கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ அங்கத்தினர்
தோழர். பி.டி.ரணதிவே எழுதியது. மொழி பெயர்த்தவர் ஸி.எஸ்.சுப்ரமண்யம். சென்னை ‘ஜனசக்தி’ பிரஸில் பி.ராமமூர்த்தியால் அச்சிடப்பட்டு ஜனசக்தி பிரசுராலயத்தாரால்
(1-6, டேவிட்ஸன் வீதி) 1945 பிப்ரவரியில் பிரசுரிக்கப்பட்டது. விலை:அணா.2
இந்தச் சிறு வெளியீடு தாழ்த்தப்பட்டவர்
நிலைமையைப் பற்றியது. 6கோடி மக்கள் பொருளாதாரத்துறையில் அடிமைப்பட்டு, தங்களிஷ்டப்படி
வேலை செய்து வயிற்றை வளர்க்க வசதியற்றிருக்கின்றனர். அவர்கள் சமூக அந்தஸ்தும் தாழ்த்தப்பட்ட
அந்தஸ்து. சுதந்திர ஒளி எல்லா பகுதிகளின் மீது வீசும் சமயத்தில், அவர்களுடைய சுதந்திர
உணர்ச்சியும் வளர்ந்து வருகின்றது. தமிழ்நாட்டில் இப்பிரச்னை விசேஷ முக்யத்வம் வாய்ந்த
பிரச்னை. காந்திஜி தீண்டாமை ஒழிப்பு வேலையில் தென்னாட்டுக்குத் தனிப்பங்கை வற்புறுத்தி
இருக்கின்றார். இதனால் தமிழ்நாட்டில் வேலைசெய்யும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இப்பிரச்னையை
நன்கு உணர்ந்தாக வேண்டும். இதுவிஷயமாக திட்டவட்டமான ஒரு அரசியல் கொள்கை அவசியம். கம்யூனிஸ்ட்
கட்சியின் சார்பில் நாங்கள் கூறுவது இதுதான். இவ்விஷயத்தில் முற்போக்கான தேசீய கட்சிகள்
ஒரு அரசியல் கொள்கையை, நியாயமான முறையில் வகுக்க வேண்டும். தீண்டாமைக்குப் பொருளாதாரத்துறையில்
ஏற்பட்டுள்ள அஸ்திவாரத்தை உணர வேண்டும் என்று
விரும்புகின்றோம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்த வெளியீட்டில் எங்களுடைய அபிப்ராயத்தை
உணருவதற்கு முடியும். அவர்களுடைய விடுதலைக்கு வழியென்ன என்பதை
அவர்கள் சரிவரத் திட்டமிட்டு, தேசீய சுதந்திர அணியில் அவர்களும் வந்து அதை பலப்படுத்துவதற்கு
உடனே முனையவேண்டும். சென்னை, பிப்ரவரி,1945ஸி.எஸ்.சுப்ரமணியம்
காலத்தின் தேவை கருதி இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது. 67 ஆண்டுகளுக்கு முந்தைய இப்பிரசுரத்தை தேடியெடுத்த முனைவர்.கோ.ரகுபதி, அதன் ஒளியச்சுப்பிரதியை தந்துதவிய தோழர். ஆல்பர்ட் ஆகியோரை புதுவிசை நினைவிற்கொள்கிறது.
தீண்டாமை நம்முடைய சமூகத்தின் தீமை.
அதீதமான தீமை. மிகக்கொடிய தீமை. அதன் கொடுமையை எடுத்துரைக்க வார்த்தைகள் போதாது. மகாத்மா
காந்தி அதைக் கண்டித்து எழுதியுள்ள வாக்கியங்களை விட வன்மையாக வேறொன்றும் கூறுவதற்கில்லை.
“பறையன்” என்று கூறி அவர்களை நாம் ஒதுக்கிவைத்து விட்டோம். இந்த தீவினையின்
பயனை நாம் அனுபவிக்கின்றோம். நாம் விதைத்த வித்தின் விளைச்சலை நாம் காண்கிறோம். பிரிட்டீஷ்
காலனிகளில் நம்முடைய நாடே தாழ்த்தப் பட்டு, ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது. பஞ்சாப்
படுகொலையில் பெயரெடுத்த ஜெனரல் டையர், ஓட்வையர் கையாண்ட கொள்கையையே நம்முடைய சுற்றத்தாரிடம்
நாம் கையாள்கிறோமல்லவா? தீண்டாதவர்கள் கிணறுகளை உபயோகிக்கக் கூடாது என்கிறோம். நாம்
உண்டு மிஞ்சிய மிச்சத்தை அவனுக்குத் தருகின்றோம். அவன் நிழல் பட்டால் பாபம் என்று கூக்குரலிடுகின்றோம்.
இங்கிலீஷ்காரனைப் பார்த்து நாம் சாற்றக்கூடிய குற்றங்களை நம்மீது பறையர்கள் சாற்றமுடியும்” என்று உள்ளங்கொதித்து எழுதினார் காந்திஜி. (யங் இந்தியா,
15.1.1921)
தீண்டாமை என்ற அநீதியை தேசீய இயக்கம்
ஒதுக்கி வைக்க முடியாது. ஹிந்து சமூகம் தீண்டாதவர்மீது சுமத்தியுயள்ள இந்த ஈனமான அந்தஸ்தை
எதிர்த்து தேசிய இயக்கம் வெகுநாட்களுக்கு முன்னரே போரிடத் தொடங்கியது. முதலாளிகளால்
சுரண்டப்பட்டு வரும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னரே, நிலச்சொந்தக்காரனிடம்
வயிற்றை ஒடுக்கி வாரங்கட்டி வரும் குடியானவர்கள் பிரச்சினைகளுக்காகப் போராட ஆரம்பித்ததற்கு
முன்பே, தீண்டாதவர் பிரச்சினையை தேசிய இயக்கம் எடுத்துக் கொண்டது.
காங்கிரசும்
– தீண்டாமையும்
1920ம் வருடம் நடந்த ஒத்துழையாமை இயக்கம்
இந்தியாவிலுள்ள பொதுமக்களால் நடத்தப்பட்ட முதல் சுதந்திர இயக்கம். இந்தப் போராட்டத்தின்
திட்டங்களில் முக்கியமான திட்டம், தீண்டாமை ஒழித்தல். தீண்டாமையை எதிர்த்து நடத்தும்
போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் இணைத்து வைத்த கௌரவம் காந்திஜியுடையது. ஒத்துழையாமை
இயக்கத்தின் தலைவராகிய அவர் இவ்விரண்டு விஷயங்களுக்குமுள்ள சம்பந்தத்தை உணர்ந்தார்.
தேசத்தின் அரசியலில் தீண்டாமைப் பிரச்சினையை முக்கியமான பிரச்சினையாக எடுத்துவைத்தவர்
காந்திஜி. நாகபுரியில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டின் வருடாந்திரக் கூட்டம் பிரசித்தி
பெற்ற கூட்டம். அக்கூட்டத்தில்தான் தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதாக
முடிவு செய்தது. அதே மகாநாடுதான் காந்திஜியின் முயற்சியால், “தீண்டாமை மிகப்பெரிய பாபம்” என்றும் முடிவு கூறி பிரகடனமும் செய்தது.
காந்திஜி சலியாதபடி தீண்டாமையை ஒழிக்கப்
பாடுபட்டார். அவரது இடைவிடாப் பிரசாரம் கோடிக்கணக்கான இந்தியர் மனதில் ஆழப்பதிந்தது.
தீண்டாதவர்களில் சொல்லொணாத் துயர்களையும், அத்யாவசிய கோரிக்கைகளையும், இந்தியர் உணர
ஆரம்பித்தனர். “தீண்டாமையை ஒழிக்காதவரையில் சுதந்திரம் வேண்டுமென்று கோருவதற்கு எவ்வித
தார்மீக உரிமையும் நமக்குக் கிடையாது” என்பதை சந்தேகத்துக்கு
இடமில்லாதவகையில் காந்திஜி கூறினார்.
சுதந்திரத்திற்கென்று திரட்டப்படும்
மாபெரும் பொதுஜன அணிவகுப்பில் மகத்தான ஒற்றுமையைக்காட்டும் முதல்முயற்சி 1920ல் நடந்தது.
அதுதான் கிலாபத் கோரிக்கையையும், தீண்டாதவர்கள் கோரிக்கைகளையும் காந்திஜியும் காங்கிரசும்
ஏற்றுக்கொண்டது. சுதந்திரத்திற்கென்று போராடும் வீரர்களிடம் சம உரிமைகளை ஏற்றுக்கொண்ட
ஒரு தேசிய ஐக்கியத்தைச் சிருஷ்டிக்கும் முயற்சி அது. சகலவிதமான சந்தேகங்களைத் தீர்த்து,
சமூகத்திலுள்ள அக்ரமங்களையும் அநீதிகளையும் களைந்தெறிவதற்காகச் செய்யப்பட்ட முயற்சி
அது.
தேசமெங்கும் பரந்தவகையில் மலர்ந்த
1920ம் வருடப் போராட்டத்தில் தீண்டாமையை ஒழிப்பது சுதந்திர இயக்கத்தின் பகுதி என்பதை
நம் நாட்டவர் உணர்ந்தனர். 10 வருஷங்களுக்குப் பின்னர் கராச்சி காங்கிரஸ் கூடிற்று.
பிரஜா உரிமைச்சாஸனம் ஒன்றைத் தொகுத்தது. சுதந்திர இந்தியாவில் எல்லா பிரஜைகளுக்கும்
சம அந்தஸ்து உண்டென்று கூறிற்று. கிணறுகள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள் போன்ற
பொதுவான இடங்கள் எல்லோருக்கும் தங்குதடையின்றி திறந்துவைக்கப்படும் என்று பிரகடனப்படுத்திற்று.
இப்படி இந்த விஷயத்தைக் குறிப்பாக எடுத்துக்கூறுவானேன்? தீண்டாதவர்களுக்கு சுதந்திர
இந்தியாவில் எவ்விதத் தடைகளும் இருக்காது என்று வாக்குறுதியளிப்பதற்காகவே தேசிய இயக்கம்
தீண்டாதவர்களைப் பார்த்து அளிக்கும் உறுதிமொழி என்பது தெளிவு.
சீர்திருத்தப்
போக்கு
காங்கிரஸ் இவ்வாறு பிரகடனம் செய்திருந்தபோதிலும்
சுதந்திர இயக்கத்தில் தீண்டாதவர்களைத் திரட்டமுடியவில்லை. ஏன்? இந்தப் பிரச்சினையை
அரசியல் சம்பந்தமற்ற ஒரு பிரச்சினை என்ற கண்ணோட்டத்துடன்தான் பார்த்தனர். இது சரியான
கண்ணோட்டமல்ல.
ஹிந்து சமூகத்திற்குள்ளேயுள்ள ஒரு பிரச்சினையாகக்
கண்டனர். சமூக சீர்திருத்தத்தில் இதை ஒருபகுதியென்று நினைத்துக் கொண்டிருந்தனர். குருட்டு நம்பிக்கையினால் ஏற்பட்ட ஒரு குருட்டுப்
பழக்கவழக்கம் தீண்டாமை. இந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்று பிரசாரம் செய்துவிட்டால்
சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் கேடு ஒழிந்துவிடுமென்று காங்கிரஸ் நினைத்தது.
இந்தக் கண்ணோட்டத்துடன் காங்கிரஸ் திட்டமிட்டது.
அதனால் காங்கிரஸ் வகுத்த திட்டம் வெகுசீக்கிரத்தில் ஒரு சமூக சீர்திருத்த சேவையாக,
மனிதாபிமானத்தால் உந்தப்பட்ட ஜனசமூக சேவையாகிவிட்டது. தீண்டாதவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள்,
கல்வி வசதி, ஆலயத்திறப்பு முதலிய சில சீர்திருத்த அம்சங்களைக் கொண்ட இயக்கமாகிவிட்டது.
தீண்டாமையை ஒழிக்கும் இயக்கம் ஹரிஜனசேவா சங்கத்தின் திட்டமாக மாறிவிட்டது. காங்கிரஸின்
சுதந்திரப்போராட்டத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லாமற் போய்விட்டது. இந்திய மகாஜனங்களுக்கும்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் போராட்டத்துக்கும் போராட்டத்
திட்டத்திற்கும் சம்பந்தமற்றுப் போய்விட்டது. தீண்டாதவர்களுடைய விசேஷ கோரிக்கைகளோ,
அவர்களுடைய அரசியல் கோரிக்கைகளோ, காங்கிரஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகவில்லை.
உருப்படியான
நடவடிக்கை தேவை
தீண்டாதவர் பிரச்சினை என்பது ஏதோ சில
ஆலயங்களில் அவர்களை அனுமதிப்பதுடன் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் தவறு. சில பொது ஸ்தலங்களில்
அவர்களையும் அனுமதித்துவிட்டால் இந்தத் தீமை ஒழிந்துவிடும் என்பதும் தவறு. மத சம்பந்தமாக
ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை ஒழிப்பதனால் மட்டும் தீண்டாமையை ஒழிக்கமுடியாது என்ற உணர்ச்சி
அப்பொழுது இல்லை.
சமூகத்தில் பல தலைமுறைகளாக தாழ்த்தப்பட்டு
சுரண்டப்பட்டு, அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்தவர்களின் நலன்களுக்காகப் போராடும் விஷயம்
அது. வாழ்க்கை வசதிகள் பிடுங்கப்பட்டு, பல்லாண்டுகளாக பொருளாதார அடிமைகளாகவே அவர்கள்
வாழவேண்டி நேர்ந்தது. கிராம வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட்டு, ஊருக்கு வெளியே குடிசைகளிலும் சேரிகளிலும் அவர்கள் வாழும்படி
நேர்ந்தது. அவர்களுடைய அந்தஸ்து தாழ்த்தப்பட்ட அந்தஸ்து. கிராமப் பண்ணை அடிமைகளாக வாழ்வதைத்
தவிர வேறுவழியில் அவர்கள் ஜீவிப்பதற்கு இடமில்லை.
தீண்டாதவர்களில் பெரும்பான்மையானவர்களுக்குச்
சொந்தமான நிலம் கிடையாது. இதனால் தீண்டாதார் பிறர் தயவில் வாழவேண்டிவந்தது. தீண்டாதவர்
என்ற அடிமைச்சங்கிலி உறுதியாயிற்று. ஊருக்கு வெளியே சேரியிலே காலங்கழித்து வந்தனர்.
வியாபாரத்தில் இறங்கமுடியாது. தனிப்பட்ட ஜீவனோபாயம் ஒன்றுக்கும் வழியே கிடையாது. அவர்களது
ஏழ்மைத்தனம், படித்து உத்யோகங்களைத் தேடமுடியாமற் செய்துவிட்டது. வியாபாரம் செய்யவோ,
வேறு தொழில்களைச் செய்யவோ சக்தியற்றவர்களாகிவிட்டனர். புராதன ஹிந்து சமூகப் பழக்கவழக்கம்
அவர்கள் மீது பூட்டிய அடிமைத்தளைகள் நாலாபக்கங்களிலும் அவர்களைத் தடுத்துக் கொண்டு
நின்றன. இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான விசேஷ முயற்சி செய்யப்படாவிட்டால்
தீண்டாதவர்களின் அந்தஸ்து மாறமுடியாது.
இத்தகைய போராட்டத்தை நடத்த வேண்டியது
தேசிய இயக்கத்தின் பொறுப்பு. ஹிந்து சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு நிற்கும் நிலைமையை
மாற்றியமைக்கும் படியான விசேஷ உரிமைகளையும் சட்டங்களையும் கோருவது தேசிய இயக்கத்தின்
பொறுப்பு. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் கல்வி, உத்யோகங்கள், சமூக நிர்வாகம் ஒவ்வொன்றிலும்
அவர்களுக்கு சமத்துவம் ஏற்படுத்தி, அவர்களுடைய சம அந்தஸ்தை உறுதியாக்கும் சட்டதிட்டங்களை
ஏற்படுத்தவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதே முக்கியமான பிரச்சினை.
சமமான சமூக அந்தஸ்தை தீண்டாதவர்களுக்கு
ஏற்படுத்த வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? படிப்பதற்கு விசேஷ வசதிகள் ஏற்படுத்தவேண்டும்.
உத்யோகங்களிலும் நிர்வாகத்திலும் அவர்களுக்குப் பங்களிக்க விசேஷ கவனம் செலுத்த வேண்டும்.
நில பாத்யதையில் அவர்களுக்கில்லாத உரிமைகளை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். சுருங்கச்சொன்னால்
ஜீவனோபாயத்திற்கான வசதியை – பிறர் தயவை எதிர்பார்க்காமல், வாழ்க்கை நடத்துவதற்கான தனிவசதியை
- அளிக்க தனி ஏற்பாடுகள் செய்யவேண்டும். தீண்டப்படுவோரை எதிர்நோக்கி வாழ்க்கை நடத்தும்
அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும். அவர்களுடன் சம அந்தஸ்தை அளிக்க வேண்டும். தீண்டாதவர்களுக்கென்று
ஒரு அரசியல் பொருளாதார உரிமைச் சாஸனம் வகுக்கப்படவேண்டும்.
இப்பேர்ப்பட்ட சாஸனம்தான் 6 கோடி தீண்டாதவர்களையும்
தேசிய இயக்கத்தோடு ஐக்கியப்படுத்தும். அவர்களை தேசிய இயக்கத்தின் சுதந்திர அணிக்குள்
சேர்த்து வைத்திருக்கும்.
துரதிருஷ்டமாக காங்கிரஸிலுள்ள போக்கு
அத்தகைய விஷேச உரிமைகளைக் கோரும் போக்கல்ல. சர்க்காரிடம் தேசீய கோரிக்கை போட்டபொழுதெல்லாம்,
தீண்டாதவர்களுடைய உரிமைகள் குறிப்பிடப்படவில்லை. ஹிந்து சமூகத்திற்குள்ளேயுள்ள பிரச்சினை
என்று கருதிக்கொண்டு காங்கிரஸ் அந்த கோரிக்கைகளைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டது. தீண்டாதவர்
வகுப்பிலுள்ள பாமரர்களின் நம்பிக்கையைப் பெறவில்லை தங்களுக்கு விசேஷ சலுகைகள் வேண்டுமென்று
யாராவது கேட்டால் அது பிற்போக்கான கோரிக்கையெனக் கருதப்பட்டது. அதனால் அத்தகைய கோரிக்கைகள்
எதிர்க்கப்பட்டன.
1935ம் வருஷத்து காங்கிரஸ் லட்சக்கணக்கான
தீண்டாதவர்களைத் தட்டி எழுப்ப முடியவில்லை. தேசிய இயக்கம் ஆரம்பித்த போராட்டங்களில்
அவர்கள் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் மந்திரிசபைகள்
அவர்களுடைய உரிமைகளைக் கவனிக்கவில்லை. தீண்டாதவர் சம அந்தஸ்தை அனுபவிப்பதற்கான நடவடிக்கைகளை
எடுத்துக்கொள்ளவில்லை. ஹோட்டல்களுக்குய் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகூட
பரிபூர்ணமாக நிறைவேறவில்லை. ‘தீண்டாதவர் நுழையக்கூடாது’ என்று
போடப்பட்டிருந்த நோட்டீஸை ஹோட்டல்காரர்கள் எடுத்துவிடும்படி செய்தார்கள். காங்கிரஸூம்,
மந்திரிசபைகளும், இந்த உரிமையை நடைமுறையில் அவர்கள் அனுபவிப்பதற்கான
நிர்பந்தத்தை பொதுஜனக் கிளர்ச்சி மூலமோ, சட்டவிதிகள் மூலமோ ஏற்படுத்துவதற்கு ஒன்றும்
செய்யவில்லை. இன்னும் பல கஷ்டங்கள் அவர்களுக்கு உண்டு. இவற்றைப் போக்க காங்கிரஸ் மந்திரிசபைகள்
ஒன்றும் செய்யாததனால் தீண்டாதவர்களுடைய மனக்கசப்பு அதிகரித்தது.
தீண்டாதவர்களுடைய இயக்கம் தேசிய இயக்கத்தின்
வெள்ளப்பெருக்கில் சம்பந்தப்படாமல் தனியாகப் போய் விட்டது. அதனால் இன்றைக்கு அந்த இயக்கம்
எங்கு போய் நிற்கின்றது என்பதைப் பார்ப்போம்.
தாழ்த்தப்பட்டவர்
சம்மேளனம்
சென்னையில் 29-9-44ல் நடந்த தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக்கமிட்டி நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதைக் கவனித்தால்
நம்நாட்டின் முக்கியபகுதியான இந்த வகுப்பினருடைய அரசியல் நமக்கு நன்கு விளங்கும்.
சம்மேளனத்தின் தலைவர்கள் தீண்டாதவர்களனைவர்களுடைய
ஆதரவும் தங்களுக்குத்தான் என்று கூறுகின்றனர். இது சரியாயிருக்காது. ஆனால் இது முற்றிலும்
சரியா இல்லையா என்பதல்ல பிரச்னை. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்துக்கு அவ்வகுப்பினர்களில்
பெருவாரியானவர்களுடைய ஆதரவு இருக்கிறது. தீண்டாதவர்களிடையே மலர்ந்த படிப்பாளிகள்தான்
தீண்டாதவர்களுடைய தலைவர்கள். அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதையே அவ்வகுப்பினர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
அந்த படிப்பாளிகள் அனைவரும் இந்த சம்மேளனத்திலிருக்கின்றனர். ஆதலால் தாழ்த்தப்பட்டவர்
சம்மேளனத்தை அவர்களுடைய ஸ்தாபனமாகப் பலப்படுத்துவது தீண்டாதவர்களுடைய கடமை என்பதை மறுக்க
முடியாது.
சென்னையில் நடந்த சம்மேளனத்துக்கு ஆறுமாகாணங்களிலிருந்து
பிரதிநிதிகள் வந்திருந்தனர். அதில் வங்கத்திலிருந்து மாகாண மந்திரி ஒருவர். அஸ்ஸாமிலிருந்து
இன்னொரு மந்திரி. ஆக இரண்டு மந்திரிகள் ஒரு பார்லிமெண்டரி காரியதரிசி. ஒன்பது சட்டசபை
அங்கத்தினர்கள். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையான பிரதிநிதிகள், டாக்டர்கள், வக்கில்கள்
அல்லது பத்திரிகைத் தொழிலிலிருப்பவர்கள். ஒரே ஒருவர் தான் வர்த்தகர்.
தேசிய காங்கிரஸிலும், முஸ்லீம் லீகிலும்
தலைமை வகிக்கும் பகுதியை போன்ற பகுதியே, இச்சம்மேளனத்திலும் தலைமை வகிக்கின்றது என்பதையே
இது காட்டுகின்றது. எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி தீண்டாதவர்களில் ஒருபகுதி கல்வி கற்றனர்.
அவர்களுடைய வகுப்பிலிருந்து மலர்ந்த இந்த படிப்பாளிகளில் தங்களுடைய தலைவர்களைக் கண்டுவிட்டனர்
தீண்டாதவர்கள். அவர்கள் காட்டும் வழியில் தங்கள் ஸ்தாபனத்தை அமைத்துவிட்டனர். அதன்
தலைமையில் டாக்டர் அம்பேத்கார் இருக்கிறார்.
“நாங்கள் அரசாளும்
வகுப்பாக வேண்டுமென்று விரும்புகிறோம்” என்று டாக்டர் அம்பேத்கார்
கூறினார். 6கோடி தீண்டாதவர்கள் மனதிலுள்ள எண்ணத்தை இந்த வாக்கியத்தின் மூலம் அம்பேத்கார்
கூறிவிட்டார். இந்த விருப்பத்தை அநியாயமானதென்று யாரும் கூறமுடியாது. அது தேசியத்துக்கு
விரோதமானது என்றும் கூற முடியாது. மற்ற ஜனங்களுடன் தங்களுக்கும் அரசாங்க நிர்வாகத்தில்
ஒரு பங்கு உண்டு என்று 6 கோடி எண்ணிக்கையுள்ள ஒரு பகுதி விரும்புவது சர்வசாதாரணமான
ஜனநாயகக்கொள்கை. சுதந்திர இந்தியா ஜனநாயக இந்தியாவாக இருக்கவேண்டுமென்றால் அரசாங்கத்தை
நடத்துவதில் இந்த 6 கோடி மக்களுக்கும் அவர்களுக்கு உரித்தான பங்கை அளிக்கவேண்டும்.
உரிமைச்
சாஸனம்
தீண்டாதவர்களின் லட்சியம் 1942ம் வருஷம்
நாகபுரியில் கூடிய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மகாநாட்டுத் தீர்மானத்தில் காணலாம். சமீபத்தில்
கூடிய சென்னைக் கூட்டத்தில் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அவர்கள் லட்சியத்தை அடைவதற்கு
கீழ்கண்ட முக்கியமான கோரிக்கைகள் தீர்மானத்தில் போடப்பட்டன...
1.நாட்டின் அரசியல் சட்டம் தீண்டாதவர்களைக்
கலந்து வகுக்கப்பட வேண்டும்.
2.இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் தீண்டாதவர்கள்
ஒரு தனிப்பகுதியாக, விசேஷப்பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
3.அவர்களுடைய எண்ணிக்கைக்குத் தகுந்தபடி,
தேவைக்குத் தக்கபடி மத்திய நிர்வாகத்திலும் மாகாண நிர்வாகங்களிலும், சர்க்கார் உத்யோகங்களிலும்
அவர்களுக்குப் பங்களிக்கும் சட்டம் வேண்டும்.
