செவ்வாய், ஏப்ரல் 18

ஜனநாயகம் இல்லாத சமூகம் கலை இலக்கியவாதிகளுக்கு ஏற்புடையதல்ல –ஆதவன் தீட்சண்யா


1.    ஒரு நபரை அல்லது ஒரு குழுவை அவர்கள் யார் என்பதன் அடிப்படையில் - வேறுவிதமாகக் கூறினால், அவர்களின் மதம், இனம், தேசியம், நிறம், வம்சாவளி, பாலினம் அல்லது பிற அடையாளக் காரணிகளின் அடிப்படையில் பாகுபடுத்துவது, பகைமை கொள்வது அல்லது வன்முறையை கைக்கொள்வதற்கான - சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிரான - மனநிலையை ‘வெறுப்பு’ என்கிற உத்தேசமான வரையறைத் தருகிறது ஐ.நா.சபையின் ஆவணமொன்று1.  பேச்சு, செயல், நடத்தையின் வழியே வெளிப்படும் இந்த வெறுப்பும் அதனையொட்டி சமூகத்தைப் பிளவுபடுத்துவதுமாகிய போக்கு இந்தியாவில் வலதுசாரிகள் அரசியல் பலம்பெற்ற நாளின் அதிகாலையில் திடுமென  தோன்றிவிட்டதாகவும் அதற்கு முன்புவரை இங்கு அனைவருமே அந்நியோன்னியமாக ஆரத்தழுவி வாழ்ந்துவந்தது போலவும் கற்பிதம் செய்துகொள்கிற மேம்போக்கான பார்வை ஒன்றுள்ளது. இதன்பொருட்டு வரலாற்றுண்மைகளைப் பேசப் புகுந்தோமானால் ‘பழங்கதைகள் எதற்கு? நடப்புக்காலத்தின் உடனடிப்பிரச்னைகளைப் பேசுவோமே’ என்று அலுத்துக் கொள்ளும் ஆபத்தான போக்கும் மிகுந்துவருகிறது. நடப்புலகம் உண்டாக்கும் நெருக்கடிகளுக்கு காரணத்தைத் தேடும் எவரொருவரும் தவிர்க்கமுடியாமல் வரலாற்றுக்குள் நுழைகின்றனர். வேறொரு பண்பாட்டுப் பின்புலமுள்ளவர் தமது அண்டைவீட்டில் வசிப்பதை சகித்துக்கொள்ள முடியாத2 வெறுப்புணர்வு பெரும்பாலான இந்தியர்களை ஆட்டிப்படைப்பதற்கான காரணத்தை தேடிப் போனால் மற்றவர்களை வெறுப்பதில் இந்தியர்களுக்கு குறைந்தபட்சம் 3500 வருடப் பயிற்சி இருக்கிறது என்கிற உண்மை புலப்படுகிறது. ஆம், சக மனிதரை மனிதத்தன்மையிலிருந்து கீழறக்கியோ மேலேற்றியோ பார்க்கும் கண்ணோட்டம் கஜகஸ்தான் பகுதியிலிருந்து இந்தியப் பெருநிலப்பரப்புக்குள் அலைகுடிகளாக ஆரியர்கள் நுழைந்தபோதிலிருந்தே தொடங்கிவிட்டது. 

ஆரியர்கள் இங்கு வருவதற்கு சற்றேறக்குறைய 2500ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளி நாகரிகம் பரவியிருந்த குடியிருப்புப்பகுதிகளில் ஒருவகையான படிநிலை அமைப்பு காணப்பட்டாலும் அதற்கு புனிதம் தீட்டு என்பது அடிப்படையாய் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் ஆரியர்கள் தங்களது பூர்விக நிலப்பரப்பு, காலநிலை, பண்பாடு ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட இந்தியப்பரப்புக்குள் வந்தபோது அவர்கள் இங்கிருந்த பூர்வகுடிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள நிறத்தை முன்னிறுத்தினர். நிறம், உருவ அமைப்பு, வாழ்க்கைமுறை ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட பூர்வகுடிகளை அவர்கள் சமமாகப் பார்க்கவில்லை. “ஆரியர்களின் முதன்மையான எதிரிகள் ஆரியர்களல்லாத பூர்வகுடி மக்கள்தான். பானிகள் என்று அறியப்படும் மக்கள் மீது பொதுவாக ஒரு விரோத உணர்வை வெளிப்படுத்தும் பல பத்திகள் ரிக் வேதத்தில் இருக்கின்றன...”3.   

2.    கடவுள் மனிதர்களைக் காப்பாற்றுகிறவர் என்று சொல்லிக்கொண்டு கடவுளைக் காப்பாற்ற மனிதர்கள் மோதி மடிவதை உலகெங்கும் வரலாறு நெடுகிலும் பார்க்கமுடிகிறது. இங்கேயும் மனிதர்களுக்குள் நடந்த மோதல்களில் பலவும் கடவுள்களின் பெயரால் நடந்தவைதான். இந்தியப் பூர்வகுடிகளின் தொல்தெய்வங்கள் பலவற்றை பின்னுக்குத் தள்ளியோ உட்செரித்தோ ஆரியக்கடவுள்கள் முன்னுக்கு வந்தன. ஒருகட்டத்தில் பூர்வீகர்களின் தாய்த்தெய்வங்களும் ஆரியக்கடவுள்களான இந்திரனும் சோமனும் அக்னியும் கைவிடப்பட்டன அல்லது பின்னாளில் பெருந் தெய்வங்களாக உருவெடுத்த சிவன், விஷ்ணு, பார்வதி, லஷ்மி ஆகிவற்றின் அவதாரங்களாக்கப்பட்டன. சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையேயான மோதல் பிரசித்தமானதுதான். தமக்குள் முரண்பட்டு மோதிக்கொண்டாலும் சைவமும் வைணவமும் சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிராக எவ்வளவு கொடிய அணுகுமுறையைக் கையாண்டன என்பதனை நாயன்மார்களும் ஆழ்வார்களும் எழுதியவற்றிலிருந்து அறியமுடியும்.

3. வேதமதத்தின் வர்ணாஸ்ரம, சாதிய, சடங்கியல் கொடுங்கோன்மைக்கு எதிராக பரவிய அவேதிக மதங்கள் ஆரிய வழித்தோன்றல்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகின. இந்த வெறுப்பின் விளைவாக சமணர்கள் கழுவேற்றப்பட்டதை வரலாறு நினைவூட்டியபடியே இருக்கிறது. இந்திய வரலாறு என்பது பவுத்த மதத்திற்கும் பிராமணீய மதத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தின் வரலாறுதான் என்று அம்பேத்கர் குறிப்பிடுமளவுக்கு4 நிலைமை இருந்திருக்கிறது. மௌரிய வம்சத்தின் மன்னர் அசோகர் பவுத்தம் தழுவியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களால் அடுத்துவந்த 140 ஆண்டுகள் வேதமதத்தின் புரோகிதப் பிரிவினராகிய பார்ப்பனர்கள் செல்வாக்கிழந்து கடும் இழப்புகளைச் சந்தித்தனர். இதிலிருந்து மீளும் எதிர்ப்புரட்சியாகவே கி.மு.185ஆம் ஆண்டு மௌரிய மன்னனைக் கொன்று புஷ்யமித்ர சுங்கன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான். ஒவ்வொரு பவுத்தபிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலையாக வைத்து அழித்தொழிக்குமளவுக்கு அவனிடம் வெறுப்பு மண்டியிருந்தது5. ‘வைதீக வெறியும் பிறமத வெறுப்பும் கொண்ட சுங்கப் பேரரசர்களின் ஆட்சியில் பௌத்தர்களின் நிலைமை எப்படியிருந்தது என்பதை கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது. பல பௌத்தர்கள் இப்போதும்கூட புஷ்யமித்திரன் பெயரை மிகவும் வெறுப்போடு சாபமிடும் முறையில்தான் உச்சரிக்கிறார்கள் என்று சீன ஆதாரங்களிலிருந்து தெரிகிறது.’6 

‘அடிபட்ட விலங்கின் சீற்றத்துடன்’பௌத்தத்தை அழித்தொழித்த புஷ்யமித்திர சுங்கன், பவுத்தம் போன்ற அவைதீக மதங்கள் மீண்டும் தோன்றிவிடாதபடி இறுக்கமான வடிவில் நால்வருண முறையை மீண்டும் கொண்டுவருவதற்கான புதிய சட்டத்தொகுப்பினை கி.மு.170ஆம் ஆண்டுக்கும் கி.மு.150ஆம் ஆண்டுக்கும் இடையில் சுமதி பார்கவா என்பவனைக் கொண்டு எழுதினான். இந்தச் சட்டத்தொகுப்புதான்  மனுஸ்மிருதி என்கிற பெயரில் அறியப்படுகிறது. 

