கம்யூனிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்யூனிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 10

நான் உங்களை கம்யூனிஸ்டாக்கினேன் - ஆதவன் தீட்சண்யா

நானொரு பெயரிலி
முகமிலிக்கு பெயரெதற்கு?
என் பாதம் தீண்டா ஓரங்குலமும்
பூமியில் இல்லையாயினும்    
நான் நிலமிலியும் கூட
நெபுலாவிலிருந்து வழிந்த தீக்குழம்பை
முத்தமிட்டுக் குளிரவைத்த
எனது காலம்தான் எது?
 
அமீபாவைப் பிறப்பித்தேன்
அடுத்தூர்ந்த காலம் நெடுக
உயிர்களைப் பெற்றெடுத்து
நிறைக்கிறேன் இவ்வுலகை
 
ஆதிகுகைகளிலிருந்து பரவி
வரலாற்றின் இருள்வெளியெங்கிலும்
கமழ்ந்திருக்கும் மனிதவாசனையை
எங்கல்சுடன் பின்தொடர்ந்த மார்க்ஸ்
ஒவ்வொரு வீட்டின் அடுப்படியிலும்
தாளிப்பு நெடியின் காட்டத்தில்
நான் கரைந்திழப்பதைக் கண்டார்
 
தானியமணிகள் யாவிலும் 
பதிந்திருப்பது உன் ரேகையே; 
கன்றுகாலிகளுக்குத் தீவனம்
காடுகழனிகளுக்குப் பாசனம்
கொன்றிடும் நோய்க்கு மருந்து
கொண்டாட்டத்திற்கு கலைகள்
உன்னிலிருந்து பிறக்காததொன்றும்
உலகத்தில் இல்லையென்றார்
  
கல்லாயுதமேந்தி காய்ப்பேறிய
என் கரங்களைப் பற்றிக்கொண்ட எங்கல்ஸ்  
சொரசொரக்கும் இந்தக் கைகளால் வருடி
கொடிய விலங்குகளையும் பழக்க முடிந்த நீ
ஆண்களை  
ஆண்களாகவே விட்டிருக்கக்கூடாதென்றார்
 
உலைமூட்ட அவகாசமின்றி
ஸ்விக்கியில் தருவித்த உணவுப்பொட்டலத்தை 
பசிக்கேற்ப பகிர்ந்தளித்த என் பாங்கில்   
வேட்டைக்கறியைப் பங்கிட்டளித்த
மூதாயைக் கண்டுகொண்டதாய்
பரவசப்பட்ட அவ்விருவரும் உறுதியாய் சொன்னார்கள்:    
நாங்கள் இனி ஆண்களுமல்ல,
உன்னைப்போலவே
உழைத்து உருவாக்கி
தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் கம்யூனிஸ்ட்கள்.

நன்றி: செம்மலர், 2022 மார்ச் இதழ்

திங்கள், மே 30

தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? - ஆதவன் தீட்சண்யா


(‘மண்ணில் இந்தக் காதலன்றி’ என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது போன்றோ, வேலையில்லாத பட்டதாரியில் வில்லப்பொடியனிடம் தனுஷ் பேசுவது போன்றோ மூச்சுவிடாமல் கீழ்காணும் பத்தியை வாசிக்கவும்)
சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தணும்னு தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை சொல்லி, தேர்தலை எந்தெந்தக் கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகுது- யார் யாரோடு கூட்டு சேர்ந்து யாரை எதிர்க்க / ஆதரிக்கப் போறாங்கன்னு குறிசொல்லி, எந்தக்கூட்டணி பலமா இருக்கு? பலமா தெரியற கூட்டணியோட பலவீனம் என்ன, பலவீனமா தெரியற கூட்டணியோட பலம் என்னன்னு விலாவாரியா விளங்கவைக்கிற டிவி விவாதங்களை அன்றாடம் அலசிப் பார்த்து, வாக்காளர்களை வென்றெடுக்க கையாள வேண்டிய பிரச்சார உத்திய நான் ஆதரிக்கிற கூட்டணிக்கு தெரிவித்து அதைப்பற்றி நல்லவிதமா நாலுவார்த்தையும் மற்ற கூட்டணி ஆளுங்க வைக்கிற விமர்சனம் அவதூறுகளுக்கெல்லாம் பொளேர்னு பதிலடியும் எழுதி, தளி ராமச்சந்திரன் தொடர்பான கேள்விக்கு மழுப்பலா பதில் சொல்லி, வைகோ பேசியதையும் விஜயகாந்த் பேசாததையும் கூட்டணிதர்மத்துக்காக(?) சகிச்சுக்கிட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும்வரை தொகுதிவாரியா கண்காணிச்சு எங்கே யார் ஜெயிக்கப்போறாங்கன்னு ஞாபகம் வச்சிக்கிட்டு, அஞ்சுப்பைசாவுக்கு பெறுமானமில்லேன்னாலும் அலட்டலா வெளியாகும் தேர்தல் அறிக்கைகளைப் படிக்காமலே படிச்சி விளங்கிக்கிட்ட பாவனையோட ஆதரிச்சும் எதிர்த்தும் அபிப்ராயம் தெரிவிச்சு, பொதுக்கூட்டத்துக்கு வர்ற சனங்களை ஓட்டாக நம்பி ஏமாறப்போகிறவர்களின் முகத்தின் விகாரத்தை அச்சமில்லாம கற்பனை செய்து, நடுநிலையாளர்னு சொல்லுறவங்க போட்ட நாடகத்தை நக்கலடிச்சு, பணப்பட்டுவாடாவை தடுக்காத தேர்தல் ஆணையத்திற்கு எதிரா கண்டனம் முழங்கி, தேர்தலுக்கு முந்தின கருத்துக் கணிப்புகளோட உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி, பணப்பரிவர்த்தனையைத் தடுக்கப்போவதாக கடைசி சிலநாட்களில் பறக்கும் படை நடத்திய ஜோடனைகளை ஸாரி சோதனைகளை குற்றம்சாட்டி, பிடிபட்ட கண்டய்னர்ல 570 கோடிதான் இருக்குமா - அதுக்கு எதுக்கு மூணு கண்டெய்னர்- மூணு கண்டெய்னருக்கும் மொத்தம் எத்தனை சக்கரம்- யாருக்காக யார் கொடுத்தனுப்பினதுன்னு அடுக்கடுக்கா ச்சும்மா அஸ்திரமாட்டம் கேள்வி எழுப்பி, அரவக்குறிச்சியும் தஞ்சாவூரும் மட்டுமல்ல தமிழ்நாட்டுத்தேர்தலையே தள்ளி வைக்குமளவுக்கு நடந்திருக்கும் முறைகேடுகளைப் பட்டியலிட்டு, கள்ள ஓட்டு விழாமல் தடுக்க வாக்குச்சாவடிக்குள் பலப்படுத்த வேண்டிய பாதுகாப்பு - கண்காணிப்புகளோட போதாமையைச் சுட்டிக்காட்டி, வாக்குப்பதிவு முடிந்தும் முடியாமலிருக்கறப்பவே வெளியாகப்போகும் ஏழெட்டு எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள்ல யார்யாருக்கு எவ்வளவு  இடங்கள் கிடைக்கும்னு கணிப்பது-ன்னு ராப்பகலா ஓய்வொழிச்சல் இல்லாமல் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து ‘ஓட்டுப்போடவாவது பூத்துக்கு வருவீங்களா இல்லே அதையும் ஃபேஸ்புக்கிலியே போட்டுருவீங்களா?’ன்னு கேட்டார். அடடா தேர்தல் வந்தே வந்திடுச்சா, பூத்தை மூடுறதுக்குள்ள ஓட்டுப் போடணுமேன்னு கம்ப்யூட்டரையும் மத்ததையும் மூடிப்புட்டு ஓடுறப்பதான், வூட்ல இருக்குற மீனாக்கிட்டயும் தீட்சண்யாக்கிட்டயும் கூட எங்கக் கூட்டணிக்கு ஓட்டுப்போடச் சொல்லி கேட்கவேயில்லைங்கிற விசயம்  ஞாபகம் வந்துச்சு. உட்கார்ந்த இடத்தைவிட்டு ஓரடிகூட நகராம எல்லாமே நாம விரும்பறாப்ல நடக்கும்னு மிதப்புல கிடந்ததைப் பற்றி இனி யோசிச்சு என்ன பண்ண?

தேர்தல்ல எங்கக் கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்கல. கிடைக்காதுன்னு முன்னமே சொன்னப்ப அவநம்பிக்கைவாதின்னு தோழர்கள் சிலர்ட்ட திட்டு வாங்கினேன். நான் அவநம்பிக்கையில சொல்லல, கள நிலவரத்தைத்தான் சொன்னேன். விடுங்க, தோழர்கள் திட்டுறதெல்லாம் ஒரு திட்டா?  போட்டியிட்ட எல்லாருமே யோக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களாயிருந்தாலும் 232 பேரைத்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஜெயிச்சவங்களையெல்லாம் ஏதோ தியாகிகள்னோ தொண்டால் பொழுதளந்த தூயவர்கள்னோ மக்கள் தேர்ந்தெடுக்கல. தோத்துப் போனவங்களையெல்லாம் துரோகிகள், பொது வாழ்க்கைக்கே லாயக்கில்லாதவங்கன்னும் மக்கள் தீர்ப்பளிக்கல. தேர்தலுக்கு அப்பாலும் சேர்ந்து வேலை செய்ய எத்தனையோ களங்கள் இருக்கு. ஆனாலும் தேர்தலுக்காக ஒருத்தருக்கொருத்தர் எதிரிகளாட்டம் அடிச்சுப்புரண்டு அவதூறு பேசி அவமரியாதை பண்ணிக்கிட்ட நண்பர்கள் பலபேர் இன்னும் மூஞ்சத் திருப்பி முதுகுகாட்டி நின்னுக்கிட்டிருக்க, தேர்தல் முடிஞ்சக்கையோட செயலலிதாவும் சுடாலினும் அக்கா தம்பியாயிட்டாங்க. ( பாவம், ஸ்டாலினுக்கு வாய்த்த சகோதரிகளெல்லாம் சிறைசென்று மீண்ட செம்மல்களாகவே இருக்காங்க.) போகிறப்போக்கைப் பார்த்தா அண்ணா அறிவாலயத்துல அதிமுகவுக்கு ஒரு கிளை அலுவலகமும் போயஸ் தோட்டத்துல திமுகவுக்கு ஒரு கிளை அலுவலகமும் திறந்து ஏ டீமும் நாங்கதான், பீ ( அதாவது இங்கிலீஷ் பீ ) டீமும் நாங்கதான்னு சொல்லிருவாங்க போல.

சரி ஆனது ஆச்சு போனது போச்சுன்னு மனசைத் தேத்திக்கிட்டு உஸ்ஸோன்னு தலைசாய்ச்சு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்னா இந்தா உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுதுன்றாங்க. அதுக்கும் இதேமாதிரி மல்லுக்கட்டி மாரடிச்சா மக்கியாநாளே கூட்டுறவு சொசைட்டிக்கு தேர்தல் அறிவிப்பாங்க. கூட்டுறவே நாட்டுயர்வுன்னு நம்மக்கிட்ட சொல்லிட்டு ஆளுங்கட்சியே அம்புட்டயும் அமுக்கியெடுத்துக்கும்னு தெரிஞ்சாலும் நாம் சும்மா இருப்பமா? மெம்பராகவே விடாத சொசைட்டித் தேர்தலுக்கும் மெனக்கெடுவோம். அப்பறமென்ன அடுத்து அஞ்சாறு மாசத்துல நாடாளுமன்றத் தேர்தல். வூட்ல தெருவுல ஊர்ல ஒழிக்கமாட்டாம திமுதிமுன்னு வளர்ந்து நிக்கிற வகுப்புவாதத்தை தேர்தல்ல முறியடிக்கிற கடமை நம்மை ஊஊன்னு ஊளையிட்டு அழைக்கும். இப்படி ஒன்னு மாத்தி இன்னொன்னுன்னு தொடர்ந்து தேர்தல் வேலை பார்ப்பதையே அரசியல் வேலையா சுருக்கிக்கிட்டுப் போனால், வர்க்க அரசியலுக்கும் சாதியொழிப்பு அரசியலுக்குமான வேலையை எப்போதான் செய்யறதுன்னு எக்கச்சக்க கவலையாயிடுது. சரி தேர்தல்ல பங்கெடுக்குற கட்சியில இருக்கிறதால தான் நமக்கிந்த உளைச்சல், தேர்தல்பாதையை நிராகரிச்சு டைரக்டா ஆயுதப் புரட்சி மூலமா அதிகாரத்தைக் கைப்பற்ற போறதா சொல்றவங்க என்ன செய்யறாங்கன்னு எட்டிப் பார்த்தா அங்கே இதுக்கு மேல ஏறுமாறு. பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவது இருக்கட்டும் ஒரு பஞ்சாயத்து ஆபிஸையாவது இன்னையவரைக்கும் கைப்பத்தியிருக்காங்களான்னு பார்த்தா அதுவுமில்ல.

இனிமே கவுன்சிலர் தேர்தலுக்கே கன்டெய்னர்ல பணம் இறங்கும்கிற நிலைமையில, நம்மைத் தோற்கடிக்கிறதுக்காகவே ஆதிக்கச்சாதிக்காரர்கள் மொத்தப்பேரும் ஈயும்பீயுமா ஒண்ணு சேர்ந்திருக்கிற நிலையில இனிமேல் தேர்தல்ல நம்மால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு கம்யூனிஸ்ட் கட்சிகளோ அம்பேத்கரிய இயக்கங்களோ சோர்வடையறதுக்கு ஒண்ணுமில்லை. ‘திராவிட’ என்கிற சொல்லை பேர்ல வச்சிருக்கிற கட்சிகள்ல அந்த சொல்லோட வரலாறும் அரசியலும் தெரியாமலே இப்போது இருக்கிற பலபேருக்கும், தங்கள் சாதியோட வரலாறு தெரியாமலே ஆண்ட பரம்பரை பெருமிதம் பேசுகிற கட்சிகள்ல அங்கம் வகிக்கிறவங்களுக்கும் தேர்தல்தான் முதலும் முற்றுமான அரசியல் வேலை. ஆனா வர்க்க அரசியலையும் சாதியொழிப்பு அரசியலையும் உள்வாங்கி அதுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளிலோ அம்பேத்கரிய இயக்கங்களிலோ இருக்கிறவங்களுக்கு அன்னாடம் நடத்துற ஆயிரமாயிரம் போராட்டங்கள்ல தேர்தல் போராட்டமும் ஒண்ணுங்குற புரிதல் இருக்கும். அந்தப் புரிதல் இந்தக் கட்சிகள்ல இருக்கிற எல்லாருக்கும் இருக்கா? இல்லேன்னா அதுக்கு காரணம் என்னங்கிறதும் இதோடு சம்பந்தப்பட்ட கேள்விங்கதான்.  

நாம் தீண்டாமைச்சுவரை இடிக்க உத்தபுரத்துக்கு ஓடணும், தருமபுரிக்கு ஓடி நெருப்பை அணைக்கணும், ரயில் ரோட்டுல பொணமாக் கிடக்குற நம்ம வீட்டுப் பையன்களை ஒப்பாரியும் ஓலமுமா தூக்கிக்கிட்டுப் போய் புதைக்கணும், அவங்களை கொன்னவங்க சுமத்துற அபாண்டங்களுக்கு பதில் சொல்லணும், பெற்ற பிள்ளைகளை சாதி ஆணவத்துல கொல்லுறவங்களுக்கு எதிரா கோர்ட்டுல வழக்காடணும், புருசனைக் கொல்லக் கொடுத்துட்டு கலங்கி நிற்கிற கௌசல்யாக்களுக்கு ஆறுதல் சொல்லணும், தேர் எரியறப்ப கடவுளையும் காப்பத்தணும். அழுகை அங்கலாய்ப்போட அன்னாடம் எழவு வூட்லியே இருந்துட்டு தேர்தல் வந்ததும் கண்ணைத் தொடைச்சும் தொடைக்காமா ஓடிப்போய் போட்டியிட்டா என்ன கிடைக்குமோ அதுதான் கிடைச்சிருக்கு.

வெள்ளாமை அழிஞ்சாலும் விலைவாசி ஒசந்தாலும் நம்மை விட்டா போராட யார் இருக்காங்க. தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், பெண்கள், மதச்சிறுபான்மையினர்னு சமூகத்தோட எந்த அடுக்கு பாதிச்சாலும் அதுக்காகப் போராடி களத்திலிருந்தோ கைதாகி சிறையிலிருந்தோ வந்து தேர்தலில் போட்டியிடறோம். இப்படியெல்லாம் போராடுறதாலேயே சனங்க நமக்கு ஓட்டுப் போட்டுருவாங்கன்னு எதிர்பார்க்க முடியுமா? தங்களுக்காக போராடிக்கிட்டிருக்கிற இவங்களையும் ஜெயிக்க வச்சு சட்டமன்றத்துக்கு அனுப்பிட்டா நமக்காகப் போராட யாருமே இல்லாமப் போயிடுவாங்கன்ற தற்காப்பு உத்தியில் சனங்க நம்மைத் தோற்கடிச்சிட்டதாகவும் அப்பாவித்தனமா நினைச்சிக்க வேண்டியதில்லை. தலித், இடதுசாரி கட்சிகளோட பிரதிநிதிகள் இல்லைங்கிறதுக்காக தமிழ்நாடு சட்டமன்றம் அப்படியே இடிஞ்சு விழுந்துடும்னோ பாராளுமன்ற ஜனநாயகமே பாழாகிப்பூடும்னோ நாம கவலைப்படத் தேவையில்லை. அப்படியே விழுந்தாலும் அதனால் மக்களுக்கு என்ன கெடுதல் நேர்ந்துவிடும்?

இயற்கைவளத்தைக் கொள்ளையடிக்கவும் பொதுச்சொத்துகளை வளைச்சுப் போடவும் மக்கள்விரோதத் திட்டங்களை செயலாக்கவும் கூட்டாளிகளா இருக்கிற கட்சிகளை சட்டமன்றத்துக்கு உள்ளே வச்சு  முடக்கியிருக்கிற மக்கள், அந்தக் கட்சிகளை கண்காணிக்கிற பொறுப்பையும் போராட்டக்களமா மாத்தவேண்டிய பரந்த பொதுவெளியவும் நமக்குதான் கொடுத்திருக்காங்கன்னுதான் நான் புரிஞ்சிக்கிறேன்.  கம்யூனிஸ்ட்டுங்க முதல் ஆறுமாசம் திட்டம் போடுவாங்க, திட்டமிட்டபடி ஏன் எதுவும் நடக்கலேன்னு மீதி ஆறுமாசம் பரிசீலனை செய்வாங்கன்னு சொல்லப்படும் பொய்க்குற்றச்சாட்டுக்கு பொருத்தமான பதிலை நம்மோட தொடர்செயல்பாடுகளே தரமுடியும்கிறது என்னோட நம்பிக்கை.     

30.05.2016


திங்கள், மார்ச் 5

முப்பதடி தூரத்துக்கு மூக்கிலே பட்டாணி உருட்டினால்கூட பிரபலமாகிவிடலாம் - ஆதவன் தீட்சண்யா

vallinam.com.my இணைய இதழின் வாசகர்கள் கேள்விக்கான எனது பதில்கள்- II
 எழிலன் அரசு - தஞ்சை

கேள்வி : எழுத்தாளர் அவர்களுக்கு, உங்களை இந்தக் கேள்வி - பதில் பகுதி மூலம் அறிகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். இதை உங்களிடம் கேட்பதா வல்லினத்திடம் கேட்பதா என தெரியவில்லை. எனக்கு ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை எழுத்துகள் அறிமுகம். அப்படியிருக்க பெரிதும் அறிமுகம் இல்லாத ஷோபா சக்தி போன்றவர்களையும் உங்களையும் வாசகர்களுடன் உரையாட வைப்பதில் என்ன அவசியம். (இதை நான் குற்றச்சாட்டாகக் கூறவில்லை). இதன் பின்ணணிதான் என்ன?

பதில் : அதிகளவில் விற்பனையாகும் வார இதழ் ஒன்று பளிச் பிரபலங்கள் என்று எட்டுபேரை அடையாளப்படுத்தி அவர்கள் தரும் ஒரு செய்தியை வெளியிடும் தொடர் ஒன்றை தொடங்கியிருந்தது. பளிச் பிரபலங்களின் முதற்பட்டியலில் எனது பளீர் படமும் செய்தியும் வெளியான அன்றைக்கு நான் ஒரு பயணத்தில் இருந்தேன். ரயிலில் அந்த இதழை பலரும் படித்துக் கொண்டிருந்த போதும் இந்த போட்டோவிலிருப்பது நீங்கள்தானா என்று என்னிடம் ஒருவரும் கேட்கவில்லை. ஒசூரில் ரயிலை விட்டிறங்கி வெளியே வருகிறேன். என்னைப் போலவே இறங்கியவர்களும் வழியனுப்பவும் வரவேற்கவும் வந்தவர்களுமாக குறைந்தபட்சம் மூவாயிரம் பேராவது அந்த நேரத்தில் அங்கு இருந்திருப்பார்கள். ஆனால் ஒருவருக்கும் என்னைத் தெரியவில்லை. எனக்கும் கடக்கிற முகங்கள் புதிதாகத்தான் தெரிந்தன. நாங்கள் ஒரே ஊரில் இருக்கிறோம். ஆனால் எங்களுக்குள் யாருக்கும் யாரையும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே, பிரபலம் என்பதன் பொருள் ஒருவர் இயங்கும் தளத்தில் அறியப்பட்டவராய் இருக்கிறாரா என்பதுதானேயன்றி ‘பொறந்தக் குழந்தையக் கேட்டாக்கூட அவரைப் பற்றி சொல்லும்’ என்கிற அளவுக்கு தமிழ்ச்சினிமா நாட்டாமைக் கணக்காக இருக்க வேண்டுமென்பதில்லை. இன்னும் சொன்னால், ஒரே துறையில் இயங்குகிறவர்கள் மத்தியிலும்கூட அறியப்படாமல் இருந்துவிடுவதால் ஒரு ஆபத்தும் இல்லை. ப.சிங்காரம் போன்றவர்கள் அப்படித்தானே ஒடுங்கி இருந்துவிட்டுப் போனார்கள்.

