தமிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களது வேலைநேரத்தை 8மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஏப் 21 அன்று திமுக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அன்றைக்கு காலை சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி போன்ற தோழர்கள் முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டாமென்றும், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சரும் சம்மதித்திருந்த நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடமிருந்தும் தோழமைக்கட்சியினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தச் சட்டத்திருத்தம் பற்றி இன்று தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப் போவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வந்து அரசுடன் கலந்துபேசியதை மட்டும் வைத்துக்கொண்டு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப்போவதாக அறிவித்திருப்பதானது மிகவும் காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற நடவடிக்கை. எதிர்ப்புக்கு செவிமடுக்கிற ஜனநாயகப்பண்பு இந்த அரசிடம் எந்தளவுக்கு உள்ளது என்பதற்கு இந்த அழைப்பை ஓர் அளவுகோலாக கருதமுடியாது. அது பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தது.
எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்தே அதை தகர்த்ததன் மூலம் திமுக அரசு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கே துரோகம் செய்துள்ளது. இதைச் சொன்னதுமே சீனாவில் இல்லையா என்கிற கேள்வி சாமர்த்தியமாக முன்வைக்கப்படுகிறது. சீன அரசு தொழிலாளர் விரோதப் பாதையில் செல்லுமானால் அதை அந்நாட்டின் தொழிலாளிகள் எதிர்ப்பார்கள். ஒருமைப்பாட்டுணர்வில் நாமும் எதிர்ப்போம். தொழில் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமென சீனாவிலிருந்து பின்பற்றத்தக்க எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது அங்கு தோல்வியடைந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட ஒரு விசயத்தைத்தான் திமுக அரசு பின்பற்ற வேண்டுமா? (இந்த ஆண்டு அங்கு மேதினக் கொண்டாட்டத்திற்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது)
996 வேலைநாள் – அதாவது காலை
9 மணி முதல் இரவு 9 மணிவரை – 6 நாட்கள் - என்கிற கருத்தாக்கம் சீனாவில் அறிமுகமானது.
இது, நாளொன்றுக்கு எட்டுமணி நேரம், அதிகப்படியாக வாரத்திற்கு 44 மணிநேரம் என்கிற சீனாவின்
வேலைநாள் சட்டத்திற்கு விரோதமானது, தாராளவாதக் கொள்கையை நோக்கி சீன அரசு சரிகிறது என்று
அறிமுக நிலையிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் இந்த 996 வேலைமுறையை ஏற்கவிரும்பும்
நிறுவனம் அதன் தொழிலாளர் அமைப்புகளுடன் பேசி இந்த முடிவை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
996 வேலைமுறையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பல்வேறு பணப்பயன்கள் உறுதிசெய்யப்பட்டிருந்த
போதும் பணிச்சுமையின் காரணமாக கடும் மனச்சோர்வுக்கும் உடல்ரீதியான பல துன்பங்களுக்கும்
ஆளாகிவந்தனர். நான் மிகவும் களைப்படைந்துவிட்டேன்,
சூரியவெளிச்சத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று நினைவிலில்லை என்று எழுதிவைத்துவிட்டு
தற்கொலை செய்துகொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 996ஐசியூ.காம் போன்ற
இணையதளங்கள் (996 வேலைநாள் என்பது தொழிலாளர்களை ஐ.சி.யூ. சிகிச்சைக்கு அனுப்புவதுடன்தான்
முடிகிறது என்பதைச் சுட்டும்விதமாக இப்பெயர்) எதிர்ப்புணர்வுகளை ஒருங்கிணைத்தன. கடைசியில்,
தொழிலாளர்களின் உடல், மனநலப் பிரச்னைகளில் சமரசமில்லை என்று பாதுகாப்புச் சட்டங்களை
தீவிரமாக செயல்படுத்தப் போவதாக சீன அரசு அறிவிக்கவேண்டிவந்தது. இந்தச் சூழலில்தான்
அங்கிருந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுடன்
இந்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்துகொண்டு சீனாவின் 996 போல இங்கும் வேலைநாளை மாற்றும்படி
கோருகிறார்கள். கார்ப்பரேட்டுகள் காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடிக்கும் பாஜக
அரசு ஆளைக் கொல்லும் இந்தத் திட்டத்தை நெகிழ்வான வேலைநாள் என்று வஞ்சகமாக ஏவியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்துவருகின்றனர். நாட்டின் சட்டப்பூர்வ வேலைநாளுக்கு விரோதமான இந்த உழைப்புச்சுரண்டல் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் போர்க்குணமும் அமைப்புரீதியாக திரளும் வாய்ப்பும் அற்றவர்களாக உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு 12 மணிநேர வேலைநாளுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு பொருளற்றதாகவும் நகைப்புக்குரியதாகவும் தெரியக்கூடும். 8 மணி நேர வேலைநாள் என்பதன் வரலாற்றையோ அதற்கான தியாகத்தையோ அறியாதவர்களுக்கு அது தேவையற்றதாகக்கூட தோன்றலாம். நியோ நார்மல் என்கிற பெயரில் எல்லா ஒழுங்கீனங்களையும் விதிமீறல்களையும் நியாயப்படுத்திக் கொண்டு அதற்குள் சாதகமானதைத் தேடியடைந்து சமாதானமடைகிற, பீயிலே பொறுக்கிய அரிசியில் பிரியாணி ஆக்கித் தின்பதை பெருமிதமிதமாய் பேசியலைகிறவர்களும் கூட மனிதர்கள்தான். அவர்களது உடல்/மனநலனுக்கும் இந்த 12 மணிநேர வேலைநாள் என்பது கெடுதலானதே. எட்டு மணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, ஓய்வு போன்ற அடிப்படையான கோரிக்கைகள் இவர்களுக்கும் தேவையானவையே.
8மணிநேர வேலை என்பதே 8 மணிநேரத்துடன் முடிந்துபோவதில்லை. உணவுத் தயாரிப்பது, -பணியிடத்திற்கு சென்று திரும்புதல் உட்பட அதற்கான முன்தயாரிப்புக்கென கூடுதலாக சிலமணி நேரங்களை – உறக்கத்திற்கும் ஓய்வுக்குமென இருக்கும் தமது சொந்த நேரத்திலிருந்து செலவிட வேண்டியிருக்கிறது. ஒருவர் எட்டுமணி நேரம் உழைப்பதனால் இழக்கும் ஆற்றலைத் திரும்பப் பெறுவதில் ஓய்வும் உறக்கமும் முக்கிய பங்கு வகிப்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தே அவற்றுக்கென தனியாக நேரப்பங்கீடு செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை வாழ்வில் உறக்கம் என்பதே ஓய்வு என்று திரிக்கப்பட்டுவிட்டதால் உழைப்புக்கும் உறக்கத்திற்கும் அப்பால் இன்னொரு வாழ்வு இருப்பதையே அறியாதவர்களாக அல்லது அறிந்தும் துய்க்கும் வாய்ப்பற்றவர்களாக தொழிலாளர்கள் நிலையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 12 மணிநேரம் வேலை என்பது 12 மணிநேரத்துடன் முடியக்கூடியதா? முதலீட்டாளர்களின் லாபவெறிக்கு ஒவ்வொரு தொழிலாளியின் சொந்த நேரத்திலிருந்தும் மேலும் நான்கு மணிநேரங்களை அபகரித்துக்கொடுக்கப் போவதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது அவசியம்.
மூன்றாவது ஷிப்ட் என்பதே இல்லாமல் போகும் நிலையில் ஒரு ஷிப்டுக்குத் தேவையான தொழிலாளர்கள் பணியமர்த்தப்படாமலே போகும் நிலையில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கதி என்ன என்பது ஒருபுறமிருக்க, அந்த ஷிப்டுக்கென தற்போதுள்ள தொழிலாளர் எண்ணிக்கை குறையுமா நீடிக்குமா? இரண்டு ஷிப்டு தொழிலாளர்களைக் கொண்டே நிறுவனத்தை இயக்கிவிட முடியும் என்கிற வகையில் அரசின் செல்லப்பிள்ளைகளான முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபம். வாரத்தில் மூன்று நாட்கள் நிறுவனத்தை மூடிவைப்பதனால் அந்த நாட்களில் (உணவு, வாகனம், மின் கட்டணம், தண்ணீர், இயந்திரத் தேய்மானம் போன்ற நடைமுறைச் செலவுகள் மிச்சம் என்கிற வகையில் மற்றொரு லாபம் என்பதும் உண்மைதான். ஆனால் வாராவாரம் மூன்றுநாட்களுக்கு ஆலையை மூடிவைக்கவா முதலீட்டாளர்கள் ஆலைகளைத் திறப்பார்கள்? அது அவர்களின் வர்க்க இயல்புக்கு ஏற்புடையதல்ல. எனில் அந்த மூன்று நாட்களிலும் வேறு வகையாக ஆலையை இயக்குவதற்கான திட்டம் அவர்களுக்கு இருக்கும். 12 மணிநேரம் அமலானால் அப்போது அந்தத் திட்டமும் தன் கோரமுகத்துடன் வெளிப்படக்கூடும். ஒருவேளை நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளர்களையும் எஞ்சிய மூன்றுநாட்களில் தற்காலிக/ ஒப்பந்த/ பயிற்சி/ தொழிலாளர்களையும் கொண்டு ஆலையை இயக்குவது அவர்களது திட்டமாக இருக்கலாம். வேலையின்மையைக் காட்டி தற்காலிகத் தொழிலாளர்களையும் அவர்களைக்காட்டி நிரந்தரத் தொழிலாளர்களையும் பணியவைத்துச் சுரண்டுவதில் இந்திய முதலாளிகள் ஏற்கனவே மோசமான பல முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளதை மறந்துவிட வேண்டாம்.
ஒவ்வொரு வாரமும் வேலையற்று இருக்கப்போகிற மூன்றுநாட்களையும் என்னவிதமான ஆக்கப் பணிகளில் தொழிலாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்கிற முன்கணிப்பு ஏதும் அரசுக்கு இருக்கிறதா? நான்குநாள் உழைப்பின் அலுப்பை சேர்த்துவைத்து மூன்றுநாட்களில் தீர்த்துக் கொள்வது சாத்தியமா? இவ்விசயத்தில் ஒசூர் தொழிற்பேட்டையின் அனுபவம் ஒன்றினை பகிர்வது பொருத்தமாக இருக்கும்.
கனப்படுப்பை ஏன் மூட்டவில்லை?
வீட்டில் நிலக்கரி இல்லை.
ஏன் நிலக்கரி இல்லை?
நிலக்கரி வாங்க பணமில்லை
ஏன் பணமில்லை?
அப்பாவுக்கு வேலை இல்லை.
அப்பாவுக்கு ஏன் வேலையில்லை?
அவர் வேலை செய்யும் சுரங்கத்தில்
அதிகப்படியான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறதாம்.
-குழந்தைக்கும் தாயுக்குமிடையே மார்க்ஸ் காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த உரையாடல் காலங்கள் தாண்டி 21ஆம் நூற்றாண்டுக்கும் பொருந்தக்கூடியதே. முதலாளிகள், தொழிலாளிகளை வதைத்து அதிகப்படியான உற்பத்தியைப் பெற்றுவிடுவார்கள். சந்தையின் தேவையை விடவும் கூடுதலாக கையிருப்பில் உள்ள சரக்கு தேங்கிவிடும் பட்சத்தில் அந்தச் சுமையைத் தொழிலாளிகள் மீது ஏற்றிவிடும் தந்திரமாக கதவடைப்பு செய்து உற்பத்தியை முடக்கிவிடுவார்கள். அம்மாதிரியான நேரங்களில் “ஆஹா, மூடிய ஆலையைத் திறக்கும் வரை வேலையே இல்லை… ஜாலியோ ஜாலி…” என்று எந்தத் தொழிலாளியும் கும்மாளம் போடுவதில்லை. உழைப்பிலிருந்து அந்நியமாக்கப்பட்ட அந்த நாட்களைக் கடப்பது பற்றிய அச்சம் அவர்களை நிலைகுலையச் செய்கிறது.
ஒரு தற்காலிக கதவடைப்பின் மூலம் வாராவாரம் வந்த மூன்றுநாள் விடுமுறையே தொழிலாளிகளின் ஆளுமையைச் சிதைக்குமென்றால் நிரந்தரமாகவே வாராவாரம் மூன்றுநாள் விடுமுறையில் அவர்கள் என்னவாகப் போகிறார்கள்? சும்மா இருக்கவொட்டாமல் வேறு இன்னுமொரு நிறுவனத்திற்கு தங்களை விற்றுக்கொள்ளும்படி அரசு விரட்டுகிறதா? அல்லது முதல் நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளியாகவும் அடுத்த நாட்களில் அத்துக்கூலியாகவும் வேலை பார்க்கும்படி நெட்டித்தள்ளுகிறதா? அப்படியும்தான் வேலை பார்த்து சம்பாதிக்கட்டுமே என்றும் கூட இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சொல்லக்கூடும். ஆனால் சம்பாதித்துக் கொண்டேயிருந்தால் வாழ்வது எப்போது என்று தொழிலாளர்கள் நெடுங்காலமாய் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடையைத் தேடி கண்டையும் வரை வேலைநேரத்தை மாற்றமாட்டோம் என்கிற நிலைப்பாட்டை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் அறிவிப்பது குடிமக்களுக்கும் ஆட்சிக்கும் நல்லது. இல்லையானால் சீனத் தொழிலாளி சொன்னதையே அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் சொல்வோம்: சூரியனையே பார்க்க முடியாதபடி செய்துவிடாதீர்.
நாட்டையே நாம் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சியின் சின்னம் என்பதற்காகவேனும் சூரியனை அன்றாடம் பார்க்கும்படியாக தொழிலாளிகளின் வேலைநேரம் மாற்றமின்றி நீடிப்பதை உறுதிசெய்யவேண்டும். அல்லது இன்னும் கூடுதல் நேரம் சூரியனைப் பார்க்கும்விதமாக வேலைநேரத்தை ஆறுமணிநேரமாகக் குறைத்து தன் தந்தையின் கனவை நனவாக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக