கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 6

கெளரி லங்கேஷ் கொலையும் காவி பயங்கரர்களின் கதையும் - ஆதவன் தீட்சண்யா

படுகொலைகளையும் பஞ்சமாபாதகங்களையும் செய்துவிட்டு அந்தப் பழியை பாதிக்கப்பட்டவர்கள் மீதோ அவர்களை சார்ந்தவர்கள் மீதோ சுமத்துவிட்டு தப்புவதில் காவி பயங்கரவாதிகள் கைதேர்ந்தவர்கள். இப்படியும் இருக்குமோ என்று சட்டென ஒரு சந்தேகத்தை சமூக ஊடகங்களில் கிளப்பி அப்படியே அதை பரவலாக்கி தங்கள் மீதான கொலைப்பழியை திசைமாற்றிவிடுவது அவர்களது வழக்கம்.  டிவிட்டரில் ஆயிரக்கணக்கான போலிக்கணக்குளில் இதற்காகவே இயங்கும் அவர்கள், போராளியும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையிலும் அந்த கேடுகெட்ட உத்தியையே கையாளத் தொடங்கிவிட்டார்கள். இட்டுக்கட்டிப் புளுகுவதில் தேர்ந்தவர்களான அவர்கள் ‘இந்துத்துவவாதிகள் மீது கொலைப்பழி விழவேண்டும் என்பதற்காக கௌரி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார்’ என்று இன்னும் சொல்லாமலிருப்பதேகூட ஆச்சர்யம்தான்.

காவி பயங்கரவாதக் கும்பலின் மாணவர் அமைப்பில் செயல்படுபவராக காட்டிக்கொள்ளும் ஒருவர், கௌரி லங்கேஷ் படுகொலை பற்றிய எனது முகநூல் பதிவில் பின்னூட்டமொன்றை பதிந்துள்ளார்.  ‘‘கொலை செய்தது Communists. ஆனால் பழி இந்து இயக்கங்கள் மீது. இதுபோன்ற எச்சங்களை கொலை செய்யும் போக்கை இந்து இயக்கங்கள் கடைபிடித்தால் பல பேர் இருந்த அடையாளம் இருக்காது.’ வக்கரமும் மிரட்டலும் கொலைவெறியும் அதை நியாயப்படுத்திக்கொள்ளும் போக்கும் நொதித்து வழியும் இந்தப் பின்னூட்டத்திற்கு சான்றாக அவர் கௌரி தனது டிவிட்டரில் எழுதியிருந்த கீழ்காணும் இரண்டு பதிவுகளை இணைத்திருக்கிறார்.

"why do i feel that some of `us' are fighting between ourselves? we all know our ``biggest enemy''. can we all please concentrate on that?" 

"Ok some of us commit mistakes like sharing fake posts. let us warn each other then. and not try to expose each other. peace... comrades"  - இந்தப் பதிவுகளை கௌரி வெளியிட்டுள்ள பின்புலம் காவி பயங்கரர்களுக்கு தெரிந்திருந்தும்கூட திட்டமிட்டே திரித்திருக்கிறார்கள்.

மியான்மரைச் சேர்ந்த ஷிங் பன்யவர் தீப் (Shing Panyuar Dhiph) என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியையும் 4 புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவை இந்தியாவில் வழக்கறிஞராக உள்ள சாய் தீபக் ஜெ (Sai Deepak J)என்பவர் தனது பக்கத்தில் மறுபதிவு செய்ய, அவரது பக்கத்திலிருந்து 197 பேர் பரபரப்பாக பகிர்ந்திருக்கிறார்கள். இதற்கிடையில், பரவலாக பகிரப்பட்டுவரும் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள செய்தி மற்றும் படங்களின் உண்மைத்தன்மையை சூர்போரி புர்கயஸ்தா (Shorbori Purkayastha)  என்பவர் பரிசோதித்திருக்கிறார்.

படம் 1- வங்கதேசத்தின் தென்மேற்குப்பகுதி மாவட்டங்களில் ஒன்று ஜலோகதி. பங்களா தேஷி சுவாமி ஜூபோ லீக் என்ற பெயரில் அங்கு செயல்பட்டுவரும் அமைப்பானது ஒரு வீட்டைத் தாக்கி அங்கிருந்த சாமி சிலைகளையும் படங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் பற்றிய புகைப்படம் ஒன்றை வங்க தேசத்திலிருந்து செயல்பட்டுவரும் ஹிந்து சமிதி குளோபல் மீடியா என்கிற அமைப்பு  முதன்முதலாக 2014ஆம் ஆண்டு தன் வலைத்தளத்தில் http://hindusamhati.blogspot.in/2014/03/no-respite-for-hindus-in-bangladesh.html  வெளியிட்டிருந்தது.

படம் 2- ரோஹிங்ய முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டது குறித்த செய்தியையும் படத்தையும் Ekhon என்ற வங்கதேச இணைய இதழ் நவம்பர் 2016ல் வெளியிட்டிருந்தது. http://ekhon.net/exclusive/12836

படம் 3- Eibela  என்ற வங்கதேச இணைய இதழ், அந்நாட்டின் சிட்டகாங் பகுதியைச் சேர்ந்த ஃபதிக்சாரி என்கிற இடத்தில் 2016ல் கொல்லப்பட்ட இந்து இளைஞர் ஒருவரின் படத்தையும் செய்தியையும் வெளியிட்டிருந்தது. (இந்த கொலைக்களத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிறது ரோஹிங்ய முஸ்லிம்கள் வசிக்கும் ரக்கைய்ன் பகுதி) 

படம் 4- வங்கதேசத்தின் நில்ஃபாமரி என்கிற இடத்தில் 2014ல் ஓர் இந்துப்பெண்ணின் வீடு சூறையாடப்பட்டது. இதன்பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து kalerkantho  என்ற வங்கதேச இணைய இதழில் வெளியான செய்தியுடன் இடம் பெற்ற படம் இது. http://www.kalerkantho.com/online/priyo-desh/2014/02/24/55491

படங்களின் உண்மைத்தன்மை இவ்வாறிருக்க, மியான்மரைச் சேர்ந்த ஷிங் பன்யவர் தீப் இந்த நான்கு படங்களையும் ஒன்றாக அடுக்கி ‘ரோஹிங்ய முஸ்லிம் பயங்கரவாதிகள் ரக்கைய்ன் பகுதியில் இந்துக்கள் பலரை கொன்றுவிட்டனர், இந்துக் கோயில்களை சேதப்படுத்தியுள்ளனர்’ என்கிற பொய்யான செய்தியுடன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

படங்களை ஆய்வு செய்த சூர்போரி புர்கயஸ்தா, இந்தியாவில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டிவிடுவதற்காகவே இந்தப்படங்கள் திரித்து வெளியிடப்பட்டு பரவலாக்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி Fake News Being Used to Incite Anger Against Rohingyas in India (https://www.thequint.com/news/world/fake-news-alert-rohingyas-are-not-killing-hindus-in-rakhine) என்கிற கட்டுரையை The Quint இதழில் 05.09.17 அன்று பிற்பகல் வெளியிட்டுள்ளார்.

