காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 2

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால்

1869 அக்டோபர் 2 தொடங்கி

1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள்

அதிலும் கவனமாக

1948 ஜனவரி 30 மாலை 4.59 மணி வரைக்குமாக  மட்டும் பேசுங்கள்.

4.59 மணியைத் தாண்டுகிறவர்கள்

காந்தியின் சாவைப் பேசுகிறவர்களாகிவிடுவீர்கள்

அதாவது காந்தியைப் பேசத் தொடங்கும் நீங்கள்

கோட்ஸேவைப் பேசுகிறவர்களாகிவிடுவீர்கள்

நீங்கள் கோட்ஸேவுடனும் நின்றுவிடப் போவதில்லை

அவனது துப்பாக்கியை

துப்பாக்கியேந்தத் தூண்டியவரைப் பற்றியெல்லாம்

விலாவாரியாக பேசுகிறவராகிவிடும் நீங்கள்

ஒருகட்டத்தில்

சாவுக்கும் கொலைக்குமான வேறுபாட்டை விளக்கப் பார்ப்பீர்கள்

காந்தியின் ரத்தமும் உயிரும்

ஒரு துப்பாக்கிக்கு எவ்வகையிலும் தேவைப்படாதவை

எனில்

உண்மையில் கொன்றது தோட்டா அல்ல என்பீர்கள்

இது ஒருவகையில்

முடிக்கப்பட்ட கொலைவழக்கிற்கு மறுவிசாரணை கோருவதுதான்

 

பிறந்தநாளுக்காக மாலையணிவிப்போர் வரிசையில்

முன்னேறிக்கொண்டிருக்கிறான் கோட்ஸே

ஹே ராம் என்பார் காந்தி

இம்முறை அவன்

ஜெய் ஸ்ரீராம் எனத் திருத்திச் சொல்லும்படி சுடும்போது

நேரம் சரியாக ஐந்துமணியாகியிருக்கும்

நீங்கள் ஏன் உங்களது உரையை

1948 ஜனவரி 30 மாலை 4.59 மணியுடன் முடிக்கக்கூடாது?

 

செவ்வாய், அக்டோபர் 25

எது நடந்ததோ அது எப்படி நன்றாகவே நடந்திருக்கமுடியும்? -ஆதவன் தீட்சண்யா

மருத்துவர் நா.ஜெயராமன் எழுதிய காந்தியின் பகவத் கீதை  
நூலுக்கான  முன்னுரை

வேதங்களில் இல்லாததோ சொல்லாததோ எதுவுமேயில்லை என்றொரு கோஷ்டி விளம்பித் திரியும். அப்படியா, என்னென்ன என்றொரு பட்டியல் கொடுங்களேன் என்றால் அது இது வந்து என்று இழுத்தார்கள். அப்பேர்ப்பட்ட வேத ஸ்லோகங்களை எங்களுக்கும் சொல்லுங்களேன்  புரிந்துகொள்கிறோம் என்றால் அபச்சாரம் அபச்சாரம், உங்களுக்கெல்லாம் சொன்னால் சொன்ன நாக்கு அழுகிரும் கேட்ட காது அவிஞ்சிரும் என்று சாபமிட்டார்கள். சரி, நாங்களே படித்துப் பார்த்து தெரிந்துகொள்கிறோம் புத்தகமிருந்தால் கொடுங்களேன் என்று கேட்டால் அது அசரீரியாக சொல்லப்பட்டது… சொல்லப்பட்டதை கேட்டு எங்களுக்குள் சொல்லிக் கொள்வோமே தவிர அச்சடிக்கும் பாபத்தை செய்யமாட்டோம் என்றார்கள். பிறகு ஒருவழியாக அதெல்லாம் புத்தகமாக வந்து பலரும் படித்து “இவ்வளவுகாலமும் உயர்வுநவிற்சியாய் ஏற்றிச்சொன்ன அளவுக்கு அதில் பெரிய தத்துவமோ வழிகாட்டுதலோ இல்லை; தங்களது தீவனமான கால்நடைகளுக்குத் தீவனம் தேடி பல்வேறு நிலப்பரப்புகளையும் தட்பவெப்ப நிலைகளையும் கடந்து  இந்தியாவுக்குள் வந்த ஆரியர்களின் வழிநடைப்பாடல்கள், சடங்குகள், மந்திரங்கள் தவிர அந்த வேதங்களில் வியந்து போற்றுமளவுக்கு ஒரு வெங்காயச் சருகுமில்லை” என்று அம்பலப்படுத்திவிட்டார்கள். ஆனாலும் இந்த ஆஹா ஓஹோ ஆலாபனை ஓய்ந்தபாடில்லை. 

வேதங்கள் பற்றி உலவவிடப்பட்ட கற்பிதங்களுக்கு சற்றும் குறையாதவை பகவத் கீதை பற்றிய கட்டுக்கதைகள். கீதை வழிகாட்டுகிறது, ஒளி கூட்டுகிறது, வாழ்வின் சாரத்தை விளக்குகிறது என்றெல்லாம் ஓயாமல் நம்மிடம் சொல்லப்பட்டு வருகிறது. போர்க்களமேகிய ஒருவனுக்கு சொல்லப்பட்ட போதனைகளின் தொகுப்பு என்று பார்த்தாலும்கூட அது ஒரு சத்திரியனுக்குச் சொல்லப்பட்டது தான். சொன்னவனான கிருஷ்ணன் பிராமண வர்ணத்தவனோ சத்திரிய வர்ணத்தவனோ அல்ல. வேளாண்மையோ வியாபாரமோ செய்பவனல்ல என்பதால் அவன் வைசியனாக இருக்கவும் வாய்ப்பில்லை. கால்நடை வளர்ப்பு, பால்பொருள் விற்பனை என்கிற வேளாண் காலத்திற்கு முந்தைய மேய்ச்சல் நாகரீகக்கட்டத்தில் தோன்றி – ஆனால் வேளாண் காலத்திற்குப் பிறகும் நீடிக்கிற-  உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடக்கூடிய குடும்ப/ குல வரலாற்றைக் கொண்டு பார்த்தால் தர்க்கப்படி அவன் சூத்திரனாக இருக்கவே வாய்ப்பதிகம். எனில் அவனெப்படி அர்ச்சுனன் வீட்டில் சம்பந்தம் கலந்தான் என்கிற கிளைக்கேள்வியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், சத்திரியனல்லாத கிருஷ்ணனால்  சத்திரியனான அர்ச்சுனனுக்கு புத்திமதி சொல்லமுடியுமா என்கிற கேள்வி எழுகிறது. குறிப்பிட்டதொரு சூழலில் அவனது வர்ணதர்மத்துக்கேற்ப சொல்லப்பட்ட போதனைகள் என்றே சமாதானம் சொல்லிக்கொண்டாலும், வர்ணங்கடந்து காலங்கடந்து எப்படி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வழிகாட்ட முடியும் என்கிற கேள்வியும் ஒருபுறமிருக்க, பகவத் கீதையைப் பாடமாக்க வேண்டும், அதை இந்தியாவின் புனிதநூலாக அறிவிக்கவேண்டும் என்கிற பெருங்கூச்சலை எழுப்புகிறவர்கள் யாரெனக் கண்டால் அவர்களில் பலரும் பார்ப்பனர்களாயுள்ளனர். உலகத்திற்கே புத்தி புகட்டி பரிபாலிக்கும் பூதேவர்கள் என்று தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் பார்ப்பனர்கள், ஒரு சூத்திரனால் சத்திரியனுக்கு சொல்லப்பட்ட போதனைகளிலிருந்து அப்படி என்னத்தைக் கண்டார்கள், அதை ஏற்குமளவுக்கு அவர்கள் தத்துவ வறுமையில் உழன்றிருந்தார்களா, எதற்கதை பாதுகாக்கத் துடிக்கிறார்கள் என்று ஆராயப்புகுந்தால், பகவான் கிருஷ்ணனின் வாய்வழியே சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் மகாபாரதக் கதைக்குள் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பார்ப்பனீயச் சரக்குகளே என்பதை கண்டறிய முடியும். 

கீதை திரும்பத்திரும்ப மக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டால் அதில் முன்னிறுத்தப்படும் மதிப்பீடுகளும் உலகியல் கண்ணோட்டமும் அவர்களது அகவுலகத்திலும் நடத்தையிலும் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புராணங்களும் இதிகாசங்களும் இன்னபிற மதநூல்களும் கூட சமூகத்தில் தொடர்ந்து புழக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுவதும் இதற்காகவே தான். இவற்றின் வழியே சொல்லப்படும் தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தனிமனிதரோ சமூகக்குழுவோ அவற்றை உள்ளூர்த்தன்மையுடனும் சொந்தத் தேவைகளை அனுசரித்தும் மறுவுருவாக்கம் செய்து மீண்டும் புழக்கத்திற்கு விடுகின்றனர். இதனால்தான் புராண இதிகாசப் பாத்திரங்கள் பலவும் மக்களுக்கும் அந்தந்த வட்டாரத்திற்கும் நெருக்கமானவவையாக உணரப்படுகின்றன. பரவலாக புழக்கத்தில் உள்ள ஒரு கதையின் சூழமைவையும் கதைமாந்தர்களையும் தங்களிடம் உள்ள கதைக்குள் பொருத்துவது அல்லது அவற்றை வைத்துக் கொண்டு புதிய கதைகளைப் புனைவது என்பதில் மக்கள் எப்போதுமே முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்கள். இப்படி பல மகாபாரதக் கதைகளை உருவாக்கி புழக்கத்தில் விட்டிருக்கும் வெகுமக்கள் கீதை பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அதை அவர்கள் மேட்டுக்குடிகளின் ஞானத்தேடல் பசப்புக்கானது என ஒதுக்கிவிட்டார்கள்.  

வெகுமக்களுக்கு மகாபாரதக் கதைதான் தெரியுமேயன்றி இடையில் நுழைக்கப்பட்ட இந்த கீதை தெரியாது. ஒருவேளை கீதையை தேவைப்படாதது எனவும் அவர்கள் கருதியிருக்கக்கூடும். ஆனால் பார்ப்பனீயர்களுக்கு மகாபாரதக் கதையை விடவும் கீதை தான் உசத்தி.  ஏனென்றால் கீதை தான் பார்ப்பனீய உலகியல் கண்ணோட்டத்தை சமூகத்தின் மீது திணித்திட உகந்தது எனக் கருதுகிறார்கள். பார்ப்பனீயர்கள் விதந்தோதுவதனாலேயே அவர்களது கருத்தியல் அடிமைகளும் பகவத்கீதையை பலவாறாக உயர்த்திப் பேசுகிறார்கள். பழ.கருப்பையா இப்படியானவர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக்கொண்டு பேசிய ஓர் உரையில் காந்தியின் வாழ்வை கீதையில் சொல்லப்படும் யோகங்கள் தான் நெறிப்படுத்தின என்று குறிப்பிட்டுள்ளார். கீதையைப் படித்து மகாத்மா ஆகிவிட முடியுமென்றால் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் நிலையில் ஏன் காந்திக்குப் பிறகு ஒரு மகாத்மாவைக் கூட இந்த நாடு கண்டடையவில்லை என்கிற கேள்வி இவ்விடத்தில் எழுவது இயல்புதான். ஆனால் அதையும் கடந்து, கீதையின் எந்த யோகம் காந்தியை ஈர்த்து, பின்பற்றச் செய்து அவரை விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பொறுப்புக்கும் மகாத்மா நிலைக்கும் இட்டுச் சென்றிருக்கும் என்கிற கேள்வியை எழுப்பி, கீதைக்குள் அப்படியெந்த யோகமும் இல்லை என்கிற உண்மையைப் போட்டுடைக்கிறது மருத்துவர் நா.ஜெயராமனின் "காந்தியின் பகவத் கீதை" நூல். 

பகவத் கீதையும் காந்தியின் வாழ்வும் இந்நூலில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  கீதை உருவான காலம், தேவை, அதன் கருத்தியல், சமூக இருப்பு பற்றி அறிந்திட தமிழில் கீதை தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களிலான நூல்களைப் படித்து தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார் நூலாசிரியர். பகவத் கீதையில் முன்வைக்கப்படும் யோகங்கள் யாவை என்பதை நிரல்படுத்தி இவற்றில் எந்த யோகமும் காந்தியை ஈர்த்து வழிநடத்தியிருக்க வாய்ப்பே இல்லை என்பதை நிறுவுகிறார். இதற்காக காந்தியின் வாழ்க்கை  மற்றும் அவரது கருத்துலகம் சார்ந்து எழுதப்பட்டுள்ள முக்கிய நூல்களையும்  படித்து அவற்றிலிருந்து தனக்கான ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். 

அர்ச்சுனன் போர்க்களத்தில் நிற்கிறான். காந்தியும் விடுதலைப்போராட்டக் களத்தில் நிற்கிறார். இரண்டு களங்களிலும் போரை தொடுப்பவருக்கும் மறிப்பவருக்குமான அடிப்படைகள் வெவ்வேறானவை. ஆகவே அங்கு பேசப்படும் போர்நெறிகளில் ஏதும் இங்கு பொருந்தியதாக காந்தியால் சொல்ல முடியவில்லை. எதிரிகள் தாயாதிகள்தான் என்றாலும் கொல்லத் தயங்காதே என்று அதற்கான நியாயங்களைச் சொல்லும் கீதையிலிருந்து, வாழ்நாளெல்லாம் அஹிம்சையை பின்பற்ற முயன்ற காந்தி எதைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும்? 

விடுதலைப் போராட்டத்தின் தலைமையென அடையாளப்பட்ட அவரது வழிகாட்டுதலுக்கு நேரெதிர் மனநிலையில் நாடு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக வீறுகொண்டெழுந்து போராடிக் கொண்டிருந்தது. ஆயுதமேந்துதல் உள்ளிட்ட வழிகளில் போராடிக் கொண்டிருந்த அம்மக்களின் நடுவே காந்தியோ தனித்தொதுங்கி காலத்துடன் இழையாமல் அஹிம்சையைப் பேசிக்கொண்டிருந்தார். அவ்வகையில் பார்த்தால் காந்தியின் அஹிம்சை எனும் தனிப்பட்ட பிடிவாதம் வெகுமக்களுக்கு விரோதமான ஹிம்சையாக இருந்தது என்பதற்கான உதாரணங்கள் பல இந்நூலிலுண்டு. 

பகவத் கீதை என்கிற பெயரைக்கூட அறிந்திராத மக்கள் எதிரியை வீழ்த்த சமரசமற்று போராடிக் கொண்டிருந்த வேளையில், பகவத் கீதையை பழுதற கற்றறிந்த காந்தியோ பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்று பஜனிசைத்துக்கொண்டிருந்தார். இப்படி, தன்சொந்த வாழ்க்கையிலும் கூட பயன்படுத்த முடியாத பகவத் கீதையை காந்தி கடைசிவரை சுமந்து திரிந்ததையும் அதை நமக்கும் பரிந்துரைத்த அவலத்தையும் விரிவாக சுட்டிக்காட்டும் இந்நூல் இனியாவது பழ.கருப்பையாக்கள் பகவத் கீதை / காந்தியைப் பற்றி கவனமாக பேசும்படி வலியுறுத்துகிறது. 

கீதாசாரம் என்கிற ஸ்டிக்கரை நம் கண்ணின் கருவிழி மீது கூட ஒட்டிவைத்து அதன்படிதான் உலகமே சுழல்கிறது என்பதான மாயையை உருவாக்கும் முயற்சி நடைபெற்றுவரும் இக்காலத்தில், அதன் ஒருவரி கூட கீதையில் இல்லை என்றும், ஆளாளுக்கு இஷ்டப்படி பிழிந்தெடுத்து விளாவி விநியோகித்துக் கொண்டிருக்கும் அந்த கீதாசாரத்தில்  ஒரு சாரமும் இல்லை, அதன் ஒருவரி கூட வாழ்வில் பின்பற்றத்தக்கதல்ல என்றும் ஜெயராமன் செய்யும் கேலி ரசிக்கத்தக்கது.    

தனது மருத்துவத் தொழிலுக்கிடையில் நடப்புலகத்தை உன்னிப்பாக கவனித்துவரும் தோழர் ஜெயராமன், பேருழைப்பைச் செலுத்தி கீதையின் மகத்துவமென பூசி மெழுகப்பட்டுள்ள மாயையைகளை இந்நூல் வழியே கலைத்துப் போட்டுள்ளார்.  எப்போதும் போல் எளியதொரு சொல் அல்லது காட்சியிலிருந்து எழுதுவதற்கான பொறியைப் பெறும் அவர் எழுதத் தேர்ந்திடும் பொருள் குறித்த படிப்பினாலும் ஆய்வுகளினாலும் கருத்துலகை வளப்படுத்தும் நூலாக இதையும் எழுதியுள்ளார். 


வியாழன், மார்ச் 15

ஆறு கோடி தீண்டாதார் ( தாழ்த்தப்பட்டோர் விடுதலை) - தோழர். பி.டி.ரணதிவே


கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ அங்கத்தினர் தோழர். பி.டி.ரணதிவே எழுதியது. மொழி பெயர்த்தவர் ஸி.எஸ்.சுப்ரமண்யம். சென்னை ‘ஜனசக்தி’ பிரஸில் பி.ராமமூர்த்தியால் அச்சிடப்பட்டு ஜனசக்தி பிரசுராலயத்தாரால் (1-6, டேவிட்ஸன் வீதி) 1945 பிப்ரவரியில் பிரசுரிக்கப்பட்டது. விலை:அணா.2 
இந்தச் சிறு வெளியீடு தாழ்த்தப்பட்டவர் நிலைமையைப் பற்றியது. 6கோடி மக்கள் பொருளாதாரத்துறையில் அடிமைப்பட்டு, தங்களிஷ்டப்படி வேலை செய்து வயிற்றை வளர்க்க வசதியற்றிருக்கின்றனர். அவர்கள் சமூக அந்தஸ்தும் தாழ்த்தப்பட்ட அந்தஸ்து. சுதந்திர ஒளி எல்லா பகுதிகளின் மீது வீசும் சமயத்தில், அவர்களுடைய சுதந்திர உணர்ச்சியும் வளர்ந்து வருகின்றது. தமிழ்நாட்டில் இப்பிரச்னை விசேஷ முக்யத்வம் வாய்ந்த பிரச்னை. காந்திஜி தீண்டாமை ஒழிப்பு வேலையில் தென்னாட்டுக்குத் தனிப்பங்கை வற்புறுத்தி இருக்கின்றார். இதனால் தமிழ்நாட்டில் வேலைசெய்யும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இப்பிரச்னையை நன்கு உணர்ந்தாக வேண்டும். இதுவிஷயமாக திட்டவட்டமான ஒரு அரசியல் கொள்கை அவசியம். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் கூறுவது இதுதான். இவ்விஷயத்தில் முற்போக்கான தேசீய கட்சிகள் ஒரு அரசியல் கொள்கையை, நியாயமான முறையில் வகுக்க வேண்டும். தீண்டாமைக்குப் பொருளாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள அஸ்திவாரத்தை  உணர வேண்டும் என்று விரும்புகின்றோம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்த வெளியீட்டில் எங்களுடைய அபிப்ராயத்தை உணருவதற்கு முடியும். அவர்களுடைய விடுதலைக்கு வழியென்ன என்பதை அவர்கள் சரிவரத் திட்டமிட்டு, தேசீய சுதந்திர அணியில் அவர்களும் வந்து அதை பலப்படுத்துவதற்கு உடனே முனையவேண்டும். சென்னை, பிப்ரவரி,1945ஸி.எஸ்.சுப்ரமணியம்

காலத்தின் தேவை கருதி இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது. 67 ஆண்டுகளுக்கு முந்தைய இப்பிரசுரத்தை தேடியெடுத்த முனைவர்.கோ.ரகுபதி, அதன் ஒளியச்சுப்பிரதியை தந்துதவிய தோழர். ஆல்பர்ட் ஆகியோரை புதுவிசை நினைவிற்கொள்கிறது.

தீண்டாமை நம்முடைய சமூகத்தின் தீமை. அதீதமான தீமை. மிகக்கொடிய தீமை. அதன் கொடுமையை எடுத்துரைக்க வார்த்தைகள் போதாது. மகாத்மா காந்தி அதைக் கண்டித்து எழுதியுள்ள வாக்கியங்களை விட வன்மையாக வேறொன்றும் கூறுவதற்கில்லை.

“பறையன்” என்று கூறி அவர்களை நாம் ஒதுக்கிவைத்து விட்டோம். இந்த தீவினையின் பயனை நாம் அனுபவிக்கின்றோம். நாம் விதைத்த வித்தின் விளைச்சலை நாம் காண்கிறோம். பிரிட்டீஷ் காலனிகளில் நம்முடைய நாடே தாழ்த்தப் பட்டு, ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது. பஞ்சாப் படுகொலையில் பெயரெடுத்த ஜெனரல் டையர், ஓட்வையர் கையாண்ட கொள்கையையே நம்முடைய சுற்றத்தாரிடம் நாம் கையாள்கிறோமல்லவா? தீண்டாதவர்கள் கிணறுகளை உபயோகிக்கக் கூடாது என்கிறோம். நாம் உண்டு மிஞ்சிய மிச்சத்தை அவனுக்குத் தருகின்றோம். அவன் நிழல் பட்டால் பாபம் என்று கூக்குரலிடுகின்றோம். இங்கிலீஷ்காரனைப் பார்த்து நாம் சாற்றக்கூடிய குற்றங்களை நம்மீது பறையர்கள் சாற்றமுடியும்” என்று உள்ளங்கொதித்து எழுதினார் காந்திஜி. (யங் இந்தியா, 15.1.1921)

தீண்டாமை என்ற அநீதியை தேசீய இயக்கம் ஒதுக்கி வைக்க முடியாது. ஹிந்து சமூகம் தீண்டாதவர்மீது சுமத்தியுயள்ள இந்த ஈனமான அந்தஸ்தை எதிர்த்து தேசிய இயக்கம் வெகுநாட்களுக்கு முன்னரே போரிடத் தொடங்கியது. முதலாளிகளால் சுரண்டப்பட்டு வரும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னரே, நிலச்சொந்தக்காரனிடம் வயிற்றை ஒடுக்கி வாரங்கட்டி வரும் குடியானவர்கள் பிரச்சினைகளுக்காகப் போராட ஆரம்பித்ததற்கு முன்பே, தீண்டாதவர் பிரச்சினையை தேசிய இயக்கம் எடுத்துக் கொண்டது.

காங்கிரசும் – தீண்டாமையும்

1920ம் வருடம் நடந்த ஒத்துழையாமை இயக்கம் இந்தியாவிலுள்ள பொதுமக்களால் நடத்தப்பட்ட முதல் சுதந்திர இயக்கம். இந்தப் போராட்டத்தின் திட்டங்களில் முக்கியமான திட்டம், தீண்டாமை ஒழித்தல். தீண்டாமையை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் இணைத்து வைத்த கௌரவம் காந்திஜியுடையது. ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராகிய அவர் இவ்விரண்டு விஷயங்களுக்குமுள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். தேசத்தின் அரசியலில் தீண்டாமைப் பிரச்சினையை முக்கியமான பிரச்சினையாக எடுத்துவைத்தவர் காந்திஜி. நாகபுரியில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டின் வருடாந்திரக் கூட்டம் பிரசித்தி பெற்ற கூட்டம். அக்கூட்டத்தில்தான் தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதாக முடிவு செய்தது. அதே மகாநாடுதான் காந்திஜியின் முயற்சியால், “தீண்டாமை மிகப்பெரிய பாபம்” என்றும் முடிவு கூறி பிரகடனமும் செய்தது.

காந்திஜி சலியாதபடி தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். அவரது இடைவிடாப் பிரசாரம் கோடிக்கணக்கான இந்தியர் மனதில் ஆழப்பதிந்தது. தீண்டாதவர்களில் சொல்லொணாத் துயர்களையும், அத்யாவசிய கோரிக்கைகளையும், இந்தியர் உணர ஆரம்பித்தனர். “தீண்டாமையை ஒழிக்காதவரையில் சுதந்திரம் வேண்டுமென்று கோருவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் நமக்குக் கிடையாது” என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாதவகையில் காந்திஜி கூறினார்.

சுதந்திரத்திற்கென்று திரட்டப்படும் மாபெரும் பொதுஜன அணிவகுப்பில் மகத்தான ஒற்றுமையைக்காட்டும் முதல்முயற்சி 1920ல் நடந்தது. அதுதான் கிலாபத் கோரிக்கையையும், தீண்டாதவர்கள் கோரிக்கைகளையும் காந்திஜியும் காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. சுதந்திரத்திற்கென்று போராடும் வீரர்களிடம் சம உரிமைகளை ஏற்றுக்கொண்ட ஒரு தேசிய ஐக்கியத்தைச் சிருஷ்டிக்கும் முயற்சி அது. சகலவிதமான சந்தேகங்களைத் தீர்த்து, சமூகத்திலுள்ள அக்ரமங்களையும் அநீதிகளையும் களைந்தெறிவதற்காகச் செய்யப்பட்ட முயற்சி அது.

தேசமெங்கும் பரந்தவகையில் மலர்ந்த 1920ம் வருடப் போராட்டத்தில் தீண்டாமையை ஒழிப்பது சுதந்திர இயக்கத்தின் பகுதி என்பதை நம் நாட்டவர் உணர்ந்தனர். 10 வருஷங்களுக்குப் பின்னர் கராச்சி காங்கிரஸ் கூடிற்று. பிரஜா உரிமைச்சாஸனம் ஒன்றைத் தொகுத்தது. சுதந்திர இந்தியாவில் எல்லா பிரஜைகளுக்கும் சம அந்தஸ்து உண்டென்று கூறிற்று. கிணறுகள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள் போன்ற பொதுவான இடங்கள் எல்லோருக்கும் தங்குதடையின்றி திறந்துவைக்கப்படும் என்று பிரகடனப்படுத்திற்று. இப்படி இந்த விஷயத்தைக் குறிப்பாக எடுத்துக்கூறுவானேன்? தீண்டாதவர்களுக்கு சுதந்திர இந்தியாவில் எவ்விதத் தடைகளும் இருக்காது என்று வாக்குறுதியளிப்பதற்காகவே தேசிய இயக்கம் தீண்டாதவர்களைப் பார்த்து அளிக்கும் உறுதிமொழி என்பது தெளிவு.

சீர்திருத்தப் போக்கு

காங்கிரஸ் இவ்வாறு பிரகடனம் செய்திருந்தபோதிலும் சுதந்திர இயக்கத்தில் தீண்டாதவர்களைத் திரட்டமுடியவில்லை. ஏன்? இந்தப் பிரச்சினையை அரசியல் சம்பந்தமற்ற ஒரு பிரச்சினை என்ற கண்ணோட்டத்துடன்தான் பார்த்தனர். இது சரியான கண்ணோட்டமல்ல.  

ஹிந்து சமூகத்திற்குள்ளேயுள்ள ஒரு பிரச்சினையாகக் கண்டனர். சமூக சீர்திருத்தத்தில் இதை ஒருபகுதியென்று நினைத்துக் கொண்டிருந்தனர்.  குருட்டு நம்பிக்கையினால் ஏற்பட்ட ஒரு குருட்டுப் பழக்கவழக்கம் தீண்டாமை. இந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்று பிரசாரம் செய்துவிட்டால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் கேடு ஒழிந்துவிடுமென்று காங்கிரஸ் நினைத்தது.

இந்தக் கண்ணோட்டத்துடன் காங்கிரஸ் திட்டமிட்டது. அதனால் காங்கிரஸ் வகுத்த திட்டம் வெகுசீக்கிரத்தில் ஒரு சமூக சீர்திருத்த சேவையாக, மனிதாபிமானத்தால் உந்தப்பட்ட ஜனசமூக சேவையாகிவிட்டது. தீண்டாதவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள், கல்வி வசதி, ஆலயத்திறப்பு முதலிய சில சீர்திருத்த அம்சங்களைக் கொண்ட இயக்கமாகிவிட்டது. தீண்டாமையை ஒழிக்கும் இயக்கம் ஹரிஜனசேவா சங்கத்தின் திட்டமாக மாறிவிட்டது. காங்கிரஸின் சுதந்திரப்போராட்டத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லாமற் போய்விட்டது. இந்திய மகாஜனங்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் போராட்டத்துக்கும் போராட்டத் திட்டத்திற்கும் சம்பந்தமற்றுப் போய்விட்டது. தீண்டாதவர்களுடைய விசேஷ கோரிக்கைகளோ, அவர்களுடைய அரசியல் கோரிக்கைகளோ, காங்கிரஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகவில்லை.

உருப்படியான நடவடிக்கை தேவை

தீண்டாதவர் பிரச்சினை என்பது ஏதோ சில ஆலயங்களில் அவர்களை அனுமதிப்பதுடன் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் தவறு. சில பொது ஸ்தலங்களில் அவர்களையும் அனுமதித்துவிட்டால் இந்தத் தீமை ஒழிந்துவிடும் என்பதும் தவறு. மத சம்பந்தமாக ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை ஒழிப்பதனால் மட்டும் தீண்டாமையை ஒழிக்கமுடியாது என்ற உணர்ச்சி அப்பொழுது இல்லை.

சமூகத்தில் பல தலைமுறைகளாக தாழ்த்தப்பட்டு சுரண்டப்பட்டு, அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்தவர்களின் நலன்களுக்காகப் போராடும் விஷயம் அது. வாழ்க்கை வசதிகள் பிடுங்கப்பட்டு, பல்லாண்டுகளாக பொருளாதார அடிமைகளாகவே அவர்கள் வாழவேண்டி நேர்ந்தது. கிராம வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட்டு, ஊருக்கு வெளியே குடிசைகளிலும் சேரிகளிலும் அவர்கள் வாழும்படி நேர்ந்தது. அவர்களுடைய அந்தஸ்து தாழ்த்தப்பட்ட அந்தஸ்து. கிராமப் பண்ணை அடிமைகளாக வாழ்வதைத் தவிர வேறுவழியில் அவர்கள் ஜீவிப்பதற்கு இடமில்லை.

தீண்டாதவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குச் சொந்தமான நிலம் கிடையாது. இதனால் தீண்டாதார் பிறர் தயவில் வாழவேண்டிவந்தது. தீண்டாதவர் என்ற அடிமைச்சங்கிலி உறுதியாயிற்று. ஊருக்கு வெளியே சேரியிலே காலங்கழித்து வந்தனர். வியாபாரத்தில் இறங்கமுடியாது. தனிப்பட்ட ஜீவனோபாயம் ஒன்றுக்கும் வழியே கிடையாது. அவர்களது ஏழ்மைத்தனம், படித்து உத்யோகங்களைத் தேடமுடியாமற் செய்துவிட்டது. வியாபாரம் செய்யவோ, வேறு தொழில்களைச் செய்யவோ சக்தியற்றவர்களாகிவிட்டனர். புராதன ஹிந்து சமூகப் பழக்கவழக்கம் அவர்கள் மீது பூட்டிய அடிமைத்தளைகள் நாலாபக்கங்களிலும் அவர்களைத் தடுத்துக் கொண்டு நின்றன. இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான விசேஷ முயற்சி செய்யப்படாவிட்டால் தீண்டாதவர்களின் அந்தஸ்து மாறமுடியாது.

இத்தகைய போராட்டத்தை நடத்த வேண்டியது தேசிய இயக்கத்தின் பொறுப்பு. ஹிந்து சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு நிற்கும் நிலைமையை மாற்றியமைக்கும் படியான விசேஷ உரிமைகளையும் சட்டங்களையும் கோருவது தேசிய இயக்கத்தின் பொறுப்பு. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் கல்வி, உத்யோகங்கள், சமூக நிர்வாகம் ஒவ்வொன்றிலும் அவர்களுக்கு சமத்துவம் ஏற்படுத்தி, அவர்களுடைய சம அந்தஸ்தை உறுதியாக்கும் சட்டதிட்டங்களை ஏற்படுத்தவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதே முக்கியமான பிரச்சினை.

சமமான சமூக அந்தஸ்தை தீண்டாதவர்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? படிப்பதற்கு விசேஷ வசதிகள் ஏற்படுத்தவேண்டும். உத்யோகங்களிலும் நிர்வாகத்திலும் அவர்களுக்குப் பங்களிக்க விசேஷ கவனம் செலுத்த வேண்டும். நில பாத்யதையில் அவர்களுக்கில்லாத உரிமைகளை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். சுருங்கச்சொன்னால் ஜீவனோபாயத்திற்கான வசதியை – பிறர் தயவை எதிர்பார்க்காமல், வாழ்க்கை நடத்துவதற்கான தனிவசதியை - அளிக்க தனி ஏற்பாடுகள் செய்யவேண்டும். தீண்டப்படுவோரை எதிர்நோக்கி வாழ்க்கை நடத்தும் அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும். அவர்களுடன் சம அந்தஸ்தை அளிக்க வேண்டும். தீண்டாதவர்களுக்கென்று ஒரு அரசியல் பொருளாதார உரிமைச் சாஸனம் வகுக்கப்படவேண்டும்.

இப்பேர்ப்பட்ட சாஸனம்தான் 6 கோடி தீண்டாதவர்களையும் தேசிய இயக்கத்தோடு ஐக்கியப்படுத்தும். அவர்களை தேசிய இயக்கத்தின் சுதந்திர அணிக்குள் சேர்த்து வைத்திருக்கும்.

துரதிருஷ்டமாக காங்கிரஸிலுள்ள போக்கு அத்தகைய விஷேச உரிமைகளைக் கோரும் போக்கல்ல. சர்க்காரிடம் தேசீய கோரிக்கை போட்டபொழுதெல்லாம், தீண்டாதவர்களுடைய உரிமைகள் குறிப்பிடப்படவில்லை. ஹிந்து சமூகத்திற்குள்ளேயுள்ள பிரச்சினை என்று கருதிக்கொண்டு காங்கிரஸ் அந்த கோரிக்கைகளைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டது. தீண்டாதவர் வகுப்பிலுள்ள பாமரர்களின் நம்பிக்கையைப் பெறவில்லை தங்களுக்கு விசேஷ சலுகைகள் வேண்டுமென்று யாராவது கேட்டால் அது பிற்போக்கான கோரிக்கையெனக் கருதப்பட்டது. அதனால் அத்தகைய கோரிக்கைகள் எதிர்க்கப்பட்டன.

1935ம் வருஷத்து காங்கிரஸ் லட்சக்கணக்கான தீண்டாதவர்களைத் தட்டி எழுப்ப முடியவில்லை. தேசிய இயக்கம் ஆரம்பித்த போராட்டங்களில் அவர்கள் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் மந்திரிசபைகள் அவர்களுடைய உரிமைகளைக் கவனிக்கவில்லை. தீண்டாதவர் சம அந்தஸ்தை அனுபவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவில்லை. ஹோட்டல்களுக்குய் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகூட பரிபூர்ணமாக நிறைவேறவில்லை. ‘தீண்டாதவர் நுழையக்கூடாது’ என்று போடப்பட்டிருந்த நோட்டீஸை ஹோட்டல்காரர்கள் எடுத்துவிடும்படி செய்தார்கள். காங்கிரஸூம், மந்திரிசபைகளும், இந்த உரிமையை நடைமுறையில் அவர்கள் அனுபவிப்பதற்கான நிர்பந்தத்தை பொதுஜனக் கிளர்ச்சி மூலமோ, சட்டவிதிகள் மூலமோ ஏற்படுத்துவதற்கு ஒன்றும் செய்யவில்லை. இன்னும் பல கஷ்டங்கள் அவர்களுக்கு உண்டு. இவற்றைப் போக்க காங்கிரஸ் மந்திரிசபைகள் ஒன்றும் செய்யாததனால் தீண்டாதவர்களுடைய மனக்கசப்பு அதிகரித்தது.

தீண்டாதவர்களுடைய இயக்கம் தேசிய இயக்கத்தின் வெள்ளப்பெருக்கில் சம்பந்தப்படாமல் தனியாகப் போய் விட்டது. அதனால் இன்றைக்கு அந்த இயக்கம் எங்கு போய் நிற்கின்றது என்பதைப் பார்ப்போம்.

தாழ்த்தப்பட்டவர் சம்மேளனம்

சென்னையில் 29-9-44ல் நடந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக்கமிட்டி நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதைக் கவனித்தால் நம்நாட்டின் முக்கியபகுதியான இந்த வகுப்பினருடைய அரசியல் நமக்கு நன்கு விளங்கும்.

சம்மேளனத்தின் தலைவர்கள் தீண்டாதவர்களனைவர்களுடைய ஆதரவும் தங்களுக்குத்தான் என்று கூறுகின்றனர். இது சரியாயிருக்காது. ஆனால் இது முற்றிலும் சரியா இல்லையா என்பதல்ல பிரச்னை. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்துக்கு அவ்வகுப்பினர்களில் பெருவாரியானவர்களுடைய ஆதரவு இருக்கிறது. தீண்டாதவர்களிடையே மலர்ந்த படிப்பாளிகள்தான் தீண்டாதவர்களுடைய தலைவர்கள். அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதையே அவ்வகுப்பினர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த படிப்பாளிகள் அனைவரும் இந்த சம்மேளனத்திலிருக்கின்றனர். ஆதலால் தாழ்த்தப்பட்டவர் சம்மேளனத்தை அவர்களுடைய ஸ்தாபனமாகப் பலப்படுத்துவது தீண்டாதவர்களுடைய கடமை என்பதை மறுக்க முடியாது.