4.சர்க்கார் செலவுத்திட்டத்தில் தீண்டாதவர்களின்
உயர்தரக் கல்விவசதிக்குப் போதுமான பணம் ஒதுக்கி வைக்கப்படவேண்டும்.
5.சர்க்கார் நிலங்களில் குடிவாழ்வதற்குத்
தனி “ஸெட்டில்மெண்டு கமிஷன்” அமைக்கவேண்டும்.
அந்நிலங்களில் தீண்டாதவர்கள் குடிவாழ்வதற்கென்று ஸெட்டில்மெண்டுகள் ஏற்படுத்த வேண்டும்.
6.ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் சட்டசபைகளுக்கும்
தீண்டாதவர்கள் பிரதிநிதிகள் தனித்தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகள் தேசீய இயக்கத்திற்கோ,
ஜனநாயகத்திற்கோ விரோதமானவையா?
தீண்டாதவர்கள், சமூகத்தில் ஒரு விசேஷப்பகுதி
என்று ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அரசியல்
சட்டம் அவர்களுடைய அனுமதியுடன் வகுக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை எடுத்துகொள்வோம்.
இந்தக் கோரிக்கை ஏன் போடப்பட்டிருக்கிறது?
எப்படி அந்த கோரிக்கை வந்தது என்பதைக் கவனிப்போம். தீண்டாதவர்கள் தாழ்த்தப்பட்ட அடிமைகளாயிருப்பதனால் இந்த கோரிக்கை வந்துள்ளது. காங்கிரஸோ,
ஹிந்து சமுதாயமோ அவர்களுடைய விசேஷ உரிமைகளுக்காகப் போராடவில்லை. அரசியல் துறையில் ஹிந்துக்கள்
என்ற முறையில் ஹிந்து சமூகம் தீண்டாதவர்களுடைய நலன்களைக் காக்க முடியுமென்று கூறுவதை
ஆட்சேபித்துக் கிளம்பியுள்ள கோரிக்கை அது. காங்கிரஸ் அவர்கள் சார்பில் பேசுகிறது என்பதையும்
ஆட்சேபிக்கிறது. பிரிட்டிஷ் சர்க்கார் அவர்களைக் கலக்காமல் இதர கட்சிகளுடன் ஒரு முடிவுக்கு
வந்துவிட்டால் தீண்டாதவர்கள் ஹிந்துக்களால் நசுக்கப்படுவார்கள் என்ற பயத்திலிருந்து
இந்தக் கோரிக்கை கிளம்பியிருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு விதிகள் வேண்டுமென்ற உணர்ச்சியால்
ஏற்படுகின்றது.
பல்லாண்டுகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருக்கப்பட்ட
பகுதியை எங்கள் சமூகத்தின் தனிப்பட்ட பகுதியில்லை
என்று மனச்சாட்சியுடையவன் ஒருவனும் கூறுமுடியாது. அரசியல் வாழ்க்கையில் அவர்களுக்கு
தனிப்பட்ட ஸ்தானம் இருக்க வேண்டுமென்பதையும் மறுக்கமுடியாது. காங்கிரஸ் அவர்களுடைய
கோரிக்கைகளுக்காகத் தீவிரப் போராட்டம் செய்யவில்லை. அதனால் அவர்களுடைய லட்சியங்களைப்
போதிய அளவுக்கு தேசிய காங்கிரஸ் பிரதிபலிக்கின்றது என்பதை யாரும் கூறமுடியாது.
சந்தேகங்கள்
காங்கிரஸ்காரர்களுடைய மனதில் தோன்றுவது
என்ன? தீண்டாதவர்களின் தலைவர்களுடைய காங்கிரஸ் எதிர்ப்பு மனப்பான்மையைக் கண்டு சந்தேகங்
கொள்கின்றனர். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆட்சியை நீடித்துக் கொள்வதற்காக சமஸ்தானாதிபதிகளைத்
தட்டிக் கொடுப்பதைப் போல் தீண்டாதவர்களையும் தம்முடைய சுதந்திரத்தை எதிர்க்கும் ரிஸர்வ்
பட்டாளமாக உபயோகிக்குமென்று எண்ணுகின்றனர். தீண்டாதவர்களை தனிப்பகுதியாக ஏற்றுக் கொண்டு,
அரசியல் சட்டத்தை வகுக்க அவர்களுடைய சம்மதமும் வேண்டுமென்று ஒப்புக்கொண்டுவிட்டால்
அவர்கள் எவ்வித முற்போக்கான அரசியல் நடவடிக்கையையும் தடைப்படுத்திவிடுவார்கள். சுதந்திரப்பாதையின்
குறுக்கே முட்டுக்கட்டையாக நிற்பார்கள் என்று அபிப்ராயப்படுகின்றனர்.
தீண்டாதவர்களுக்கு அளிக்கப்படும் இச்சலுகையை
ஏகாதிபத்தியம் நம்மிடையேயுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக்கொள்ளுமென்று நினைக்கின்றனர்.
ஏகாதிபத்தியம் காங்கிரஸ் எதிர்ப்பு அணியை உருவாக்கி, ஜனநாயக அரசியல் அமைப்பையே உடைத்துவிடும்
என்று எண்ணுகிறார்கள். இப்படி நினைப்பது தேசிய இயக்கத்திலுள்ள ஒரு பலஹீனத்தையே குறிக்கின்றது.
எல்லாத்துறைகளிலும் சுதந்திரம் வேண்டுமென்று கோரும் காங்கிரஸ், 6கோடி அடிமைகளைக் கண்டு,
அவர்களுடைய விடுதலைக் கோரிக்கையைக் கண்டு சற்றும் தயங்கவேண்டியதில்லை. சமஸ்தானாதிபதிகள்
தங்கள் சுயநலச் சுரண்டலைக் காப்பாற்றுவதற்காக நிற்கும் சிறுகும்பல், அடிமைப்பட்டுக்
கிடந்த பாமரர்களின் புரட்சி விழிப்பைப் பிரதிபலிக்கும் பகுதி தீண்டாதவர்கள். இந்தப்பகுதியை
ஜனநாயக அரசியல் சட்டத்திற்காகவும் சுதந்திரப் போராட்டத்திற்காகவும் திரட்டாமல், ஏகாதிபத்திய
பிற்போக்கு லட்சியம் கொண்ட சுயநலமிகளும் அவர்களை உபயோகப்படுத்திக்கொள்ளும்படி விட்டு
விட்டால் அது தேசிய இயக்கத்திற்கே ஒரு அவமானம்.
சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டம்
இந்த 6கோடி மக்களின் சம்மதத்தைப் பெற்றாகவேண்டும். தொழிலாளிகள் விவசாயிகளுடைய சம்மதத்தைப்
பெற வேண்டியிருப்பதைப் போலவே தீண்டாதவர்களுடைய சம்மதத்தையும் பெற வேண்டும். இதை யாரும்
மறுக்க முடியாது. இன்றைக்கே அதை ஏற்றுக்கொள்வது - அவர்கள் ஒரு விசேஷப்பகுதி என்று ஏற்றுக்கொண்டு
ஹிந்து மெஜாரிட்டியால் நசுக்கப் படமாட்டார்கள் என்று உறுதிமொழியை அளிப்பது - சுதந்திரத்திற்காக
நடைபெறும் பொதுவான போரணியில் அவர்களையும் அழைத்து இணைத்துக்கொள்வதற்கு அவசியம். நியாயத்தையும்
ஜனநாயகத்தையும் முன்னிட்டு அது அவசியமாகின்றது.
இப்படிச் செய்வதன் மூலமே ஏகாதிபத்தியத்தின்
சூழ்ச்சி முறியடிக்கப்படும். சுதந்திர இந்தியாவில் தீண்டாமை என்ற தீமை இருக்காது என்ற
உணர்ச்சியை தீண்டாதவர்கள் இவ்வழியிலேதான் உணருவார்கள்.
கல்வித்துறையில் விசேஷ வசதிகளைக் கோருகின்றனர்.
உத்யோகங்களிலும், சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் போதிய பங்கு வேண்டுமென்று கேட்கின்றனர்.
இவைகளும் நியாயமான கோரிக்கைகள்தான். அவைகளை ஒரு வகுப்புவாதக் கோரிக்கைகளாகவோ, பிற்போக்கான
கோரிக்கைகளாகவோ கருதக் கூடாது. தற்போதுள்ள
சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான கோரிக்கைகள் என்பதை கவனிக்க வேண்டும். உத்யோகங்களை இந்தியர்மயமாக்குவதும்,
ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபைகளை அமைப்பதும் தம்மைத் தாழ்த்திவரும் தீண்டப்படுவோருக்கே
பயனளித்திருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். தீண்டப்படுவோரே பல உத்யோகங்களை வகிக்கின்றனர்.