மியான்மரில் சிறுபான்மையினரான ரோஹிங்யா முஸ்லிம்களை அழித்தொழிக்கும் விதமாக நடந்துவரும் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிராக உலகளாவிய கண்டனம் எழும்பிவரும் நிலையில் ‘ரோஹிங்யா முஸ்லிம்கள் வன்முறையாளர்கள், அவர்கள் மீதான இப்போதைய வன்முறையானது ஏற்கனவே அவர்களது வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பதிலடியே. அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே’  என்பது போன்று பரப்பப்படும் பொய்களில் ஒன்றே ஷிங் பன்யவர் தீப் என்பவரின் போலியான இந்த டிவிட்டர் பதிவு. சிறுபான்மையினரையும் மாறுபட்ட கருத்தாளர்களையும் கொன்றுவிட்டு அதை நியாயப்படுத்துகிற  இந்திய காவி பயங்கரவாதிகள் இந்தப் பதிவை ஆர்வத்துடன் பகிர்ந்ததற்கு இஸ்லாமிய வெறுப்பைத் தவிர வேறொரு காரணமும் இல்லை.

இப்படியான போலிப்பதிவுகளுக்கு கிடைக்கும் பிரபலமும் பரபரப்பும் பற்றிய ஒரு விவாதத் தொடரில் தான்  கௌரி "why do i feel that some of `us' are fighting between ourselves? we all know our ``biggest enemy''. can we all please concentrate on that?" ,  "Ok some of us commit mistakes like sharing fake posts. let us warn each other then. and not try to expose each other. peace... comrades"  என்பதான பதிவுகளை டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். ஆனால் காவி பயங்கரவாதிகள் இந்தப் பதிவுகளை வெட்டியெடுத்து திசைதிருப்பி அதில் காம்ரேட்ஸ் என்கிற விளிச்சொல் இருப்பதால் கொலைப்பழியை கம்யூனிஸ்ட்டுகள் மீது சுமத்தும் கேவலத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒருவர் கொல்லப்பட்டதற்கு அரசியல் அல்லாத வேறு காரணங்களை கற்பிப்பது அல்லது அடுத்தவர் மீது பழிபோட்டு தப்பிப்பது என்கிற காவி பயங்கரர்களின் குயுக்தியான தந்திரங்களை இதற்கும் முன்பே இந்த நாடு அறிந்திருக்கிறது. காந்தி கொல்லப்பட வேண்டியவர்தான்- கோட்சே கொண்டாடப்பட வேண்டியவர் என்கிற அவர்களின் அருவருப்பான வாதங்கள் இந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் படுகொலையிலும் திரும்பத்திரும்ப ஒலிக்கிறது. கொல்லப்பட்டவர் மீதான மக்களின் அனுதாபத்தையும் கொலையாளிகளின் மீதான கோபத்தையும் திசைதிருப்ப கொல்லப்பட்டவர்கள் பற்றி பல்வேறு கட்டுக்கதைகளை கிளப்பி சிறுமைப்படுத்துவதும்  கூட காவி பயங்கரர்களின் தந்திரமே. நிறுவன பயங்கரவாதத்தால் மாண்டுபோன மாணவி அனிதாவை- அவர் செத்தொழிய வேண்டியவர்தான் என்று பரிகாசம் பேசுகிற அனைவருமே காவிபயங்கரர்களாக இருப்பது தற்செயலானதல்ல. இதோ இப்போது கௌரி சுட்டுக்கொல்லப்பட வேண்டியவர்தான் என்று அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வெறுப்புப் பிரச்சாரமும், அவர் கொல்லப்பட்டதை கொண்டாடிக் களிக்கும் அவர்களது ஏளனப்பேச்சுகளும் பதிவுகளும், கௌரியின் இருப்பைக் கண்டு அவர்கள் இதுகாறும் கொண்டிருந்த அச்சத்தையும் இப்போது அடைந்துள்ள நிம்மதியையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால், ரத்தவெள்ளத்தில் சடலமாய் மிதக்கும் கெளரி லங்கேஷ், இப்போதும் காவி பயங்கரர்களை அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். தன் சடலத்தைக் கொன்றிட அவர்கள் புனையும் கதைகளில் கௌரி  லங்கேஷ்  உயிர்த்திருக்கிறார்.

வெள்ளி, மார்ச் 3

நீதிக்குற்றம் - ஆதவன் தீட்சண்யா

நம்மில் யாரேனும் கொல்லப்பட்டதாக வரும் செய்தி
குன்றச் செய்கிறது எனது ஆன்மாவை
வெடிகுண்டில் பொருத்திய கடியாரமென
அவமானத்தால் துடிதுடிக்கும் என்னிதயம்
நடுங்கிச் சீறுகிறது:
நாங்கள் கொல்லப்பட முடியாதவர்கள்.

கற்றாழை போல நம் திரேகத்தை
கண்டந்துண்டமாய் அரிந்தெடுப்பவர்களின்
நினைவுத்தைலத்தில் பதனமாகிவிடும் நமதுயிரை
கொல்லும் வழியறியாது குமைகிறார்கள்
-ஆம், கொல்லப்பட முடியாதது நமதுயிர்

நெற்றிப்பொட்டைத் துளைத்தேகும் தோட்டா
கிட்டித்த பற்களுக்கிடையே பாயும் மின்கம்பி
ஏன், விர்ரென மோதும் ரயிலினாலும்கூட 
எதுவும் செய்துவிட முடியாது நம் உயிரை.

வாழும் நம் உடல்மீது
ஐம்பூதங்களையும் அரசப்படைகளையும் ஏவி
முடிவற்றதாய் தொடுக்கும் தாக்குதல்கள் 
அற்பமான கொலைமுயற்சிகளே
உயிரை விடும் கணத்தை நாமே தீர்மானிப்பதால்
நம் மரணம் இயல்பானது
நம்மைக் கொல்லும் வழியை எமனுமறியான்.

நமக்கஞ்சி தப்பியோடும் மரணத்தை
இவ்வுலகின் விளிம்புவரை துரத்திப்போய்
நாமாகவே விரும்பிச் சாகும் மாயத்தை 
மை தடவி கண்டறியும் நீதிமன்றங்கள்
சந்தேகத்தின் பலனை
எப்போதும் குற்றவாளிகளுக்கே தந்து
தம்மையும் விடுவித்துக்கொள்வதோடு
நம்மை
பிணக்கிடங்கில் பதப்படுத்தி கண்காணிக்கின்றன

இனி உயிர்த்தெழமாட்டோமென
உறுதிப்படும் நாளொன்றில்
ஆசுவாசமாகி வழங்கப்படும் தீர்ப்பில்
நாம் தற்கொலையாகியிருப்போம்
ஆம், நாம் கொல்லப்பட முடியாதவர்கள்.


(23.02.2017)

நன்றி : விகடன் தடம் , மார்ச் 2017



வெள்ளி, மார்ச் 18

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை: நமக்கல்ல யுவராஜிக்கு - ஆதவன் தீட்சண்யா


" ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை என பெயர் சூட்டுவது ஏன்? இவ்வாறு பேசுபவர்கள், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் என அனைவரும் கூறும் ஒரே காரணம், அவன் பட்டியலினத்தை சேர்ந்த சமூகம்.
இப்படிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மரணம் நிகழ்த்தப்படுமானால் அதற்கு சமூகம் காரணம் இல்லை. பெண்ணை கவர்ந்து செல்பவன் பெண் வீட்டாரை நடைபிணமாக்குகிறான். அதன் வெளிப்பாடு தான் இத்தகைய மரணங்கள். இதனை இனியும் வேடிக்கை பார்க்காமல் காவல் துறை அடக்க வேண்டும் "
- என்று உடுமலைப்பேட்டையில் சங்கர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி இப்படியொரு அறிக்கையை விடுத்திருப்பவர், பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள யுவராஜ்.  தானே கைப்பட எழுதி கையொப்பமிட்ட 8 பக்க அறிக்கையை நேற்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட போது செய்தியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.  யுவராஜ் கொடுத்த அறிக்கையை வெளியிட்டுள்ள ஊடகங்கள்,  இது தொடர்பாக எழுப்ப மறந்துவிட்ட கேள்விகள் இவை:

1. கைதிகளை சந்தித்துப் பேச சம்பந்தப்பட்டவரது உறவினர்களைகூட அனுமதிக்காமல் விரட்டியடிக்கும் காவல்துறையினர், யுவராஜிக்கு மட்டும் செய்தியாளர்களைச் சந்திக்க எவ்வாறு அனுமதித்தனர்? இது சட்டத்திற்குட்பட்டு நடந்ததா? இல்லையெனில் அதற்கு உடந்தையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

2. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவர் சிறைக்கு வெளியேயான நிகழ்வுகள் குறித்து அறிக்கை விடுவதை சட்டமும் சிறைவிதிகளும் அனுமதிக்கின்றனவா?

3. கோகுல்ராஜ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் யுவராஜ், அதேபோன்று நிகழ்த்தப்பட்ட சங்கர் கொலையை ஆதரித்தும் அவ்வாறான கொலைகளைத் தூண்டியும்  அறிக்கை விடுவது குறித்து சட்டத்தின் பார்வை என்ன?

4. கைதியொருவரின் வரம்புமீறிய இத்தகைய சமூகவிரோத நடவடிக்கையை நீதித்துறை தாமாக முன்வந்து விசாரிக்குமா? அவர் அறிக்கை விட்டது சட்ட நடைமுறைகளுக்கு பொருந்தாது எனில் அதன்பேரிலான நடவடிக்கை என்ன?

5. கைதாவதற்கு முன்பு அறிக்கைகள் வழியாக சவடால் அடித்துக்கொண்டிருந்த யுவராஜ், சிறைக்குள்ளிருந்தும் அதே வேலையை எவ்வித தடங்கலுமின்றி செய்துகொண்டிருக்க முடிகிறது என்றால்  சிறைத்துறையினராலோ நீதித்துறையினாலோ கட்டுப்படுத்த முடியாத செல்வாக்கோடு அவர் இருப்பதாக  கருதலாமா? 






வெள்ளி, செப்டம்பர் 14

இடும்பை - ஆதவன் தீட்சண்யா



ரத்தம் எப்போதும் உறைவதுமில்லை உலர்வதுமில்லை
உறைவதற்கோ உலர்வதற்கோ அவகாசமேயற்று
ஓயாது பீறிட்டோடும் அது
எப்படித்தான் உறையும் ஈரம்தான் உலரும்?

கூற்றுவராகிய கொற்றவர் ஆணையால்
இடையறாது சீறும் வேட்டுகள்
இப்பூமியை சூடான ரத்தத்திற்குள் மூழ்கடிக்கின்றன
காடு மலை கடல் வயலென
எங்கெங்கிருந்தும் உறிஞ்சி துப்பப்படும் ரத்தம்
வானத்தின் நிறத்தையும் மாற்றிவிட்டிருக்கிறது

நீதிபோல் புனைந்த நிறைபொய்யின் சுத்தி கொண்டு  
ஓங்கிப் பிளக்கப்பட்ட நம் உச்சந்தலையிருந்து
கொப்பளித்துப் பாயும் குருதியின் அடர்த்தியால்
அசையமாட்டாது திணறும் ஆற்றின் கரைகளில்
நாச்சுழற்றி அலையும் காட்டேரிகளைக் கண்டு
திகிலடைந்து நடுங்குகின்றன தெய்வங்களும்  

ரத்தக்கவுல் எங்கும் வீசுகிறது
நாலாபக்கமும் சுழன்றுவரும் காற்று
ரத்தத்தின் செவ்வரியைப் படர்த்திப்போகிறது
நம்கூரைகளின்மீது
பிசுபிசுக்கும் ரத்தத்திற்குள்ளாக நடக்கப்பழகியிருக்கிறோம் நாம்
பின்தொடரத்தான் மிஞ்சுமோ ஓருயிர்? 

 நன்றி: வெளியிடத் தயங்கும் பத்திரிகைகளுக்கு



ஞாயிறு, ஜனவரி 1

புனிதமற்றவனின் மரண வாக்குமூலம் -ஆதவன் தீட்சண்யா

நேற்றென்னைக் கொன்றவர்களில்
ஒருவனைத் தவிர எல்லோரும் நண்பர்கள்
தலைமாட்டிலும் காலடியிலும்
பெருமிதம் பொங்க நின்ற நண்பர்களை
எதிரி புகைப்படமெடுத்த பின்
புனிதநீர் கொண்டு தம்மைக் கழுவியபடியே
கொன்றதற்கான நியாயங்களைப் பட்டியலிட்டனர்
வரலாற்றிலும் பொதுஅறிவிலும் தேர்ந்தவர்களாதலால்
உலகம் முழுதும் நிகழ்ந்தேறிய கொலைகளிலிருந்து
நானாவித நியாயங்களை வருவிக்க முனைந்தனர்
சம்புகன் ஏசுகிறிஸ்து நந்தன்
ஸ்பார்ட்டகஸ் கலிலியோ
ஜாலியன் வாலாபாக் கான்சன்ட்ரேஷன் கேம்ப்
சேகுவேரா அலண்டே
வெண்மணி
1975-1977 இந்தியா
1984 டெல்லி
பாலஸ்தீன் ருவாண்டா போஸ்னியா இலங்கை
தாமிரபரணி குஜராத் ஜஜ்ஜர் (துலினா)....
ஊர்களையும் பெயர்களையும் உருட்டியாடிய பின்
"கொல்வதற்கு என்ன நியாயம் வேண்டியிருக்கு?
நியாயம் பார்த்தால் கொல்லவே முடியாது
நம்மைப்போல் அவனில்லாதிருப்பதே
கொல்வதற்குப் போதுமான குற்றம்தானெ''ன
கோபத்தோடு ஒருவன் சொன்னதை
ஆமோதிக்கும் கணத்தில்
உயிர் நடுங்கியது ஒவ்வொருவருக்கும்
அடுத்த கொலை தானேயென

புகைப்படச்சுருள் இன்னும் மிச்சமிருப்பதாய் களிப்போடு சொன்னான்
இதுவரை புகைப்படத்திலும் சிக்காத எதிரி.

வெள்ளி, டிசம்பர் 9

கடவுளின் மரணம் - ஆதவன் தீட்சண்யா

ஆயிரங்காலத்துச் சேறோடு
நான் உள் நுழைந்தபோது
உச்சிப்பொட்டில் ஒரேசாத்தில் வீழ்த்தப்பட்ட மாடாக
தனித்து மரித்து அநாதையாய்க் கிடந்தார் கடவுள்

உலகத்திற்கான கடைசிச்செய்தி எதையுமே கூறாமல்
ஆவென பிளந்திருந்த வாயில்
அண்டசராசரம் ஏதும் தெரியவில்லை.

ஆதியந்தமற்றவரென அறியப்பட்டிருந்ததால்
பிணமாயிருப்பது கடவுளாயிருக்க முடியாதென்று விசாரித்ததில்
எல்லாத்திசைகளிலும் கடவுள்
ஏற்கனவே இறந்துவிட்டிருந்தது தெரிந்தது

இங்கேயும்
புரோகிதச்சூதினால் முதன்முறையாகவும்
புஷ்யமித்திர சுங்கனின் வஞ்சகத்தால் மறுமுறையும்
கொல்லப்பட்ட விபரமே தெரியாமல்
எதற்குமே உதவாத அந்தச் சனியனை
இத்தனைக்காலம் சுமந்ததே போதுமென்று
நியாயத்தின் சூட்சும வலுவால்
நான்தான் இறுதியாய் கொன்றேன் என்பது மட்டும்
இன்னும் என் ஞாபகத்திற்கு வரவேயில்லை.

புதன், நவம்பர் 16

ரகசியத்தில் பாயும் நதி –ஆதவன் தீட்சண்யா

பருவங்கெட்டு பெய்து கொண்டிருந்தது மழை. முனிமலை மேலிருந்து பாறாங்கல் உருண்டு வருவதைப் போல, அடர்ந்தடர்ந்து கிடுகிடுக்கும் இடியோசைக்கு குலை நடுங்கியது. சாளைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரோமக்கால் சிலிர்ப்பில் மண்டியிருந்தது குளிர். பழஞ்சீலையை மேலுக்குப் போர்த்தி சாக்குப் பைக்குள் கழுத்துவரைக்கும் நுழைத்துக் கொண்டாலும் வெடவெடப்பு குறையவில்லை. விளையாட்டுக்கு ஒரு மோதுமோதினாலும் இற்று விழுந்துவிடுமளவுக்கு சாளையின் சுவர்களில் ஓதமேறிவிட்டது. கூரையிலிருந்து விழும் மரவட்டைகள் காதுக்குள் நுழைந்துவிடுமோ என்கிற பயத்தில், அரைமயக்கத் தூக்கமும் அவ்வப்போது தடைபட்டது.
 
காடுகரையெல்லாம் ஊறி ஊற்றெழும்பித் தளும்பியது. கிணறுகளில் நீர்மட்டம் பிடுவைத் தாண்டி தொலைக்குழி வழியே கோடி போனது. புடையெடுக்கும் நெல்லங்காட்டில் தெப்பக்குளமாட்டம் முழங்காலமுட்டுத் தண்ணி நின்றது. மேட்டு அணப்புகளில் நட்டிருந்த குச்சிக்கிழங்கு அழுகி நொதிக்கும் நாற்றம் குமட்டியெடுத்தது காற்றை.

‘எம்மக்க பட்டப்பாடெல்லாம் இப்பிடி பதராப் போச்சே... ஒரு போகத்து வெள்ளாமையழிஞ்சா தாங்குமா குடும்பம்...' என்ற மழையிறக்கம் கண்ட நாளிலிருந்து சாக்குப் பைக்குள் முடங்கிக் கொண்டு அங்கலாய்த்துக் கிடக்கிறாள் பொன்னுருகிப் பாட்டி. ‘நான் கொமரியாவறதுக்கு முன்னாடி சின்னப்பிள்ளையா இருந்தப்ப ஒருதபா இப்படித்தான் பேஞ்சது. இப்ப என்னை அடிச்சினு போறதுக்குத்தான் திரும்ப வந்துனுக்கீதாட்டங்கீது.....' என்று ஊதக்காற்றுக்குத் தாங்காமல் நடுங்கும் குரலில் தனக்குத்தானே தன் பிராயத்தை சொல்லிக் கொள்வதைப் போல் முனகிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு இப்போதும் எல்லாமே ஞாபகத்தில் இருக்கிறது. பேயாத மழை பேய்ந்து பெரியநத்தம் ஏரி உடைந்து ஊரும் காடும் வெள்ளத்தில் முழுகியது அப்போதுதான். ஏரிக்கு கீழ்க்கரையில் இருந்த பூங்கரடு, பவளனூத்து, வேட்டக்குடி, வெள்ளிமுறி நாலு ஊருக்கும் சென்மத்தில் காணாத சேதாரம். சுவர் இடிந்தும் கூரை அமுங்கியும் நாலைந்து பேர் செத்துப் போனார்கள். வெள்ளாமை முழுசுக்கும் அழிமானம். விவரந்தெரிந்த நாளிலிருந்து வெளேரென்ற மணல்தட்டிக் கிடந்த மணியாற்றில் கரையைத் திமுத்து ஓடியது தண்ணி. செங்காமூட்டுப் பனையில் பாதி தண்ணிக்குள்ளிருந்தது. அப்படியொரு கோலத்தில் ஆற்றைப் பார்க்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? ஊரே திரண்டு குமிந்தது கரையில். இவளும் சவ்வுக் காகிதத்தை தலையில் கொங்காடையாக மாட்டிக் கொண்டு, சித்தப்பனோடு பார்க்கப் போயிருந்தாள். காணியம்மன் தேருக்குக்கூட இப்படியொரு ஜனம் குமிந்து அவள் பார்த்ததில்லை. கரை முழுக்க ஜனமான ஜனம். பண்ணாடிகளும்கூட குடைபிடித்து வந்து வெப்பால மரத்தைத் தாண்டி கருங்கண்ணன் காட்டோரம் இருந்த பாறைகளில் ஏறி நின்று பார்த்தார்கள். இவள் உயரத்துக்கு தெரியாததால் சித்தப்பன் தோளேற்றிக் கொண்டான். ரண்டுப்பக்கமும் தாண்டுகால் போட்டு உட்கார்ந்து கொண்டு இவளும் பராக்கு பார்த்தாள்.

முனிமலை உச்சியிலிருந்து வகிடு மாதிரி தாழ இறங்குகிறது மணியாறு. எப்போதோ ஒரு காலத்தில் அது பொங்கிப் பெருகி பாய்ந்திருப்பதை இருமருங்கு கரையோரப் பாறைகளில் படிந்திருக்கும் நீர்த்தாரையைப் பார்த்தாலே தெரியும். ‘இப்படி அனாமத்தாய் ஓடி சமுத்திரத்தில் எதுக்கு கலக்கணும்...' என்று ஒரு வெள்ளைக்காரன் நடுவாந்தரத்தில் வளைத்து நொய்யங்குழி அணை கட்டின பிற்பாடு, நிலைமை தலைகீழாகி விட்டது. மழைக் காலத்தில் மட்டும் முடி உதிர்ந்தவள் சடையாட்டம் சன்னமாய் கொடிவாய்க்கால் அளவுக்கு மணலை நனைத்துக் கொண்டு ஈரம் தெரியும். அப்படி இருந்த ஆறா இது... என்று அரட்டிக் கொண்டு ஓடியது இப்போது.

