ஒளிப்பாடல் - ஆதவன் தீட்சண்யா


வையத்து நிலமிழந்தோம் வானமுத மழையிழந்தோம்
வாழும் புலமிழந்தோம் வளமூறும் ஆறிழந்தோம்
வேளாண் குடியழிந்தோம் வெள்ளாமைக் காடிழந்தோம்
சூழும் கொடுநெருப்பில் சொந்தபந்த சனமிழந்தோம்

இழப்பை நினைத்தழவும் இங்கெமக்கு உரிமையில்லை
கழுத்தை நெறித்திறுக்கும் கயிறறுக்க வலுவுமில்லை
மருகிச் சாவதற்கோ மானுடராய் நாம் பிறந்தோம்
உருகி அழியுதய்யோ உயிர்வாழும் சிற்றாசை

சொடுங்குது சூரியனும் சுண்டுது பால்நிலவும்
சொக்குது பகலுமிங்கே சூழ்ந்திடும் இருளாலே   
இருளும் காலமிதில் எதை நாம் பாடுவது
இம்மி வெளிச்சமில்ல எதையிங்கே தேடுவது

அவலத்தை நிதம்பாடி அச்சத்தில் வீழ்வோமோ
சவம்போல விரைத்தழுகி சலனமின்றிக் கிடப்போமோ
துவண்டுவிழ நியாயமில்லை துக்கிக்க நேரமில்லை
உழைப்பு வீணும் அல்ல உயிர் இருப்பு சாவுமல்ல

இருளென்று பாடுதற்கு இங்கேதான் நாமெதற்கு
இரு கண்ணில் ஒளியிருக்க இருள் கண்டு பயமெதற்கு
ஒளியின் மகத்துவத்தை உலகறியப் பாடிடுவோம்
உயிரீந்தும் வெளிச்சத்தை மனந்தோறும் பாய்ச்சிடுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக