புதன், ஏப்ரல் 5

எதிர் பரிணாமம் - ஆதவன் தீட்சண்யா

கழிவறைக்குள்ளேயே அடைந்து கிடந்த அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். அவனைத் தவிர உயிருள்ள வேறெதுவுமேயின்றி வீடு உறைந்துபோயிருந்தது. பண்டபாத்திரம் சட்டுமுட்டு சாமான்கள் அனைத்தின் மீதும் வெறுமை மண்டியிருந்தது. சன்னல் விளிம்பில் பறவைகளுக்கென்று கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்தத் தண்ணீர் வீணே வெயிலில் சுண்டிக் கொண்டிருந்தது.  வேறெவருடைய வீட்டுக்கோ பதுங்க வந்தவன் போல வீடெங்கும் தயங்கித்தயங்கி பார்த்து முடித்தான். அவனது குடும்பத்தார் அனைவருமே வெளியேறிப் போய்விட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அவன் அம்மா அப்பா தம்பி தங்கை என்று ஒவ்வொருவரையும் உறவுமுறை சொல்லியும் பெயரிட்டும் அழைத்துப் பார்த்தான். ஒருவரும் வரப்போவதில்லை என்பதும் தெரிந்ததுதான். இருந்தாலும் ‘நீ கூப்பிட்டதும் வந்துடலாம்னுதான் காத்திருந்தேன்’ என்று சொல்லிக் கொண்டு எங்கிருந்தாவது யாரேனும் ஒருவராவது வந்துவிடமாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பு அவனை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. இது தினமும் அவனே நடத்தி அவனே பார்த்துக்கொள்ளும் நாடகம்.  

வீட்டை விட்டு வெளியே வந்தான். அவன் வாசலுக்கு வந்ததுமே வாலையாட்டிக் கொண்டு ஓடிவந்து கும்மாளமாக தாவியேறிக் கொஞ்சுகின்ற மணியைக்கூட காணவில்லை. ஒருவருமற்று புழுதியும் அடங்கிக்கிடந்த அத்தெருவில் வீடுகள் கேட்பாரற்று திறந்துகிடந்தன. திரும்ப வரப்போவதேயில்லை என்றான பிறகு பூட்டு எதற்கென அவதியவதியாக கிளம்பிப் போயிருக்கிறார்கள்போல. வீட்டோர மரத்தடிகளில் ஆடுகளுக்கு கட்டியிருந்த வேப்பங்குழைகள் காய்ந்துச் சருகாகி உதிர்ந்து கிடந்தன.  அப்படியே தெருவிலிறங்கி காளியாயி கோயில் வரை போனான். கோயிலுக்கு கிழக்கே இருந்த ஊரின் மற்ற தெருக்களும் இதேரீதியில் கிடந்ததைப் பார்த்ததும் அவனது துக்கம் பெருகியது. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஊரைவிட்டு மொத்த பேரும் வெளியேறிப் போவதற்கு தான் காரணமாகிப் போனது குறித்து அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பஞ்சம் பிழைக்க சுத்துப்பக்க ஊர்களெல்லாம் காலி செய்துகொண்டு பட்டணங்களுக்கு ஓடிய கொடுங்காலத்திலும்கூட முருங்கைக்கீரையை அவித்துத் தின்று கொண்டு இங்கேயே பிடிவாதமாக இருந்த இந்த ஊர்மக்கள் இப்போது வெளியேறிப் போயிருக்கிறார்கள். பஞ்சத்தைவிடவும் கொடிய வாதையை அவர்களுக்கு தான் கொடுத்துவிட்டதாக எண்ணியெண்ணி மருகி அழுதான். தன் அழுகையால் திரும்பக் கூட்டிவந்துவிட முடியாத தொலைவுக்கு ஊராட்கள் போய்விட்டார்களா? ஊருக்காக ஒருவன் அழியலாம் என்கிற கருத்து தன் விசயத்தில் எதிர்மறையாகிப் பொய்த்துப் போய்விட்டதே; எவரொருவரும் அழிந்திடாத நிலைதானே சரி என்று இந்நாட்களில் தான் வந்தடைந்த முடிவை தனக்குள் சொல்லி தலையாட்டி ஆமோதித்தான். 