சென்னையில் நடந்த சம்மேளனத்துக்கு ஆறுமாகாணங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். அதில் வங்கத்திலிருந்து மாகாண மந்திரி ஒருவர். அஸ்ஸாமிலிருந்து இன்னொரு மந்திரி. ஆக இரண்டு மந்திரிகள் ஒரு பார்லிமெண்டரி காரியதரிசி. ஒன்பது சட்டசபை அங்கத்தினர்கள். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையான பிரதிநிதிகள், டாக்டர்கள், வக்கில்கள் அல்லது பத்திரிகைத் தொழிலிலிருப்பவர்கள். ஒரே ஒருவர் தான் வர்த்தகர்.

தேசிய காங்கிரஸிலும், முஸ்லீம் லீகிலும் தலைமை வகிக்கும் பகுதியை போன்ற பகுதியே, இச்சம்மேளனத்திலும் தலைமை வகிக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது. எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி தீண்டாதவர்களில் ஒருபகுதி கல்வி கற்றனர். அவர்களுடைய வகுப்பிலிருந்து மலர்ந்த இந்த படிப்பாளிகளில் தங்களுடைய தலைவர்களைக் கண்டுவிட்டனர் தீண்டாதவர்கள். அவர்கள் காட்டும் வழியில் தங்கள் ஸ்தாபனத்தை அமைத்துவிட்டனர். அதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் இருக்கிறார்.

“நாங்கள் அரசாளும் வகுப்பாக வேண்டுமென்று விரும்புகிறோம்” என்று டாக்டர் அம்பேத்கார் கூறினார். 6கோடி தீண்டாதவர்கள் மனதிலுள்ள எண்ணத்தை இந்த வாக்கியத்தின் மூலம் அம்பேத்கார் கூறிவிட்டார். இந்த விருப்பத்தை அநியாயமானதென்று யாரும் கூறமுடியாது. அது தேசியத்துக்கு விரோதமானது என்றும் கூற முடியாது. மற்ற ஜனங்களுடன் தங்களுக்கும் அரசாங்க நிர்வாகத்தில் ஒரு பங்கு உண்டு என்று 6 கோடி எண்ணிக்கையுள்ள ஒரு பகுதி விரும்புவது சர்வசாதாரணமான ஜனநாயகக்கொள்கை. சுதந்திர இந்தியா ஜனநாயக இந்தியாவாக இருக்கவேண்டுமென்றால் அரசாங்கத்தை நடத்துவதில் இந்த 6 கோடி மக்களுக்கும் அவர்களுக்கு உரித்தான பங்கை அளிக்கவேண்டும்.

உரிமைச் சாஸனம்

தீண்டாதவர்களின் லட்சியம் 1942ம் வருஷம் நாகபுரியில் கூடிய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மகாநாட்டுத் தீர்மானத்தில் காணலாம். சமீபத்தில் கூடிய சென்னைக் கூட்டத்தில் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அவர்கள் லட்சியத்தை அடைவதற்கு கீழ்கண்ட முக்கியமான கோரிக்கைகள் தீர்மானத்தில் போடப்பட்டன...

1.நாட்டின் அரசியல் சட்டம் தீண்டாதவர்களைக் கலந்து வகுக்கப்பட வேண்டும்.

2.இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் தீண்டாதவர்கள் ஒரு தனிப்பகுதியாக, விசேஷப்பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

3.அவர்களுடைய எண்ணிக்கைக்குத் தகுந்தபடி, தேவைக்குத் தக்கபடி மத்திய நிர்வாகத்திலும் மாகாண நிர்வாகங்களிலும், சர்க்கார் உத்யோகங்களிலும் அவர்களுக்குப் பங்களிக்கும் சட்டம் வேண்டும்.

4.சர்க்கார் செலவுத்திட்டத்தில் தீண்டாதவர்களின் உயர்தரக் கல்விவசதிக்குப் போதுமான பணம் ஒதுக்கி வைக்கப்படவேண்டும்.

5.சர்க்கார் நிலங்களில் குடிவாழ்வதற்குத் தனி “ஸெட்டில்மெண்டு கமிஷன்” அமைக்கவேண்டும். அந்நிலங்களில் தீண்டாதவர்கள் குடிவாழ்வதற்கென்று ஸெட்டில்மெண்டுகள் ஏற்படுத்த வேண்டும்.

6.ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் சட்டசபைகளுக்கும் தீண்டாதவர்கள் பிரதிநிதிகள் தனித்தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் தேசீய இயக்கத்திற்கோ, ஜனநாயகத்திற்கோ விரோதமானவையா?

தீண்டாதவர்கள், சமூகத்தில் ஒரு விசேஷப்பகுதி என்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அரசியல் சட்டம் அவர்களுடைய அனுமதியுடன் வகுக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை எடுத்துகொள்வோம்.

இந்தக் கோரிக்கை ஏன் போடப்பட்டிருக்கிறது? எப்படி அந்த கோரிக்கை வந்தது என்பதைக் கவனிப்போம். தீண்டாதவர்கள் தாழ்த்தப்பட்ட அடிமைகளாயிருப்பதனால் இந்த கோரிக்கை வந்துள்ளது. காங்கிரஸோ, ஹிந்து சமுதாயமோ அவர்களுடைய விசேஷ உரிமைகளுக்காகப் போராடவில்லை. அரசியல் துறையில் ஹிந்துக்கள் என்ற முறையில் ஹிந்து சமூகம் தீண்டாதவர்களுடைய நலன்களைக் காக்க முடியுமென்று கூறுவதை ஆட்சேபித்துக் கிளம்பியுள்ள கோரிக்கை அது. காங்கிரஸ் அவர்கள் சார்பில் பேசுகிறது என்பதையும் ஆட்சேபிக்கிறது. பிரிட்டிஷ் சர்க்கார் அவர்களைக் கலக்காமல் இதர கட்சிகளுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் தீண்டாதவர்கள் ஹிந்துக்களால் நசுக்கப்படுவார்கள் என்ற பயத்திலிருந்து இந்தக் கோரிக்கை கிளம்பியிருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு விதிகள் வேண்டுமென்ற உணர்ச்சியால் ஏற்படுகின்றது.

பல்லாண்டுகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருக்கப்பட்ட பகுதியை எங்கள் சமூகத்தின் தனிப்பட்ட பகுதியில்லை  என்று மனச்சாட்சியுடையவன் ஒருவனும் கூறுமுடியாது. அரசியல் வாழ்க்கையில் அவர்களுக்கு தனிப்பட்ட ஸ்தானம் இருக்க வேண்டுமென்பதையும் மறுக்கமுடியாது. காங்கிரஸ் அவர்களுடைய கோரிக்கைகளுக்காகத் தீவிரப் போராட்டம் செய்யவில்லை. அதனால் அவர்களுடைய லட்சியங்களைப் போதிய அளவுக்கு தேசிய காங்கிரஸ் பிரதிபலிக்கின்றது என்பதை யாரும் கூறமுடியாது.

சந்தேகங்கள்

காங்கிரஸ்காரர்களுடைய மனதில் தோன்றுவது என்ன? தீண்டாதவர்களின் தலைவர்களுடைய காங்கிரஸ் எதிர்ப்பு மனப்பான்மையைக் கண்டு சந்தேகங் கொள்கின்றனர். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆட்சியை நீடித்துக் கொள்வதற்காக சமஸ்தானாதிபதிகளைத் தட்டிக் கொடுப்பதைப் போல் தீண்டாதவர்களையும் தம்முடைய சுதந்திரத்தை எதிர்க்கும் ரிஸர்வ் பட்டாளமாக உபயோகிக்குமென்று எண்ணுகின்றனர். தீண்டாதவர்களை தனிப்பகுதியாக ஏற்றுக் கொண்டு, அரசியல் சட்டத்தை வகுக்க அவர்களுடைய சம்மதமும் வேண்டுமென்று ஒப்புக்கொண்டுவிட்டால் அவர்கள் எவ்வித முற்போக்கான அரசியல் நடவடிக்கையையும் தடைப்படுத்திவிடுவார்கள். சுதந்திரப்பாதையின் குறுக்கே முட்டுக்கட்டையாக நிற்பார்கள் என்று அபிப்ராயப்படுகின்றனர்.

தீண்டாதவர்களுக்கு அளிக்கப்படும் இச்சலுகையை ஏகாதிபத்தியம் நம்மிடையேயுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக்கொள்ளுமென்று நினைக்கின்றனர். ஏகாதிபத்தியம் காங்கிரஸ் எதிர்ப்பு அணியை உருவாக்கி, ஜனநாயக அரசியல் அமைப்பையே உடைத்துவிடும் என்று எண்ணுகிறார்கள். இப்படி நினைப்பது தேசிய இயக்கத்திலுள்ள ஒரு பலஹீனத்தையே குறிக்கின்றது. எல்லாத்துறைகளிலும் சுதந்திரம் வேண்டுமென்று கோரும் காங்கிரஸ், 6கோடி அடிமைகளைக் கண்டு, அவர்களுடைய விடுதலைக் கோரிக்கையைக் கண்டு சற்றும் தயங்கவேண்டியதில்லை. சமஸ்தானாதிபதிகள் தங்கள் சுயநலச் சுரண்டலைக் காப்பாற்றுவதற்காக நிற்கும் சிறுகும்பல், அடிமைப்பட்டுக் கிடந்த பாமரர்களின் புரட்சி விழிப்பைப் பிரதிபலிக்கும் பகுதி தீண்டாதவர்கள். இந்தப்பகுதியை ஜனநாயக அரசியல் சட்டத்திற்காகவும் சுதந்திரப் போராட்டத்திற்காகவும் திரட்டாமல், ஏகாதிபத்திய பிற்போக்கு லட்சியம் கொண்ட சுயநலமிகளும் அவர்களை உபயோகப்படுத்திக்கொள்ளும்படி விட்டு விட்டால்  அது தேசிய இயக்கத்திற்கே ஒரு அவமானம்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டம் இந்த 6கோடி மக்களின் சம்மதத்தைப் பெற்றாகவேண்டும். தொழிலாளிகள் விவசாயிகளுடைய சம்மதத்தைப் பெற வேண்டியிருப்பதைப் போலவே தீண்டாதவர்களுடைய சம்மதத்தையும் பெற வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கே அதை ஏற்றுக்கொள்வது - அவர்கள் ஒரு விசேஷப்பகுதி என்று ஏற்றுக்கொண்டு ஹிந்து மெஜாரிட்டியால் நசுக்கப் படமாட்டார்கள் என்று உறுதிமொழியை அளிப்பது - சுதந்திரத்திற்காக நடைபெறும் பொதுவான போரணியில் அவர்களையும் அழைத்து இணைத்துக்கொள்வதற்கு அவசியம். நியாயத்தையும் ஜனநாயகத்தையும் முன்னிட்டு அது அவசியமாகின்றது.

இப்படிச் செய்வதன் மூலமே ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி முறியடிக்கப்படும். சுதந்திர இந்தியாவில் தீண்டாமை என்ற தீமை இருக்காது என்ற உணர்ச்சியை தீண்டாதவர்கள்  இவ்வழியிலேதான் உணருவார்கள்.

கல்வித்துறையில் விசேஷ வசதிகளைக் கோருகின்றனர். உத்யோகங்களிலும், சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் போதிய பங்கு வேண்டுமென்று கேட்கின்றனர். இவைகளும் நியாயமான கோரிக்கைகள்தான். அவைகளை ஒரு வகுப்புவாதக் கோரிக்கைகளாகவோ, பிற்போக்கான கோரிக்கைகளாகவோ கருதக் கூடாது.  தற்போதுள்ள சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான கோரிக்கைகள் என்பதை கவனிக்க வேண்டும். உத்யோகங்களை இந்தியர்மயமாக்குவதும், ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபைகளை அமைப்பதும் தம்மைத் தாழ்த்திவரும் தீண்டப்படுவோருக்கே பயனளித்திருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். தீண்டப்படுவோரே பல உத்யோகங்களை வகிக்கின்றனர். சட்டசபை பிரதிநிதிகளும் அவர்களே. அரசியல் அதிகாரமும் அவர்களுடையதே என்று கருதுகின்றனர். அதிகார அமைப்பில் தீண்டாதவர்களுடைய பிரதிநிதிகள் வேண்டும். இதற்கு வேண்டிய யோக்யதையைத் தேடிக்கொள்ளவிசேஷ கல்வி வசதிகள் வேண்டுமென்கிறார்கள். எல்லா மக்களோடும் தாங்களும் சமமாக வாழவேண்டும் என்று விரும்பும் கோரிக்கை அது. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள விசேஷத்தடைகளை ஒழிக்க ஏற்படுத்தும் விசேஷ சலுகைகளின் மூலம் இந்த கோரிக்கையைப் பெறுவதற்கு வழிதேடுகின்றனர்.

நியாயமான கோரிக்கைகள்

தீண்டாமையை ஒழிக்கும் போராட்டத்தில் விசேஷக் கல்வி வசதிகளை ஏற்படுத்துவது ஒரு புரட்சித்தன்மை வாய்ந்த செய்கை. தீண்டப்படுவோரின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றால் தீண்டாதவர்கள் சுயேச்சையாக உத்யோகங்களையோ, தொழில்களையோ தேடிக்கொள்ள வசதி வேண்டும். கிராமங்களில் தீண்டாதவர்களுக்கு நிலம் கிடையாது. வேறு ஜீவியம் கிடையாது. அதனால்தான் கிராமாந்திரங்களில் தீண்டாமை ஒழியவில்லை. கல்வி கற்றால் உத்யோகங்களுக்கு வேண்டிய யோக்யதையை அடைகின்றனர். வேறு தொழில்களை நடத்தும் திறமையைப் பெறமுடியும். இவ்வாறு ஜீவியம் நடத்த வழி திறந்துவிடுகின்றது கல்வி. பிறரை எதிர்நோக்கி, பிறர் தயவில் வாழ்ந்த தீண்டாதவர்கள் சுதந்திரம் பெறுவதற்கு வழியை அளிக்கின்றது. தீண்டாமையின் வேர் பொருளாதாரத்தில். அந்த வேரை அரித்துவிடுகின்றது கல்வி. தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்கள் அடிமைகளாக, பொருளாதார அடிமைகளாக வாழவேண்டியதில்லை. கல்வி வசதியும் உத்யோகங்களும் தனிப்பட்டவர் நிலைமை உயர்த்தும் வழிமட்டுமல்ல, சமூக விடுதலை மார்க்கமாகவும் ஆகின்றன.

தேசிய காங்கிரஸும் அதனுடைய இளம்பருவத்தில் இத்தகைய கோரிக்கைகளைப் போட்டிருக்கிறது. இந்தியர்களுக்கு நிர்வாகப் பதவிகள் வேண்டும், உயர்தரக் கல்வி வேண்டும் என்று காங்கிரஸ் ஏன் கேட்டது? இந்தியருக்கும் ஐரோப்பியருக்குமிடையே எழுப்பப்பட்ட ஏற்றத்தாழ்வு சுவரை உடைத்தெறியும் கருவிகளாக அவை கருதப்பட்டன. தீண்டாதவர்களின் கோரிக்கையும் அதே நோக்கத்துடன் இன்று போடப்படுகின்றன.

தற்போதுள்ள ஹிந்து கிராமங்களில் ஒதுக்கப்பட்டு சேரிகளில் வாழாமல் சர்க்கார் மானியத்தில் பயிர்செய்து வாழ்க்கை ஸ்தலங்களை (காலனிகளை) ஏற்படுத்துவதற்கு விசேஷ ஸெட்டில்மெண்டுகளை சம்மேளனம் கோருகின்றது.

தீண்டாதவர்களில் மிகப் பெரும்பான்மையோருக்குச் சொந்தமான நிலம் கிடையாது. அவர்கள் நிலமில்லாத விவசாயக்கூலிகள். ஜீவனம் செய்வதற்கு கிராமத்திலுள்ள இதர ஹிந்துக்களின் தயவைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சிறிய பகுதிதான். இதர தீண்டப்படுவோர் ஆதரவில்லாமல் எவ்வித வியாபாரத்தையும் அவர்கள் நடத்த முடியாது. தங்கள் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான எந்தத் தொழிலையும், சுயேச்சையான தொழிலையும், அவர்கள் நடத்த முடியாது. கிராமங்களில் இதுதான் தீண்டாமையை நீடித்து வைக்கிறது.

சர்க்கார் நிலங்களிலிருந்து அவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டால், அந்த மானியங்களில் ‘சுதந்திர’ சமூகங்களாக அவர்கள் அமைக்கப்பட்டால், அவர்களுடைய வகுப்பிலிருந்தே வியாபாரிகளையும் வர்த்தகர்களையும் பிறப்பிக்க முடியும். பொருளாதார முன்னேற்றத்தில் தாங்களும் சுதந்திர மனிதர்களாக பங்கெடுத்துக்கொள்வதை உணர்வார்கள். இதுதான் தீண்டாமையைத் தாங்கிநிற்கும் அச்சுவேரைப் பெயர்த்திவிடும். தாழ்த்தப்பட்ட இந்த மனித சமூகம் இந்திய சுதந்திரப் போராட்ட அணிவகுப்பில் இருக்கவேண்டுமென்று விரும்புகின்றவர்கள், தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்று உறுதி கொண்டவர்களனைவரும் இந்த நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க கடமைப்பட்டவர்கள்.

தனித்தொகுதி

தனித்தொகுதி கோரிக்கையை எடுத்துக்கொள்வோம். தனித்தொகுதிகள் வகுப்புப் பிரிவினைகளை நீடித்துவைத்து, வகுப்புவாதத்தை வளர்த்துவரும் என்று தேசியவாதிகள் நினைத்துவருகின்றனர். தேசிய இயக்கத்திற்கு எதிரான மனோபாவத்தைப் பரப்ப பிற்போக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் கருவி தனித் தொகுதி என்று கருதுகின்றனர். நம்முடைய சுதந்திரப்போராட்டத்திலே பொதுத் தொகுதியா தனித்தொகுதியா என்ற பிரச்னை மிகப்பெரிய பிரச்னையாக சர்ச்சை செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் விஷயத்தில் அது பொதுமக்கள் முன்வந்தன. காங்கிரஸ் பொதுத்தொகுதிதான் இருக்கவேண்டுமென்று கூறிக்கொண்டு வந்திருக்கிறது. தனித்தொகுதி வேண்டுமென்பவர்களுடைய மனதை மாற்றமுடியாமற் போனபிறகுதான், வேறு வழியின்றி தனித்தொகுதியைக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டிருக்கிறது.

