சனி, நவம்பர் 18

குலத்தொழில் 2.0 -ஆதவன் தீட்சண்யா

ரியர் கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் விஸ்வகர்மா. அவர் 4320000 ஆண்டுகளைக் கொண்ட கிருத (1728000 ஆண்டுகள்), திரேத (1296000 ஆண்டுகள்), துவாபர (864000 ஆண்டுகள்), கலி (432000 ஆண்டுகள்)  ஆகிய நான்கு யுகங்களிலும் கடவுள்களுக்காகவும் மன்னர்களுக்காகவும் இந்தியா, இலங்கை மற்றும் தேவலோகத்தில் பல நகரங்களையும் மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் உருவாக்கிய கட்டுமானப் பொறியாளர் என்று புகழப்படுகிறார். கிருத யுகத்தில் சொர்க்கலோகத்தை இவர்தான் உருவாக்கியிருக்கிறார். நரகலோகத்தை யார் உருவாக்கினார்கள் என்கிற தரவேதும் கிடைக்கவில்லை. திரேத யுகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது சிவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்கத்தாலான லங்கா என்கிற அரண்மனையைக் கட்டுவித்திருக்கிறார். அதன் கிரஹப்பிரவேசத்திற்கு வந்திருந்த ராவணன் அரண்மனையின் அழகைப் பார்த்து வியந்து கிடந்திருக்கிறான். அந்நேரம் பார்த்து சிவனானப்பட்டவர் ராவணனிடம் ‘வேண்டியதைக் கேள்’ என்று தெரியாத்தனமாக கூறிவிட, ராவணனோ இதுதான் சாக்கென்று  அரண்மனையையே கேட்டிருக்கிறான். வேறுவழியின்றி சிவனும் கொடுத்துவிட வேண்டியதாயிற்று. பின்னாளில், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதை அங்குதான் தன் காலத்தைக் கழித்தாள்.  

இவையன்றி விஸ்வகர்மா, துவாபர யுகத்தில் மதுராவில் பிறந்து அங்கிருந்து புலம்பெயர்ந்து குஜராத் வந்து சேர்ந்த கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க துவாரகா என்கிற நகரை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். சமுத்திரதேவனால் தானமளிக்கப்பட்ட 12 யோஜனை பரப்பளவில் (776 சதுர கி.மீ) அமைக்கப்பட்ட அந்நகரத்தின் அழகையும் விஸ்வகர்மாவின் கட்டுமான நுட்பங்களையும் காண விரும்புகிறவர்கள் அரபிக்கடலுக்கடியில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படியே கலியுகத்திற்கு வந்தோமானால், விஸ்வகர்மா பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமாக ஹஸ்தினாபுரம் என்கிற நகரை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் பங்காளிச்சண்டையினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பாண்டவர்கள் தமக்கென தானமாகப் பெற்ற இடத்தில் ஒரு தலைநகரை நிர்மாணித்துக் கொடுக்குமாறு விஸ்வகர்மாவிடம் வேண்டியுள்ளனர். அப்போது அவர் நிர்மாணித்த நகரம்தான் இந்திரபிரஸ்தா. அதாவது ஆரியக்கடவுளான இந்திரனின் நகரம். விஸ்வகர்மாவின் கட்டிடக் கலை நுட்பம் மற்றும் அழகுணர்வின் உச்சம் என்று போற்றப்படுமளவுக்கு அங்கு பளிங்குக்கற்களை இழைத்திழைத்துக் கட்டிய அரண்மனைக்கு வந்த துரியோதனன், தரை எது தண்ணீர் எது என்று பகுத்துணர முடியாத குழப்பத்தில் தவறிப்போய் குளத்தில் விழுந்துவிடுகிறான். இதுகண்டு பாண்டவர்களின் மனைவி திரௌபதி கெக்கலியிட்டு கேலியாக சிரித்துவிட்டதில் அவமானப்பட்டுப் போன துரியோதனனுக்கு குருஷேத்திரப் போரை நடத்துவதற்கு அதுவே போதுமான காரணமாகிப் போனது. இப்பேர்க்கொத்த விஸ்வகர்மாவின் பரம்பரையில் வந்தவர்கள் என நம்புவோரிடம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டித்தரும் பொறுப்பை  ஒப்படைக்காமல், டாடாவுக்கு சில ஆயிரம் கோடிகளைத் தூக்கிக் கொடுத்தவர் தான் பிரதமர் மோடி என்று கவனத்தில் வையுங்கள்.

நகரங்களையும் கட்டிடங்களையும் நிர்மாணிப்பவராக மட்டுமன்றி தேர்களையும் போர்க் கருவிகளையும் வடிவமைத்து உருவாக்குவதிலும் வல்லவர் என விஸ்வகர்மா காட்டப் படுகிறார். அவர் சிவனுக்கென்று ஒன்றும் விஷ்ணுவுக்கென்று ஒன்றுமாக இரண்டு தெய்வீக விற்களைச் செய்திருக்கிறார். ஜனகன் வசமிருந்த சிவனின் வில்லை ராமன் ஒடித்துவிட்டதை அறிந்த பரசுராமன், தன்னிடமுள்ள விஷ்ணு வில்லை உடைத்துக் காட்டும்படி ராமனை அழைத்ததுடன் அவ்வாறு உடைத்துவிட்டால் ஒற்றைக்கு ஒற்றையாய் ராமனுடன் போரிடத் தயார் என்றும் அறிவித்தான் என்கிற குறிப்பு விஸ்வ கர்மாவின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. (பார்க்க: அம்பேத்கர் நூல்தொகுதி 8, பக்:99) 

இப்படி ஆரியக்கதைகள் நெடுகிலும் வந்து தமக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்த ஒருவரை விஸ்வகர்மா - உலகத்திற்கானவற்றை உருவாக்குபவர் என்று ஆரியர்கள் கொண்டாடினர். அந்த ஆரியக்கருத்தியலின் வழித்தோன்றல்கள் ‘உலகத்திற்கு ஏதேனுமொன்றை படைத்தளிக்கும் எவரொருவரும் தம்மை விஸ்வ கர்மாவின் ஒரு பகுதியாக உணரவேண்டும்’ என்று வாதிடுகின்றனர். தொழிலாளர் தினம் என்று மே ஒன்றாம் தேதியைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, விஸ்வகர்மாவின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியைக் கொண்டாட வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு. 4320000 வருடங்களுக்கு முன்பிருந்து கன்ஸ்டரக்ஷன் ஒர்க் செய்துவரும் ஒருவருக்கு இப்போது எப்படி பிறந்தநாளைக் கண்டுபிடித்தார்கள் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, அந்த நாளில் எடக்குமடக்காக எதையாவது செய்வது அவர்களது வாடிக்கையாக உள்ளது. அந்தவகையில் இந்த 2023 செப்டம்பர் 17 அன்று பாஜக ஒன்றிய அரசு 13000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் விஸ்வகர்மா யோஜனா என்கிற திட்டமொன்றை மிகுந்த ஆரவாரத்துடன் அறிவித்துள்ளது. அதேநாளில்தான் பிரதமர் மோடியும் பிறந்தார் எனச் சொல்லப்படுவது எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. 

விஸ்வகர்மா யோஜனா திட்டம் தன்னளவில் தனித்த ஒன்றாக வெளித்தோற்றத்திற்குத் தெரிந்தாலும் உண்மையில் அது குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் 2016, மற்றும் தேசிய கல்விக்கொள்கை 2020 ஆகியவற்றுடன் உள்ளிழையாக பிணைக்கப்பட்டுள்ளது. விளையாடவும் படிக்கவும் உடல் மற்றும் மனரீதியாக வளரவும் உரிமையுடைய பருவத்தில் இருக்கின்ற இந்தியாவின் குழந்தைகளை மோடி அரசு யாராக வளர்த்தெடுக்க விரும்புகிறது என்பதை அறிய விரும்புகிற எவரொருவரும் இம்மூன்று விசயங்களும் எவ்வாறு ஒன்றுடனொன்று வலுவாக  தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டியுள்ளது. 

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5-9 வயதுக்குட்பட்ட 11,08,808 குழந்தைகள் முழு நேரத் தொழிலாளர்களாகவும் 14,24,830 குழந்தைகள் பகுதிநேரத் தொழிலாளர்களாகவும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்றும் 9-14 வயதுக்குட்பட்ட 32,44,439 குழந்தைகள் முழுநேர தொழிலாளர்களாகவும் 43,50,586 குழந்தைகள் பகுதிநேரத் தொழிலாளர்களாகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உண்மை நிலவரம் இந்தப் புள்ளிவிவரங்களை விடவும் பன்மடங்குக் கூடுதலாக இருப்பதற்கே வாய்ப்பதிகம். இந்த அவலநிலையை மாற்றும் என்று ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் 2016 தன் பங்கிற்கு மேலும் பல கோடி குழந்தைகளைத் தொழிலாளர்களாக நெட்டித் தள்ளும் தந்திரத்துடன் வந்து சேர்ந்தது. இது, இதற்கு முந்தைய 1986ஆம் ஆண்டு சட்டம் குழந்தைகளுக்கு வழங்கியிருந்த பல சட்டப்பாதுகாப்புகளையும் ஒழித்துக்கட்டியுள்ளது என்று கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

* குடும்பத்தினர் (கேடுவிளைவிக்காத) தமது தொழிலிலும் வணிகத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம் என்று முந்தைய சட்டத்தைப் போலவே கூறும் இப்புதிய சட்டம் குடும்பம் என்பதற்கு மறுவரையறையை முன்வைக்கிறது. அதாவது குழந்தை, அதன் தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், தாயின் சகோதரர்கள் சகோதரிகள், தந்தையின் சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரைக் கொண்டதுதான் குடும்பம் என்கிறது. ஆகவே இவர்களில் யார்  ஒரு குழந்தையை உழைப்பில் ஈடுபடுத்தினாலும் அது குற்றமில்லை என்கிறது இச்சட்டம். இதன்படி, ஒரு நிறுவனம் நேரடியாக குழந்தையை வேலைக்கமர்த்தினால் தான் குற்றம்; அதே வேலையை குடும்பத்தவர் யாரிடமாவது கொடுத்து  அவர்கள் தமது குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொண்டால் அதற்கு நிறுவனம் பொறுப்பில்லை. ஏற்கனவே பீடி சுற்றுதல், செங்கல் சூளை போன்ற முறைசாரா தொழில்கள் பலவற்றிலும் இவ்வாறு ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு இந்தத் திருத்தம் பயன்படும்.  

* 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் குழந்தைகள் என்று சிறார் நீதிச்சட்டம் சொல்லும் நிலையில் அதற்கிசைவாக 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் என்று குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டமும் திருத்தப்படுவதே ஏற்படையதாகும். ஆனால், புதிய சட்டம் 14வயதுக்கு கீழுள்ளவர்களை மட்டுமே குழந்தைகள் என்று வரையறுக்கிறது. ஆனால் அந்தக் குழந்தைகளை குடும்பத்தின் பாரம்பரியத் தொழில்களில்  வேலைக்கு அமர்த்திக்கொள்வதைத் தடுப்பதற்கு செயல்பூர்வமான அணுகுமுறை எதையும் இச்சட்டம் கொண்டிருக்கவில்லை. மேலும் இவ்வகையான குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் அடிநிலைச்சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களது குடும்பத்திற்குரிய பாரம்பரியத் தொழில்கள் என்பவை சமூக இழிவுடனும் சாதிய ஒடுக்குமுறையுடனும் இணைக்கப் பட்டவையாகவே இருக்கின்றன.    

* 14 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பதின்பருவத்தினர் என்று வகைப்படுத்தும் புதிய சட்டம், அவர்கள் 18 வயதைக் கடக்கும் வரையிலும்கூட காத்திருக்கும் பொறுமையின்றி அவர்களின் உழைப்பை 14 வயது முடிந்ததிலிருந்தே உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்கிறது. 

* கேடு விளைவிக்கக்கூடிய 18 வகையான உற்பத்தித்தொழில்களிலும் 65 வகையான பதப்படுத்தும் தொழில்களிலும் 15-18 வயதினரை பயன்படுத்தக்கூடாது என்று குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986, தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் 1987 (திருத்தப்பட்டது) ஆகியவை தடுத்திருந்தன. ஆனால் குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 2016, கேடு விளைவிக்கக்கூடிய தொழில்களின் பட்டியலை சுரங்கம், வெடிமருந்து தொடர்பான வேலைகள் மற்றும் தொழிற்சாலை விதிகள் 1948ல் ஆபத்தானவை என்று பட்டியலிடப்பட்டுள்ள பதப்படுத்தும் வேலைகள் என்று மூன்றாகச் சுருக்கிவிட்டது. இதன் மூலம் மற்றெல்லா வேலைகளிலும் பதின்பருவத்தினரை அமர்த்திக் கொள்ள முடியும். 

5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளாயினும், 9-14 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினராயினும் முழுநேரமாகவோ பகுதிநேரமாகவோ ஒரு வேலையில் அமர்த்தப்படும்போது அவர்கள் கல்வி கற்பதிலிருந்தும் குழந்தைப் பருவத்திற்கேயுரிய மற்ற செயல்பாடுகளிலிருந்தும்  முற்றாகவோ  மாறுபட்ட அளவுடனோ விலக்கப்படுகிறார்கள். ஆரம்பக்கல்வியில் சேரும் 100 மாணவர்களில் 33 பேர்தான் மேல்நிலைக்கல்விக்கு வந்து சேருகிறார்கள். மீதி 67 பேரை உழைப்புச்சந்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது.  2016-17ல் எடுக்கப்பட்ட இன்னொரு கணக்கின்படி, 6-17 வயது வரையான 3.22 கோடி குழந்தைகள் பள்ளிகளிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உழைப்புச்சந்தைக்குச் செல்வதன்றி வேறென்ன வழி? இந்தக் கொடூரச்சுரண்டலை பாரம்பரியத் தொழிலை பழகுதல், குடும்பத்திற்கு ஒத்தாசையாக வேலை செய்தல் எனப் பசப்பி தீவிரப்படுத்துகிறது குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 2016. 

***

இப்போது 2020 தேசிய கல்விக்கொள்கைக்கு வருவோம். அதன்படி ஒரு மாணவர் 3, 5, 8ஆம் வகுப்புகளில் ஒவ்வொரு பொதுத்தேர்வையும் 9-12 ஆம் வகுப்புகளில் 8 பொதுத் தேர்வுகளையும் அதாவது, 11 பொதுத்தேர்வுகளை எழுதியாக வேண்டும் என்கிறது. இதற்கும் மேலே பட்டம் படிப்பதெனில் அதற்கென தனியே தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை எழுதியாக வேண்டும். இத்தனைத் தேர்வுகளுக்கும் ஈடுகொடுத்து தேறிவருவதற்கு கற்கும் ஆர்வமும் திறனும் மட்டுமே போதுமானவையல்ல. கற்பதற்கு கிளம்பும் சூழல் சமமாக இல்லாத இச்சமூகத்தில் கற்றல் வாய்ப்பையும் தேர்வுகளையும் மட்டும் சமமாக கொடுப்பதனால் பெரும்பயன் விளைந்து விடாது. இடையறாத பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு பதற்றத்தையும் மன அழுத்தத்தையுமே உருவாக்கும். முன்பைக் காட்டிலும் இடைநிற்றல் அதிகரிக்கும். முறையான கல்வி பெறாமல் பள்ளிகளிலிருந்து வெளியேறுகிறவர்கள் தமது குடும்பத்தின் பாரம்பரிய வேலைகளில் அல்லது வேறு முறைசாரா தொழில்களில் போய்ச் சேர்வதன்றி வேறென்ன செய்யமுடியும்? 

இதன்றி, 6ஆம் வகுப்பிலிருந்தே பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக தொழிற்கல்வி முன்னிறுத்தப் படுகிறது. அதுபற்றி கொள்கையின் 4 மற்றும் 16ஆம் இயல்கள் விரிவாக பேசுகின்றன. மாணவர் ஒவ்வொருவரும் 6-8ஆம் வகுப்புகளின்போது 10நாட்கள் புத்தகப் பையில்லாமல் செல்வார்கள். இந்நாட்களில் அவர்கள் உள்ளூரிலுள்ள செய்தொழில் சார்ந்து - தச்சர்கள், தோட்டக்காரர்கள், குயவர்கள், கைவினைக் கலைஞர்கள்  போன்ற உள்ளூர்ச் செய்தொழில் வல்லுநர்களிடம் குரு சிஷ்ய முறையில் தச்சுவேலை, உலோக வேலை, தோட்ட வேலை, மட்பாண்ட வேலை, மின்சாதனங்கள் தொடர்பான வேலைகள் உள்ளிட்டவற்றை கற்றுக் கொண்டாகவேண்டும். இந்தச் சாதிய சமூகத்தில் இயல்பாகவே மாணவர்கள் என்ன தொழிலைக் கற்க விரும்புவார்கள் அல்லது வல்லுநர்கள் யாருக்கு எதை கற்றுத்தர முன்வருவார்கள்? சரி அப்படித்தான் என்ன தொழிலைக் கற்றுத்தந்து விடுவார்கள் என்று அறிய விரும்புகிறவர்கள் இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2021-2022 ஆண்டறிக்கையில் Vocational Education Programmes 1. Reimagining Vocational Education as per NEP2020 என்ற தலைப்பின் கீழுள்ள பகுதியை படித்துப்பார்க்கவும். பூத்தையல் (எம்ப்ராய்டரி), கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்தல், தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, சிகையலங்காரம், அழகுபடுத்தும் கலை, தையல், யோகா, கணினிப் பயிற்சி என்று நீள்கிறது இந்தப் பட்டியல். முறைசாரா அல்லது திறந்தநிலைப்பள்ளிகளில் நடக்கும் இந்தப் பயிற்சிகள் பள்ளிகளுக்குள் முறைசார் கல்வியாக கொண்டு வரப்படுகிறது. பாஜக பரிந்துரைக்கும் புகழ்பெற்ற வேலைவாய்ப்பான “பக்கோடா” போடும் வேலையை இந்தப் பயிற்சியில் ஏன் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை. 

9-12ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு வெவ்வேறு தொழில்களைப் பற்றிய அறிமுகத்துடன், அவர்கள் தேர்வுசெய்யும் தொழிலில் நிபுணத்துவத்திறனை அடைவதற்குரிய உதவிகள் செய்யப்படுமாம். ஆனால் மாணவர் தெரிவு செய்யும் தொழில் உள்ளூரில் இருக்கக்கூடிய தொழில்களில் ஒன்றாக இருக்கவேண்டும். 12ஆம் வகுப்பை நிறைவுசெய்த பின் அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்று கல்விக்கொள்கை முடிக்கும் இடத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்குகிறது. செய்தொழில் ஒன்றை ஆறாம் வகுப்பிலிருந்தே பழக்கி அதன்வழியே வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஒருபகுதி மாணவர்களை உயர்கல்விக்குச் செல்லாமல் பாரம்பரிய அல்லது உள்ளூர்த் தொழிலுக்குத் திருப்பிவிடும் பொறுப்பை கல்விக்கொள்கை ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு வருபவர்களை பாரம்பரியத் தொழிலைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்திவிடாதபடி இழுத்துப்போடும் பொறுப்பை விஸ்வகர்மா யோஜனா பார்த்துக் கொள்கிறது. 

மண், மரம், தங்கம் மற்றும் வெள்ளி, இரும்பு மற்றும் உலோகங்கள், தோல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், பாய்முடைதல், கயிறு திரித்தல் ஆகியவை சார்ந்த 18 வகையான பாரம்பரியத் தொழில்கள் முதற்கட்டமாக விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி தச்சர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர், பூட்டு தயாரிப்பவர், பொற்கொல்லர், குயவர், சிற்பி ( சிலை வடிப்பவர், கல் தச்சர், கல் உடைப்பவர்), காலணி தைப்பவர் (காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்), கொத்தனார், கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு திரிப்பவர், பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்), முடி திருத்தும் தொழிலாளி, பூமாலை தொடுப்பவர், சலவைத் தொழிலாளி, தையல்காரர் மற்றும் மீன்பிடி வலை தயாரிப்பவர் ஆகியோர் தமது தொழிலை பாரம்பரியமாக - குடும்பரீதியான சுய தொழிலாக - முறைசாரா வகையில்- கைகள் மற்றும் கருவிகளால் செய்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் அனைவரையும்  பி.எம்.விஸ்வகர்மாக்கள் என்று வகைப்படுத்தி புகழ்கிறது இத்திட்டம். அதாவது இவர்கள் ஒரிஜினல் விஸ்வகர்மாக்கள் இல்லை, பிரதமரின் விஸ்வகர்மாக்கள். விஸ்வகர்மா என்கிற பெயரில் உள்ள சாதியினர் ஒன்றிய அரசின் இந்தப் புதிய வகைப்படுத்தலை ஏற்கிறார்களா என்று தெரியவில்லை.  

பி.எம்.விஸ்வகர்மாக்கள் திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன், மனைவி திருமணமாகாத-18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ஆகியாரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் 18 வயது நிரம்பிய ஒருவர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பயனாளியாக தன்னை பதிவுசெய்துகொள்ள தகுதி படைத்தவராகிறார். அவருக்கு பி.எம். விஸ்வகர்மா என்கிற சான்றிதழும் அடையாள அட்டையும் தரப்படும். அவற்றைக் கொண்டு அவர்கள் இந்தத் திட்டத்தின் பயன்களை அடையலாம். பயன்கள் என்றால் ஏதோ அதானிக்கும் அம்பானிக்கும் தூக்கிக்கொடுப்பது போல கொடுப்பார்களாக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். முதற்கட்டமாக அவர்களது தொழிற்திறனை மதிப்பிட்டு அதற்கேற்ப 5-7 நாட்களில் 40 மணிநேர அடிப்படைப் பயிற்சி தரப்படும். இந்தப் பயிற்சி இத்தொழிலில் வல்லுநர்களாக உள்ளவர்களால் குரு - சிஷ்ய முறையில் வழங்கப்படும். (தேசிய கல்விக்கொள்கையில் சொல்லப்படுகிற அதே குரு-சிஷ்ய முறை). இப்பயிற்சியின் முடிவில் 5-8% வட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்கப்படும். கடனை 18 மாதங்களில் திருப்பிச் செலுத்தவேண்டும். இதற்கு அடுத்த நிலையில் தொழிலை நவீனப்படுத்துவது, விரிவுபடுத்துவது, சந்தைப்படுத்துவது ஆகியவற்றுக்கான பாடங்களுடன் 15 நாட்களில் 120 மணி நேரத்திற்குரிய மேம்பட்ட பயிற்சியும்,  பயிற்சியின் முடிவில் ரூ.2 லட்சம் கடனும் வழங்கப்படும். 30 மாதங்களில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். இரண்டு பயிற்சிகளின் போதும் நாளொன்றுக்கு ரூ.500 மதிப்பூதியமாக வழங்கப்படும். விமான நிலையங்களைப் பராமரிப்பதில் எவ்வித அனுபவமும் இல்லாத அதானியிடம் ஆறு விமான நிலையங்களையும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் வாரிக் கொடுத்த மோடி அரசு, அடித்தள மக்கள் பரம்பரையாக செய்துவரும் தொழிலில் அவர்களுக்கே பயிற்சி கொடுக்கப்போவதாக அலட்டுகிறது. வெறும் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு ஊருலகத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறது. 