அவனது யோசனையின் பெரும்பகுதியை தற்கொலை எண்ணம் ஆக்கிரமித்திருந்தது. ஒருவேளை தான் தற்கொலை செய்துகொண்டால், பிரச்னை தீர்ந்தது என்று ஊரார் திரும்பி வந்து அவரவர் பிழைப்பைப் பார்த்துக்கொள்வார்கள் அல்லவா? ஆனால் அப்படி தற்கொலை செய்துகொண்டாலும் அந்தச் செய்தியை ஊராரிடம் போய்ச்சொல்ல யாருமற்ற பாழ்வெளியாய் இருக்கிறதே ஊர்? 

வீட்டுக்குத் திரும்பி என்ன செய்யப்போகிறோம் என்று ரெட்டைப்புளியமரத்தடியில் குந்தினான். அவனும் அவனது நண்பர்களும் வழக்கமாகக் கூடும் அந்த இடத்தில் இப்போது ஈயெறும்புகூட இல்லை. அவர்களுடன் கழித்தப் பொழுதுகளெல்லாம் அலையலையாக அவனுக்குள் எழுந்து இனம் புரியாத உணர்வுக்குள் அமிழ்த்தி வெளியே தூக்கி வீசின. பாவம், எங்கே எப்படியிருக்கிறார்களோ? ஒரு வார்த்தைகூட சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிப் போய்விட்ட அவர்களை நினைத்து வருந்துவது அவசியமா என்று தோன்றியது அவனுக்கு. தன்னை விட்டு ஊரே கிளம்பி ஓடியபோது அவனுங்க மட்டும் என்ன செய்திருக்கமுடியும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட சமாதானம் நீண்டநேரம் நீடிக்காமல் அவனை அலைக்கழித்தது. அவனது மனவோட்டத்தின் சித்திரத்தை வரைவதுபோல ஓட்டுச்சில்லால் தரையில் தாறுமாறாக எதையெதையோ கிறுக்கிக்கிறுக்கி அழித்துக்கொண்டிருந்தான்.  

ஆற்றங்கரையில் நள்ளிரவைத் தாண்டியும் நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு அளவற்ற உற்சாகத்தில் வீடுதிரும்பிய அந்த மறைநிலவு நாள் இப்போதும் அவனுக்கு நன்கு நினைவிலிருக்கிறது.   காலையில் நேரத்திலேயே எழுந்தவன் வேலைக்கு கிளம்பும் அன்றாடங்களின் அவசரத்தில் இருந்தான். கழிப்பறைக்குள் நுழைந்தவனுக்கு வெகுநேரமாகியும் வயிறு அசைவின்றி கிடந்தது. இதற்குமுன் அவனுக்கு இப்படி நடந்ததில்லை. இரவு சாப்பிட்ட உணவுவகைளாலும் தூக்கம் கெட்டதாலும் இப்படியாக இருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டவன், போகும் வழியிலோ வேலையிடத்தில் வயிற்றைக் கலக்கினால் எங்கே போவது என்று யோசித்து இன்னும் கொஞ்சநேரம் உட்கார்ந்து பார்த்தான். பலனில்லை. நேரமாகிவிட்டதால் மேலுக்குத் தண்ணீர் வார்த்துக்கொள்ளாமல் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு ஓடவும் எட்டரை வண்டி நின்று கிளம்பவும் சரியாக இருந்தது. இவனோடு காரை வேலை செய்யும் கூட்டாளிகள் இவனுக்காக சீட் பிடித்து வைத்திருந்தார்கள். ஒரு நிமிடம் தாமதமாகி பஸ்ஸை விட்டிருந்தாலும் ஒருநாள் கூலி போயிருக்கும். வாரத்தில் ஒரு முழுநாள் கூலியை இழப்பதால் குடும்பத்தில் உண்டாகும் சங்கடங்களோடு ஒப்பிட்டால் ஒருநாள் மலம் கழிக்காமல் போவதானால் உண்டாகும் உபாதைகள் அவனுக்கொரு பொருட்டல்ல. ஆனால், சாலையின் மேடுபள்ளங்களில் திடும்திடுமென வண்டி ஏறியிறங்கும் போதெல்லாம் குடல் இளக்கம் கண்டு வெளிக்கி வந்துவிடுமோ என்று பதட்டமடைந்தளவுக்கு கெடுங்காரியம் ஏதுவும் நடந்துவிடவில்லை. பிறகு வேலை மும்முரத்தில் மறந்தே போகுமளவுக்கு வயிறு தொந்தரவின்றி இருந்தது. 

முன்னிரவில் வீடு திரும்பி குளிப்பதற்குப் போகும்போதுதான் நாள்முழுக்க வெளிக்கி இருக்காமல் இருப்பதே அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் வயிறு எவ்வித தொந்தரவும் தராமல் அமைதியாகக் கிடந்தது. குடலை இளக்கிக்கொடுக்கும் என்று ஒரு சொம்புத்தண்ணியைக் குடித்துவிட்டு கொஞ்சநேரம் உலாத்திப் பார்த்தும் அசையவில்லை. பிறகு காபி பதத்தில் வெந்நீர் குடித்ததும் வீண்தான். சரி வரும்போது அதுவாக வரட்டும், எங்கே போய்விடப் போகிறது என்று விட்டுவிட்டான். இரவு படுக்கப் போகும் முன் வெதுவெதுப்பான பசும்பாலில் நாலுசொட்டு விளக்கெண்ணெய் விட்டு அம்மா கொடுத்ததை வேண்டாவெறுப்பாக குமட்டலுடன் குடித்து முடித்தான். இந்த வைத்தியத்திற்கு இயல்பாகவே அதிகாலையில் வயிற்றை கலக்கியெடுத்துவிடும். ஆனால் இவனுக்கு ஒன்றுமாகாமல் வயிறு கல்போல கிடந்தது. 

வெளியேறும் வழி அடைபட்டிருக்கும் போது உள்ளே தள்ளிக்கொண்டிருப்பது சரியா என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ளாமலே அடுத்தடுத்த நாட்களிலும் அவன் எப்போதும் போலவே சாப்பிட்டு வந்தான். இன்னும் சொன்னால், வயிற்றுக்குள் அதிகப்படியான உணவை தள்ளத்தள்ள ஒருகட்டத்தில் வயிறு தானாகவே கழிவை வெளித்தள்ளும் அழுத்தத்தைப் பெற்றுவிடும் என்று இவனாக ஒரு தர்க்கத்தை கற்பித்துக் கொண்டு வழக்கத்தைவிடவும் கூடுதலாக சாப்பிட்டான். ஆனால், என்னமும் பண்ணிக்கிட்டு போடா என்பது போலிருந்தது வயிறு.  

விசயம் தெரிந்து பாட்டியொருத்தி மலத்துவாரத்திற்குள் செருகிக்கொள்ளும்படி புகையிலைக்குச்சியைக் கொடுத்தனுப்பியிருந்தாள். புகையிலையின் காரம், மலத்துவாரத்திற்குள்ளும் சுற்றுச்சதைகளிலும் லேசான எரிச்சலை உண்டாக்கி காந்தும் என்றாலும் அடைப்பெடுத்த குழாய்போல பீய்ச்சியடிக்க வைத்துவிடும் என்று அவள் சொன்னதைப்போல நடந்துவிட்டால் அவளுக்கு தாராபுரம் தலைப்பொகலை ஒரு கட்டும் வெத்திலை ஒரு கவுளியும் வாங்கித்தருவதாக அம்மா சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். ஏன் அப்படியே வெத்தலைப்பாக்கும் கொஞ்சம் சுண்ணாம்பும் வாங்கியாந்திருந்தால் நல்லா செவக்க வச்சிருக்கலாமே என்று கடிந்துகொண்ட அப்பா அப்போதே அவனை நகரத்தின் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.   

பெயர் பதிந்து கட்டணம் பெற்றுக்கொண்ட செவிலிப்பெண், என்ன தொந்தரவு என்று வினவியபோது இவன் தனக்கு ஒரு தொந்தரவும் இல்லையே என்றான். அவன் சொல்வதற்கு சங்கடப்பட்டு அவ்வாறு மறுப்பதாய் எண்ணிய அவனது அப்பா தான், ‘என்னமோ தெரியலம்மா, பையன் அஞ்சாறு நாளா வெளிக்கிப் போகாம இருக்கான்’ என்றதும் அந்தப்பெண் என்னமோ அவளது மேசை மீதேறி இவன் வெளிக்கிருந்து விட்டதைப் போன்ற அசூயையுடன் இயல்பாக பேசுவதற்கு தடுமாறினாள். இதற்கான சிறப்பு மருத்துவர் பெயரைச் சொல்லி காத்திருக்கவேண்டிய அறை எண்ணையும் சொல்லி அனுப்பிவைத்தாள். மருத்துவரின் அறைக்குப் போய்க்கொண்டிருந்தவன் சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான். அந்தக் கணத்தில் அவள் அதுவரை மறைத்திருந்த அருவருப்புணர்வை பார்வையிலேற்றிக் காட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.     

