எனது ஆயுள் தண்டனைக் கூண்டிற்குள்
பெரிய சாவிக் கொத்தொனறைத் தட்டி
ஓசை எழுப்பியவாறு
காலை வணக்கம் என்னும் தழுவலுடன்
அதிகாலைக் கனவுகளிலிருந்து என்னை
விழித்தெழ
வைக்கிறார் அவர்
புன்னகையுடனும்
சிரிப்புடனும்.
தலையில் கருநீல நேரு தொப்பி
மேலிருந்து கீழ் வரை மூர்க்கத்தனமான காக்கி உடைகள்
இடுப்பைச் சுற்றிப் பாம்பு போல் வளைந்தோடும்
கருப்பு பெல்ட்
தூக்கம் கலையாமல், பாதி திறந்திருக்கும் என் கண்களுக்கு
முன் நிற்கிறார், தடுமாறுகிறார்
நரகத்தின் வாயில்களைக் காத்துக் கொண்டிருக்கும் பேயைப்
போல.
பகைவனின் இராணுவத்திலிருந்து வரும்
ஓர் ஆவியைப்
போன்ற தோற்றம்
ஆனால் வாஞ்சையுள்ள புன்னகை,
நட்பு நிறைந்த முகம்
நாள் விடிந்ததும்
அன்று உயிருடன் இருப்பவர் யார்,
இறந்து போனவர்கள் யார் என்பதை
சோதித்துக்
கொண்டும் உயிரோடு இருப்பவர்களை எண்ணிக் கொண்டும்.
வலியையோ எரிச்சலையோ வெளிப்படுத்தாமல்
ஒவ்வொரு நாளும் ஆயிரம் முறை
இரும்புக்கதவுகளின் பூட்டுகளைத் திறக்கிறார், மூடுகிறார்.
சோர்வடையாத தமது சேவைகளுக்காக இனாமையோ சலுகைகளையோ
கேட்பதில்லை .
நோய்வாய்ப்பட்டு பிரக்ஞையற்ற நிலையில்
நான் இருக்கும்
போது
கைதிகளைப் பார்க்க வராத மருத்துவரைத் தனது ஒயர்லெஸ் கருவி மூலம்
பொறுமையுடன் திரும்பத் திரும்ப அழைக்கிறார்.
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள சோகம் சிறைந்த ஆன்மாக்களின்
குற்றத்தையோ களங்கமின்மையயோ ஒருபோதும் பொருட்படுத்தாமல்
அவர்களுக்குப்
பொறுமையுடனும் கருணையுடனும் செவிமடுத்துக் கொண்டே
தனது சோகக் கதைகளை மூடிமறைக்கின்றார்.
நாங்கள் சொல்வதைக் கேட்கிறார்
விவாதிக்கிறார்
அதிகாரத்திலுள்ள தீய சக்திகளை வெறுப்புடன் சபிக்கிறார்
பெரிய அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களுக்குச் சென்ற
பிறகு புருவங்களை நெறிக்கிறார்.
கண்காணிக்கும் தமது கழுகுக்கண்களுடன்
இரவு நெடுக
பேய்த்தனமான அரசின் இருண்ட படிக்கட்டுகளில்
கனத்த அடியெடுத்து ஏறி இறங்குகிறார்.
நமது சமூக
அவலத்தின்
மிக ஆழமான கிணற்றிலிருந்து வருகிறவர் அவர்.
சிறை வாயில்களுக்கு வெளியே
வாடிக் கொண்டிருக்கும்
அவரது நேசத்துக்குரியவர்களைக் கவனிக்க
அவருக்கு நேரம் இல்லை
நான்கு சுவர்களுக்கும் மூடிய வாயில்களுக்கும் பின்னால்
கடமைகளுக்குச்
சிறைப்பட்டிருக்கும் அவருமே
தமது ஆயுட்காலத்தை
ஓர் அற்பத்தொகைக்காக
சிறையில் கழிக்கின்றார்.
சபிக்கப்பட்ட ஆன்மாக்கள் வருகின்றனர், செல்கின்றனர்
ஆனால் அவரோ நிரந்தரமான கைதி
அவருக்கு
விடுமுறைகளோ புனித நாள்களோ,
வார இறுதி விடுப்புகளோ இல்லை
அவர் கன்னிகாஸ்திரீ
செவிலி
பாதிரி
பக்தி சிரத்தை கொண்ட
பொறுமையின் விடாமுயற்சி.
எனது கூண்டின் கிராதிகளுடன்
நிரந்தரமாய்
ஒட்டிக் கொண்டிருக்கும் அவர் ஓய்வொழிச்சலில்லாத அடிமை
நண்பர், ஒன்றுவிட்ட சகோதரர், தோழர்
எனது வாழ்க்கையின்
வாக்கியத்தின், சொற்றொடர்களின்,
வார்த்தைகளின், அசைகளின் காவலர்.
· டெல்லிப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஜி.என்.சாய்பாபா, தடைசெய்யப்பட்ட
மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து இந்திய அரசுக்கு எதிராகப் போர் புரிந்ததாகக் குற்றம்
சாட்டப்பட்டு, மகாராஷ்டிராவிலுள்ள கட்சிரோலி மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு
நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செயலிழந்த கால்களைக் கொண்ட மாற்றுத்
திறனாளியான அவர் வாழ்க்கையின் பெரும்பகுதியை சக்கர நாற்காலியின் உதவியுடனே கழித்திருக்கிறார்.
அவர் விசாரணைக் கைதியாக இருந்தபோது, பல நாள்கள்
கழிப்பறைக்குக்கூட ஊர்ந்தே செல்லவேண்டிய நிலையில் சக்கர நாற்காலியோ உதவியாளரோ வழங்கப்படாத
அவல நிலைக்கு உள்ளாகியிருந்தார். இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள்,
மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் தலையீடுகள், அவர் சிறிதுகாலம் பிணையில் வெளிவர உதவிய
போதிலும், அவரது சிறைத்தண்டனையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவருக்காக வழக்காடிய
வழக்குரைஞரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான சுரேந்திர காட்லிங், மகாராஷ்ட்ராவின்
பீம்கோர்காவனில் 31.12.2017இல் நடந்த தலித் மாநாட்டை அடுத்து நடந்த வன்முறையில் தொடர்புடையவர்
என்னும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
28.08.2018 அன்று இந்தியாவில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட கவுதம் நவ்லாகா,
ரோனா வில்ஸன், சுதா பரத்வாஜ், வெர்னான் ஃபெர்னாண்டெஸ், வரவர ராவ் ஆகியோர் மீதும் இதே
குற்றசாட்டு மட்டுமின்றி இந்தியப் பிரதமரையும் உயர் அரசுப்பதவிகளில் இருப்பவர்களையும்
கொலை செய்ய மாவோயிஸ்டுகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்னும் இன்னொரு குற்றச்சாட்டும்
மகாராஷ்ட்டிரக் காவல்துறையால் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு யந்திரத்தாலோ,
சிறை அதிகாரிகளாலோ சிறு விரிசலைக்கூட உருவாக்க முடியாத நெஞ்சுறுதி கொண்டவர் என்று வர்ணிக்கப்படும் முனைவர்
ஜி.என்.சாய்பாபாவின் ஆழ்ந்த மனிதநேயத்துக்கும்
கருணை உள்ளத்திற்கு சான்றாக இருப்பது அவர்
எழுதிய ஆங்கிலக் கவிதை. அது RAITOT
Challenging the Consensus என்னும் ஆங்கில
இணையதள ஏட்டில் 12.9.2018 அன்று வெளிவந்துள்ளது.
தமிழாக்கமும் குறிப்பும் : எஸ்.வி.ராஜதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக