திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 14

மக்களின் சம்மதமே அரசின் அதிகார எல்லை - ஆதவன் தீட்சண்யா

 நீலம் ஆசிரிய குழுவினருடனான உரையாடலில் வந்த கேள்விகளும் நானளித்த பதில்களும்

1.   ஒரு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு முன் அது குறித்து கருத்துக் கேட்பதுதானே ஜனநாயகத்தன்மை. ஆனால், அப்படிச் செய்யாதது கூட்டணிக் கட்சியினர் உட்பட மக்கள் பிரதிநிதிகளை உதாசீனப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?

ஒரு சட்டத்திருத்தம் நாளை முன்மொழியப்படுவதாக இருந்தால் அதுபற்றிய சுருக்கமான குறிப்பினை இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குகிற பொதுவான  நடைமுறை 12மணிநேர வேலை நாள் சட்டத்திருத்த முன்வரைவு விசயத்திலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பை படித்துப் பார்த்து தெரிந்துகொண்டுதான் சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்டத்திருத்தத்தை முன்மொழிய வேண்டாம், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு முதலமைச்சரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் வேல்முருகனும் முதல்வரிடம் கோரியிருக்கிறார். முதல்வர் உறுதியளித்தற்கு மாறாக சட்டத்திருத்தம் முன்மொழியப்பட்டதே கண்டனத்திற்குரியது. முன்மொழியப்பட்டுவிட்ட நிலையில் அந்தத் திருத்தத்தின் மீது விவாதம் தேவை என்று உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்து குரல் வாக்கெடுப்பின் (ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க) மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி அவையில் தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக விவாதமே இன்றி சட்டங்களையோ திருத்தங்களையோ நிறைவேற்றுவதானது சட்டமன்ற ஜனநாயகத்திற்குப் புறம்பானது.

“அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதர்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனிமனிதருக்குள்ள சுதந்திரமாகும். வாழ்வுரிமை, சுதந்திரம், இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்றமுடியாத உரிமைகளை தனிமனிதருக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்காகவென்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ  அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெறுகிறது. எனவே ஆளப்படுவோரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்கவேண்டும்…” என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லியிருப்பதை ஆட்சியாளர்கள் பின்பற்றும்பட்சத்தில் இந்தச் சட்டத்திருத்தம் பற்றி பொதுவிவாதத்தை நடத்தியிருப்பார்கள். குறைந்தபட்சம் கூட்டணிக்கட்சிகளுடனாவது பேசியிருப்பார்கள்.  

2.   எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்த திமுக அரசே தொழிலாளர் வர்க்கத்திற்குத் துரோகம் செய்துள்ளது. இந்நிலையில், பாஜகவுக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?

பாஜகவையும் திமுகவையும் சமன்படுத்திப் பார்க்க முடியாது, கூடாது. அதுவும் இதுவும் எதுவும் சரியில்லை என்று எல்லோரையும் குத்தம் சொல்லிக் கொண்டிருப்பதையே மகத்தான அரசியல்பணி என்று திரிகிறவர்கள் கிளப்பிவிடுகிற  இதுபோன்ற வாதங்களை நாம் நிராகரிக்க வேண்டும். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற அரசியல் செயல்திட்டமும் அதை அடைவதற்கான வழிமுறைகளும் கொண்டவர்கள் சொந்த மதிப்பீடுகளை கைக்கொள்ள வேண்டும். தூய்மைவாதம் பேசி எல்லோரையும் சனாதனிகளாகிய எதிரிகளின் பக்கம் தள்ளிவிடுவது நமது நோக்கங்களுக்கு ஊறு விளைவிப்பதாகும்.   

யோகி ஆதித்யநாத் பதவியேற்றதும் 20 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள் மட்டுமே என்னுடைய அரசில் பணியாற்றலாம் என்று அறிவித்தபோது அதன் நடைமுறைச் சாத்தியம், அறிவியல்தன்மை போன்ற எதுவுமே விவாதத்திற்குள்ளாக்கப்படவில்லை.  ஊடகங்கள் அந்த அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதான  தோற்றத்தைக் கட்டமைக்க முயன்றன. (பார்க்க: காமிய தேசத்தில் ஒருநாள் என்கிற என்னுடைய சிறுகதை). இதே சட்டத்திருத்தத்தை  ஒன்றிய அரசும் பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவும் நிறைவேற்றிய போது அது இடதுசாரி தொழிற்சங்கங்கள் சிலவற்றின் பிரச்னையாக குறுக்கிப் பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னை பெரும் கொந்தளிப்பை உருவாக்கியதை வரவேற்கத்தகுந்த அரசியல் முதிர்ச்சியாகப் பார்க்கவேண்டும். இந்த முதிர்ச்சி ஏன் அந்த இந்த விசயத்தில் வெளிப்படவில்லை என்று நொட்டை சொல்லிக்கொண்டிருக்காமல் இதை பரவலாக – வளர்த்தெடுப்பது அவசியம். (திமுகவின் இணையச் செயல்பாட்டாளர்கள் சிலர் மொன்னை விசுவாசத்தைக் காட்ட செய்த முயற்சிகூட அவ்வளவாக எடுபடவில்லை).      

தமிழ்நாட்டில் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியதும் வறட்டு கெளரவம் பார்க்காமல் உடனடியாக அமைச்சர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மே 2ஆம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்காக கூட காத்திருக்காமல் பேச்சுவார்த்தை நடந்த அன்றே சட்டத்திருத்தத்தின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஜனநாயகப்பண்பை கடந்த எட்டாண்டுகளில் பாஜக எந்த விசயத்திலாவது வெளிப்படுத்தியுள்ளதா? விமர்சனம் அல்லது மாற்றுக் கருத்து சொல்பவர்களை அர்பன் நக்சல், ஆண்ட்டி இந்தியன், தேசவிரோதி, இன்டலக்சுவல் ஜிகாத், அகடமிக் ஜிகாத் என்று அவதூறு செய்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்புப்படை, சிபிஐ போன்ற தன் சட்டப்பூர்வ அடியாள் பட்டாளங்களையும் சட்டவிரோத அடியாள் பட்டாளமான சங்பரிவார கும்பலையும் ஏவி ஆளை நசுக்கும் பாஜக உலக நாடாளுமன்ற வரலாற்றுக்கு நேர்ந்த களங்கம். நேற்றுவரை அவர்களுக்கு இணக்கமாக இருந்த ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மீதான ஒடுக்குமுறை புத்தம்புதிய சான்று. விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியுதவி செய்ததை குற்றமாக கருதி, நூற்றாண்டுகால பாரம்பரியமுள்ள அஞ்சல் தொழிற்சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்துசெய்திருக்கிறது பாஜக அரசுடன் திமுக அரசை எப்படி சமன்செய்து ஒப்பிட முடியும்?       

 3.   ஒருநாளின் மூன்றில் ஒருபகுதியை வேலைக்கு ஒதுக்குகிறோம். அதிலேயே உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல் எனப் பல ஒடுக்குமுறைகள் அரங்கேறுகின்றன. இந்நிலையில் ஒருநாளின் இரண்டில் ஒரு பகுதி வேலை என்ற நிலை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்?

விலங்குகள் கூட தமது சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்யவைக்கும் போது முரண்டு பிடித்து மறுத்துவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ பார்க்கமுடியாதபடி தொழிலாளிகள் ஆலைகளுக்குள் அடைத்துவைக்கப்பட்டு அவர்களது ரத்தமும் வியர்வையும் உறிஞ்சிப்பட்டன.  தொடக்ககால  முதலாளித்துவத்தின் இந்தக் கொடூர குணம் இன்றளவும் நீடிக்கிறது. குறைந்தபட்சம் இடையறாத உழைப்பில் ஈடுபடுவதால் இழக்கும் ஆற்றலை திரும்பப் பெறுவதற்கான அவகாசத்தைக்கூட தொழிலாளிகளுக்கு வழங்க மறுப்பதன் மூலம் அவர்களை மனித நிலையிலிருந்து தாழ்த்தி இயந்திரநிலைக்குள் பொருத்த முனைகிறது முதலாளித்துவம். கடைநிலை ஊழியர் தொட்டு கணினித் தொழில்நுட்ப ஊழியர் வரை இந்தச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால் பணியிடத்திற்கு அப்பால் ஓர் உலகம் இருப்பதையே அறிய முடியாதவர்களாக அறிந்தும் துய்க்க முடியாதவர்களாக ஆளுமைக் குறுக்கத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கான தனிவிருப்பங்கள், குடும்பவாழ்வு, சமூக  ஒன்றுகூடல் போன்றவற்றில் பங்கெடுக்காமலும், அரசை மாற்றுவதிலும் உருவாக்குவதிலும் பங்கெடுக்காமலும் உள்ளொடுங்கியும்  ஒருகட்டத்தில் இவற்றில் நாட்டமற்றவர்களாகவும் மாறிப்போவார்கள். கிடைக்கும் சொற்பநேரத்தில் அசதியைப் போக்கிக் கொள்வதற்கான எளிய வழிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதே போதுமென்ற நிலை உருவாகும்.  

4.   வேலைக்கான ஊதியம் என்பதிலேயே இங்கு பாகுபாடு நிலவுகிறது. கடும் உழைப்பாளி, திறன் உழைப்பாளி என்று பிரிவினை வர்க்கப் படிநிலைகளை உருவாக்குகிறது. இந்நிலையில், 12 மணி நேர வேலை எம்மாதிரியான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்?

ஒரு தொழில் நிறுவனத்தின் மொத்தத்  தொழிலாளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் தேவையற்றவர்கள் என்ற நிலை உருவாகும். மூன்று ஷிப்டுகளுக்கான தொழிலாளர்களில் எடுத்தயெடுப்பில் ஒரு ஷிப்ட் தொழிலாளிகள் தேவைப்படாதவர்களாக ஆக்கப்படுவார்கள். இவர்களை வெளியே அனுப்ப விருப்ப ஓய்வு என்கிற பெயரில் கட்டாய வெளியேற்றத்தை நிர்வாகங்கள் கைக்கொள்ளும்.  ஏற்கனவே உள்ள வேலையின்மையை இது மேலும் அதிகரிக்கச் செய்யும். வேலையின்மை அதிகரிக்கும்போது, உழைப்புச்சந்தையில் தொழிலாளர்கள் மலிவான விலைக்குக் கிடைப்பார்கள். இவர்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளார்களின் ஊதியம் உள்ளிட்ட பணப்பயன்கள், உடல்/மனநலம் சார்ந்த உரிமைகள் பறிக்கப்படும். சமூகத்தின் பெரும்பகுதியாகிய உழைக்கும் மக்கள் மனநிறைவற்ற ஒரு வாழ்க்கை முறைக்குள் மேலும் தீவிரமாக தள்ளப்படுவார்கள்.

5.   இந்தியாவில் ஏற்கெனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழிற்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்.

