இருட்டடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருட்டடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 1

மே1: உழைப்பாளர் தினமும் ஐசிஐசிஐ மோசடியும் - ஆதவன் தீட்சண்யா


மே-1, சர்வதேச தொழிலாளர் தினம். வேலைநேரத்தை எட்டுமணி நேரமாக குறைக்க வேண்டியும் இன்னபிற அடிப்படையான கோரிக்கைகளுக்காகவும் நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் நாள். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் மே 1 பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை இல்லாத பகுதிகளில் அதற்கான போராட்டம் தொடர்கிறது.

இந்தியாவில் மத்திய அரசு பொதுவிடுமுறை தினமாக அறிவிக்காவிட்டாலும் மாநில அரசுகளும், வங்கி, காப்பீடு போன்ற நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மே தினத்திற்காக விடுமுறை அளித்துவருகின்றன. ஐசிஐசிஐ வங்கியும்கூட மே1 அன்றைக்கு நாடு முழுவதும் தனது கிளைகளுக்கு விடுமுறை விட்டுள்ளது. ஆனால் உழைப்பாளர் தினத்திற்காக அல்ல. அன்றைக்கு மகாராஷ்டிரா தினத்திற்காகவாம். ஆட்டுப்புழுக்கையை வாங்கிக்கொண்டு ஐசிஐசிஐயில் பணம் தருகிறார்கள்  என்று சொல்வது எந்தளவிற்குப் பொய்யோ அந்தளவிற்குப் பொய்யானது மே முதல்நாளை உழைப்பாளர் தினம் என்று சொல்லாமல் மறைப்பது.

மே முதல்நாளை நிராகரித்து விஸ்வகர்மா பிறந்த தினத்தை (?)  உழைப்பாளர் தினமாக கொண்டாடவேண்டும் என்று சங் பரிவாரத்தைப்போலவே வேறு ஏதாவதொரு நாளை உழைப்பாளர் தினமாக கொண்டாடச் சொல்லி ஐசிஐசிஐயும் ஜோக்கடிக்கிறதா என்று பார்த்தால் அதுவுமில்லை.   மாறாக, மே முதல்நாளை சட்ட தினம் (Law Day) என்றும் விசுவாச தினம் ( Loyalty Day) என்றும் அறிவித்து உழைப்பாளர் தினத்தை இருட்டடிப்பு செய்யும் அமெரிக்காவுக்கு நிகரானதொரு அரசியல் மோசடியில் ஐசிஐசிஐ ஈடுபட்டுள்ளது. 

30.4.12 அன்று ஐசிஐசிஐ ஒசூர்கிளையின் ஒளிபரப்புத்திரையில் ‘மே1 விடுமுறை: மகாராஷ்டிரா தினம்’ என்ற செய்தியை படிக்க நேர்ந்ததும் அதுகுறித்து கிளைமேலாளரிடம் வினவினேன். நாளை மே தினத்திற்காகத்தான் விடுமுறை என்றார். பின் ஏன் இவ்வாறு ஒளிபரப்பாகிறது என்று கேட்டதற்கு, மகாராஷ்ட்டிரா தினமும் நாளைக்குத்தான்- மும்பையிலிருந்து  மத்தியப்படுத்தப்பட்ட ஒளிபரப்பு என்பதால் இங்கும் அவ்வாறே தவறுதலாக வருகிறது என்று தெரிவித்தார். 

இதே மத்தியப்படுத்தப்பட்ட ஒளிபரப்பில், தனது வணிகம் சார்ந்த கருத்துகள் என்று வருகிறபோது மட்டும் அந்தந்த வட்டாரத்தின் மொழியில் அந்தந்தப் பகுதிக்கேயுரிய தனித்தன்மைகளை உள்வாங்கி லாவகமாக வெளிப்படுத்த முடிகிற இவ்வங்கியினால் அதன் விடுமுறையையும் அவ்வாறே பிரித்து அறிவிக்க முடியாதா என்ன? முடியும் முடியாது என்பதல்ல, மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் தினம் என்று தனது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கக்கூடாது என்பதுதான் ஐசிஐசிஐயின் பிரச்சனை. அதனால்தான் அது மகாராஷ்டிரா என்ற ஒரு மாநிலம் உருவான தினத்தைக் கொண்டாட இந்தியா முழுவதிலும் உள்ள தனது அத்தனைக் கிளைகளுக்கும் விடுமுறை விட்டிருக்கிறது. பீகார் அல்லது வேறு ஏதாவதொரு மாநிலம் உருவான தினத்திற்காக மகாராஷ்ட்டிராவிலும் விடுமுறை என்று அறிவித்திருக்குமானால் சிவசேனா, நவநிர்மாண் சேனாவின் சூறையாடலுக்கு  ஒரு ஐசிஐசிஐ கிளைகூட தப்பியிருக்க முடியாது. மகாராஷ்டிரா மாநிலம் உருவான மே முதல்நாளை மகாராஷ்ட்டிரா தினமாக கொண்டாடும் அம்மாநில மக்களது உணர்வுகளை மதித்து அன்றைக்கு ஐசிஐசிஐ விடுமுறை அளிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வேறு எந்தவொரு மாநிலம் உருவான தினத்தையும் தன்னுடைய விடுமுறை நாளாக அறிவிக்காத ஐசிஐசிஐ, மகாராஷ்ட்டிரா தினத்திற்கு மட்டும் விடுமுறை என்று அறிவித்திருப்பது எதனால்? 

குறிப்பிட்ட ஒரேநாள் வெவ்வேறு வரலாற்றுரீதியான காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறும் போது, அந்த எல்லாக்காரணங்களையும் குறிப்பிட்டு அன்றைக்கான விடுமுறையை அறிவிப்பதை இவ்வங்கி வழக்கமாக கொண்டுள்ளதை அதன் இணையதளத்தில் உள்ள விடுமுறைதினங்களின் பட்டியல் (http://www.icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/common/holiday.htm) தெரிவிக்கிறது. (உதாரணத்திற்கு, ஏப்ரல் 14:  டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவிசுவ சங்கராந்தி/ சிராபோ/ பிஜூ பண்டிகை/ வைசாகி/ போஹாக் பிஹூ). இதன்படி மே முதல்நாளை சர்வதேச உழைப்பாளர் தினம்/  மகாராஷ்டிரா தினம் என்று குறிப்பிட்டிருந்தால் அதை நேர்மையான செயலாக கருத முடியும். அவ்வாறின்றி மே முதல்நாளை வெறுமனே மகாராஷ்ட்டிரா தினமாக மட்டுமே ஐசிஐசிஐ அறிவிப்பதன் பின்னே உள்ள அரசியல் என்ன? எட்டுமணி நேர வேலைக்காகப் போராடி உயிர்நீத்த தொழிலாளர்களின் வரலாற்றை 12 மணிநேரம் வேலை பார்க்கும் தன்னுடைய ஊழியர்கள் அறியக்கூடாது என்று அஞ்சுகிறதா ஐசிஐசிஐ?  ஒற்றுமை, சங்கம், போராட்டம், கூட்டுபேரச்சக்தி என்பவற்றை நினைவூட்டும் உழைப்பாளிகளின் போராட்ட வரலாற்றை மக்களது நினைவுப்பரப்பிலிருந்து அழிப்பதற்கு அது விரும்புகிறதா? உண்மையான வரலாற்றுக்காரணங்களுக்காக கொண்டாடப்படும்/ நினைவு கூர்ந்திடும் புகழ்பெற்ற நாட்களை அவமதிப்பதற்காகவோ முக்கியத்துவமிழக்கச் செய்வதற்காகவோ அந்த நாட்களின்மீது வேறு மலினமான காரணங்களை புனைந்தேற்றுகிற பிற்போக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளதைப் பார்த்தால், ஐசிஐசிஐ வெறும் வங்கித்தொழிலை மட்டும் செய்துகொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது.

சர்வதேச உழைப்பாளர் தினத்தை இருட்டடிப்பு செய்வதை ஒரு முழுநேரத் தொழில் போல செய்து வருகின்ற அமெரிக்காவிலேயே வால்ஸ்டீரிட்டை இடங்கொள்ளும் இயக்கத்தவர் இவ்வாண்டின் மே தினத்தில் சக்திமிக்க வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த ஐசிஐசிஐ எம்மாத்திரம் என்று ஒதுக்கிவிட்டுப் போகாமல் அதற்கு நமது கண்டனத்தை தெரிவிப்போம். கூடவே, 126 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆதிக்கச்சக்திகளால் வெறுக்கப்படுமளவுக்கும் அச்சுறுத்துமளவுக்கும் மே தினம் வலுவோடுதான் இருக்கிறது என்கிற செய்தியையும் உலகறியச் சொல்வோம்.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...