புனிதமற்றவனின் மரண வாக்குமூலம் -ஆதவன் தீட்சண்யா

நேற்றென்னைக் கொன்றவர்களில்
ஒருவனைத் தவிர எல்லோரும் நண்பர்கள்
தலைமாட்டிலும் காலடியிலும்
பெருமிதம் பொங்க நின்ற நண்பர்களை
எதிரி புகைப்படமெடுத்த பின்
புனிதநீர் கொண்டு தம்மைக் கழுவியபடியே
கொன்றதற்கான நியாயங்களைப் பட்டியலிட்டனர்
வரலாற்றிலும் பொதுஅறிவிலும் தேர்ந்தவர்களாதலால்
உலகம் முழுதும் நிகழ்ந்தேறிய கொலைகளிலிருந்து
நானாவித நியாயங்களை வருவிக்க முனைந்தனர்
சம்புகன் ஏசுகிறிஸ்து நந்தன்
ஸ்பார்ட்டகஸ் கலிலியோ
ஜாலியன் வாலாபாக் கான்சன்ட்ரேஷன் கேம்ப்
சேகுவேரா அலண்டே
வெண்மணி
1975-1977 இந்தியா
1984 டெல்லி
பாலஸ்தீன் ருவாண்டா போஸ்னியா இலங்கை
தாமிரபரணி குஜராத் ஜஜ்ஜர் (துலினா)....
ஊர்களையும் பெயர்களையும் உருட்டியாடிய பின்
"கொல்வதற்கு என்ன நியாயம் வேண்டியிருக்கு?
நியாயம் பார்த்தால் கொல்லவே முடியாது
நம்மைப்போல் அவனில்லாதிருப்பதே
கொல்வதற்குப் போதுமான குற்றம்தானெ''ன
கோபத்தோடு ஒருவன் சொன்னதை
ஆமோதிக்கும் கணத்தில்
உயிர் நடுங்கியது ஒவ்வொருவருக்கும்
அடுத்த கொலை தானேயென

புகைப்படச்சுருள் இன்னும் மிச்சமிருப்பதாய் களிப்போடு சொன்னான்
இதுவரை புகைப்படத்திலும் சிக்காத எதிரி.

2 கருத்துகள்:

  1. ஆழமான கவிதை.இதன் பேச்சும் உள்குரலும் கவனிக்கச் செய்கின்றன.நம்மைப்போல் அவனில்லாதிருப்பதே
    கொல்வதற்குப் போதுமான குற்றம்தானெ...அதிர்வு எழுப்பும் வரி.

    பதிலளிநீக்கு
  2. அருமை. உண்மை. தன்னைப் போல் இல்லாதிருக்கும் ஒரே காரணத்தாலே பல போர்கள் நடந்திருக்கின்றன. நடக்கவும் இருக்கின்றன. வேற்றுக் கலாச்சாரத்தின் மீதான வெறுப்புதான் அனைத்துப் பகைகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பின்னால் இருக்கும் ஒரே நியாயம். அதுதான் இந்த உலகத்தின் எதிர் காலத்தின் மீது இருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல். என்றென்றும்!

    பதிலளிநீக்கு