‘...மதநெறிகளுக்கு மாறான வழியைப் பின்பற்றும் மனிதர்களை தன் நாட்டிலிருந்து மன்னன் வெளியேற்ற வேண்டும்’,

‘... மதத்துக்குப் புறம்பான பிரிவுகளில் சேர்ந்த பெண்களுக்கு நீர்க்கடன் இயற்றக்கூடாது’,

‘(குடும்பத்தலைவன்) மதத்துக்குப் புறம்பானவர்களை (வேதத்துக்குப் புறம்பாக வாதிடும்) தர்க்கவாதிகளை முகமன்கூறும் செயலால் கவுரவிக்கக்கூடாது’,

‘...வேதத்தை அடிப்படையாகக் கொள்ளாத சம்பிரதாயங்கள் எல்லாம், வெறுக்கத்தக்க தத்துவமுறைகள் எல்லாம் மரணத்துக்குப்பின் எந்தப் பேற்றையும் அளிக்கமாட்டா. ஏனென்றால் அவை இருளில் கால்கொண்டவை என அறிவிக்கப் பட்டுள்ளது’,

‘ (வேதத்துக்கு)  மாறுபடும் அவை (அந்தக் கொள்கைகள்) எல்லாம் தோன்றி (விரைவில்) அழிபவை. புதிதாக வந்த அவை பயனற்றவை, பொய்யானவை’

- இவ்வாறெல்லாம் வேதமறுப்பு மதங்கள் - குறிப்பாக புத்தமதம் பற்றி அன்றைக்கு மனுஸ்மிருதி வெறுப்புடன் உமிழ்ந்த சொற்களைத்தான் இன்றைக்கு  இந்துத்துவாவினர் கிறிஸ்தவத்தின் மீதும் இஸ்லாத்தின் மீதும் எய்கிறார்கள்.  

4. கி.மு.முதலாம் நூற்றாண்டில் கேரள கடற்கரையிலிருந்த முசிறி துறைமுகத்தில் வந்திறங்கி அங்கிருந்து சீனா வரை சென்று கிறித்துவ மதபோதகம் செய்து சென்னைக்குத் திரும்பியவர் புனித தாமஸ். திரும்பும் வழியில் இவர் வடமேற்கு இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பாலவர்கள் அல்லது இந்தோ பார்த்தியர்கள் வம்சத்தைச் சேர்ந்த கோன்டோபார்னெஸ் என்ற மன்னனின் அரசவைக்குச் சென்று  அங்கும் கிறித்துவத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவர் மூலமாகத்தான் இந்தியாவில் கிறிஸ்தவம் அறிமுகமாகியது7. இதேபோல கேரள, குஜராத் கடற்கரை நகரங்களுக்கு வந்த அரபுவணிகர்கள் மூலமாக இங்கு இஸ்லாம் அறிமுகமாகிப் பரவியது. ஆகவே இந்திய மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக பரிச்சயமான கிறிஸ்தவத்தையும் கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்தே அறிமுகமாகிய இஸ்லாத்தையும் பின்னாளில் வந்த படையெடுப்பாளர்களுடனும் அல்லது ஆக்ரமிப்பாளர்களுடனும் இணைத்துக் காட்டுவது வரலாற்றுக்குப் புறம்பானது.  

ஆரியர்களைப் போலவே வெவ்வேறு காலக்கட்டங்களில் இந்தியாவின் வடமேற்கு எல்லை வழியாக இந்திய நிலப்பரப்புக்குள் பஞ்சம் பிழைக்கவும் படையெடுத்தும் வந்த அயலவர்களின் பட்டியல் மிக நீண்டது. அவர்களில் ஒரு தரப்பான மொகலாயர்களின் பல்வேறு பிரிவினர் இந்தியாவை ஏறத்தாழ எண்ணூறாண்டுகள் ஆண்டிருக்கின்றனர். இவ்வளவு நீண்டகாலத்தில் அவர்கள் தமக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வாள்முனையில் இங்கிருந்தவர்களை மதம் மாற்றும் முயற்சியை மேற்கொண்டிருந்தால் மொத்த இந்தியாவும் முஸ்லிம் இந்தியாவாக மாறிப்போயிருக்கும். ஆனால், இந்தியாவை ஆள்வதுதான் அவர்களின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறதேயன்றி இஸ்லாத்தைப் பரப்புவதல்ல. எட்டாண்டுகால மோடி ஆட்சியில் இந்துத்வாவினர் இவ்வளவு துள்ளுகிறார்கள். ஆனால் எண்ணூறாண்டுகால ஆட்சியில் விதிவிலக்கான சில அத்துமீறல்களைத் தவிர்த்து பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்கள் இங்கிருந்த தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றில் குறுக்கிடவில்லை என்பதுடன் இவற்றுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து நல்லிணக்கம் பேணுகிறவர்களாக இருந்தார்கள் என்பதற்கு அக்பர் தொடங்கி திப்பு சுல்தான் வரையாக உதாரணங்களைக் காட்டமுடியும். மராத்திய இராணுவத்தளபதி ரகுநாதராவ் சிருங்கேரி மடத்தை கொள்ளையடித்திருக்கிறான்; திப்புவோ மடத்தை மீண்டும் கட்டுவதற்கு உதவியிருக்கிறார். குருவாயூர் கோவிலுக்கு 613.2 ஏக்கர் நிலமும் 1428 ரூபாய் 9 அணா 2 பைசா வருடாந்திர மானியமும் கொடுத்திருக்கிறார்8.   

5. இஸ்லாமிய ஆட்சியாளர்களுடன் வந்தவர்கள், அவர்களது வம்சாவளிகள் எல்லைப்புறங்களில் அல்லது அரசவைப்பகுதிகளில் குடியேறியிருக்கிறார்கள். எனில் நாட்டின் உள்பகுதிகளில் பரவியிருக்கும் இஸ்லாமியர்கள் யார் என்கிற கேள்விக்கு, அவர்கள் வேதமதத்தின் கொடுமை தாளாமல் மதம் மாறிய பௌத்தர்கள், சூத்திரர்கள் மற்றும் அடிநிலைச்சாதியினர் என்று வரலாற்றாளர்கள் பதிலளிக்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதி தொடங்கி டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என்று பலர் இங்கு வந்தபோதும் அவர்களது முதன்மை நோக்கம் வணிகமாகவும் பின்னாளில் கூடக்குறைய நிலப்பரப்பை தமது ஆளுகைக்குள் கொண்டுவருவதும் என்பதாகவே இருந்தது. மதத்தைப் பரப்புவது நோக்கமாய் இருக்கவில்லை. மதப்பிரச்சாரத்திற்காக வந்த தொடக்கால கிறிஸ்தவ போதகர்கள், சாதியடுக்கின் மேலே இருப்பவர்களை மதம் மாற்றினால் அடிநிலையில் இருப்பவர்கள் பின்தொடர்ந்து வந்துவிடுவார்கள் என்று  கொண்டிருந்த தவறான கணிப்பு பொய்த்துப்போன நிலையில் அவர்களது கவனம் அடிநிலைச் சாதியினரிடம் திரும்பிய பின் கிறிஸ்தவம் இங்கே வேகமாகப் பரவியது. இவ்வாறு இஸ்லாமும் கிறிஸ்தவமும் அடிநிலைச் சாதியினரை பிரித்தெடுத்துக்கொண்டு போனதை பொறுமலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேத மதத்தினர், அவர்களை தமது மதத்திற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள தேவையான சீர்திருத்தங்களையோ மாற்றங்களையோ செய்துகொள்வதற்குப் பதிலாக இஸ்லாமும் கிறிஸ்தவமும் அந்நிய மதங்கள் என்று அவதூறு பரப்பினர். இந்தியர்களுக்கு இஸ்லாமும் கிறிஸ்தவமும் அந்நிய மதங்கள் என்றால் அதேயளவுக்கு வேதமதமும் அந்நியமானதுதான். (இந்த பதிலடியை எதிர்கொள்ள முடியாத திணறலில், வேதமதத்தை - பின்னாளைய இந்துமதத்தை விமர்சிப்பவர்களும் மதம் மாறுகிறவர்களும் இந்துவிரோதிகள்,  அந்நிய கைக்கூலிகள், கோடிக்கணக்கில் அந்நிய நிதியைப் பெற்றுக்கொண்டு ஆதாயம் அடைகிறவர்கள் என்று ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ். அடிவருடிகள் அவதூறு கிளப்புகிறார்கள்). 

6. இந்து என்ற சொல்லே மிகவும் காலங்கடந்து கி.பி.இரண்டாவது ஆயிரமாம் ஆண்டுகளில் தான் புழக்கத்திற்கு வந்தது9. அச்சொல் முதலில் நிலப்பரப்பையும்,  பிறகு மக்களையும் மிகப்பின்னாளில் மதத்தையும் சுட்டியது. ஆகவே, சிலர் புனைந்துரைப்பதுபோல இந்து மதம்  என்றென்றுமாக இருந்துவருவதல்ல. அது இஸ்லாம், கிறித்துவம், சமணம், பவுத்தம், சீக்கியம், ஜொராஸ்ட்ரியம் ஆகியவற்றைத் தவிர்த்த பல மதங்களின் பொது அடையாளமாக காலனியாட்சியாளர்களால் சுட்டப்பட்டது. இவ்வாறாகத்தான் வலிந்துருவாக்கப்பட்ட இந்து மதம் இந்தியாவின் பெரும்பான்மையரது மதமாக ஆக்கப்பட்டது. இந்துக்கள் என்று சேர்த்துக் கட்டப்பட்டவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை, சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள்வது மட்டும்தான்.  

7. முதலாவது சுதந்திரப்போர் எனப் போற்றப்பட வேண்டிய 1806ஆம் ஆண்டு வெடித்த வேலூர் கிளர்ச்சி தொடங்கி காலனியாட்சியை அகற்றிட இந்தியர்கள் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் போராடிக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷாரை எதிர்த்து தீரமுடன் போராடி திப்பு சுல்தான் போன்ற இஸ்லாமிய மன்னர்கள் உயிரையுமிழந்தனர். 

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்காமலும் காலனியாட்சியுடன் இணக்கமாக இருந்துகொண்டும், மக்கள் ஒற்றுமையைக் குலைக்க இந்துக்களின் எதிரிகளாக முஸ்லிம்களைக் கட்டமைக்கும் போக்கு 19ஆம் நூற்றாண்டில் முனைப்படைந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு அமையும் ஆட்சியின் அரசியல் சாசனமாக மநுஸ்மிருதி, இடைக்காலத்தில் சீர்குலைந்துப்போன வர்ணாஸ்ரம தர்மத்தின்படி சமூகம் மறுகட்டமைப்பு, தேசியக்கொடியாக மராட்டிய பேஷ்வாக்களின் பகவத்ஜம் கொடி, இந்தியாவை ஓர் இந்து நாடாக அறிவித்தல், பசுவதைக்கு தடை என்பதான கருத்துகளை வெவ்வேறு சொற்களில் வெளிப்படுத்திவந்த அமைப்புகளின் கூட்டுமுகமாக இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இயங்கின. இத்தகைய கருத்துகளை இந்துத்துவம் என வளர்த்தெடுத்த இந்த அமைப்புகளின் தலைவர்களான பாய் பரமானந்தருக்கும் சாவர்க்கருக்கும் தங்களது சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உகந்த  நிலப்பரப்பு தேவையாயிருந்தது. அதனாலேயே அவர்கள், இந்தியா மத அடிப்படையில் இருநாடுகளாக பிரிக்கப்பட வேண்டும் என்று பிரிவினைவாதத்தை முதலில் முன்வைத்ததுடன் அதற்கான அக, புற நெருக்கடியையும் உருவாக்கினார்கள். இதன் தொடர்ச்சியில்தான் 1940ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு தனிநாடு என்ற கோரிக்கையை ஜின்னா எழுப்பும் நிலை உருவானது.

8. உலகமே உறங்கும் நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெற்றதையும், சுதந்திர இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டதையும் இந்துத்வாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. விரும்பும் மதத்தைத் தழுவவும் அதை பரப்பவும் தமது பண்பாட்டையும் மொழியையும் பாதுகாத்துக் கொள்ளவும் குடிமக்கள் யாவருக்கும் உறுதிசெய்யப்பட்ட சுதந்திரத்தை அவர்கள் இந்துமதத்தை அழிப்பதற்கான சதியென துர்பிரச்சாரம் செய்தனர். நாட்டின் பன்முகத் தன்மையை ஒழித்துக் கட்டி இந்தியாவை ஓர் இந்து ராஷ்ட்ரமாக ஆக்குவதற்கு தடையாக உள்ள அனைவரையும் தீர்த்துக்கட்டும் வெறியில் காந்தியடிகள் உள்ளிட்ட பல்லாயிரம் பேரை கொன்று குவித்தனர். அரசியல் விடுதலையின் தொடர்ச்சியில் சமூக விடுதலையையும் பொருளாதார விடுதலையையும் அடைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டாக வேண்டிய நிலையிலிருந்த மக்களை இந்துத்துவாவினர் மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டனர்.

 9. 1992ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசு இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், பெளத்தர்கள், ஜொராஸ்ட்ரர் (பார்சி) ஆகியோரை மதச்சிறுபான்மையர் என அறிவித்தது. 2004ஆம் ஆண்டு இப்பட்டியலில் ஜைனர்களும் சேர்க்கப்பட்டனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுக்கின்படி இவர்களது எண்ணிக்கை முறையே 14.2%, 2.3%, 1.7%, 0.7%, 0.006%, 0.4%.   ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 193 பேர் மதச்சிறுபான்மையர். இவர்களில் 1000 பேருக்கு 142 பேர் இஸ்லாமியர்கள். இந்தோனேசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அடுத்தபடியாக அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தியா உள்ளது. 

நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் சிறுபான்மையராக இருக்கும் நிலையில் அவர்களைப் பற்றி பெரும்பான்மையினரான இந்துக்களின் புரிதல் என்ன? இந்துமதம் என்பதன் வரலாற்றையும், சிறுபான்மையினர் என்ற வகைமையினர் உருவாவதற்கும் நீடிப்பதற்குமான வரலாற்றுக் காரணங்களையும் அவர்கள் அறிந்துள்ளனரா? நாட்டை கட்டியெழுப்புவதிலும் பாதுகாப்பதிலும் சிறுபான்மையினரது பங்களிப்பை இந்துக்கள் உணர்ந்தேற்கின்றனரா? அரசியல் சாசனத்தால் குடிமக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகள் சிறுபான்மையினருக்கும் உண்டு என்பதை உளமார ஏற்கிறார்களா? அவர்களது அன்றாட வாழ்வில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள இடம் யாது? சிறுபான்மையினரின் வேறுபட்ட பண்பாட்டை அவர்களது தனித்துவமாக கருதி ஏற்கின்ற புரிதலும் ஜனநாயக எண்ணமும் இந்துக்களுக்கு இருக்கின்றனவா? மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றி என்ன கருதுகிறார்கள்? – இதுபோன்ற கேள்விகளுக்குரிய விளக்கத்தைத் தருவதில் நிலவுகின்ற போதாமையைத்தான் இந்துத்வாவினர் தமது வரலாற்றுப் பகைமை நிறைந்த அவதூறுகளால் இட்டுநிரப்புகின்றனர். ஒரு சட்ட வகைமை என்ற அளவில் மட்டுமே தன்னை இந்து என்று கருதிக்கொள்ளும் ஒருவர், இந்து என்பதை ஓர் அந்தரங்கமான அடையாளமாக நம்புவதற்கும், தானல்லாத மற்றவர்களை வெறுப்பதற்கும் இந்துத்வாவினரின் பிரச்சாரம் அவரை நெட்டித்தள்ளுகிறது. ஒரு இஸ்லாமியரையோ கிறித்துவரையோ வாழ்நாளில் சந்தித்திராதவர் கூட அவர்களை வெறுக்கும்படியாக- முடிந்தால் தாக்கும்படி தூண்டக்கூடிய அவதூறுகளை தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவந்திருக்கின்றனர். அசீமானந்தா போன்றவர்கள் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றுவிட்டு அப்பழியை இஸ்லாமியர் மீது சுமத்தி தேசவிரோதிகளாக, அமைதியைக் குலைப்பவர்களாக சித்தரிக்கும் அவர்களின் சதிவேலையை “தி கேரவன்” இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இன அழித்தொழிப்பு, தேவாலயங்கள் மீது தாக்குதல், கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரிப்பு ஆகியவற்றுக்கு அவர்கள் ஆட்களைத் திரட்டுவதற்கு இந்து மதப்பற்றினையோ ராமவிசுவாசத்தையோ முதலீடாக வைக்கவில்லை. சிறுபான்மையர் மீதான வெறுப்பைத்தான் முதன்மைப்படுத்தினர். 

10. இன அழிப்புக்கு எதிரான கூட்டணி (Genocide Watch) என்கிற அமைப்பு, இன அழிப்பு நிகழவிருக்கும் அபாயத்தை முன்னனுமானித்து தடுத்து நிறுத்துவது, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது ஆகிய நோக்கங்களுடன் இயங்கிவருகிறது. இன அழிப்பு குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்ட இவ்வமைப்பு, I.வகைப்பாடு ii.அடையாளப்படுத்தல் iii.பாகுபாடு iv.மனிதாபிமானமின்மை v.அமைப்பாக்கம் vi.துருவப்படுத்தல் vii.முன்தயாரிப்பு viii.துன்புறுத்தல் ix.அழித்தல் x.அழிப்பை மறுத்து மறைத்தல் ஆகிய 10 கட்டங்களினூடாக ஒரு நாட்டில் இன அழிப்பு நிகழ்வதாக தெரிவிக்கிறது. 

இந்த ஆய்வறிவிலிருந்து ருவான்டாவின் நிலைமைகளை உற்றுநோக்கி அங்கு மிகக்கொடிய இன அழிப்பு நடக்கக்கூடும் என்று 1994ஆம் ஆண்டில் அழித்தொழிப்பு நடப்பதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த இந்த அமைப்பு, இஸ்லாமிய வெறுப்பினை கைக்கொண்டுள்ள இந்தியா இன அழிப்பின் ஐந்தாம் கட்டதைத் தாண்டிவிட்டதாகவும் அடுத்தடுத்துள்ள கட்டங்களை நோக்கி அச்சமூட்டும் வேகத்தில் விரைவதாகவும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வமைப்பின் நிறுவனரான கிரிகோரி ஸ்டேன்டன், ருவான்டாவில் டுட்ஸி இனத்தவரை கரப்பான்பூச்சிகள் என்றும் அவர்களை நசுக்கி அழிப்பதில் தவறில்லை என்றும் வெறுப்பினைப் பரப்பி கொலைசெய்யத் தூண்டிய அந்நாட்டு ஊடகங்களை விடவும் பன்மடங்கு வெறியுடன் இந்திய ஊடகங்கள் இஸ்லாமிய வெறுப்பை பரப்புவதாக ஒரு நேர்காணலில்10 தெரிவிக்கிறார். சமுதாயத்தின் சில குழுக்கள் பற்றிய பாரபட்சமான கருத்துகள் பொதுப்புத்தியில் நொதித்திருப்பதும், பாரபட்சமான அக்கருத்துகளின் பேரில் வெறுப்பை கட்டமைத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் தலைமை உருவாவதும் இன அழிப்புக்கு இட்டுச்செல்லும் காரணிகள் என்றும் இந்தியாவில் தற்போது இவ்விரண்டு காரணிகளுமே இயங்குவதாகவும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இப்படியான எச்சரிக்கைகளை இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி, இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல் பரப்பப்படும் அவதூறு, நாட்டின் பெருமையைச் சிறுமைப்படுத்தும் உள்நோக்கம் கொண்டவை என்று இந்துத்வாவினர் மறுத்து விடுகின்றனர். ஆனால் இந்த எச்சரிக்கை சுட்டும் அபாயத்தின் உண்மைத்தன்மையை சிறுபான்மையினர் அன்றாடம் சொந்த வாழ்வில் எதிர்கொள்கின்றனர். முற்றுகையிடப்பட்ட மனநிலையுடன் அவர்கள் இங்கு ஒவ்வொரு அங்குலத்தையும் ஒவ்வொரு நொடியையும் துயரத்துடனும் அச்சத்துடனும் கடக்க வேண்டியுள்ளது. அவர்களது உயிருக்கும் உடைமைகளுக்கும் எதிராக அரசும் அரசின் ஆதரவில் இயங்கும் சட்டவிரோத கும்பல்களும் நடத்தும் திட்டமிட்ட தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்களது உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம், தொழில், வழிபாடு, புழங்குவெளி என எல்லாமே கேள்விக்குள்ளாகியுள்ளன. இப்படியான ஒரு அவலநிலை அவர்களுக்குத் தேவையானதுதான் என்று கருதுகிறவர்கள் இந்துத்துவ அமைப்புகளில் மட்டுமே இருப்பதாக நாம் கருதிக்கொள்ள வேண்டியதில்லை. அவ்வமைப்புகளை வெறுத்து ஒதுக்குகிறவர்கள்கூட அந்த அமைப்புகளின் இஸ்லாமிய கிறித்துவ வெறுப்புக்கருத்தியலை  ஆதரிக்கிறவர்களாக, பரப்புகிறவர்களாக இருக்கின்றனர்.  

