“ஒருவருக்கு
வாழ்நாள் நெடுகிலும் பிரிக்கவே முடியாத துணையாக அல்லது நட்பாக இருக்கக்கூடியது அவரது
மொழி மட்டுமே. அது அவரது கண்ணியத்தின் பிரிக்கமுடியாத அங்கமாகவும் இருக்கிறது. தனிநபரின்,
சமூகத்தின் அல்லது நாட்டின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்துவதும் மொழியே…” என்று
தொடங்குகிறது அலுவல்மொழிக்கான நாடாளுமன்றக்குழுவை அமைப்பது குறித்த இந்திய ஒன்றிய அரசின்
விளக்கக்குறிப்பு. இந்த மட்டிலும் சரிதான். “ஒரு நாடானது அதன் தேசியக்கொடி, தேசியகீதம்,
தேசியமொழியின் வழியாகவே அங்கீகாரம் பெறுகிறது. ஆகவே நமக்கொரு தேசியமொழி – அலுவல் மொழி-
தொடர்புமொழி தேவை” என்று ஏதோ நாட்டுநலனில் அக்கறை கொண்டதுபோல பேசும் அக்குறிப்பு, “இந்தியாவின்
புராதனப்பெருமைகளின் உறைவிடமாகவும் இந்திய மொழிகள் அனைத்துக்கும் மூலவளமாகவும் இருப்பது
சமஸ்கிருதம், சமஸ்கிருதத்திற்கு நெருக்கமாய் இருப்பது இந்தி. ஆகவே இந்திக்குதான் தேசியமொழியாகும்
தகுதி இருக்கிறது” என்கிறது.
அரசதிகார கட்டமைப்பிற்குள்
ஊடுருவியிருக்கும் ஆரிய மேன்மைவாதிகள், இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு மிகவும் பிற்காலத்தில்
வந்துசேர்ந்த ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகளெனத் திரித்துக் காட்டுவதற்காக ஆரியர்களின்
சமஸ்கிருதத்தை இந்தியப் புராதனப் பெருமைகளின் உறைவிடமாகவும் இந்திய மொழிகள் அனைத்துக்கும்
மூலவளமாகவும் காட்டும் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள் என்பதற்கு
2009-2014 காங்கிரஸ் ஆட்சியில் வெளியான இந்தக் குறிப்பு ஒரு சான்று. இதே பொய்யைத்தான்
2019ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். மோகன்பகவத் “சமஸ்கிருதம் இல்லாமல் இந்தியாவை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. இந்தியாவின்
பழங்குடி மொழிகள் உட்பட இந்தியாவின் மொழிகள் அனைத்திலுமே 30% சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து
பெறப்பட்டவை” என்று புளுகியிருக்கிறார்.
சமஸ்கிருத வாரம்
கொண்டாடுவது, தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் தெரிந்த 26ஆயிரம் பேருக்கு மட்டுமே தூர்தர்ஷனில்
சமஸ்கிருத செய்தியறிக்கை வாசிப்பது, கல்வியின் எல்லா மட்டத்திலும் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தும்
படியாக தேசிய கல்விக்கொள்கையை வகுத்தது, மாணவர்களுக்கு சமஸ்கிருத சுலோகங்களில் போட்டி
நடத்துவது, சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்களை உருவாக்குவது, சமஸ்கிருதப் பரவலுக்கு பெருந்தொகையை
ஒதுக்குவது என சமஸ்கிருத்தை சுமந்தலையும் பாரதிய
ஜனதா கட்சியின் ஆட்சி இந்தித்திணிப்பில் ஈடுபடுவதற்கு காரணம் இல்லாமலில்லை. சமஸ்கிருதத்தை
பொதுமொழியாக- தொடர்புமொழியாக ஆக்குவதற்கு இசைவான சூழல் உருவாகும் வரை இடைக்கால ஏற்பாடாக
இந்தியை முன்னிறுத்துவது (As a solution to the problem of
‘lingua franca, till the time sanskrit takes that place we shall have to give
priority to Hindi on the score of convenience) என்று
ஆர்.எஸ்.எஸ்.க்கு கோல்வால்கர் வகுத்துக்கொடுத்த நிலைப்பாடுதான் இதற்கு காரணம். இந்தப்
பின்னணியில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக்குழுவின்
பரிந்துரைகளைக் காண வேண்டியுள்ளது.
அலுவல்மொழியாக
இந்தி பயன்படுத்தப்பட்டு வருவதன் நடப்பு நிலவரம் பற்றி ஐந்தாண்டுகளுக்கொரு முறை குடியரசுத்தலைவரிடம் அறிக்கை
தரும் நடைமுறைக்கு மாறாக, இப்போதைய குழு மூன்றாண்டுகளுக்குள் இரண்டு அறிக்கைகளைக் கொடுத்துள்ளது.
அவ்வளவு வேகம். இரண்டாவது அறிக்கையின் 112 பரிந்துரைகள் என்னென்னவென்று அறிவிக்கப்படாவிட்டாலும்,
பிஜூ ஜனதாதளம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தக்குழுவின் துணைத்தலைவருமான பர்த்ரிஹரி
மஹ்தாப், இப்பரிந்துரைகள் தேசிய கல்விக்கொள்கைக்கு இசைவாக தயாரிக்கப்பட்டிருப்பதாக
தெரிவித்துள்ளார். (எகனாமிக் டைம்ஸ், 2022 அக். 9).
நாட்டின் பெரும்பகுதியினரால்
பேசப்படுகிற – எழுதப்படுகிற- புரிந்துகொள்ளப்படுகிற மொழியாக இந்தி இருக்கிறது என்கிற
நெடுங்காலப் பொய்யின் மீதே இந்த அறிக்கையும் நிறுவப்பட்டுள்ளது. 1961ஆம் ஆண்டு மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி இந்தி பேசுவோர் 30.39% (13.34 கோடி) என்றிருந்த நிலை 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 43.63% (52.83 கோடி)
என அதிகரித்துள்ளதாக காட்டப்படுகிறது. குறைந்தபட்சம் 10000 பேருக்கு மேல் பேசக்கூடிய
மொழிகளில் 55 இந்தியின் கீழ் கொண்டுவரப்பட்டு அம்மொழிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்களை
இந்திபேசுவோர் பட்டியலில் அடைக்கும் வேலை கடந்த ஐம்பதாண்டுகளில் நடந்துள்ளது. இவர்களைக்
கழித்துவிட்டால் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்னவாகும்? அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது
அட்டவணையில் சேர்ப்பதற்கான பரிசீலனையில் ஐமுகூ - II காலந்தொட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள போஜ்புரி உள்ளிட்ட 38 மொழிகளையும் தனித்தெடுத்தால்
இதுகாறும் ஊதிக்காட்டப்பட்ட இந்தி பேசுவோர் அளவு வெகுவாக சுருங்கிப்போகும். அப்படியே
பெரும்பான்மையாக இருந்தாலும் அதற்காக எப்படி மற்ற மொழியினர் மீது திணிக்கமுடியும்?
இனி, ஊடகங்கள் வழியே தெரியவந்துள்ள சில பரிந்துரைகளைப்
பார்ப்போம்:
·
அன்னியமொழியான ஆங்கிலத்தை தவிர்க்கவேமுடியாத இடங்களிலும்
தருணங்களிலும் மட்டுமே பயன்படுத்துவது. மற்ற எல்லா நிலைகளிலும் இந்தி அல்லது உள்ளூர்
மொழியைப் பயன்படுத்துவது.
ஆங்கிலத்தைப்
போலவே இந்தியும் இந்தியர்களில் பெரும்பான்மையினருக்கு
அன்னிய மொழியே. அதல்லாமல் இந்தியைத் தவிர்த்த பிறமொழிகள் அனைத்தையும் உள்ளூர் மொழிகள்
என்று சுட்டுவதில் எடுத்தயெடுப்பிலேயெ இந்தியை நாடுதழுவிய மொழியாகக் காட்டும் சூதுள்ளது.
‘உள்ளூர் மொழி’களும் பயன்பாட்டில் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அதிகாரத்தின்
தோளேறி வரும் இந்திதான் கோலோச்சும் என்பதை
அறிக்கை மறைக்கிறது.
·
ஒன்பதாம் வகுப்புவரை கட்டாயமாக இந்தி.
சரி, அதன்பின்?
ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் அனைத்திலும்
இந்தி பயிற்றுமொழியாக்கப்பட வேண்டுமாம். அனாடமி என்கிற ஆங்கிலச்சொல்லுக்கு நேரானதொரு
சொல்லைக்கூட கொண்டிராத இந்தியை எல்லா வகுப்புகளுக்கும் பயிற்றிமொழியாக்குவது நமது குழந்தைகளின்
எதிர்காலத்தைப் பாழடிப்பதாகும். இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து இந்த நிறுவனங்களுக்கு படிக்கச்செல்லும் மாணவர்களுக்கும் இந்திதான் பயிற்றுமொழி
என்பதை எப்படி ஏற்கமுடியும்?
·
அரசுப்பணிகளுக்கு ஆளெடுக்கும் போட்டித்தேர்வுகளில் உள்ள ஆங்கில
மொழித்தாளை நீக்கி இந்தி மொழித்தாளை புகுத்துவது.
இந்தி பேசும்
மாநிலத்தவருக்கு இது எளிதாகும் அதேவேளையில், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்
புதிதாக இந்தியைக் கற்று அதில் தேர்வெழுதி தேர்ச்சிபெற்றாக வேண்டும் என்கிற கட்டாயத்திற்குள்ளாக்கப்படுவர்.
· இந்திபேசும் மாநிலங்களில் ஒன்றிய அரசின் அலுவலகப்பணிகளில்
இந்தியைப் பயன்படுத்தாத ஊழியர்களையும் அலுவலர்களையும் எச்சரிப்பது, எச்சரித்தும் மாறாதவர்கள்
பற்றி ‘வருடாந்திர பணிச்செயல்பாட்டு மதிப்பீட்டறிக்கையில் (Annual
Performance Assessment Report –APAR) குறிப்பிட வேண்டும்.
1956ஆம் ஆண்டு
வெளியான பாலகங்காதர் கெர் கமிட்டியின் அறிக்கை, குறிப்பிட்ட காலவரம்பிற்குள் இந்தியைப்
படித்து புழங்குமொழியாக கைக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று
மிரட்டியது. இப்போதைய அறிக்கை, அவர்களது ஆண்டு உயர்வுத்தொகை, பதவி உயர்வு போன்றவற்றை
தடுக்கமுடியும் என்று சூசகமாக மிரட்டுகிறது.
இந்திக்கு கொடுக்கும் இதே முன்னுரிமையை மற்ற தேசிய மொழிகளுக்கு அந்தந்த மாநிலங்களில்
கொடுத்தாக வேண்டும் என்று இந்த அறிக்கை பேசவில்லை. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில்
மட்டுமன்றி நெடுஞ்சாலை மைல்கற்களில்கூட தமிழ் புறக்கணிக்கப்படுவதுடன் இந்தி வம்படியாக
திணிக்கப்படுகிறது. 1976 அலுவல்மொழி விதிகள் தமிழ்நாட்டிற்கு விலக்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டி
இங்குள்ள அலுவலங்களில் இயங்கும் அலுவல்மொழி / இந்திப் பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்று
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கோரிக்கை கவனங்கொள்ளத்தக்கது.
·
வடகிழக்கு மாநிலங்களுக்கு 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் நியமனம்.
யாருக்கு யார்
வடகிழக்கு என்று கேள்வியெழுப்புமளவுக்கு தனித்துவமான பண்பாட்டுப் பின்புலமும் மொழிவளமும்
கொண்ட அந்த மாநிலங்களை ‘இந்து / இந்திப்பிரதேசமாக மாற்றும் வேலையில் சங்பரிவாரத்தினர்
பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள 9 பழங்குடிகள் தங்களது தாய்மொழியை தேவநாகரி
வடிவில் எழுதுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டுள்ளதையும், 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக
இந்தி பயிற்றுவிக்கப்படுவதற்கு எட்டு வடகிழக்கு மாநிலங்களின் அரசுகளும் ஒப்புதல் தெரிவிக்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் இவ்வறிக்கை பெருமையுடன் பட்டியலிடுவதுடன் சேர்ந்ததே இந்த நியமனப் பரிந்துரையும்.
இன்னும், உயர்நீதிமன்ற
உத்தரவுகளை இந்தியில் மொழிபெயர்ப்பது, இந்தி மொழி அகராதியை தற்காலப்படுத்தி வெளியிடுவது, அலுவலகங்கள் அமைச்சரகங்கள்
துறைகள் உள்ளிட்டவற்றின் அறிவிக்கைகள் அழைப்பிதழ்கள் நிகழ்ச்சித்தொகுப்புகளை இந்தி
/ உள்ளூர் மொழியில் மட்டுமே தயாரித்தல், நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரல்களில் 70 % மட்டுமே
இந்தியில் என்றிருப்பதை அதிகரித்தல், ஐக்கியநாடுகள் அவையின் அலுவல்மொழிகளில் ஒன்றாக
இந்தியை ஏற்கச்செய்தல் - என்று இதுவரை தெரியவந்துள்ள
பரிந்துரைகளில் ‘இந்திதான் இந்தியா’ எனக் காட்டுவதற்கான கெடுமுயற்சியைத் தவிர வேறெதையும்
காணமுடியவில்லை.
ஒரே நாடு ஒரே
மதம் ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வாணையம், ஒரே சீருடை என்று சங்பரிவாரத்தினரின்
பாஜக ஆட்சி நாட்டின் பன்மைத்துவத்தை ஒழித்துக்கட்ட மேற்கொண்டிருக்கும் நாசகரத் திட்டத்தின்
பகுதியாகவே ஒரே மொழி என்பதும் இப்போது திணிக்கப்படுகிறது. 1918ஆம் ஆண்டிலிருந்து இந்தி
பிரச்சார சபாக்கள் இயங்கிவருகின்றன. விருப்பமுள்ளவர்களும் தேவைப்படுகிறவர்கள் படித்துக்கொள்கிறார்கள்.
இவர்கள் இந்தியைக் கட்டாயமாகுவதன் மூலம் அதன்மீது வெறுப்பை வளர்க்கவே முயற்சிக்கிறார்கள்.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படாது என்று இந்திய நாடாளுமன்றத்தால் ஒன்றுக்கு
மேற்பட்ட தடவைகளில் தரப்பட்ட உறுதிமொழிகளை இப்போதைய பரிந்துரைகள் கவனத்தில் கொண்டிருப்பதாக
உணரமுடியவில்லை. ஆங்கிலத்தின் இடத்தை தேசியமொழிகளால் நிரப்புவது என்று சொல்லிக்கொண்டு
இந்தியைத் திணிப்பதானது வெறும் மொழிப்பிரச்னை மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமையிலும்
தனித்துவத்திலும் தலையிடுவதுமாகும். மாநிலங்களை ஒன்றிய அரசின் காலனிகளாக்குவதுபோலவே
நாட்டின் மொழிகள் அனைத்தையும் இந்திக்குக் கீழ்ப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் முறியடிக்கப்பட
வேண்டியதே.
1937 முதல்
இன்னல் பல ஏற்று ஈகங்கள் புரிந்து இந்தித் திணிப்பினை முறியடித்து மொழியுரிமையைப் பாதுகாத்து
வந்திருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலும் தீரமுடன் இப்போதைய அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு
முறியடிப்பார்கள். அதற்காக, மொழிகளின் தனித்துவத்தையும் மொழிகளுக்குள் சமத்துவத்தையும்
பேணவேண்டும் என்று நாடு முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பலைகளை ஒருமுகப்படுத்தியாக வேண்டும்.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு- மொழியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை தமுஎகச நடத்துவதும்
அதன்பொருட்டே.
நன்றி: தீக்கதிர் நாளிதழ், 2022 நவம்பர் 4