செவ்வாய், மார்ச் 21

ஆய்வுதான் அறிவு - ஆதவன் தீட்சண்யா

                          

பேரா. கா.அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிடாக வரவிருக்கும் தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் என்ற நூலுக்கான முன்னுரை

வெறும் பெயர்களும் எண்களும் நிறைந்திருக்கும் டெலிபோன் டைரக்டரி போல மன்னர்களின் பெயர்களாலும் அவர்கள் ஆண்ட/ அழிந்த ஆண்டுகளின் எண்களாலும் நிறைக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாளர்களால் அலுப்புடன் குறிப்பிடப்பட்ட இந்திய வரலாற்றை மக்களின் வரலாறாக மாற்றியெழுதி நேர்செய்யும் ஆய்வாளர்களில் ஒருவராக தோழர் மணிக்குமார் வளர்ந்தெழுந்த சித்திரத்தை இந்நூலின் ஈற்றிலுள்ள “எழுத எழுதவே வாசிப்பு கூடும்” என்கிற கட்டுரை வழங்குகிறது. “ஆய்வுதான் அறிவு” என்கிற புரிதலூறிய மார்க்சீய ஆய்வாளராக கடந்த காலத்தின் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளையும் போக்குகளையும் மணிக்குமார் ஆய்ந்தெழுதத் தேர்ந்து கொண்டதன் காரணம் இந்தப் பின்புலம்தான். 

புராண வரலாறு, சமயச்சார்பு வரலாறு, சமூக வரலாறு என்றுள்ள வகைமைகளில் சமூக வரலாற்றை எழுதுகிறவரான மணிக்குமார், 1999 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரையாக அவ்வப்போது எழுதிய இக்கட்டுரைகள் சமூக அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் இன்றைக்கு முனைப்படைந்துள்ள விவாதங்கள் பலவற்றை விளங்கிக் கொள்வதற்கும் அவ்விவாதங்களை அடுத்தச்சுற்றுக்கு முன்னகர்த்தவும் உதவுகின்றன. குறிப்பாக, ஆரியம்- திராவிடம், பெளத்தம், காலனிய ஆதிக்கம், விடுதலைப் போராட்டம், சமூகநீதிப் போராட்டங்கள், அரச வன்முறைகள், சாதிய மோதல்கள், சமத்துவத்துக்கான எத்தனங்கள் என விரியும் இவரது ஆய்வுப்புலம், வரலாற்றுத்திரிப்புகளையும் திரிபுகளையும் அம்பலப்படுத்தி உண்மையின் மீது நம்மை கண்குவிக்கச் செய்கின்றன. இடம் பெற்றுள்ள நேர்காணல்களும்கூட இந்தப்பாங்கிலேயே இருக்கின்றன. 

புராண இதிகாசப் புனைவுகளை கடந்தகாலத்தின் உண்மை நிகழ்வுகளைப் போல சித்தரிப்பது, தற்கால அறிவியல் தொழில்நுட்பச் சாதனைகள் அனைத்தும் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதாக அல்லது இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக மோசடியாக உரிமை கோருவது, இவற்றையெல்லாம் இன்டியன் நாலட்ஜ் சிஸ்டம் என்கிற பெயரில் தொகுத்து உயர்கல்வியில் திணிப்பது, சாதியமைப்பு உள்ளிட்ட எல்லா தீங்குகளுக்கும் இஸ்லாமியரைப் பொறுப்பாக்குவது, சமூகத்தின் பிற்போக்கான நடத்தைகளை இந்தியத் தனித்தன்மை எனப் போற்றுவது, விடுதலைப் போராட்ட வரலாற்றைத் திரிப்பது, நாட்டின் பன்மைத்துவத்தை பாழாக்கி ஒற்றைமயப்படுத்துவது  என வரலாற்றின் மீது நடத்தப்பட்டுவரும் கொடுந்தாக்குதலை எதிர்கொள்ளும் கருத்தாயுதங்களாக இருக்கின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள். 

மேற்கத்திய, மார்க்சிய கண்ணோட்டத்தின் செல்வாக்கிலிருந்து இந்திய வரலாற்றை விடுவித்து இந்தியத்தன்மையுடன் இந்தியாவின் 12ஆயிரம் வருட வரலாற்றை எழுதப்போவதாக சங்பரிவார கும்பல் கொக்கரித்துக் கொண்டிருக்கும் காலமிது. அதற்காக சர்மாக்களையும் சாஸ்திரிகளையும் மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள குழு, ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகளெனவும் அவர்களது சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய் என்றும் சிந்துசமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்றும் புளுகிவிட்டு ஓடிவிட முடியாதபடி தடுக்கும் பல தரவுகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது. 

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கும் மத நல்லிணக்கத்துக்கும் திப்பு சுல்தான் ஆற்றிய போற்றுதலுக்குரிய பங்கினை இருட்டடிப்புச் செய்வதற்கும்  அவர்மீது எதிர்பிம்பம் கட்டமைக்கப்படுவதற்குமான இழிமுயற்சியை அடித்து நொறுக்கும் வலுவான சான்றுகளை முன்வைக்கிறது “திப்பு சுல்தான்” கட்டுரை. மக்கள் நலனில் அக்கறைகொண்ட சமதர்மச் செயற்பாட்டாளராக கொண்டாடத்தக்கவர் திப்பு என்பதற்கு மணிக்குமார் கைக்கொள்ளும் அளவீடுகள் ஏற்கத்தக்கவை. மராத்திய இராணுவத்தளபதி ரகுநாதராவ் சிருங்கேரி மடத்தை கொள்ளையடிக்கிறான்; திப்புவோ மடத்தை மீண்டும் கட்டிட உதவுகிறார். குருவாயூர் கோவிலுக்கு 613.2 ஏக்கர் நிலமும் 1428ரூபாய் 9 அணா 2 பைசா வருடாந்திர மனியமும் கொடுத்ததற்கான சான்றுள்ளது எனும் கூற்று இப்போது தேவையான ஒன்று. திப்புவின் மகன்களும் பங்கெடுத்த வேலூர்ப் புரட்சியின் வீச்சையும் விளைவுகளையும் மதிப்பிட்டு அதனை இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று மணிக்குமார் தொடர்ந்து ஆய்வுப்பூர்வமாக முன்வைத்ததன் மூலமே அது இன்று பரவலாக கவனம் பெற்றுள்ளது எனலாம்.  

காலனியாட்சியாளர்கள் தம் வர்க்கநலனுக்கென மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களால் தவிர்க்கமுடியாமல் தலித்துகள் உள்ளிட்ட அடிநிலைச்சாதியினருக்கு கிட்டிய சில வாய்ப்புகளை திட்டமிடப்படாத ஆதாயங்கள் என்பார் ஆனந்த் டெல்டும்ப்டே. அப்படியான ஆதாயங்கள் மூலம் முன்னேறுவதற்கு தமிழ்ச்சமூகத்தில் நடந்த எத்தனங்களை மணிக்குமாரின் சில கட்டுரைகள் கவனப்படுத்துகின்றன. காலனியாட்சியின் பொருளாதாரச் சுரண்டல், கொடிய பஞ்சங்கள், புலப்பெயர்வுகள், நிலவருவாய் முறைகள், 1930களில் உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம், இவற்றினூடாக வணிகச் சமூகம் அடைந்த சாதக பாதகங்கள் என்று விரிந்துசெல்லும் இக்கட்டுரைகள் காலனிய ஆட்சியின் மீதான மறுமதிப்பீட்டைச் செய்கின்றன. நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பாக தாதாபாய் நெளரோஜி முன்வைத்த வடிகால் கோட்பாடு பற்றி மணிக்குமார் வழியாக நான் இப்போதுதான் அறிகிறேன்.  

விடுதலைக்கு முன்பும் பின்புமான சமூக வன்முறைகளை சாதிக் கலவரங்களாக பலரும் திரித்துக் கூறிவந்த நிலைக்கு மாறாக, அவற்றை சமூகநீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் நடந்த போராட்டங்கள் என நிறுவும் மணிக்குமார், இப்போராட்டங்கள் பொருளாதார மற்றும் பண்பாட்டு கட்டமைப்பில் உண்டாக்கிய மாற்றங்களையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். நாடார்கள் ஒருபோதும் ஒடுக்கப்பட்டவர்களாக- தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானவர்களாக இருந்ததில்லை என்கிற போலிப்பெருமிதங்களை நிராகரித்து அச்சமூகம் இன்றைய நிலையை அடைவதற்கு நடத்திய போராட்டங்களை அதன் காலத்தில் வைத்து மதிப்பீடு செய்துள்ளார். 

அதேபோல முதுகுளத்தூர், கொடியன்குளம், தாமிரபரணி என தலித்துகள் மீது தொடரும் வன்கொடுமைகள் தொடர்பான கட்டுரைகள் சாதியத்திற்கெதிராக களத்திலும் கருத்துலகிலும் தீவிரப்படுத்த வேண்டிய போராட்டத்தை வலியுறுத்துகின்றன. அம்பேத்கரும் கம்யூனிஸமும் கட்டுரையில், நாசிக் காலாராம் கோயில் நுழைவுப் போராட்டம் தொடர்பாக மணிக்குமார் முன்வைத்துள்ள கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோருகிறேன். ஏனென்றால் அப்போராட்டம் வழிபாட்டில் சமவுரிமை கோரும் தலித்துகளுக்கு இந்துமதம் வழங்கியுள்ள இடம் என்னவென்பதை அவர்களே நேரடியாக உணரவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது என்பதை அம்பேத்கர் மிகவிரிவாக பேசியுள்ளார். 

“வரலாறு என்பது தலைமுறை தலைமுறையாக மாற்றமில்லாமல்  வந்து கொண்டிருக்கும் தகவல் அல்ல. வரலாற்றுச்சூழல்கள் விளக்கப்பட வேண்டியவையாய் இருக்கின்றன. இந்த விளக்கங்கள், விவாத தருக்கத்திலிருந்து வெளிப்பட்ட பொதுமைகளை வழங்கும் சான்றுகளைப் பகுப்பாய்வுச் செய்வதிலிருந்து வருகின்றன. புதிய சான்றுகளால் அல்லது ஏற்கனவே இருக்கிற சான்றுகளுக்குப் புதிய பொருள் கொடுப்பதால் பழமைகளைப் பற்றிய ஒரு புதிய புரிதலை நாம் அடையமுடியும்…” என்பார் மூத்த வரலாற்றாளர் ரொமிலா தாப்பர். அத்தகைய புதிய புரிதலை நமக்கு உருவாக்கும் தீவிரத்துடனும் அக்கறையுடனும் இக்கட்டுரைகளை எழுதியுள்ள தோழர் மணிக்குமார் அவர்களை தோழமையால் தழுவிக்கொள்கிறேன். ஆழ்ந்தகன்ற வாசிப்பும் இடையறாத தேடலும் மார்க்சியக் கண்ணோட்டமும் கொண்ட அவருடைய இந்நூலால் இந்திய/ தமிழ்நாட்டு வரலாறு மேலும் வளமடைந்து துலங்குகிறது. 

ஆய்வுப்புலத்தில் மதிப்பார்ந்த இடத்தைப் பெற்றுள்ள இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை நாங்கள் நடத்திய புதுவிசை இதழில் வெளியானவை என்பதனால் உண்டாகும் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். நாம் ஆய்ந்தறிந்த உண்மைகளை எழுதாமல் போனால் ஏற்படும் வெற்றிடத்தை நமது கருத்தியல் எதிராளிகள் நிரப்பிவிடுவார்கள் என்கிற பதைப்புடன் அவர் எழுதிக் கொண்டேயிருக்கிறார். படிப்பதும், பரப்புவதும் நம் வேலை.     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...