பாறைகளில் வெள்ளம் மோதித் தெறிக்கும் திவலைகள், புகையாட்டம் ஆற்றுக்கு மேல் மிதந்து நகர்ந்தது. செங்கரட்டிலிருந்து வடியும் தண்ணீரும் பாலக்குட்டை கணவாயில் ஆற்றோடு சேர்ந்து புதுவெள்ளத்தின் நிறத்தை செம்மண் குழம்பு போலாக்கியிருந்தது. நேரமாக ஆக தண்ணி மட்டம் ஏறியது மேலுக்கு. அதுவரை பயமும் திகிலும் பரவசமுமாய் கரையிலிருந்தக் கூட்டம் தன்னையறியாது அடியடியாய் பின்வாங்கி நின்றது. மணல் மூட்டைகளை அடுக்கி முட்டுக் கொடுத்திருந்த வண்ணம் பாளையம் ஏரியும் உடைந்து விட்டிருக்கலாம் என்று பேசிக் கொண்டனர். அது உடைந்திருந்தால் பத்திருவது ஊர்கள் ஜலசமாதிரிதான் என்றும் ஒரு குஞ்சுகுளுவான்கூட மிஞ்சாது என்றம் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் சித்தப்பன். ஜவுரிக்கு முடி வாங்கிக் கொண்டு பட்டாணியும் பலூனும் தருகிற கப்பக்காலிக்கு வண்ணம்பாளையம்தான் ஊர். அவள் இனி வருவாளோ, மாட்டாளோ என்ற கவலை இவளுக்கு. தாவாரத் தண்டையில் சொருகி வைத்திருக்கும் முடிச்சுருணையை இனி யார் வாங்கிக் கொள்வார்கள் என்று யோசித்தாள்.

பாறைகளில் வெள்ளம் விளாறியடித்து ஓடும்போது ஏற்படும் சத்தம் ஓங்காரமாய்க் கேட்டது நெடுந்தூரத்துக்கு. பராக்குப் பார்க்கப்போன பிள்ளை இன்னும் திரும்பாத பதட்டத்தில் கூட்டிப்போன கொழுந்தனைக் கறுவிக் கொண்டே அவள் அம்மாவும் கரைக்கு வந்து விட்டிருந்தாள். மகளைத் தேடி வந்தவள் பெருக்கெடுத்துப் பாயும் செந்தண்ணியைக் கண்டதும் சின்னப்பிள்ளை மாதிரிரி மிரண்டு போனாள். அவளும் ஆயுசுக்கு இப்படிப் பார்த்தவளில்லையே...’ஆத்துக்குன்னு ஒரு வழியிருக்கு, அது நம்ம மேல வந்து ஏறாது'ன்னு கொழுந்தன் தைரியம் சொன்னான். ‘பயத்துல புள்ளைக்கு காய்ச்ச குளுரு வந்தா ஒங்கொண்ணனுக்கு ஜவாப்பு சொல்றது யாரு...' என்று நொடித்துக்கொண்டே ‘வா யம்மா சாளைக்குப் போலாம்' என்று மகளை அழைத்தாள். மறுத்து தலையாட்டியபடி சித்தப்பனின் உச்சிமுடியை கோர்த்துப் பிடித்தாள் இவள். ‘சின்னப்பிள்ளையாட்டம் தோள்மேல ஒக்காந்துனு ரெம்பவும்தான் செல்லங் கொஞ்சறே... ஏய் இறங்கி வாடி' என்று அம்மா அதட்டியதும் இவள் அடம் பிடித்து அழுததும் எப்டியோ போய்த்தொலை என்று அவள் விட்டுவிட்டதும்கூட இவளுக்கு மறக்கவில்லை.

மரம் மட்டை செடி செத்தை இன்னதென்றில்லாமல் எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் மிதந்தோடிப் போய் மறைகிறதாயிருந்தது ஆறு. சாளையின் கூரைகள் பாதி மூழ்கியும் மூழ்காமலும் ரங்கவட்டம் சுற்றிக்கொண்டு ஓடுவதைப் பார்த்து கூட்டம் அரற்றியது. அடித்துக்கொண்டுபோன ஆடு மாடு உருப்படிகள் ஒண்ணா ரண்டா...? நாயொன்று கரையேற மாட்டாமல் தத்தளித்துக் கொண்டு அண்ணாந்து ஊளையிட்டபடி ஆற்றின் போக்கில் போய்க்கொண்டிருந்தது. தீத்தான்கொல்லை பக்கத்தில் கரையிலிருந்த வாகை மரமொன்று பெருஞ்சத்தத்தோடு ஆற்றின் குறுக்கே சாய்ந்தது. நல்லவேளையாய் அந்த மரத்துக்குக் கீழே நாய் நின்றிருக்கவில்லை. பெருங்கூட்டு மரம் என்பதால் வெள்ளத்தை கிடையாய் மறித்துக்கொண்டு நின்ற அவ்விடத்தில் சுழிபோல ஆறு பொங்கி எதுக்களித்து ஓடியது திசைதப்பி. மேங்காட்டிலிருந்து அடித்துக் கொண்டு வந்த ஒரு மாட்டின் கொம்பு, மரத்தின் கிளைகளில் சிக்கிக் கொண்டது. அது மேற்கொண்டு நகரமுடியாதபடி செருமிக் கொண்டு தீனமாய் கத்தியது.

சித்தப்பனும் அவனது சேக்காளிகளும் எதையோ குசுகுசுத்தார்கள். பின், உங்கம்மா கையைப் பிடிச்சுக்க கண்ணு என்று தோளிலிருந்த இவளை இறக்கி அவளிடம் விட்டுவிட்டு எங்கோ ஓடியவன், இரண்டு கயித்துச் சுருணைகளை தூக்கிவந்தான். பெத்தய்ய நாய்க்கர் காட்டோரமிருந்த விளாமரத்தில் ஒண்ணுங்கீழ் ஒண்ணாய் கயிறுகளைக் கட்டி மறுமுனையை இடுப்பில் கட்டிக் கொண்டான். இவளும் இவங்கம்மாளும் சனங்களும் போட்ட கூப்பாட்டை அவன் சீந்தவேயில்லை. கீழேரிப்பள்ளம் தெக்கத்தியான் காட்டில் பண்ணையத்தில் இருந்தபோது, பெண்ணையாற்றில் ஆற்றுநீச்சல் பழகிய தைரியம் அவனுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது. ஆனால், காட்டாற்றுக்கு கரையுமில்லை வரையுமில்லை என்பதால்தான் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்குகிறான். எதற்கு இவன் ஆற்றுக்குள் இறங்குகிறான் என்று தெரியாத கூட்டம், அவனது சேக்காளிகளைத் திட்டிக்கொண்டே சேற்றுக்கட்டிகளை எடுத்து வீசி கரைக்கு அழைத்தது.

