சிவாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 3

ஆளுநரின் ஆன்மிகப்பொய் அல்லது ஆன்மிகமே பொய் - ஆதவன் தீட்சண்யா


உலகமே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த மே 1 அன்று முன்னெப்போதுமில்லாத வழக்கமாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் உருவான நாளை ஆளுநர் மாளிகை கொண்டாடியிருக்கிறது. மற்ற மாநிலங்கள் உருவான தினங்களை ரவி இவ்வாறு  கொண்டாடுகிறாரா, தமிழ்நாடு அல்லது வேறு மாநிலங்கள் உருவான தினங்களை மற்ற மாநிலங்களின் ஆளுநர்கள் கொண்டாடுகிறார்களா என்கிற கேள்விகள் ஒருபுறமிருக்க தமிழ்நாடு ஆளுநரின் இந்தக் கொண்டாட்டத்திற்கு தேவை என்ன வந்தது?   

இந்நிகழ்வில் சாதியத்திற்கெதிராகவும் சமத்துவத்திற்கும் போராடிய மகாத்மா ஜோதிராவ் பூலே, நாட்டின் முதலாவது ஆசிரியை சாவித்திரிபாய், சமூகநீதியின் ஓரங்கமாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய சாகு மகராஜ், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உலகிற்கே ஒளிபாய்ச்சும் அண்ணல் அம்பேத்கர், சுதந்திரப் போராட்டத்தில் மராட்டியரின் பங்கு, மும்பையை தம்முழைப்பால் வளப்படுத்திக் கொண்டிருக்கும் தாராவி தமிழ்மக்கள் – பற்றியெல்லாம் ஆளுநர் பேசியிருந்தால் இந்நிகழ்வை நடத்தியதற்கான நியாயம் இருந்திருக்கும். ரவியோ “சத்ரபதி சிவாஜி தமிழ்நாட்டில் படையெடுத்தார். ஆனால், உண்மையாக அவா் ஆங்கிலேயரிடமிருந்து ஆன்மிகம், கலாசாரத்தை பாதுகாக்க படையெடுத்தார்” என்று பேசியுள்ளார். உண்மையில் சிவாஜி ஆங்கிலேயர்மீது படையெடுத்தாரா, ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் மீட்டெடுத்தாரா? 

1674 ஜூனில் நடந்த சிவாஜியின் முடிசூடும் விழாவை நேரில் பார்த்த டாக்டர் ஃபிரையர் “ராஜா, இந்து மரபுப்படி தராசுத்தட்டில் தங்கத்தால் நிறுக்கப்பட்டார். அவரது எடை சுமார் 16000 வராகன்கள். இத்துடன் மேலும் ஒரு இலட்சம் வராகன்கள் சேர்த்து அவரது நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருந்த பிராமணர்களுக்கு அவர் முடிசூட்டிக் கொண்ட மறுநாள் விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கிறார். 

1676ஆம் ஆண்டின் இறுதியில் மராட்டியத்திலிருந்து பெரும்படையுடன் கீழை கர்நாடகம் நோக்கி புறப்பட்டார் சிவாஜி. இதற்கான காரணம் பற்றி “சிவாஜி அன்ட் ஹிஸ் டைம்ஸ்” என்ற நூலில் ஜதுநாத் சர்கார் விரிவாக விவாதிக்கிறார்.  முடிசூடும் விழாவினால் சிவாஜியின் கருவூலம் பெருமளவு காலியாகியிருந்தது. அடுத்தடுத்த படையெடுப்புகள் செலவைத்தான் இழுத்துவிட்டனவேயன்றி, சொல்லிக்கொள்ளும்படியான வருவாயை ஈட்டித் தரவில்லை. ஏற்கனவே இரண்டுமுறை சூரத்தின் வளம் முழுவதையும் உறிஞ்சியெடுத்தாகிவிட்டது. (இந்தச் சூறையாடலின் கொடூரத்தை அருணன் ‘காலம்தோறும் பிராமணியம்’ நூலில் ‘சூரத் கொள்ளை’ என்ற தலைப்பில் பதைபதைக்க விவரித்துள்ளார்). அருகாமை நாடுகளிலும் இனி கொள்ளையடிக்க வளப்பமில்லை. எனவே செல்வவளம் கொழிக்கும் புதிய பகுதிகள் தேவையாயிருந்தது சிவாஜிக்கு. 

கீழை கர்நாடகம் என்பது தமிழ்நாட்டின் கிழக்கு கடலோரப்பகுதி வரை நீள்கிறது. இப்பெரும்பரப்பின் வளம், துறைமுகங்களில் நடக்கும் அன்னிய வர்த்தகம், கனிமச்சுரங்கங்கள், அரசுகளின் பொறாமைப்படத்தக்க ஆண்டு வருமானம், தங்கத்தை பூமியில் புதைத்துவைக்கும் கர்நாடகத்தவர்களின் வழக்கத்தால் கிடைக்கும் புதையல்கள், பெருஞ்சொத்துடைய கோவில்கள், வெள்ளாமை கொழிக்கும் வயல்கள்– இவையெல்லாம் சேர்ந்து தங்கபூமி என்று அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இப்பகுதி சிவாஜியை சுண்டியிழுத்தது. 

வழிநெடுக உள்ள ஆட்சியாளர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் சிவாஜியின் வருகை தூதுவர்கள் மூலம் முன்கூட்டியே தரப்பட்டது. சிவாஜியின் படை ஊருக்குள் புகுந்தால் என்ன கதியாகும் என்கிற அச்சம் பரவியிருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைத்தது. இடைவழியில், 1677 பிப்ரவரியில் ஹைதராபாத்தில் கோல்கொண்டா சுல்தானை சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டார் சிவாஜி. அரச மரியாதையுடனும் விழாக்கோலம் பூண்டு  கொண்டாட்டத்துடனும் சுல்தானால் வரவேற்கப்பட்ட சிவாஜி அவரது விருந்தினராக மார்ச் முற்பகுதிவரை – சுமார் ஒருமாதம் தங்கியிருந்தார். 

பிஜப்பூர் சுல்தானின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளைத் தாக்கி  கைப்பற்றினால் அதிலொரு பகுதியை கோல்கொண்டா சுல்தானுக்கு தருவதாக சிவாஜி வாக்குறுதியளித்தார். இதற்கான ராணுவச்செலவினங்களை ஈடுகட்ட நாளொன்றுக்கு 3000 ஹன் தொகை மானியம், ஆண்டுதோறும் அன்பளிப்பாக ஒரு இலட்சம் ஹன், மராட்டியத்தின் தூதுவருக்கு சுல்தானகத்தில் இடம், 5000 பேர்கொண்ட படை, ஆயுதங்கள் ஆகியவற்றை தருவதற்கு சுல்தான் சம்மதித்துள்ளார். அங்கிருந்த செல்வந்தர்களும் மக்களும் சிவாஜிக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கியுள்ளனர். 

எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலான ஆதாயங்களுடன் ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய சிவாஜிக்கு கர்நூலில் 5இலட்சம் ஹன் திறையாக கிடைத்துள்ளது. பின் நல்லமலா காடுகளூடாக பயணித்தவர், இந்துக்களுக்கு மிகப்புனிதமான நிவ்ரிடி சங்கமத்தில் (கிருஷ்ணா நதியுடன் பவனிஷா நதி கலக்குமிடம்) நீராடி வழிபட்டிருக்கிறார். படைகளை அனந்தப்பூருக்கு அனுப்பிவைத்துவிட்டு தென்னிந்தியாவின் மிகத்தொன்மையான சிவத்தலமான ஸ்ரீசைலத்திற்கு 1677 மார்ச் 24 சென்று ஒன்பது நாட்கள் தங்கியிருந்து சிவனை வழிபட்டிருக்கிறார். ‘கைலாஷ்த்வாரா – கைலாயத்தின் நுழைவாயில்’ என்றழைக்கப்படும் அப்பகுதியின் இயற்கையழகிலும் அங்கு தவழ்ந்த அமைதியிலும் மனம் தோய்ந்த சிவாஜி, தான் இறப்பதற்கு இதைவிடவும் புனிதமான இடம் வேறெங்கும் இருக்கமுடியாது என்றெண்ணி அங்கேயே தன் தலையை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக (நவகண்டம்) படைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருடன் இருந்த அமைச்சர்கள் அவர் இந்து உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துரைத்து தடுத்துவிட்டதால், அவர் அங்கு ஸ்ரீகங்கேஷா என்ற மடாலயத்தைக் கட்டி லட்சக்கணக்கான பார்ப்பனர்களுக்கு உணவளிக்க பெருந்தொகையையும் கொடுத்திருக்கிறார். ஒருவேளை இதைத்தான், இந்து உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமை, ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் மீட்டெடுக்கும் செயல் என்கிறாரா ஆளுநர்? 

1677 ஏப்ரல் முதல்வாரத்தில் ஸ்ரீசைலத்திலிருந்து அனந்தப்பூர் சென்று அங்கிருந்த தன் படையுடன் நந்தியால் கடப்பா திருப்பதி காளஹஸ்தி வழியாக திறை வசூலித்தபடி மே முதல்வாரத்தில் சென்னைக்கு மேற்கே ஏழுமைல் தொலைவிலுள்ள பெட்டபாலம் என்கிற ஊரை அடைந்த சிவாஜி அங்கு முகாமிட்டிருக்கிறார். அங்கிருந்துகொண்டே, மே9 அன்று முன்னோட்டப்படையாக 5000 பேரடங்கிய குதிரைப்படையை காஞ்சிபுரம் வழியாக பீஜப்பூர் சுல்தானின் வசமிருந்த செஞ்சிக்கு அனுப்பியிருக்கிறார். பின்பு நேரில் சென்ற சிவாஜி, பீஜப்பூர் படைகளின் தளபதிகளை தன்பக்கம் இழுத்துக்கொண்டு எளிதாக செஞ்சியைக் கைப்பற்றினார். அதே உற்சாகத்துடன் மே 23ஆம் தேதி வேலூரை வந்தடைந்த சிவாஜி அங்கு பீஜப்பூர் சுல்தானின் கீழிருந்த கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார். (14 மாதங்களுக்குப் பிறகு வசமானது).    

புதிதாக கைப்பற்றிய பகுதிகளை தனக்கு விட்டுக்கொடுக்காமல் சிவாஜியே வைத்துக் கொண்டதை ஒப்பந்த மீறலாக கருதிய கோல்கொண்டா சுல்தான், சிவாஜிக்கு கொடுத்துவந்த பணம் உள்ளிட்ட உதவிகளை நிறுத்திக் கொண்டார். இதனால் ஏற்பட்ட பணமுடையைச் சமாளிக்க சென்னை, பழவேற்காடு பகுதிகளின் செல்வந்தர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் 2இலட்சம் ரூபாய் கடன் கேட்டு சிவாஜி கடிதங்களை அனுப்பினார். இவர்களில் யாரும் தப்பமுடியாதபடி சிவாஜியுடன் வந்தவர்கள் மிரட்டி பலவந்தமாக வசூல் செய்தனர். அதுவும் போதாமல் தவித்த சிவாஜியின் பார்வை, தஞ்சாவூர் பக்கம் திரும்பியது. தஞ்சாவூரை அப்போது ஆண்டு கொண்டிருந்தது வேறு யாருமல்ல, சிவாஜியின் சொந்த தம்பி - அவரது தந்தையின் இரண்டாம் தாரத்துக்குப் பிறந்த எகோஜி என்கிற வெங்கோஜி. 

பீஜப்பூர் சுல்தானின் தளபதியான எகோஜி, சிவாஜிக்கு முன்பே தமிழ்நாட்டிற்குள் வந்து, 1676ஆம் ஆண்டு நாயக்கர்களிடமிருந்து தஞ்சையை கைப்பற்றி இங்கு மராத்தியர் ஆட்சியை நிறுவியிருந்தார். “…தனது நிலையை வலுப்படுத்த எண்ணிய அவர் வடக்கிலுள்ள மராத்தியர்களையும் அந்தணர்களையும் பதவியில் அமர்த்தி நிர்வாகத்தை மாற்றியமைத்தார். விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. இப்புதிய எஜமானர்கள் நல்ல நிலங்களை தங்களுக்கு வைத்துக்கொண்டு தமிழ் விவசாயிகளை குத்தகையாளர் நிலைக்கு மாற்றினர்… எகோஜி விளைச்சலில் நான்கில் மூன்று பகுதியை வரியாக வசூலித்தார்; செலுத்தவேண்டிய தொகையை பணமாக வசூலித்து, வரிகளை அதிகரிக்க பொருள்களின் விலையை தன்னிச்சைப்படி உயர்த்தி, தனக்கென பொக்கிஷங்களை கோயில்களில் ஒதுக்கிவைத்தார்…”. இதுதான் எகோஜி ஆட்சியின் லட்சணம். 

தம்பியைச் சந்திக்க தஞ்சாவூர் வரும் வழியில் வாலிகண்டபுரம் ஆளுநரான ஷெர்கானைத் தோற்கடித்த சிவாஜி, கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமால்வாடியில் முகாமிட்டார். அங்கு பிரஞ்ச் தூதர் எம்.ஜெர்மைன் சிவாஜியுடன் மூன்றுநாட்கள் தங்கி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் (ஆனாலும் சிவாஜி படையின் கொள்ளையிலிருந்து பிரஞ்ச் பகுதிகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை). தஞ்சாவூரிலிருந்து வந்துகொண்டிருந்த தம்பியை திருமானூருக்குச் சென்று எதிர்கொண்டு வரவேற்றிருக்கிறார் சிவாஜி. அண்ணனும் தம்பியும் திருமால்வாடியில் எட்டுநாட்கள் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். தங்களது தந்தை பாகப்பிரிவினையை பாரபட்சமாக செய்து தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக மனத்தாங்கல் கொண்டிருந்த சிவாஜி, இப்போது தனக்குரிய பங்கை நேர்செய்து தரும்படி தம்பியிடம் கேட்டிருக்கிறார். பணம், நகை, குதிரைகள், படை, ஆளுகைப்பரப்பு அனைத்திலும் நான்கில் மூன்று பங்கினைக் கோரிய அண்ணனிடம் மறுத்துப் பேசினால் தன் கதி என்னவாகும் என்றுணர்ந்த தம்பி ஜூலை 23 அன்று இரவோடிரவாக கொள்ளிடம் தாண்டி தஞ்சைக்கு தப்பியோடிவிட்டார். ஆத்திரத்திமுற்ற சிவாஜி, கொள்ளிடத்தின் வடகரையில் இருந்த எகோஜியின் பகுதிகளைக் கைப்பற்றினார். 

1677 ஜூலை 27 அங்கிருந்து கிளம்பி திட்டக்குடியில் இடைத்தங்கலிட்டவர், படையினரை எலவனாசூர் மீது ஏவியுள்ளார். பட்டுத்துணிகள், சந்தனக்கட்டைகள், வாசனை திரவியங்கள், மாலத்தீவு தேங்காய்கள், கையுறைகள், கூர்வாட்கள் உள்ளிட்ட அன்பளிப்புகளுடன் வந்திருந்த தேவனாம்பட்டணம் டச்சு தலைமை அதிகாரியைச் சந்தித்துள்ளார். பின் அங்கிருந்து தன் பரிவாரத்தினருடன் விருத்தாச்சலம் சென்று ஆகஸ்ட் 1-3 வரை தங்கி சிவன் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். (ரவி சொல்லும் ஆன்மிகத் தேடல் தலைப்பில் இதை வரவு வைப்போம்). இதனூடே சிதம்பரமும் விருத்தாச்சலமும் அடுத்த சில வாரங்களில் பரங்கிப்பேட்டையும் (போர்டோ நோவா), அக்டோபரில் ஆரணியும் சிவாஜியின் வசமானதையடுத்து தென்னாற்காடு, வடாற்காடு முழுவதும் அவரது ஆளுகைக்குள் வந்தது. 

***

தமிழ்நாட்டில் சுல்தான்களின் ஆளுநர்களுடனும் சொந்தத் தம்பியுடனும் போரிட்ட சிவாஜி ஆங்கிலேயர்களிடமிருந்து ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க போரிட்ட வரலாற்றைப் பார்ப்போம். 

சிவாஜி சென்னைக்குள் வந்தார் என்பதை நேரடியாக குறிப்பிடும் ஆவணம் எதுவும் இல்லை. “…வழியில் அவர் மதராஸ் வழியாக கடந்து சென்றார்…” என்கிற குறிப்பு சுட்டும் காலகட்டம் 1677 மே. சென்னைக்கு அருகாமையில் சிவாஜி முகாமிட்டிருந்ததற்கு பலநூல்களிலும் ஆதாரங்கள் உள்ளன. (இங்கு ஓர் இடைத்தகவல்: சென்னையில் தம்பிசெட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு 1677 அக்டோபர் 3 அன்று சிவாஜி வந்து அம்மனை தரிசித்துச் சென்றதாக கோவிலில் ஒரு கல்பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்நாளில் இரண்டுநாட்கள் நடையில் சென்னையை எட்டும் தொலைவில் சிவாஜி இருந்திருக்கிறார்.)   