11. மோடி ஆட்சிக்கு வந்ததை புஸ்யமித்திர சுங்கன் அதிகாரத்தைக் கைப்பற்றியதற்கு இணையாக வேத மதவாதிகளான இந்துத்வாவினர் பார்க்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரை அச்சுறுத்தி இந்துமதத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு பணிந்து வாழும் நிலைக்கு இணங்கிவரச் செய்வதற்கான அவர்களது நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்தப் பின்புலத்தில்தான் 370ஆவது சட்டப்பிரிவு இரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தலையீடு, ஹிஜாப் தடை போன்றவற்றை பார்க்க வேண்டும். லவ் ஜிகாத், லேன்ட் ஜிகாத், அகாதமி ஜிகாத் என அவதூறு கிளப்புவதும், வாழ்வாதாரங்களையும் குடியிருப்புகளையும் புல்டோசர்களால் இடித்துத்தள்ளி சிறுபான்மையினரை நிர்கதியாக்குவதும் இதே நோக்கில்தான். 

அகண்ட பாரதத்திற்கான அரசியல் சாசனத்தை எழுதக் கிளம்பியுள்ள ஒரு கும்பல் சிறுபான்மையினர் வாக்குரிமை அற்றவர்களாக, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள உரிமையற்றவர்களாக, சொந்தப் பண்பாட்டுத் தனித்துவத்தை கைவிட்டு இந்துப்பண்பாட்டை ஏற்றுக்கொண்டு இங்கு இருந்துவிட்டுப் போகட்டும் என கொக்கரிக்கிறார்கள். இன்னும் சிலர் இஸ்லாமியரை அழித்தொழிக்க ஆயுதமேந்த அறைகூவல் விடுக்கிறார்கள். இப்படி அடுக்கிக்கொண்டே போவதில் அர்த்தமில்லை. சிறுபான்மையினர் அச்சமற்று சுதந்திரமாக வாழும் நிலையை, ஜனநாயகம் நீடிப்பதற்கான முன்னிபந்தனைகளில் ஒன்று என்பார் அம்பேத்கர். சிறுபான்மையினரின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதென்றால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வருகிறது என்று பொருள். ஜனநாயகம் இல்லாத  சமூகம் கலை இலக்கியவாதிகளுக்கு ஏற்புடையதல்ல.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற முழக்கம் தானாகவே ஒற்றுமையைக் கொண்டுவந்துவிடாது. வேறுபாட்டுடன் இருப்பதை இந்த நாட்டின் பன்முகத்தன்மை என்று நாம் உரத்துச் சொல்லியாக வேண்டும். உரத்துச் சொல்வதென்றால் ஒத்தக்கருத்துள்ளவர்களிடம் பரஸ்பரம் உக்கிரமாக சொல்லிக்கொள்வதல்ல. வெறுப்பரசியலால் நஞ்சேறிவரும் மனங்களை ஊடுருவிச் சென்று உரையாடி குணப்படுத்தும் வல்லமையுள்ள கலை இலக்கிய ஆக்கங்களை உருவாக்க வேண்டியுள்ளது. 

சிறுபான்மையினருக்கு எதிராக பொதுப்புத்தியில் படிந்துள்ள கசடுகளை நீக்குவது, நம்மிடமுள்ள வெறுப்புக் கருத்தியலை அடையாளம் கண்டு கைவிடுவது, இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரானதாகவும் நாட்டின் பன்மைத்துவ பாரம்பரியத்தினை உள்வாங்கியதாகவும் கருத்துலகை வளப்படுத்திக்கொண்டு வெளிப்படுத்துவது என காலம் பணித்துள்ள பணிகளைக் காலம் கடந்தேனும் கண்டுணர்வதே இம்முகாமின் நோக்கம். 

1. https://www.un.org/en/hate-speech/understanding-hate-speech/what-is-hate-speech

2.  https://theprint.in/india/indians-support-religious-tolerance-but-prefer-to-live-marry-within-community-pew-survey/684523/

 3. டி.என்.ஜா, பண்டையக்கால இந்தியா, பக்:50

4,5,6. அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 7

7. டி.என்.ஜா, பண்டையக்கால இந்தியா, பக்:142

8. தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் - கா.அ.மணிக்குமார்

9.  முற்கால இந்தியா - ரொமிலா தாப்பர்

10. https://www.youtube.com/watch?v=M9ovHqv_k-g 


(தமுஎகச திண்டுக்கல்லில் 2023 மார்ச் 25,26 நாட்களில் நடத்திய சிறுபான்மையினர் வாழ்வியல் - புரிந்துணர்வு முகாமின் நோக்கவுரை, செம்மலர் ஏப்ரல் 2023 இதழில் வெளியாகியுள்ளது )

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...