ஒசூரெனப்படுவது யாதெனின்...4 - ஆதவன் தீட்சண்யா


''மாட்டைப் பிடித்து வெளியே கட்டிவிட்டு மாணவர்களைப்பிடித்து உள்ளே திணி’ என்பதுபோல இன்றைக்குத் திரும்பிய பக்கம் எல்லாம் கல்லூரிகள் மலிந்துவிட்டன. ஆனால், பரந்து விரிந்து இருந்த தருமபுரி மாவட்டத்தில், 1980-களில் தருமபுரியில் ஒன்றும் கிருஷ்ணகிரியில் ஒன்றுமாக இரண்டே இரண்டு கலைக் கல்லூரிகள்தான் இருந்தன. இவைபோக கிருஷ்ணகிரியில் ஒரு பாலிடெக்னிக்கும் ஒசூரில் ஒரு ஐ.டி.ஐ-யும் இருந்தன. பள்ளிக் கல்வியைத்தாண்டி வேறு ஏதாவது படிக்க விரும்புகிறவர்கள் இவற்றைத்தான் நம்பி இருக்கவேண்டி இருந்தது. போக்குவரத்து ஏற்பாடுகளும் மிகவும் அருகிப்போய் இருந்த அந்நாட்களில் தொலைதூரங்களில் இருந்த இந்தக் கல்வி நிலையங்களைத் தேடி மாணவர்கள் ஆர்வமாக வந்துகொண்டேதான் இருந்தார்கள். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளையும் இன்னபிற வசதிகளையும் வழங்கிக் கல்வி பயில்வதற்கு இசைவான சூழலை உருவாக்கிக் கொடுப்பதில் அக்கறையற்ற அரசுகள் கல்லூரிகளையும் விடுதிகளையும் தர்மசத்திரம்போலவே நடத்திவந்தன. இன்றைக்கும்தான்!

அரசின் கல்விக் கொள்கைகளே மக்களின் கல்வி பயிலும் ஆர்வத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடுகின்றன. அல்லது இப்படியான பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவே அரசின் கல்விக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. எனவே, படிப்போம், படிப்பதற்காகப் போராடுவோம் என்கிற இந்திய மாணவர் சங்கத்தின் அறைகூவலும்  இன்னின்னாருக்குத்தான் கல்வியும் வேலையும் என்று சாதிரீதியாக பாகுபடுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் 'எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை’ என்கிற அதன் முழக்கமும் என்னைப் போன்றவர்களை ஈர்த்ததில் வியப்பேதும் இல்லை.

மாணவர்களுக்கு அரசியல்கூடாது என்பது மோசடியான வாதம். மாணவர்கள், மாணவர்களுக்கே உரிய பிரச்னைகளையும் அதன் பின்னுள்ள அரசியலையும் புரிந்துகொண்டு அதன்மீது வினையாற்றத்தான் வேண்டும். அசாதாரணமான சூழல்களில் மாணவர் என்கிற நிலையைத் துறந்தும்கூட போராடுகிற அரசியல் நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொண்டதற்கு வரலாற்றில் பல முன் உதாரணங்கள் உண்டு. காலனி ஆட்சிக்கு எதிராகவும், இந்தித் திணிப்புக்கு எதிராகவும், எமர்ஜென்சியை முறியடிக்கவும் போராடிய பாரம்பரியம் இந்திய மாணவர்களுக்கு, தமிழக மாணவர்களுக்கு உண்டு. அந்த வரலாற்றுத் தொடர்ச்சியில் எங்களையும் ஒரு கண்ணியாக உணர்ந்தோம். அப்படி ஒரு உணர்வை நாங்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டில் பங்கு எடுப்பதற்காக சிதம்பரம் சென்றது எனக்கு முக்கிய அனுபவம்தான்.