தேசியப் போராட்டத்தில் முஸ்லீம்கள் தனித்தொகுதிகளைப் பெற்றனர். 1935ம் வருஷ அரசியல் சட்டத்தின்படி தீண்டாதவர்களுக்கும் தனித்தொகுதி அளிக்கப்பட்டது. ஆனால் காந்திஜி உண்ணாவிரதம் பூண்டார். கடைசியாக பூனா ஒப்பந்தத்தின் மூலம் ஹிந்துக்களுடன் பொதுத்தொகுதிகளில் தீண்டாதவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டனர்.

இன்றைக்கு அந்த ஏற்பாட்டை விட்டுவிட வேண்டுமென்று தீண்டாதவர்கள் விரும்புகின்றனர். தனித்தொகுதி தான் வேண்டுமென்கிறார்கள். அது வகுப்புவாதக் கோரிக்கையா? தேசிய எதிர்ப்புக் கோரிக்கையா? தற்போதுள்ள பிரிவினைகளை நீடித்துவைக்கும் உபாயமா, அல்லது அவற்றை ஒழிக்கும் வழியா? இந்தக் கோரிக்கை ஏன் கிளம்பவேண்டும்? தீண்டாதவர்களுக்கு உண்மையான குறை ஒன்று இருக்கின்றது. சர்வசாதாரணமான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்களை மனிதத்தன்மையற்ற முறையில் சமூகம் நடத்தி வந்திருக்கிறது. அவர்களுடைய நலன்களுக்காக எந்த ஸ்தாபனமும் - தேசிய காங்கிரஸ்கூட போராடவில்லை. தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதற்கு வேண்டிய பாதுகாப்பைக் கோரும் ஒரு தாழ்த்தப்பட்ட பகுதி அவர்கள்.

ஜாதி ஹிந்துக்கள் விரும்பும் தீண்டாதவர்களையே பிரதிநிதிகளாக்க பொதுத் தொகுதிகள் வசதி அளிக்கின்றன. பல கிராமங்களில் சிதறிக் கிடக்கின்றனர். அந்த கிராமங்களிலெல்லாம் ஜாதி ஹிந்துக்கள்தான் மெஜாரிட்டி. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் விரும்பாத எந்த நபரையும் ஜாதி ஹிந்துக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க முடியும். எந்தத் தொகுதியிலும் யார் பிரதிநிதியாக வரலாம் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் ஜாதி ஹிந்துக்களிடம்தான் இருக்கிறது.

இப்பேர்ப்பட்ட ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டுமென்று தீண்டாதவர்கள் விரும்புகின்றனர்.  ஸீட்டுகள் ரிஸர்வ் செய்யப்பட்ட கூட்டுத்தொகுதிகளில், சென்ற தேர்தல் அனுபவம் அவர்களுடைய மனதில் மனக்கசப்பை ஏற்படுத்திவிட்டது. சென்ற தேர்தலில் ஜாதிஹிந்துக்களால் நியமனம் செய்யப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது சுமத்தப்பட்டனர். கூட்டுத்தொகுதி இதற்கு சாதகமாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுடைய ஓட்டுகள் உதவியாயிருந்தன. கூட்டுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அபேக்ஷகர்கள் கிராமக் கிணறுகளையும், ஹோட்டல்களையும், பொது ஸ்தலங்களையும் தீண்டாதவர்களுக்கும் திறந்து வைப்பதற்காக எவ்வித முயற்சியும் செய்யவில்லை. காங்கிரஸ் மந்திரிசபைகளும் இதற்கு உதவவில்லை.

தேசிய இயக்கம் தீண்டாதவர்களுடைய நம்பிக்கையைப் பெறவில்லை. தீண்டாதவர்களுக்கு இந்த அனுபவம் ஏமாற்றத்தை அளித்தது. அவர்களுடைய நியாயமான நலன்களைக் காப்பாற்ற அவர்கள் இன்றைக்கு தனித்தொகுதிகளைக் கேட்கின்றனர். அப்படிக் கேட்பது யாருடைய குற்றம்? தீண்டாதவர்களுடைய குற்றமா, தேசிய இயக்கத்தின் குற்றமா? தேசிய இயக்கம் தங்களுடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் ஸ்தாபனம் என்ற உணர்ச்சியை நடைமுறையில் ஏற்படுத்தியிருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்த கோரிக்கையைப் போட்டிருக்க முடியாது.

இன்றைக்குள்ள நிலைமை என்ன? காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட வகுப்பினருடைய நம்பிக்கையைப் பெறவில்லை. ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இடையே பூர்ண நம்பிக்கை இல்லாத நிலைமையில் கூட்டுத்தொகுதிகளை ஏற்படுத்துவது அவநம்பிக்கையைப் பெருக்குகின்றது. இதனால் பிளவை அதிகரிக்கின்றது. சீர்குலைவை வளர்க்கும். ஜாதி ஹிந்துக்களின் ஆதிக்கத்தை நீடிக்கும் சூழ்ச்சியென்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கருதுவார்கள்.

தனித்தொகுதி வேண்டுமா, அல்லது கூட்டுத்தொகுதி வேண்டுமா என்பதை முடிவுசெய்து கொள்வதற்கு தீண்டாதவர்களுக்குப் பரிபூரண சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதுவே நியாயம். அதுவே ஜனநாயகம். பிறபகுதிகள் அவர்கள்மீது கூட்டுத்தொகுதியைப் புகுத்துவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.

தனித்தொகுதிக் கோரிக்கையின் காரணத்தை உணர்ந்து, அதன் நியாயத்தை ஏற்றுக்கொள்வதற்குக் காங்கிரஸ் முன்வரவேண்டும். ஜனநாயகத்தை முன்னிட்டு அதை ஆதரிக்கவேண்டும். தேசிய இயக்கம் என்றென்றும் அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் என்ற களங்கமற்ற உறுதிமொழியை காங்கிரஸ் அளிக்கவேண்டும்.

இப்படித் திட்டமிட்டால்தான் ஏகாதிபத்தியவாதிகளும் பிற்போக்காளர்களும் இந்த நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தடுக்க முடியும். தீண்டாதவர் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் காங்கிரஸ் இணைத்து விட்டவுடன் - காங்கிரஸ் தீண்டாதவர்களுடைய நம்பிக்கையை பெற்றுவிட்டவுடன் பிற்போக்காளர்களுக்குச் சாவுமணி அடித்துவிடலாம். தீண்டாதவர் வகுப்பிலிருந்தே அவர்களுடைய நலன்களைக் காத்து தேசிய நலன்ளுக்காகப் போராடும் வீரர்கள் உதிப்பார்கள்.

காங்கிரஸின் கராச்சி தீர்மானம் பிரஜா உரிமை சமத்துவப் பிரகடனம் செய்தது. அதை அமுலுக்குக் கொண்டுவரும் வழி இப்பேர்ப்பட்ட கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு போராடுவதாகும். நியாயத்திலிருந்தும், தார்மீகத்திலிருந்தும் பிறந்துள்ள கோரிக்கைகள் தாழ்த்தப்பட்டவர்களுடைய கோரிக்கைகள். தேசிய காங்கிரஸ் இவற்றை எடுத்துக்கொள்வதில் சிரத்தை காட்டியிருந்தால் தீண்டாதவர் இயக்கம் சுதந்திரப் போராட்டத்துடன் கலந்த ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும். தேசிய இயக்கத்தின் போராட்ட சக்திகள், பலமடைந்திருக்கும். ஒடுக்கப்பட்ட மனிதவர்க்கத்தின் பகுதியாகிய இந்த 6 கோடி மக்களும் தேசியக்கொடியின் கீழ் தேசிய இயக்கத்திற்கு ஆதரவாகத் திரட்டப்பட்டிருப்பார்கள்.

சுதந்திரப் பிரச்சினை புறக்கணிக்கப்படுகிறது

இந்தக் கோரிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்திலுள்ள ஒரு குறையைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. தேசத்தின் பரிபூர்ண சுதந்திரம் அதன் திட்டத்தில் இடம்பெறவில்லை. ஆலயப்பிரவேசம் வேண்டுமென்ற பால்யப் பருவத்தைத் தாண்டிவிட்டது. அவர்களுடைய இயக்கம் அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்குவேண்டுமென்று கேட்கின்றது. ஆனால் இந்த அதிகாரத்தை பிரிட்டிஷாரிடத்திலிருந்து கைப்பற்ற வேண்டும். இந்த உணர்ச்சியைப் பிரதிபலிக்கும் அம்சம் சம்மேளனத்தின் திட்டத்தில் காணப்படவில்லை.

இந்திய மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டுமென்றால், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை நம்முடைய ஒன்றுபட்ட சக்தியால் தாக்கவேண்டும். அதுவே அதிகாரத்தில் தீண்டாதவர்களுக்குரித்தான பங்கை அளிக்கும். இது தெளிவான விஷயம். என்றாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்தின் திட்டத்தில் சுதந்திரம் என்ற வார்த்தையே காணப்படவில்லை. அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியா பரிபூர்ண விடுதலையடைவதை அவர்களுடைய திட்டம் காணவில்லை. அதற்கு மாறாக இருக்கிறது டாக்டர் அம்பேத்காரின் பிரசங்கங்கள். டொமினியன் அந்தஸ்து என்ற எல்லைக்குள்தான் அவர்கள் விடுதலையைக் காண்பதாகத் தோன்றுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் பிரிட்டிஷ் ஆட்சி இந்நாட்டில் நீடித்திருக்கும் என்ற எண்ணத்துடன் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரிட்டிஷாரிடமிருந்து நாம் கைப்பற்றும் அதிகாரத்தில் ஒரு பங்கை இந்த கோரிக்கைகள் கேட்கின்றன. இந்த அதிகாரத்தை பிரிட்டிஷார் விட்டுக்கொடுக்கும்படி செய்வதற்கான திட்டம் ஒன்றும் சம்மேளனத்துக்குக் கிடையாது. பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் தயாதாட்சண்யத்தால் கொடுக்கும் அதிகாரத்தில் ஒரு பங்கை மட்டும் எடுத்துக்கொண்டு திருப்தியடைந்து விடப் பார்க்கின்றனர்.

இன்றைய நிலையில் மன்னிக்கமுடியாது

தீண்டாதவர் இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் இத்தகைய மனோபவத்தினால் அதிக பாதகம் ஏற்படாது என்றிருக்கலாம். ஆனால் இன்றைக்கு சம்மேளனத்தின் கொடியில் பரிபூர்ண சுதந்திரம் என்ற சுலோகம் பொறிக்கப்படாமலிருப்பது மன்னிக்கப்பட முடியாத விஷயம். அப்படிச் செய்யாமலிருப்பதற்கு யாதொரு காரணமும் கிடையாது. 

சுதந்திரப்பிரச்சினையில் பாராமுகமாக இருப்பது தீண்டாதவர்களுடைய நலனுக்கே பாதகமாகும். தீண்டாமையை ஒழிப்பதற்குப் பரிபூர்ண சுதந்திரமும் தீண்டாதவர்களுக்கு அதிகாரத்தில் தங்களுக்குரித்தான பங்கை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்பது தெட்டத்தெளிவான விஷயம். தீண்டாதவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நாளைக்கே பூர்த்தி செய்யப்பட்டாலும் தீண்டாமை ஒழியாது. தீண்டாமை எனும் பழக்கத்தின்மீது பெரிய இடி விழும், ஆனால் அது அழிக்கப்படமாட்டாது. தற்போது அமுலிலிருக்கும் அரசியல் சட்டத்திற்குய் 6கோடி தீண்டாதவர்கள் எப்படி “ஸ்பெஷல் ஸெட்டில்மெண்டுகளில்” குடியமைக்கப்படுவார்கள்? எப்படி உத்யோகங்களில் இடம்பெறுவதற்கு முடியும்?

தேசம் அதிசீக்கிரத்தில் தொழில்மயமாக்கப்பட வேண்டும். நிலச்சுவான்தாரிமுறை கரைக்கப்பட்டு ஒழியவேண்டும். விவசாய முறையில் புரட்சிகரமான மாறுபாடு புகுத்தப்பட வேண்டும். இவைதான் தீண்டாதவர்கள் தாங்கள் ஜீவனம் செய்யும் சுயேச்சைத் தொழில்களைத் தேட வசதி அளிக்கும். இவற்றால்தான் தீண்டாமை ஒழிக்கப்படும். இதற்கு அந்நிய ஆட்சியின் பிடிப்பிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் இதை எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்? நாட்டின் அடிமைத்தனத்தை நீடிப்பது தீண்டாதவர்களின் அடிமைத்தனத்தைநீடிப்பதாகும்.

இந்த சம்மேளனம் சுதந்திரக் கோரிக்கையை எதிர்க்கவில்லை. கான்பூரில் நடந்த மகாநாட்டில் தலைமை வகித்த ராவ்பகதூர் சிவராஜ், “நாங்கள் இந்திய சுதந்திரத்திற்கு எதிராக நிற்கவில்லை, ஆனால் நாகபுரி சம்மேளனத்தில் நாங்கள் கோரிய கோரிக்கைகள் அளிக்கப்படும் என்ற உறுதிமொழி வேண்டுமென்றோம்” என்று கூறியிருக்கிறார். ஆனால் “நாங்கள் சுதந்திரத்தை எதிர்க்கவில்லை” என்று கூறிவிட்டால் போதாது. மற்ற மக்களுடன் சேர்ந்து போராடி சுதந்திர லட்சியத்தை அடையவேண்டும் என்று உணரவேண்டும். தீண்டாதவர் கோரிக்கைகளைப் பெறுவதற்கு அது அவசியமான வேலை.

சுதந்திரத்திற்காக ஒன்றுபடுங்கள்

ஆலயப்பிரவேசம் என்ற லட்சியத்திலிருந்து அரசியல் அதிகாரம் வேண்டுமென்று கோருமளவுக்கு தீண்டாதவர் இயக்கம் வளர்ந்துவிட்டது. மற்ற கட்சிகளிடத்தும், மற்ற பொதுஜனப் பகுதிகளின்பாலும் இதுவரை அனுஷ்டித்து வந்த கொள்கையையும் மாற்றிக்கொள்ளவேண்டும். இதை கான்பூர் கூட்டத்தில் அம்பேத்காரே ஒருவாறு ஏற்றுக்கொண்டுள்ளார். “இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மூன்றுபகுதிகள் அதிகாரத்தில் பங்கெடுத்தக்கொள்ளும். அவை ஹிந்துக்கள், முஸ்லீம்கள், தீண்டாதவர்கள்” (30.1.44)

சுயராஜ்யம் அடைவதற்கு முன்னரே அதைப்பெறுவதற்கு இம்மூன்று கட்சிகளும் ஒன்றுபடவேண்டியது அவசியமல்லவா? தேசிய காங்கிரசுக்கு தீண்டாதவர்களுக்கும் இடையில் ஸௌஜன்யமான தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் இரு கட்சிகளுக்குய் பாதகம் ஏற்படும். இந்திய சுதந்திரத்திற்கே அது பாதகம் விளைவிக்கும். அதிகாரத்தை கைப்பற்றுவதும் தீண்டாமையை ஒழிப்பதும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றவேண்டிய செய்கைகள். ஏனெனில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்தும் செய்கை அது. ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்காக எல்லா மக்களுடைய கூட்டு முயற்சி அவசியம். தனித்தனியாக முயற்சி செய்வது வெற்றியை அளிக்காது.

நமதுநாட்டின் பொதுஜனங்கள் பலர் தேசிய காங்கிரசின்கீழ் நிற்கின்றனர். தொழிலாளிகள், விவசாயிகள், படிப்பாளிகள் முதலியவர்கள் அதில் திரண்டுநின்றனர். அவர்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவுமில்லாமல் அதிகாரம் பெற முடியாது. அதனால்தான் தீண்டாதவர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்குக் காங்கிரசின் ஆதரவைப் பெறவேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவமும், காந்திஜி எதிர்ப்பு மனோபாவமும் மற்ற மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்துவிடும்.

எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டால்தான் இந்தியா சுதந்திரம் அடையமுடியும். தீண்டாதவர்களும் அதிகாரத்தில் ஒரு பங்கைப் பெறமுடியும் என்பதை தீண்டாதவர்கள் உணரவேண்டும். தேசிய காங்கிரஸிடம் அனுஷ்டித்துவரும் போக்கை இந்த உணர்ச்சியினால் அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய காங்கிரஸின் கொடியின் கீழ் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சரித்திரத்தை அறிந்துகொள்ளவேண்டும்.

தொழிலாளிகள் விவசாயிகள் இயக்கங்கள் தீண்டாதவர் இயக்கத்துக்கருகேயுள்ள இயக்கங்கள். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடைய வர்க்க ஸ்தாபனம், விவசாய சங்கங்கள் விவசாயிகளுடைய வர்க்க ஸ்தாபனம். ஜாதிமத பேதமின்றி அந்தந்த வர்க்கத்தின் கோரிக்கைகளின்மீது தொழிலாளிகளையும் விவசாயிகளையும் ஒன்றுபடுத்தி கட்டப்பட்ட ஸ்தாபனங்கள் அவை. தீண்டாதவர்ககளில் பெரும்பான்மையோர் இவ்விரு வர்க்கங்களிலும் இருக்கின்றனர். தொழிற்சங்கங்களிலும், விவசாயிகள் சங்கங்களிலும் சேர்ந்து அந்த ஸ்தாபனங்களை பலப்படுத்தி, அவர்களுடைய அன்றாடக் கோரிக்கைகளுக்குப் போராட வேண்டியது, இந்தத் தீண்டாதவர்களின் கடமை.

இவ்வாறாக தொழிலாளர்களிடையிலும் விவசாயிகளிடையிலும் ஒன்றுசேர்ந்து நிற்பதன்மூலம் தங்களுடைய வகுப்புக் கோரிக்கைகளை அடைவதற்கான நிர்ப்பந்தத்தை அதிகரிக்கவும், துரிதப்படுத்தவும் முடியும் என்பதை இந்த வர்க்கங்களிலுள்ள தீண்டாதவர்கள் உணரவேண்டும். மற்ற கட்சிகள், மற்ற ஜனங்களை வற்புறுத்தி தீண்டாதவர்களுடைய விசேஷ உரிமைகளைச் சீக்கிரத்தில் அடையமுடியும். தன்னுடைய வர்க்க ஸ்தாபனத்தில் சேருவது தன்னுடைய கோரிக்கைகள் நியாயமானவை என்பதை அங்குள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். தீண்டாதவர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை இதுவரை தேசிய இயக்கம் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தேசிய ஸ்தாபனத்தின் கோரிக்கைகளாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இதன் விளைவு தேசிய இயக்கத்திற்கு சாதகமானதாயில்லை. தீண்டாதவர்கள் விழிப்படைந்தனர். தங்களுடைய தேவைகளை உணர்ந்தனர். அதற்காகத் தனி ஸ்தாபனத்தை அமைத்துக் கொண்டு விட்டனர். இன்று அதிகாரம் வேண்டும் என்ற உணர்ச்சியும் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் நடந்துவந்த பாதை சுதந்திரப்பாதை.