சட்டசபை பிரதிநிதிகளும் அவர்களே. அரசியல் அதிகாரமும் அவர்களுடையதே என்று கருதுகின்றனர்.
அதிகார அமைப்பில் தீண்டாதவர்களுடைய பிரதிநிதிகள் வேண்டும். இதற்கு வேண்டிய யோக்யதையைத்
தேடிக்கொள்ளவிசேஷ கல்வி வசதிகள் வேண்டுமென்கிறார்கள். எல்லா மக்களோடும் தாங்களும் சமமாக
வாழவேண்டும் என்று விரும்பும் கோரிக்கை அது. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள
விசேஷத்தடைகளை ஒழிக்க ஏற்படுத்தும் விசேஷ சலுகைகளின் மூலம் இந்த கோரிக்கையைப் பெறுவதற்கு
வழிதேடுகின்றனர்.
நியாயமான
கோரிக்கைகள்
தீண்டாமையை ஒழிக்கும் போராட்டத்தில்
விசேஷக் கல்வி வசதிகளை ஏற்படுத்துவது ஒரு புரட்சித்தன்மை வாய்ந்த செய்கை. தீண்டப்படுவோரின்
ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றால் தீண்டாதவர்கள் சுயேச்சையாக உத்யோகங்களையோ, தொழில்களையோ
தேடிக்கொள்ள வசதி வேண்டும். கிராமங்களில் தீண்டாதவர்களுக்கு நிலம் கிடையாது. வேறு ஜீவியம்
கிடையாது. அதனால்தான் கிராமாந்திரங்களில் தீண்டாமை ஒழியவில்லை. கல்வி கற்றால் உத்யோகங்களுக்கு
வேண்டிய யோக்யதையை அடைகின்றனர். வேறு தொழில்களை நடத்தும் திறமையைப் பெறமுடியும். இவ்வாறு
ஜீவியம் நடத்த வழி திறந்துவிடுகின்றது கல்வி. பிறரை எதிர்நோக்கி, பிறர் தயவில் வாழ்ந்த
தீண்டாதவர்கள் சுதந்திரம் பெறுவதற்கு வழியை அளிக்கின்றது. தீண்டாமையின் வேர் பொருளாதாரத்தில்.
அந்த வேரை அரித்துவிடுகின்றது கல்வி. தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்கள் அடிமைகளாக,
பொருளாதார அடிமைகளாக வாழவேண்டியதில்லை. கல்வி வசதியும் உத்யோகங்களும் தனிப்பட்டவர் நிலைமை உயர்த்தும்
வழிமட்டுமல்ல, சமூக விடுதலை மார்க்கமாகவும் ஆகின்றன.
தேசிய காங்கிரஸும் அதனுடைய இளம்பருவத்தில்
இத்தகைய கோரிக்கைகளைப் போட்டிருக்கிறது. இந்தியர்களுக்கு நிர்வாகப் பதவிகள் வேண்டும்,
உயர்தரக் கல்வி வேண்டும் என்று காங்கிரஸ் ஏன் கேட்டது? இந்தியருக்கும் ஐரோப்பியருக்குமிடையே
எழுப்பப்பட்ட ஏற்றத்தாழ்வு சுவரை உடைத்தெறியும் கருவிகளாக அவை கருதப்பட்டன. தீண்டாதவர்களின்
கோரிக்கையும் அதே நோக்கத்துடன் இன்று போடப்படுகின்றன.
தற்போதுள்ள ஹிந்து கிராமங்களில் ஒதுக்கப்பட்டு
சேரிகளில் வாழாமல் சர்க்கார் மானியத்தில் பயிர்செய்து வாழ்க்கை ஸ்தலங்களை (காலனிகளை)
ஏற்படுத்துவதற்கு விசேஷ ஸெட்டில்மெண்டுகளை சம்மேளனம் கோருகின்றது.
தீண்டாதவர்களில் மிகப் பெரும்பான்மையோருக்குச்
சொந்தமான நிலம் கிடையாது. அவர்கள் நிலமில்லாத விவசாயக்கூலிகள். ஜீவனம் செய்வதற்கு கிராமத்திலுள்ள
இதர ஹிந்துக்களின் தயவைப் பார்த்துக்கொண்டிருக்க
வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சிறிய பகுதிதான். இதர தீண்டப்படுவோர் ஆதரவில்லாமல்
எவ்வித வியாபாரத்தையும் அவர்கள் நடத்த முடியாது. தங்கள் அடிமைத்தனத்திலிருந்து தங்களை
விடுவித்துக் கொள்வதற்கான எந்தத் தொழிலையும், சுயேச்சையான தொழிலையும், அவர்கள் நடத்த
முடியாது. கிராமங்களில் இதுதான் தீண்டாமையை நீடித்து வைக்கிறது.
சர்க்கார் நிலங்களிலிருந்து அவர்களுக்கு
நிலம் கொடுக்கப்பட்டால், அந்த மானியங்களில் ‘சுதந்திர’ சமூகங்களாக
அவர்கள் அமைக்கப்பட்டால், அவர்களுடைய வகுப்பிலிருந்தே வியாபாரிகளையும் வர்த்தகர்களையும்
பிறப்பிக்க முடியும். பொருளாதார முன்னேற்றத்தில் தாங்களும் சுதந்திர மனிதர்களாக பங்கெடுத்துக்கொள்வதை
உணர்வார்கள். இதுதான் தீண்டாமையைத் தாங்கிநிற்கும் அச்சுவேரைப் பெயர்த்திவிடும். தாழ்த்தப்பட்ட
இந்த மனித சமூகம் இந்திய சுதந்திரப் போராட்ட அணிவகுப்பில் இருக்கவேண்டுமென்று விரும்புகின்றவர்கள்,
தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்று உறுதி கொண்டவர்களனைவரும் இந்த நியாயமான கோரிக்கைக்கு
ஆதரவு அளிக்க கடமைப்பட்டவர்கள்.
தனித்தொகுதி
தனித்தொகுதி கோரிக்கையை எடுத்துக்கொள்வோம்.
தனித்தொகுதிகள் வகுப்புப் பிரிவினைகளை நீடித்துவைத்து, வகுப்புவாதத்தை வளர்த்துவரும்
என்று தேசியவாதிகள் நினைத்துவருகின்றனர். தேசிய இயக்கத்திற்கு எதிரான மனோபாவத்தைப்
பரப்ப பிற்போக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் கருவி தனித் தொகுதி என்று கருதுகின்றனர்.
நம்முடைய சுதந்திரப்போராட்டத்திலே பொதுத் தொகுதியா தனித்தொகுதியா என்ற பிரச்னை மிகப்பெரிய
பிரச்னையாக சர்ச்சை செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் விஷயத்தில் அது பொதுமக்கள்
முன்வந்தன. காங்கிரஸ் பொதுத்தொகுதிதான் இருக்கவேண்டுமென்று கூறிக்கொண்டு வந்திருக்கிறது.
தனித்தொகுதி வேண்டுமென்பவர்களுடைய மனதை மாற்றமுடியாமற் போனபிறகுதான், வேறு வழியின்றி
தனித்தொகுதியைக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டிருக்கிறது.
தேசியப் போராட்டத்தில் முஸ்லீம்கள் தனித்தொகுதிகளைப்
பெற்றனர். 1935ம் வருஷ அரசியல் சட்டத்தின்படி தீண்டாதவர்களுக்கும் தனித்தொகுதி அளிக்கப்பட்டது.
ஆனால் காந்திஜி உண்ணாவிரதம் பூண்டார். கடைசியாக பூனா ஒப்பந்தத்தின் மூலம் ஹிந்துக்களுடன்
பொதுத்தொகுதிகளில் தீண்டாதவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டனர்.
இன்றைக்கு அந்த ஏற்பாட்டை விட்டுவிட
வேண்டுமென்று தீண்டாதவர்கள் விரும்புகின்றனர். தனித்தொகுதி தான் வேண்டுமென்கிறார்கள்.
அது வகுப்புவாதக் கோரிக்கையா? தேசிய எதிர்ப்புக் கோரிக்கையா? தற்போதுள்ள பிரிவினைகளை
நீடித்துவைக்கும் உபாயமா, அல்லது அவற்றை ஒழிக்கும் வழியா? இந்தக் கோரிக்கை ஏன் கிளம்பவேண்டும்?