முதல்நாள் இரவே சென்றுவிட்ட நாங்கள் ஏழுபேரும் ஒரு பயணியர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டோம். ஆனால், அதிகாலையில் எழுந்து பார்க்கும்போது கால்மாடு தலைமாடு தெரியாமல் 50,60 பேர் எங்களைச் சுற்றிப் படுத்துக்கிடந்தார்கள், ஆண், பெண் பேதங்களற்று. அவர்கள் எல்லாம் ஒரு படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த அந்தக் காட்சி என் கண்களில் இன்னமும் நிற்கிறது. ஆண் - பெண் உறவு பற்றி அதுவரை நான் கொண்டிருந்த மதிப்பீடுகள் எவ்வளவு பின்தங்கியவை என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்தேன். ஆனால், அந்த மதிப்பீடுகளின் பிடியில் இருந்து முற்றாக விடுபட்டுவிட்டேனா என்று தெரியவில்லை.

காலையில் நாங்கள் குளித்துக்கொண்டு இருந்த இடத்துக்கு, இடுப்பில் துண்டோடு வந்த ஒருவரைக் காட்டி 'இவர்தான் அகில இந்தியத் தலைவர் எம்.ஏ.பேபி’ என்றார்கள். அடர்த்தியான தாடி, மீசையுடன் ஈர்ப்பான முகம் அவருக்கு. பிறகு, சாப்பாட்டுக்கூடத்துக்கு வேட்டி, சட்டையில் வந்த அவர் எங்களோடு தரையில் அமர்ந்து சாப்பிடவும் செய்தார். ஆனால், 'பேபி என்கிற பெயரில் ஓர் ஆண் இருக்கவே முடியாது என்றும் நம்மோடு சேர்ந்து குளிக்கிற, சாப்பிடுகிற இவர் எல்லாம் எப்படி ஒரு அகில இந்தியத் தலைவராக இருக்கமுடியும்?’ என்றும் நான் திடமாக நம்பினேன். இருந்தும் என்ன, அறியாமையில் விளைந்த என் நம்பிக்கையைச் சிதறடித்தபடி 'லால் சலாம், லால் சலாம், லால் சலாம் சகாக்களே...’ என்று முழக்கமிட்டபடி மேடையேறிய அவரேதான் பேபி. அதற்குப் பின்பு எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்று பல நிலைகளுக்குச் சென்றுவிட்ட அவர், என் நினைவில் இன்னமும் இடுப்பில் கட்டிய துண்டோடு தண்ணித் தொட்டிக்கு அருகில்தான் நின்றுகொண்டு இருக்கிறார்.  

சிதம்பரத்தில் இருந்து திரும்பிய நாங்கள் விடுதிக்குள் நுழையும்போது அதிகாலை 2 மணி. 'இந்நேரத்துக்கு எதுக்கு வர்றீங்க?’ என்று ஒரு நாய் குரைத்திருந்தால்கூட நாங்கள் நிம்மதியாகப்போய் படுத்திருப்போம். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் மாணவர்கள். 'மாநாட்டில் இருந்துவருகிற எங்களை வரவேற்காமல் இவனுங்களுக்கு அப்படியென்ன தூக்கம்? நாங்கள் மாநாட்டுக்குப் போய்வந்திருக்கிற செய்தி யாருக்குமே தெரியாமல் போய்விடுமோ?’ என்று நினைக்கும்போதே எனக்கு கவலையாகிவிட்டது. மாநாட்டில் கற்றுக்கொண்ட புதிய கோஷங்கள் வேறு எங்களது தொண்டைக்குள்ளேயே முட்டிக்கொண்டு இருந்தன. இன்றைக்குவிட்டால் வேறு எப்போதுதான் அதை முழங்கிப்பார்ப்பது? ஆனது ஆகட்டுமென்று அந்நேரத்துக்கு, ''Long live  Long live Long live SFI, Red salute Red salute Red salute to SFI’ என்று கோஷமிட்டோம். அவ்வளவுதான், படபடவென எல்லாக் கதவுகளும் திறந்தன. விளக்குகள் எரியத்தொடங்கின. என்னவோ, ஏதோவென்று தூக்கத்தில் இருந்து, அரண்டு எழுந்து ஓடிவந்த ஒவ்வொருவரும் எங்களைப் பார்த்து இன்னதுதான் திட்டினார்கள் என்று கணக்கு வழக்கு இல்லை. அப்படி ஒரு திட்டு. சண்டைக்கு சிங்காரமில்லை என்று சொல்வது சரிதான் போலும்.

இப்படி, கல்லூரிக்குப் போனாலும், போகாவிட்டாலும், படித்தாலும், படிக்காவிட்டாலும் என்னை ஒரு மாணவனாக நினைத்துக்கொண்டு திளைத்திருந்த பருவம் 1984- மார்ச்சில் முற்றுப்பெற்றது. நான் எதிர்பார்த்து இருந்த பணி நியமன ஆணையை என்னுடைய 20-ம் பிறந்தநாளுக்கான பரிசைப்போல தபால் தந்தித் துறை அனுப்பிவைத்து இருந்தது. அதுவரை வாழ்க்கையில் ஒரேயொருமுறைகூட டெலிபோனில் பேசிஇருக்காத நான், டெலிபோன் ஆபரேட்டராகிவிட்டேன். மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் மூன்றுமாதப் பயிற்சியை முடித்துக்கொண்டு ஜூன் 13-ம் நாள் தேன்கனிக் கோட்டைக்குச்சென்று வேலைக்குச் சேர்ந்தேன். என்னோடு பயிற்சிபெற்ற சங்கரனும் அதே அலுவலகத்துக்குத்தான் வந்து சேர்ந்திருந்தார். 

'லாபம் இல்லாததை எல்லாம் இழுத்துமூடு' என்கிற வியாபார உத்தியை அரசாங்கம் வெளிக்காட்டாத நேரம் அது. எனவே, வருமானமே இல்லை என்றாலும் தகவல் தொடர்பை ஒரு அத்தியாவசிய சேவையாகக் கருதிய அரசாங்கம் தொலைபேசி மற்றும் தந்திச் சேவையை 24 மணி நேரமும் வழங்கிக்கொண்டு இருந்தது. இந்த நோக்கத்திற்காக தேன்கனிக் கோட்டையில் 50-க்கும் குறைவான இணைப்புகளே இருந்தபோதும் அங்கும் ஒரு தொலைபேசி நிலையம் இயங்கிக்கொண்டு இருந்தது. அதன் சுற்று வட்டாரத்தில் இருந்த பென்னாங்கூர், பாரந்தூர், முதுகானப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, கக்கதாசம், அன்னியாளம், அந்தேவனப்பள்ளி, இருதுகோட்டா, சந்தனப்பள்ளி போன்ற ஊர்களின் அஞ்சலகங்கள் 'டேண்டம்’ முறையில் தொலைபேசி நிலையத்துடன் இணைக்கப்பட்டு இருந்தன. 'டேண்டம்' என்றால் ஒரே இணைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் இணைக்கப்பட்டிருக்கும். அழைத்தால் அந்த ஊர்கள் அனைத்திலும் மணியடிக்கும். இந்த ஊர்களில் இருந்து மாதம் ஒரு ட்ரங்க்கால் பதிவானாலே அதிசயம்தான். அஞ்செட்டி அஞ்சலகத்தில் ஒரு இணைப்பும் பிற்பாடு வனத் துறை அலுவலகத்தில் ஒன்றுமாக இருந்தன. அடர்ந்த காடுகள் வழியே செல்லும் இந்த லைனை தங்களது 'தொழில் நேரத்தில்’ கழற்றிவிட்டு பழுதடைய வைக்கும் நுட்பங்கள் அறிந்தவர்களாய் இருந்தனர் சந்தனக்கட்டைத் திருடர்கள்.

அப்படி நடந்த ஒரு சந்தனக்கட்டை கடத்தல் பற்றிய செய்தியை மாணவ நிருபர் நிர்மலாராணி அப்போதைய ஜூனியர் விகடன் இதழில் எழுதி இருந்தார். தோழர்.பாப்பா உமாநாத் தம்பதியரின் மகளான இவர் எனக்கு மாணவர் சங்கத்தின் வழியே ஏற்கனவே அறிமுகமானவர். கோலாட்டியில் இயங்கிவந்த மிகப் பெரிய பட்டுவளர்ப்புப்பண்ணை பற்றிய செய்தி சேகரிப்புக்காக கமலா முருகன் என்பவருடன் வந்திருந்தபோது தேன்கனிக் கோட்டையில் இருந்து நானும் உடன்சென்று இருந்தேன். பிற்பகலில் பண்ணையில் இருந்து திரும்பிய நாங்கள், சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்தபோது லாரி ஒன்று வனத் துறை சோதனைச்சாவடியில் கட்டப்பட்டிருந்த கனத்த தடுப்புச் சங்கிலியைத் தலைதெறிக்கும் வேகத்தில் அறுத்துக்கொண்டு எங்களைக் கடந்து பாய்ந்தது. தெறித்த சங்கிலித் துண்டு ஒன்று எங்களுக்கு சில அடிகள் தூரத்தில்வந்து விழுந்தது.  சிலநொடிகள் முந்தி இருந்தாலும் எங்களில் யாராவது ஒருவர் காயம்அடைந்து இருக்கக்கூடும். விரட்டிக்கொண்டுபோன வனத் துறை ஊழியர்கள் பிறகு அந்த லாரியை மடக்கிப்பிடித்தார்கள். பண்ணை பற்றியும் இந்தக் கடத்தல் பற்றியும் அப்போது ஜூ.வி-யில் எழுதினார்கள்.

தேன்கனிக்கோட்டை, ஒசூர் வட்டங்கள் கடல்மட்டத்தைவிட சராசரியாக 3,000 அடிகளுக்கும் மேலான உயரத்தில் அமைந்தவை. இப்பகுதியில் காடுகளும், மலைகளும், ஏரிகளும், காற்றும் அதிகம். ஆகவே அதற்கேற்ற அளவில் பனியும், குளிரும், மழையும் அதிகமாக இருந்தன. வருடத்தின் பெரும்பாலான நாட்களில் வெயில் அறியாமலும் வெக்கை உணராமலும் கிடக்கவேண்டி இருந்தது. தாகம் எடுப்பதும் வியர்ப்பதும்கூட அரிதானவைதான். ஆனாலும், 'வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா... வெயிலுக்குக் காட்டாம வளத்தாங்களா' என்று  எங்களைப் பார்த்துப்பாடும் அளவுக்கு நாங்கள் யாரும் ஏன் வெள்ளையாக இல்லை என்று ஏகாதசியிடம்தான் கேட்கவேண்டும். தங்களது நாட்டுக்கு இணையான தட்பவெப்பம் நிலவும் இப்பகுதியைப் பெரிதும் விரும்பிய பிரிட்டிஷ் அதிகாரிகள் 'லிட்டில் இங்கிலாந்து’ என்று செல்லப் பெயரிட்டு அழைத்தனர். ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் தலைநகராக ஒசூரை அவர்கள் மாற்றிக் கொண்டதற்கும்கூட இதுவே காரணம். இப்பகுதியின் நிலவியல் அமைப்பு, மண்வளம், நீர் ஆதாரம், தட்பவெப்பம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே அவர்கள் மல்பெரி மற்றும் இங்கிலிஷ் காய்கறிகளின் சாகுபடியை அறிமுகப்படுத்தியதோடு ஆசியாவின் மிகப் பெரிய கால்நடைப் பண்ணைகளில் ஒன்றையும் மத்திகிரியில் அமைத்தார்கள். ஆனால், பிரிட்டிஷார் ஆட்சிக்காலம்தொட்டே ஒசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, தளி  ஆகிய ஊர்களுக்குட்பட்ட நிலப்பரப்பு, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் பொறுத்தவரை பனிஷ்மென்ட் ஏரியா.  

தேன்கனிக்கோட்டையை சற்றே பெரிய கிராமம் என்றுதான் சொல்லமுடியும். வருவாய்த் துறை, பட்டுவளர்ச்சித் துறை, நில அளவைத் துறை, இந்தியன் வங்கி, காவல் துறை, வனத் துறை, தபால் தந்தித் துறை என்று  இப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இங்குள்ள தட்பவெப்ப நிலையும் ஊர்ச்சூழலும் ஒத்துக்கொள்ளாமல், வேண்டாதவர் மடியில் உட்கார வைக்கப்பட்ட குழந்தையைப்போன்ற மனநிலைக்கு ஆட்பட்டிருந்தார்கள். கடும் தீவாந்திர தண்டனையை அனுபவிப்பது போன்றும் குடும்பத்துக்காக இவ்வளவு தூரம் தள்ளிவந்து வேலை செய்து ஊதியம் ஈட்டுவதாகவும் ஒருவிதமான தியாக உணர்வுக்கு ஆட்பட்டு இருந்தார்கள். அய்யூர் காட்டுப்பகுதியில் யானை மிதித்து செத்தவர்கள் பற்றிய செய்திகளைப் படிக்கிற நாட்களின் இரவுகளில் தாங்களும் யானை மிதித்து சாவதாகக் கனவுகண்டு நடுங்கினார்கள். ஸ்வெட்டரும் குல்லாயும் அணிந்து வேறு யாரையோ பார்ப்பதுபோல் தம்மையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். குளிர்காலங்களில் இரண்டு சிகரெட்டுகளை ஒன்றுக்குள் ஒன்றாகச் சொருகி நீ...ள...மா...க... புகைத்துக்கொண்டு இருக்கும் உள்ளூர்வாசிகளுடன் உரையாடவிரும்பினார்கள். அதேவேளை, தெலுங்கு மற்றும் கன்னடத்தைத்  தாய்மொழியாகக் கொண்டிருந்த அந்த உள்ளூர்வாசிகளிடம் சரளமாக உரையாட முடியாத சங்கடமும் இவர்களுக்கு இருந்தது. எனவே, யாருக்குச் சேவை செய்வதற்காக அங்கு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார்களோ அவர்களோடு ஒரு இணக்கமான உறவும் ஒட்டுதலும் இல்லாது இருந்தார்கள். ' இதோ இப்போ ஆர்டர் வந்துட்டாக்கூட அடுத்தநொடியே கிளம்பிப் போகப்போகிறோம். அதுக்குள்ள ஒட்டும் உறவும் எதுக்கு?’ என்கிற மனப்பான்மையும்கூட அதற்குக் காரணமாக இருந்தது. தவிரவும், அரசு இயந்திரம் என்றைக்குத்தான் மக்களுடன் இணக்கமாய் இருந்திருக்கிறது?

ஒரு அரசு ஊழியர் கற்பனை செய்துவைத்திருக்கும் லட்சணத்தில் இங்கு வீடுகளோ வேறு வசதிகளோ இல்லை என்பதால், இவர்கள் குடும்பங்களைத் தத்தமது ஊரில் விட்டுவிட்டு தனிக்கட்டையாக இங்கேவந்து சேர்ந்திருந்தார்கள். தனிமையின் வாதையில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இவ்வாறான தனிக்கட்டைகள் ஒன்று கூடி, வீடுபிடித்து 'பேச்சுலர் பேரடைஸ்’களை உருவாக்கி இருந்தார்கள். சொந்த ஊருக்கு இடமாற்றல் கோரி விண்ணப்பித்துவிட்டு 'கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப்பழம் அங்கிருக்க’ என்ற பாடலை டேப் தேயும் அளவுக்குத் திரும்பத்திரும்ப ஓடவிட்டு கேட்டுக்கொண்டு இருந்தார்கள். வேலை நேரம்போக மற்ற நேரங்களில் சீட்டு ஆடுவதும், சினிமா பார்ப்பதும் ஒருவரையொருவர் கேலி செய்துகொள்வதுமாக அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. மாற்றல் உத்தரவு இன்றாவது வந்துவிடும் என்கிற நல்ல சேதியை எதிர்பார்த்துதான்  ஒவ்வொரு நாளும் கண்விழித்தார்கள். புதிதாக வேலை கிடைத்த ஜோரில், இமயம் முதல் குமரிவரை எங்கு வேண்டுமானாலும் போகத்தயார் என்று முண்டா தட்டுகிற கடமைத் திலகங்கள் யாராவது இங்குவந்து சேரும்போதுதான், காத்திருக்கும் இவர்களுக்கு மாற்றல் கிடைத்து இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள். பிறகென்ன, இவர்களைப்போலவே புதிதாக வந்தவர்களும் இடமாற்றல் கோரி விண்ணப்பித்துவிட்டு விடுவிக்க யாராச்சும் வந்து சிக்கமாட்டார்களா? என்று காத்திருக்க வேண்டியதுதான். நானும் சங்கரனும் அப்படித்தான் தேன்கனிக் கோட்டைக்குவந்து, காத்திருந்த இரண்டுபேரை விடுவித்து அவரவர் ஊருக்கு அனுப்பிவைத்தோம்.