இதுபோன்ற பயிற்சிகள், கடன்கள் மற்றும் மானியங்களை ஏற்கனவே உள்ள நுண் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வேறு நிதிநிறுவனங்கள் மூலமாகவோ கொடுத்து விட முடியும். ஆனால் அப்படி அறிவித்தால் யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்று பெயரளவிலேனும் ஏற்றுக் கொண்டதாகிவிடும். பார்ப்பனீயத்தின்படி சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யத்துடிக்கும் மோடி அரசு இதை எப்படி சகித்துக்கொள்ளும்? எனவேதான் இன்னின்ன சாதியினர் இன்னின்ன தொழிலைத்தான் பரம்பரையாகச் செய்யவேண்டும் என்று 1950களில் ராஜாஜி குலக்கல்வி திட்டத்தின் மூலம் திணிக்கப் பார்த்ததை, விஸ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் திரும்பவும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

 விஸ்வகர்மா யோஜனாவின் பயனாளி என 18 வயது நிரம்பிய ஒருவர் வருகிறாரே, அவர் யார்? அவர் பள்ளிக்கூடத்தையே எட்டிப்பார்க்காதவராகவோ அல்லது கல்வியைத் தொடரமுடியாமல் இடைநின்றவராகவோ தான் இருக்கமுடியும். அவரது ஆளுமைப் பண்புகள் திறன்கள் ஆர்வங்கள் புறந்தள்ளப்பட்டு அவரை அவரது குலத்தொழிலுக்குள் தள்ளி நிரந்தரப்படுத்த வழிகோலுகிறது இந்தத் திட்டம். ஒருவேளை அவர் படித்துக் கொண்டிருப்பவரானால் 18 வயது என்பது அவர் 12ஆம்வகுப்பு முடிந்து உயர் கல்விக்காக கல்லூரிக்கு நுழையவேண்டிய வயது அது. ஆனால் அவர் திசை திருப்பப்பட்டு பாரம்பரியத் தொழில்சார் பயிற்சி, பயிற்சி நாட்களுக்கு மதிப்பூதியம், பயிற்சிக்குப் பிறகு கடன், சுயதொழில் என்று உயர்கல்விக்குச் செல்லாமல் குலத்தொழிலுக்கு விரட்டப்படுகிறார். நவீன கல்வி, நவீனத் தொழில், நவீன வாழ்க்கை முறை என்று தற்காலத்திற்குள் வாழ விரும்புவோரை வழிமறிக்கும் விஸ்வகர்மா யோஜனாவை எதிர்த்துப் போராடி வீழ்த்துவதைத் தவிர நம் இருப்புக்கு என்ன நியாயம் இருக்கிறது? 

ஆதாரங்கள்:

https://www.right-to-education.org/blog/one-step-forward-two-steps-back-amendments-child-labour-legislation-india 

Flawed Child Labour Law Amendment - Komal Ganotra, EPW 2017 Aug 27 

https://pmvishwakarma.gov.in/FileHandling/GetPdf/MiscFiles%5Ceng_28.0_PM_Vishwakarma _Guidelines_final.pdf 

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/nep_achievement.pdf 

«îCò è™M‚ªè£œ¬è 2020 

கல்வியைத் தேடி: தேசியவாதக் கல்வி - எதிர் சமுதாய உந்துவிசைக் கல்வி - லெ. ஜவகர்நேசன்

தமிழில்: கமலாலயன், பாரதி புத்தகாலயம் வெளியீடு


நன்றி: நீலம் நவம்பர் 2023 இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...