அவனை இயல்பானதொரு மனநிலைக்குக் கொண்டுவந்துவிட்டு பரிசோதனைகளைத் தொடங்க விரும்பிய மருத்துவர் உணவுப்பழக்கம், வேலை முறை, தூக்க அளவு என்று சம்பிரதாயமாகவும் குறிப்பாகவும் சில கேள்விகளைக் கேட்டார். அவனது பதில்களில் தெரிந்த அலட்சியம், அவன் மலச்சிக்கலை இன்னமும் ஒரு பிரச்னையாக உணரவில்லை என்பதைக் காட்டியது. அடிவயிற்றையும் அள்ளையையும் அழுத்திப் பார்ப்பது, நாக்கை நீட்டச்சொல்லியும் கண்ணில் டார்ச் அடித்தும் பார்ப்பது, மார்பிலும் முதுகிலும் ஸ்டெத்தாஸ்கோப் வைத்து மூச்சை இழுத்துவிடச்சொல்லிப் பார்ப்பது என்று மேலுடம்பில் பூர்வாங்கமாக சில சோதனைகளைச் செய்த அவர் சில மாத்திரைகளைக் கொடுத்தார். மாத்திரைகளை விழுங்கிவிட்டு படு, விடியகாலையில் கலக்கியெடுத்து பீய்ச்சியடிச்சிரும் என்று மருத்துவர் சொன்னதை முகபாவத்தில் எவ்வித மாறுதலுன்றி கேட்டுக்கொண்டான். 

வேலைக்காட்டிலிருந்து திரும்பியிருந்த அவனது சேக்காளிகள் ஆஸ்பத்ரிக்குப் போகுமளவுக்கு என்னடா பிரச்னை என்று கேட்டறிய வந்திருந்தார்கள். லேசான வயிற்றுவலி, நாளைக்கு சரியாகிவிடும் என்று மழுப்பி அனுப்பிவைத்தான். ஆனால் அப்படியொன்றும் நடந்துவிடவில்லை. விழுங்கிய மாத்திரைகளை எங்கோ ஆழத்தில் புதைத்துவைத்துக்கொண்ட வயிறு முன்னிலும் மர்மமாக இருந்தது. 

மருத்துவர் மறுபடியும் அவனையும் அவனது தந்தையையும் கண்டதும் குணமாகி நன்றி சொல்ல வந்திருப்பார்களாக்கும் என்று நினைத்துக்கொண்டார். அவனோ மாத்திரைகளால் பயனேதும் இல்லை என்றான். ‘அப்படியானால் எனிமா தான் கொடுக்கணும். அதுக்கும் சரியாகலேன்னா டிஜிடல் எவாகுவேஷன் செய்திட வேண்டியதுதான்’ என்றார். டிஜிடல் எவாகுவேஷன் என்றதும் ஏதாவது நவீனமான கருவி மூலமாக இருக்கும் என்று அவன் நினைத்துக்கொண்டதற்கு மாறாக, அது களிம்பு தடவி மலத்துவாரத்தை விரிவடையச் செய்து விரலை உள்ளேவிட்டு மலக்குடலில் இறுகியிருக்கும் மலத்தை நோண்டி எடுத்து அடைப்பை நீக்கும் முறை என்று மருத்துவர் விளங்கப்படுத்தினார். எனிமா கொடுப்பதற்காக கீழாடைகளைக் களைந்துகொண்டு அங்கிருந்த படுக்கையில் படுக்கும்படி அவர் சொன்னதும் கூச்ச சுபாவியான அவன் படபடப்பாகி பெரும் மனப்போராட்டத்தினூடே படுத்துக்கொண்டான். 

முகக்கவசத்தையும் கையுறைகளையும் மாட்டிக்கொண்டு எனிமா குழாயின் கூர்முனையைச் சொருகுவதற்காக மலத்துவாரத்தை விரலால் நிரடியபோது அந்தத் துவாரம் அவரது விரலுக்குத் தட்டுப்படவேயில்லை. இறுகிய மலம் துவாரத்தின் நுனிவரை இறங்கி அடைத்துக்கொண்டிருக்கிறது போல என்றெண்ணி குனிந்துப் பார்த்தவர் அடைந்த அதிர்ச்சியும் குழப்பமும் மருத்துவ உலகம் இதுவரை காணாதது. ஒருமுறைக்குப் பலமுறை கைவிளக்கடித்து உற்றுப்பார்த்தும் அவனுக்கு மலத்துவாரம் என்கிற ஒன்றே இல்லாமலிருப்பது கண்டு இதென்ன மாயம் என்று விதிர்விதிர்த்துப் போனார். அப்படியொரு துவாரம் அவனுக்கு இருந்ததற்கான எந்தச் சுவடுமில்லை. புதிதாக உள்சதை வளர்ந்து தூர்ந்தது போன்றோ அல்லது வெளிச்சதை வளர்ந்து மூடியது போன்றோ அல்லாமல் பிறக்கும்போதே இல்லாததுபோல  அவ்விடத்தில் ஒரே சீரான தோல் தெரிந்தது. 

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் சிலவற்றுக்கு உடம்பின் ஒன்பது துவாரங்களில் சிலது திறவாமலே போய்விடுவதும் அறுவை சிகிச்சை மூலமாக கிழித்துத் திறந்து தையலிடுவதும் அவர் அறியாததல்ல. மலத்துவாரத்தில் புற்று கண்டவர்களுக்கு அத்துவாரத்தை தைத்து மூடி மலம் வெளியேற மாற்றுப்பாதை அமைப்பதெல்லாமும் கூட அவர் அறிந்ததுதான். ஆனால் இவன் பிரச்னை அத்தகையதல்லவே. பிறந்ததிலிருந்து ஆறேழு நாட்களுக்கு முன்புவரை இருந்த ஓர் அவயம் இப்போது எப்படி திடுமென இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போகும்? 

மனித உடலை அணுவணுவாக பகுத்தும் தொகுத்தும் ஊடுருவியும் காட்டும் திறன்வாய்ந்த அதிநவீனக் கருவிகள் கொண்டு அவனைப் பலவாறாக சோதித்தும் மருத்துவரால் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. அவனுக்கு பசி இயல்பாக இருக்கிறது, சாப்பிடுகிறான். உண்டது செரிமானமாகி சீராக மலக்குடலுக்குச் செல்கிறது. ஆனால், வெளியேறும் வழி அடைபட்டிருக்கிறது. அப்படி அடைபட்டிருப்பது பற்றி அவனுக்கு எந்த புகாருமில்லை. மலச்சிக்கலால் பலர் மனச்சிக்கலுக்கும் ஆளாகிவிடும் நிலையில் அவனுக்கோ வெளிக்கியிருக்க முடியவில்லை என்கிற நினைப்பைத் தவிர உடல்ரீதியாக எந்தத் தொந்தரவும் இல்லை என்பது அமானுஷ்யக் கதைகளிலும்கூட கேள்விப்பட்டிராத அதிசயம்.  

சிகிச்சை சார்ந்து தெளிவு தேவைப்படும் சமயங்களில் தொடர்புகொள்ளக்கூடிய மூத்த மருத்துவ நிபுணர் ஒருவரை தொலைபேசியில் அழைத்த மருத்துவர், இப்படியொரு நோயாளி வந்திருக்கும் விசயத்தைச் சொல்லாமல், தனக்கு கற்பனையாகத் தோன்றிய ஒரு சந்தேகம் என்பதுபோல இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதா என்று கேட்டார். அந்த நிபுணரோ, ‘உங்க கற்பனைக்கும் சந்தேகத்துக்கும் ஒரு அளவில்லையா சார்? அதெப்படி சார் பொச்சு காணாமல் போகும்? கிணறு காணம்கிற  வடிவேல் ஜோக்கு மாதிரியில்ல இருக்கு’ என்று கேலியாகச் சிரித்தார். ‘இத்தனை லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவாகியிருக்கிற இந்த மனித உடற்கூறு ஒருவேளை எதிர் பரிணாமம் காண்கிற நிலை வந்தால்கூட போஜன வாயும் ஆசனவாயும் மறைவதற்கு வாய்ப்பேயில்லை. இப்படியெல்லாம் ஏடாகூடமா யோசிக்கிறதை நிப்பாட்டுங்க சார்’ என்றார். ‘என்னது, ஏடாகூடமா யோசிக்கிறனா? என் முன்னாடி ஒருத்தன் உட்கார்ந்திருக்கான் சார்’ என்று சொல்ல வந்தவர் சட்டென சுதாரித்து சொல்லாமல் நிறுத்திக்கொண்டார். 

தனக்கு மட்டுமே தெரிந்த இந்த விசயத்தை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு அவனை அவனது தொந்தரவோடே இங்கிருந்து அனுப்பிவைத்துவிடுவது அறமாகாது என்று கருதிய மருத்துவர், தன்னுடைய மருத்துவ அறிவுக்கு  கடும் சவாலாக அமைந்துவிட்ட அவனது பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று உறுதிகொண்டார். அதற்கான முன்தயாரிப்புக்கு கால அவகாசம் தேவை என்றுணர்ந்த மருத்துவர், அவனுக்கு மருந்து மாத்திரைகளால் பயனில்லை என்று தெரிந்தும், அதிகத் திறனுள்ளவை என்று சொல்லி சில மலமிளக்கி மாத்திரைகளையும் நீர்மங்களையும் கொடுத்து இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பவும் வருமாறு அனுப்பிவைத்தார். ஆனால் அவன் திரும்பவும் வரவே போவதில்லை என்பதை அப்போதைக்கு ஒருவரும் அறிந்திருக்கவில்லை. 

அப்பாவை நகரத்திலேயே விட்டுவிட்டு அந்தியில் வீட்டுக்குத் திரும்பிய அவனுக்கு வயிறு பெருக்க ஆரம்பித்தது. சற்றைக்கெல்லாம் சட்டைப்பொத்தான்கள் தெறித்துவிழுமளவுக்கு ஒவ்வொரு சுற்றாக உப்பியது வயிறு. கட்டியிருந்த லுங்கியும் கழன்று விழுந்து மானக்கேடாகிப் போனது. வயிற்றின் இரைச்சலும் பொருமலும் அடுக்களையில் இருந்த அம்மாவுக்கே கேட்டது. என்னடா வயித்துக்குள்ள வண்டியோடுதா என்று கேலியாக கேட்டுக்கொண்டே அம்மா அருகில் வரும்போதுதான், குடலைப் பிரட்டும்படியான நாற்றத்துடன் அவனது வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் கண்ணுக்குள்ளிருந்தும் காதுகளிலிருந்தும் மலம் பீய்ச்சியடிக்கத் தொடங்கியது. ‘அய்யோ எம்புள்ள யாருக்கு என்ன கெடுதல் செஞ்சதுன்னு இப்படி சித்திரவதை செய்யுற கடவுளே...’ என்று ஓலமிட்டுக்கொண்டு வந்த அம்மாவின் மேலெல்லாம் தெறித்து வழிந்தது. அந்த நாற்றம் தன் சுவாசத்தில் ஏறி உடல் முழுக்க ஊடுருவித் தாக்குவதாக அலறிய அவள் மூச்சுவிடத் திணறினாள். உள்வரைக்கும் ஏறிவிட்ட நாற்றத்தை வெளியே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என்கிற பதைப்பில் ஓங்கரித்து ஓங்கரித்து துப்பிக்கொண்டே நேராக பொடக்காலிக்கு ஓடிய அவள் தொட்டியிலிருந்த தண்ணியை பித்து பிடித்தாற்போல மோந்துமோந்து ஊற்றிக்கொண்டே இருந்தாள், ஆனாலும் நாற்றத்தின் கடுமை தணியவில்லை.   

நகரத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அவனது அப்பா ஊரை நெருங்கநெருங்க காற்றில்  சகிக்ககொண்ணாத நாற்றம் பரவித் தாக்குவதை உணர்ந்தார். எதிர்ப்பட்ட பலரைப் போலவே அவரும் மூக்கைப் பொத்தியபடி வீட்டை நெருங்கும்போதே இந்த நாற்றம் தனது வீட்டிலிருந்துதான் பாய்கிறது என்பதை அனுமானிக்க முடிந்தது. நாற்றம் ஒரு ஊசியைப் போல உள்ளேறுவதைப் பொருட்படுத்தாமல் வீட்டுக்குள் புகுந்தவர் மகனின் நிலை கண்டு பேதலித்துப் போனார். அய்யோ இதென்ன கொடுமை என்று அலறியபடி தண்ணீர் கொண்டுவர பொடக்காலிக்கு ஓடியவர் அங்கு ஈரத்துணியுடன் மனைவி மூர்ச்சையாகி விழுந்திருப்பதைக் கண்டார். ஓடிப்போய் அவளைத் தூக்கியபோது அவளுக்கும் வாய்வழியாகவும் மூக்கு வழியாகவும் கண்ணுக்குள்ளிருந்தும் காதுகளிலிருந்தும் மலம் கசிந்து வழிவதைக் கண்டார். நாற்றமெல்லாம் மரத்துப்போய் மகனுக்கும் மனைவிக்கும் நேர்ந்திருக்கிற அவலகதியைப் பார்த்து வாய்விட்டுக் கதறியவருக்கு கண்ணீருக்குப் பதிலாக மலம் வழியத் தொடங்கியது. டியூசன் முடித்து வரப்போகும் இளைய மகனையும் மகளையுமாவது காப்பாற்றிவிட வேண்டுமே என்று நினைத்தபடியே அவரும் மயங்கிச் சரிந்தார்.  

**

தகவல் கிடைத்து கவச உடைகளில் தற்காப்பு உபகரணங்களுடன் ஊருக்குள் வந்திறங்கிய பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு கண்ட காட்சிகளால் நிலைகுலைந்து போயினர். அவர்களுக்கு செல்பேசியில் தகவல் கொடுத்தவரது எண்ணைத் திரும்ப அழைத்தபோது அங்கு கொத்துகொத்தாய் செத்துக்கிடந்த மக்களிடையே அவரது போன் ஒலித்ததைக் கண்டனர். போர்க்கால வேகத்தில் அவசர சிகிச்சை முகாம்களுக்கு கொண்டுபோய் காப்பாற்றும் நிலையில் அங்கு யாருமிருக்கிறார்களா என்று வீடுதோறும் சோதனையிட்டவர்களுக்கு பிணங்கள்தான் கிடைத்தனவேயன்றி மனிதர்கள் யாரும் கிட்டவில்லை. மன உளைச்சலும் மூச்சுத்திணறலும் தாளமுடியாத ஒருகட்டத்தில், ஒட்டுமொத்த ஊருமே செத்தொழிந்துக் கிடக்கையில் வீடுவீடாக சோதித்து யாரைக் காப்பாற்றப் போகிறோம் என்று சோதனையிடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு அதுவரை கிடைத்த பிணங்களை அங்கேயே வெட்டவெளியில் பிணக்கூராய்வு செய்தனர். கடுமையான மூச்சுத்திணறலால் தான் இவ்வளவுபேருடைய மரணமும் சம்பவித்திருப்பதாக தெரிவித்தது பிணக்கூராய்வு அறிக்கை. பிணங்களுக்கு உரிமைகோர யாரும் இல்லாத நிலையில் ஊரோரம் இருந்த இடுகாட்டில் பொக்லைன் விட்டு ஆழக்குழியெடுத்து அவ்வளவுபேரையும் புதைத்துவிட்டுக் கிளம்பினர். அவர்களால் சோதனையிடப்படாமல் கைவிடப்பட்ட வீடுகளில் ஒன்றுக்குள்தான் இந்தப் பேரழிவினைத் தொடங்கிவைத்த அவன் மலத்தேக்கத்திற்கிடையே அமர்ந்திருந்தான்.

போபால் விஷவாயுக் கசிவைப் போன்றதொரு கொடிய பேரழிவுத் தாக்குதல் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடும் என்கிற முடிவுக்கு வந்த தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவு நிபுணர்கள், மலப்புழை தவிர்த்த எட்டு துவாரங்கள் வழியாக மலம் வெளியேறும் வினோதம் குறித்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாமல் திண்டாடினர். அவனது பார்வையில் நேரடியாக பட்ட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவனைப் போலவே மலப்புழை தவிர்த்த உடம்பின் மற்ற எண்துவாரங்கள் வழியாகவும் மலத்தை வெளியேறச் செய்த புதுவகைத் தொற்று, அடுத்த சிலமணி நேரங்களில் காற்றில் கலந்திருக்கும் அந்த நாற்றத்தின் வழியாகவும் பரவி அதே பாதிப்பை உண்டாக்கவல்லதாய் உருமாற்றம் அடைந்து சுவாசமண்டலத்தைச் சிதறடித்து காவு வாங்கியிருக்கிறது என்கிற உண்மையை அவர்களது நிபுணத்துவம் நெருங்கவேயில்லை. இந்த ஊரையொட்டி -ஆனால் ஊருக்குப் புறத்தே- இருக்கிற ஒரு குடியிருப்பினர் இந்தக் கொடிய பேரழிவின் சிறு பாதிப்பிற்கும்கூட ஆளாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பதன் சூட்சுமத்தை அறிந்திட அவர்கள் முயற்சித்திருந்தால், ஒருவேளை தீர்வு புலப்பட்டிருக்கக்கூடும்.

“மனிதர்கள் வாழத்தகாத பகுதி” என்கிற அறிவிப்புப்பலகையுடன் தகரத்தாலும் மின்சார முள்வேலியினாலும் தடுத்தடைக்கப்பட்ட ஊருக்குள் இப்போது அவன் மட்டுமே இருக்கிறான். தடுப்பரணுக்கு அப்பால் புறக்குடியிலிருந்து காற்றினை மயக்கி சன்னமாய் மிதந்துவரும் இசையும் பாட்டும் குழந்தைகளின் ஆரவார ஒலிகளும் உண்டாக்கும் மனக்கிளர்ச்சியால் மனிதர்களோடு சேர்ந்து வாழும் ஏக்கம் பெருகி அவனை உருக்குகிறது. அவனால் அவனது பெற்றோரும் சகோதரர்களும் ஒத்தாசையாக இருந்த நண்பர்களும் ஒட்டுமொத்த ஊராரும் தமது உயிரையே இழக்க வேண்டியதாகிவிட்டது என்பதையறியாமல் அவர்கள் தொற்றுக்கு அஞ்சி ஓடிப்போய்விட்டதாகத்தான் அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்மீது மலவாடை வீசாமல் இருந்தால் அவர்கள் திரும்ப வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் சேந்துக்கிணற்றில் தண்ணீர் இறைத்து தன்மேல் ஊற்றிக்கொண்டு ஓடிப்போய் காளியாயி கோயில் கோபுரத்தின் உச்சியில் ஏறி அவர்கள் வருகிறார்களா என்று வெற்றுவெளியை நாலாப்பக்கமும் கண்ணயரும்வரை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். எதையாவது உட்கொண்டால் எண்துவாரங்களிலும் மலம் வழியுமே என்கிற அச்சத்தில் சமீபநாட்களாய் எச்சிலைக்கூட விழுங்காமலிருக்கும் அவன் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாங்குவான் என்று தெரியவில்லை. ‘அய்யோ எம்புள்ள யாருக்கு என்ன கெடுதல் செஞ்சதுன்னு இப்படி சித்திரவதை செய்யுற கடவுளே...’ என்று அரற்றியபடி ஓடிய அம்மா திரும்பி வந்தால், தான் யாருக்கு என்ன கெடுதல் செய்ததற்காக இயற்கை இந்தத் தண்டனையை வழங்கியிருக்கிறது என்று சொல்லிவிட வேண்டும் என்பதுதான் அவனது இறுதி விருப்பமாக இருக்கிறது.    

**

அடுத்தவர் மாண்பைக் குலைக்கவும் சிறுமைப்படுத்தவும் மலத்தைப் பயன்படுத்திவிட்டு யாரிடமும் சிக்காமல் தப்பித்துவிட்டவர்களுக்கும் இயற்கை இப்படியொரு தண்டனையைக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் இயற்கையிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு நீங்கள் என்னத்தைப்...

 ***

நன்றி: நீலம், 2023 மார்ச் இதழ்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...