புதன், பிப்ரவரி 12

வாழும் கடந்த காலம் - ஆதவன் தீட்சண்யா

கீழடியின் இதுவரையான தரவுகளின்படி 2700ஆண்டுகளுக்கு முன் சாதிமத அடையாளமற்றோராக இருந்துள்ள தமிழர்கள், இத்தொல்பெருமைக்கு பொருந்தாக்குணத்துடன் ஆரிய வழித்தோன்றல்களெனும் பார்ப்பனர்கள் தலைமையிலான 443 பெருஞ்சாதிகளாக பிளவுண்டிருக்கின்றனர். இப்பாகுபாட்டுக்கு எதிர்வினையாக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றெழுந்த சமத்துவ விழுமியம் இங்கு வாழ்வியல் நெறியாக மேலெழவில்லை.

கல்விப்பரவல், தொழில்வளர்ச்சி, நகரமயமாக்கம், நவீன கருத்தியல் முன்னெடுப்புகள் ஆகியவற்றின் முன்னோடி மாநிலமாக தோற்றம் காட்டினாலும் சாதியே தமிழக மக்களின் முதன்மையான அடையாளமாக இருக்கிறது. இவர்கள் முற்பட்ட சாதியினர்-79, பிற்படுத்தப்பட்ட சாதிகள்-136, பிற்படுத்தப்பட்ட சாதிகள் (முஸ்லிம்)-7, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள்-41, சீர்மரபினர்-68,  பட்டியல் சாதிகள்-76, பட்டியல் பழங்குடிகள்-36 என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எந்தவொரு சாதியின் மரியாதையும் இழிவும் அது பார்ப்பனர்களுக்கு எவ்வளவு அருகில்/ தொலைவில் இருக்கிறது என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறதேயன்றி எந்த வகைப்பாட்டிற்குள் இருக்கிறது என்பதைப் பொறுத்தல்ல. ஏதேனுமொரு வகைமை கலைக்கப்பட்டாலும் அல்லது அதிலிருக்கும் சாதிகள் வேறு வகைமைக்கு மாற்றப்பட்டாலும்கூட சாதியடுக்கில் அதன் அமைவிட வரிசையை மாற்றியமைக்க முடியாது.

பார்ப்பனீயமயமாக்கலின் அடுத்தச்சுற்று, பார்ப்பனீய எதிர்மரபினூடாக தமிழ்ச்சமூகம் ஈட்டெடுத்த எல்லா முன்னேற்றங்களையும் அழித்தொழிப்பதில் கவனம் குவித்துள்ளது. அது சுயசாதிப் பெருமிதத்துடன் பிறசாதிகளை தீட்டுக்குரியனவாக கருதுகிற பார்ப்பன ஒழுங்குகளை கடைபிடிக்குமாறு ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஊடுருவி அரித்துவருகிறது. பார்ப்பனரல்லாதார் தத்தமது சாதியை விதந்தோதும் தொல்கதைகளையும் சடங்குகளையும் வேதக்கடவுளர்களின் அவதாரம் லீலை வரம் சாபம் புண்ணியம் பாவம் ஆகியவற்றோடு இணைப்பதன் மூலம் சாதியடுக்கு மற்றும் சடங்கியல் தலைமையாக பார்ப்பனர்கள் நீடிப்பதை கேள்விக்கு அப்பாற்பட்டதாக மறுவுறுதி செய்துவருகிறது. அவர்களில் கொடிய குற்றவாளிகள்கூட நாட்டின் சட்டங்களால் தொடமுடியாத பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கின்றனர். மனுஸ்மிருதி அமலில் உள்ளதைப்போல பார்ப்பனர்கள் தமிழ்ச்சமூகத்தின் மீது செல்வாக்கு பெற்றுள்ளனர்.

திராவிடத் தனித்துவம் பேணாத பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்கள் மீதான கண்டனங்களை இடைமறித்து ஏற்கும் காலாட்படையாக சிறுமைப்பட்டுள்ளனர். ‘ஆநிரை கவர்ந்து’ கொழுத்த மாடுகளை பகிர்ந்துண்ட தமது சங்ககால பாரம்பரியத்தை மறைக்கும் இவர்களுக்கு, இன்று அதே உணவுத்தொடர்ச்சியை கடைபிடிப்போர் மீதான ஒவ்வாமை பார்ப்பனர்களிடமிருந்து இரவலாகப் பெற்றதே. இவர்களுக்குள் உள்முரண்கள் பலவாயினும் தலித்துகளை ஒடுக்குவதில் ஒன்றுபட்டுள்ளனர். சமூகநீதிக்கான போராட்டத்தால் பன்முக வாய்ப்பினைப் பெற்றுள்ள இவர்கள் தலித்துகள் மட்டும் அதே இழிநிலையிலேயே உழலவேண்டுமென எதிர்பார்த்து நிகழ்த்தும் வன்கொடுமைகள் மனிதத்தன்மையற்றவை.

சாதிகடந்த திருமணங்கள் கடந்த ஐம்பதாண்டுகளாக 5சதமளவுக்கே தேங்கியுள்ள தேசிய சராசரிக்கும் கீழானது தமிழகத்தின் நிலை. 97% திருமணங்கள் சொந்த சாதிக்குள்ளேயே நடப்பதானது, இங்கு அகமண முறையின் இறுக்கத்தையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும் குறிக்கிறது. சாதியப்பிடிமானம் இயல்பான உணர்வாகவும் சாதியெதிர்ப்போ எதிர் உணர்வாகவும் இருக்கிறது. இவ்விரு நிலைகளுக்குமான விகிதத்தை மாற்றியமைப்பதற்கான நிகழ்ச்சிநிரல் தமிழகத்தில் யாரிடமும் இப்போதைக்கு இல்லை என்பது குற்றச்சாட்டல்ல, விவாதத்திற்கான முன்மொழிவே. 

- நமது ஏகலைவன் மாத இதழ், ஜனவரி 2020 



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...