தீண்டாதவர்களுக்கு உண்மையான குறை ஒன்று இருக்கின்றது. சர்வசாதாரணமான உரிமைகள் அவர்களுக்கு
மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்களை மனிதத்தன்மையற்ற முறையில் சமூகம் நடத்தி வந்திருக்கிறது.
அவர்களுடைய நலன்களுக்காக எந்த ஸ்தாபனமும் - தேசிய காங்கிரஸ்கூட போராடவில்லை. தங்களுடைய
உரிமைகளுக்காகப் போராடுவதற்கு வேண்டிய பாதுகாப்பைக் கோரும் ஒரு தாழ்த்தப்பட்ட பகுதி
அவர்கள்.
ஜாதி ஹிந்துக்கள் விரும்பும் தீண்டாதவர்களையே
பிரதிநிதிகளாக்க பொதுத் தொகுதிகள் வசதி அளிக்கின்றன. பல கிராமங்களில் சிதறிக் கிடக்கின்றனர்.
அந்த கிராமங்களிலெல்லாம் ஜாதி ஹிந்துக்கள்தான் மெஜாரிட்டி. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்
விரும்பாத எந்த நபரையும் ஜாதி ஹிந்துக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க முடியும்.
எந்தத் தொகுதியிலும் யார் பிரதிநிதியாக வரலாம் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் ஜாதி
ஹிந்துக்களிடம்தான் இருக்கிறது.
இப்பேர்ப்பட்ட ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டுமென்று
தீண்டாதவர்கள் விரும்புகின்றனர். ஸீட்டுகள்
ரிஸர்வ் செய்யப்பட்ட கூட்டுத்தொகுதிகளில், சென்ற தேர்தல் அனுபவம் அவர்களுடைய மனதில்
மனக்கசப்பை ஏற்படுத்திவிட்டது. சென்ற தேர்தலில் ஜாதிஹிந்துக்களால் நியமனம் செய்யப்பட்டவர்கள்
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது சுமத்தப்பட்டனர். கூட்டுத்தொகுதி இதற்கு சாதகமாக இருந்தது.
தாழ்த்தப்பட்டவர்களுடைய ஓட்டுகள் உதவியாயிருந்தன. கூட்டுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
காங்கிரஸ் அபேக்ஷகர்கள் கிராமக் கிணறுகளையும், ஹோட்டல்களையும், பொது ஸ்தலங்களையும்
தீண்டாதவர்களுக்கும் திறந்து வைப்பதற்காக எவ்வித முயற்சியும் செய்யவில்லை. காங்கிரஸ்
மந்திரிசபைகளும் இதற்கு உதவவில்லை.
தேசிய இயக்கம் தீண்டாதவர்களுடைய நம்பிக்கையைப்
பெறவில்லை. தீண்டாதவர்களுக்கு இந்த அனுபவம் ஏமாற்றத்தை அளித்தது. அவர்களுடைய நியாயமான
நலன்களைக் காப்பாற்ற அவர்கள் இன்றைக்கு தனித்தொகுதிகளைக் கேட்கின்றனர். அப்படிக் கேட்பது
யாருடைய குற்றம்? தீண்டாதவர்களுடைய குற்றமா, தேசிய இயக்கத்தின் குற்றமா? தேசிய இயக்கம்
தங்களுடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் ஸ்தாபனம் என்ற உணர்ச்சியை நடைமுறையில்
ஏற்படுத்தியிருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்த கோரிக்கையைப் போட்டிருக்க முடியாது.
இன்றைக்குள்ள நிலைமை என்ன? காங்கிரஸ்
தாழ்த்தப்பட்ட வகுப்பினருடைய நம்பிக்கையைப் பெறவில்லை. ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும்
இடையே பூர்ண நம்பிக்கை இல்லாத நிலைமையில் கூட்டுத்தொகுதிகளை ஏற்படுத்துவது அவநம்பிக்கையைப்
பெருக்குகின்றது. இதனால் பிளவை அதிகரிக்கின்றது. சீர்குலைவை வளர்க்கும். ஜாதி ஹிந்துக்களின்
ஆதிக்கத்தை நீடிக்கும் சூழ்ச்சியென்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கருதுவார்கள்.
தனித்தொகுதி வேண்டுமா, அல்லது கூட்டுத்தொகுதி
வேண்டுமா என்பதை முடிவுசெய்து கொள்வதற்கு தீண்டாதவர்களுக்குப் பரிபூரண சுதந்திரம் அளிக்கப்பட
வேண்டும். அதுவே நியாயம். அதுவே ஜனநாயகம். பிறபகுதிகள் அவர்கள்மீது கூட்டுத்தொகுதியைப்
புகுத்துவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.
தனித்தொகுதிக் கோரிக்கையின் காரணத்தை
உணர்ந்து, அதன் நியாயத்தை ஏற்றுக்கொள்வதற்குக் காங்கிரஸ் முன்வரவேண்டும். ஜனநாயகத்தை
முன்னிட்டு அதை ஆதரிக்கவேண்டும். தேசிய இயக்கம் என்றென்றும் அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கும்
என்ற களங்கமற்ற உறுதிமொழியை காங்கிரஸ் அளிக்கவேண்டும்.
இப்படித் திட்டமிட்டால்தான் ஏகாதிபத்தியவாதிகளும்
பிற்போக்காளர்களும் இந்த நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளாமல்
தடுக்க முடியும். தீண்டாதவர் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் காங்கிரஸ் இணைத்து
விட்டவுடன் - காங்கிரஸ் தீண்டாதவர்களுடைய நம்பிக்கையை பெற்றுவிட்டவுடன் பிற்போக்காளர்களுக்குச்
சாவுமணி அடித்துவிடலாம். தீண்டாதவர் வகுப்பிலிருந்தே அவர்களுடைய நலன்களைக் காத்து தேசிய
நலன்ளுக்காகப் போராடும் வீரர்கள் உதிப்பார்கள்.
காங்கிரஸின் கராச்சி தீர்மானம் பிரஜா
உரிமை சமத்துவப் பிரகடனம் செய்தது. அதை அமுலுக்குக் கொண்டுவரும் வழி இப்பேர்ப்பட்ட
கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு போராடுவதாகும். நியாயத்திலிருந்தும்,
தார்மீகத்திலிருந்தும் பிறந்துள்ள கோரிக்கைகள் தாழ்த்தப்பட்டவர்களுடைய கோரிக்கைகள்.
தேசிய காங்கிரஸ் இவற்றை எடுத்துக்கொள்வதில் சிரத்தை காட்டியிருந்தால் தீண்டாதவர் இயக்கம்
சுதந்திரப் போராட்டத்துடன் கலந்த ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும். தேசிய இயக்கத்தின் போராட்ட
சக்திகள், பலமடைந்திருக்கும். ஒடுக்கப்பட்ட மனிதவர்க்கத்தின் பகுதியாகிய இந்த 6 கோடி
மக்களும் தேசியக்கொடியின் கீழ் தேசிய இயக்கத்திற்கு ஆதரவாகத் திரட்டப்பட்டிருப்பார்கள்.
சுதந்திரப்
பிரச்சினை புறக்கணிக்கப்படுகிறது
இந்தக் கோரிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.
ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்திலுள்ள ஒரு குறையைக் குறிப்பிடாமலிருக்க
முடியாது. தேசத்தின் பரிபூர்ண சுதந்திரம் அதன் திட்டத்தில் இடம்பெறவில்லை. ஆலயப்பிரவேசம்
வேண்டுமென்ற பால்யப் பருவத்தைத் தாண்டிவிட்டது. அவர்களுடைய இயக்கம் அரசியல் அதிகாரத்தில்
தங்களுக்கும் பங்குவேண்டுமென்று கேட்கின்றது. ஆனால் இந்த அதிகாரத்தை பிரிட்டிஷாரிடத்திலிருந்து
கைப்பற்ற வேண்டும். இந்த உணர்ச்சியைப் பிரதிபலிக்கும் அம்சம் சம்மேளனத்தின் திட்டத்தில்
காணப்படவில்லை.
இந்திய மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டுமென்றால்,
பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தை நம்முடைய ஒன்றுபட்ட சக்தியால் தாக்கவேண்டும். அதுவே அதிகாரத்தில்
தீண்டாதவர்களுக்குரித்தான பங்கை அளிக்கும். இது தெளிவான விஷயம். என்றாலும் தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் சம்மேளனத்தின் திட்டத்தில் சுதந்திரம் என்ற வார்த்தையே காணப்படவில்லை. அந்நிய
ஆட்சியிலிருந்து இந்தியா பரிபூர்ண விடுதலையடைவதை அவர்களுடைய திட்டம் காணவில்லை. அதற்கு
மாறாக இருக்கிறது டாக்டர் அம்பேத்காரின் பிரசங்கங்கள். டொமினியன் அந்தஸ்து என்ற எல்லைக்குள்தான்
அவர்கள் விடுதலையைக் காண்பதாகத் தோன்றுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் பிரிட்டிஷ்
ஆட்சி இந்நாட்டில் நீடித்திருக்கும் என்ற எண்ணத்துடன் போடப்பட்டிருக்கின்றன. ஆனால்
பிரிட்டிஷாரிடமிருந்து நாம் கைப்பற்றும் அதிகாரத்தில் ஒரு பங்கை இந்த கோரிக்கைகள் கேட்கின்றன.
இந்த அதிகாரத்தை பிரிட்டிஷார் விட்டுக்கொடுக்கும்படி செய்வதற்கான திட்டம் ஒன்றும் சம்மேளனத்துக்குக்
கிடையாது. பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் தயாதாட்சண்யத்தால் கொடுக்கும் அதிகாரத்தில்
ஒரு பங்கை மட்டும் எடுத்துக்கொண்டு திருப்தியடைந்து விடப் பார்க்கின்றனர்.
இன்றைய
நிலையில் மன்னிக்கமுடியாது
தீண்டாதவர் இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில்
இத்தகைய மனோபவத்தினால் அதிக பாதகம் ஏற்படாது என்றிருக்கலாம். ஆனால் இன்றைக்கு சம்மேளனத்தின்
கொடியில் பரிபூர்ண சுதந்திரம் என்ற சுலோகம் பொறிக்கப்படாமலிருப்பது மன்னிக்கப்பட முடியாத
விஷயம். அப்படிச் செய்யாமலிருப்பதற்கு யாதொரு காரணமும் கிடையாது.
சுதந்திரப்பிரச்சினையில் பாராமுகமாக
இருப்பது தீண்டாதவர்களுடைய நலனுக்கே பாதகமாகும். தீண்டாமையை ஒழிப்பதற்குப் பரிபூர்ண
சுதந்திரமும் தீண்டாதவர்களுக்கு அதிகாரத்தில் தங்களுக்குரித்தான பங்கை எடுத்துக்கொள்வதும்
அவசியம் என்பது தெட்டத்தெளிவான விஷயம். தீண்டாதவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நாளைக்கே
பூர்த்தி செய்யப்பட்டாலும் தீண்டாமை ஒழியாது. தீண்டாமை எனும் பழக்கத்தின்மீது பெரிய
இடி விழும், ஆனால் அது அழிக்கப்படமாட்டாது. தற்போது அமுலிலிருக்கும் அரசியல் சட்டத்திற்குய்
6கோடி தீண்டாதவர்கள் எப்படி “ஸ்பெஷல் ஸெட்டில்மெண்டுகளில்” குடியமைக்கப்படுவார்கள்? எப்படி உத்யோகங்களில் இடம்பெறுவதற்கு
முடியும்?
தேசம் அதிசீக்கிரத்தில் தொழில்மயமாக்கப்பட
வேண்டும். நிலச்சுவான்தாரிமுறை கரைக்கப்பட்டு ஒழியவேண்டும். விவசாய முறையில் புரட்சிகரமான
மாறுபாடு புகுத்தப்பட வேண்டும். இவைதான் தீண்டாதவர்கள் தாங்கள் ஜீவனம் செய்யும் சுயேச்சைத்
தொழில்களைத் தேட வசதி அளிக்கும். இவற்றால்தான் தீண்டாமை ஒழிக்கப்படும். இதற்கு அந்நிய
ஆட்சியின் பிடிப்பிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்டவர்களின்
தலைவர்கள் இதை எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்? நாட்டின் அடிமைத்தனத்தை நீடிப்பது
தீண்டாதவர்களின் அடிமைத்தனத்தைநீடிப்பதாகும்.
இந்த சம்மேளனம் சுதந்திரக் கோரிக்கையை
எதிர்க்கவில்லை. கான்பூரில் நடந்த மகாநாட்டில் தலைமை வகித்த ராவ்பகதூர் சிவராஜ், “நாங்கள்
இந்திய சுதந்திரத்திற்கு எதிராக நிற்கவில்லை, ஆனால் நாகபுரி சம்மேளனத்தில் நாங்கள்
கோரிய கோரிக்கைகள் அளிக்கப்படும் என்ற உறுதிமொழி வேண்டுமென்றோம்”
என்று கூறியிருக்கிறார். ஆனால் “நாங்கள் சுதந்திரத்தை எதிர்க்கவில்லை” என்று கூறிவிட்டால் போதாது. மற்ற மக்களுடன் சேர்ந்து போராடி சுதந்திர
லட்சியத்தை அடையவேண்டும் என்று உணரவேண்டும். தீண்டாதவர் கோரிக்கைகளைப் பெறுவதற்கு அது
அவசியமான வேலை.
சுதந்திரத்திற்காக
ஒன்றுபடுங்கள்
ஆலயப்பிரவேசம் என்ற லட்சியத்திலிருந்து
அரசியல் அதிகாரம் வேண்டுமென்று கோருமளவுக்கு தீண்டாதவர் இயக்கம் வளர்ந்துவிட்டது. மற்ற
கட்சிகளிடத்தும், மற்ற பொதுஜனப் பகுதிகளின்பாலும் இதுவரை அனுஷ்டித்து வந்த கொள்கையையும்
மாற்றிக்கொள்ளவேண்டும். இதை கான்பூர் கூட்டத்தில் அம்பேத்காரே ஒருவாறு ஏற்றுக்கொண்டுள்ளார்.
“இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மூன்றுபகுதிகள் அதிகாரத்தில் பங்கெடுத்தக்கொள்ளும்.
அவை ஹிந்துக்கள், முஸ்லீம்கள், தீண்டாதவர்கள்” (30.1.44)
சுயராஜ்யம் அடைவதற்கு முன்னரே அதைப்பெறுவதற்கு
இம்மூன்று கட்சிகளும் ஒன்றுபடவேண்டியது அவசியமல்லவா? தேசிய காங்கிரசுக்கு தீண்டாதவர்களுக்கும்
இடையில் ஸௌஜன்யமான தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் இரு கட்சிகளுக்குய் பாதகம் ஏற்படும்.
இந்திய சுதந்திரத்திற்கே அது பாதகம் விளைவிக்கும். அதிகாரத்தை கைப்பற்றுவதும் தீண்டாமையை
ஒழிப்பதும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றவேண்டிய செய்கைகள். ஏனெனில் ஏகாதிபத்தியத்தை
எதிர்த்து நடத்தும் செய்கை அது. ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்காக எல்லா மக்களுடைய
கூட்டு முயற்சி அவசியம். தனித்தனியாக முயற்சி செய்வது வெற்றியை அளிக்காது.
நமதுநாட்டின் பொதுஜனங்கள் பலர் தேசிய
காங்கிரசின்கீழ் நிற்கின்றனர். தொழிலாளிகள், விவசாயிகள், படிப்பாளிகள் முதலியவர்கள்
அதில் திரண்டுநின்றனர். அவர்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவுமில்லாமல் அதிகாரம் பெற முடியாது.
அதனால்தான் தீண்டாதவர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்குக் காங்கிரசின் ஆதரவைப் பெறவேண்டும்.
காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவமும், காந்திஜி எதிர்ப்பு மனோபாவமும் மற்ற மக்களிடமிருந்து
அவர்களைப் பிரித்து வைத்துவிடும்.
எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டால்தான் இந்தியா
சுதந்திரம் அடையமுடியும். தீண்டாதவர்களும் அதிகாரத்தில் ஒரு பங்கைப் பெறமுடியும் என்பதை
தீண்டாதவர்கள் உணரவேண்டும். தேசிய காங்கிரஸிடம் அனுஷ்டித்துவரும் போக்கை இந்த உணர்ச்சியினால்
அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய காங்கிரஸின் கொடியின் கீழ் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு
வரும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சரித்திரத்தை அறிந்துகொள்ளவேண்டும்.
தொழிலாளிகள் விவசாயிகள் இயக்கங்கள் தீண்டாதவர்
இயக்கத்துக்கருகேயுள்ள இயக்கங்கள். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுடைய வர்க்க ஸ்தாபனம்,
விவசாய சங்கங்கள் விவசாயிகளுடைய வர்க்க ஸ்தாபனம். ஜாதிமத பேதமின்றி அந்தந்த வர்க்கத்தின்
கோரிக்கைகளின்மீது தொழிலாளிகளையும் விவசாயிகளையும் ஒன்றுபடுத்தி கட்டப்பட்ட ஸ்தாபனங்கள்
அவை. தீண்டாதவர்ககளில் பெரும்பான்மையோர் இவ்விரு வர்க்கங்களிலும் இருக்கின்றனர். தொழிற்சங்கங்களிலும்,
விவசாயிகள் சங்கங்களிலும் சேர்ந்து அந்த ஸ்தாபனங்களை பலப்படுத்தி, அவர்களுடைய அன்றாடக்
கோரிக்கைகளுக்குப் போராட வேண்டியது, இந்தத் தீண்டாதவர்களின் கடமை.
இவ்வாறாக தொழிலாளர்களிடையிலும் விவசாயிகளிடையிலும்
ஒன்றுசேர்ந்து நிற்பதன்மூலம் தங்களுடைய வகுப்புக் கோரிக்கைகளை அடைவதற்கான நிர்ப்பந்தத்தை
அதிகரிக்கவும், துரிதப்படுத்தவும் முடியும் என்பதை இந்த வர்க்கங்களிலுள்ள தீண்டாதவர்கள்
உணரவேண்டும். மற்ற கட்சிகள், மற்ற ஜனங்களை வற்புறுத்தி தீண்டாதவர்களுடைய விசேஷ உரிமைகளைச்
சீக்கிரத்தில் அடையமுடியும். தன்னுடைய வர்க்க ஸ்தாபனத்தில் சேருவது தன்னுடைய கோரிக்கைகள்
நியாயமானவை என்பதை அங்குள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
தீண்டாதவர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை இதுவரை தேசிய இயக்கம் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை.
அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தேசிய ஸ்தாபனத்தின் கோரிக்கைகளாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
இதன் விளைவு தேசிய இயக்கத்திற்கு சாதகமானதாயில்லை. தீண்டாதவர்கள் விழிப்படைந்தனர்.
தங்களுடைய தேவைகளை உணர்ந்தனர். அதற்காகத் தனி ஸ்தாபனத்தை அமைத்துக் கொண்டு விட்டனர்.
இன்று அதிகாரம் வேண்டும் என்ற உணர்ச்சியும் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் நடந்துவந்த
பாதை சுதந்திரப்பாதை.
இந்திய சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டு
ஒடுக்கப்பட்டு வந்த ஒருபகுதி இன்றைக்கு சுதந்திர ஒளிகண்டு விழிப்புற்று வருகின்றது.
சுதந்திரத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் இதை வரவேற்கவேண்டும். அவர்களுடைய நியாயமான
கோரிக்கைகளை ஆதரிப்பதன்மூலம் தேசிய இயக்கம் தீண்டாதவர்களிடம் நம்பிக்கை ஊட்டவேண்டும்.
சுதந்திரப் போராட்டத்திற்காகத் திரண்டுவரும் மாபெரும் வெள்ளப்பெருக்கில் அவர்கள் சேருவதற்கு
வழிதேட வேண்டும். பஞ்சத்தையும் அரசியல் நெருக்கடியையும் எதிர்த்து நடத்தும் போராட்டத்தில்
அவர்கள் மிகவும் முக்யமான பகுதி. தேசிய ஒற்றுமைக்காக தேசிய சர்க்காருக்காக நடைபெறும்
போராட்டத்தில் அவர்களும் ஒரு முக்யமான பகுதி.
தேசிய காங்கிரசும் பழைய கண்ணோட்டத்தை
விட்டுவிட வேண்டும். இப்பிரச்னையை அரசியல் சம்பந்தமற்ற ஒரு பிரச்சினையாகக் கருதக்கூடாது.
தானதருமம், கருணை கடாக்ஷத்திற்காகச் செய்யும் சேவையாக தீண்டாமை ஒழிப்பைக் கருதக்கூடாது.
ஒற்றுமை, நியாயம் - இவ்விரண்டும் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய பிரச்னை இது என்று கருதவேண்டும்.
அப்படிச் செய்தால் அதிசீக்கிரத்தில் சுதந்திர இயக்கத்தின் அணிவகுப்பில் “பறையர்கள்” எனப்படும் கோடிக்கணக்கான இந்தியப் புரட்சிக்காரர்களை சேர்க்கமுடியும்.
***
அனுபந்தம்
1.டாக்டர் அம்பேத்கார் மகாத்மா காந்திக்கு
தாழ்த்தப்பட்டவர் பிரச்சினையைப்பற்றி சமீபகாலத்தில் ஒரு கடிதம் எழுதினார். இந்தியா
சுதந்திரத்தை அடைவதற்கு ஹிந்து முஸ்லிம் பிரச்னையைத் தீர்ப்பது மட்டும் போதாது. தீண்டாமைப்
பிரச்னையும் தீர்க்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தேசத்தின் தலைவர்கள்
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழிதேடவேண்டும் என்று அவர் வற்புறுத்தி இருந்தார். அதற்கு
மகாத்மா காந்தி கீழ்க்கண்ட பதிலை எழுதியிருக்கிறார்:
உங்கள் கடிதத்திற்காக என் வந்தனம். எனக்கு
ஹிந்து முஸ்லிம் பிரச்னை என் ஆயுள் பரியந்தம் நீடிக்கும் பிரச்னையாகிவிட்டது. அதைத்
தீர்த்துவிட்டால் இந்தியாவின் அரசியல் பிரச்னைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று நான்
ஒரு காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தது சரியல்ல என்று அனுபவம் எனக்கு புத்திபுகட்டிவிட்டது.
நான் இளஞ்சிறுவனாக இருக்கும்பொழுதே தீண்டாமையை
வெறுத்தேன். அந்த பிரச்னை இன்று அரசியல் முக்கியத்துவம் அடைந்துவிட்டபோதிலும், ஒரு
சமூக சீர்திருத்தப் பிரச்னை, மத சீர்திருத்தப் பிரச்னை என்ற முறையில்தான் அதைப்பற்றி
எனக்கு அக்கறை அதிகம்... ஆனால் இவ்விஷயத்தில் நம்மிருவருக்கும் வேறுபட்ட அபிப்பிராயம்
உண்டு எண்பதை நான் அறிவேன்.(ஹிந்து 5.1.45)
2. 23.9.44ல் சென்னையில் கூடிய அகில
இந்திய தாழ்த்தப்பட்டவர் பெடெரேஷனுடைய காரியக்கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள்:
தனி
உரிமைகள்
“இந்திய அரசியல்
சட்டம் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு தனி அம்சமாகக் கருதாவிட்டால் அந்த அரசியல் சட்டத்தை
அவர்கள் ஏற்கமுடியாது. பட்ஜெட்டில் இந்த வகுப்பினருடைய கல்வி வசதிக்காக தொகை ஒதுக்கப்பட
வேண்டும். சட்டசபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் அவர்களுக்கு தனி பிரதிநிதித்வம் வேண்டும்.
அரசாங்க உத்யோகங்களில் அவர்களுக்கு குறிப்பிட்ட சில பதவிகள் அளிக்கப்பட வேண்டும்”
தனித்தொகுதி
“தாழ்த்தப்பட்டவர்களுக்கு
‘ரிஸர்வ்’ செய்துவைக்கப்பட்டுள்ள கூட்டுத்தொகுதி முறைக்குப்
பதிலாக தனித்தொகுதிகள் அமைக்கவேண்டும்”
“மாகாணங்களிலும்,
மத்தியிலும் மந்திரிசபைகளில் மைனாரிட்டிகளுக்கும் இடமளிக்கப்படும்”
தாழ்த்தப்பட்டவர்களுக்கு
‘ஸெட்டில்மெண்டு’கள்
“தற்காலம் தாழ்த்தப்பட்டவர்
வசிக்கும் சேரிகளை விட்டு அவர்களுக்கென்று பிரத்யேகமான குடிவாழும் பிரதேசங்கள் (ஸெட்டில்மெண்டுகள்)
ஏற்படுத்தப்பட வேண்டும். இவை ஜாதி ஹிந்துக்களுடைய ஆதிக்கமில்லாத, சுதந்திர காலனிகளாக
இருக்கவேண்டும். சாகுபடி செய்யக்கூடிய சர்க்கார் நிலங்களும், மராமத்து செய்தபின்னர்
வாழக்கூடிய பிரதேசங்களும், அவசியமான இடங்களில் சட்டபூர்வமாக சில நிலங்களையும் வாங்கி ஸெட்டில்மெண்டுகள்
ஏற்படுத்தவேண்டும். அடக்கமான ஸெட்டில்மெண்டு ஏற்படுத்துவதற்கு 5கோடி ரூபாய் வருஷாவருஷம்
செலவு செய்ய அதிகாரமுள்ள கமிஷன் அமைக்கப்படவேண்டும்.
புதுவிசை , இதழ் 35, ஏப்ரல் 2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக