வெள்ளி, அக்டோபர் 5

பீமா கோரேகான் - வரலாறும் நடப்பும் - ஆதவன் தீட்சண்யாசத்ரபதி சிவாஜியும் அவரது வழிவந்த போன்ஸ்லே மன்னர்களும் தமது மராட்டிய அரசின் தலைமை அமைச்சர்களாக (பேஷ்வாக்களாக) முதலில் தேஷாஷ்ட பார்ப்பனர்களையும், பிறகு சித்பவன பார்ப்பனர்களையும் பணியமர்த்தினர். நாளடைவில் இந்த பேஷ்வாக்கள், போன்ஸ்லேக்களை பெயரளவில் ஒப்புக்கு மன்னர்களாக வைத்துக்கொண்டு ஆட்சியதிகாரத்தை தம் பொறுப்பில் முழுமையாக எடுத்துக்கொண்டனர். முதலாம் பாஜிராவ் என்கிற சித்பவன பார்ப்பனர்  பேஷ்வாவாக இருந்த காலத்தில் புனே நகரத்தில் ‘ஷனிவார்வாடாஎன்கிற அரண்மனையைக் கட்டி அங்கிருந்து (சனிக்கிழமை அடிக்கல் நாட்டி மற்றொரு சனிக்கிழமையன்று திறக்கப்பட்டது) ஆட்சி நடத்தினார். இவர் கொங்கன் பகுதியில் ஜோதிடம், புரோகிதம் ஆகியவற்றை பரம்பரைத் தொழிலாக செய்துவந்த தமது சாதியினர் ஆயிரக்கணக்கானவர்களை சனிவார்வாடாவிற்கு அழைத்துவந்து குடியேற்றினார். இந்த பேஷ்வாவும் இவருக்கு அடுத்து வந்த பேஷ்வாக்களும் நிர்வாகம், நீதி, சட்ட அமலாக்கம், ராணுவம் போன்றவற்றின் தலைமைப்பொறுப்புகள் அனைத்தையும் தமது சித்பவனப் பார்ப்பனச் சாதியினரைக் கொண்டே நிரப்பினர்.  (இந்த சித்பவனப் பார்ப்பனச் சாதியிலிருந்து பின்னாளில் வந்த சாவர்க்கர், ஹெட்கேவார் போன்றவர்கள் பேஷ்வாக்களின் பகவத்ஜம் என்கிற காவிக்கொடியையே தங்களது வணக்கத்திற்குரிய கொடியாக ஏற்றுக் கொண்டனர். இந்தக் கொடியைத்தான் ஆர்.எஸ்.எஸ் இன்றும் தனது கொடியாகக் கொண்டுள்ளது. திலகர் தனது பத்திரிகைக்கு “கேசரி” - காவி எனப் பெயரிட்டதற்கான காரணமும் இதுவே.)

வர்ணாசிரமக் கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றிய பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் மகர், மாங் போன்ற சாதியினர் மீது அரசுரீதியாகவும் சமூகரீதியாகவும் கடும் ஒடுக்குமுறைகளும் தீண்டாமையும் கடைபிடிக்கப்பட்டன. புதிய கட்டிடங்களுக்கு தோண்டப்படும் கடைக்காலில் இந்தச் சாதிகளைச் சேர்ந்தோரை உயிரோடு புதைத்து காவு கொடுக்கும் வழக்கம் பெருகியது. மனிதநிழல் நீண்டுவிழும் பொழுதுகளில் இவர்களது நிழல் நீண்டு வீட்டுக்கூரைகளின் மீது பட்டு வீடே தீட்டாகிவிடும் அபாயமிருப்பதாகக் கூறி குறிப்பிட்ட தெருக்களில் இவர்களது நடமாட்டம் தடைசெய்யப்பட்டிருந்தது. அனுமதிக்கப் பட்ட தெருக்களிலும்கூட இவர்கள் நடப்பதால் ஏற்படும் தீட்டினைப் போக்குவதற்காக, தங்களது பாதச்சுவடுகளை தாங்களே அழித்து சுத்தப்படுத்திக் கொண்டு செல்லும்விதமாக  இடுப்பிலே துடைப்பத்தைக் கட்டிக்கொண்டு நடக்கும்படியாக பணிக்கப்பட்டனர். இவர்களது எச்சில் பட்டு பூமி தீட்டாகிவிடும் அபாயத்தை தடுப்பதற்காக கழுத்தில் கலயம் ஒன்றைக் கட்டி தொங்கவிட்டபடிதான் பொதுஇடங்களில் நடமாட இவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பார்த்த உடனே தீண்டத்தகாதவர் என எளிதில் அடையாளம் காணத் தோதாக கழுத்திலோ கையிலோ கருப்புக்கயிறை கட்டிக்கொள்ளும்படி விதிக்கப்பட்டனர்.  மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்கவும் நிலைநிறுத்தவும் சிவாஜியின் காலம்தொட்டு போர்முனைகளில் தீரமுடன் பங்காற்றி வந்த மகர்கள் பேஷ்வாக்களின் காலத்தில் படையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனுவாதத்தின்படி ஆயுதம் ஏந்த அனுமதிக்கப்படாத சாதியினர் ராணுவத்தில் இருக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இவர்கள் ராணுவத்தில் சேர தடைவிதிக்கப்பட்டது. இரண்டாம் பாஜிராவின் ஆட்சிக்காலமான 1817ஆம் ஆண்டுவரை இதுதான் நிலை.

பேஷ்வாக்களின் பிடியிலிருந்த மராட்டியப்பகுதியை கைப்பற்ற பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பனி தொடர்ச்சியாக முயற்சித்துவந்தது. ஏற்கனவே இரண்டு யுத்தங்களை மராத்தியப் படைகளோடு நடத்தி எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியாதிருந்த நிலையில் கிழக்கிந்தியக் கம்பனி மற்றுமொரு வலுவான யுத்தத்திற்கு உள்ளூரில் படைதிரட்டத் தொடங்கியது. மராத்தியப் படையிலிருந்து பேஷ்வாக்களால் நீக்கப்பட்ட போர்த்திறம் வாய்ந்த மகர் சமூகத்தவரை தனது படையில் சேர்த்துக் கொள்ள கிழக்கிந்தியக் கம்பனி விருப்பம் தெரிவித்தது. மகர் சமூகத்தவரின் தலைவர்களில் ஒருவரான சத்நாத் இவ்விசயத்தை பாஜிராவ் பேஷ்வாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன்,  மராட்டிய மைந்தர்களான தாங்கள் கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் சேர விரும்பவில்லை என்றும், தங்களை மராத்தியப் படையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் பேஷ்வா மகர்களின் கோரிக்கையை உதாசீனம் செய்தார். தீட்டின் காரணமாக மராத்தியப்படையில் சேர்க்கமுடியாதென பேஷ்வா பிடிவாதம் காட்டிய நிலையில், புறக்கணிக்கப்பட்ட மகர்கள் கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் சேர்ந்து மராத்தியப் படைக்கு எதிராக போரிடும் நிலை உருவானது.

1818 ஜனவரி 1 அன்று புனே நகருக்கருகில் பீமா நதியின் கரையிலுள்ள கோரேகான் என்கிற சிற்றூரில் நடந்தப் போரில் பேஷ்வா படையினரை கிழக்கிந்தியக் கம்பனியின் படை வீழ்த்தி வெற்றிகண்டது. 28000 பேரைக்கொண்ட பேஷ்வா படையினரை வெறும் 834 பேரைக் கொண்ட கம்பனி படை  வீழ்த்தியதற்கு காரணம், இந்த 834 பேரில் 500 பேர் மகர்களாக இருந்ததே காரணம். கிழக்கிந்தியக் கம்பனியினரை வெற்றிபெறச் செய்வதைவிட, தங்களை சாதிரீதியாக ஒடுக்கி அவமதித்து வந்த பேஷ்வாக்களை வீழ்த்தியாக வேண்டும் என்று மகர்களுக்குள் கனன்றிருந்த குமுறல்தான் இவ்வெற்றியின் உள்ளுறையாக இருந்தது என்றொரு கருத்து நிலவுகிறது.  பீமா கோரேகான் போர் எனப்படும் இப்போரின் தொடர்ச்சியில் மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மராட்டிய சாம்ராஜ்யம் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியாக மாறியது.  

பேஷ்வா பாஜிராவ் நடத்தியப் போரில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கூறு இருப்பதாக வலிந்து சொல்வோருண்டு. ஆனால் அவர் 8000க்கும் மேற்பட்ட படைவீரர்களுடன் தப்பியோடி தலைமறைவாக இருந்தபடியே கெளரவமாக சரணடைவது பற்றி  பிரிட்டிஷ் அதிகாரி சர் ஜான் மால்கம் என்பவருடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை தூதர்கள் மூலமாக நடத்தினார். கடைசியில் 1818 ஜூன் 3ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் சரணடைந்தார். ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு தன்நாட்டுக்கு வெளியே உயிர்வாழும் முதலாவது இந்திய ஆட்சியாளர் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் அவர் குறிப்பிடப்படுகிறார். இப்போதைய உத்திரபிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகிலுள்ள பிதூர் என்கிற சிற்றூரில் குடியேறிய பாஜிராவ் ஆண்டுக்கு 8இலட்சம் ரூபாய் ஓய்வூதியத்துடன் 33ஆண்டுகாலம் உயிரோடிருந்தார்.  இந்த காலகட்டத்தில் அவருக்கு ஒருமுறைகூட தேசபக்தி பொங்கியதாக தகவலேதுமில்லை.

கொண்டாடத்தக்க மராத்தா வெற்றியை போற்றும் விதமாக கோரேகானில் முதல் குண்டு சுடப்பட்ட இடத்தில் 65 அடி உயர வெற்றித்தூண் ஒன்றை நிறுவிட 1821 மார்ச் 26 ஆம் நாள் கிழக்கிந்தியக் கம்பனி அடிக்கல் நாட்டியது. தற்போது நடந்துவரும் ஒரு வழக்கில் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமொன்றில் இடம்பெற்றுள்ள குறிப்பின்படி இத்தூண் 1824 ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. போரில் இறந்த, காயமடைந்த 49 படைவீரர்களின் பெயர்கள் இந்த வெற்றித்தூணில் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 22 பேர் மகர்கள். இவர்களது குடும்பத்தினரும் வழித்தோன்றல்களும், பேஷ்வாக்களை மகர்கள் வெற்றி கொண்ட போர் இது எனக் கருதுவோரும் ஆண்டுதோறும் ஜனவரி 1 அன்று  பெருந்திரளாக பீமா கோரேகான் வந்து இந்த வெற்றித்தூணை வணங்கி மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

பீமா கோரேகானில் அண்ணல் அம்பேத்கர்
மகர்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை மனு நீதியின் பேரால் பேஷ்வாக்கள் பறித்தனர் என்றால் பிரிட்டிஷாரோ 1857க்குப் பிறகு படையில் சேரத்தொடங்கிய சாதி இந்துக்களின் கோரிக்கைக்குப் பணிந்து மகர்களை படையில் சேர்க்க தடைவிதித்து அவமதித்தனர். இந்நிலையில் போர்த்திறம் வாய்ந்தவர்களே தாங்களும் என்று நிறுவும் அகவயத் தூண்டுதல் பெற்ற மகர்கள் பீமா கோரேகான் போர் வெற்றிநாளை தங்களது வெற்றிநாளாக கொண்டாடுவது அர்த்தம் பொதிந்த செயலே. 1927 ஜனவரி 1 அன்று அண்ணல் அம்பேத்கர் இங்கு வந்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, பீமா கோரேகான் தலித்துகளின் வணக்கத்திற்குரிய இடங்களில் ஒன்று என்கிற முக்கியத்துவத்தை எட்டியது.  ஆண்டுதோறும் இருபது இலட்சம் தலித்துகள் கூடும் இந்த விழாவை ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன் என்று குற்றம்சாட்டுகிறார் 'The Battle of Bhima Koregaon: An Unending Journey" என்கிற ஆவணப்படத்தை தயாரித்துள்ள சோமநாத் வாக்மோரே.

இதன் தொடர்ச்சியில்தான் பீமா கோரேகான் வெற்றியின் 200வது ஆண்டுவிழாவை 2018 ஜனவரி 1 அன்று விமரிசையாகக் கொண்டாடுவதென்கிற கருத்து உருப்பெற்றது. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி.சாவந்த், மகாராஷ்ட்ர உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கொல்சே பாட்டில் உள்ளிட்டோரை அமைப்பாளர்களாகக் கொண்டு, தலித் மற்றும் மனித உரிமைக்களத்தில் செயல்படும் 250க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கெடுக்கும் விழாக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது, 2017 டிசம்பர் 31 அன்று எல்கர் பரிஷத் என்கிற பெயரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் சிறப்பு நிகழ்வு ஒன்றை ஷனிவார்வாடா கோட்டை முன்பு நடத்திட எற்பாடு செய்தது. இந்நிகழ்வில் பங்கெடுக்கும் மக்களோடு மறுநாள் 2018 ஜனவரி 1 அன்று பீமாகோரேகான் செல்வது என்பதுதான் திட்டம். 

தமது அதிகார மையமாக இருந்த ஷனிவார்வாடாவில் தீண்டத்தகாதவர்களின் வெற்றிக் கொண்டாட்டம் நடப்பதா என்று ஆத்திரமுற்ற பேஷ்வாக்களின் வழித்தோன்றல்களில் ஒருவரான உதய்சிங் பேஷ்வா என்பவரும் அகிலபாரத பிராமணர் மகாசங் என்கிற அமைப்பினரும் இந்நிகழ்வுக்கு தடைவிதிக்க வேண்டுமென புனே காவல் ஆணையரிடம் புகார்கொடுத்தனர். இவர்களது கெடுமுயற்சி பலனளிக்காத நிலையில் சிவ்ஜாகர் பிரதிஸ்தான் இந்துஸ்தான் மற்றும் சமஸ்தா இந்து அஹாடி ஆகிய இந்துத்துவ அமைப்புகள் எல்கர் பரிஷத்தில் பங்கெடுக்க வந்தவர்களை வழிமறித்து தாக்கி அவர்களது வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீயில் பொசுக்கினர். தாக்குதலில் ராகுல் ஃபதங்களே என்கிற 28 வயது தலித் இளைஞர் கொல்லப்பட்டார்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் விடுத்த அறைகூவலின் பேரில் நடந்த “மகாராஷ்ட்ரா முழு அடைப்பு” இந்துத்துவ வெறியர்களுக்கும் அவர்களது கைப்பிள்ளையான அரசுக்கும் கடும் எச்சரிக்கையாக அமைந்தது. ஷனிவார்வாடா தாக்குதல் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கும் நிலை அரசுக்கு உருவானது. ஆனாலும், தாக்குதலுக்குத்    தூண்டுதலாக இருந்த சம்பாஜி பிடே, மிலிந்த் எக்போடே ஆகியோரில் இரண்டாமவர் மட்டுமே உச்ச நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு உடனேயே விடுவிக்கப்பட்டுவிட்டார். முதலாமவர் குற்றமற்றவர் என்று அம்மாநில முதல்வராலேயே பாராட்டப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்படவேயில்லை.

இதனை எதிர்த்து நாடெங்கும் கண்டனம் கிளம்பிய நிலையிலும் கூட மகாராஷ்ட்ர அரசு இந்துத்துவ வெறியர்களை ஆதரிக்கிற தலித் விரோத நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. தாக்குதலுக்கு நேரடி சாட்சியங்களில் ஒருவரான பூஜா சகத் என்கிற 19 வயது தலித் பெண் ஒரு கிணற்றில் பிணமாகக் கிடந்தாள். ஆனால் அவளது கொலைக்கு காரணமென அவளது சகோதரனும் மற்றுமொரு சாட்சியுமான ஜெய்தீப்பை காவல்துறை கைது செய்தது.  இவ்வாறாகத்தான் அரசு எல்கர் பரிஷத் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், பங்கெடுத்தவர்கள், ஆதரவளித்தவர்கள், சாட்சிகள் என்று பலரையும் கைது செய்து ஒடுக்கும் கொடூரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. தலித்துகள் மீண்டும் எல்கர் பரிஷத், மகாராஷ்ட்ரா பந்த் என்று திரண்டுவிடக்கூடாது- ஜனநாயக எண்ணம் கொண்ட யாரும் அவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்கி தலித்துகளை தனிமைப்படுத்தி ஒடுக்கும் கபடத்தில் அரசு இறங்கியுள்ளது.

புதிய பேஷ்வாக்களை முறியடிப்போம் என்று எல்கர் பரிஷத்தில் எழுப்பிய முழக்கம் இன்றைய நிலைமையின் உண்மைத்தன்மையை உணர்த்தப் போதுமானது. ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் கொண்ட முன்னாள் நிர்வாக மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் Forum of Integrated National security என்ற அமைப்பு நடுநிலையுடன் இருப்பதாக காட்டிக்கொள்ளும் பொருட்டு காவல்துறையினர், பிடே, எக்போடே ஆகியோரை ஒப்புக்கு குட்டிவிட்டு, பீமா கோரேகான் வன்முறைகளுக்கு காரணம் எல்கர் பரிஷத்தில் ஊடுருவியுள்ள மாவோயிஸ்டுகளும் தான்  என்று   அறிக்கை வெளியிட்டது. பொத்தாம்பொதுவாக கூறப்பட்ட இக்குற்றச்சாட்டு விரைவிலேயே அரசின் நிலைப்பாடாகவும் மாறியது. எல்கர் பரிஷத் நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்த “அர்பன் நக்ஸல்கள்” என்றும், சமூக அமைதியைக் கெடுத்து மோதலை உருவாக்கி நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்காகவே இந்த விழாவை அவர்கள் ஏற்பாடு செய்ததாகவும், அவர்களே முழு அடைப்பின் போதும் வன்முறையை நிகழ்த்தினார்கள் என்றும்- அந்த வகையில் இந்த வன்முறைக்கு இவர்களே காரணம் என்றும் குற்றம்சாட்டி விசயத்தை திசைதிருப்பும் வேலையில் இறங்கியது. இதன் தொடர்ச்சியில்தான் அடுத்தடுத்து பல்வேறு மனித உரிமைப்போராளிகளின் கைதுகளும், வீடுகள் சோதனையிடப்படுதலும். இந்த ஒடுக்குமுறை நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக “இவர்கள் பிரதமரைக் கொல்ல சதி செய்தார்கள்” என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டையும் மகாராஷ்ட்ர அரசு புனைந்துள்ளது.


“ஒருவர் மாவோயிஸம் உட்பட எந்தக் கருத்தியலை பின்பற்றுவதும் குற்றமாகாது- ஒருவேளை அந்தக் கருத்தியலின் பேரால் அவர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் அதுதான் குற்றம்” என்று பல்வேறு தீர்ப்புகள் வெளியாகியுள்ள நிலையில் இவர்கள் மாவோயிஸ்டுகளா இல்லையா என்கிற விவாதம் அர்த்தமற்றது. மாவோயிஸ்டுகளின் கருத்தியல் விமர்சனத்திற்குரியது, அவர்களது இருப்பு கேள்விக்கு அப்பாற்பட்டது. மாவோயிஸ்ட் என்று ஒருவர் மீது முத்திரை குத்திவிட்டு அவரை என்னமும் செய்யலாம் என்கிற நிலையை அனுமதித்தோமானால் நாளை எவர் மீதும் அந்த முத்திரை குத்தப்பட்டு அரசியல் கணக்குகள் தீர்க்கப்படும் ஆபத்திருப்பதை பலரும் உணர்ந்ததால் தான், மகாராஷ்ட்ர அரசின் இந்த அத்துமீறல் நாடு கடந்து உலகளாவிய கண்டனத்தைப் பெற்றுள்ளது. மூத்த வரலாற்றாளர் ரொமிலா தாப்பர் மிகுந்த அறச்சீற்றத்தோடு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதுடன்  வழக்கொன்றையும் அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். 

குடிமக்களாகிய நாம் கடைசி நம்பிக்கையாக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறோம். ஆனால் இப்போது அந்த நீதிமன்றத்தின் உள்ளேயிருந்து யாரோ கதவைத்தட்டும் சத்தம் கேட்கிறது. யாரென்று பார்த்தால் நீதிபதிகள். அவர்கள் ஊடகங்களின் வழியாக மக்களுக்கு ஏதோ சொல்லத் துடிக்கிறார்கள். பார்ப்போம், அவர்கள் சொல்வதில் நமக்கான நியாமும் இருக்கிறதாவென.

ஆதாரங்கள்:
1.      Anglo-Maratha Relations and Malcolm CHAPTER VII Bajirao's Surrender
2.      அம்பேத்கர் தொகுப்பு நூல், தொகுதி 37 பக்:1-7

நன்றி: செம்மலர், அக்-2018


3 கருத்துகள்:

  1. எளிதாக புரிந்து கொள்ள முடிகிற வரலாறு, தொடரட்டும் தங்கள் பணி

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு வரலாற்றில் என்றுமே தலித் மக்களுக்குடன் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர் பார்ப்பனர்

    பதிலளிநீக்கு
  3. சரித்திரங்களை ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கின்றன.

    பதிலளிநீக்கு

ஆளுநரின் ஆன்மிகப்பொய் அல்லது ஆன்மிகமே பொய் - ஆதவன் தீட்சண்யா

உ லகமே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த மே 1 அன்று முன்னெப்போதுமில்லாத வழக்கமாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் உருவான நாளை ஆளுநர் ...