அவன் ஆற்றின் போக்கில் கைகளை நீளநீளமாய் விளாவிப்போட்டு, ஒரு தக்கையைப்போல மிதந்து மரத்தை நெருங்கினான். இப்போது ஆற்றின் போக்கை மறித்துக் கொண்டு குறுக்குவாட்டமாய் மரத்தை நோக்கி அவன் கடக்க வேண்டியிருந்தது. வெள்ளம் அவனை உந்தித்தள்ளி இழுத்தது. நீந்தவும் முடியாமல் கால்பாவவும் ஏலாமல் பிடிமானமற்றுத் தத்தளித்தவன் மரக்கிளையொன்றைப் பற்றிக் கொள்வதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. தவ்வித்தவ்வி நகர்ந்து மாட்டின் கழுத்தில் ஒரு கயிற்றால் படிமுடிச்சிட்டான். இன்னொரு கயிற்றை பின்னங்கால் பக்கம் போட்டு, முதுகுப்பக்கம் இழுத்துக்கட்டி விட்டால் மாட்டை இழுப்பது சுளுவாயிருக்கும். ஆனால், தண்ணிக்குள் முழுகினால்தான் உண்டு. கலக்கங்கண்ட புதுத்தண்ணியாயிருப்பதால் முழுகினாலும் எதுவும் நெப்பு நிதானம் தெரியவில்லை. ஆனது ஆகட்டுமென்று சீக்கையடித்தான். கரையிலிருந்த அவனது சேக்காளிகள் கயிற்றை இழுக்க, பின்னாலிருந்து இவன் உந்தித் தள்ளினான். மாட்டை கரை சேர்ப்பது பெரும்பாடாகிவிட்டது. அது உயிரோடிருந்தது.

கயிற்றோடு மீண்டும் ஆற்றில் இறங்கப் போனவனை ‘மறுக்கா எதுக்குப் போறே காளீப்பா...' என்று இவளம்மா தடுத்தாள். ஒண்ணும் ஆகாது என்று சொல்லிக்கொண்டே அவன் போய் மரத்தின் ஒரு கிளையில் வாகாக உட்கார்ந்து கொண்டான் இப்போது. மிதந்துவந்த சீலையொன்றை இழுத்துச் சுருட்டி கரைக்கு வீசினான். அது பாதியிலேயே விழுந்து சாயத்தண்ணி மாதிரிரி ஓடியது. தலைகுப்புறக் கவிழ்ந்து தக்கையாட்டம் தேலிக்கொண்டு வந்து ஒரு பிணத்தைக் கண்டு திகீரென்றானவன் என்ன செய்ய என்ற யோசிப்பதற்குள் அது கடந்து போய்விட்டது. கரையிலிருந்து அதப்பிடிடா பிடிடா என்று கூப்பாடிட்டனர். பிணத்தை எடுத்து எதற்காகும்... ஆள் யார் ஊர் எது என்று இந்த மழையில் தேடிக் கண்டுபிடித்து கொடுக்கிற பாடும் தன் அண்ணனுக்குத்தான் சேர்ந்துத் தொலையும் என்று நினைத்துக் கொண்டதும்கூட, அவன் அந்தப் பிணத்தை போட்டுமென்று விட்டதற்கு காரணமாயிருக்கும்.

‘ஒரு பறப்பயனுக்கு இருக்கிற தகிரியம் நம்மள்ல ஒருத்தனுக்கும் கெடையாதா...' என்ற மீசை கடித்த வேங்கான் மகன் சொக்கனிடம் ‘ஆத்தோட போற மாட்டை அறுத்துத் தின்னா எவன் கேக்கப் போறாங்கிற துணிச்சல்ல எறங்கிப் புடிச்சிட்டான். மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுதானாம் பறையன் கொழுப்புக்கு அழுதானம்கிற கதையா இருக்கு இவனுகங்க பண்றது... இதுல நீயும் நானும் போட்டிப் போடணுமா...' என்றான் வெள்ளை. நம்ம கண்ணு முன்னாடியே எத்தினி ஆடுங்க அடிச்சினு போச்சு... ஒண்ணையாவது மறிச்சு தூக்கணும்னு நமக்குத் தோணலியே... அவன் என்னடான்னா பராக்கு பாக்க வந்த எடத்துல வூட்டுக்கு ஒருகூறு கறிக்கு வழி பண்ணிட்டான் பாத்தியா...' என்று மறுபடி கொதித்தான் சொக்கன். ‘அதுக்கு ஏண்டா மருகா ஆத்ரப்படறே... அவங்களுக்கு ஒரு மாட்டைப் பிடிச்சவன் நமக்குன்னு ஒரு ஆட்டைப் பிடிக்காமலாப் போயிடுவான்... கரைக்கு வரட்டும் பாத்துக்கலாம்...' என்று சமாதானம் சொன்னான் வெள்ளை. அவன் வாய் முகூர்த்தம் பலித்த மாதிரிரியே அடுத்தடுத்து ஒரு செம்பிலியாட்டையும் மான் ஒன்றையும் மடக்கி கரைக்கு ஏற்றிவிட்டு தானும் கரை திரும்பினான் இவள் சித்தப்பன்.

கரைக்கு வந்தவன் தான் மீட்ட உருப்படிகளை ஒரு நோட்டம் விட்டான். அவை தண்ணியிலிருந்து மீண்டு தப்பித்த உணர்வின்றி இன்னும் நடுங்கிக் கொண்டே இருந்தன. மாட்டின் உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. அதன் வயிறு உப்பசம் கண்டது போலிருந்தது. அடிக்கடி வாலைத் தூக்கி மூத்திரம் பெய்து கொண்டேயிருந்தது. சும்மாவே செருமிக்கிடக்கும் ஆடு நிலைகொள்ளாமல் துள்ளித்துள்ளி செருமி குடித்துவிட்டிருந்த ஆத்துத் தண்ணியை வெளித்தள்ள பாடாய் பட்டுக் கொண்டிருந்தது. பயத்தில் புழுக்கையிடுவதற்குப் பதில் கழிச்சலைப் பீய்ச்சியது. மனிதர்களைக் கண்ட மிரட்சியில் மானின் காதுகள் விடைத்துக் கிடந்தன.

