புதன், ஏப்ரல் 9

கள்ளத்தனத்தின் மீது கல்லெறியும் கதைகள் - ஆதவன் தீட்சண்யா

செந்நிலம் - ஜெயராணி சிறுகதைகள்
வெளியீடு: சால்ட்

ஓர் ஊடகவியலாளராக அறியப்படும் தோழர் ஜெயராணி, நாங்கள் நடத்திக் கொண்டிருந்த புதுவிசை இதழின் தொடக்க கால எழுத்தாளர்களில் ஒருவர்.   அவரது கதைகளில் சிலவற்றை அவ்வப்போது படித்திருந்தாலும் செந்நிலம் என்கிற தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளையும் ஒருசேர வாசித்த அனுபவம் தனித்துவமானது.

ஆணாதிக்கம், பாலினப்பாகுபாடு, ஜாதிய ஒடுக்குமுறை, அரச பயங்கரவாதம் ஆகியவை பேரளவிலும் நுண்மையாகவும் இயங்கும் முறையை தீவிரமான பெண்நிலையிலிருந்து அம்பலப்படுத்தும் கதைகள் இவை. “மதம், சாதி, நிலம், சொத்து, அதிகாரம், வன்முறை, ஆண் இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த இடம்தான் நரகம்” என்கிற புரிதலிலிருந்து, அந்த நரகத்தைத் தாங்கிநிற்கும் ஒவ்வொரு தூணையும் உடைத்துநொறுக்கும் கதைகளை எழுதியிருக்கிறார். 

பெண்களைப் பற்றி நம் பொதுப்புத்தியில் நொதித்துக்கொண்டிருக்கும் கழிவுகளைச் சுட்டிக்காட்டியபடியே, மாற்றான ஒரு சித்திரத்தை இக்கதைகளில் வரும் வசந்தி, நெடும்புகழ் மாதேவி, மல்லி, மூகம்மா, மஞ்சுளா செண்பகம் ஆகிய பெண்களின் வழியே வரைந்துக் காட்டுகிறார். 

அடுத்ததாவது ஆண் குழந்தையாக இருந்துவிட்டால் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து தப்பிவிடலாமே என்கிற பரிதவிப்பு வீணாகி நாலாவதும் பெண்ணாய் பிறந்துவிட்ட விரக்தியில் இறந்துபோன அம்மாவைப் பற்றி தனது பிரசவநேரத்தில் நினைத்துப் பார்க்கிறாள் மகள். இன்னொரு கதையில் வரும் மகளோ, தந்தையின் சிதையில் சேர்ந்தெரிய நிர்ப்பந்திக்கப்படும் தாயை மீட்கிறாள். இது ஒருவகையில் முந்தைய தலைமுறைப் பெண்களின் துயரத்தை அடுத்தத்  தலைமுறைப் பெண்கள் போக்குகின்றனர் என்பதாக மட்டுமல்லாமல் அதே துயரச்சுழலுக்குள் சிக்காமல் தங்களை தற்காத்துக் கொள்வதுமாகும். எதற்கெடுத்தாலும் பெண்ணுடலை பணயமாக்கும் ஆண் மனதை விளாசியெடுக்கிறது செண்பகத்தின் சவுக்கு. 

ஆதிக்கஜாதி அங்காளி பங்காளிகளுக்குள் ஆயிரத்தெட்டு பகை இருந்தாலும், தழைத்தெழும் ஒரு தலித்தை ஒடுக்குவதில் அவர்களுக்குள் இருக்கும் நாட்டம் அவர்களைப் பகைகடந்து ஒன்று சேர்த்துவிடுகிறது. ஆனால், அதற்காக ஒடுங்கிப்போகும் நிலையில் தலித்துகள் இல்லை என்பதை உணர்த்தும் கதை செந்நிலம். மிக இயல்பாக வளர்ந்து ஒரு கொலைக்களமாக மாறும் கதையில், மகேசுவரன் என்ற தலித் தன்னைக் கொல்லமுயன்ற பெரியவரையும் அவரது தம்பி மகன் அக்கினியனையும் கொன்றுவிட்டு உயிர் தப்பும்போது அவனுக்கு இதைத்தவிர வேறெந்த வழியுமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், பட்டப்பகலில் ஊரெல்லையில் நடந்த அந்த மோதலையும் கொலைகளையும் ஒரு ஈ காக்கா கூட பார்க்கவில்லை என்று நம்புவதற்கு இன்னும் எதையோ கொஞ்சம் எழுதியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. 

ஆதிக்கஜாதியினர், தலித்துகள் மீது கோபமடையவோ தாக்கவோ பெரிதான காரணங்கள் தேவைப்படுவதில்லை. தான் உதாசீனப்படுத்தப்படுவதாக முகாந்திரமற்று ஓரெண்ணம் அவனுக்கு தோன்றிவிட்டால்கூட அந்த நொடியிலேயே  அவனது அகங்காரம் அவனை எந்தக் குற்றத்தையும் சற்றும் குற்றவுணர்ச்சியற்று பெருமிதத்துடன் செய்யவைக்கிறது. ஆறாமவன், நதிமூலம் கதைகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் அத்தகையவை. இப்படியான குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடும் சமூக எதார்த்தம் கதையிலாவது மாறவேண்டும் என்பதில் ஜெயராணி உறுதியாயிருக்கிறார். அதனால் தான் மல்லியின் பிறப்பிறுப்பில் மரக்கட்டையைச் செருகி சாகடித்த ஆறாமவனை, மல்லியின் பிணம் வீசியெறியப்பட்ட அதே கிணற்றுக்குள் மூழ்கடித்துக் கொல்கிறார். சொல்லப்பட்ட முறையில் இந்தத் தொகுப்பின் பலவீனமான கதை என நான் கருதும் நதிமூலம் கதையிலும்கூட மஞ்சுளா தன்னை வல்லாங்கு செய்த பேயாண்டி மகன் வேலப்பனை நோட்டம் பார்த்து வெட்டிச்சாய்த்துவிட்டு தப்புவதாக ஜெயராணி எழுதியதற்கும் இதுவே காரணமாக இருக்கக்கூடும். 

ஜாதியும் ஆணாதிக்கமும் பெண்ணை எவ்வாறு அணுகுகிறது, அவற்றை பெண் எவ்வாறு அணுகுகிறாள் என்பதனை மிகவும் நுட்பமாக விவரிக்கிற கதை குலச்சிங்கக் காவு. மகனை அவிழ்த்துவிட்டு அழகு பார்ப்பதும் மகளை கட்டுப்பெட்டியாய் வளர்ப்பதுமான ஒரு குடும்பம் பற்றிய இக்கதை ஜாதியப் பிடிமானம் கொண்ட எந்தவொரு குடும்பத்திற்கும் பொருந்தக்கூடியதே. சீதாம்மாள், அவளது மகள் கயல்விழி, மருமகள் புஷ்பம் ஆகிய மூவருமே அவரவர் பங்கிற்கு குலப்பெருமை காப்பதற்கு முயன்று அதற்கு பலியானவர்கள் தான். குலச்சிங்கமான மகன் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஆண்மையிழந்துப் போன நிலையில் வம்சவிருத்தி இல்லாத குடும்பம் என்கிற அவப்பெயருக்கு அஞ்சி மருமகளை ரகசியமாக வேறொருவனிடம் பிள்ளை வாங்க வைக்கிறாள் சீதாம்மாள். அதே குலச்சிங்கமான மகனை, ஜாதியாணவத்தில் ஒருவனை வெட்டிவிட்ட வழக்கிலிருந்து மீட்க தனது மகளின் வாழ்க்கையை ஒரு கொலைகாரனிடம் பணயம் வைக்கிறாள். ஆனால் அவளே, “வம்சவிருத்திய விட ஒரு பொம்பளைக்கு என்னடீ பொழப்பிருக்கு?” என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் ஒரு கிழவனுக்கு வாக்கப்பட்டவள் தான் என்று கதை முடியும்போது அவள் வேறொருத்தியாக நமக்குத் தெரிகிறாள். இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதை இதுவென்பேன். 

சமூக நடப்புகளை உடனுக்குடன் செய்தியாக்கும் தொழில்சார் எழுத்துக்கும், செய்திகளை உற்பவிக்கும் மனித அனுபவங்களில் தோய்ந்து அவற்றைப் புனைவாக எழுதுவதற்கும் இடையேயான வேறுபாட்டை ஜெயராணியின் இக்கதைகள் உணர்த்துகின்றன. “ஓர் ஊடகவியலாளராக, எழுத்தாளராக – சாதி ஒழிந்த சமத்துவ சமூகத்திற்காக உழைப்பது மட்டுமே – என் முதன்மையான கடமை...” என்று முன்பொருமுறை அவர் எழுதியிருந்ததற்கு இக்கதைகளே சாட்சியம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கள்ளத்தனத்தின் மீது கல்லெறியும் கதைகள் - ஆதவன் தீட்சண்யா

செந்நிலம் - ஜெயராணி சிறுகதைகள் வெளியீடு: சால்ட் ஓர் ஊடகவியலாளராக அறியப்படும் தோழர் ஜெயராணி, நாங்கள் நடத்திக் கொண்டிருந்த புதுவிசை இதழின் தொட...