தொழிலாளர் நல விதிகள், பணிப்பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதிய மாற்றம், லாபத்தில் பங்கு, கண்ணியமான பணியிடச் சூழல் போன்றவை முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டிய அரசே நடத்தும் நிறுவனங்களில்கூட முறையாக அமலாவதில்லை. எனில் தனியார் நிறுவனங்களிலோ அல்லது எவ்வித கூட்டுபேரச் சக்தியுமற்ற முறைசாரா தொழில்களிலோ இவையெல்லாம் எப்படி கிடைக்கும்? நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழில்களில் உள்ளவர்கள் வெறும் 6 சதவீதத்தினர் மட்டுமே. எஞ்சிய 94% தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில்தான் உள்ளனர். இவர்களை அணிதிரட்டுவதும், அணிதிரட்டப்படாத நிலையிலேயே கூட கண்ணியத்துடன் வாழ்வதற்கான சட்டப் பாதுகாப்பை உருவாக்குவதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம்.   சட்டவிரோதமாக ஒரு துறையிலோ அல்லது நிறுவனத்திலோ 12 மணிநேரம் வேலைநாளாக இருக்கிறதென்றால் அங்கு 8 மணிநேர வேலைநாளை உறுதிசெய்வதுதான் அரசின் பொறுப்பாக இருக்கமுடியும். அதல்லாமல், ஒரு சுரண்டலை நியாயப்படுத்தி எல்லோரையும் அந்த விஷச்சூழலுக்குள் தள்ளக்கூடாது.   

பார்ப்பனீயம், முதலாளியம் என்கிற இரண்டு எதிரிகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், தொழிலாளர்கள் தமது நலன்களைப் பாதுகாக்கும் ஓர் அரசை நிறுவிக்கொள்ளும் அளவுக்கு அரசியலில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்றும் அண்ணல் சொல்லிச் சென்ற வரிகளில் தான் இதற்கான தீர்வு இருப்பதாக கருதுகிறேன். அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு என்று மார்க்ஸ் சொன்னதன் பொருளும் இதுதான். ஆனால் இந்த மேற்கோள்களை கொட்டை எழுத்தில் போடுவதாலோ தொண்டை நரம்பு புடைக்க ஆவேசமாக முழங்குவதாலோ எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. கற்பி, போராடு, ஒன்றுசேர் எனும் சொற்களின் உள்ளார்ந்த பொருளை விளங்கிக்கொண்டு செயல்படுவதில் தான் மாற்றத்தை இழுத்துவர முடியும்.

நீலம், 2023 ஜூன் இதழ்

திங்கள், ஏப்ரல் 24

சூரியனையே பார்க்கமுடியாதபடி செய்துவிடாதீர் - ஆதவன் தீட்சண்யா

தமிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களது வேலைநேரத்தை 8மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஏப் 21 அன்று திமுக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அன்றைக்கு காலை சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி போன்ற தோழர்கள் முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டாமென்றும், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சரும் சம்மதித்திருந்த நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடமிருந்தும் தோழமைக்கட்சியினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தச் சட்டத்திருத்தம் பற்றி இன்று தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப் போவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வந்து அரசுடன் கலந்துபேசியதை மட்டும் வைத்துக்கொண்டு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப்போவதாக அறிவித்திருப்பதானது மிகவும் காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற நடவடிக்கை. எதிர்ப்புக்கு செவிமடுக்கிற ஜனநாயகப்பண்பு இந்த அரசிடம் எந்தளவுக்கு உள்ளது என்பதற்கு இந்த அழைப்பை ஓர் அளவுகோலாக கருதமுடியாது. அது பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தது.  

 முதலீட்டாளர்களுக்கு அரசு கொட்டிக்கொடுக்கிற சலுகைகளையெல்லாம் இங்கிருக்கிற ஒரு எருமைக்குக் கொடுத்தால்கூட அது தொழிலதிபராகிவிடும். அதற்கு மேலும் முதலீட்டாளர்கள் இப்படியானதொரு சட்டத்திருத்தத்தை கோரியதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. வாயும் வயிறுமின்றி உடல்முழுக்க கை முளைத்தவர்களாக தொழிலாளர்கள் இருந்துவிட்டால் உற்பத்தியைப் பெருக்கி குமித்துவிடலாமே என்கிற அங்கலாய்ப்பு அவர்களுக்கு எப்போதுமே இருந்து வருவதுதான். நாளையே அப்படியொரு கோரிக்கையை வைத்தால், தொழிலாளிகளை ஆய்வுமேசையில் கிடத்தி அறுவைச்சிகிச்சையைத் தொடங்குமா அரசு?

எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்தே அதை தகர்த்ததன் மூலம் திமுக அரசு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கே துரோகம் செய்துள்ளது. இதைச் சொன்னதுமே சீனாவில் இல்லையா என்கிற கேள்வி சாமர்த்தியமாக முன்வைக்கப்படுகிறது. சீன அரசு தொழிலாளர் விரோதப் பாதையில் செல்லுமானால் அதை அந்நாட்டின் தொழிலாளிகள் எதிர்ப்பார்கள். ஒருமைப்பாட்டுணர்வில் நாமும் எதிர்ப்போம். தொழில் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமென சீனாவிலிருந்து பின்பற்றத்தக்க எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது அங்கு தோல்வியடைந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட ஒரு விசயத்தைத்தான் திமுக அரசு பின்பற்ற வேண்டுமா? (இந்த ஆண்டு அங்கு மேதினக் கொண்டாட்டத்திற்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது)   

996 வேலைநாள் – அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை – 6 நாட்கள் - என்கிற கருத்தாக்கம் சீனாவில் அறிமுகமானது. இது, நாளொன்றுக்கு எட்டுமணி நேரம், அதிகப்படியாக வாரத்திற்கு 44 மணிநேரம் என்கிற சீனாவின் வேலைநாள் சட்டத்திற்கு விரோதமானது, தாராளவாதக் கொள்கையை நோக்கி சீன அரசு சரிகிறது என்று அறிமுக நிலையிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் இந்த 996 வேலைமுறையை ஏற்கவிரும்பும் நிறுவனம் அதன் தொழிலாளர் அமைப்புகளுடன் பேசி இந்த முடிவை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 996 வேலைமுறையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பல்வேறு பணப்பயன்கள் உறுதிசெய்யப்பட்டிருந்த போதும் பணிச்சுமையின் காரணமாக கடும் மனச்சோர்வுக்கும் உடல்ரீதியான பல துன்பங்களுக்கும் ஆளாகிவந்தனர்.  நான் மிகவும் களைப்படைந்துவிட்டேன், சூரியவெளிச்சத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று நினைவிலில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 996ஐசியூ.காம் போன்ற இணையதளங்கள் (996 வேலைநாள் என்பது தொழிலாளர்களை ஐ.சி.யூ. சிகிச்சைக்கு அனுப்புவதுடன்தான் முடிகிறது என்பதைச் சுட்டும்விதமாக இப்பெயர்) எதிர்ப்புணர்வுகளை ஒருங்கிணைத்தன. கடைசியில், தொழிலாளர்களின் உடல், மனநலப் பிரச்னைகளில் சமரசமில்லை என்று பாதுகாப்புச் சட்டங்களை தீவிரமாக செயல்படுத்தப் போவதாக சீன அரசு அறிவிக்கவேண்டிவந்தது. இந்தச் சூழலில்தான் அங்கிருந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்துகொண்டு சீனாவின் 996 போல இங்கும் வேலைநாளை மாற்றும்படி கோருகிறார்கள். கார்ப்பரேட்டுகள் காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடிக்கும் பாஜக அரசு ஆளைக் கொல்லும் இந்தத் திட்டத்தை நெகிழ்வான வேலைநாள் என்று வஞ்சகமாக ஏவியுள்ளது.      

இந்தியாவில் ஏற்கனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்துவருகின்றனர். நாட்டின் சட்டப்பூர்வ வேலைநாளுக்கு விரோதமான இந்த உழைப்புச்சுரண்டல் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் போர்க்குணமும் அமைப்புரீதியாக திரளும் வாய்ப்பும் அற்றவர்களாக உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு 12 மணிநேர வேலைநாளுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு பொருளற்றதாகவும் நகைப்புக்குரியதாகவும் தெரியக்கூடும். 8 மணி நேர வேலைநாள் என்பதன் வரலாற்றையோ அதற்கான தியாகத்தையோ அறியாதவர்களுக்கு அது தேவையற்றதாகக்கூட தோன்றலாம். நியோ நார்மல் என்கிற பெயரில் எல்லா ஒழுங்கீனங்களையும் விதிமீறல்களையும் நியாயப்படுத்திக் கொண்டு அதற்குள் சாதகமானதைத் தேடியடைந்து  சமாதானமடைகிற, பீயிலே பொறுக்கிய அரிசியில் பிரியாணி ஆக்கித் தின்பதை பெருமிதமிதமாய் பேசியலைகிறவர்களும் கூட மனிதர்கள்தான். அவர்களது உடல்/மனநலனுக்கும் இந்த 12 மணிநேர வேலைநாள் என்பது கெடுதலானதே. எட்டு மணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, ஓய்வு போன்ற அடிப்படையான கோரிக்கைகள் இவர்களுக்கும் தேவையானவையே.

8மணிநேர வேலை என்பதே 8 மணிநேரத்துடன் முடிந்துபோவதில்லை. உணவுத் தயாரிப்பது, -பணியிடத்திற்கு சென்று திரும்புதல் உட்பட அதற்கான முன்தயாரிப்புக்கென கூடுதலாக சிலமணி நேரங்களை – உறக்கத்திற்கும் ஓய்வுக்குமென இருக்கும் தமது சொந்த நேரத்திலிருந்து செலவிட வேண்டியிருக்கிறது. ஒருவர் எட்டுமணி நேரம் உழைப்பதனால் இழக்கும் ஆற்றலைத் திரும்பப் பெறுவதில் ஓய்வும் உறக்கமும் முக்கிய பங்கு வகிப்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தே அவற்றுக்கென தனியாக நேரப்பங்கீடு செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை வாழ்வில் உறக்கம் என்பதே ஓய்வு என்று திரிக்கப்பட்டுவிட்டதால் உழைப்புக்கும் உறக்கத்திற்கும் அப்பால் இன்னொரு வாழ்வு இருப்பதையே அறியாதவர்களாக அல்லது அறிந்தும் துய்க்கும் வாய்ப்பற்றவர்களாக தொழிலாளர்கள் நிலையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 12 மணிநேரம் வேலை என்பது 12 மணிநேரத்துடன் முடியக்கூடியதா? முதலீட்டாளர்களின் லாபவெறிக்கு ஒவ்வொரு தொழிலாளியின் சொந்த நேரத்திலிருந்தும் மேலும் நான்கு மணிநேரங்களை அபகரித்துக்கொடுக்கப் போவதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது அவசியம்.

மூன்றாவது ஷிப்ட் என்பதே இல்லாமல் போகும் நிலையில் ஒரு ஷிப்டுக்குத் தேவையான தொழிலாளர்கள் பணியமர்த்தப்படாமலே போகும் நிலையில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கதி என்ன என்பது ஒருபுறமிருக்க, அந்த ஷிப்டுக்கென தற்போதுள்ள தொழிலாளர் எண்ணிக்கை குறையுமா நீடிக்குமா? இரண்டு ஷிப்டு தொழிலாளர்களைக் கொண்டே நிறுவனத்தை இயக்கிவிட முடியும் என்கிற வகையில் அரசின் செல்லப்பிள்ளைகளான முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபம். வாரத்தில் மூன்று நாட்கள் நிறுவனத்தை மூடிவைப்பதனால் அந்த நாட்களில் (உணவு, வாகனம், மின் கட்டணம், தண்ணீர், இயந்திரத் தேய்மானம் போன்ற  நடைமுறைச் செலவுகள் மிச்சம் என்கிற வகையில் மற்றொரு லாபம் என்பதும் உண்மைதான். ஆனால் வாராவாரம் மூன்றுநாட்களுக்கு ஆலையை மூடிவைக்கவா முதலீட்டாளர்கள் ஆலைகளைத் திறப்பார்கள்? அது அவர்களின் வர்க்க இயல்புக்கு ஏற்புடையதல்ல. எனில் அந்த மூன்று நாட்களிலும் வேறு வகையாக ஆலையை இயக்குவதற்கான திட்டம் அவர்களுக்கு இருக்கும். 12 மணிநேரம் அமலானால் அப்போது அந்தத் திட்டமும் தன் கோரமுகத்துடன் வெளிப்படக்கூடும். ஒருவேளை நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளர்களையும் எஞ்சிய மூன்றுநாட்களில் தற்காலிக/ ஒப்பந்த/ பயிற்சி/ தொழிலாளர்களையும் கொண்டு ஆலையை இயக்குவது அவர்களது திட்டமாக இருக்கலாம். வேலையின்மையைக் காட்டி தற்காலிகத் தொழிலாளர்களையும் அவர்களைக்காட்டி நிரந்தரத் தொழிலாளர்களையும் பணியவைத்துச் சுரண்டுவதில் இந்திய முதலாளிகள் ஏற்கனவே மோசமான பல முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளதை மறந்துவிட வேண்டாம்.   

ஒவ்வொரு வாரமும் வேலையற்று இருக்கப்போகிற மூன்றுநாட்களையும் என்னவிதமான ஆக்கப் பணிகளில் தொழிலாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்கிற முன்கணிப்பு ஏதும் அரசுக்கு இருக்கிறதா? நான்குநாள் உழைப்பின் அலுப்பை சேர்த்துவைத்து மூன்றுநாட்களில் தீர்த்துக் கொள்வது சாத்தியமா? இவ்விசயத்தில் ஒசூர் தொழிற்பேட்டையின் அனுபவம் ஒன்றினை பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

 ***

கனப்படுப்பை ஏன் மூட்டவில்லை? 

வீட்டில் நிலக்கரி இல்லை.

ஏன் நிலக்கரி இல்லை?

நிலக்கரி வாங்க பணமில்லை

ஏன் பணமில்லை?

அப்பாவுக்கு வேலை இல்லை.

அப்பாவுக்கு ஏன் வேலையில்லை?

அவர் வேலை செய்யும் சுரங்கத்தில் அதிகப்படியான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறதாம்.

-குழந்தைக்கும் தாயுக்குமிடையே மார்க்ஸ் காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த உரையாடல் காலங்கள் தாண்டி 21ஆம் நூற்றாண்டுக்கும் பொருந்தக்கூடியதே. முதலாளிகள், தொழிலாளிகளை வதைத்து அதிகப்படியான உற்பத்தியைப் பெற்றுவிடுவார்கள். சந்தையின் தேவையை விடவும் கூடுதலாக கையிருப்பில் உள்ள சரக்கு தேங்கிவிடும் பட்சத்தில் அந்தச் சுமையைத் தொழிலாளிகள் மீது ஏற்றிவிடும் தந்திரமாக கதவடைப்பு செய்து உற்பத்தியை முடக்கிவிடுவார்கள். அம்மாதிரியான நேரங்களில் “ஆஹா, மூடிய ஆலையைத் திறக்கும் வரை வேலையே இல்லை… ஜாலியோ ஜாலி…” என்று எந்தத் தொழிலாளியும் கும்மாளம் போடுவதில்லை. உழைப்பிலிருந்து அந்நியமாக்கப்பட்ட அந்த நாட்களைக் கடப்பது பற்றிய அச்சம் அவர்களை நிலைகுலையச் செய்கிறது.

 ஒசூரில் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று, 2008-09ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக போதுமான விற்பனை இல்லை என்றும் கையிருப்பு தீரும்வரை உற்பத்தியை முடக்கி வைப்பதாகவும் கூறிக்கொண்டு வாரத்தில் மூன்றுநாட்கள் கதவடைப்பு செய்தது. தொடக்கத்தில் சொந்தவேலைகள் சிலவற்றை முடித்துக் கொள்ள இந்த விடுமுறை நாட்கள் தொழிலாளிகளுக்கு பயன்பட்டதென்னவோ உண்மை தான். ஆனால், அடுத்தடுத்த வாரங்களும் அதேநிலை என்றபோது தொழிலாளிகள் சேர்ந்தாற்போல மூன்று நாட்களை ஒவ்வொரு வாரமும் எவ்வாறு கழிப்பது என்று தடுமாறிப்போயினர். எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையும் வேலையின்றி வெறுமனே இருப்பதனால் தாறுமாறாக யோசிப்பதுமாக தொழிலாளர்கள் கடும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகினர். ஆலை வளாகத்திலேயே சில தற்கொலை முயற்சிகள் நடந்தன. சிறந்த தொழிலாளி என்று பணிக்காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட விருதுகள் சான்றிதழ் ஆகியவற்றை நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டு தொடர்ந்து வேலை தருமாறு கதறியவர்களும் உண்டு. உறக்கமின்றி அகாலத்தில் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் உலாத்துவது, மின்கம்பத்தை அல்லது ஓடும் சாக்கடையை வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது என்றெல்லாம் சமனிலை இழந்த தொழிலாளர்களை   வீட்டுக்கு அழைத்துப்போய் படுக்க வைக்கும் பணியை தொழிற்சங்க ஊழியர்கள் இரவுதோறும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆலை நிரந்தரமாக இயங்கிய பின்னும்கூட இயல்புக்குத் திரும்ப அவர்களுக்கு காலம் தேவைப்பட்டது. (அந்த ஆண்டில் கையெழுத்தாக வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர் தரப்பை பலவீனப்படுத்த இந்த அச்சவுணர்வையும் நிச்சயமற்றத்தன்மையை நிர்வாகம் பயன்படுத்தப் பார்த்தது)

ஒரு தற்காலிக கதவடைப்பின் மூலம் வாராவாரம் வந்த மூன்றுநாள் விடுமுறையே தொழிலாளிகளின் ஆளுமையைச் சிதைக்குமென்றால் நிரந்தரமாகவே வாராவாரம் மூன்றுநாள் விடுமுறையில் அவர்கள் என்னவாகப் போகிறார்கள்? சும்மா இருக்கவொட்டாமல் வேறு இன்னுமொரு நிறுவனத்திற்கு தங்களை விற்றுக்கொள்ளும்படி அரசு விரட்டுகிறதா? அல்லது முதல் நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளியாகவும் அடுத்த நாட்களில் அத்துக்கூலியாகவும் வேலை பார்க்கும்படி நெட்டித்தள்ளுகிறதா? அப்படியும்தான் வேலை பார்த்து சம்பாதிக்கட்டுமே என்றும் கூட இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சொல்லக்கூடும். ஆனால் சம்பாதித்துக் கொண்டேயிருந்தால் வாழ்வது எப்போது என்று தொழிலாளர்கள் நெடுங்காலமாய் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடையைத் தேடி கண்டையும் வரை வேலைநேரத்தை மாற்றமாட்டோம் என்கிற நிலைப்பாட்டை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் அறிவிப்பது குடிமக்களுக்கும் ஆட்சிக்கும் நல்லது. இல்லையானால் சீனத் தொழிலாளி சொன்னதையே அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் சொல்வோம்: சூரியனையே பார்க்க முடியாதபடி செய்துவிடாதீர். 

நாட்டையே நாம் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சியின் சின்னம் என்பதற்காகவேனும் சூரியனை அன்றாடம் பார்க்கும்படியாக தொழிலாளிகளின் வேலைநேரம் மாற்றமின்றி நீடிப்பதை உறுதிசெய்யவேண்டும். அல்லது இன்னும் கூடுதல் நேரம் சூரியனைப் பார்க்கும்விதமாக வேலைநேரத்தை ஆறுமணிநேரமாகக் குறைத்து தன் தந்தையின் கனவை நனவாக்கவேண்டும். 

ஞாயிறு, பிப்ரவரி 9

எழுதா நிலை - ஆதவன் தீட்சண்யா


என்ன இப்பதான் உனக்கு விடிஞ்சதா, ஆன்லைனுக்கு வர இவ்ளோ தாமதம்?
ரொம்பநாளா உள்ளுக்குள்ள ஓடிக்கிட்டிருந்த ஒரு கதை. எழுதி முடிச்சிடலாம்னு உட்கார்ந்தேன். ரெண்டாம் பத்தியில் சின்னதுரை வாத்தியார்னு ஒருத்தர் வர்றார். அங்கிருந்து கதையே அவரோடதாக மாறுது. வாத்தியார் பற்றி நாலுவரிதான் எழுதியிருப்பேன், குறுக்க மறுக்க யோசனை தாவி ஓட்டம் தடைபட்டிருச்சு. முட்டிமோதித் தள்ளியும் நகரல. பிறகு பார்ப்பம்னு தூக்கிப் போட்டுட்டு இப்பதான் வெளியே வர்றேன்.

என்ன கதை?
ம்... எங்கப்பாவையும் இந்த வாத்தியாரையும் வைத்து

அதுல என்ன சிக்கல், நீ விறுவிறுன்னு எழுதிவிடுகிற ஆளாச்சே?
எங்கப்பா சாவுக்கு வந்திருந்த யார் இந்தக் கதையைப் படித்தாலும், இதில் வர்றவர் சின்னதுரை வாத்தியார்தான்னு யூகிச்சிட்டாங்கன்னா அவரை அவமதிச்சாப்ல ஆயிடும். அவர் நாற்பது வருசமா மறைச்சு வச்சிருந்த அந்தரங்கத்தை நான் எழுதி அம்பலப்படுத்திடக்கூடாதே? 

அந்தளவுக்கு மறைத்தாக வேண்டிய விசயமா?
ஆமாம்.

அப்படி என்ன பண்ணினார்?
குழியில் மண் தள்ளப்போற நேரம். வாத்தியாரும் அவரோட சம்சாரம் அல்லி டீச்சரும் ரோட்டோரம் வண்டிய நிப்பாட்டிட்டு பொழிமேல வேகுவேகுன்னு வந்துக்கிட்டிருந்தாங்க. ‘ஆன நேரம் ஆச்சு செத்தநேரம் பொறுங்க. அவங்களும் வந்து முகம் பார்த்துறட்டும். பாவம் நரிப்பள்ளியிலிருந்து வர்றாங்க’ன்னு அவங்களுக்காக நிறுத்தினோம். நம்மளால நிற்குதேன்ற பதைப்பு அவங்களுக்கும் இருக்குமில்ல, அரக்கப்பரக்க ஓட்டமும் நடையுமா ரெண்டாளும் குழிமாட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. வாத்தியார் கைப்பையிலிருந்து மாலையைத்தான் எடுக்கிறார்னு பார்த்தால் புது வேட்டி சட்டை திமுக கரைபோட்ட துண்டு. ‘கோடித்துணி போர்த்துறதுக்கு நான் உங்க உறவுமுறையில்ல. உங்க வழக்கத்துக்கு பாதகமில்லேன்னா இதுகளை அண்ணன் காலடியில் வைத்து மண்தள்ளுங்க...’ என்றார் தளுதளுக்க.

‘அரணாக்கயிறைக்கூட அறுத்துட்டு புதைக்கிறதுதானே நம்ம வழக்கம். இப்படி  புது உடுப்போட பொதைச்சு அதை எடுக்குற ஆசையில யாராச்சும் குழிய மறுக்கா தோண்டிட்டாங்கன்னா...?’. ஊர் வாரியான் கேட்டதற்கு ‘அப்படியெல்லாம் யாரு எடுக்கமாட்டாங்க. மீறி எடுத்தால் பார்த்துக்கலாம்’னு  நான் அடமாக நின்னதால் வாத்தியார் கொடுத்த துணிகளை அப்பா காலடியில் வைத்து அடக்கம் முடித்தோம்.

வினோதமா அவர் இப்படி துணிமணி வாங்கி வந்ததுக்கு என்ன காரணம்?
இதே கேள்விதான் சாவுக்கு வந்திருந்த எல்லாருக்குமே. ‘நம்ம காளியப்பனுக்கு எப்பவும் கட்சியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்ததுதானே. டீச்சர் ட்ரெய்னிங் முடிச்சிட்டு போஸ்டிங் வராம காட்டுவேலை பாத்துக்கிட்டிருந்த இந்த சின்னதுரையை காளியப்பன் தான் மெட்ராசுக்கு கூட்டிப்போய் சத்தியவாணிமுத்துவையோ சாதிக்பாட்சாவையோ பார்த்து வேலைக்கு ஏற்பாடு செஞ்சதாக  ஒரு பேச்சுண்டு. அந்த விசுவாசத்துக்கு இப்படி செய்திருக்கலாம்’னு பேசிக்கிட்டாங்க.

ஓ, உண்மையும் அதுதானா?
அவரோட வேலை விசயமா எங்கப்பா சில உதவிகள் செய்தது உண்மைதானாம். ஆனால் இவர் துணிமணி எடுத்து வந்ததுக்கு வேறு காரணம் இருக்குன்னு எங்கம்மா ஒரு விசயத்தை சொன்னப்பதான் எனக்கும் ஞாபகம் வந்தது.

ஆனா, எனக்கு தெரிய உங்கப்பா ஏடிஎம்கேல தானே இருந்தார். அவருக்கு ஏன் வாத்தியார் திமுக கரை துண்டு எடுத்தாந்தார்?
அந்தத் துண்டோட இருந்த எங்கப்பா தான் அவரை ஈர்த்தவராம்.

ஓ..
எங்கப்பா 55 முதலே திமுககாரர். திருச்சியில் 1956ல் நடந்த ரெண்டாவது மாநில மாநாட்டுக்கு எங்கூர்லயிருந்து  10பேரை அழைத்துப் போயிருக்கிறார். சேலத்தில் கட்சித்தலைவர்களோடு நல்ல பழக்கம். தலைமைக்கழக பேச்சாளர்கள் பலரோடும்கூட பரிச்சயம். அதைவிட முக்கியம் எம்.ஜி.ஆரால் பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு அவருக்கு நெருக்கமாக அப்பா இருந்தார். பிற்பாடு திமுக ஆட்சிக்கு வந்த தேர்தல்ல இவருக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்காமல் போனது துயரமான ஒரு தனிக்கதை.

1966ல் நாங்க நிலம் வாங்கி இங்கே வந்து குடியேறினப்ப எங்க கொட்டாய்க்கு அடையாளமே கூரை உச்சியில் பறக்கிற திமுக கொடிதான். இந்த சின்னதுரை வாத்தியாரும் (அப்ப வாத்தியார் இல்ல. டீச்சர் ட்ரெய்னிங் படிச்சிக்கிட்டிருந்திருந்தாராம்) அவரோட சேக்காளிங்க பத்திருபது பேரும் இது யாருடா புதுசா இப்படி ஒரு திமுக ஆள் நம்மூருக்கு வந்திருக்கிறதுன்னு எங்கப்பாவை வந்து பார்த்திருக்காங்க.

நாங்க இங்க வந்தப்புறமும் அப்பா பத்துநாளைக்கு ஒருக்கா துணிகளை சேலத்துலதான் லாண்டரிக்கு கொண்டுபோய் கொடுப்பார். அங்கத்திய சலவையில் அவருக்கு அப்படியொரு திருப்தி. இங்கேயே இருந்த சலவைக்காரர் ராஜி ‘ஏன் காளீப்பா நாங்களும்தான் வெளுக்குறோம். ஆனா, இந்த வெளுப்பு வரலியேன்னு கேட்க, அப்பாதான் சேலத்திலிருந்து டினோபால்  பவுடர் வாங்கியாந்து கொடுத்து அந்தப் பவுடர் கரைசலில் அலசியெடுப்பதால் வரும் பளீர் வெளுப்பை அவருக்கு காட்டித் தந்திருக்கிறார். அதிலிருந்து அப்பா அவரிடமே துணிகளைக் கொடுத்தார். ஆனாலும் 67 தேர்தல்ல ஓமலூர் ரிசர்வ் தொகுதிக்கு எங்கப்பா சீட் கேட்டிருந்த தகவலை பிற்பாடு தெரிந்துகொண்ட இந்த ஊர்க்காரர்கள் அந்த எஸ்.சி.ஆளுக்கு துணி வெளுக்கக்கூடாதுன்னு மிரட்டியும்கூட ராஜி பின்வாங்கவில்லை.

அதுவரைக்கும் உங்க சாதி என்னன்னு அந்த ஊர்க்காரங்களுக்குத் தெரியாதா?
வேற ஊர்லயிருந்து வந்து குடியேறி - அதுவும் காட்டுக் கொட்டாய்ல குடியேறி- கொஞ்சநாள்தான் ஆகியிருந்ததாலயும் எங்கப்பாவோட தோற்றம் தொடர்பு இதையெல்லாம் வைத்தும் உடனடியா கண்டுபிடிக்க முடியல போல. ரிசர்வ் தொகுதிக்கு சீட் கேட்டாருன்னதுமே அவங்களுக்கு தேவையான தகவல் கிடைச்சிடுதில்லையா?

‘இடுப்புல கட்டுடான்னா தரையைக் கூட்டிக்கிட்டு திரியுறான்’. ‘அவங்கம்மா ரோடு போடுறா, இவன் அதை அன்னாடம் கூட்டுறான்’னு ஆளாளுக்கு கேலி பேசுமளவுக்கு காலிறங்க தரைபுரளத் தான் அப்பா வேட்டி கட்டுவார். இன்னும் சிலபேர் ‘முழங்காலுக்கு கீழ தெரியுறாப்ல வேட்டி கட்டினா அபராதம் கட்டுற சாதில பொறந்தவனுக்கு வந்த பகுமானத்த பாத்தியா?’, ‘எல்லாம் அந்த பெரியாரும் அம்பேத்கரும் செஞ்ச கேடு. இல்லன்னா இவனெல்லாம் இப்படி தோள்ல துண்டு போடுவானா? கக்கத்துல துண்டை இடுக்கினு கையில செருப்பத் தூக்கினில்ல திரிஞ்சிருப்பான்’னு கறுவிக்கிட்டிருப்பாங்க.    
 
அப்பாவுக்கு இதெல்லாம் பொருட்டேயில்ல. கண் கூசுமளவுக்கு வெளேர்னு எட்டுமுழ கைத்தறி வேட்டி. முழங்கை வரைக்கும் ஏற்றி மடித்த முழுக்கைச் சட்டை, கருப்புசிவப்பு சன்னக்கரையோடின துண்டு, வார் வைத்த தோல்செருப்பு, கடியாரம்னு மிடுக்கான தோற்றத்தில் தான் எங்கப்பா எப்பவும் வெளியே கிளம்புவார். வேறு பகட்டோ ஆடம்பரமோ இருக்காது. ஆனால் அதுக்கே கொத்துக்காரி ரோடுபோட்டு சம்பாதிக்கிறதையெல்லாம் இவன் துணிபோட்டே அழிக்கிறான், மிராசாட்டம் மினுக்குறான்னு அக்கம்பக்கம் பொருமல்.

ஆனால் சின்னதுரை ஜமாவுக்கு எங்கப்பாவோட தோற்றம், பேச்சு, அரசியல் தொடர்பு இதெல்லாம் ஈர்ப்பா இருந்திருக்கு. அந்த காளீப்பனோட நெறமும் குணமும் தெரிஞ்சும் இப்படி சாதிகெட்டு பழகுறானுங்களே இந்தப் பயல்கள்னு ஊராட்கள் தடுத்ததையும் கேட்காமல் சின்னதுரையும் அவரது கூட்டாளிகளும் எங்கப்பாக்கிட்ட எப்பவும்போல ஒட்டுறவாகத்தான் இருந்தாங்க. இவங்கெல்லாம் சேர்ந்துதான் முதமுதல்ல வெள்ளிக்குளம் திமுக கிளைக்கழகம் ஆரம்பிச்சிருக்காங்க.
சின்னதுரை சாருக்கு ட்ரெய்னிங் போயிருந்தப்ப பழக்கமாகியிருந்த அல்லி டீச்சரை கல்யாணம் முடிக்க ஆசை. அந்த டீச்சரம்மாவுக்கும் தான். ஆனா ரேகை வைத்த சாதிப்பையன் வேண்டாம்னு அவங்க வீட்டாள்கள் ஒத்துக்கல. எங்கப்பா தான் தலையிட்டு...

ஏய், இருயிரு. ரேகை வைத்த சாதினா என்னன்னு முதல்ல சொல்லிட்டு மேலே போ.
கிரிமினல் ட்ரைப்ஸ் - குற்றப்பரம்பரையினர்- அதாவது நாட்டுல நடக்குற குற்றங்களையெல்லாம் செய்கிறவர்கள்னு பிரிட்டிஷ் ஆட்சியால் அறிவிக்கப்பட்டிருந்த பல சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவர். எட்டுவயசுக்கு மேற்பட்ட இந்தச் சாதி ஆண்கள் எல்லாருமே ராத்திரியானால் போலிஸ் ஸ்டேசன்ல இல்லாட்டி கிராம முன்சீப்கிட்ட கைரேகை பதிச்சுட்டு அவங்க காட்டுற  இடத்தில் படுத்திருந்துவிட்டு விடிஞ்சப்புறம்தான் வீடு திரும்பமுடியும்.

ச்சே, என்ன கொடூரம்...
நீ இதை கேள்விப்பட்டிருப்பேன்னு நினைத்தேன். எந்தச் சாதியில்தான் குற்றவாளி இல்லை? ஒரு சாதியில் பிறந்த எல்லாருமே குற்றவாளியாகத்தான் இருப்பாங்கன்னு முத்திரை குத்துவது என்ன நியாயம்? எப்படி அந்த மக்கள் பொறுப்பாங்க? அங்கங்கே நிறைய போராட்டங்கள் நடந்திருக்கு. ஆணும் பெண்ணுமாக பலபேர் செத்திருக்காங்க. நம்ம சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இதெல்லாம் ஒற்றைவரியாகக்கூட இல்லை. போராடினவங்களுக்கும் இது ஒரு கோரிக்கையாக இல்லை.

ம்ம். அவங்களுக்கே அக்கறை இல்லாத இந்த வரலாறு புவியியலையெல்லாம் நாமெதுக்கு இவ்வளவு நேரம் பேசணும்? லவ் மேட்டருக்கு வா.
லவ் மேட்டரா? ஏதோ இலக்கியம் சினிமா அரசியல்னு சாட் பண்ணிக்கிட்டிருக்கோம்னு நினைச்சேன். நீ லவ்வா கன்வர்ட் பண்ணிட்டியா? மூணாம் பேருக்கு தெரியும் முன்னாடி இந்த நினைப்பை மூட்டைக்கட்டி வை பொண்ணே.

அடச்சீ கிழமே, உனக்கு இந்த நெனப்பு வேறயா? சின்னதுரை அல்லி விசயத்த சொல்லுய்யா.
ஓ அதுவா, சின்னதுரை சார் எங்கப்பாக்கிட்ட விசயத்தை சொன்னதும் இவர் நேரா அல்லி டீச்சர் வீட்டாரிடம் பேசப் போயிருக்கிறார். முதல்ல அவங்க ஒத்துக்கல போல. இவர் தான் மல்லுக்கட்டி சம்மதிக்க வச்சிருக்கார். ஆனால் ரெண்டுபேர்ல ஒருத்தருக்காவது போஸ்டிங் ஆர்டர் வந்தப்புறம் தான் கல்யாணம்னு சொல்லியிருக்காங்க. அதுவும் சரிதானே... வேலை இல்லாம இருக்கிறப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னன்னு பிழைக்க? வேலைக்கு நானாச்சு பொறுப்புன்னு சொல்லிட்டு வந்த எங்கப்பா அந்த வாரமே சின்னதுரை சாரை கூட்டிக்கிட்டு அவரோட போஸ்டிங் விசயமா மெட்ராஸ் போய்ட்டு வந்தார்.  

மெட்ராசிலிருந்து அவர் ஊர் திரும்பி ஒரு நாலைந்துநாள் இருக்கும். அன்னிக்கு ராத்திரி நான், எங்க தாத்தம்மா, தம்பிங்க, தங்கைங்க எல்லாரும் எப்பவும்போல அந்த புரட்டாசி குளுர்லயும் வாசல்ல உட்கார்ந்திருக்கோம். ராச்சாப்பாடு போய்க்கிட்டிருக்கு. எங்கப்பாவும் அவரோட நண்பர் சவரிமுத்துவும் தாவரத்தில் உட்கார்ந்து ராந்தல் வெளிச்சத்தில் முரசொலியை படிச்சிக்கிட்டிருந்தாங்க. திமுக பொதுக்குழு முடிவுகளை விளக்கி கடற்கரையில நடந்த பொதுக் கூட்டத்தில் கலைஞர் பேசிய பேச்சு தலைப்புச்செய்தியா வந்திருந்தது.

“என் மடியில் ஒரு கனி விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்; அதுதான் எம்ஜிஆர் என்றாய் நீ! நீ மறைந்த போது உன் இதயத்தை நான் கேட்டேன். அந்தக் கனியோடு உன் இதயத்தை எனக்குத் தந்தாய்!. கனியை வண்டு துளைத்து விட்டது; இதயத்தை துளைக்குமுன்பு அதை எடுத்தெறிந்துவிட்டேன்! என் அண்ணனே என்னை மன்னித்துவிடு!’’. ‘திருக்கழுக்குன்றம் பொதுக் கூட்டத்தில் தலைவர் பேசினதை கேட்டப்பவே இப்படி ஏதோ நடக்கப்போகுதுன்னு தோனுச்சு. இந்தா கதைய  முடிச்சிட்டு மு.க. என்னவொரு வாய்ஜாலம் காட்டியிருக்காரு பாத்தியா..’ன்னு பொருமின சவரிமுத்து சடார்னு முரசொலியை எரித்தார். என்ன சவரி, நாம் இப்பவரைக்கும் திமுக தான், அது நம்ம கட்சியோட பத்திரிகை. நமக்கு தலைவரை பிடிக்கும். ஆனால் மு.க. நமக்கொன்னும் எதிரியில்ல’ என்று அப்பா தீயை அணைத்தார்.

ரொம்ப மெச்சூர்டா இருக்கே உங்கப்பாவோட அப்ரோச்...
மேலுக்கு அப்படிதான் தெரியும். அப்பா அப்போதைக்கு அப்படி சொன்னாலும் அவருக்கும் கோபம் இருந்தது. அது எம்.ஜி.ஆரை நீக்கிய கோபமா அல்லது தனக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்காமப் போனதால உள்ளுக்குள் பதுங்கியிருந்த குமைச்சலான்னு தெரியல. ஆனால் திமுகவிலிருந்து எம்ஜிஆரை நீக்கினதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு உடுமலைப்பேட்டை இஸ்மாயில்னு ஒருத்தர் தீக்குளித்து இறந்துபோனதாக கிடைத்திருந்த செய்தியால அவர் ரொம்பவும்  கொந்தளிப்பாக இருந்தார்னு தெரியும்.

நாமளும் ஏதாவது செய்தாகணும்னு ரொம்பவும் ஆவேசமா பேசுறதும் கொஞ்சநேரம் அமைதியா யோசிக்கிறதுமா இருந்தாங்க ரெண்டுபேரும். ரோட்டோரத்தில் இருக்குற எங்க சோளக்காட்டுக்குள் மறைந்திருந்து கல் வீசி இந்த மார்க்கமா ராத்திரில சேலம் கோவை சென்னை திருப்பதிக்குப் போய்வரும் டிடிசி - திருவள்ளுவர் போக்குவரத்துக்கழக -  எக்ஸ்பிரஸ் பஸ்களை சேதப்படுத்துறதுதான் அவங்களோட முதல் திட்டம். ஆனா கல்லடியில் சனங்களுக்கு ஏதாச்சும் பாதிப்பாயிட்டால் அது தலைவருக்குதான் கெட்டப்பேர் உண்டாக்கும்னு அந்தத் திட்டத்தை கைவிட்டாங்க. அதுக்கு பதிலா ரோட்டுல குண்டாங்கல்லுகளை உருட்டிப்போட்டு பஸ்களை தடுத்து நிறுத்தி ஆட்களை இறக்கிவிட்டுட்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்துறது இல்லன்னா ஒன்னு ரெண்டு பஸ்ஸை கொளுத்துறது.  கொளுத்தின கையோட பொம்மிடிக்கோ மொரப்பூருக்கோ போய் ரயிலேறி மெட்ராஸ் போய் தலைவரை பார்க்கிறதுன்னு பேசிக்கிட்டிருக்கிறப்ப தான் கொட்டாய்க்கு அள்ளையிலிருந்து யாரோ வர்றது தெரிஞ்சிருக்கு. எம்.ஜி.ஆர். சப்போர்ட்டர்ஸ்னு தெரிகிறவங்களை அரஸ்ட் பண்றதா தகவல் இருந்ததால போலிஸ்தான் வருதோன்னு கிணத்துப்பக்கம் பதுங்கப்போன எங்கப்பாவும் சவரிமுத்து மாமாவும் வந்தது போலிசில்ல, சின்னதுரை வாத்தியார்னு தெரிஞ்சதும் சிரிச்சிக்கிட்டாங்க.

சின்னதுரையும் எம்.ஜி.ஆர். விசயமாத்தான் வந்திருக்கிறதா நினைச்சுக்கிட்டு ‘நியூஸ் தெரிஞ்சு நீ மட்டும் எப்படி நிம்மதியா இருந்திருப்ப’ன்னார் சவரிமுத்து. ஒன்றும் சொல்லாமலிருந்த சின்னதுரையிடம் ‘ஏம்பா, இம்மாம்பெரிய ஐவேஸ் இருக்கு நீ என்னடான்னா குள்ளநரியும் முள்ளம்பன்னியும் குறுக்கும்மறுக்குமா திரியுற கரட்டுக்குள்ள பூந்து வந்திருக்கியே இந்நேரத்துக்கு’னு எங்கப்பா கடிந்துகொண்டார்.

பிறகு பலதும் பேசிக்கிட்டிருந்தவங்க, மல்லிகா பஸ் போனதைப் பார்த்ததும் ‘நேரம் போனதே தெரீல, பத்து மணியாயிடுச்சே. படுத்தெழுந்து கோழிகூப்பிட பார்ப்பம்’னு கலைந்தார்கள். சவரிமுத்தோட போன சின்னதுரை ரோடு ஏறினதும் ‘நீ போய்க்கிட்டே இரு மாமா நான் காளியப்பண்ணன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல மறந்துட்டேன். சொல்லிட்டு விசுக்குனு வந்துர்றேன்’னு மறுக்கா கொட்டாய்க்கு வந்தார்.

எதுக்கு?
பொண்ணு வீடு பார்க்க முறையா சொந்தபந்தங்களோட வரச் சொல்லி தனக்கு வந்த லெட்டரை எங்கப்பாக்கிட்ட காட்டத்தான் சின்னதுரை முன்னாடி வந்திருந்திருக்கிறார். வந்த இடத்தில் தாய்மாமன் சவரிமுத்துவைப் பார்த்ததும் சொல்லாமல் போன இந்த விசயத்தை சொல்லத்தான் இப்ப மறுக்கா வந்தது. ‘எப்ப போகணும்’றார் அப்பா. ‘நாளை புதன்கிழமை, நல்லநாள் போய்ட்டு வந்துடலாம்னுது அம்மா. நீங்களும் வரணும்ணா’ - சின்னதுரை.  ‘சரி, நான் உன்கூட வந்துட்டு அங்கிருந்து மெட்ராஸ் போய்க்கிறேன்’னு அப்பா சொன்னப்புறமும் சின்னதுரை எதையோ சொல்லத்தயங்கி நின்னதை யூகிச்சிட்டு ‘வேறு விசயம் எதாச்சும் இருக்கா தம்பி’ன்றார்.

அமைதியாக இருந்த சின்னதுரை, ‘என்னண்ணா பொழப்பு இது? பொண்ணு பார்க்கப் போறப்ப போட்டுனு போறதுக்குகூட நல்லதா ஒரு உருப்படி துணி இல்லாத எனக்கெல்லாம் இப்ப கல்யாணம் எதுக்குனு தோனுது’ன்னு தேம்புறார். ‘அடச்சே இதுக்கா இப்படி மருகிறே... நாளைக்கே போஸ்டிங் வந்துட்டா உன்னூட்டு தரித்திரம் ஒழிஞ்சிடப்போகுது. அந்தப் பிள்ளையும் சம்பாதிக்கப் போறாள். வேறென்ன வேணும்?’னு அப்பா அவரைத் தேற்றினார்.

பிறகு கொட்டாய்க்குள் போனவர் இன்னும் பிரிக்காதிருந்த ஒரு பொட்டலத்தைக் எடுத்தாந்து அவரிடம் கொடுத்து, ‘என் சைஸ் உனக்கு சரியாத்தான் இருக்கும், போட்டுப்பார்’னார். ராந்தல் வெளிச்சத்தில் வைத்து ‘பஷீர் டிரஸ்மேக்கர்ஸ்’ன்ற உறையைப் பிரித்துப் பார்த்த சின்னதுரை ‘அய்யோ அண்ணா இது புதுச் சட்டையா இருக்கு, வேணாம். உங்க சலவைச்சட்டையும் வேட்டியும் குடுங்க, அதுவே போதும். ஊராள்களுக்குத் தெரியாம கொண்டாந்து திருப்பிக் கொடுத்துடறேன்’னார். எங்கப்பா பிடிவாதமா மறுத்து ‘மாப்பிள்ளனா மாப்பிள்ள மாதிரிதான் இருக்கணும். பளீர்னு இந்த பாப்ளின் புதுச்சட்டையிலதான் நீ பொண்ணு பார்க்க வர்றே’னு சொல்லிட்டார். ‘பஸ் சார்ஜ்க்கு பயப்படாத, வா பாத்துக்குவம்’னு சொல்லி வழியனுப்புறப்ப ‘போஸ்டிங் வர்ற இந்த சமயத்துல உன்பேர் கட்சி சம்பந்தமான எதிலும் அடிபட வேணாம், கவனம்’னார் அப்பா.

ஓ, அந்த வேட்டி சட்டை கணக்கைத்தான் உங்கப்பாவோட குழியில வச்சு நேர் செய்துக்கிட்டாரா சின்னதுரை?

ஆமா. ‘சின்னதுரை துணி வாங்கிப்போற விசயம் அவங்காளுங்க காதுக்கு போகக்கூடாது. எளக்காரம் பேசி ஏலம் விட்டுருவானுங்க’னு அப்பா எச்சரிச்சதால நாங்க யார்ட்டயும் சொன்னதில்ல. இப்பகூட  அவர் அப்பா சாவுக்கு துணியெடுத்து வரலன்னா இதை எழுதணும்னு நான் நினைச்சிருக்கவேமாட்டேன்.

அதை உங்கப்பா உயிரோடிருந்தப்பவே சின்னதுரை செய்திருக்கலாமே?
நானும் இதையேதான் அவர்ட்ட கேட்டேன். தன்னோட கல்யாணத்துக்கு, அதுக்கடுத்து வந்த கிருஸ்துமசுக்கு, வீடு பால் காய்ச்சுக்கு-ன்னு துணியெடுக்கப் போனப்பவெல்லாம் வாத்தியார் வற்புறுத்தியும்கூட எங்கப்பா மறுத்துட்டாராம். ஒருதடவை கோப்டெக்ஸ்ல வாத்தியாருக்கு துணிக்கடன் கிடைச்சப்ப உங்களுக்கு பிடிச்ச கைத்தறி வேட்டி வாங்கலாம்ணே வாங்கன்னு அப்பாவை கூப்பிட்டிருக்கார். ‘நா உனக்கு கடனா கொடுக்கல. ஆனா நீ கடன் வாங்கியாச்சும் என் கடனை அடைக்க நினைக்கிறியா?’ன்னு வருத்தப் பட்டாராம். அதுக்கப்புறம் அந்த முயற்சியை கைவிட்ட சின்னதுரை வாத்தியார் ‘இப்பவும் விட்டுட்டேன்னா நான் எப்பதான் அவருக்கு என் காணிக்கையை தர்றதுன்னுதான் ஓடியாந்தேன்’னு அழுதார். 

அவர் காணிக்கையா தரணும்னு நினைச்சதை எங்கப்பா தான் தவறாக கடனா நினைச்சிருக்கார். இந்த விசயத்தை இவ்வளவுகாலமும் ஞாபகத்துல வச்சிருந்து நிறைவேத்தின வாத்தியாரோட குணத்தைப் பற்றி நான் எழுதினாலும் அது அவர் எங்கப்பாக்கிட்ட துணிவாங்கிப் போட்ட விசயத்தையும் வெளிப்படுத்திடும் இல்லையா? அவரோட சாதியாட்கள் இதை சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்க. போயும் போயும் அந்தச் சாதியான்கிட்ட துணிவாங்கிப் போட்டவன் குடும்பம்தானேன்னு கேவலமா பேசுவாங்க.

ம், புரியுது. நீ இந்தக் கதையை எழுதாம இருக்கிறதுதான் அவங்க ரெண்டுபேருக்குமான மரியாதை. ஆனா இதேவேகத்துல, 1967 தேர்தல்ல உங்கப்பாவுக்கு சீட் கிடைக்காதது துயரமான தனிக்கதைன்னு சொன்னியே அதை எழுதேன்.
ஆமா, எழுதணும். ஒரு இயக்கம் கொடுக்குற உள்வலிமையால பொதுவெளிக்கு வர்ற எங்கப்பா மாதிரியான சாமானியர்களை இங்கிருக்கிற சாதியம் எப்படி மறிச்சு திருப்பியனுப்ப கபடம் செய்யும் - அதை  எதிர்கொள்ள இவங்க எப்படியான நுட்பத்தையும் வியூகத்தையும் கையாண்டு நிலைநின்றார்கள்னு சொல்ல அந்தக் கதையை எழுதித்தானாகணும்.   

நன்றி: செம்மலர், 2020 பிப்ரவரி இதழ்

செவ்வாய், மே 9

பார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை - வ.கீதா



டிசம்பர் 1917இல் பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியானது. இந்திய தேசிய இயக்கத்தின் ஒரு பிரிவாக அன்னி பெஸண்டின் தலைமையில் செயல்பட்ட ஹோம்ரூல் லீக் வெகுவீரியமாக இயங்கிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. இந்திய தேசியம் தொடர்பான சொல்லாடல்கள், குறிப்பாக இந்து சமுதாயத்தின் பழம் பெருமை பற்றிய பேச்சு தீவிரமாக முன்னெக்கப்பட்ட தருணம். இந்த சூழ்நிலையில் தான் பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் ஒன்றிணைந்து மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டனர். அறிக்கை வெளியானதை தொடர்ந்து 1917 ஆம் ஆண்டு முழுக்க சென்னை மாகாணம்தோறும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் கூட்டப்பட்டன. இந்திய தேசியம் குறித்த ஆழமான விமர்சனங்களை இந்த மாநாடுகளில் பேசியவர்கள் முன்வைத்ததோடு, வகுப்புரிமையின் தேவையையும் வலியுறுத்திப் பேசினர்.

சாதிகளாக பிரிந்திருக்கும் இச்சமுதாயம் எவ்வாறு ஒரு தேசமாக அமையமுடியும் என்ற கேள்வியை எழுப்பியதுடன் சாதிகளுக்கிடையே சமத்துவம் ஏற்பட்டாலொழிய இந்திய தேச உருவாக்கம் என்பது பார்ப்பனர்களின் நலத்தையும் மேலாண்மையையும் காப்பாற்றும் தேசியமாகத்தான் இருக்கும் என்றும் இவர்கள் கருத்துரைத்தனர்.  பண்டித அயோத்திதாசர் தான் இத்தகைய சிந்தனைகளை தமிழ் பொது சமுதாய வெளியில் முதன்முதலில் முன்வைத்தார். அவர் ஆசிரியராக இருந்து நடத்திய தமிழன் இதழில் சுதேசிய சீர்த்திருத்தம் என்ற தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். திலகரின் தலைமையில் உருவாகியிருந்த தீவிர இந்திய தேசியத்தை குறித்த ஆழமான விமர்சனங்களை இக்கட்டுரைகள் உள்ளடக்கியிருந்தன. அவர் எழுதத்தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருத்துகள் பொருளாதார, அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்தவர்களால் அரசியல்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவற்றை பரப்புரை செய்தவர்கள் அனைவரும் செல்வாக்குடையவர்களாக இருக்கவில்லை.

அறிவுத்தளத்திலும் அதிகார உலகத்திலும் பார்ப்பனர்கள் செலுத்திவந்த ஆதிக்கம், அதனூடாக வெளிப்பட்ட அறிவுதிமிர், சமத்துவத்தைமறுக்கும் மனப்பாங்கு, பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக்கொண்டு அத்தகைய வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தேடிக்கொண்ட மேன்மை ஆகியவற்றை கண்டு சினமுற்ற பலருக்கும் - தலித்தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலருக்கும் – பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. (தலித்துகளின் பங்கேற்பு, அவர்கள் நாடிய சமத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர மறுத்தால் பார்ப்பனரல்லாத இயக்கத்தின் அடிப்படையான ஜனநாயக கொள்கைகள் சீர்க்கெட்டுப்போகும் என்று எம்.சி. ராஜா போன்ற தலித்தலைவர்களும் ஓ. கந்தசாமி செட்டி போன்ற தலித் அல்லாத அறிவாளர்களும் அன்றே எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இன்றைக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகியுள்ள சூழ்நிலையில் பார்ப்பனரல்லாதார் என்று இனியும் பேசுவதில் நியாயமிருக்க முடியுமா என்ற கேள்வியை பலர் எழுப்பிவருகின்றனர்.  100 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய கேள்விகளை எழுப்பியவர்கள் பார்ப்பனர்களின் மேலாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டதை சகிக்கமாட்டாது பார்ப்பனரல்லாதார் இயக்கம் பேசிய நியாயங்களையும் விமர்சனங்களையும் எள்ளி நகையாடினர். இன்றோ தலித் அறிவாளர்கள் இந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர். பார்ப்பனரல்லாதார் நலம், உரிமைகள் என்று பேசிக்கொண்டு சாதி இந்துக்களின் மேலாதிக்கத்தை தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் நிறுவியுள்ளது என்று இவ்வறிவாளர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக 1967இல் தொடங்கி இன்று வரை நடைபெற்றுவரும் திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் இத்தகைய மேலாதிக்கத்துக்கான அரசியல், பொருளாதார அடிப்படைகளை உருவாக்கியுள்ளன என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய விமர்சனம் முன்வைக்கப்படுவதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை.  காலம் கிளர்த்தியுள்ள வரலாற்று மாற்றங்கள் பார்ப்பனரல்லாத சாதிகளின் பொருளாதார பலம், சமூகத்தகுதி, பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பார்ப்பனர்களின் மேலாண்மையில் சிற்சில சேதாரங்கள் ஏற்பட்டிருப்பினும், அவர்களின் ஆதிக்கமானது பலநிலைகளில் இன்றுமே தொடர்கிறது. குறிப்பாக மதம், உயர்கல்வி, ஊடகத்துறை, மத்திய அரசுநிர்வாகம், வங்கித்துறை, தனியார் துறை – நமது பொருளாதார, பண்பாட்டு வாழ்வில் தீர்மானகரமான பங்கு வகிக்கும் துறைகளில் அவர்கள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்திவருகின்றனர். அதேசமயம், அவர்களின் மேலாண்மைக்கு சவால் விடுத்து அவர்களின் சாதி ஆணவத்தைச் சாடிய பார்ப்பனரல்லாத அறிவாளர்கள் சார்ந்திருக்கும் சமுதாயங்களும் சுதந்திர இந்தியாவின் அரசியல், பொருளாதார வாழ்வில் முக்கிய பங்காற்றவந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, நிலம், வர்த்தகம், அரசுநிர்வாகம், காவல்துறை, ஊடகத்துறை என்று எதை எடுத்துக்கொண்டாலும் இந்த சமுதாயங்களை சேர்ந்தவர்களின் பங்களிப்பும் அதிகாரமும் கூடியுள்ளன. குறிப்பாக இச்சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த அதிகாரமானது எல்லா பார்ப்பனரல்லாத சமுதாயங்களுக்கும் போய் சேரவில்லை என்பது உண்மைதான் என்றாலும்,  குறிப்பிட்ட சமுதாயம் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் அரசியல் பலம் பொருந்தியவர்களாகவே இருக்கின்றனர்.

தலித் சமுதாயங்களை சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் ஒப்பீட்டளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்கள் தனிப்பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள நிலையிலும்கூட அவர்களின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் இன்றுமே சமூகத்தளத்தில் உத்திரவாதம் இல்லை. சட்டம் பேசும் உரிமைகளை மெய்யுலகில் செயல்படுத்த வருகையில் தலித்துகள் சந்திக்கும் சவால்களும் அவ்வுரிமைகளை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களும் நாளுக்குநாள் கூடி வருகின்றனவேயொழிய குறைந்தபாடில்லை. அவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் அதிகரிக்க தலித்துகளின் உரிமைசார் செயல்பாடுகளே காரணங்களாக உள்ள அவலநிலையும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. பழைய தீண்டாமை வகைகள் ஆங்காங்கு குறைந்துள்ளபோதிலும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் கூடியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், பார்ப்பனரல்லாத சாதிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள், போட்டாபோட்டிகள் ஆகியன ஒருபுறம் இருந்தாலும், தலித் விரோத செயல்பாடுகள் என்ற இந்த ஒருபுள்ளியில் அவர்கள் இணையவே செய்கின்றனர்.  குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத சமுதாயத்திலுள்ள வர்க்க, வட்டார வேறுபாடுகளை சமன்படுத்தவும் ஈடுகட்டவும் இத்தகைய வன்செயல்களும் அவை முன்நிறுத்தும் சாதி பெருமித அரசியலும் உதவுகின்றன. 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்தல், சாதி மறுப்புத் திருமணங்களையும் காதல் உறவுகளையும் சாடுதல், அவற்றை சகிக்கமாட்டாது சம்பந்தப்பட்ட இளைஞர்களை துன்புறுத்தல், கொலைசெய்தல், தலித்துகளின் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்கமுடியாது அவர்களின் சொத்துகளை சூறையாடுதல் என்பன போன்ற செயல்களில் பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்தவர்களின் அரசியல், சமுதாய தலைமைகளாக தம்மை அறிவித்துக்கொண்டு செயல்படுபவர்கள் ஈடுபட்டு வருவதைக் காண்கிறோம். அவர்களின் அரசியல் தலைமையை ஏற்று சாதி பெருமிதங்களைக் காப்பாற்ற இச்சமுதாயங்களைச் சேர்ந்த வறிய பிரிவினரும் களம் இறங்குவதும் நடைபெற்று வருகிறது. இழப்பதற்கு சாதி அடையாளத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத சூழ்நிலைதான் இவர்களை இவ்வாறு செயல்படவைக்கிறது – எல்லாவிதமான இயலாமைகளையும் ஈடுகட்ட சாதிப்பெருமிதம் கைக்கொடுக்கிறது.

தலைமைகள், கட்சிகளை கடந்து சமுதாய மனநிலையில் மாற்றங்களேஏ ற்படவில்லை என்று கூறிட முடியாது. மாற்றங்களுக்கான அறிகுறிகள்இருக்கவே செய்கின்றன – சாதி எல்லைகளைக் கடந்த தோழமை, காதல், அரசியல் இணைவு, அறிவுலகத்தில் நடைபெறும் சிற்சில உரையாடல்கள் என்று பலநிலைகளில் இவை தம்மை வெளிபடுத்திக் கொள்கின்றன. ஆனால் புதியதொரு அரசியல், சமுதாய இலக்கை நிர்ணயிக்க வல்லவையாக இம்மாற்றங்களை அடையாளப்படுத்தி, அத்தகைய இலக்கை நோக்கி சமுதாயத்தை நகர்த்தும் அரசியலோ சிந்தாந்தமோ இன்று இல்லை. சாதியை அழித்தொழிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தால் மட்டுமே இத்தகை நகர்வு சாத்தியப்படும். ஆனால் திராவிட இயக்கமாக பரிணமித்து ஆட்சியதிகாரத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் இத்தகைய இலக்கை பற்றி சிந்திப்பதற்கான அரசியல் திண்மையையும் கற்பனையையும் இழந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

தமிழ் அடையாளம் என்ற செக்யூலர் புள்ளியில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தமிழ்பேசும் மக்களையும் இணைப்பதில் அவ்வியக்கம் வெற்றிகளை கண்டது என்பது உண்மைதான். மேலும் "தமிழ்" அடையாளம் என்பது சாதி இழிவை அகற்றி தலித்துகளுக்கும் பிறருக்கும் புதிய மனித வார்ப்புகளை அளிக்கவல்லது என்று அயோத்திதாசர் உள்ளிட்ட பலரும் நம்பினர். தலித்துகள்தான் ஆதிதமிழர்கள் என்று அவர் அறுதியிட்டுக் கூறியதற்கான நியாயங்களை மொழியிலும் இலக்கியத்திலும் தான் அவர் தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுமே "தமிழ், தமிழர் நலம்" என்ற பொதுக்கோரிக்கையை கனமானதாக திருமாவளவன் உள்ளிட்ட தலித் தலைவர்கள் முக்கியமானதாக கருதுகின்றனர். 
ஆனால் இந்த செக்யூலர் அடையாளமானது சாதி எதிர்ப்பு என்ற உள்ளீட்டை முதன்மைப்படுத்தும் போதெல்லாம், அதற்கான நியாயங்களை பேசியபோதெல்லாம் சாதி தமிழர்களுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை. சாதிக்கு அப்பாற்பட்டதாக மொழி, பண்பாட்டு அரசியல் அமையவேண்டும் என்று அவர்களின் தலைமையும் ஏன் தொண்டர்களும்கூட இன்றுமே கூறிவருகின்றனர். அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது இத்தகைய மனநிலை வெளிபட்டது. தமிழ் அடையாளத்தை சாதி எதிர்ப்பு அடையாளமாக உருமாற்ற செய்யவேண்டிய வேலைகளை குறித்து நாம் ஆக்கப்பூர்வமாக உரையாடத் தயங்குவதற்கும் மறுப்பதற்கும் காரணம், தமிழ் என்று சொன்னாலே, அதனளவில் அது அதிகாரத்தை எதிர்க்கவல்ல, பொது நியாயம் பேசவல்ல அடையாளம் என்று கொண்டுவிடுகிறோம், அல்லது அவ்வாறு நினைப்பது என்பது நமக்கு வழமையாகிவிட்டது. மத்திய அரசையும், பார்ப்பன- பனியா அரசியல், சமுதாய ஆதிக்கத்தையும் இந்திய தேசியத்தையும் எதிர்க்க தமிழ் அடையாளம் முன்வைக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தபிரச்சனை இருந்துவந்துள்ளது. இந்த எதிர்ப்பின் மொத்த உருவமாக தமிழ் அடையாளம் பாவிக்கப்பட்டதேயொழிய, தமிழ் சமுதாயத்தில் நிலவும் சாதி, பாலின, வர்க்க வேறுபாடுகளை களைய வல்லதாக, அவற்றை கடந்த சமத்துவமான, நீதியான சமுதாயத்தை உருவாக்கவல்லதாக அறியப்படவில்லை. அப்படியே அறியப்பட்டாலும் பழம்பெருமை பேச்சிலும் சங்க இலக்கியங்களை கொண்டாடுவதிலும் தான் தமிழ் மரபுக்குரிய சமூகநீதி வெளிப்பாடு கண்டது.

இன்றுமே இந்துத்துவ எதிர்ப்பின் முக்கிய அறிகுறியாக தமிழ் அடையாளம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அவ்வடையாளத்தின் பெயரில் இந்துத்துவத்தை எதிர் கொள்ளமுடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அதன் பெயரில் எதைஎதையெல்லாம் காப்பாற்ற விரும்புகிறோம், எதை எதையெல்லாம் சரிக்கட்ட மறுக்கிறோம் என்பன குறித்தும் நாம் சிந்திக்க மறுக்கிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு வருகிறது என்ற எச்சரிக்கை மணியை அடிப்பது முக்கியம்தான் என்றாலும் அக்கட்சியானது நம் சமுதாய, அரசியல் வாழ்க்கையிலும் அறவியல் சிந்தனையிலும் புகுத்தியுள்ள சீர்குலைவுகளைப் பற்றி பேச நமக்கு வாய்வருவதில்லை. இந்திய அரசு, இந்துத்துவம் ஆகியவற்றை எதிர்க்கும் தமிழ் ஆர்வலர்கள் பாசிச அரசியலுக்கு வழிவகுத்த அதிமுகவின் கையூட்டு அரசியலையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் பற்றிய பொதுவிவாதத்தை ஏற்படுத்த தயாராக இல்லை. இது அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல – தமிழ் அடையாளம் என்பதன் உட்கூறுகள் குறித்து விமர்சனபூர்வமாக யோசிக்க நமக்கிருக்கும் தயக்கத்தையே காட்டுகிறது.

மற்றொரு முக்கியப் பிரச்சனை, பெண் விடுதலை தொடர்பானது. பெண்களின் உடல்களில் தான் சாதிகளின் அடையாளம் பொறிக்கப்படுகிறது. அவர்களின் கருவுறும் ஆற்றலின் மீது சாதி குடும்பமும் அதன் ஆணாதிக்கத்தலைமையும் இன்றுமே அதிகாரம் செலுத்திவரும் சூழ்நிலையில் பெண்களின் உடல் மாண்பு, சுய விருப்பம், காதல், மனவிழைவு, மணவாழ்க்கை, தாய்மை கடந்த வாழ்க்கையைத் தேர்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு இருக்கவேண்டிய சுதந்திரம் ஆகியவற்றை தமிழ்ச்சமுதாயம் பொருட்டாக கருதாததோடு, இவை குறித்து அறிவுப்பூர்வமாக விவாதித்த சுய-மரியாதை இயக்க மரபையும் தொலைத்துவிட்டது அல்லது அதனை நினைவுகூர்வதை கவனமாக தவிர்த்து வந்துள்ளது. அப்படியே பேசினாலும் சாதிமறுப்பு திருமணங்களை ஆதரிப்பதுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்று கருதிவிடுகிறது. சாதி குடும்பம், சாதியால் கட்டமைக்கப்பட்ட பொதுவெளி, இவற்றை இயக்கும் ஆணாதிக்கச் சிந்தனை, மனப்பாங்கு ஆகியவற்றை குறித்து யோசிக்கக்கூட தயாராகவில்லை. சாதி அமைப்பை ஏற்காது அதன் பிடியிலிருந்து வெளியேற விரும்பிய பெண்களின் வாழ்வியலுக்கு ஆதரவாக நின்ற சுயமரியாதை இயக்க மரபின் நிழல் கூடு தம்மீது பட்டுவிடக்கூடாது என்ற அன்று முதல் இன்று வரை முற்போக்கு அரசியல் கருத்துகளை கொண்டுள்ள ஆண்களும் கவனமாக இருந்து வந்துள்ளனர்.

முற்போக்கு அரசியலின் முக்கிய கூறாக விளங்கும் இடதுசாரி இயக்கங்கள் சாதி எதிர்ப்பை கையில் எடுக்கத் தவறியதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தலித் தொழிலாளர்களின் பக்கம் நின்று பற்பல போராட்டங்களை நடத்தியபோதிலும், அவர்களின் சமூக மாண்பை நிலைநிறுத்த தீண்டாமையின் பல வடிவங்களை எதிர்த்து செயல்பட்டாலும், சாதி ஒழிப்பு என்பதை தமக்கான முக்கிய இலக்காக, வர்க்கப் போராட்டத்துக்கு இணையான, அதனுடன் சேர்ந்து நடைபெற வேண்டிய போராட்டமாக அண்மைக்காலம் வரை இவ்வியக்கங்கள் இனங்காணவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியவராகிறோம்.
----
கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்கவும் வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும். திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம் என்று நாம் கூறிக்கொண்டாலும், எம்.ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தான் அதிக நாட்களும் தொடர்ச்சியாகவும் ஆட்சி செலுத்தியுள்ளது.

திமுகவின் ஆட்சிக்காலத்தை எடுத்துக்கொண்டால் அது தொடக்கத்தில் மக்கள்நலம்சார் ஆட்சியாக அமையும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாநில சுயாட்சி, நீதியான பொருளாதார வளர்ச்சி, வகுப்புரிமையைப் பாதுகாக்கத் தேவையான சட்டத்திட்டங்கள், சாதி நீக்கம் செய்யப்பட்ட பண்பாட்டு உருவாக்கம் என்று பல விஷயங்கள் இங்கு சாத்தியப்படும் என்று பலர் அன்று நினைத்தனர். 

பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் முன் ஆட்சிப் புரிந்த காங்கிரஸ் ஆட்சி பின்பற்றிய வளர்ச்சி, உற்பத்திசார் திட்டங்களை திமுகவும் பின்பற்றியது. குறிப்பாக வேளாண்துறையில் தொடங்கப்பட்டிருந்த பசுமைப்புரட்சியை இக்கட்சியின் ஆட்சியுமே தொடர்ந்து வளர்த்தது, விரிவுப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகார வலிமைக் கொண்டும் சமரச நடவடிக்கைகளின் மூலமும் இக்கட்சி எதிர்கொண்டது. விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை சமன்படுத்துவதிலும் நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் திமுகவினர் கைவிடவில்லை – வெண்மணி படுகொலை இதற்கு முக்கிய சான்று.

தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட காங்கிரஸ் கொள்கைகளைப் பின்பற்றிய அதேவேகத்தில் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கியொடுக்கவும் திமுகழக ஆட்சியாளர்கள் தயங்கவில்லை. அன்று முக்கிய தொழிலாளர் தலைவராக இருந்த வி.பி.சிந்தனுக்கு நேர்ந்த கதியை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. எந்த மாணவர்களின் போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்ததோ அதே மாணவர்களின் போராட்டங்களை மூர்க்கமாக கையாளவும் திமுக தயங்கவில்லை.

அதே சமயம் வளர்ச்சி, மக்கள்நலம் என்ற இரண்டு விஷயங்களிலும் தனக்குள்ள "அக்கறை"யை ஆட்சியாளர்கள் வெளிபடுத்திக் கொண்டும் வந்தனர். எடுத்துக்காட்டாக, சாலை, போக்குவரத்து துறைகளில் முதலீடு செய்தது, போக்குவரத்து துறையை அரசுடைமையாக்கியது. 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கத் தோதான திட்டங்களை திமுக தான் செயல்படுத்தியது. இதையெல்லாம் செய்த அதேவேளை, வகுப்புரிமையை உத்திரவாதப்படுத்தியது. குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தி நகரப்புற வறிய பிரிவினருக்கான வீட்டு வசதிகளை செய்து கொடுத்தது. மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்களை பொதுவெளியில் தொடர்ந்து நடத்தியது.  முக்கியமாக தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பன அறிவாளிகள் செலுத்தி வந்த மேலாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட அறிவாளர்களின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது. தமிழ் அடையாளத்துக்கு செக்யூலர் உள்ளீட்டை வழங்கியதன் மூலம் தலித்துகளையும் கூட தன்வசப்படுத்தியது.

கையூட்டு அரசியலுக்கு அது வழிவகுத்த போதிலும், உள்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கத் தவறியபோதிலும் தேவைப்பட்ட போது மத்திய அரசுடனும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடனும், ஏன் ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட அரசியல் கூட்டணி ஏற்படுத்திக்கொண்ட போதிலும் தன்னை தமிழர் நலம் காக்கும் கட்சியாக தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டது. – இத்தனைக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை சந்தர்ப்பவாத நிலைப்பாட்டினையே அதுமேற்கொண்டது.

திமுகவின் ஆட்சிக்காலத்தில் தான் சாதி இந்து சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினரின் ஒப்பீட்டளவிலான பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது சாத்தியப்பட்டது. அதேசமயம், நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல, இந்த வளர்ச்சியானது இச்சமுதாயங்களின் சாதிய தன்னிலையை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது. வரலாற்றுப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம், சாதி எதிர்ப்பு என்பதை வகுப்புரிமையுடன் மட்டும் தொடர்புபடுத்திய அரசியல் சிந்தனையும் செயல்பாடும் இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். மேலும், சாதியமைப்பை பத்திரப்படுத்தியுள்ள நிலவுடைமை முறை, சாதிய உளவியல், பண்பாடு, பொது வெளியில் சாதியைக் கடந்த உறவுகள் அவ்வப்போது சாத்தியப்பட்டாலும் பண்பாடு, காதல், குடும்பம் என்று வரும்போது சாதி அடையாளங்கள் தொடர்ந்து முன்நிறுத்தப்படுதல் ஆகியனவற்றை அரசியல்ரீதியாக அணுகுவதற்கான கருத்துநிலையும் அதையொட்டிய செயல்பாடும் முக்கியமானதாக கருதப்படவில்லை. எனவே, சாதி இந்துக்களின் வளர்ச்சியானது ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பரவலாக்கத்தை சாத்தியப்படுத்திய போதிலும் சமுதாய வெளியிலும் நமது அரசியல் ஊடாட்டங்களிலும் ஜனநாயகம் ஆழமாக வேர்க்கொள்ள வித்திடவில்லை – தலித்துகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் வன்முறைகளும், சுயவிமர்சனத்துக்கு இடங்கொடுக்காத "திராவிட" பெருமித அரசியல் சொல்லாடல்களும் ஒன்றுக்கு மற்றொன்று அரண் சேர்த்து உண்மையான ஜனநாயக வளர்ச்சியை தடுத்துள்ளன. முக்கியமாக தலித்துகளுக்கு எதிராக செயல்படும் சாதி இந்து சமுதாயத்தினருக்கு அரசின் பாதுகாப்பு தொடர்ந்து இருந்துகொண்டேவந்துள்ளது.

அடுத்து அதிமுகவின் ஆட்சிகாலங்களை எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் அரசியல், சமுதாய வெளிகளிலிருந்து ஜனநாயகப் பண்புகள் முற்றிலுமாக தூக்கியெறியப்பட்ட ஆட்சிக் காலங்களாக அவை இருந்தன என்று சொல்லலாம். மக்களுக்கான ஆட்சியாக தன்னை அறிவித்துக்கொண்டாலும் மக்களை மதிக்காத, அவர்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது அவர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஆட்சியாகத்தான் ஆதி முதற்கொண்டே இக்கட்சியின் ஆட்சி அமைந்தது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடுதலுக்குப் பதிலாக மாநிலத்தின் நிதியாதாரங்களை கட்சித்தலைமையின் சொந்த கருவூலத்துக்குரிய சொத்தாக பாவித்தே அக்கட்சித்தலைமை செயல்பட்டு வந்தது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட முக்கிய மதிப்புரை ஒன்று அவரின் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி முடக்கப்பட்டதன் விவரங்களையும், அவரின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் மாநிலத்தின் ஜனநாயக வாழ்வில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளையும் பட்டியலிட்டுக் காட்டியது. அவரின் ஆட்சியில் நடந்த என்கவுண்டர் கொலைகள், ஊடகத்துறையை கட்டுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்ட சட்டமாற்றங்கள், சிவில் உரிமைகளுக்காக பாடுபட்ட அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களும் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டது தொடர்பான செய்திகள் ஆகியவற்றை அந்த மதிப்புரை உள்ளடக்கியிருந்தது.  

எம்.ஜி.ஆர் ஆட்சியின் முக்கிய சாதனை சத்துணவுத்திட்டம் தான். அதை சிலாகித்து பேசுபவர்கள் அதற்கு வித்திட்டவர் காமராஜர் என்பதையும் அவருக்கு முன் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சுப்பராயனின் அமைச்சரவை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுவதில்லை. எம்.ஜி.ஆர். இத்திட்டத்தை பரவலாக்கினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை செய்ததன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கான பெரும் வாய்ப்பையும் வெளியையும் அவர் ஏற்படுத்தினார் என்று கொண்டாலும், கல்வி தொடர்பான அவரின் பிற கொள்கைகளுடன் இதனை தொடர்புபடுத்தி பார்க்கவேண்டும் – குறிப்பாக உயர் கல்வி தனியார்மயமாவதற்கான திட்டத்தை தீட்டியவர் அவர்தான். தனியார் கல்லூரிகளில் வகுப்புரிமையை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இங்குள்ள பிற்பட்ட, தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு இருக்கவேண்டிய முக்கிய பொறுப்பை அரசு கைவிடவும் இந்த முடிவு காரணமாக இருந்தது. 
கையூட்டு அரசியல் வளரவும் விரிவடையவும் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக அமைந்தது (இதற்கு முன் ஆட்சிகளும் கட்சிகளும் கையூட்டு அரசியலை பின்பற்றவில்லை என்று கூறிட முடியாது – திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆணையத்தின் முடிவுகள் அக்கட்சித்தலைமைக்கு சாதகமாக அமையவில்லை என்பது வரலாறு). அக்கொள்கையை பின்பற்றி தமிழகத்தின் மூலவளங்களை சூறையாடும் மோசமான வளர்ச்சிப்போக்கை ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற ஆட்சி முன்னெடுத்தது. இத்தகைய சூறையாடுதல் என்பது "இயல்பானதாக" ஆக்கப்பட்டு அதனால் இலாபம் ஈட்டிய தொழிற்குழாம்களும் குடும்பங்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளவும் அவரின் ஆட்சி வழிவகுத்தது. இருந்தும் மக்களின் நல்லாசியையும் ஆதரவையும் பெற எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஏற்றம் பெற்ற சலுகை அரசியலை இவர் அருங்கலையாக உருமாற்றினர்ர் – குறிப்பாக ஏழைப்பெண்கள குறிவைத்து இவரின் சலுகை அரசியல் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியினரின் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்ட அரசியல் வளர்ச்சி என்பது உத்தியாக கையாளப்பட்டது. நமது ஜனநாயக அரசியலில் சாதி சமுதாயங்களின் நலனே மக்கள் நலனாக அறியப்பட்டடு வரும் நிலைமையுள்ள போதிலும், குறிப்பிட்ட சாதியினரின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை மையமிட்ட அரசியலை அதிமுகதான் வெற்றிகரமாகவும் பட்டவார்த்தனமாகவும் கையிலெடுத்தது. சாதி கட்சிகளின் வளர்ச்சிக்கான நியாயங்கள் எவ்வாறானதாக உள்ளபோதிலும், அவற்றுக்கான அரசியல்ரீதியான ஒப்புதலை அதிமுகவின் செயல்பாடுகள் பெற்றுத்தந்தன. இதை செய்த அதேவேளை தலித்துகளுக்கு எதிரான போக்கை அரசு மேற்கொள்வதையும் இக்கட்சிதான் "இயல்பா"க்கியது. தன் பங்கிற்கு திமுகவும் ஆட்சியில் இருக்கையில் இந்தப் போக்கைக் கடைபிடிக்கத் தவறவில்லை.

----
பார்ப்பனரல்லாதார் இயக்கம் கண்டுள்ள மாற்றங்கள், அந்த இயக்கம் வழி உருவான அரசியல் கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் சாதித்தவை, செய்யாதவை, காலம் கிளர்த்தியுள்ள வரலாற்றுப்பூர்வமான மாற்றங்கள் ஆகியவற்றை குறித்த துல்லியமான நுணுக்கமான ஆய்வுகள் நமக்குத் தேவை. அவற்றை மேற்கொள்ளும் மனநிலையும் அவசியம் – வரலாற்று பெருமிதங்களை கடந்து இத்தகைய ஆய்வுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

பெரியார் நமக்கு வலியுறுத்தியவற்றை இங்கு நினைவுகூர்வது அவசியம் - சாதி, பார்ப்பனியம், இந்துமதம், பணக்காரத்தனம் ஆகிய அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்துள்ளவையாகும் என்பதை அவர் சளைக்காமல் கூறிவந்தார். பார்ப்பனர்களின் மேலாண்மை, பணக்காரர்களின் ஆதிக்கம், இந்துமதம் சாற்றும் சாதிக்கொரு நீதி ஆகியவற்றை எதிர்ப்பதும், அவற்றுக்கு மாற்றீடாக பொதுவுடைமை, சமதர்மம், பகுத்தறிவு பேசும் அரசியல், சமுதாயச் செயல்பாடுகள் ஆகியன தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதும் அவசியம் என்பதை தன் வாழ்நாள் முழுக்க சுட்டிக்காட்டினார். அதற்கான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரின் வாதங்களை புதிப்பித்து அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதாக நமது ஆய்வுகளும் விவாதங்களும் அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...