இந்திய சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த ஒருபகுதி இன்றைக்கு சுதந்திர ஒளிகண்டு விழிப்புற்று வருகின்றது. சுதந்திரத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் இதை வரவேற்கவேண்டும். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஆதரிப்பதன்மூலம் தேசிய இயக்கம் தீண்டாதவர்களிடம் நம்பிக்கை ஊட்டவேண்டும். சுதந்திரப் போராட்டத்திற்காகத் திரண்டுவரும் மாபெரும் வெள்ளப்பெருக்கில் அவர்கள் சேருவதற்கு வழிதேட வேண்டும். பஞ்சத்தையும் அரசியல் நெருக்கடியையும் எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் அவர்கள் மிகவும் முக்யமான பகுதி. தேசிய ஒற்றுமைக்காக தேசிய சர்க்காருக்காக நடைபெறும் போராட்டத்தில் அவர்களும் ஒரு முக்யமான பகுதி.

தேசிய காங்கிரசும் பழைய கண்ணோட்டத்தை விட்டுவிட வேண்டும். இப்பிரச்னையை அரசியல் சம்பந்தமற்ற ஒரு பிரச்சினையாகக் கருதக்கூடாது. தானதருமம், கருணை கடாக்ஷத்திற்காகச் செய்யும் சேவையாக தீண்டாமை ஒழிப்பைக் கருதக்கூடாது. ஒற்றுமை, நியாயம் - இவ்விரண்டும் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய பிரச்னை இது என்று கருதவேண்டும். அப்படிச் செய்தால் அதிசீக்கிரத்தில் சுதந்திர இயக்கத்தின் அணிவகுப்பில் “பறையர்கள்” எனப்படும் கோடிக்கணக்கான இந்தியப் புரட்சிக்காரர்களை சேர்க்கமுடியும்.

***
அனுபந்தம்

1.டாக்டர் அம்பேத்கார் மகாத்மா காந்திக்கு தாழ்த்தப்பட்டவர் பிரச்சினையைப்பற்றி சமீபகாலத்தில் ஒரு கடிதம் எழுதினார். இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு ஹிந்து முஸ்லிம் பிரச்னையைத் தீர்ப்பது மட்டும் போதாது. தீண்டாமைப் பிரச்னையும் தீர்க்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தேசத்தின் தலைவர்கள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிதேடவேண்டும் என்று அவர் வற்புறுத்தி இருந்தார். அதற்கு மகாத்மா காந்தி கீழ்க்கண்ட பதிலை எழுதியிருக்கிறார்:
உங்கள் கடிதத்திற்காக என் வந்தனம். எனக்கு ஹிந்து முஸ்லிம் பிரச்னை என் ஆயுள் பரியந்தம் நீடிக்கும் பிரச்னையாகிவிட்டது. அதைத் தீர்த்துவிட்டால் இந்தியாவின் அரசியல் பிரச்னைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று நான் ஒரு காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தது சரியல்ல என்று அனுபவம் எனக்கு புத்திபுகட்டிவிட்டது. நான் இளஞ்சிறுவனாக இருக்கும்பொழுதே தீண்டாமையை வெறுத்தேன். அந்த பிரச்னை இன்று அரசியல் முக்கியத்துவம் அடைந்துவிட்டபோதிலும், ஒரு சமூக சீர்திருத்தப் பிரச்னை, மத சீர்திருத்தப் பிரச்னை என்ற முறையில்தான் அதைப்பற்றி எனக்கு அக்கறை அதிகம்... ஆனால் இவ்விஷயத்தில் நம்மிருவருக்கும் வேறுபட்ட அபிப்பிராயம் உண்டு எண்பதை நான் அறிவேன்.(ஹிந்து 5.1.45)

2. 23.9.44ல் சென்னையில் கூடிய அகில இந்திய தாழ்த்தப்பட்டவர் பெடெரேஷனுடைய காரியக்கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள்:

தனி உரிமைகள்

“இந்திய அரசியல் சட்டம் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு தனி அம்சமாகக் கருதாவிட்டால் அந்த அரசியல் சட்டத்தை அவர்கள் ஏற்கமுடியாது. பட்ஜெட்டில் இந்த வகுப்பினருடைய கல்வி வசதிக்காக தொகை ஒதுக்கப்பட வேண்டும். சட்டசபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் அவர்களுக்கு தனி பிரதிநிதித்வம் வேண்டும். அரசாங்க உத்யோகங்களில் அவர்களுக்கு குறிப்பிட்ட சில பதவிகள் அளிக்கப்பட வேண்டும்”

தனித்தொகுதி

“தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ரிஸர்வ்’ செய்துவைக்கப்பட்டுள்ள கூட்டுத்தொகுதி முறைக்குப் பதிலாக தனித்தொகுதிகள் அமைக்கவேண்டும்”

“மாகாணங்களிலும், மத்தியிலும் மந்திரிசபைகளில் மைனாரிட்டிகளுக்கும் இடமளிக்கப்படும்”

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஸெட்டில்மெண்டு’கள்

“தற்காலம் தாழ்த்தப்பட்டவர் வசிக்கும் சேரிகளை விட்டு அவர்களுக்கென்று பிரத்யேகமான குடிவாழும் பிரதேசங்கள் (ஸெட்டில்மெண்டுகள்) ஏற்படுத்தப்பட வேண்டும். இவை ஜாதி ஹிந்துக்களுடைய ஆதிக்கமில்லாத, சுதந்திர காலனிகளாக இருக்கவேண்டும். சாகுபடி செய்யக்கூடிய சர்க்கார் நிலங்களும், மராமத்து செய்தபின்னர் வாழக்கூடிய பிரதேசங்களும், அவசியமான இடங்களில் சட்டபூர்வமாக சில நிலங்களையும் வாங்கி ஸெட்டில்மெண்டுகள் ஏற்படுத்தவேண்டும். அடக்கமான ஸெட்டில்மெண்டு ஏற்படுத்துவதற்கு 5கோடி ரூபாய் வருஷாவருஷம் செலவு செய்ய அதிகாரமுள்ள கமிஷன் அமைக்கப்படவேண்டும்.

புதுவிசை , இதழ் 35, ஏப்ரல் 2012


புதன், ஆகஸ்ட் 10

நரகல் நாறுதேன்னா நக்கிப் பார்த்துட்டுச் சொல் என்கிறார்கள் - ஆதவன் தீட்சண்யா

ரங்கநாயகம்மா என்பவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை என்கிற நூலை எழுதியிருப்பதாக நண்பர் வெய்யில் சொல்லும் வரை, ரங்கநாயகம்மா என்பவரை நான் அறிந்திருக்கவில்லை. அவரை அறிந்து கொண்டேயாகவேண்டும் என்கிற தனித்தத் தேவை ஏதும் நமக்கில்லை. எவ்வாய் எப்பொருள் செப்பினும் அவ்வாயின் சாதியைக் காண்பதும் அறிவு என்பதால் இணையத்தில் தேடி அவரைப் பற்றி படித்துக்கொண்டிருந்த வேளையில்தான் ‘ரஜினி நடித்தப் படத்தில் வேலை செய்ததாலேயே ரஜினியை அம்பேத்கருக்கு அடுத்தத் தலைவராக ஏற்றிருப்பவர் என வசுமித்ர007 புலனாய்வில் கண்டறியப்பட்ட அதியன் ஆதிரை’ மூலம் புத்தகம் வந்து சேர்ந்தது. ( புத்தகத்தை டெலிவரி செய்த கூரியர் தொழிலாளிக்கு யார் தலைவர் என்கிற ரகசியமும் விரைவில் அம்பலமாகக்கூடும்) 

புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த போதே அது குறித்த பதிவொன்றை எனது வலைத் தளத்தில் எழுதியிருந்தேன். ‘நாம எது சொன்னாலும் கேட்டுக்கணும், எதை எழுதினாலும் படிக்கணும்கிறது தானே ஊர்வழக்கம், அதற்கு மாறாக இவனென்ன கருத்து சொல்லக் கிளம்பியிருக்கிறான்’ என்று மொழிபெயர்ப்பாளர் தரப்பு கடுப்பாகிவிட்டது போல. முழுதாகப் படிக்காமல் இப்படி எழுதுவது சரியா நெறியா என்றெல்லாம் ஆவேசப்படுகிறார்கள். நாலாம் பக்கத்தில் இருக்கிற தவறைச் சுட்டிக்காட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களையும் படித்துத் தானாக வேண்டும் என்று நிபந்தனை போடும் அவர்கள், அதற்கு உட்படாமல் அபிப்பிராயம் சொல்லுகிற உனக்கு ஒரு நூலை எப்படி படிக்கவேண்டும் என்பதே தெரியவில்லை என்று தீர்ப்பு சொல்கிறார்கள். ஆதவனுக்கு எழுதவே தெரியாது என்றொரு தீர்ப்பு போன வாரம் வெளியானது, இந்த வாரம் படிக்கவே தெரியலே என்று. வாராவாரம் வசைபட வாழ்கிறேன். 

விமர்சனம் என்றால் அது அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டும், ஆனால் அது ஆதவனுக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று அறிவிக்கும் கொற்றவை, அதற்கான வரலாற்றுக் காரணத்தை கண்டறிகிறார். ‘...அம்பேத்கர் உங்களுக்கு அப்படி வழிகாட்ட முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. ஏனென்றால், எதையும் ஒழுங்காகப் படிக்காமல், அவசரகதியில் முன்முடிவுக்கு வந்து கண்மூடித்தனமாக நிராகரிக்கும் போக்கை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் மார்க்சியம் குறித்து எதையும் படிக்காமலேயே அதுபற்றிய முடிவுக்கு வந்தார். அதேபோல் நீங்களும் புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் பதிவு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் அவரிடமிருந்து அதை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளீர்கள் போலும்!’. 

புரிகிறதா, ஆதவன் இப்படி அரைகுறையாக இருப்பதற்கு காரணம், அம்பேத்கர் என்கிற அரைகுறையைப் பின்தொடர்வதுதான். அதாவது ‘உங்களுக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் அறிவு வராது’ என்பதுதான் கொற்றவை சொல்லவரும் விசயம். கொற்றவையைப் போல நிறையறிவோடு இருப்பதற்கு குறைந்தபட்சம் அவரது சாதியில் பிறந்திருப்பது கட்டாயம் போல. ஒரு பறப்பயலா பிறந்துட்டு என்று சொல்லத் துடிக்கும் ஆத்திரத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ‘தலித்தாய் பிறந்ததாலேயே’, ‘பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே’  என்று திரும்பத்திரும்ப விளித்து கொற்றவை கூறும் அறிவுரைகளெல்லாம் அவரது சாதிய உளவியலையே காட்டித் தருகிறது. வன்கொடுமையின் வரம்புக்குள் வந்துவிடாமல் கவனமாக திட்டுவதற்கான நுட்பம் அவருக்கு வாய்த்திருக்கிறது. சரி, ஒரு வாதத்திற்காக கேட்கிறேன், எதை வைத்து என்னை  "தலித்தாய் பிறந்ததாலேயே" என்று கூறுகிறார்? அம்பேத்கரை பின் தொடர்கிற இவன் வேறு யாராகவும் இருந்துவிட முடியாது என்கிற பொதுப்புத்தியிலிருந்துதானே?
 
ரங்கநாயகம்மா என்பதற்கு பதிலாக ரங்கநாயகியம்மா என்று இருக்கும் தட்டச்சுப் பிழையையெல்லாம் ஏதோ தத்துவார்த்தப்பிழை போல காட்டி தாங்கள் எழுதியதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திட்டமிட்டே அம்பேத்கரைத் திருத்தி பிழைபட தாங்கள் எழுதியிருப்பவற்றை அறிவுநாணயம் என்று கொண்டாடிக் கொள்கிறார்கள். எனது எதிர்வினைக்காக காத்திருப்பதாக அறிவித்திருக்கும் அவர்கள் பின்வரும் எனது இரண்டு கேள்விகளுக்காவது பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.

The Essential Writings of B.R. Ambedkar - p 400
1  ‘...தீண்டப்படாதவர்கள் தங்கள் சாதியை தாழ்வாகக் கருதவில்லை, பிராமணர்களை எட்டி உதைத்தார்கள் என்று எவரோ எழுத, உடனே அம்பேத்கர் புளகாங்கிதமடைந்து அந்தத் தகவலை பெரும் உவகையுடன் விவரித்தார்...’ என்கிறார் ரங்கநாயகம்மா ( பக்கம் 93). 

இப்படியொரு குறிப்பை அபே துபேயின் நூலில் காணலாம். 1906 ஆம் ஆண்டு வெளியான தஞ்சாவூர் கெஜட்டியரில் பக்கம் 80ல் அதன் ஆசிரியரான  ஹெமிங்ஸ்வே ‘தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பறையர் பள்ளர் சக்கிலியர் தங்களுக்குத் தீமை விளையும் என்று நம்புவதால் தங்களது குடியிருப்புகளுக்குள் பிராமணர் நுழைவதை அனுமதிப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறார். மைசூர் மாநிலத்தின் ஹஸன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோலியரிடையே இதேபோன்ற வழக்கம் இருந்ததாக காப்டன் ஜே.எஸ்.எஃப்.மெக்கன்ஸியும் ( Indian Antiquary 1873) பதிவு செய்திருக்கிறார். (பார்க்க: தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும், தி.பெ.கமலநாதன், பக்கம்: 29,  எழுத்து வெளியீடு மற்றும் வலேரியன் ரோட்ரிக்ஸ் எழுதிய The Essential Writings of B.R. Ambedkar - p 400)

இப்படி தனக்கு முந்தைய மற்றும் தன் காலத்தில் பொருட்படுத்தத்தக்கதாய் இருந்த ஆவணங்களை ஆதாரமாக கொண்டுதான் அம்பேத்கர் எழுதியிருக்கிறார். ஆனால் ரங்கநாயகம்மாவோ யாரோ எவரோ ஒரு அனாமதேயம் எழுதியதை அம்பேத்கர் எடுத்தாண்டு புளகிப்பதாக குற்றம்சாட்டுகிறார். இந்தத் திரிப்புவேலைச் செய்தாவது அம்பேத்கரை இழித்துக் கூறி உதாசீனப்படுத்துவதன் பின்னே உள்ள உளவியல் என்ன?

2. // முதலாளிகள் புத்திக்கூர்மை உடையவர்கள் அதனால்தான் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், தொழிலாளர்களுக்கு அந்தளவுக்கு புத்திக்கூர்மை இருந்தால் இந்நேரம் அவர்களும் அந்நிலைக்கு உயர்ந்திருப்பார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன? // என்கிறார் கொற்றவை.


உண்மையில் இந்தக் கருத்து 1921 ஜூன் 8 ஆம் நாளிட்ட நவஜீவன் இதழில் காந்தியால் சொல்லப்பட்டது. காந்தியின் இக்கூற்றை மறுக்கும் அம்பேத்கர் ‘சொத்துடைமை வர்க்கத்தை காந்திஜி பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு எதிரான இயக்கத்தைக்கூட எதிர்க்கிறார். பொருளாதார சமத்துவக் கோட்பாட்டில் அவருக்கு நம்பிக்கை இல்லை’  என்று சாடுகிறார். (ஆதாரம்: மு.வீரபாண்டியன் எழுதி என்.சி.பி.எச். வெளியிட்டுள்ள ‘அண்ணல் அம்பேத்கரின் கலை இலக்கியப் பார்வை’ என்கிற நூலின் 21, 22 ஆம் பக்கங்கள்). 

உண்மை இவ்வாறிருக்க, முதலாளிகள் தொழிலாளிகள் குறித்து காந்தி கூறியதை அம்பேத்கர் கூறியதாக எழுதிப் போகும் கொற்றவை, ‘நீங்களும் ஒரு மார்க்சிய கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள்! அப்படியென்றால் நீங்கள் இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா? உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா?’ என்றெல்லாம் தனது அடுத்தடுத்தக் கேள்விகளை என்னை நோக்கி அடுக்கிக் கொண்டே போகிறார். 

காந்தி எழுதியதை அம்பேத்கர் எழுதியதாக பொய் சொல்லி வசை பாடும் இந்த உத்தி கொற்றவையின் கட்டுரையிலும் அவர் மொழிபெயர்த்துள்ள நூலிலும் எவ்விதமாக எங்கெங்கு கையாளப்பட்டுள்ளது என்று துப்பறிந்து கொண்டிருப்பது நமது வேலையல்ல. ஆயினும் குறைந்தபட்சம் இந்த ஒரு ஆதாரத்தையாவது அவர் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எதுவொன்றையும் ஆழ்ந்துப் படித்து அறிவுநாணயத்தால் விகசிக்கும் அவர் இதற்கான ஆதாரங்களை கொடுக்காமலா போவார்? காத்திருக்கிறோம். 

நன்றி: ஆதாரங்களைத் தேடித்தந்த தோழர்கள் திருவாசகம், ஈஸ்வரன் ஆகியோருக்கு. 



வெள்ளி, பிப்ரவரி 28

புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல -ஆதவன் தீட்சண்யா



"இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை” 
சிறுகதையை முன்வைத்து ஆதவன் தீட்சாண்யாவுடன் உரையாடல்


நேர்காணல் : கே. பாலமுருகன்

கேள்வி: தங்களின் இந்தக் கதையின் மூலம் சுதந்திரத்திற்கு முன்பான ஒரு வரலாற்றுச் சூழலையும் அக்காலத்து ஏகாதிபத்தியத்தின் கொடூரங்களையும் விடுதலைக்கு முன்பாகவே மரணித்த ஒரு போராளியின் இலட்சியவாதத்தைப் பற்றியும் சொல்வதாக நான் உணர்கிறேன். உங்களைப் பொருத்தவரையில் இந்தச் சிறுகதைக் குறித்தான புரிதலும் அனுபவமும் எங்கிருந்து தொடங்கி வளர்கிறது? அந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றைக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

ப‌தில்: சென்னைக்கு சென்றிருந்தபோது பாரதி புத்தகாலயம் நாகராஜனும் சிராஜூம் "விடுதலைப்பாதையில் பகத்சிங்" என்கிற புத்தகத்தைக் கொடுத்தார்கள். அந்நூலுக்கு சிவவர்மா எழுதியிருந்த முன்னுரையைப் பேருந்தில் வரும்போது படித்துக்கொண்டு வந்தேன். "சிறையில் பகத்சிங் எழுதிய நான்கு முக்கியப் புத்தகக்ளின் கையெழுத்துப்பிரதிகள் அழிக்கப்பட்டுவிட்டன என்பது மிகவும் துரதிருஷ்டவசமாகும். (1) சோசலிசத் தத்துவம் (The Ideal of Socialism), (2) சுயசரிதை, (3) இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு மற்றும் (4) மரணத்தின் நழைவாயிலில் (At the Door of Death) என்பவையே அந்நான்கு புத்தகங்களுமாகும். அவை நான்கும் சிறையிலிருந்து வெளியே கடத்தப்பட்டு ஜலந்தரிலிருந்து குமாரி லஜ்ஜாவதி என்பவரிடம் அனுப்பப்பட்டிருந்தது. அவர் அவற்றை 1938இல் விஜய்குமார் சின்ஹா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். 1939இல் உலகயுத்தம் வெடித்தப் பின்பு, சின்ஹா தான் கைது செய்யப்படலாம், தன் வீடு சோதனைக்குள்ளாக்கப்படலாம் என்று பயந்தார். அவ்வாறு சோதனைக்குள்ளானால் கையெழுத்துப் பிரதிகள் காவல்துறையினரின் கைகளில் சிக்காமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக தன் நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்கும்படிக் கூறி அவற்றை ஒப்படைத்திருந்தார். 1942இல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கியபோது, அரசாங்கத்தின் அடக்குமுறை எந்திரம் முழு வீச்சிலிருந்த சமயத்தில் அந்த நண்பர் மிகவும் பயந்துபோய் அக்கையெழுத்துப்பிரதிகளை அழித்துவிட்டார்..." என்று சிவவர்மா எழுதியிருந்ததை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மிகுந்த மனத்தொந்தரவுக்கு ஆளாகி வாசிப்பதை நிறுத்திவிட்டிருந்தேன்.

அந்நேரத்திற்கு நாகராஜன் கைப்பேசியில் அழைத்தார். "பகத்சிங் எழுதியப் புத்தகங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்கிற செய்தியை என்மனம் ஏற்க மறுக்கிறது தோழரே... அந்த வரிகளுக்கு மேல் படிக்கமுடியாமல் திணறுகிறேன். அந்தப் புத்தகங்களில் பகத்சிங் எதையெல்லாம் எழுதியிருப்பார் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று மனம் தவிக்கிறது" என்று அவரிடம் சொன்னேன். படிக்கும்போது தனக்கும் இதே உணர்வுதான் ஏற்பட்டது என்று அவரும் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். சமாதானமடையாத என்மனம் பலவாறாக குழம்பிப் புரட்டியது. அழிக்கப்பட்டுவிட்டதாய் சொல்லப்படுகிற அந்தப் புத்தகங்கள் இதோ என்னிடமிருக்கின்றன என்று திடுமென யாரேனும் வந்து சொல்லமாட்டார்களா என்றெல்லாம் அர்த்தமற்று யோசித்தேன். யாரேனும் வரக்கூடும் என்று கற்பிதமான ஒரு விருந்தாளியின் நற்செய்திக்காக காத்திருப்பதைவிடவும் அந்தப் புத்தகங்களை வைத்திருக்கிற ஒருவரை நாமே உருவாக்கினால் என்னவென்று தோன்றியது. அப்படி உருவானவள்தான் நந்தினி. புத்தகங்களை வைத்திருப்பவராக ஒரு நந்தினியை உருவாக்கிவிட முடியுமானால் புத்தகங்களையும் நானே உருவாக்க முடியும்தானே? வாசிக்கப்படாமலே அழிந்துவிட்ட அப்புத்தகங்களை பகத்சிங்கின் இடத்திலிருந்து நானே எழுதுவதெனத் தீர்மானித்தக்கொண்டேன். இன்னின்னதையெல்லாம் பகத்சிங் எழுதியிருந்தார் என்று நானாக எழுதிக் கொள்வதற்கான எல்லையற்ற சுதந்திரம் இருப்பதை உணர்ந்துகொண்டேன். புனைவின் சாத்தியமும் அதுதான். எனவே அடிப்படையான இந்த செய்தியை உட்பொருளாக வைத்துக்கொண்டு அதைச் சுற்றிவரப் புனைந்தேன்.

தலைமறைவுக்காலத்தில் பகத்சிங் ரஞ்சித் என்ற பெயராலேயே விளிக்கப்பட்டார். அந்தப் பெயரே ஒரு புனைவாய் இருக்கும்போது அதிலிருந்து புனைவின் வெவ்வேறு நிறங்களை வடிவங்களை சுவையை உருவாக்கமுடியும் என்றே தோன்றியது. அதற்குப்பிறகு நான் தாமதிக்கவில்லை. வாசிப்புகளினூடாக பகத்சிங் குறித்து எனக்கிருந்த மனப்பதிவுகளின் சித்திரமாக முதல்வரைவை ஒரேமூச்சில் எழுதிமுடித்தேன். பிறகான வேலைப்பாடுகளுக்குதான் சற்றே கூடுதலாக உழைப்பு தேவைப்பட்டது. கதையில் இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தகவல்களும் புனைந்து எழுதப்பட்டவையும் ஒன்றுக்கொன்று இசைமையோடு இழையும் வண்ணமாக எழுதுவதன் மூலம்தான் வரலாற்றை ஒரு புனைவாகவும் புனைவை வரலாற்றின் ஒரு பகுதியாகவும் நிலைமாற்றம் செய்யவைக்கமுடியும் என்பதை இக்கதையை எழுதியதனூடாக விளங்கிக் கொண்டேன் என்றே சொல்லவேண்டும்.

தவிரவும் ஒரு தொழில்முறை பட்டாளத்தானைப்போல காட்டப்படுகிற பகத்சிங்கின் உருவத்தை நான் எப்போதும் ரசித்ததேயில்லை. சிவகாசியில் காலண்டர் அச்சிடுபவர்கள் கண்டுபிடித்த அந்த பொம்மை முகத்தில் எவ்வித மனவோட்டத்தையும் நீங்கள் அறிய முடியாது. பகத்சிங்கின் அசலான புகைப்படங்களைப் பாருங்கள், அவனை நீங்கள் இதற்குமுன் எங்கோ சந்தித்திருப்பதைப்போன்ற உணர்வு வரும். நம்மில் ஒருவன் என்று அவனை நம்பத்தொடங்கிவிடுவீர்கள். புரட்சியாளர்கள் இறக்குமதிச் சரக்குகளல்ல, அவர்கள் இந்தச் சமூகத்தின் அழுத்தத்திலிருந்தும் தேவையிலிருந்தும் உருவாகி வருகிற நமது சொந்தப்பிள்ளைகள் என்பதனை விளங்கப்படுத்துகிற குறியீடாகவும்கூட நான் பகத்சிங்கை உருவகித்துக் கொள்வது இதனால்தான். வெகுசாமான்யனான ஒரு பஞ்சாபி இளைஞன்தான் பகத்சிங் என்ற மகத்தான வெல்லற்கரிய புரட்சியாளனாக உருவானான் என்று காட்டுவதன் மூலம்தான், நம்மாலும் முடியுமென்று எளியமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அப்படியானதொரு பகத்சிங்கைத்தான் ரஞ்சித்தாக எழுத முயன்றிருக்கிறேன்.

கேள்வி: ஆக்க்ஷன் (Action) மூலம் சிறைப்போராளிகளை விடுவிப்பதும் கொடூர அதிகாரிகளைக் கொல்வதும் என நடந்த வேட்டையில் சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டார்களா?

உண்மையில் அன்று பயங்கரவாதிகள், அமிதவாதிகள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட பகத்சிங்கும் அவரது தோழர்களும் வன்முறை என்பதை மிகக்கடைசியான வழிமுறையாகவே நம்பினார்கள் - பயன்படுத்தினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் காயம் அல்லது உயிர்ச்சேதம் விளைவிக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டினை பாராளுமன்றத்திற்குள் வீசியிருக்கமுடியும். அவர்களது நோக்கம் அதுவல்ல. அந்த சபையினுடைய - அதன்வழியே உலகினுடைய கவனத்தை ஈர்ப்பதுமட்டுமே அவர்களது நோக்கமாயிருந்தபடியால் வெறுமனே சத்தம் எழுப்புமளவிலான குண்டையே வெடிக்கச்செய்தார்கள்.

இன்றைய ஆட்சியாளர்களே தம்மை எதிர்க்கும் சொந்தமக்களை கறுப்புச் சட்டங்களைக் கொண்டு விசாரணைகூட இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்தி வைக்கும் ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள். தமக்கு தொல்லையென்று கருதக்கூடியவர்கள்மீது தேசவிரோத முத்திரைகுத்தி உள்ளே தள்ளவோ அல்லது என்கவுண்டரில் போட்டுத்தள்ளுவோ இந்தத் தேசிய அரசுகள் தயங்குவதேயில்லை. இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்யாத அட்டூழியங்கள் என்று ஏதாவதுண்டா உலகத்தில்? கொன்ற பின்பு நுரையீரலை ஓட்டையாக்கி கடலுக்குள் வீசிவிட்டால் பிணம் மேலே வராது என்கிற கொடிய உத்திகளையெல்லாம் அவர்கள் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்டிருக்கிறார்கள். சானல் 4 வெளியிட்டிருக்கிற வீடியோக்களைப் பார்த்தால் நடந்திருக்கும் கொடுமைகளின் உண்மைநிலவரம் பற்றிய சிறுபகுதியையாவது உணரமுடியும். இதற்கு சற்றும் குறையாதவர்கள்தான் இந்திய ஆட்சியாளர்களும். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்திவரும் கொடூரங்கள் மனிதநாகரீகத்திற்கு அப்பாற்பட்டவை. கனிமவளங்களை கொள்ளையடிக்க வருகிற பன்னாட்டு நிறுவனங்களுக்காக சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸா போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் நரவேட்டையாடப்படுகின்றனர். சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக நடைபெறுகிற நிலப் பறிமுதல், அந்த மண்டலங்களுக்குள் பணியாற்றும் தொழிலாளர்கள்மீதான உழைப்புச்சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பவர்களை ஈவிரக்கமற்று சுட்டுத்தள்ளி தமது இரும்புக்கரத்தின் பலத்தை சொந்த மக்கள்மீதே சோதித்துப்பார்க்கிற ஆட்சியாளர்களை பல திக்கிலும் கண்டுவருகிறோம்.

சொந்த மக்கள் என்று சொல்லிக்கொண்டே அவர்களது உயிரையும் உடைமையையும் சுயமரியாதையையும் அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களே பறிக்கிற கொடுங்கோலர்களாய் இருக்கிறபோது பகத்சிங் காலத்து அந்நிய - பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாய் இருந்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

உலகம் முழுதுமிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட தங்களது காலனிநாடுகளில் காப்பி தேயிலை ரப்பர் போன்ற பெருந்தோட்டத் தொழில்களுக்கும் சுரங்கம் வெட்டவும் ரயில் பாதை அமைக்கவும் துறைமுகம் உருவாக்கவும் இந்தியாவிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட தொழிலாளர்களை பிரிட்டிஷார் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை வரலாற்றுப்பிரக்ஞையுள்ள எந்தவொரு மனிதரும் மறந்துவிடவோ மன்னிக்கவோ முடியாது. ‘‘மலேயாவில் ஒரு தொழிலாளி மனிதக்கழிவை ( பீ தான் சார் ) உண்ணுமாறு பலவந்தப் படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானான். அதனை விசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்றுநோய்க் கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை எனத் தீர்ப்புக் கூறினார்... இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு தொழிலாளி பட்டினி போடப்பட்டதால் தனது எஜமானனின் குதிரை லாயத்தில் மரணமடைந்தான்...’’ (மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகள் பக்-12). ஐந்து ஆண்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் பிடித்துப்போகப்பட்ட பெண்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? எஸ்டேட்டுகளுக்கு செல்லும் மலைப்பாதையெங்கும் அழுகியப் பிணங்களும் எலும்புக்கூடுகளும் பெருகிக் கிடந்ததென்ற அச்சமூட்டும் தகவலை இலங்கையின் மலையகத்திற்கு சென்றவர்கள் பதிவுசெய்துள்ளனர். இதே கொடிய அனுபவம் தமிழகத்தின் ஆனைமலைப்பகுதிக்குச் சென்றவர்களுக்கும் இருந்ததை எரியும் பனிக்காடு நாவல் காட்டித்தருகிறது.

பெண்களை சாக்குப்பைக்குள் நிறுத்தி அதன் உள்ளுக்குள் ஒரு பூனைக்குட்டியையும் போட்டு இடுப்பில் கட்டிவிட, தப்பிக்கும் மூர்க்கத்தில் அந்தப் பூனைக்குட்டி அந்தப்பெண்ணின் அடிவயிறுவரை தன் கூரிய நகங்களால் பிராண்டிக் குதறிவிடுவதாக சிங்கப்பூர் இளங்கோவனின் நாடகம் ஒன்றில் காட்டப்படுவதைப்போன்ற சித்திரவதைகளை பிரிட்டிஷார் உலகெங்கிலும் அரங்கேற்றியிருக்கிறார்கள். சித்திரவதைகளின் கொட்டடியாகத்தான் அவர்கள் சிறைச்சாலைகளை வைத்திருந்தனர் என்பதற்கு அந்தமானின் செல்லுலார் சிறை இன்றைக்கும் சாட்சியமாய் இருக்கிறது. கைது செய்யப்பட்ட மாப்ளா போராட்டக்காரர்களை கூட்ஸ் வண்டிக்குள் அடைத்து மூச்சித் திணறி சாகவைத்து அவ்வளவு பேரையும் பிணமாகக் கொண்டுவந்து கொட்டியதை கேரளத்தின் திரூர் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. இப்படி இந்தியப் பரப்பில் பிரிட்டிசார் நிகழ்த்திய அட்டூழியங்களின் பட்டியல் மிகநீண்டது. (அப்பேர்ப்பட்ட கொடுமைக்கார பிரிட்டனை இன்று மாபெரும் மனிதவுரிமைக் காவல்நாடென நம்பி சிலர் முறையிடும் அவலத்தை என்னென்று சொல்ல?)

ஆகவே, இப்படியான கொடுமைகளை நிகழ்த்திவந்த அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட அன்றைக்கு வேறுமார்க்கங்கள் இல்லாத நிலையில் ‘கணக்குத் தீர்க்கும்’ வழிமுறையை மேற்கொள்ள வேண்டிய தவிர்க்கமுடியாத நிலை போராளிகளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். அப்படியான நடவடிக்கைகளை அன்றைய காலப் பின்னணிக்குள் பொருத்திப் பார்க்காமல் போனால் அது வெறுமனே கொலை என்பதாக குறுக்கிப் புரிந்துகொள்ளும் அபத்தத்திற்கு இட்டுச்சென்றுவிடும். மற்றபடி பொதுமக்களது உயிருக்கும் உடைமைக்கும் சேதத்தை ஏற்படுத்தி அதன்மூலம் ஆட்சியாளர்களை நிர்ப்பந்திப்பது அல்லது சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தைத் தூண்டுவது என்ற இழிவான உத்தியை பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் செய்தாரில்லை. ‘‘...அதிகாரப்பூர்வமான பயங்கரவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? புரட்சியாளர்களின் எதிர்பயங்கரவாதத்தால் மட்டுமே இந்த அதிகாரத்துவ அச்சுறுத்தலுக்கு உண்மையான தோல்வியைக் கொடுக்க முடியும்...’’ என்கிற புரிதலுடன்தான் அவர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள்.

‘‘ஒரு மனிதனின் இறப்பிற்காக வருந்துகின்றோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த இவன், மிகக் கொடூரமானவன், கீழ்த்தரமானவன், கேவலமானவன், ஒழிக்கப்பட வேண்டியவனாவான். உலகில் உள்ள அரசாங்கங்களிலேயே மிகக்கொடுங்கோன்மை அரசாக விளங்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜண்ட்டாகச் செயல்பட்ட இவன் இறந்துவிட்டான். ஒரு மனித உயிரின் ரத்தம் சிந்தப்பட்டதற்கு வருந்துகின்றோம். ஆனால் அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக்கூடியதும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாகக்கூடியதமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலி தவிர்க்க இயலாதவையே....’’ சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டது குறித்து பகத்சிங்கும் அவரது தோழர்களும் 1928 டிசம்பர் 18ம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணப்படுகிற இந்த வாசகங்கள் நமக்குப் போதுமான விளக்கங்களைத் தந்துவிடுகின்றன.

கேள்வி: "சனத்தொகையில் சரிப்பாதியாய் இருக்கும் நீங்கள் பங்கெடுக்காமல் எதைச் சாதிக்க முடியும்?" இந்த வார்த்தையை நீங்கள் யாரை நோக்கி முன் வைக்கிறீர்கள்?

ப‌தில்: புரட்சிகரத்தன்மைக்கு உரிமைகோருகிற பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும்கூட ஆண்களின் சபைகளாக தேங்கிக் கிடப்பது குறித்த எனது அதிருப்தியை நான் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். மொழியால் செயலால் இது ஆண்களின் அமைப்பு என்கிற கருத்து தொடர்ந்து வெளிப்படுத்தப்படுகிறது. அவை ஆண்மையவாத சிந்தனைகளால் அழுகிப் போயிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே பெண்கள் அமைப்புகளுக்கு வெளியே இருக்கிறார்கள்.

கட்சிகளால் அணிதிரட்டப்பட்டிருக்கிற பெண்கள், கட்சியின்/ இயக்கத்தின் பொத்தாம்பொதுவான முடிவுகளை பெண்களிடம் கொண்டு செல்வதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றரே தவிர, பெண்களின் தனித்துவமான நிலைமைகளையும் தேவைகளையும் கட்சிக்குத் தெரிவித்து அவை குறித்து முழுகட்சியின் கவனத்தையும் செயல்பாட்டையும் கோருகிறவர்களாக செயல்படுவதற்கான சாத்தியங்கள் அரிதாகவே தென்படுகின்றன. இந்த ஒருவழிப்பாதை அணுகுமுறையால் பெண்களின் கருத்தியல் பங்களிப்பைப் பெறாமலே ஆண்வயப்பட்ட ஒற்றைத்தன்மையுடன் இயங்குகின்ற அமைப்புகளே பெரும்பான்மை. பெருவாரியான ஆண்களுக்கிடையில் பிரதிநிதித்துவ அடிப்படையில் போனால் போகிறதென்று அனுமதிக்கப்பட்டவர்களாக பெண்கள் நடத்தப்படுகின்றனர். இதனால் அவர்கள் மிகத் தாழ்ந்த ஸ்தாயியில் பேசுகின்றனர். அல்லது பெரும்பான்மைக்கு கீழ்ப்படிந்து / ஒத்துழைத்து பிரச்னையில்லாதவர்களாக சிலமேடைகளை பகிர்ந்துகொள்கின்றனர். பெண்கள் பொதுவாழ்வில் பங்கெடுப்பதற்கரிய சாதகமான நிலைமைகளை உருவாக்குவதற்கான கருத்தியல் போராட்டத்தை ஆண்களிடம் நடத்துவதற்கோ பாலின சமத்துவத்துவம் என்பதில் உளப்பூர்வமான ஈடுபாடு கொள்வதற்கு தனது அணிகளை தயார்படுத்துவதற்கோ இங்குள்ள இடதுசாரி இயக்கங்களே வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்ற நிலையிருக்கும்போது மற்றக்கட்சிகளைப் பற்றி நான் சொல்வதற்கொன்றுமில்லை. மார்க்சீய சொற்றொடர்களையே பிரயோகித்து பாலின சமத்துவத்தை மறுக்கிற சில இடதுசாரிகளின் சாமர்த்தியம் குறித்து நான் அச்சம் கொண்டதுண்டு. ஆகவே பெண்கள் பங்கேற்காத எந்தப் புரட்சியும் முழுமையடையாது என்று லெனின் எச்சரித்திருப்பதை திரும்பத்திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது- நமக்கும் மற்றவர்களுக்கும். அதனால்தான் ‘‘பூமியின் மீதிலே அடிமையொருவன் இருக்கும் வரை/ நீங்கள் சுதந்திரமும் துணிச்சலும் கொண்டவர்கள் என்று கூறு இயலுமா...’’ என்கிற ஜேம்ஸ் ரஸ்ஸல் லொவல் என்பவரின் கவிதைவரிகளை தன் குறிப்பேட்டில் கவனப்படுத்தும் பகத்சிங் நிச்சயம் பாலின அடிமைத்துவத்திற்கும் எதிரானவனாகத்தான் இருப்பான்- இருக்கவேண்டும் என்று சொல்ல விரும்பினேன்.

பகத்சிங் தன் நண்பன் சகதேவுக்கு காதல் குறித்து எழுதிய கடிதத்தின் வாசகங்களும்கூட என்னை இம்முடிவுக்கு இட்டுச்சென்றதற்கு காரணமாய் இருக்கலாம். ஆகவே கதவுக்குப் பின்னிருந்து பேசும் பதுமைகளென பெண்களை உருவகப்படுத்தி ஒடுக்கிவந்தக் காலத்தில், அரசியல் போராட்டத்தில்- பொதுவாழ்வில் பங்கெடுக்க பெண்களும் முன்வரவேண்டும் என்ற பொருளில் "சனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கெடுக்காமல் எதைச் சாதிக்க முடியும்?" என்று ரஞ்சித் சொல்வதாக எழுதினேன். இது பகத்சிங் மற்றும் அவனது தோழர்கள்மீது வலிந்து கூறப்பட்ட எனது விருப்பமல்ல. 6.4.1928 அன்று வெளியிடப்பட்ட அவர்களது வெகுசன அமைப்பான ‘நவஜவான் பாரத் சபா என்னும் இளைஞர் அமைப்பின் கொள்கையறிக்கை இவ்வாறு நிறைவுபெறுகிறது- ‘‘ஒரு தேசத்தின் உருவாக்கம், தங்களது சொந்த சுகங்களையும் நலன்களையும் காட்டிலும் தங்களது சொந்த உயிர்களையும் தாம் நேசிப்பவர்களின் உயிர்களைக் காட்டிலும் தங்களது நாட்டுநலனையே பெரிதெனப் பேணும் ஆயிரக்கணக்கான பெயர் தெரியாத ஆண்கள் பெண்களின் தியாகங்களையே வேண்டுகிறது...’’

கேள்வி : "யங் இந்தியாவில் வெளியான கட்டுரைகளின் வழியே புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கும் அரசின் அத்துமீறல்களுக்கு தனது ஒப்புதலை காந்தி பகிங்கரமாக வெளிப்படுத்தினார், இதன் மூலம் போலிஸின் அட்டூழியம் தொடங்கியது". உங்களின் இந்தச் சிறுகதையின் ஒட்டுமொத்த பகுதியிலிருந்து காந்தி எவ்விதமான அடையாளத்தைப் பெறுகிறார்? அவரின் அரசியல் செயல்பாடுகள் மீதான தங்களின் மதிப்பீடு என்ன? மேற்கண்ட காந்தியின் ஒப்புதல் புரட்சிக்காரர்களை ஒடுக்கியதா?

ப‌தில்: காந்தியின் அகிம்சாவழிக்கு முரணாக வெளிப்படும் வன்முறையைக் கையிலெடுத்ததால்தான் கடைசிவரை காந்தி பகவத் சிங் மீது எதிரான கொள்கையைக் கொண்டிருந்தார்?தாங்கள் கோரிய சீர்த்திருங்களும் ஏற்கப்படாத நிலையில் ‘‘ எரிச்சலடைந்தக் குழந்தை ஒன்றின் வீம்பான எதிர்ச்செயலைப்போலவே’’ காங்கிரஸ் பூரண விடுதலைக் கோரிக்கையை எழுப்பியது என்பதே புரட்சியாளர்களின் மதிப்பீடு. எனவே காங்கிரஸ் கோரிய விடுதலையின் எல்லைகள் மிக்குறுகியவை. இந்தியச் சுதந்திரம் எவ்வகைப்பட்டதாக இருக்கவேண்டும், அதற்கானப் போராட்டம் எத்தகைய வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும், போராட்டத்தின் தலைமை யார், நேசஅணிகள் எவை என்பவற்றின் மீதான நிலைப்பாடுகளில் பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்கள் காந்தியிடமிருந்து வேறுபடுகின்றனர். ‘‘நாம் தொழிலாளர்களை விடுதலைப் போராட்டத்தினுள் திருப்பிவிடக்கூடாது. ஆலைத்தொழிலாளர்களை அரசியல்ரீதியாகப் பயன்படுத்துவது அபாயகரமானது’’ என்கிற கருத்து காந்திக்கு தொடக்கம் முதலே இருந்தது. ‘‘உண்மையான புரட்சிகர ராணுவத்தினர் கிராமங்களிலும் தொழிற்சாலைகளிலுமே உள்ளனர். விவசாயிகளும் தொழிலாளர்களுமே அவர்கள்...’’ என்பது பகத்சிங்கின் கருத்தாக இருந்தது. ஆகவே காந்திக்கும் பகத்சிங்குக்கும் இடையே விரிகின்ற முரண் அரசியல்ரீதியானது.

காந்தி என்றால் அகிம்சை என்கிற ஒரு சித்திரம் மட்டுமே திரும்பத்திரும்ப காட்டப்படுகிறது. அது இட்டுக்கட்டப்பட்டதொரு தோற்றம். இம்சை என்பது ஆயுதம் கொண்டு வதைப்பது மட்டுமல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் காந்தியின் அகிம்சை எந்தளவிற்கு மற்றவர்களுக்கு இம்சையாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். தன்னையே வருத்திக்கொள்ளும் மனவலிமையின் மூலம் ‘‘எத்தனை ஓ’டயர்களையும் ரீடிங்குகளையும் இர்வின்களையும் அவரால் இந்தியாவின் நண்பர்களாக மாற்ற முடிந்தது?’’ என்கிற கேள்வி முக்கியமானது. அஹிம்சை என்பதில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை சோதித்துப் பார்ப்பதற்காக இந்தநாட்டின் கோடானகோடிப் பேரின் போர்க்குணத்தையும் தியாகத்தையும் உயிர்ப்பலிகளையும் வீணடித்து பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தை நீட்டிக்க வைத்தக் குற்றத்தில் காந்திக்குள்ள பங்கை நாம் பரவலாக பேசுவது கிடையாது.

‘மீரட் சதி வழக்கு, லாகூர் மற்றும் பெஷாவர் அட்டூழியங்களின் சூத்ரதாரியான வைஸ்ராய்’ இர்வின் 1929 டிசம்பர் மாதத்தில் சென்ற சிறப்பு ரயிலின் அடியில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. ஆனால் அவர் தப்பித்துவிட்டார். வைஸ்ராய் தப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி சொன்ன காந்தி புரட்சியாளர்களைக் கண்டித்து வெடிகுண்டின் வழிபாடு என்று கட்டுரை எழுதினார். தொடர்ந்தும் அவர் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் புரட்சியாளர்களை தனிமைப்படுத்த முயற்சித்துக்கொண்டேயிருந்தார். புரட்சியாளர்கள் உள்ளிட்டவர்களாலும் இந்த நாட்டின் தலைவரென ஏற்கப்பட்ட அவரிடமிருந்து வெளியான இவ்வகையான கருத்துகள்தான் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிடப்படுவதை தடுப்பதில் காந்திக்கு மனத்தடையை ஏற்படுத்தியிருந்தது. அவர் தன்குரலை உரிய தொனியில் உரிய நேரத்தில் ஏன் எழுப்பவில்லை என்பதற்கான பதில் வெற்றிடமாக உள்ளது. ஆனால் அதில் மர்மமொன்றும் இல்லை. புரட்சியாளர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தீர்த்துக்கட்டியதன் மூலம் தனது அரசியலுக்கு எதிரான- கடக்கமுடியாத தடைகள் நீங்கிவிட்டன என்கிற தற்காலிக நிம்மதிகூட அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

கேள்வி: ஆனால், ரஞ்சித் இந்தக் கதையில், அவனுடைய நான்கு புத்தகங்களும் அச்சாகிய பிறகு, அதைக் காந்திக்கும் அனுப்பி கருத்து கேட்குமாறு சொல்லும் இடம் நெருடலை ஏற்படுத்துகிறது. ரஞ்சித்திற்கு முற்றிலும் முரணான ஒரு காந்தியிடம் ஏன் ரஞ்சித் தனது புத்தகங்களைக் காட்டி கருத்துக் கேட்க வேண்டும் என்கிற ஆவலைக் கொண்டிருக்க வேண்டும்? அதன் அவசியம் என்ன?

ப‌தில்: "ச்சே.. அந்தாள் மூஞ்சில ஜென்மத்துக்கும் முழிக்கமாட்டேன்.." என்கிற இன்றைய தலைவர்களின் வறட்டுகௌரவமும் வெற்றுவீம்பும் காந்திக்கும் பகத்சிங்குக்கும் இருந்திருக்க வேண்டுமா என்ன? தனிநபர்கள் என்ற வகையில் அவர்களுக்கிடையே எவ்விதப் பகைமையோ காழ்ப்போ இல்லைதானே? மாற்றுக்கருத்துள்ளவர்களையெல்லாம் போட்டுத்தள்ளுகிறவரல்ல பகத்சிங். அவர் மாற்றுக்கருத்துக் கொண்டோரிடம் தொடர்ச்சியாக உரையாடலை நடத்திக் கொண்டிருந்தார். ‘வெடிகுண்டின் வழிபாடு’ என்ற காந்தியின் கட்டுரைக்கு ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்று பகவதி சரண் வோரா எழுதிய மறுப்பாகட்டும் அல்லது காந்தி-இர்வின் ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவிருந்த நேரத்தில் சுகதேவ் காந்திஜிக்கு எழுதிய பகிரங்கக் கடிதமாகட்டும் - இவையெல்லாம் இந்த உரையாடலின் பகுதிகளே. புரட்சி என்பதன் பொருளை அதன் முழுஅர்த்தத்தில் வெகுமக்களும் இந்த சமூகத்தின் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பிய பகத்சிங் தன் நூல்கள் மீதான காந்தியின் அபிப்ராயத்தை எதிர்வினையை அறிந்துகொள்வதில் ஆர்வமுடயவராகவே இருந்திருப்பார் என்ற நம்பிக்கையிலேயே அவ்வாறு எழுதியிருக்கிறேன். எதிரும்புதிருமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த அதேவேளையில் பரஸ்பரம் மரியாதையுடன் இருக்கிற நல்லமரபுகள் இந்திய அரசியலில் இருந்திருக்கின்றன.

கேள்வி: "கடவுளுக்கு முன்பே உலகம் இருந்தது என்பதைப் போல எனக்குப் பின்னும் இருக்கும் ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்று கொண்டிருக்க முடியாது" வரலாற்றில் நாம் எத்தனையோ போராளிகளை இழந்துவிட்டோம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மக்கள் அரசியல்/அதிகாரப் பலத்தால் ஒடுக்கப்படும்போது ஒரு போராளி அந்தச் சமூகத்திலிருந்து பிறப்பான் எனச் சொல்லப்படுவதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? ஒரு போராளியின் கனவு ஏகாதிபத்தியங்களை எந்த வகையில் உடைக்க நினைக்கிறது? அவனது உயிரைப் பறிப்பதிலா அல்லது அவனது அதிகாரத்தைப் பலவீனமாக்குவதிலா? ஏதாவது ஒரு வரலாற்றை முன்வைத்தும் சொல்லலாம்.

ப‌தில்: "கடவுளுக்கு முன்பே உலகம் இருந்தது என்பதைப் போல எனக்குப் பின்னும் இருக்கும் ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்று கொண்டிருக்க முடியாது" என்ற வரிகளை நானாகத்தான் எழுதினேன். பகத்சிங் மற்றும் அவனது தோழர்களைப் பொறுத்தவரை இந்த வரிகள் பொய்யில்லைதானே? அந்த ஆளுமைகளின் குறுக்கீடும் செல்வாக்கும் வெவ்வேறுதளங்களில் வெளிப்படையாகவும் மறைபொருளாகவும் இன்றளவும் நம்மை வழிநடத்தத்தானே செய்கின்றன? அவர்கள் உருவாக்கிய இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் உணர்வினில் கலந்துவிட்ட முழக்கமல்லவா?

"மாலைநேரத்தில் நெருப்புமூட்டிக் குளிர்காயும் விவசாயியுடன் வட்டமாய் அமர்ந்து அவ்விவசாயி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் முயற்சி செய்திருக்கிறாரா? ஒரு மாலைப்பொழுதையாவது ஒரு ஆலைத்தொழிலாளியுடன் கழித்ததுண்டா? தனது உறுதிமொழிகளை அத்தொழிலாளியுடன் அவர் பகிர்ந்து கொண்டதுண்டா?" என்ற கேள்விகளை காந்தியைப் பார்த்து கேட்பதற்கும் முன்பாக பகத்சிங்கும் அவரது தோழர்களும் முதலில் தங்களைத்தாங்களே கேட்டுக்கொண்டார்கள். போராளிகள் அந்தரத்திலிருந்து வருவதில்லை, அவர்கள் தங்களைப் போன்ற சாமான்யர்களிலும் சாமான்யர்களிலிருந்துதான் உருவாகிறார்கள் என்பதை அறிந்தேயிருந்தனர். குறிப்பாக, தாங்கள் மகாத்மாக்கள் அல்ல என்பதில் தெளிவாயிருந்தனர். அவர்கள் சாமான்ய மக்களுக்குள் தண்ணிக்குள் மீனாகத் தங்கி, அவர்களது நலனுக்காகப் போராடுவதையே நோக்காகக் கொண்டிருந்தார்கள். உள்ளூர் மட்டத்திலான உணர்வுகளை சர்வதேசப் போக்குகளுடன் இணைக்கவும் அவர்கள் தவறவில்லை. தனியொரு மனிதனாய் இருந்து தனது மூளையிலிருந்து உதிக்கிற குழப்பங்களுகேற்றபடியெல்லாம் மக்களை மந்தைபோல நடத்துகிறவர்களை போராளி என்பதாக வரலாறு பதிந்துகொள்வதில்லை. அவர்களுக்கு வேறுபெயர் இருக்கிறது. கண்ணியமானதொரு வாழ்வு குறித்த வெகுமக்களது விருப்பார்வங்களை உணர்ந்து அவற்றை ஒருங்கிணைத்து, அடைவதற்கான வழிமுறைகளையும் அமையவிருக்கும் புதிய சமூக அமைப்பிற்கான வரைவையும் வளர்த்தெடுப்பவர்களாகிய போராளிகள் எல்லாக்காலத்திலும் உருவாகித்தான் வருகிறார்கள். அப்படியான போராளிகள் தங்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் பின்னாளில் தகுந்த வெகுமானம் கிடைக்கும் என்று ஒருபோதும் ‘கணக்குப்பண்ணி’ போராடுவதில்லை. களத்திலே நிற்பதென்று முடிவான பிறகு சமரசமோ சரணாகதியோ இன்றி போராடுகிறார்கள். அதிலே உயிர்த்தியாகம் உள்ளிட்ட எதையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ‘தியாகிகள் சிந்தும் செங்குருதி உணவிலேயே இளம் சுதந்திரப்பயிர் செழித்து வளரும்’’ என்று நம்புகிற - போராடுகிற- தியாகம் செய்கிற பரம்பரை ஒன்று எப்போதும் இயங்கும்.

‘ஒரு நிராதரவான மனநிலை சமூகத்தைப் பீடித்திருக்கும்போது, அழிவைத் தரக்கூடிய அந்த மனச்சோர்வை வெற்றிகொள்வதற்காக - ஓர் உண்மையான தியாக உணர்வை ஊட்டுவதற்காக’ புரட்சியாளர்கள் போராட்டங்களின் முன்வரிசையில் நிற்கிறார்கள். முன்வரிசையில் என்றால், மக்களைத் திரட்டிக்கொண்டுதான்.

புரட்சியாளர்களின் நடவடிக்கை என்னமாதிரியான விளைவுகளை உருவாக்குகின்றன என்றால், ‘‘ஒடுக்குவோரின் மனதில் பயபீதியை உண்டாக்குகிறது. ஆனால், ஒடுக்கப்படும் மக்களிடத்திலோ அது பழிவாங்குவதற்கும் மீட்சிக்குமான நம்பிக்கையை விதைக்கிறது. ஊசலாட்டத்தில் இருப்பவர்களுக்குத் துணிவையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. பயங்கரவாதமானது ஆளும் வர்க்கமே வலிமை வாய்ந்தது என்ற மாயையைத் தகர்த்தெறிந்து உலகத்தின் பார்வையில் ஒடுக்கப்பட்ட இனத்தின் அந்தஸ்தை உயர்த்துகிறது...’’ இந்த அடிப்படைக்குள் பொருந்திவருகின்றதா என்று உலகத்தின் எந்தவொரு அமைப்பையும் நீங்களே பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.

கேள்வி: "ஏகாதிபத்தியத்திற்கு சற்றும் குறைவில்லாமல் ஒவ்வொரு இந்துவும் தனக்குக் கீழிருக்கும் சாதிகளை ஒடுக்குகிறான்" - சிறுகதையிலிருந்து. இதைப் பின்காலனிய மனோபாவம் எனச் சொல்லலாமா அல்லது காலனியக் காலக்கட்டத்தில் உக்கிரமாக உருவான சாதி அமைப்பு எனச் சொல்லலாமா? இந்து என்கிற அடையாளம் ஏகாதியபத்தின் இரண்டாம்தர அதிகார தரகர் என அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா? எது நீங்கள் கதையின் வழி முன்வைக்கும் இந்து?

ப‌தில்: உண்மையில் இந்து என்று ஒருவர் எந்தகாலத்திலும் இருந்தது கிடையாது. அது இட்டுக்கட்டப்பட்டதொரு மாயை. எவரொருவர் பௌத்தவராகவோ சமணராகவோ பார்ஸியாகவோ இஸ்லாமியராகவோ கிறித்தவராகவோ இல்லையோ அவர்தான் இந்து. இப்படியொரு வெட்கங்கெட்ட விளக்கம் வேறு எந்த மதத்தவருக்காவது உண்டா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். புராதன இந்தியப்பரப்புக்குள் நிலவிய பன்முகப்பட்ட வழிபாட்டுமுறைகளின் தொகுப்பை ஒரு பூர்வீக மதம் என்று வகைப்படுத்துவதாயிருந்தால் ஆரியர்களது வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வைதீக மதம்தான் இந்தியாவிற்கு முதல் அன்னிய மதம். இந்த வைதீக மதத்திற்கு வெளியே வேறு வழிபாட்டு மரபுகள் இருந்தன. வைதீக மதத்தின் கொடுங்கோன்மைகளுக்கு எதிராக அவைதீக மதங்கள் தோன்றின. இவை எல்லாவற்றிலிருந்தும் சாத்தியமானதையெல்லாம் உறிஞ்சிக் கொண்ட ஒரு கலவைதான் இன்றைக்கு இந்துமதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கு மதம் என்பது ஒருவருக்கு முற்றுமுடிவான அடையாளமல்ல. நான் ஒரு இந்து என்று ஒருவர் சொன்னால், நாங்களும் அந்த மசுருதான். உன் சாதியச் சொல்லு... என்பதுதான் அடுத்தக் கேள்வியாக இருக்கிறது. அதாவது சாதிதான் இந்துமதத்திற்கு அடிப்படை. அந்த சாதியடுக்கு அமைந்துள்ள விதமே ஏற்றத்தாழ்வானது, சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. சாதியடுக்கின் உச்சியில் தம்மை இருத்திக்கொண்ட பார்ப்பனர்கள் எல்லாச்சாதிகளையும் சுரண்டுவதற்கான அதிகாரங்களும் உரிமைகளும் கொண்டிருந்தனர். அதாவது எவருடைய உழைப்பையும் உடைமையையும் அபகரித்துக்கொள்வதற்கான அதிகாரம். அவர்களுக்கு அடுத்தநிலையிலான சாதியினர் தமக்கு அடுத்த நிலையிலிருந்த சாதிகளைச் சுரண்டினர். இந்த சுரண்டல் அமைப்பின் மொத்தச்சுமையையும் இழிவையும் பூர்வகுடிகளாகிய தலித்துகள் ஏற்கவேண்டியுள்ளது.

சமூகவளங்களைப் பகிர்ந்துகொள்வதில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வை / சுரண்டலை நியாயப்படுத்தவும் போட்டியாளர்களை அப்புறப்படுத்தவும் தீட்டு புனிதம் என்கிற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு ஒரு கடவுளாம்சம் தருகின்ற புராணங்களும் கட்டுக்கதைகளும் தேவைப்பட்டன. அவற்றை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதற்கான சட்டதிட்டங்கள் - உள்ளூர் கட்டப்பஞ்சாயத்து முதல் உச்சநீதிமன்றம் வரை- நிறுவப்பட்டுள்ளன. எனவே இங்கு சுரண்டல் என்பதோ ஒடுக்குமுறை என்பதோ புதிதல்ல. அதிகாரப்பூர்வமான சிறைகள் உருவாகும் முன்பே இங்கு சேரிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. இப்படி ஒருவரையொருவர் ஒடுக்குவதற்கான தத்துவப் பின்புலத்தை வழங்கக்கூடியதாய் இந்துமதம் இருப்பதை மிகச்சரியாய் அம்பலப்படுத்திய அம்பேத்கர் அந்த இந்தமதத்தை விட்டு வெளியேறுவதுதான் சுதந்திரமாக வாழ விரும்பும் ஒருவர் செய்ய வேண்டிய முதற்பணி என்றார்.

இந்திய ஆதிக்கச்சாதியினர் ஒருபக்கம் இந்தியவாதம் பேசிக்கொண்டே மறுபக்கத்தில் காலனியாட்சியாளர்களின் இளையபங்காளிகளாகவும் சேர்ந்து கொண்டனர். காலனியாதிக்கம் தன்தேவையிலிருந்து உருவாக்கிய கல்வி, தொழில், அரசுப்பதவிகள் போன்றவற்றை கையகப்படுத்தி அதிகாரத்தின் ஒருபகுதியாகி நாட்டுமக்களை தம்பங்குக்கு சுரண்டினர். மக்களது போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தால் காலனியாட்சியாளர்கள் வெளியேற நேர்ந்தபோது அவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட இவர்கள் சுதந்திர இந்தியாவின் வளங்களைத் தின்று இன்று கொழுத்திருக்கிறார்கள். உலகமயம் என்ற போர்வையில் ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து சுரண்டலைத் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்தச் சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக கொடிய கறுப்புச்சட்டங்களை வகுக்கிறார்கள். முதலாளித்துவமும் பார்ப்பனீயமும் நமக்கு முதன்மை எதிரிகள் என்ற அம்பேத்கர் சொன்னதன் முழுப்பொருளை முன்னெடுத்துச் செல்வதற்கான இயக்கங்கள் இன்றையத் தேவை.

கேள்வி: "இழப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் மார்க்சின் பிரகடனத்தை மறுப்பவர்களாக இந்திய உழைப்பாளிகளை இந்துமதம் பிறப்பிலேயே வடிவமைத்துவிடுகிறது"- சிறுகதையிலிருந்து மார்க்சின் இந்தப் பிரகடனத்தின் அர்த்தம் என்ன? (இழப்பதற்கு ஒன்றுமில்லை). இந்திய உழைப்பாளிகள் இதை மறுப்பதனால் என்ன ஆகுகிறார்கள்? இந்துமதம் பிறப்பிலேயே எப்படி இந்த மனநிலையைக் கட்டமைக்கிறது?

ப‌தில்: அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை, அடைவதற்கோர் பொன்னுலகுண்டு என்பது மார்க்சின் பிரகடனம். அடையப்போகிற பொன்னுலகில் எங்கள் சாதிக்கு தனித் தெருவுண்டா தனி சுடுகாடுண்டா தனி கோயிலுண்டா என்பதுதான் இந்தியர்களின் பிரச்னையாக இருக்கிறது. பூகம்பத்திலும் சுனாமியிலும் போரிலும் வீடுவாசல் சொத்துசுகம் குடும்பம் அவ்வளவையும் இழந்துவிட்டப் பின்னும் சாதியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிற வேதாளமனம் இந்தியருக்கு இருக்கிறது. சாதிப்பெருமை என்ற கற்பிதத்தை துறக்கமுடியாத இந்த மனநோயாளிகள் ஒவ்வொரும் மற்றவருக்கு அடிமைவிலங்கைப் பூட்டிவிட்டு தம்மையும் கூண்டுக்குள் அடைத்து பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். மொத்த பேருக்குமான சாவிக்கொத்து பார்ப்பனர் இடுப்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது. எந்தச் சூழலிலும் இழக்கக்கூடாததென இவர்களுக்குள்ள சாதிப்பெருமிதம் இயல்பிலேயே மற்றவர்களோடு ஒரு வர்க்கமாக அணிதிரள முடியாமல் தடுத்துவிடுகிறது. சாதி அப்படியே இருக்கட்டும், இப்போதைக்கு வர்க்கமாக திரட்டிவிடுவோம் என்று எவரேனும் சொன்னால் அவர்கள் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று அர்த்தம்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் என்று ஒரு இடதுசாரிக் கட்சி இருப்பதை தாங்களும் அறிவீர்கள். அதன் தமிழ்நாட்டுப் பிரிவில் பெரும்பாலும் தேவர் சாதியினர்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அக்கட்சியின் அகில இந்திய நிர்வாகி ஒருவர் அங்கு குழுமியிருந்த தனது கட்சியினரைப் பார்த்து பழக்கதோஷத்தில் ‘டியர் காம்ரேட்ஸ்’ என்று விளித்திருக்கிறார். காம்ரேடாவது கத்திரிக்காயாவது, டியர் காம்ரேட்ஸ் என்பதை ‘தேவரினச் சிங்கங்களே...’ என்று தமிழில் மொழிபெயர்த்தார்களாம். மார்க்சீயத்திற்கும் அந்தநிலை வந்துவிடக்கூடாது என்று குறைந்தபட்சம் நாம் கூட்டாக கவலையாவது படுவோமே - ரஞ்சித்தைப்போல.

கேள்வி: காந்தி ஏன் தீண்டத்தகாதவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கக்கூடாது என சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்? (20.09.1932)? அவருடைய அரசியல் புரிதல் சிறுபாண்மை இனத்தை ஒடுக்கியது என நினைக்கிறீர்களா?

ப‌தில்: யார் சாகும்வரை அவர் உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்வியை சற்றே திருத்தினால் நமக்கு இதற்கான விடை மிகவும் எளிமையாகவே கிடைத்துவிடும். தலித்துகளை தொடர்ந்து இந்துக்களின் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக - தலித்துகள் தமக்கான பிரதிநிதிகளைத் தாமே சுயமாக தேர்வு செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார். இந்துக்களின் தயவைப் பெறுகிற ஒருவர்தான் தலித்துகளின் பிரதிநிதியாக வரவேண்டும் என்ற சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்காக அவர் உண்ணாவிரதமிருந்தார். தலித்துகளின் அரசியல் உரிமைகளை இந்துக்களுக்கு கீழ்ப்பட்டதாக மாற்றியமைப்பதில் அவர் அடைந்த வெற்றி தேசத்தந்தை என்கிற முகமூடியை அணிந்துகொண்டிருந்த ஒரு இந்துசனாதனியின் நயவஞ்சகத்திற்கு கிடைத்த வெற்றி.

கேள்வி: உங்களின் இந்தச் சிறுகதை குறித்து எழுப்பப்பட்ட எதிர்வினைகள், வாசகப் பார்வையைப் பற்றி சொல்லுங்கள்.

ப‌தில்: போதுமான கவனம் பெற்றிருக்கிறது அல்லது இல்லை என்று சொல்வதற்கு எந்த அளவுகோலும் இங்கு இல்லை. ஆனால் பல நண்பர்கள் கதையைப் பற்றி ஏதோவொரு வகையில் விவாதித்தார்கள். குறிப்பாக பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து கதையில் வரும் பகுதியை சுட்டிக்காட்டி அது உண்மையா என்று பலரும் கேட்டார்கள். கதையை எழுதிக் கொண்டிருக்கும் போதே பகத்சிங் பற்றி மேலும் அறியும் ஆர்வத்தில் இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது Hidden Facts: Martyrdom of Shaheed Bhagat Singh- “Secrets unfurled by an Intelligence Bureau Agent of British-India” என்ற புத்தகத்தைப் பற்றிய அறிமுகக்குறிப்புகள் வாசிக்கக் கிடைத்தன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஏஜெண்ட்டாக இருந்த தலிப்சிங் அலகாபாதி என்பவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களையும் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள ஆவணங்கள் சிலவற்றைத் தரவுகளாகக் கொண்டும் குல்வந்த் சிங் கூனூர் மற்றும் ஜி.எஸ்.சிந்த்ரா ஆகியோர் எழுதிய இப்புத்தகம் 2005 அக்டோபர் 28ல் வெளியாகியுள்ளது. ( தற்போது இப்புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. Unistar Books Pvt. Ltd, S.C.O. 26-27, Sector 34 A, Chandigarh - 160022, ph: 0172 5077427, 5077428)

‘‘பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரையும் தூக்கிலிடும் நடவடிக்கைக்கு ஆபரேசன் ட்ரோஜன் ஹார்ஸ் என்ற சங்கேதப் பெயரிடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மக்களிடமிருந்த பெரும் கொந்தளிப்பின் காரணமாக, காலை எட்டுமணியளவில் தூக்கிலிடும் வழக்கத்திற்கு மாறாக 1931 மார்ச் 23 மாலை 7.15 மணிக்குதான் மூவரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்ட மூவரும் உயிர் பிரியும் முன்பே கழுத்தெலும்பு முறிக்கப்பட்ட நிலையில் கீழிறக்கப்பட்டு மரக்கட்டைகள் நிரம்பிய ஒருலாரியில் ஏற்றப்பட்டனர். அவர்களுடன் ஒரு பிணமும் லாரிக்குள் ஏற்றப்பட்டது. அது அவர்களைத் தூக்கிலிட்ட தொழிலாளியினுடையது. தூக்கிலிடும் வேலையை முடித்ததற்கு சன்மானமாக அவரை பிரிட்டிஷார் கைது செய்த மிகக்கொடூரமான முறையில் கொன்றுவிட்டிருந்தார்கள். பிறகு லாரி லாகூர் கண்டோன்மென்ட்டுக்கு சென்றிருக்கிறது. அப்போதைய பஞ்சாப் கவர்னரின் தனிஉதவியாளராக இருந்த சாண்டர்சின் மாமனாரின் ஏற்பாட்டில் அங்கு காத்திருந்த சாண்டர்ஸ் குடும்பத்தார் மூவரையும் ஆத்திரத்துடன் சுட்டு பழிதீர்த்துக் கொண்டனர்... தூக்கிலிடப்பட்டவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியக்கூடாது என்பதனால் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறொரு இடத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டன... ’’.

‘‘சாண்டர்ஸ் கொலை வழக்கு குறித்து தனது நினைவுக்குறிப்பில் எழுதிப்போகும் பஞ்சாப் குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் வி.என்.ஸ்மித் ‘‘மாலை 7 மணியளவில் சிறைக்குள்ளிருந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் கேட்கத் தொடங்கியதை வைத்தே உள்ளுக்குள் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நினைவுக்குறிப்பு பிரிட்டிஷ் நூலகத்தில் நுண்படச்சுருளாக இன்றும் இருக்கிறதென்கின்றனர் நூலாசிரியர்கள். இந்நூல் வெளியானதையடுத்து பகத்சிங்கின் சகோதரி பிரகாஷ் கவுர் தனது சகோதரர் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியிருந்தார்.

-இப்படியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்று விளக்க வேண்டியிருந்தது. ஓரிருவராவது அந்தப் புத்தகத்தை தேடிவாங்கிப் படித்திருக்கக்கூடும். இன்னும் சில நண்பர்கள் ‘‘கோபப்படும்போது அழகாய் தெரியவேண்டும் என்று அலங்காரம் பண்ணக் கிளம்பிகிறவனால் ஒருபோதும் கோபப்படவே முடியாது’’ என்ற பெட்டிச்செய்தியைக் காட்டி ‘‘இது எங்கள் தலைவரைக் கிண்டலடித்து எழுதியதுதானே?’’ என்று கோபப்பட்டார்கள். உங்கள் கண்ணுக்கு அப்படித் தெரிந்தால் நானென்ன செய்ய என்று நழுவிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படி அலங்காரம் பண்ணிக்கொண்டிருப்பதிலேயே காலத்தையும் காசையும் வீணடிக்கிற தலைவர்கள் சிலர் எந்த இயக்கத்தில்தான் இல்லை என்று கேட்பதில் தவறொன்றும் இருப்பதாக நான் கருதவில்லை. போராளிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிற சிலர் விதவிதமான தோரணைகளில் தோன்றும் மெகாசைஸ் விளம்பரத்தட்டிகளைப் பார்த்து மனம் வெதும்பியே அவ்வாறு எழுதியிருந்தேன். தொண்டர்கள் கையில் இருக்கும் அற்பசொற்பத் தொகைகளையும் இப்படி தனது விளம்பரத்துக்காக செலவழிக்க வைக்கும் ஊதாரித்தலைவர்களை வேறு எப்படிதான் விமர்சிப்பது? சுவர் கண்ட இடமெல்லாம் இந்தத் தலைவர்களின் பெயரை ஆளுயரத்திற்கு எழுதிக்குவிக்கும் தொண்டர்கள் எத்தனை நாளைக்கு தங்களது சம்பாத்தியத்தை இதற்காக இழக்கமுடியும்? எனவே அவர்கள் வேறுவழியின்றி நெறியற்றவகைகளில் இயக்கங்களின் பெயரைச் சொல்லி பணமீட்டும் நிலைக்குத் தாழ்கிறார்கள். அரசியலில் ஒருவரது இருப்பு ஆடம்பரத்தின் வழியாகத்தான் நிறுவப்பட முடியும் என்று ஒரு இயக்கம் நினைத்துவிடுமானால் அதற்குப்பிறகு அது தன் தொண்டர்களிடம் எப்படி தொண்டுள்ளத்தை எதிர்பார்க்க முடியும்? தலைவர்களின் இந்தச் சீரழிவு மனநோய்க்கு ஒத்துப்போகிறவர்களும் செலவழிக்கக்கூடியவர்களுமே பதவிக்கும் பொறுப்புக்கும் உயர்த்தப்படுவார்கள் என்றாகிவிட்டால் பொதுவாழ்க்கை, அரசியல்பணி என்பதெல்லாம் மக்களுக்கானதல்ல என்றாகிவிடாதா? எனவே, போராளி தோற்றத்தில் இப்படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு உபயோகமாக வேறு எதுவும் செய்யலாமே என்று அந்தத் தலைவர்களைப் பார்த்து கேட்காமல் ஏன் எழுதினாய் என்று என்னைப் பார்த்து கோவித்துக் கொள்ள எந்தத் தார்மீகமும் கிடையாது என்று பொறுமையாக சொல்லத்தான் வேண்டியிருந்தது.

குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொரு விசயம், கதையில் வரக்கூடிய மெஹருன்னிசாவின் வயது குறித்த ஒரு காலக்குழப்பத்துடனேயே பிரசுரமாகிவிட்டது. கதையோட்டத்தில் நான் அதை கவனிக்கவேயில்லை. இதுவரை படித்த வேறுபலரும்கூட அதை கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. எழுத்தாளர் பிரியாதம்பி தான் நுணுக்கமாக வாசித்து அந்தப் பிழையை சுட்டிக்காட்டினார். சரிசெய்துகொள்வதற்கு உதவியாக இருந்தது. பகத்சிங்கை மையப்படுத்தி நாடகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் அப்பணசாமி சமீபத்தில் இந்தக் கதையைப் படித்துவிட்டு வெகுவாகப் பேசினார். அவருக்கு தோழர் ஜீவசுந்தரி பரிந்துரைத்திருக்கிறார். இதோ இப்போது நீங்கள்.... இப்படியாக இந்தக்கதை ஒருவர்பின் ஒருவராக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தின் பயனும் அதுதானே?

நன்றி: vallinam.com.my

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...