பிரபலங்கள் என்று நீங்கள் அறிந்துவைத்திருக்கிற யாரையும் அவர்கள் பிறப்பதற்கும் முன்பே நீங்கள் அறிந்திருக்க முடியாது என்று நம்புவோமாக. அ,ஆ,இ,ஈ,உ,ஊ என்று எல்லா எழுத்துகளிலும் தொடங்கும் பெயருள்ள எழுத்தாளர்களின் எழுத்துகளை ஒருவர் அறிந்தவைத்திருப்பது சாத்தியமில்லை, தேவையுமில்லை. எனவே ஜெ என்ற எழுத்துடன் தொடங்கும் பெயருள்ள எழுத்தாளர்களின் எழுத்துகளை மட்டும் ஜெஜெவென நீங்கள் அறிந்துவைத்திருப்பதில் பிழையொன்றும் இல்லை. நாங்களிருவரும் இந்த உலகத்தில் பிறந்துவிட்டிருக்கிறோம் என்பதைக் கூட நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே தாங்கள் என்னையோ ஷோபாசக்தியையோ அறியாமலிருப்பது குறித்த மகிழ்ச்சியை நான் வல்லினம் வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டியிருக்கிறது. சைலன்சரின் மஃப்ளரை கழற்றிவிட்டு டபடபவென்று வண்டியோட்டி கவனத்தை ஈர்க்கும் அற்பத்தனங்கள்கூட கணநேரத்து பிரபலமாக ஒருவரை ஆக்கிவிடுகிறது. பரபரவென்று எதையாவது பிராண்டியோ, யாரையாவது வம்பிழுத்தோ, என்னைத்தவிர யாருமே எழுத்தாளனில்லை என்று அபத்தமாக உளறிக்கொட்டியோ எனது இருப்பை அறிவித்துக்கொண்டே இருப்பதன் மூலமாகவும்கூட பிரபலமாகிவிட முடியும். அவ்வளவு எதுக்கு, முப்பதடி தூரத்துக்கு மூக்கிலே பட்டாணி உருட்டினால்கூட பிரபலமாகிவிடலாம். இதோ உங்களுக்கு ஒரு 500 பக்கத்தில் பதில் எழுதி பைண்டிங் செய்து அனுப்பி வைத்தேனென்றால், அதை நீங்கள் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி அங்கலாய்த்து என்பேரை பிரபலமாக்கிவிடமாட்டீர்களா என்ன? விடுங்கள் எழிலன், இப்படியான சில்லறைத்தனங்களை செய்து பிரபலமாவதைவிட மூணாம்பேருக்கு தெரியாமல் எங்காவது ஒரு மூலையில் இருந்துவிட்டுப்போகிறேன். உலகம் ரொம்பவும் பெரியது.

மையமான கேள்விக்கு வருவோம். ‘‘பெரிதும் அறிமுகம் இல்லாத ஷோபா சக்தி போன்றவர்களையும் உங்களையும் வாசகர்களுடன் உரையாட வைப்பதில் என்ன அவசியம்’’ என்று கேட்பதன் மூலம் உங்களது பிரபலப்பட்டியலுக்குள் அடங்காத யாரிடமும் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு கருத்து ஏதுமிருக்காது என்று நம்புகிறீர்கள்போலும். அதற்கு நானென்ன செய்ய முடியும்?

கேள்வி : மற்றுமொரு கேள்வி, நீங்களும் ஷோபா சக்தியும் சகோதரர்களா? பார்க்க ஒன்று போல இருக்கிறீர்கள்? அப்படியென்றால் உங்கள் சகோதரர்கள் இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள். அவர்களும் பதில் கொடுப்பார்களா?

பதில் : எனக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவன் கோவையில். இன்னொருவன் வீட்டை விட்டு வெளியேறி பத்துவருடங்களுக்கும் மேலாகிறது. எங்கிருக்கிறான் என்பதை நாங்களறியோம். அவனது சகவாசம் குற்றச்செயல்களில் அவனை மூழ்கடித்துவிட்டது. ஆகவே அவர்களிருவரும் உங்களோடு உரையாடும் கெடுவாய்ப்பு இப்போதைக்கு இல்லை. நிம்மதி கொள்ளுங்கள். மற்றபடி ஷோபாசக்தியும் நானும் சகோதரர்களல்ல, பரஸ்பரம் அக்கறையும் மதிப்பும் உரிமையும் கொண்டிருக்கிற - கருத்துகளை மனம் விட்டு விவாதித்துக்கொள்கிற தோழர்கள். மனிதர்களுக்குத் தேவையும் அதுவாகத்தான் இருக்கிறது.


செல்வராஜா - இலங்கை

கேள்வி : மலேசிய - சிங்கை எழுத்துகளை நீங்கள் வாசிப்பதுண்டா? அவ்வெழுத்துகள் குறித்த பேச்சுகள் அண்மைய காலமாகதான் அதிகம் ஒலிப்பதாகப்படுகிறது. இன்னும் வேறெந்த நாடுகளில் தமிழ் இலக்கியம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது?

பதில் : சிங்கப்பூர் இளங்கோவன் அவர்களின் நாடகப்பிரதிகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். சென்னை கலைக்குழுவின் ஒருங்கிணைப்பில் அவரது நாடகம் சிலவற்றின் ஒளிப்பிரதியை காணும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ரெ. கார்த்கிகேசு, சை. பீர்முகமது என்று அவ்வப்போது வாசித்துதுண்டு. ம. சண்முகசிவா, நவீன், பாலமுருகன், யோகி, சிவா பெரியண்ணன், தேவராஜன் போன்றவர்களின் எழுத்துகளை சமீபத்தில்தான் இணையத்தில் வாசிக்கத் தொடங்கினேன். அ. ரெங்கசாமியின் இமயத்தியாகம் நாவலை படித்துக்கொண்டிருக்கிறேன்.

மலேசியா-சிங்கப்பூருக்கு புலம் பெயர்க்கப்பட்டதைப்போலவே இலங்கைக்கு புலம் பெயர்க்கப்பட்டு இன்று மலையகத்தமிழர் என்கிற தனியடையாளம் பெற்றுள்ள இந்திய வம்சாவளியினரது எழுத்துகள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. தலித்துகளை ஈடேற்ற வந்தவர்கள் என்று கொண்டாடப்படுகிற பிரிட்டிசார் இங்கிருந்த சாதிமுறையை தங்களது சுரண்டலுக்கு எவ்வாறு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை அறியத்தருகிற ஆவணங்களான அவை தமிழின் புலம்பெயர் இலக்கியத்தின் தொடக்கமெனவும் விளங்குகின்றன. அதே காலகட்டத்தில் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு - 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரிட்டிசாராலும் பிரான்சினராலும் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் கலை இலக்கிய ஆக்கங்கள் எதையும் நான் கண்டதில்லை. அவர்கள் அங்கு வெறும் வாயோடும் வயிற்றோடும் சென்றுவிடவில்லை என்பது எந்தளவிற்கு உண்மையோ அதேயளவுக்கு அவர்கள் தங்களை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டுதானிருப்பார்கள் என்பதும் உண்மை. இங்கிருந்து அவர்கள் கொண்டு போன பெயர், சாமி, கோயில் எல்லாம் இருக்கும் போது அவர்கள் கொண்டு சென்ற மொழியும் கதைகளும் பாட்டுகளும் என்னவாயின என்கிற ஆய்வு தேவைப்படுகிறது.

வடகிழக்கு இலங்கையின் தமிழர்களது எழுத்துகள் தனித்த வகைமையாக இருப்பதைப்போலவே இனப்படுகொலைகளின் கொடூரத்தால் புலம் பெயர்ந்து அவர்கள் உலகின் பலபாகங்களுக்கும் சென்றதன் பின்னே உருவாகியுள்ள எழுத்துகளும் தனிவகைமையானவை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் ஈழத்திலிருந்து மலேசியாவுக்கு சென்ற தமிழர்களான த.நாகமுத்து (நீலகண்டன்-1925), அ.நாகலிங்கம் (சாம்பசிவம்- ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம்- 1927) ஆகியோரைப் போன்று பொருளீட்டும் நோக்கங்களுக்காக பிறநாடுகளுக்கு சென்றவர்கள் எழுதியவற்றுக்கும் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில் தாய்நிலம் விட்டு வெளியேறி வேற்றுமண்ணில் தஞ்சம்புகுந்தவர்கள் எழுதுகிறவற்றுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் உள்ளன. கால்நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இந்த புலம்பெயர் வாழ்விலிருந்து உருவான தலைமுறையினர் உலகின் பலபாகங்களிலிருந்தும் புகலிட இலக்கிய ஆக்கங்களை முன்வைக்கிறார்கள்.

கேள்வி : தமிழ்க் கவிதைச்சூழலில் இன்றைக்கு முக்கியமான ஆளுமையாக யாரைக் கருதுகிறீர்கள். ஏன்?

பதில் : ‘இப்போதெல்லாம் யாரும் உருப்படியாக எழுதுவதில்லை- நம்மிருவரைத்தவிர’ என்று இன்னொரு எழுத்தாளரை பாராட்டும் சாக்கில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறவர்கள் மலிந்து கிடக்கிறார்கள். தனக்குத்தானே முடிசூட்டிக் கொள்கிற அளவுக்கு வெட்கம் கெட்டவர்களையும் தன்னைத்தானே கொண்டாடிக்கொள்கிற சுயமோகிகளையும்கூட நம்மால் காணமுடிகிறது. மாற்றி மாற்றி சொரிந்துகொள்ள நகம் வளர்க்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘இது முழுமையான பட்டியல் அல்ல’ என்கிற காப்புவாசகத்துடன் தனக்கு வேண்டியவர்களின் பெயர்களால் நிரப்பப்பட்ட பட்டியல்கள் இங்கு அனேகம் பேரிடம் உண்டு. பரஸ்பர அறிமுகம்/பாராட்டு, குறிப்பிட்ட கருத்தோட்டம், சாதி, மதம், வட்டாரம் அல்லது குறிப்பிட்ட பதிப்பகம் சார்ந்த அளவிலான பிணைப்பின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியல்கள் தயாராகியிருப்பதை மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்துவிடும். இன்னும் சிலர் தங்களுக்கு இலவசமாக அனுப்பப்படும் புத்தகங்களிலிருந்தே பட்டியல் தயாரிக்கிறார்கள். ஒன்றாக சேர்ந்து தண்ணியடிப்பது அல்லது குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதும்கூட இப்படியான பட்டியல் தயாரிப்பின் பின்புலமாக இருந்துவிடுகிறது. சார்புநிலைகளைக் கடந்து ஒரு கவிதை உருவாவதற்கான சூழலே இல்லாத நிலையில் எந்த பிரதிபலனும் பாராமல் சார்புநிலை இல்லாமல் கவிதை/கவிஞர் பற்றிய மதிப்பீடு ஒன்று இருப்பதாகவும் நான் நம்பவில்லை. எனவே கவிதைக்கான சூப்பர் ஸ்டார் என்று யாரையும் முன்வைக்கும் வாய்ப்பை நான் துறக்க விரும்புகிறேன். கவிதையின் மகாராஜாவை தேர்ந்தெடுக்கும் மாலையை நீங்கள் வேறு யானையிடம் கொடுங்கள் நண்பரே.

ஆளுமை மதிப்பீடு மட்டுமல்ல, விருதுகள் மற்றும் பரிசுகளுக்கான தேர்வுகளையும்கூட இந்த சார்புத்தன்மைகளே தீர்மானிக்கின்றன. பலசுற்று பரிந்துரைகளின் பேரில் வழங்கப்படுகிற விருதுகளை மிகுந்த ஜனநாயகப்பூர்வமானதாக/ சார்புத்தன்மையற்றதாக / நடுநிலையானதாக நாம் கருதுகிறோம். இந்த பலசுற்றுப் பரிந்துரைகள் யாரையெல்லாம் விலக்கிவைக்கின்றன என்பதை கவனிப்போமானால் தேர்வுப்பட்டியலுக்குள் மறைந்துள்ள சார்புத்தன்மை ஜனநாயக வேடம் பூண்டு வெளிப்பட்டிருப்பதை உணர முடியும். அதுவுமில்லாமல், உங்கள் தரப்பும் பங்கெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்பதைத் தாண்டி ஜனநாயகம் என்பதும் சார்புத்தன்மை உடையதுதானே. ஜனநாயகம் என்பதே சார்புத்தன்மை கொண்டதாய் இருக்கும்போது ஒரு தனிமனிதரின் தேர்வும் மதிப்பீடும் எவ்வளவு சாய்மானங்களைக் கொண்டிருக்கும் என்பதை உணர முடிகிறதல்லவா? அதனால்தான் பட்டியல்களை நீட்டுவதற்கோ பரிந்துரைகளை முன்வைப்பதற்கோ நான் துணிவதில்லை.

இது தப்பித்துக்கொள்ளும் உத்திதானே என்று நீங்கள் குற்றம் சாட்டலாம். இல்லை. நடப்புலகம் முன்வைக்கும் அறம், ஒழுங்கு, அதிகாரம் ஆகியவற்றுடன் பொருந்திப் போகமுடியாத ஒரு தனிமனிதரின் அவஸ்தைகளையும் சீற்றத்தையும் எதிர்நிலைக் கொண்டாட்டங்களையும் மற்றமை மீதான கரிசனங்களையும் வெளிப்படுத்துகிற அசலான ஒற்றைக்கவிதைக்காக/ ஒரேயொரு சொல்லுக்காகவும் கூட ஒருவரைக் கொண்டாடலாம் என்றே கருதுகிறேன். அப்படியான கவிதையை படிக்க நேர்கிற போதெல்லாம் அதை எழுதியவரை உடனே தொடர்புகொண்டு உரையாடுவதிலும் எனது கருத்துகளை பகிர்ந்துகொள்வதிலும் மட்டற்ற ஆர்வம் கொண்டிருக்கிறேன். வாழ்வின் மூர்க்கமான தருணங்களைப் எழுதுவதற்கு காலம் உலவவிட்டுள்ள பலரில் சிலரை நான் தொடர்ந்து கண்டுவருகிறேன். நீங்களும் காணக்கூடும்.

கேள்வி : நீங்கள் முழுக்க கருத்து ஒத்துப்போகும் எழுத்தாளர்கள் உண்டா?

பதில் : அவசியமில்லை. சாத்தியமுமில்லை. எனக்கானதைப்போலவே வேறு எவருடைய வாழ்வும் மனவமைப்பும் முற்றிலும் வேறானது- தனித்துவமானது. ஆனால் ஏதோவொரு வகையில் கூகியின் எழுத்துகளோடு நான் கூடுதலாகவும் ஒருமை கொள்கிறேன். தன் காலத்தை ஒரு எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொள்வது, தனக்கு முன்னே வரலாறு என்று முன்வைக்கப்பட்டிருப்பதை எவ்வாறு மாற்றி எழுதுவது என்பதை அவரது எழுத்துகள் எனக்கு உணர்த்துகின்றன. அறியப்பட்ட வரலாற்றை நகாசுப்படுத்தும் வகையில் கூடுதலாக சில பக்கங்களை எழுதிச் சேர்த்து கைத்தட்டல் பெறுவதல்ல என்வேலை என்று உணர்ந்துகொள்வதற்கு அவரது எழுத்துகளே துணைசெய்தன.