குடை பிடித்து நின்றிருந்த பண்ணாடிகள், அவர்களுக்குள் குசுகுசுத்துவிட்டு ‘நல்ல காரியம் பண்ணிட்டடா காளீப்பா... என்று பாராட்டினார்கள். பேச்சு இங்குமிங்குமாய் சுற்றியடித்து உருப்படிகளைப் பங்கு பிரிப்பதில் வந்து நின்றது. மாட்டை நீங்க எடுத்துக்குங்க... ஆடும் மானும் எங்களுக்கிருக்கட்டும்' என்பதாயிருந்தது பண்ணாடிகள் விருப்பம். ‘உசுரை தண்ணி மேல எழுதி வச்சிட்டு ஆத்துல இறங்கினது நான். கரையிலிருந்து இழுத்துப் போட்டது எங்காளுங்க. இதுல பங்கு பாகம்னு கேட்கிறது பண்ணாடிமாருக்குத் தகுமா சாமி...' என்றான் காளியப்பன். ‘அடே, உங்கிட்ட யாரும் பஞ்சாயத்து பேசல. நாங்க பிரிச்சியுடறோம். அவ்வளவுதான்...' என்றான் வெள்ளை. ‘பாத்தாலே தெரியலீங்களா பண்ணாடி அது செனைமாடுன்னு. வளக்க வேண்டிய சிசு அது வயித்துல இருக்கும்போதுஅறுத்துத் திம்பாங்களா யாராச்சும்... இந்த மாட்டை வேணும்னா பிடிச்சுக்கிட்டுப் போய் உங்க பட்டியிலியோ கட்டாந்தரையிலியோ கட்டிக்குங்க. எங்க பொண்டு புள்ளைங்க வயித்துல ஈரங்கண்டு ரண்டு நாளாச்சு. ஆடும் மானும் எங்களுக்கு வேணும்.....' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குடையை வீசியெறிந்துவிட்டு அவன் மீது பாய்ந்தான் சொக்கன். காளியப்பன் விலகிக் கொள்ளவும் நிலைகுலைந்து விழுந்த சொக்கன், அவமானம் தாங்காமல் எழும்பும் நினைப்பற்று சேற்றிலேயே கிடந்தான். கூட்டம் ரெண்டுத் தரப்பாய் கிழிந்து முறுக்கியது.

‘செத்தமாட்டைத் திங்கற நாய்ங்க செனமாட்டுக்கு கருணை காட்டுதுங்களேன்னு பொருமாதீங்க பண்ணாடி... பாவம் ரட்டைச் சீவன். இந்த மாட்டுக்கு ஒரு நாம்பு புல்லறுத்துப்போட எங்களுக்குன்னு கோமணத்தமுட்டு நெலம் நீச்சுகூட கிடையாது. அதனால அதை நீங்களே பிடிச்சுக்குங்க' என்ற சொல்லிவிட்டு, ஆட்டையும் கேளையையும் பிடித்துக் கொண்டு சேக்காளிகளோடு சேரிக்குத் திரும்பினான். இவளும் இவள் அம்மாவும் பின்னாலேயே ஓடினார்கள். பண்ணாடிங்கள பகைச்சிக்கிட்டா அவங்க நம்மள சும்மா விடுவாங்களா...? என்று வழிநெடுக புலம்பிக் கொண்டே வந்தாள் அம்மா.

கரையில் நடந்த சண்டையே மிச்சப்பொழுதின் பேச்சாயிருந்தது. கறியாக்கித் தின்னும் ஆசை யாருக்கும் தோன்றவேயில்லை. அடுப்பு மூட்ட காய்ந்த ஒரு சிமிறுகூட சேரிக்குள் யார் வீட்டிலும் இல்லாத நிலையில், இப்போதைக்கு கறியறுக்க வேண்டாம் என்று பெண்கள் சிலர் சொன்னதும் சரியென்றே பட்டது. விபரீதமான சூழலுக்குப் பொருந்த முடியாமலும் புரியாமலும் காளியாத்தா கோயில் நடையில் மேமே என்ற ஆடு கத்திக் கொண்டேயிருந்தது. இதுவரையிலும் பார்த்தேயிராத மானைச் சுற்றிக் குமிந்து பசியை மறக்கத் தொடங்கியிருந்தனர் குழந்தைகள். குளிரில் சிலிர்க்கும் மேனியில் புள்ளிவட்டங்கள் வினோதமாய் மாறும்போது மான் இன்னும் வேடிக்கைக்குரியதாயிருந்தது.

அந்தி சரியும்போது மீண்டும் மின்னல் வெட்டிக் கொண்டு மழையடிக்கத் தொடங்கியது. காலையிலிருந்து சிணுங்கிக் கொண்டிருந்த தூறல், இப்போது சடசடவென்று பெருமழையாகி இறங்கியது. ரெண்டுபக்கமும் திண்ணை வைத்து தரைக்கு காரை பூசியதாயும் மங்களூர் ஓடு போர்த்தியதாயும் இருந்த கோயில் மட்டுமே சேரியில் ஒழுகாததாய் இருந்ததால், மொத்தசனமும் அங்கேதான் அடைக்கலமென வந்து அண்டியிருந்தனர்.

அன்றிரவும் பிள்ளைகள் சோளப்பொறியைக் கொறித்து வயிறுமுட்ட தண்ணீரைக் குடித்துவிட்டு மானைச் சுற்றி சுருண்டு கிடந்தனர். பண்ணாடிமாருக்கும் இவங்களுக்கும் காலங்காலமாய் நடந்த சண்டைச் சச்சரவுகள், பஞ்சாயத்துகள், தீர்ப்புகள், தண்டனைகள் பற்றி தங்களது ஞாபகத்தைக் கிளறி கிளறி பெரியவர்கள் ஆளாளுக்கு ஒன்றாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பழையவை உண்டாக்கின பயமும் கோபமும் இருட்டில் வினோத உருவங்களாகி அலைந்து, அவர்களின் தூக்கத்தைப் பறித்து விழுங்கின. பொன்னுருகியும்கூட கண்ணை மூட பயந்து இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்நேரம் இவ்விடத்தில் அப்பன் இருந்திருந்தால், அணைத்துக் கொண்டு தூங்கியிருக்க முடியு மெனத் தோன்றியது அவளுக்கு. ஆனால், சர்க்கார் தோட்டியான அவள் அப்பன், உடைந்து விட்ட ஏரியைப் பார்க்கப்போன முன்சீப்பையருடன் நேற்று சாயங்காலமே போக வேண்டியதாயிற்று. தண்ணிக்குள் முழுகிச் செத்தவர்களின் பிணங்களை போலிஸ் வந்து எடுத்துப் போகும்வரை, அங்கேயே இருந்து பிணங்களுக்கு பந்தோபஸ்து கொடுக்க வேண்டிய சர்க்கார் தோட்டி தன் மகளைத் தூங்க வைப்பதற்காக எப்படி வரமுடியும்?

தங்ளையும் மீறி சிலருக்கு கண் சொக்கும் நேரத்தில் மாட்டின் பெருஞ்சத்தம் கேட்டது. திண்ணையிலிருந்து இறங்கிவந்து தாவாரத்தில் நின்று உற்றுக் கேட்டான் கசாப்பு கோயிந்தன். வெள்ளத்தின் பேரிரைச்சலையும் மீறி ஆற்றங்கரைப் பக்கமிருந்து பேரோலமாய் எழுந்தது மாட்டின் கத்தல். நெடுநேரம் ஆற்றுக்குள் நின்றிருந்ததால் உடம்பில் ஏறிய சில்லிப்பில் வெடவெடத்து முடங்கியிருந்த காளியப்பனை உசுப்பி எழுப்பினான் கோயிந்தன். மாடு கத்தன சத்தம் கேட்டுச்சாடா உனக்கு...? என்றான். ‘அவனுங்க அங்கயே உட்டுட்டுப் போய்ட்டாங்களாட்டங்கீது. ஆத்தங்கரையிலயேத்தான் இருக்காட்டங்கீது' என்றான். ‘நாம காப்பாத்தின உசுரை அவங்களை நம்பி உட்டுட்டு வந்தது தப்பாப்போச்சே...' என்று கலங்கிய காளியப்பன் ‘போய் பாத்துட்டு வரலாமா' என்றான். சித்தப்பனை கூப்பிட நினைத்தவள் அமைதியானாள்.