பெட்டபாலத்தில் தங்கியிருக்கையில் சென்னையிலிருந்த ஆங்கிலேயர் கவுன்சிலுக்கு சிவாஜி தனது தூதுவர்களை (மகத்ஜி பந்த்) இரண்டுமுறை அனுப்பிவைத்திருக்கிறார். “14 மே 1677, இன்று ஒரு அந்தணர்  மற்றும் வேறு இரண்டு பிரஜைகள் மூலம் சிவாஜி மன்னரிடமிருந்து சில கிளர்ச்சியூட்டும் கற்களையும் விஷத்தை முறிக்கும் மருந்துகளையும் கேட்டு ஒரு செய்தியும் கடிதமும் கிடைத்தன. நாங்கள் எங்கள் தூதர் மூலமாக எங்கள் தோட்டங்களில் கிடைக்கும் சில பழங்களோடு அவர் கேட்டதையும் ஒரு உள்நாட்டுக் கடிதத்துடன் அனுப்பத் தீர்மானித்துள்ளோம். அந்தண தூதருக்கு மூன்று கெஜம் அகன்ற துணியையும் கொஞ்சம் சந்தனக்கட்டையையும் அளிக்க முடிவெடுத்துள்ளோம். அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும் இந்தச் சிறிய காணிக்கைகளுக்காக பணம்பெறுவது சரியல்ல என்று கருதுகிறோம். அவர் எவ்வளவு பெரிய நபர் என்றும் அவர் மேன்மேலும் வளரவளர மதிப்புமிக்க கம்பனிக்கு அவரது நட்பு எவ்வளவு பொருளுடையதாக இருக்கும் என்பதையும் கருத்தில்கொண்டே இவ்வாறு முடிவுக்கு வந்தோம்” என்கிறது பிரிட்டிஷ் ஆவணமொன்று. சிவாஜிக்கு அனுப்பப்பட்ட  இக்காணிக்கைகளின் மதிப்பு அறுபது வராகன்கள். இவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்துடன் இதேவகைப் பொருள்களை மீண்டும் கேட்டு மே 25ஆம் தேதி சிவாஜி வேலூரிலிருந்து ஆட்களை அனுப்பியுள்ளார். 52 வராகன் மதிப்பில் ஆங்கிலேயர்கள் கொடுத்தனுப்பியுள்ளனர். 

தென்னாற்காட்டிலிருந்து 1677 செப்டம்பர் 22ஆம் தேதி வாணியம்பாடி வந்தடைந்த சிவாஜி அங்கிருந்தபடியே சென்னையிலிருந்த ஆங்கிலேய கவர்னருக்கு கடிதமொன்றை எழுதினார். “கர்நாடகப்பகுதியில் புதிதாக பல கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்ட திட்டமிட்டுள்ளேன். துப்பாக்கி, வெடிபொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளைக் கட்டுவது, சுரங்கங்களைத் தோண்டுவது, கற்சுவர்களை தகர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கான நிபுணத்துவம் வாய்ந்த ஆட்கள் உங்களிடமிருந்தால் 20-25 பேரை குறைந்தபட்சம் 10 அல்லது 5 பேரையாவது அனுப்புங்கள். அவர்களுக்கு நல்ல ஊதியத்தைக் கொடுத்து எனது கோட்டைகளில் தங்கவைத்து  கவனித்துக்கொள்கிறேன்”. நடுநிலை வகிக்க வேண்டிய வணிகர்களாகிய தங்களால் இக்கோரிக்கையை ஏற்கவியலாது என்று பணிவுடன் மறுத்து பதில் வந்திருக்கிறது. அதன்பிறகு சிவாஜி ஆங்கிலேயர்களிடம் எதையும் கேட்கவில்லை. 

சிவாஜிக்கு செஞ்சி மற்றும் வேலூரில் இரண்டு வலுவான அரண்மனைகள், (இவற்றின் ஆண்டு வருமானம் 550 ஆயிரம் பவுண்ட்கள்), 72 மலைகள், சமதளத்தில் 14 கோட்டைகள், வீரர்கள், குதிரைகள், பெரும் நிலப்பரப்பு சொந்தமாகியிருந்தன. ஆனால் நிலத்தைவிடவும் தங்கம்தான் சிவாஜியின் இலக்கு. இதற்காக இப்பகுதி எலும்புவரைக்கும் உரிக்கப்பட்டது என்று புலம்புகிறது ஒரு கடிதம். இவ்வளவு பெரும் ஆதாயங்களுடன் 1677 நவம்பரில் – சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு- தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து தனது சொந்த நாட்டை நோக்கிப் புறப்பட்ட சிவாஜி ஆங்கிலேயர்களுடன் எங்குமே போரிடவில்லை. ஒன்றிரண்டு கோவில்களுக்குப் போனதெல்லாம் ஆளுநர் சொல்வதுபோல ‘ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் மீட்கும்’ கணக்கில் வராது. 

சிவாஜியால் தமிழ்நாட்டில் விட்டுச்செல்லப்பட்ட அவரது மகன் புதிய சிவாஜியின் படைகள் “காஞ்சீவரத்தைச் சூறையாடி ஏறத்தாழ 500 பேர்களைக் கொன்று நகரத்தைப் பாழாக்கிவிட்டதாகவும், அங்கு குடியிருந்தவர்களை ஊரைவிட்டு ஓடச்செய்ததாகவும் அவர்கள் இங்கும் அங்குமாக சிதறி ஓடியதாகவும் செய்தி வந்தது… கொள்ளையடிப்பவர்களே சொத்துக்களை வைத்துக்கொள்ளலாம் என்று ஊக்குவித்திருப்பதாகவும்”. சிவாஜிகளிடமிருந்து பெற்ற இந்த ஊக்குவிப்பை சங்பரிவாரத்தினர் நடத்தும் கலவரங்களில் காணமுடிகிறது. கோவில்நகரமாம் காஞ்சியில் நடத்திய கொலையும் கொள்ளையும் ஆன்மிகத்தில் வருமா? 

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கெதிரான போரில் கொல்லப்பட்ட திப்புவை தேசத்துரோகி என்றும் ஆங்கிலேயர்களுடன் இணக்கம் பேணி காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சிவாஜியை தேசபக்தராகவும் காட்டுவதன் காரணம், சிவாஜி பார்ப்பனீயக் கருத்தியலுக்கு  அடிமையூழியம் செய்தார் என்பதுதான். சிவாஜியின் படையெடுப்பால் அழிவையும் கொள்ளையையும் தவிர தமிழ்நாடு கண்ட பலன் என்னவென்று ஆளுநர் சொல்வாரா? 

உதவிய நூல்கள்:

1.    பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள் - ஜெ.டால்பாய்ஸ் வீலர்

2.    தமிழக வரலாறு - கு.ராஜய்யன் 

3.    சிவாஜி அன்ட் ஹிஸ் டைம்ஸ் - ஜதுநாத் சர்கார்

 

நன்றி: செம்மலர், 2023 ஜூன் இதழ்

 

சனி, ஜனவரி 1

பீமா நதிக்கரையில் முடியும் கவிதை - ஆதவன் தீட்சண்யா


இந்த நதி1

எப்போதுமே இப்படி

அமைதியாகத்தான் ஓடிக்கொண்டிருந்ததென நினைக்காதீர்கள்

ஆற்றோட்டத்தின் இசைமைக்குப் பொருந்தாமல்

குதிரையின் கனைப்பொலியும் குளம்படிச்சத்தமும் 

எந்நேரமும் கேட்டபடியே இருந்த இதன் கரைகளில்தான்

முன்னைய நாட்களில் உக்கிரமான போர்கள் பலவும் நடந்துள்ளன.

 

யாருக்காகவும் வாளேந்தாத இந்த நதியினடியில் 

தோல்வியடைந்தவர்களின் எலும்புகள் புதைந்திருக்கின்றன

 

அதோ அங்கு நினைவிடத்தில் துயிலும்

சம்பாஜியின்2 தைக்கப்பட்ட உடற்துண்டங்களை

மீன்கள் அரித்துத் தின்றுவிடுவதற்கும் முன்பாக

கோவிந்த் கெய்க்வாட்டின்3 கைகளில்

நல்லடக்கத்திற்காக ஒப்படைத்தது இந்த நதிதான்.

 

நூறாண்டுகளுக்குப் பிறகு தேய்பிறையின் நாளொன்றில் 

இரண்டாம் பாஜிராவ்4  

இந்த நதியின் கரையில்தான் தன் ராஜ்ஜியத்தை இழந்தான்.

 

வெற்றிகண்ட மகர்களும் மாங்குகளும்

தன்னில் இறங்கி நீந்திக்களித்த போது

வரலாற்றின் அழுக்கையே கழுவித்தள்ளியதுபோல்

பிரவகித்து பாய்ந்தோடத் தொடங்கிய இந்நதி

பெருங்கிடக்கையோடு நூறாண்டு காத்திருந்து 

நம் அண்ணலை வரவேற்றது 

நம் ஒவ்வொருவரையும் அதே களிப்புடன் அழைத்தபடி  

அடுத்தொரு நூற்றாண்டில் ஓடி

நமது காலத்திற்குள் பாய்ந்திடும் இதன் கரை

மற்றுமொரு யுத்தத்தின் களமாகிறது

 

சனிவார்வாடா கோட்டையின் இடிபாட்டில்

துருவேறிக் கிடந்த பேஷ்வாக்களின் வாள்

மநுவினால் சாணை தீட்டப்படுகிறது மீண்டும்

பெயர்களாய் உறைந்திருக்கும் நம் பாட்டன்கள்

விஜய்ஸ்தம்பத்திலிருந்து5 உயிர்த்தெழுந்து

ஆவேசமாய் களமேகுகிறார்கள் 

புதிய பேஷ்வாக்களின் வீழ்ச்சியைக் கொண்டாட

ஆர்ப்பரித்தோடும் பீமா நதியின் கரையிலிருந்து

இக்கவிதையின் மிச்சவரிகளை எழுதுவேன்.

 ...

 1. பீமா நதி

2. சத்ரபதி சிவாஜியின் மகன் - அவுரங்கசீப்பால் கொல்லப்பட்டவன்

3. சிவாஜியின் மகனை அடக்கம் செய்த இவர் ஒரு தலித்

4. மராட்டியத்தை ஆண்ட கடைசி பேஷ்வா

5. வெற்றித்தூண்


- இன்று பீமா கோரேகான் வெற்றிதினம்

 நன்றி: நீலம் மாத இதழ்


வெள்ளி, அக்டோபர் 5

பீமா கோரேகான் - வரலாறும் நடப்பும் - ஆதவன் தீட்சண்யா



சத்ரபதி சிவாஜியும் அவரது வழிவந்த போன்ஸ்லே மன்னர்களும் தமது மராட்டிய அரசின் தலைமை அமைச்சர்களாக (பேஷ்வாக்களாக) முதலில் தேஷாஷ்ட பார்ப்பனர்களையும், பிறகு சித்பவன பார்ப்பனர்களையும் பணியமர்த்தினர். நாளடைவில் இந்த பேஷ்வாக்கள், போன்ஸ்லேக்களை பெயரளவில் ஒப்புக்கு மன்னர்களாக வைத்துக்கொண்டு ஆட்சியதிகாரத்தை தம் பொறுப்பில் முழுமையாக எடுத்துக்கொண்டனர். முதலாம் பாஜிராவ் என்கிற சித்பவன பார்ப்பனர்  பேஷ்வாவாக இருந்த காலத்தில் புனே நகரத்தில் ‘ஷனிவார்வாடா’ என்கிற அரண்மனையைக் கட்டி அங்கிருந்து (சனிக்கிழமை அடிக்கல் நாட்டி மற்றொரு சனிக்கிழமையன்று திறக்கப்பட்டது) ஆட்சி நடத்தினார். இவர் கொங்கன் பகுதியில் ஜோதிடம், புரோகிதம் ஆகியவற்றை பரம்பரைத் தொழிலாக செய்துவந்த தமது சாதியினர் ஆயிரக்கணக்கானவர்களை சனிவார்வாடாவிற்கு அழைத்துவந்து குடியேற்றினார். இந்த பேஷ்வாவும் இவருக்கு அடுத்து வந்த பேஷ்வாக்களும் நிர்வாகம், நீதி, சட்ட அமலாக்கம், ராணுவம் போன்றவற்றின் தலைமைப்பொறுப்புகள் அனைத்தையும் தமது சித்பவனப் பார்ப்பனச் சாதியினரைக் கொண்டே நிரப்பினர்.  (இந்த சித்பவனப் பார்ப்பனச் சாதியிலிருந்து பின்னாளில் வந்த சாவர்க்கர், ஹெட்கேவார் போன்றவர்கள் பேஷ்வாக்களின் பகவத்ஜம் என்கிற காவிக்கொடியையே தங்களது வணக்கத்திற்குரிய கொடியாக ஏற்றுக் கொண்டனர். இந்தக் கொடியைத்தான் ஆர்.எஸ்.எஸ் இன்றும் தனது கொடியாகக் கொண்டுள்ளது. திலகர் தனது பத்திரிகைக்கு “கேசரி” - காவி எனப் பெயரிட்டதற்கான காரணமும் இதுவே.)

வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றிய பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் மகர், மாங் போன்ற சாதியினர் மீது அரசுரீதியாகவும் சமூகரீதியாகவும் கடும் ஒடுக்குமுறைகளும் தீண்டாமையும் கடைபிடிக்கப்பட்டன. புதிய கட்டிடங்களுக்கு தோண்டப்படும் கடைக்காலில் இந்தச் சாதிகளைச் சேர்ந்தோரை உயிரோடு புதைத்து காவு கொடுக்கும் வழக்கம் பெருகியது. மனிதநிழல் நீண்டுவிழும் பொழுதுகளில் இவர்களது நிழல் நீண்டு வீட்டுக்கூரைகளின் மீது பட்டு வீடே தீட்டாகிவிடும் அபாயமிருப்பதாகக் கூறி குறிப்பிட்ட தெருக்களில் இவர்களது நடமாட்டம் தடைசெய்யப்பட்டிருந்தது. அனுமதிக்கப் பட்ட தெருக்களிலும்கூட இவர்கள் நடப்பதால் ஏற்படும் தீட்டினைப் போக்குவதற்காக, தங்களது பாதச்சுவடுகளை தாங்களே அழித்து சுத்தப்படுத்திக் கொண்டு செல்லும்விதமாக  இடுப்பிலே துடைப்பத்தைக் கட்டிக்கொண்டு நடக்கும்படியாக பணிக்கப்பட்டனர். இவர்களது எச்சில் பட்டு பூமி தீட்டாகிவிடும் அபாயத்தை தடுப்பதற்காக கழுத்தில் கலயம் ஒன்றைக் கட்டி தொங்கவிட்டபடிதான் பொதுஇடங்களில் நடமாட இவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பார்த்த உடனே தீண்டத்தகாதவர் என எளிதில் அடையாளம் காணத் தோதாக கழுத்திலோ கையிலோ கருப்புக்கயிறை கட்டிக்கொள்ளும்படி விதிக்கப்பட்டனர்.  மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கவும் நிலைநிறுத்தவும் சிவாஜியின் காலம்தொட்டு போர்முனைகளில் தீரமுடன் பங்காற்றி வந்த மகர்கள் பேஷ்வாக்களின் காலத்தில் படையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனுவாதத்தின்படி ஆயுதம் ஏந்த அனுமதிக்கப்படாத சாதியினர் ராணுவத்தில் இருக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இவர்கள் ராணுவத்தில் சேர தடைவிதிக்கப்பட்டது. இரண்டாம் பாஜிராவின் ஆட்சிக்காலமான 1817ஆம் ஆண்டுவரை இதுதான் நிலை.

பேஷ்வாக்களின் பிடியிலிருந்த மராட்டியப்பகுதியை கைப்பற்ற பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பனி தொடர்ச்சியாக முயற்சித்துவந்தது. ஏற்கனவே இரண்டு யுத்தங்களை மராத்தியப் படைகளோடு நடத்தி எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியாதிருந்த நிலையில் கிழக்கிந்தியக் கம்பனி மற்றுமொரு வலுவான யுத்தத்திற்கு உள்ளூரில் படைதிரட்டத் தொடங்கியது. மராத்தியப் படையிலிருந்து பேஷ்வாக்களால் நீக்கப்பட்ட போர்த்திறம் வாய்ந்த மகர் சமூகத்தவரை தனது படையில் சேர்த்துக் கொள்ள கிழக்கிந்தியக் கம்பனி விருப்பம் தெரிவித்தது. மகர் சமூகத்தவரின் தலைவர்களில் ஒருவரான சத்நாத் இவ்விசயத்தை பாஜிராவ் பேஷ்வாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன்,  மராட்டிய மைந்தர்களான தாங்கள் கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் சேர விரும்பவில்லை என்றும், தங்களை மராத்தியப் படையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் பேஷ்வா மகர்களின் கோரிக்கையை உதாசீனம் செய்தார். தீட்டின் காரணமாக மராத்தியப்படையில் சேர்க்கமுடியாதென பேஷ்வா பிடிவாதம் காட்டிய நிலையில், புறக்கணிக்கப்பட்ட மகர்கள் கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் சேர்ந்து மராத்தியப் படைக்கு எதிராக போரிடும் நிலை உருவானது.

1818 ஜனவரி 1 அன்று புனே நகருக்கருகில் பீமா நதியின் கரையிலுள்ள கோரேகான் என்கிற சிற்றூரில் நடந்தப் போரில் பேஷ்வா படையினரை கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீழ்த்தி வெற்றிகண்டது. 28000 பேரைக்கொண்ட பேஷ்வா படையினரை வெறும் 834 பேரைக் கொண்ட கம்பனி படை  வீழ்த்தியதற்கு காரணம், இந்த 834 பேரில் 500 பேர் மகர்களாக இருந்ததே காரணம். கிழக்கிந்தியக் கம்பனியினரை வெற்றிபெறச் செய்வதைவிட, தங்களை சாதிரீதியாக ஒடுக்கி அவமதித்து வந்த பேஷ்வாக்களை வீழ்த்தியாக வேண்டும் என்று மகர்களுக்குள் கனன்றிருந்த குமுறல்தான் இவ்வெற்றியின் உள்ளுறையாக இருந்தது என்றொரு கருத்து நிலவுகிறது.  பீமா கோரேகான் போர் எனப்படும் இப்போரின் தொடர்ச்சியில் மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மராட்டிய சாம்ராஜ்யம் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியாக மாறியது.  

பேஷ்வா பாஜிராவ் நடத்தியப் போரில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கூறு இருப்பதாக வலிந்து சொல்வோருண்டு. ஆனால் அவர் 8000க்கும் மேற்பட்ட படைவீரர்களுடன் தப்பியோடி தலைமறைவாக இருந்தபடியே கெளரவமாக சரணடைவது பற்றி  பிரிட்டிஷ் அதிகாரி சர் ஜான் மால்கம் என்பவருடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை தூதர்கள் மூலமாக நடத்தினார். கடைசியில் 1818 ஜூன் 3ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் சரணடைந்தார். ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு தன்நாட்டுக்கு வெளியே உயிர்வாழும் முதலாவது இந்திய ஆட்சியாளர் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் அவர் குறிப்பிடப்படுகிறார். இப்போதைய உத்திரபிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகிலுள்ள பிதூர் என்கிற சிற்றூரில் குடியேறிய பாஜிராவ் ஆண்டுக்கு 8இலட்சம் ரூபாய் ஓய்வூதியத்துடன் 33ஆண்டுகாலம் உயிரோடிருந்தார்.  இந்த காலகட்டத்தில் அவருக்கு ஒருமுறைகூட தேசபக்தி பொங்கியதாக தகவலேதுமில்லை.

கொண்டாடத்தக்க மராத்தா வெற்றியை போற்றும் விதமாக கோரேகானில் முதல் குண்டு சுடப்பட்ட இடத்தில் 65 அடி உயர வெற்றித்தூண் ஒன்றை நிறுவிட 1821 மார்ச் 26 ஆம் நாள் கிழக்கிந்தியக் கம்பனி அடிக்கல் நாட்டியது. தற்போது நடந்துவரும் ஒரு வழக்கில் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமொன்றில் இடம்பெற்றுள்ள குறிப்பின்படி இத்தூண் 1824 ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. போரில் இறந்த, காயமடைந்த 49 படைவீரர்களின் பெயர்கள் இந்த வெற்றித்தூணில் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 22 பேர் மகர்கள். இவர்களது குடும்பத்தினரும் வழித்தோன்றல்களும், பேஷ்வாக்களை மகர்கள் வெற்றி கொண்ட போர் இது எனக் கருதுவோரும் ஆண்டுதோறும் ஜனவரி 1 அன்று  பெருந்திரளாக பீமா கோரேகான் வந்து இந்த வெற்றித்தூணை வணங்கி மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

பீமா கோரேகானில் அண்ணல் அம்பேத்கர்
மகர்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை மனு நீதியின் பேரால் பேஷ்வாக்கள் பறித்தனர் என்றால் பிரிட்டிஷாரோ 1857க்குப் பிறகு படையில் சேரத்தொடங்கிய சாதி இந்துக்களின் கோரிக்கைக்குப் பணிந்து மகர்களை படையில் சேர்க்க தடைவிதித்து அவமதித்தனர். இந்நிலையில் போர்த்திறம் வாய்ந்தவர்களே தாங்களும் என்று நிறுவும் அகவயத் தூண்டுதல் பெற்ற மகர்கள் பீமா கோரேகான் போர் வெற்றிநாளை தங்களது வெற்றிநாளாக கொண்டாடுவது அர்த்தம் பொதிந்த செயலே. 1927 ஜனவரி 1 அன்று அண்ணல் அம்பேத்கர் இங்கு வந்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, பீமா கோரேகான் தலித்துகளின் வணக்கத்திற்குரிய இடங்களில் ஒன்று என்கிற முக்கியத்துவத்தை எட்டியது.  ஆண்டுதோறும் இருபது இலட்சம் தலித்துகள் கூடும் இந்த விழாவை ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன் என்று குற்றம்சாட்டுகிறார் 'The Battle of Bhima Koregaon: An Unending Journey" என்கிற ஆவணப்படத்தை தயாரித்துள்ள சோமநாத் வாக்மோரே.

இதன் தொடர்ச்சியில்தான் பீமா கோரேகான் வெற்றியின் 200வது ஆண்டுவிழாவை 2018 ஜனவரி 1 அன்று விமரிசையாகக் கொண்டாடுவதென்கிற கருத்து உருப்பெற்றது. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.சாவந்த், மகாராஷ்ட்ர உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கொல்சே பாட்டில் உள்ளிட்டோரை அமைப்பாளர்களாகக் கொண்டு, தலித் மற்றும் மனித உரிமைக்களத்தில் செயல்படும் 250க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கெடுக்கும் விழாக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது, 2017 டிசம்பர் 31 அன்று எல்கர் பரிஷத் என்கிற பெயரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் சிறப்பு நிகழ்வு ஒன்றை ஷனிவார்வாடா கோட்டை முன்பு நடத்திட எற்பாடு செய்தது. இந்நிகழ்வில் பங்கெடுக்கும் மக்களோடு மறுநாள் 2018 ஜனவரி 1 அன்று பீமாகோரேகான் செல்வது என்பதுதான் திட்டம். 

தமது அதிகார மையமாக இருந்த ஷனிவார்வாடாவில் தீண்டத்தகாதவர்களின் வெற்றிக் கொண்டாட்டம் நடப்பதா என்று ஆத்திரமுற்ற பேஷ்வாக்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான உதய்சிங் பேஷ்வா என்பவரும் அகிலபாரத பிராமணர் மகாசங் என்கிற அமைப்பினரும் இந்நிகழ்வுக்கு தடைவிதிக்க வேண்டுமென புனே காவல் ஆணையரிடம் புகார்கொடுத்தனர். இவர்களது கெடுமுயற்சி பலனளிக்காத நிலையில் சிவ்ஜாகர் பிரதிஸ்தான் இந்துஸ்தான் மற்றும் சமஸ்தா இந்து அஹாடி ஆகிய இந்துத்துவ அமைப்புகள் எல்கர் பரிஷத்தில் பங்கெடுக்க வந்தவர்களை வழிமறித்து தாக்கி அவர்களது வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீயில் பொசுக்கினர். தாக்குதலில் ராகுல் ஃபதங்களே என்கிற 28 வயது தலித் இளைஞர் கொல்லப்பட்டார்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் விடுத்த அறைகூவலின் பேரில் நடந்த “மகாராஷ்ட்ரா முழு அடைப்பு” இந்துத்துவ வெறியர்களுக்கும் அவர்களது கைப்பிள்ளையான அரசுக்கும் கடும் எச்சரிக்கையாக அமைந்தது. ஷனிவார்வாடா தாக்குதல் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கும் நிலை அரசுக்கு உருவானது. ஆனாலும், தாக்குதலுக்குத்    தூண்டுதலாக இருந்த சம்பாஜி பிடே, மிலிந்த் எக்போடே ஆகியோரில் இரண்டாமவர் மட்டுமே உச்ச நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு உடனேயே விடுவிக்கப்பட்டுவிட்டார். முதலாமவர் குற்றமற்றவர் என்று அம்மாநில முதல்வராலேயே பாராட்டப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்படவேயில்லை.

இதனை எதிர்த்து நாடெங்கும் கண்டனம் கிளம்பிய நிலையிலும் கூட மகாராஷ்ட்ர அரசு இந்துத்துவ வெறியர்களை ஆதரிக்கிற தலித் விரோத நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. தாக்குதலுக்கு நேரடி சாட்சியங்களில் ஒருவரான பூஜா சகத் என்கிற 19 வயது தலித் பெண் ஒரு கிணற்றில் பிணமாகக் கிடந்தாள். ஆனால் அவளது கொலைக்கு காரணமென அவளது சகோதரனும் மற்றுமொரு சாட்சியுமான ஜெய்தீப்பை காவல்துறை கைது செய்தது.  இவ்வாறாகத்தான் அரசு எல்கர் பரிஷத் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், பங்கெடுத்தவர்கள், ஆதரவளித்தவர்கள், சாட்சிகள் என்று பலரையும் கைது செய்து ஒடுக்கும் கொடூரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. தலித்துகள் மீண்டும் எல்கர் பரிஷத், மகாராஷ்ட்ரா பந்த் என்று திரண்டுவிடக்கூடாது- ஜனநாயக எண்ணம் கொண்ட யாரும் அவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்கி தலித்துகளை தனிமைப்படுத்தி ஒடுக்கும் கபடத்தில் அரசு இறங்கியுள்ளது.

புதிய பேஷ்வாக்களை முறியடிப்போம் என்று எல்கர் பரிஷத்தில் எழுப்பிய முழக்கம் இன்றைய நிலைமையின் உண்மைத்தன்மையை உணர்த்தப் போதுமானது. ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் கொண்ட முன்னாள் நிர்வாக மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் Forum of Integrated National security என்ற அமைப்பு நடுநிலையுடன் இருப்பதாக காட்டிக்கொள்ளும் பொருட்டு காவல்துறையினர், பிடே, எக்போடே ஆகியோரை ஒப்புக்கு குட்டிவிட்டு, பீமா கோரேகான் வன்முறைகளுக்கு காரணம் எல்கர் பரிஷத்தில் ஊடுருவியுள்ள மாவோயிஸ்டுகளும் தான்  என்று   அறிக்கை வெளியிட்டது. பொத்தாம்பொதுவாக கூறப்பட்ட இக்குற்றச்சாட்டு விரைவிலேயே அரசின் நிலைப்பாடாகவும் மாறியது. எல்கர் பரிஷத் நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்த “அர்பன் நக்ஸல்கள்” என்றும், சமூக அமைதியைக் கெடுத்து மோதலை உருவாக்கி நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்காகவே இந்த விழாவை அவர்கள் ஏற்பாடு செய்ததாகவும், அவர்களே முழு அடைப்பின் போதும் வன்முறையை நிகழ்த்தினார்கள் என்றும்- அந்த வகையில் இந்த வன்முறைக்கு இவர்களே காரணம் என்றும் குற்றம்சாட்டி விசயத்தை திசைதிருப்பும் வேலையில் இறங்கியது. இதன் தொடர்ச்சியில்தான் அடுத்தடுத்து பல்வேறு மனித உரிமைப்போராளிகளின் கைதுகளும், வீடுகள் சோதனையிடப்படுதலும். இந்த ஒடுக்குமுறை நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக “இவர்கள் பிரதமரைக் கொல்ல சதி செய்தார்கள்” என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் மகாராஷ்ட்ர அரசு புனைந்துள்ளது.


“ஒருவர் மாவோயிஸம் உட்பட எந்தக் கருத்தியலை பின்பற்றுவதும் குற்றமாகாது- ஒருவேளை அந்தக் கருத்தியலின் பேரால் அவர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் அதுதான் குற்றம்” என்று பல்வேறு தீர்ப்புகள் வெளியாகியுள்ள நிலையில் இவர்கள் மாவோயிஸ்டுகளா இல்லையா என்கிற விவாதம் அர்த்தமற்றது. மாவோயிஸ்டுகளின் கருத்தியல் விமர்சனத்திற்குரியது, அவர்களது இருப்பு கேள்விக்கு அப்பாற்பட்டது. மாவோயிஸ்ட் என்று ஒருவர் மீது முத்திரை குத்திவிட்டு அவரை என்னமும் செய்யலாம் என்கிற நிலையை அனுமதித்தோமானால் நாளை எவர் மீதும் அந்த முத்திரை குத்தப்பட்டு அரசியல் கணக்குகள் தீர்க்கப்படும் ஆபத்திருப்பதை பலரும் உணர்ந்ததால் தான், மகாராஷ்ட்ர அரசின் இந்த அத்துமீறல் நாடு கடந்து உலகளாவிய கண்டனத்தைப் பெற்றுள்ளது. மூத்த வரலாற்றாளர் ரொமிலா தாப்பர் மிகுந்த அறச்சீற்றத்தோடு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன்  வழக்கொன்றையும் அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். 

குடிமக்களாகிய நாம் கடைசி நம்பிக்கையாக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறோம். ஆனால் இப்போது அந்த நீதிமன்றத்தின் உள்ளேயிருந்து யாரோ கதவைத்தட்டும் சத்தம் கேட்கிறது. யாரென்று பார்த்தால் நீதிபதிகள். அவர்கள் ஊடகங்களின் வழியாக மக்களுக்கு ஏதோ சொல்லத் துடிக்கிறார்கள். பார்ப்போம், அவர்கள் சொல்வதில் நமக்கான நியாமும் இருக்கிறதாவென.

ஆதாரங்கள்:
1.      Anglo-Maratha Relations and Malcolm CHAPTER VII Bajirao's Surrender
2.      அம்பேத்கர் தொகுப்பு நூல், தொகுதி 37 பக்:1-7

நன்றி: செம்மலர், அக்-2018


துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...