிடித்தல் என்பது நிலமும் நீரும் சம்பந்தப்பட்ட ஒரு தொடர் செய்கை அவ்வளவே. அது கடலிலிருந்து நிலத்தை பற்றியும், நிலத்திலிருந்து கடலை பற்றியும் சிந்திக்கிறது. கடல் சிந்திக்கின்ற ஒரு வழி. (கடல் சிந்தனையின் ஒரு வடிவம்). அது தண்ணீர் சுமக்கும் பொருள் மட்டும் இல்லை, கழிவை கொட்டி வைக்கும் குப்பை கிடங்குமில்லை. பிரெஞ்சு அரசு பசிஃபிக் கடலில் அணுஆய்வு செய்தபோது, தஹிதியர்களுக்காக வாதாடிய ஜான் டூம் சொன்ன கருத்தை இது நினைவுபடுத்துகிறது. ஜான் டூம், கடலையும், தஹிதி தீவில் வாழ்பவரையும் பிரதிநிதிப்படுத்தவும், புரிந்துகொள்ளப்படவும் வேண்டும் என்று வாதாடினார். அவர் சொன்னார், பெரும்பாலும் நிபுணர்கள்/ மேதாவிகள், நிலத்திலிருந்து கடலை பற்றி சிந்திக்கிறார்கள், தஹிதியர்கள் கடலிலிருந்து நிலத்தை பற்றி சிந்திக்கிறார்கள். தண்ணீர் என்பது அவர்களது வாழ்வின் வழியாகவும், அவர்கள் சிந்தனையின் சூழலாகவும் இருந்தது. கூடங்குளம் விவாதத்தில் இந்த உலகளாவிய பார்வையின் சாயல் படிந்துள்ளது.
போராளிகள்
போராட்டத்தை கடலினுள் கொண்டு சென்றது சுவாரசியமானது. கடற்கரையின் வாழ்வாதாரம்,
புறச்சூழல் என்பது, கடலின் பொதுவெளி என்று கூடங்குளம் வாதம்
செய்கிறது, நிலம் என்பது “பாதுகாப்பு” என்பது மட்டுமல்ல என்ற பார்வையை அவர்களுக்கு தருகிறது. பாதுகாப்பு என்கிற பொதுகருத்து, இந்த தேசிய அரசின் மீள் பார்வையை வேண்டுகிறது. பன்முகப்பட்ட சிந்தனை தேவையான ஒரு விஷயத்தில் எல்லோரையும் ஒரேமாதிரி யோசிக்க அழைப்பு விடுக்கிறது. இத்தனை கூக்குரல்களுக்கு மத்தியிலும், கூடங்குளம் ஓர் உரையாடல். இந்த உரையாடல்”தேசிய நலன்” என்கிற புதிரான, வார்த்தையை விவாதிக்கிறது, எல்லோரும் பயபக்தியுடன் பார்க்கிற “தேச நலன்” என்கிற கருப்புப்பெட்டியை திறந்து பார்க்க வலியுறுத்துகிறது.
“தேச
நலன்”,” பாதுகாப்பு” என்ற இரண்டு பதங்களும், எல்லாவற்றிற்கும் மேலானது என்று சொல்லி எல்லாவித விவாதங்களையும் அடக்கிவிட அதை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். கூடங்குளம், சிலசமயம் விளையாட்டாகவும், சில சமயம் மனம் வெறுத்தும் கேட்கும் கேள்வி, “ யார் முடிவெடுக்கிறார்கள்?” தேசிய அரசின் பிரதிநிதியான பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங், மற்றும் அறிவியலாளர்களும், புது தில்லியிலிருந்து முடிவெடுக்கிறார்களா? அல்லது தமிழ்நாட்டின் முதலமைச்சராக செல்வி.ஜெ.ஜெயலலிதாவா? அவர்களுக்கு கீழ்படியும் அதிகாரிகளின் குரல்கள் எங்கிருந்து அரசின் கோட்பாடுகளில் நுழைகிறது?அணுசக்தி மட்டுமே பிரதானமாக விவாதிக்கப்படுகிற தளத்தில், “வளர்ச்சி”, “ஜனநாயகம்” போன்ற பரந்த விவாதங்களை கூடங்குளம் முன்வைக்கிறது. இந்த கோணத்தில், உலக அளவிலும், தேசிய அளவிலும் ஒரு பெரும் துயரத்தின் உருவகமாக கூடங்குளம் காட்சியளிக்கிறது.
கூடங்குளம்
விவாதத்தை அவதூறு செய்யும் வகையில் எழுப்பபட்டுள்ள முன்று புரளிகளை ஒருவர் நீக்கிவிடவேண்டும்.
முதல்
புரளி, இந்திய அரசியல் சகுனியான சுப்பிரமணியன் சுவாமி அவர்களால் மிகவும் அருவருக்கத்தக்க முறையில் எழுப்பப்பட்டது. திரு.சுவாமி அவர்கள், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை போலவே நோயின் தன்மையை பிரதிபலிக்கிறார். கூடங்குளம் எதிர்ப்பு, கிறித்துவ பாதிரியார்களாலும், கன்னியாஸ்த்ரீகளாலும், தலைமையேற்று நடத்தப்படுகிறது என்றும், அவர்கள் கலாச்சாரத்தை கெடுப்பவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். நமது நாட்டில் கிறிஸ்துவம் கி.மு.51லிருந்தே காணப்படுகிற பழைமையானது இந்தியாவின் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்துள்ளது. கிறித்துவக் குழுக்கள் நம் இந்திய அரசியலில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. அவர்கள் இல்லாமல் மீனவப் போராட்டங்களை ஒருவர் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. அந்த மீனவப் போராட்டங்களை வழிநடத்திய மாற்றுக் கருத்து கொண்ட பாதிரிகள், தன்னுடைய மதத்தலைமைக்கெதிராகவும், அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது என்பதை நான் வலியுறுத்தி சொல்வேன்..
இரண்டாவது
புரளி, “வெளிநாட்டுச் சதி” என்னும் பழைய ஆயுதம். இந்திரா காந்தி அவர்கள் அவசரகால நிலை என்பதை அதனுடன் இணைத்தார். ஊடகங்களும் அந்த வார்த்தையை வண்ணமாய் பொழிந்தன. “வெளிநாட்டுச் சதி” என்பதும், திரைமறைவில் இருந்து சந்தையை கட்டுப்படுத்துகிற மதிநுட்பவாதிகளின் வேலை என்பதும் ஒன்றுக்கொன்று எதிரானது ஆகும். இந்திய தேசிய இயக்கம் என்பது அன்னி பெசண்ட் அம்மையார், ஆக்டேவியன் ஹியூம் போன்றோரிலிருந்து, காந்தியின் தோழர்கள் மெடலின்
ஸ்லேடு, சார்லஸ் ஆண்ட்ரூஸ் போன்றோர் வரை, அந்நியர்களால் நிறைந்தது என்பதை ஒருவர் ஞாபகப்படுத்திக் கொள்ளல் வேண்டும். இரண்டாவது தேசிய இயக்கம் ஏதாவது இன்று ஆரம்பிக்கப்படுமானால், அதை “சி.ஐ.ஏ. வின் சதி” என்று புதுதில்லி அடக்குமுறையை கையாளக்கூடும்.
மூன்றாவது
புரளி, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போரட்டத்தில் ஈடுபடும் சு.ப.உதயகுமார் அவர்களுக்கும், மற்ற போரளிகளுக்கும் “அரசு சாரா
நிறுவனம்” என்ற கறை பூசப்படுகிறது. ஏராளமான அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை முறைமைப்படுத்தாமல் இருக்கின்றன என்பதையும், அந்த நோய் இன்றும் மேலும் பரவுகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பணி ஓய்வு பெறுகிற ஒவ்வொரு அரசு உயர்அதிகாரியும் நாளை ஒரு அரசு சாரா நிறுவனத்தை தோற்றுவிப்பவர்தான்., பெரும்பாலானவர்களில் அவர் தன் மனைவி பேரில் எற்கனவே அதை பதிவு செய்துவிட்டிருப்பார். இங்கு நாம் திறந்த மனதோடு அந்தந்த சூழலுக்கு ஒவ்வொரு விஷயத்தையும், தனிக்கவனம் கொள்ள வேண்டும். திரு. சு.ப.உதயகுமாரின் கொள்கையைப் பற்றியோ, அவரின் ஈடுபாட்டை பற்றியோ எந்த சந்தேகமும் கொள்ள முடியாது. அவர் ஒரு அறப்போராளி, அந்த வார்த்தைக்குரிய உண்மையான அர்த்தத்தை பிரதிபலிப்பவர்.
கூடங்குளம் அந்தந்த ஊர்சார் சமூகத்தின் ஜனநாயகத்தை பற்றிய ஒரு
கற்பனை. அங்கு மீனவர்கள், “பாதுகாப்பு, திறமை, செலவினம், என்ற பதங்களெல்லாம் அரசு நிபுணர்களின் தனிச் சொத்தா அல்லது திறந்த ஜனநாயகத்தோடு விவாதிக்கப்பட வேண்டியவையா?” என்று கேட்கிறார்கள். “அணுசக்தி பாதுகாப்பானது” என்று தொழில்நுட்ப ஞானி அப்துல்கலாம் வெளியிட்ட அறிக்கை பூசி மெழுகப்பட்ட உண்மையா? அல்லது அந்த வார்த்தைகளை நாம் மீண்டும் முதலிலிருந்து அலசி ஆராய்ந்து விவாதிக்க வேண்டுமா?
நம்முடைய
நிபுணர்கள், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் நம்முடைய பொருளாதார நிபுணர்களும், அறிவியலாளர்களும், தொழில்நுட்ப வார்த்தைகளை பயன்படுத்தி மக்களை வாயடைக்க வைத்து வீழ்த்த முனைவார்கள். அதிர்ஷ்டவசமாக நம்மிடையே -குறிப்பாக பெங்களூரு இந்திய
அறிவியல் ஆய்வு
நிறுவனத்தில் ( I.I.S.C)- சதீஷ் திவான்,
அமுல்யா ரெட்டி
போன்றோரின் திறந்த
அறிவியல் மரபுகளை முன்னெடுத்துச் செல்கிற மாற்றுக் கருத்துடைய அறிவியலாளர்களாக, திரு.மாதவ் காட்கில் மற்றும் அதன் இயக்குனர் போன்றோர் போதுமான அளவில் இருக்கிறார்கள்.
கடைசியாக
ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கூடங்குளம் வெறும் உரிமைக்கான யுத்தம் அன்று. அரசு இந்த இயக்கத்தை அடக்க முற்படும்போது அது உரிமைகளை வெளிக்கொணர்கிறது, அதோடுகூட இந்தியாவில் மெதுவாக தலைதூக்கி வரும் இன்னொரு கற்பனையையும் அது வெளிக்கொணர்கிறது. கூடங்குளம் உரிமைகளை பற்றி சிந்தனையை தூண்டும் அதேநேரத்தில் அதோடு கூட இலவசமாக பொதுவெளி பற்றிய சிந்தனையையும் தூண்டுகிறது. உரிமைகள் தனிநபர் மீது கவனம் செலுத்துகிறது, ஆனால் பொதுவெளி பற்றிய சிந்தனை, சமூகத்தின் எண்ணங்கள் மற்றும் வாழ்வியல் பற்றி கட்டமைக்கிறது, விளிம்பு நிலை மக்களின், உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி சிந்திக்கிறது. அது கடலும், கடற்கரையும் பொதுவெளி என்று கூறுகிறது. அது மக்களுடையது, எதிர்காலத்திற்குரியது. அரசும், மாநகராட்சியும், அதை தனதாக்கி கொள்ள முடியாது. அணைக்கட்டுகள், சுரங்கங்கள், அணு உலைகள் ஆகியவை இந்தியாவின் பொதுவெளிகளின் உண்மையான துயர நிலையை வெளிப்படுத்துகின்றன என்றும், மக்கள் அதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் கூடங்குளம் வலியுறுத்துகிறது. இதைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இவ்வகை போராட்டங்களிலிருந்து ஒருவர் எதிர்பார்க்க முடியாது.
நன்றி: ஏசியன் ஏஜ் இதழில் 24.9.12 அன்று வெளியான இக்கட்டுரையை
வாசிக்க பரிந்துரைத்த
தோழர்.எஸ்.செந்தில், பொருத்தமான சொற்தேர்வுகளுடன் மொழிபெயர்த்து கொடுத்த தோழர்.நளினி கண்ணன் ஆகியோருக்கு.
மற்றொரு முக்கியமான விவாதத்தையும் கூடங்குளம் நம் முன் வைக்கிறது. ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் மக்களைச் சந்திக்காமலேயே குறுக்கு வழியில் பிரதமர் ஆனவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த முடிவு எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற மந்த நிலையை கடுமையான கேள்விக்குள்ளாக்கி இருக்கிற்து. மக்களாட்சியில் மக்களின் நியாயமான குரலுக்கு செவி சாய்க்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டா இல்லையா என்ற விவாதத்தை நம் முன் வைத்த இடிந்தகரை மக்கள் மக்களாட்சியின் முன்னோடிகள். இந்த நாட்டை ஆள்வது இந்தியர்களா அல்லது பன்னாட்டு நிறுவனங்களா என்ற் விவாதமும் இதன் மூலம் எழுகிறது.
பதிலளிநீக்குசீனி மோகன், உடுமலைப்பேட்டையிலிருந்து.