அடித்த கூதலில் ராந்தல் நெடுந்தூரம் தாங்கவில்லை. அப்படியும் இப்படியுமாய் அளைந்து கடைசியில் அந்த கைவிளக்கும் அணைந்துவிட்டது. கையிருப்பிலிருக்கும் தீக்குச்சிகள் விரயமாவதில் அவர்களுக்கு சம்மதமில்லை. ஜம்பமாய் கூத்தாடி முருகன் கொண்டுவந்திருந்த மூனுகட்டை பேட்டரி மின்னாம்பூச்சியாட்டம் மங்கியடித்தது. பந்தமாவது கொளுத்தி வந்திருக்கலாமென்றான் கணவதி. அந்த எண்ணையிருந்தா ஒரு நாள் சாளையில் வெளக்கெரிக்க ஆவும் என்று வாயடைத்தான் கொண பாலன். வேறுவழியில்லாமல் நடந்து பழகிய நெப்பிலும் கொடியோடப் படரும் மின்னல் வெளிச்சத்திலும் கரையை நோக்கி உத்தேசமாய் நடந்தார்கள். மழைக்காலிருட்டில் பாதை வழுக்கியது. நதானங்கெட்டு கால் வைத்தால் ஊறிக்கிடந்த பூமி உள்ளிழுத்தது. கவனம் கவனம் என்று கடக்க வேண்டியதாயிற்று ஒவ்வொரு அங்குலத்தையும்.

மாடு மறுபடி கத்தாமலிருப்பது கிறுத்து காளியப்பனுக்கு சற்றே ஆசுவாசம் வந்தது. கரையை நெருங்க நெருங்க மாட்டின் பெருமூச்சு சீரற்று இரைந்து கேட்டது. வெள்ளத்தில் சிக்கி இழுபட்டு வந்ததில் சினை தங்காமல் இறங்கியிருக்குமோ... பூச்சிப்பொட்டு எதாச்சும் கடித்திருக்குமோ... என்று பலவாறாய் தனக்குள் புலம்பி நடந்தான். வெள்ளத்தின் பேரிரைச்சல். இடி மின்னல். இருட்டு. தனியாக் கெடந்து என்ன தவுதாயம் பட்டதோ மாடு என்று நினைத்துக் கொண்டபோது, அவனுக்குத் தன் மீதே வெகாளம் பாய்ந்தது. ஆனது ஆகட்டுமென்று சாயங்காலமே அதையும் இழுத்து வந்து கோயிலடியில் கட்டியிருக்கணும் என்ற நினைப்பை அறுத்துக்கொண்டு யாரோ ஓடுவது கேட்டது.

யார்ரா அது என்ற கத்திக்கொண்டே காலடியோசையை விரட்டிப்ப பாய்ந்தார்கள் இருட்டுக்குள்ளேயே எல்லோரும். தாங்கள் விரட்டுவது மனிதனையா, விலங்கையா, எதுவுமற்ற நினைப்பையா என்று யோசிக்க அவகாசமில்லை அவர்களுக்கு. யாரோ விழுந்து அலறியதைப் பொருட்படுத்தாது ஓடிய உருவத்தின் மூச்சிரைப்பையே அவர்கள் துரத்த வேண்டியதாயிற்று. ஒரு மின்னல் வெட்டில் ஓடிக்கொண்டிருந்த சொக்கன் எல்லோருக்கும் பிடிபட்டுப் போனான்.

காளியப்பன் பிடி அவன் உடம்பில் ஈரக்கயிற்றைப் போல் இறுகிக் கொண்டிருந்தது. என்னைத் தொட்டுப் பிடிக்கிற தைரியம் வந்துருச்சாடா ஒங்களுக்கு என்று திமிறினான் சொக்கன். உன்னைத் தொட்டதால இப்ப நீ கருகிட்டியா இல்ல நாங்கதான் கருகிட்டமா... என்ற கணவதி, சொக்கன் கையிலிருந்த பேட்டரியை பிடுங்கிக் கொண்டு மாட்டை நோக்கிப் போனான். பிடியைத் தளர்த்தாமல் சொக்கனை இழுத்துக்கொண்டு காளியப்பனும் அவனுக்குப் பின்னே மற்றவர்களும் நடந்தனர். என்னை விடுடா தேவிடியா பெத்ததே என்று திமிறிக் கொண்டே இருந்தான் சொக்கன். ‘பறையன் தானம் பண்ணித்தான் எங்க பண்ணையத்துல மாடுகன்னு பெருகணுமாடா' என்று பொருமினான். ஒருவரும் மறுவார்த்தை பேசவில்லை.

மாடு சரிந்து கிடந்தது. அதன் வயிற்றில் கடப்பாறை மின்னியது. கடப்பாறை இறங்கிய இடத்திலிருந்து ரத்தம் கொப்பளித்து பெருகிக் கொண்டிருந்தது. எங்களுக்குன்னு கொடுத்த மாட்டை நாங்க எதுவுஞ் செய்வோம் என்றான் சொக்கன். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. ஆவேசம் வந்தவனாகி அவனை குண்டுக்கட்டாக தூக்கி ஆற்றின் திசையில் வீசினான் காளியப்பன்.

தெறித்து விழுந்தத் தண்ணீரை துடைத்துக் கொள்ளவும் நினைப்பில்லாமல் அங்கேயே கொஞ்சநேரம் நின்றிருந்தவர்கள் எதுவும் பேசிக் கொள்ளாமல் திரும்பினர்.

மாட்டைக் கொன்றுவிட்டு சொக்கன் எங்கோ ஓடிப் போய்விட்டான் என்றே இன்றும் பேச்சிருக்கிறது ஊருக்குள். இத்தனை வருஷங்கழித்து இப்படி பெருக்கெடுத்தோடும் மணியாற்றில் அவன் பிணம் மிதந்து வந்தால் எப்படியிருக்கும் என்று பொன்னுருகிக் கிழவி நினைத்துக் கொண்டபோது அவளுக்கு சிரிப்புதான் வந்தது. ஒழிஞ்சது பீடை என்று சொல்லிக்கொண்டே தூங்கடா பொண்ணு என்று மார் மீது கிடத்திக் கொண்ட சித்தப்பனின் நினைப்பு அவ்விடத்தில் கதகதவென்று பரவியது. மானின் புள்ளிவட்டங்களை கண்விரியப் பார்த்து வியந்த பொன்னுருகி என்னும் குட்டிப் பெண்ணாக தான் மாறிக் கொண்டிருப்பதாய் நினைத்துக் கொண்ட கிழவிக்கு இப்போது குளிரவில்லை.




துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...