நானும் சங்கரனும் பெரும்பாலும் நைட் டூட்டி பார்ப்போம். அலுவலகத்தில் இருந்த ரூம் ஹீட்டரும் கனத்த கம்பளியும் தந்த கதகதப்பு குளிரில் இருந்து தப்புவதற்கு எங்களுக்கு மிகவும் தேவையாக இருந்தது. எனவே, பணி முடிந்தபிறகும் அலுவலகத்திலேயே இருந்தோம். 11 மணிக்கு பன்னீர் உள்ளிட்ட தோழர்களுடன் கேரளா கடையில் டீ குடிக்கவும் அந்தந்த வேளைச் சாப்பாட்டுக்காகவும் மட்டுமே வெளியே வந்தோம். குப்புசாமி கடை, அவரது தம்பி பாலனின் வெண்ணிலா மெஸ் அல்லது நஞ்சன் கடை என்று ஏதாவது ஒன்றில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஓடிப்போய் கம்பளிக்கு அடியில் பதுங்கிக்கொள்வோம். உறைக்கிறமாதிரி வெயில் அடிக்கும் நேரங்களில் இறங்கிப்போய் நாங்கள் உரையாடும் அளவுக்கு,  லாண்டரி வெங்கடேஷ் அதற்குள் எங்களது நண்பனாகிவிட்டிருந்தான்.

ஓட்டலுக்கும் சரி, ஊரின் அனேக வீடுகளுக்கும் சரி 'தொரபாய்’ கிணற்றில் இருந்துதான் குடிநீர்வரும். வற்றாத நீர்ச் சுரங்கம்போல அது சுரந்துகொண்டே இருந்தது. ஆனால், ஒருபோதும் அது ஏனோ தண்ணீரைப் போன்று நிறமற்றதாக இருக்கவில்லை. மழைக்காலத்தில் பழுப்பு வண்ணத்திலும் மற்ற நாட்களில் பிஸ்தா பச்சை என்பார்களே அதுபோல லேசாகக் கலங்கிய பச்சையாகவும் இருக்கும். இதனால், தண்ணீர் குடிப்பதையே பெரும்பாலும் தவிர்த்துவந்த நான், இங்குதான் இனி இருக்கப்போகிறோம் என்றாகிவிட்ட பிறகு, எதற்கிந்த வீம்பு என்று அசூயையின்றிக் குடிக்க ஆரம்பித்தேன். காலங்காலமாக அதைக் குடித்துவரும் ஊர்ச் சனங்களைவிடவும் நானொன்றும் ஒசத்தியானவனோ விசேஷமானவனோ இல்லை என்று உணர்ந்துகொண்ட அந்த நிமிடத்தில் இருந்துதான்  நான் மனதளவிலும் 'டெங்னிகோட்டாக்காரன்’ ஆனேன்.  

(சொல்வேன்...)

நன்றி: http://en.vikatan.com/

1 கருத்து:

  1. //'வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா... வெயிலுக்குக் காட்டாம வளத்தாங்களா'// சார், இது ஏற்கனவே வெள்ளையா உள்ளவர்களுக்காகப் பாடியது.. நமக்கு சரிபட்டுவராது.
    இன்னொரு எம்.ஜி.ஆர் பாட்டு வேற... ஹஹஹ

    பதிலளிநீக்கு