அருணாசலம், தமிழ்நாடு

கேள்வி : தலித் மக்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்ட்கள் உண்மையாகவே போராடுகிறார்களா? அல்லது வெறும் வோட்டு அரசியல் மட்டும்தானா?

பதில் : மற்ற சாதிகளெல்லாம் ஏதோ நாட்டுநலனைப் பிரதானப்படுத்தும் கொள்கை கோட்பாடுகளையெல்லாம் ஆரதீர ஆய்ந்தோய்ந்து வாக்களிக்கிற மாதிரியும் தலித்துகள் மட்டும் தங்களுக்கென்று ஏதாவது செய்கிறவர்கள் அல்லது செய்கிற மாதிரி நடிக்கிறவர்களுக்கு ஓட்டுப்போட்டுவிடுகிறார்கள் என்பது போன்றதுமான அனுமானத்திலிருந்தே ஓட்டு அரசியல் மட்டும்தானா என்கிற கேள்வி எழுகிறது. சிறுபான்மையினர் பற்றிய விவாதங்களிலும்கூட இதேமாதிரியான ஓட்டரசியல் என்கிற குற்றச்சாட்டு இடம்பெறுவதைக் காணமுடியும். இவர்களுக்கெல்லாம் சுயமான அறிவு இல்லை, யாராலும் இவர்களை ஏமாற்றிவிட முடியும் என்கிற முன்தீர்மானத்திலிருந்தும் கூட இப்படியான கேள்விகள் முளைக்கின்றன. தலித்துகள் செறிந்து வாழும் பெரும்பாலான தொகுதிகளில் அப்பட்டமான தலித் விரோதக் கட்சியான காங்கிரஸ் பலநேரங்களில் வெற்றிபெற்றிருப்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது?

இப்போது கேள்வியின் முதற்பகுதிக்கு வருவோம். இந்தியாவின் முதல்தலைமுறை கம்யூனிஸ்டுகளில் ஒருவரான சிங்காரவேலர், பண்டிதர் அயோத்திதாசருடன் இணைந்து பணியாற்றியதையும், அரசியல்ரீதியான தற்சார்புக்கு வழிவகுக்கும் என்பதற்காக அம்பேத்கர் முன்வைத்துப் போராடிய இரட்டை வாக்குரிமை, தனித்தொகுதி போன்ற கோரிக்கைகளை ஆதரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதையும் கவனத்தில் வையுங்கள். ஆனால் இந்த பழங்கதைகளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதால் தலித்துகள் அன்றாடம் சந்திக்கிற தீண்டாமைக் கொடுமைகள், ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள், பாகுபாடுகள், மறுத்தொதுக்குதல் போன்றவற்றை எதிர்த்துப் போராடுகிற தலித்திய பெரியாரிய அமைப்புகளோடு இணைந்தும் தனித்து சுயபலத்திலும் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். இத்தகைய போராட்டங்களில் சாதியவாதிகள் மற்றும் அரசியந்திரத்தின் தாக்குதல்களையும் வழக்குகளையும் தண்டனைகளையும் தாங்கிக் கொண்டு களத்தில் இருப்பவர்களில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் உள்ளனர் (ஓட்டு கம்யூனிஸ்ட், வேட்டு கம்யூனிஸ்ட் எல்லோரையும் சேர்த்துதான் சொல்கிறேன்). கம்யூனிஸ்ட் கட்சிகளில் பெரும்பாலானவர்கள் தலித்துகளாக இருப்பதினாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்களில் ஒரு குறைந்தபட்ச பகுதியினராவது தங்களை தலித்துகளாக உணர்வதினாலும் ஏற்படுகிற அழுத்தங்களினால் இதெல்லாம் சாத்தியப்பட்டிருக்கிறது.

போராட்டங்களின் நெருக்கடியினால் தீண்டாமையின் ஒரு வடிவத்தை கைவிட நேர்ந்தால் நூறு புதிய வடிவங்களை பிறப்பித்து களமிறக்குகின்றனர் சாதியவாதிகள். சாதி இருக்கும்வரை தீண்டாமை ஒழியாது என்பது எளிய பாடம். ஆகவே தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே சாதியொழிப்பு என்கிற கருத்தியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சாதியொழிப்பானது சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் தலித்துகள்மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதோடு மட்டுமல்லாது சகலமானவர்களையும் சுதந்திரமுள்ளவர்களாக்குகிறது. சாதிப்புனிதங்களையும் பெருமிதங்களையும் காப்பாற்றுவதையே வாழ்வின் ஆகப்பெரும் கடமையாக கருதி செலவிட்டு வந்த தம் ஆற்றல்களை வேறு ஆக்கப்பூர்வமான வழிகளில் திருப்பிவிட்டு ஒரு செயலூக்கமுள்ளதாக இந்தியச் சமூகத்தை மாற்றுவதற்கான திறப்பாக சாதியொழிப்பு திகழும். இந்த விரிந்த பொருளில்தான் நீங்கள் ‘தலித் மக்களின் விடுதலை’ என்ற சொற்றொடரை பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்றால், அந்த விடுதலைக்காக கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல வேறு யாரும்கூட இன்றைய தேதியில் போராடிக்கொண்டிருக்கவில்லை என்பதே என் கருத்து.

நன்றி: http://www.vallinam.com.my/issue39/aathavanbathilgal.html

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...