தலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா


கன்னட எழுத்தாளர் சுமதீந்திர நாடிக்’கின் 13 சிறுகதைகளை தி.சு.சதாசிவம் மொழிபெயர்ப்பில் “நிலவில்லாத இரவுஎன்கிற தொகுப்பாக 1994ல் என்.சி.பி.ஹெச். வெளியிட்டது. பேசுபொருள், களம், மொழி, கதைமாந்தர்கள், சொல்முறை என எல்லாவகையிலும் தனித்துவம் கொண்ட அக்கதைகளிலிருந்து ஒன்றை நினைவுபடுத்திச் சொல்கிறேன்.

வெளிநாட்டுக்கு வேலைக்குப் போய் அந்தச் சூழலோடு மனசொட்டாமல் சமீபத்தில் நாடு திரும்பிய ஒருவன் பெங்களூரு லால்பாக்கில் அமர்ந்திருப்பான். இந்த மரங்களெல்லாம் ஒரேயிடத்தில் நிலைத்திருக்க, மனிதர்களோ அங்குமிங்குமாக அலைய வேண்டியுள்ளது. மரங்களுக்கு இருப்பதுபோல மனிதர்களுக்கும் வேர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், எங்கும் பெயராமல் அவரவர் இடத்திலேயே இருந்துவிடலாமே என்கிற அங்கலாய்ப்பில் மூழ்கிக்கிடப்பான். பூங்காவின் காவலாளி வந்து உலுக்கி, வாயிலைச் சாத்தும் நேரமிது கிளம்புங்கள் என்பார். ஏதேதோ நினைப்பில் மூழ்கி நேரம் போனது தெரியாமலே இருந்துவிட்டேன் என்றபடி இருக்கையிலிருந்து இவன் எழுந்து கிளம்புவான். ஆனால் இவனால் கால்களை நகர்த்த முடியாது. நீண்டநேரம் உட்கார்ந்திருந்ததால் மரத்திருக்கலாம் என்று கால்களை உதறும் எத்தனம் கைகூடாது. அய்யோ என் கால்களை அசைக்க முடியவில்லையே என்று கதறுவான். அப்போது அங்கிருந்த மரங்களில் ஒன்று “நீ ஆசைப்பட்டபடியே எங்களுக்குப்போலவே உனக்கும் இப்போது வேர்விட்டிருக்கிறது. அதற்காக சந்தோசப்படாமல் ஏனிப்படி கத்தி கூப்பாடு போடுகிறாய்?” என்கிறது. “நான் வேர்னு சொன்னதுக்கு இப்படி நேர் அர்த்தம் எடுத்துக்கொண்டு வேர்விட வைத்திருப்பது என்ன நியாயம்? என்று வாதிடுவான் இவன். வேரோடு இருந்து பார் மகனே என்பது போல  மரம் பேச்சை நிறுத்திக்கொள்ளும்.

ஏதேனும் அற்புதம் நிகழாமல் தன்னால் இங்கிருந்து பெயரமுடியாது என்கிற உண்மை இவனை கலவரப்படுத்துகிறது. மகனது யூனிபார்ம் ஷூவுக்கு சாக்ஸ் வாங்கிப்போவது உட்பட, தான்  போய் உடனே செய்து முடித்தாக வேண்டிய வேலைகளின் நீண்ட பட்டியல் நினைவுக்கு வந்து அரற்றத் தொடங்குவான். எப்படியாவது தன்னை பிடுங்கியெடுக்கும்படி காவலாளியிடம் மன்றாடுவான். அந்த முதியவரோ இந்தாள் கிளம்பினால் தான் பூங்காவைச் சாத்தமுடியும் என்பதால் இவனை அசைத்தசைத்து பிடுங்கியெடுக்க முயற்சிப்பார், முடியாது. “அய்யா, இதோ நான் கட்டியுள்ள இந்த வெளிநாட்டு கடியாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. எனது நண்பன்தான். அவனிடம் விவரத்தைச் சொல்லி அழைத்து வாருங்கள்என்று கெஞ்சுவான். மனமிரங்கிய காவலாளி எம்.எல்.ஏ.வை அழைத்து வருவார். மனிதர்களிடம் பலிக்கிற தனது ஜம்பம் மரத்திடம் பலிக்காது என்பதை சிற்சில முயற்சிகளுக்குப் பிறகு எம்.எல்.ஏ. உணர்கிறார். நண்பனைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற உந்துதலில், கால் போனால் போகட்டும் ஆள் மீளட்டும் என்று வேறுவழியின்றி இயந்திரத்தின் துணையோடு வேர்களிலிருந்து பாதங்களை வெட்டியெடுத்து இவனைப் பிரிக்கிறார். அதனால் ஏற்பட்ட பலத்த காயத்திலிருந்து பெருமளவு ரத்தம் வெளியேறிய நிலையில் இவன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.

வேர்முளைத்த மனிதன் என்கிற செய்தி பரவி இவனைப் பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. நோவில் வாதையுற்றுக் கொண்டிருக்கும் இவனுக்கோ தானொரு வேடிக்கைப்பொருளாகவும் மாறிவிட்ட வருத்தம் மேலிடுகிறது. கூட்டம் ஒழிந்த பொழுதொன்றில் இவனது மனைவி வருகிறாள். “குடும்பத்தைக் காப்பாற்ற எங்கெங்கோ ஓடி சனங்க அல்லாடுது. நீயோ வெளிநாட்டுல போய் சம்பாதிக்க கிடைச்ச வாய்ப்பை தட்டிக் கழிச்சிட்டு இங்க ஓடியாந்து பண்பாடு பாரம்பரியம் வேர் வெங்காயம்னு பினாத்திக்கிட்டிருந்தே. சரி, உன் கிறுக்குத்தனத்துக்கு தோதா கால்ல வேர் விட்டதே அப்படியே பார்க்ல நின்றிருந்தால், உன்னைப் பார்க்க கூட்டம் ரொம்பியிருக்கும். தலைக்கு பத்துரூபான்னு டிக்கெட் போட்டிருந்தால் கூட குடும்பச்செலவுக்கு ஈடுகட்ட ஆகியிருக்கும். அந்த வாய்ப்பையும் போக்கடிச்சுட்டு இப்படி காலையும் வெட்டிக்கிட்டு வந்து பாரமா படுத்திருக்கியே” என்று பொரிந்து தள்ளுகிறாள்.

இவ்விடத்தில் முடிகிறது கதை.    

கதை என்பது சமூக நிகழ்வுகளின் விவரிப்போ வியாகியானமோ அல்ல.. மாறாக அது நிகழ்வுகள் மீதான விசாரணையாக, விமரிசனமாக, அந்நிகழ்வுகளின் அதீத சாத்தியங்களின் முன்மொழிவாக பன்முகத்தன்மையுடன் எழுதப்பட வேண்டும் என்பதை இந்தக்கதை தான் எனக்கு உணர்த்தியது என்பேன்.

-     19.06.18
நன்றி: அந்திமழை, ஜூலை இதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக