என்ன இப்பதான் உனக்கு விடிஞ்சதா,
ஆன்லைனுக்கு வர இவ்ளோ தாமதம்?
ரொம்பநாளா உள்ளுக்குள்ள ஓடிக்கிட்டிருந்த
ஒரு கதை. எழுதி முடிச்சிடலாம்னு உட்கார்ந்தேன். ரெண்டாம் பத்தியில் சின்னதுரை வாத்தியார்னு
ஒருத்தர் வர்றார். அங்கிருந்து கதையே அவரோடதாக மாறுது. வாத்தியார் பற்றி நாலுவரிதான்
எழுதியிருப்பேன், குறுக்க மறுக்க யோசனை தாவி ஓட்டம் தடைபட்டிருச்சு. முட்டிமோதித் தள்ளியும்
நகரல. பிறகு பார்ப்பம்னு தூக்கிப் போட்டுட்டு இப்பதான் வெளியே வர்றேன்.
என்ன கதை?
ம்... எங்கப்பாவையும் இந்த வாத்தியாரையும்
வைத்து
அதுல என்ன சிக்கல், நீ விறுவிறுன்னு
எழுதிவிடுகிற ஆளாச்சே?
எங்கப்பா சாவுக்கு வந்திருந்த யார் இந்தக்
கதையைப் படித்தாலும், இதில் வர்றவர் சின்னதுரை வாத்தியார்தான்னு யூகிச்சிட்டாங்கன்னா
அவரை அவமதிச்சாப்ல ஆயிடும். அவர் நாற்பது வருசமா மறைச்சு வச்சிருந்த அந்தரங்கத்தை நான்
எழுதி அம்பலப்படுத்திடக்கூடாதே?
அந்தளவுக்கு மறைத்தாக வேண்டிய
விசயமா?
ஆமாம்.
அப்படி என்ன பண்ணினார்?
குழியில் மண் தள்ளப்போற நேரம். வாத்தியாரும்
அவரோட சம்சாரம் அல்லி டீச்சரும் ரோட்டோரம் வண்டிய நிப்பாட்டிட்டு பொழிமேல வேகுவேகுன்னு
வந்துக்கிட்டிருந்தாங்க. ‘ஆன நேரம் ஆச்சு செத்தநேரம் பொறுங்க. அவங்களும் வந்து முகம்
பார்த்துறட்டும். பாவம் நரிப்பள்ளியிலிருந்து வர்றாங்க’ன்னு
அவங்களுக்காக நிறுத்தினோம். நம்மளால நிற்குதேன்ற பதைப்பு அவங்களுக்கும் இருக்குமில்ல,
அரக்கப்பரக்க ஓட்டமும் நடையுமா ரெண்டாளும் குழிமாட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. வாத்தியார்
கைப்பையிலிருந்து மாலையைத்தான் எடுக்கிறார்னு பார்த்தால் புது வேட்டி சட்டை திமுக கரைபோட்ட
துண்டு. ‘கோடித்துணி போர்த்துறதுக்கு நான் உங்க உறவுமுறையில்ல. உங்க வழக்கத்துக்கு
பாதகமில்லேன்னா இதுகளை அண்ணன் காலடியில் வைத்து மண்தள்ளுங்க...’ என்றார் தளுதளுக்க.
‘அரணாக்கயிறைக்கூட
அறுத்துட்டு புதைக்கிறதுதானே நம்ம வழக்கம். இப்படி புது உடுப்போட பொதைச்சு அதை எடுக்குற ஆசையில யாராச்சும்
குழிய மறுக்கா தோண்டிட்டாங்கன்னா...?’. ஊர் வாரியான் கேட்டதற்கு ‘அப்படியெல்லாம் யாரு
எடுக்கமாட்டாங்க. மீறி எடுத்தால் பார்த்துக்கலாம்’னு நான் அடமாக நின்னதால் வாத்தியார் கொடுத்த துணிகளை
அப்பா காலடியில் வைத்து அடக்கம் முடித்தோம்.
வினோதமா அவர் இப்படி துணிமணி
வாங்கி வந்ததுக்கு என்ன காரணம்?
இதே கேள்விதான் சாவுக்கு வந்திருந்த
எல்லாருக்குமே. ‘நம்ம காளியப்பனுக்கு எப்பவும் கட்சியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்ததுதானே.
டீச்சர் ட்ரெய்னிங் முடிச்சிட்டு போஸ்டிங் வராம காட்டுவேலை பாத்துக்கிட்டிருந்த இந்த
சின்னதுரையை காளியப்பன் தான் மெட்ராசுக்கு கூட்டிப்போய் சத்தியவாணிமுத்துவையோ சாதிக்பாட்சாவையோ
பார்த்து வேலைக்கு ஏற்பாடு செஞ்சதாக ஒரு பேச்சுண்டு.
அந்த விசுவாசத்துக்கு இப்படி செய்திருக்கலாம்’னு பேசிக்கிட்டாங்க.
ஓ, உண்மையும் அதுதானா?
அவரோட வேலை விசயமா எங்கப்பா சில உதவிகள்
செய்தது உண்மைதானாம். ஆனால் இவர் துணிமணி எடுத்து வந்ததுக்கு வேறு காரணம் இருக்குன்னு
எங்கம்மா ஒரு விசயத்தை சொன்னப்பதான் எனக்கும் ஞாபகம் வந்தது.
ஆனா, எனக்கு தெரிய உங்கப்பா
ஏடிஎம்கேல தானே இருந்தார். அவருக்கு ஏன் வாத்தியார் திமுக கரை துண்டு எடுத்தாந்தார்?
அந்தத் துண்டோட இருந்த எங்கப்பா தான்
அவரை ஈர்த்தவராம்.
ஓ..
எங்கப்பா 55 முதலே திமுககாரர். திருச்சியில்
1956ல் நடந்த ரெண்டாவது மாநில மாநாட்டுக்கு எங்கூர்லயிருந்து 10பேரை அழைத்துப் போயிருக்கிறார். சேலத்தில் கட்சித்தலைவர்களோடு
நல்ல பழக்கம். தலைமைக்கழக பேச்சாளர்கள் பலரோடும்கூட பரிச்சயம். அதைவிட முக்கியம் எம்.ஜி.ஆரால்
பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு அவருக்கு நெருக்கமாக அப்பா இருந்தார். பிற்பாடு திமுக
ஆட்சிக்கு வந்த தேர்தல்ல இவருக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்காமல் போனது துயரமான ஒரு தனிக்கதை.
1966ல் நாங்க நிலம் வாங்கி இங்கே வந்து
குடியேறினப்ப எங்க கொட்டாய்க்கு அடையாளமே கூரை உச்சியில் பறக்கிற திமுக கொடிதான். இந்த
சின்னதுரை வாத்தியாரும் (அப்ப வாத்தியார் இல்ல. டீச்சர் ட்ரெய்னிங் படிச்சிக்கிட்டிருந்திருந்தாராம்)
அவரோட சேக்காளிங்க பத்திருபது பேரும் இது யாருடா புதுசா இப்படி ஒரு திமுக ஆள் நம்மூருக்கு
வந்திருக்கிறதுன்னு எங்கப்பாவை வந்து பார்த்திருக்காங்க.
நாங்க இங்க வந்தப்புறமும் அப்பா பத்துநாளைக்கு
ஒருக்கா துணிகளை சேலத்துலதான் லாண்டரிக்கு கொண்டுபோய் கொடுப்பார். அங்கத்திய சலவையில்
அவருக்கு அப்படியொரு திருப்தி. இங்கேயே இருந்த சலவைக்காரர் ராஜி ‘ஏன் காளீப்பா நாங்களும்தான்
வெளுக்குறோம். ஆனா, இந்த வெளுப்பு வரலியேன்னு கேட்க, அப்பாதான் சேலத்திலிருந்து டினோபால் பவுடர் வாங்கியாந்து கொடுத்து அந்தப் பவுடர் கரைசலில்
அலசியெடுப்பதால் வரும் பளீர் வெளுப்பை அவருக்கு காட்டித் தந்திருக்கிறார். அதிலிருந்து
அப்பா அவரிடமே துணிகளைக் கொடுத்தார். ஆனாலும் 67 தேர்தல்ல ஓமலூர் ரிசர்வ் தொகுதிக்கு
எங்கப்பா சீட் கேட்டிருந்த தகவலை பிற்பாடு தெரிந்துகொண்ட இந்த ஊர்க்காரர்கள் அந்த எஸ்.சி.ஆளுக்கு
துணி வெளுக்கக்கூடாதுன்னு மிரட்டியும்கூட ராஜி பின்வாங்கவில்லை.
அதுவரைக்கும் உங்க சாதி என்னன்னு
அந்த ஊர்க்காரங்களுக்குத் தெரியாதா?
வேற ஊர்லயிருந்து வந்து குடியேறி - அதுவும்
காட்டுக் கொட்டாய்ல குடியேறி- கொஞ்சநாள்தான் ஆகியிருந்ததாலயும் எங்கப்பாவோட தோற்றம்
தொடர்பு இதையெல்லாம் வைத்தும் உடனடியா கண்டுபிடிக்க முடியல போல. ரிசர்வ் தொகுதிக்கு
சீட் கேட்டாருன்னதுமே அவங்களுக்கு தேவையான தகவல் கிடைச்சிடுதில்லையா?
‘இடுப்புல கட்டுடான்னா
தரையைக் கூட்டிக்கிட்டு திரியுறான்’. ‘அவங்கம்மா ரோடு போடுறா,
இவன் அதை அன்னாடம் கூட்டுறான்’னு ஆளாளுக்கு கேலி பேசுமளவுக்கு
காலிறங்க தரைபுரளத் தான் அப்பா வேட்டி கட்டுவார். இன்னும் சிலபேர் ‘முழங்காலுக்கு கீழ
தெரியுறாப்ல வேட்டி கட்டினா அபராதம் கட்டுற சாதில பொறந்தவனுக்கு வந்த பகுமானத்த பாத்தியா?’,
‘எல்லாம் அந்த பெரியாரும் அம்பேத்கரும் செஞ்ச கேடு. இல்லன்னா இவனெல்லாம் இப்படி தோள்ல
துண்டு போடுவானா? கக்கத்துல துண்டை இடுக்கினு கையில செருப்பத் தூக்கினில்ல திரிஞ்சிருப்பான்’னு கறுவிக்கிட்டிருப்பாங்க.
அப்பாவுக்கு இதெல்லாம் பொருட்டேயில்ல.
கண் கூசுமளவுக்கு வெளேர்னு எட்டுமுழ கைத்தறி வேட்டி. முழங்கை வரைக்கும் ஏற்றி மடித்த
முழுக்கைச் சட்டை, கருப்புசிவப்பு சன்னக்கரையோடின துண்டு, வார் வைத்த தோல்செருப்பு,
கடியாரம்னு மிடுக்கான தோற்றத்தில் தான் எங்கப்பா எப்பவும் வெளியே கிளம்புவார். வேறு
பகட்டோ ஆடம்பரமோ இருக்காது. ஆனால் அதுக்கே கொத்துக்காரி ரோடுபோட்டு சம்பாதிக்கிறதையெல்லாம்
இவன் துணிபோட்டே அழிக்கிறான், மிராசாட்டம் மினுக்குறான்னு அக்கம்பக்கம் பொருமல்.
ஆனால் சின்னதுரை ஜமாவுக்கு எங்கப்பாவோட
தோற்றம், பேச்சு, அரசியல் தொடர்பு இதெல்லாம் ஈர்ப்பா இருந்திருக்கு. அந்த காளீப்பனோட
நெறமும் குணமும் தெரிஞ்சும் இப்படி சாதிகெட்டு பழகுறானுங்களே இந்தப் பயல்கள்னு ஊராட்கள்
தடுத்ததையும் கேட்காமல் சின்னதுரையும் அவரது கூட்டாளிகளும் எங்கப்பாக்கிட்ட எப்பவும்போல
ஒட்டுறவாகத்தான் இருந்தாங்க. இவங்கெல்லாம் சேர்ந்துதான் முதமுதல்ல வெள்ளிக்குளம் திமுக
கிளைக்கழகம் ஆரம்பிச்சிருக்காங்க.
சின்னதுரை சாருக்கு ட்ரெய்னிங் போயிருந்தப்ப
பழக்கமாகியிருந்த அல்லி டீச்சரை கல்யாணம் முடிக்க ஆசை. அந்த டீச்சரம்மாவுக்கும் தான்.
ஆனா ரேகை வைத்த சாதிப்பையன் வேண்டாம்னு அவங்க வீட்டாள்கள் ஒத்துக்கல. எங்கப்பா தான்
தலையிட்டு...
ஏய், இருயிரு. ரேகை வைத்த
சாதினா என்னன்னு முதல்ல சொல்லிட்டு மேலே போ.
கிரிமினல் ட்ரைப்ஸ் - குற்றப்பரம்பரையினர்-
அதாவது நாட்டுல நடக்குற குற்றங்களையெல்லாம் செய்கிறவர்கள்னு பிரிட்டிஷ் ஆட்சியால் அறிவிக்கப்பட்டிருந்த
பல சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவர். எட்டுவயசுக்கு மேற்பட்ட இந்தச் சாதி ஆண்கள் எல்லாருமே
ராத்திரியானால் போலிஸ் ஸ்டேசன்ல இல்லாட்டி கிராம முன்சீப்கிட்ட கைரேகை பதிச்சுட்டு
அவங்க காட்டுற இடத்தில் படுத்திருந்துவிட்டு
விடிஞ்சப்புறம்தான் வீடு திரும்பமுடியும்.
ச்சே, என்ன கொடூரம்...
நீ இதை கேள்விப்பட்டிருப்பேன்னு நினைத்தேன்.
எந்தச் சாதியில்தான் குற்றவாளி இல்லை? ஒரு சாதியில் பிறந்த எல்லாருமே குற்றவாளியாகத்தான்
இருப்பாங்கன்னு முத்திரை குத்துவது என்ன நியாயம்? எப்படி அந்த மக்கள் பொறுப்பாங்க?
அங்கங்கே நிறைய போராட்டங்கள் நடந்திருக்கு. ஆணும் பெண்ணுமாக பலபேர் செத்திருக்காங்க.
நம்ம சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இதெல்லாம் ஒற்றைவரியாகக்கூட இல்லை. போராடினவங்களுக்கும்
இது ஒரு கோரிக்கையாக இல்லை.
ம்ம். அவங்களுக்கே அக்கறை
இல்லாத இந்த வரலாறு புவியியலையெல்லாம் நாமெதுக்கு இவ்வளவு நேரம் பேசணும்? லவ் மேட்டருக்கு
வா.
லவ் மேட்டரா? ஏதோ இலக்கியம் சினிமா அரசியல்னு
சாட் பண்ணிக்கிட்டிருக்கோம்னு நினைச்சேன். நீ லவ்வா கன்வர்ட் பண்ணிட்டியா? மூணாம் பேருக்கு
தெரியும் முன்னாடி இந்த நினைப்பை மூட்டைக்கட்டி வை பொண்ணே.
அடச்சீ கிழமே, உனக்கு இந்த
நெனப்பு வேறயா? சின்னதுரை அல்லி விசயத்த சொல்லுய்யா.
ஓ அதுவா, சின்னதுரை சார் எங்கப்பாக்கிட்ட
விசயத்தை சொன்னதும் இவர் நேரா அல்லி டீச்சர் வீட்டாரிடம் பேசப் போயிருக்கிறார். முதல்ல
அவங்க ஒத்துக்கல போல. இவர் தான் மல்லுக்கட்டி சம்மதிக்க வச்சிருக்கார். ஆனால் ரெண்டுபேர்ல
ஒருத்தருக்காவது போஸ்டிங் ஆர்டர் வந்தப்புறம் தான் கல்யாணம்னு சொல்லியிருக்காங்க. அதுவும்
சரிதானே... வேலை இல்லாம இருக்கிறப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னன்னு பிழைக்க? வேலைக்கு
நானாச்சு பொறுப்புன்னு சொல்லிட்டு வந்த எங்கப்பா அந்த வாரமே சின்னதுரை சாரை கூட்டிக்கிட்டு
அவரோட போஸ்டிங் விசயமா மெட்ராஸ் போய்ட்டு வந்தார்.
மெட்ராசிலிருந்து அவர் ஊர் திரும்பி
ஒரு நாலைந்துநாள் இருக்கும். அன்னிக்கு ராத்திரி நான், எங்க தாத்தம்மா, தம்பிங்க, தங்கைங்க
எல்லாரும் எப்பவும்போல அந்த புரட்டாசி குளுர்லயும் வாசல்ல உட்கார்ந்திருக்கோம். ராச்சாப்பாடு
போய்க்கிட்டிருக்கு. எங்கப்பாவும் அவரோட நண்பர் சவரிமுத்துவும் தாவரத்தில் உட்கார்ந்து
ராந்தல் வெளிச்சத்தில் முரசொலியை படிச்சிக்கிட்டிருந்தாங்க. திமுக பொதுக்குழு முடிவுகளை
விளக்கி கடற்கரையில நடந்த பொதுக் கூட்டத்தில் கலைஞர் பேசிய பேச்சு தலைப்புச்செய்தியா
வந்திருந்தது.
“என் மடியில்
ஒரு கனி விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்; அதுதான் எம்ஜிஆர்
என்றாய் நீ! நீ மறைந்த போது உன் இதயத்தை நான் கேட்டேன். அந்தக் கனியோடு உன் இதயத்தை
எனக்குத் தந்தாய்!. கனியை வண்டு துளைத்து விட்டது; இதயத்தை துளைக்குமுன்பு அதை எடுத்தெறிந்துவிட்டேன்!
என் அண்ணனே என்னை மன்னித்துவிடு!’’. ‘திருக்கழுக்குன்றம் பொதுக் கூட்டத்தில் தலைவர்
பேசினதை கேட்டப்பவே இப்படி ஏதோ நடக்கப்போகுதுன்னு தோனுச்சு. இந்தா கதைய முடிச்சிட்டு மு.க. என்னவொரு வாய்ஜாலம் காட்டியிருக்காரு
பாத்தியா..’ன்னு பொருமின சவரிமுத்து சடார்னு முரசொலியை எரித்தார். என்ன சவரி, நாம்
இப்பவரைக்கும் திமுக தான், அது நம்ம கட்சியோட பத்திரிகை. நமக்கு தலைவரை பிடிக்கும்.
ஆனால் மு.க. நமக்கொன்னும் எதிரியில்ல’ என்று அப்பா தீயை அணைத்தார்.
ரொம்ப மெச்சூர்டா இருக்கே
உங்கப்பாவோட அப்ரோச்...
மேலுக்கு அப்படிதான் தெரியும். அப்பா
அப்போதைக்கு அப்படி சொன்னாலும் அவருக்கும் கோபம் இருந்தது. அது எம்.ஜி.ஆரை நீக்கிய
கோபமா அல்லது தனக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்காமப் போனதால உள்ளுக்குள் பதுங்கியிருந்த
குமைச்சலான்னு தெரியல. ஆனால் திமுகவிலிருந்து எம்ஜிஆரை நீக்கினதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு
உடுமலைப்பேட்டை இஸ்மாயில்னு ஒருத்தர் தீக்குளித்து இறந்துபோனதாக கிடைத்திருந்த செய்தியால
அவர் ரொம்பவும் கொந்தளிப்பாக இருந்தார்னு தெரியும்.
நாமளும் ஏதாவது செய்தாகணும்னு ரொம்பவும்
ஆவேசமா பேசுறதும் கொஞ்சநேரம் அமைதியா யோசிக்கிறதுமா இருந்தாங்க ரெண்டுபேரும். ரோட்டோரத்தில்
இருக்குற எங்க சோளக்காட்டுக்குள் மறைந்திருந்து கல் வீசி இந்த மார்க்கமா ராத்திரில
சேலம் கோவை சென்னை திருப்பதிக்குப் போய்வரும் டிடிசி - திருவள்ளுவர் போக்குவரத்துக்கழக
- எக்ஸ்பிரஸ் பஸ்களை சேதப்படுத்துறதுதான் அவங்களோட
முதல் திட்டம். ஆனா கல்லடியில் சனங்களுக்கு ஏதாச்சும் பாதிப்பாயிட்டால் அது தலைவருக்குதான்
கெட்டப்பேர் உண்டாக்கும்னு அந்தத் திட்டத்தை கைவிட்டாங்க. அதுக்கு பதிலா ரோட்டுல குண்டாங்கல்லுகளை
உருட்டிப்போட்டு பஸ்களை தடுத்து நிறுத்தி ஆட்களை இறக்கிவிட்டுட்டு கண்ணாடிகளை உடைத்து
சேதப்படுத்துறது இல்லன்னா ஒன்னு ரெண்டு பஸ்ஸை கொளுத்துறது. கொளுத்தின கையோட பொம்மிடிக்கோ மொரப்பூருக்கோ போய்
ரயிலேறி மெட்ராஸ் போய் தலைவரை பார்க்கிறதுன்னு பேசிக்கிட்டிருக்கிறப்ப தான் கொட்டாய்க்கு
அள்ளையிலிருந்து யாரோ வர்றது தெரிஞ்சிருக்கு. எம்.ஜி.ஆர். சப்போர்ட்டர்ஸ்னு தெரிகிறவங்களை
அரஸ்ட் பண்றதா தகவல் இருந்ததால போலிஸ்தான் வருதோன்னு கிணத்துப்பக்கம் பதுங்கப்போன எங்கப்பாவும்
சவரிமுத்து மாமாவும் வந்தது போலிசில்ல, சின்னதுரை வாத்தியார்னு தெரிஞ்சதும் சிரிச்சிக்கிட்டாங்க.
சின்னதுரையும் எம்.ஜி.ஆர். விசயமாத்தான்
வந்திருக்கிறதா நினைச்சுக்கிட்டு ‘நியூஸ் தெரிஞ்சு நீ மட்டும் எப்படி நிம்மதியா இருந்திருப்ப’ன்னார் சவரிமுத்து. ஒன்றும் சொல்லாமலிருந்த சின்னதுரையிடம் ‘ஏம்பா,
இம்மாம்பெரிய ஐவேஸ் இருக்கு நீ என்னடான்னா குள்ளநரியும் முள்ளம்பன்னியும் குறுக்கும்மறுக்குமா
திரியுற கரட்டுக்குள்ள பூந்து வந்திருக்கியே இந்நேரத்துக்கு’னு
எங்கப்பா கடிந்துகொண்டார்.
பிறகு பலதும் பேசிக்கிட்டிருந்தவங்க,
மல்லிகா பஸ் போனதைப் பார்த்ததும் ‘நேரம் போனதே தெரீல, பத்து மணியாயிடுச்சே. படுத்தெழுந்து
கோழிகூப்பிட பார்ப்பம்’னு கலைந்தார்கள். சவரிமுத்தோட போன சின்னதுரை
ரோடு ஏறினதும் ‘நீ போய்க்கிட்டே இரு மாமா நான் காளியப்பண்ணன்கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை
சொல்ல மறந்துட்டேன். சொல்லிட்டு விசுக்குனு வந்துர்றேன்’னு
மறுக்கா கொட்டாய்க்கு வந்தார்.
எதுக்கு?
பொண்ணு வீடு பார்க்க முறையா சொந்தபந்தங்களோட
வரச் சொல்லி தனக்கு வந்த லெட்டரை எங்கப்பாக்கிட்ட காட்டத்தான் சின்னதுரை முன்னாடி வந்திருந்திருக்கிறார்.
வந்த இடத்தில் தாய்மாமன் சவரிமுத்துவைப் பார்த்ததும் சொல்லாமல் போன இந்த விசயத்தை சொல்லத்தான்
இப்ப மறுக்கா வந்தது. ‘எப்ப போகணும்’றார் அப்பா. ‘நாளை புதன்கிழமை,
நல்லநாள் போய்ட்டு வந்துடலாம்னுது அம்மா. நீங்களும் வரணும்ணா’
- சின்னதுரை. ‘சரி, நான் உன்கூட வந்துட்டு
அங்கிருந்து மெட்ராஸ் போய்க்கிறேன்’னு அப்பா சொன்னப்புறமும்
சின்னதுரை எதையோ சொல்லத்தயங்கி நின்னதை யூகிச்சிட்டு ‘வேறு
விசயம் எதாச்சும் இருக்கா தம்பி’ன்றார்.
அமைதியாக இருந்த சின்னதுரை, ‘என்னண்ணா
பொழப்பு இது? பொண்ணு பார்க்கப் போறப்ப போட்டுனு போறதுக்குகூட நல்லதா ஒரு உருப்படி துணி
இல்லாத எனக்கெல்லாம் இப்ப கல்யாணம் எதுக்குனு தோனுது’ன்னு
தேம்புறார். ‘அடச்சே இதுக்கா இப்படி மருகிறே... நாளைக்கே போஸ்டிங் வந்துட்டா உன்னூட்டு
தரித்திரம் ஒழிஞ்சிடப்போகுது. அந்தப் பிள்ளையும் சம்பாதிக்கப் போறாள். வேறென்ன வேணும்?’னு
அப்பா அவரைத் தேற்றினார்.
பிறகு கொட்டாய்க்குள் போனவர் இன்னும்
பிரிக்காதிருந்த ஒரு பொட்டலத்தைக் எடுத்தாந்து அவரிடம் கொடுத்து, ‘என் சைஸ் உனக்கு
சரியாத்தான் இருக்கும், போட்டுப்பார்’னார். ராந்தல் வெளிச்சத்தில்
வைத்து ‘பஷீர் டிரஸ்மேக்கர்ஸ்’ன்ற உறையைப் பிரித்துப் பார்த்த
சின்னதுரை ‘அய்யோ அண்ணா இது புதுச் சட்டையா இருக்கு, வேணாம். உங்க சலவைச்சட்டையும்
வேட்டியும் குடுங்க, அதுவே போதும். ஊராள்களுக்குத் தெரியாம கொண்டாந்து திருப்பிக் கொடுத்துடறேன்’னார். எங்கப்பா பிடிவாதமா மறுத்து ‘மாப்பிள்ளனா மாப்பிள்ள மாதிரிதான்
இருக்கணும். பளீர்னு இந்த பாப்ளின் புதுச்சட்டையிலதான் நீ பொண்ணு பார்க்க வர்றே’னு சொல்லிட்டார். ‘பஸ் சார்ஜ்க்கு பயப்படாத, வா பாத்துக்குவம்’னு சொல்லி வழியனுப்புறப்ப ‘போஸ்டிங் வர்ற இந்த சமயத்துல உன்பேர்
கட்சி சம்பந்தமான எதிலும் அடிபட வேணாம், கவனம்’னார் அப்பா.
ஓ, அந்த வேட்டி சட்டை கணக்கைத்தான்
உங்கப்பாவோட குழியில வச்சு நேர் செய்துக்கிட்டாரா சின்னதுரை?
ஆமா. ‘சின்னதுரை துணி வாங்கிப்போற விசயம்
அவங்காளுங்க காதுக்கு போகக்கூடாது. எளக்காரம் பேசி ஏலம் விட்டுருவானுங்க’னு அப்பா எச்சரிச்சதால நாங்க யார்ட்டயும் சொன்னதில்ல. இப்பகூட அவர் அப்பா சாவுக்கு துணியெடுத்து வரலன்னா இதை எழுதணும்னு
நான் நினைச்சிருக்கவேமாட்டேன்.
அதை உங்கப்பா உயிரோடிருந்தப்பவே
சின்னதுரை செய்திருக்கலாமே?
நானும் இதையேதான் அவர்ட்ட கேட்டேன்.
தன்னோட கல்யாணத்துக்கு, அதுக்கடுத்து வந்த கிருஸ்துமசுக்கு, வீடு பால் காய்ச்சுக்கு-ன்னு
துணியெடுக்கப் போனப்பவெல்லாம் வாத்தியார் வற்புறுத்தியும்கூட எங்கப்பா மறுத்துட்டாராம்.
ஒருதடவை கோப்டெக்ஸ்ல வாத்தியாருக்கு துணிக்கடன் கிடைச்சப்ப உங்களுக்கு பிடிச்ச கைத்தறி
வேட்டி வாங்கலாம்ணே வாங்கன்னு அப்பாவை கூப்பிட்டிருக்கார். ‘நா உனக்கு கடனா கொடுக்கல.
ஆனா நீ கடன் வாங்கியாச்சும் என் கடனை அடைக்க நினைக்கிறியா?’ன்னு வருத்தப் பட்டாராம்.
அதுக்கப்புறம் அந்த முயற்சியை கைவிட்ட சின்னதுரை வாத்தியார் ‘இப்பவும் விட்டுட்டேன்னா
நான் எப்பதான் அவருக்கு என் காணிக்கையை தர்றதுன்னுதான் ஓடியாந்தேன்’னு அழுதார்.
அவர் காணிக்கையா தரணும்னு நினைச்சதை
எங்கப்பா தான் தவறாக கடனா நினைச்சிருக்கார். இந்த விசயத்தை இவ்வளவுகாலமும் ஞாபகத்துல
வச்சிருந்து நிறைவேத்தின வாத்தியாரோட குணத்தைப் பற்றி நான் எழுதினாலும் அது அவர் எங்கப்பாக்கிட்ட
துணிவாங்கிப் போட்ட விசயத்தையும் வெளிப்படுத்திடும் இல்லையா? அவரோட சாதியாட்கள் இதை
சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்க. போயும் போயும் அந்தச் சாதியான்கிட்ட துணிவாங்கிப் போட்டவன்
குடும்பம்தானேன்னு கேவலமா பேசுவாங்க.
ம், புரியுது. நீ இந்தக் கதையை
எழுதாம இருக்கிறதுதான் அவங்க ரெண்டுபேருக்குமான மரியாதை. ஆனா இதேவேகத்துல, 1967 தேர்தல்ல
உங்கப்பாவுக்கு சீட் கிடைக்காதது துயரமான தனிக்கதைன்னு சொன்னியே அதை எழுதேன்.
ஆமா, எழுதணும். ஒரு இயக்கம் கொடுக்குற
உள்வலிமையால பொதுவெளிக்கு வர்ற எங்கப்பா மாதிரியான சாமானியர்களை இங்கிருக்கிற சாதியம்
எப்படி மறிச்சு திருப்பியனுப்ப கபடம் செய்யும் - அதை எதிர்கொள்ள இவங்க எப்படியான நுட்பத்தையும் வியூகத்தையும்
கையாண்டு நிலைநின்றார்கள்னு சொல்ல அந்தக் கதையை எழுதித்தானாகணும்.
நன்றி: செம்மலர், 2020 பிப்ரவரி இதழ்
கதையின் கதை நல்லாருக்கே
பதிலளிநீக்குதோழர்.அற்புதமாக கதை.உண்மையும் கதையும் கலந்த கதை.
பதிலளிநீக்கு