திங்கள், மார்ச் 6

என் வானவில்லில் ஏழுநிறங்கள் இல்லை - ஆதவன் தீட்சண்யா








கேரள சாகித்ய அகாதமி வெளியிடும் "சாகித்ய சக்ரவாளம்" 2023 மார்ச் இதழுக்காக என்.ஜி.நயனதாரா  எடுத்த நேர்காணல். மலையாளத்தில் மொழிபெயர்த்தவர் : ஷாபி செருமவிலாயி

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வை கவிதையின் ஊடாக வெளிப்படுத்தும் தமிழ் மரபு சமகால கவிதையிலும் தொடர்கிறது?  

சகமனிதர்களின் அவலங்களிலோ சமூக நடப்புகளிலோ கண்பதித்தால் ஒரு பூ மலர்ந்திடும் தருணத்தினைக் காணும் இன்பத்தைத் துய்க்க முடியாமலே போய்விட நேரும் என்று மழுப்புகிற தூய(?) கவிஞர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது தான் தமிழ்க்கவிதை. மெய்யுலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மெய்நிகர் உலகில் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளிடம் உரையாடுகின்ற தற்காலத்தவருக்கு இவர்கள்தான் முன்னோடிகளாக இருக்கக் கூடும். உள்முகத் தேடல் என்று தமக்குள்ளேயே புதையும் இந்தக் கவிதைப்பரப்பினுள் உழைப்பு, உற்பத்தி, விநியோகம், அதிகாரம் சார்ந்து நிலவுகின்ற ஏற்றத்தாழ்வினையும் அதை நிலைநிறுத்தும் ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்தும் கருத்தியல்களையும் எதிர்க்கின்ற பாரம்பரியம் விதிவிலக்கானதொரு சிற்றோடையாக இருந்து வந்திருக்கிறதேயன்றி அது ஒருபோதும் மைய நீரோட்டமாக இருந்ததில்லை. மதிக்கத்தக்கச் சிந்தனையாளர்களும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களுமான எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் கூட அவர்கள் மொழிபெயர்ப்பில் வெளியான “கடைசி வானத்துக்கும் அப்பால்” என்கிற கவிதைத்தொகுப்பின் முன்னுரையில் இதே மதிப்பீட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.  

நம் காலத்தின் எதிர்ப்புணர்வு, அதிகாரத்திலுள்ள பார்ப்பனீயத்தையும் கார்ப்பரேட்டியத்தையும் (நான் இந்தக் கூட்டணியை பார்ப்பரேட்டியம் என்கிறேன்; ஆனந்த் டெல்டும்ப்டே பாசிஸம்+ என்கிறார்) அம்பலப்படுத்துவதிலும் அவற்றை முறியடிக்க மக்களை கிளர்ந்தெழச் செய்வதிலும் முனைப்பு கொண்டுள்ளது. மக்களை மனிதநிலையிலிருந்து பலபடிகள் கீழே தாழ்த்தி வைத்திருக்கும் இவ்விரண்டுக்கும் நேரடியான மாற்று சமத்துவம் தான். சமத்துவம் என்கிற ஆக நவீனமான கருத்தாக்கத்தை சொந்த வாழ்வியல் தேவையிலிருந்து கோருகின்ற சமூக அடுக்கினரிடமிருந்து வெளிப்படும் கவிதைகள் தன்னியல்பாகவே இந்தச் சமூக அமைப்புக்கும் நடப்புகளுக்குமான எதிர்ப்புணர்வை இன்றளவும் கொண்டுள்ளன. 

உங்களது கவிதையொன்று மண்ணுக்கும் சாதியுண்டு என்று முடியும். இன்னும் எத்தனை காலத்திற்கு கவிதை, போராட்டங்களுக்குக் குரல் கொடுப்பதாக இருக்குமென நினைக்கிறீர்கள்?  என்றாவதொரு நாளின் முடிவில் வெளிச்சம் வருமா? 

மனிதகுலத்தின் அடிப்படை வாழ்வாதாரமான நிலத்தை பூமித்தாய் என்றும் புண்ணிய பூமி என்றும் போற்றுகிறார்கள். ஆனால் குறிப்பிட்டதொரு நிலப்பரப்பில் வாழும் மக்களின் சாதிதான் அந்த நிலத்திற்கும் அதன் மக்களுக்கும் தெய்வங்களுக்கும் வழிபாட்டிற்கும் திருவிழாக்களுக்குமான மதிப்பைத் தீர்மானிக்கிறது. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்பார்கள். ஆனால் குடிநீர்த்தொட்டியில் மலத்தைக் கரைப்பார்கள் அல்லது செத்த நாயைத் தூக்கிவந்து குடிநீர்த்தொட்டிக்குள் வீசிவிட்டுப் போவார்கள். தீட்டு X புனிதம், உயர்வு X தாழ்வு, ஒதுக்குதல் X ஒதுங்குதல் என்னும் சாதியக் கருத்தாக்கம் இயற்கை வளங்களையும் அன்றாட வாழ்வின் அனைத்து நடத்தைகளையும் முடிவுகளையும் பாகுபடுத்துகிறது. இந்தப் பாகுபாட்டின் கொடூரத்திற்கு நேரடியாய் ஆளாகியிருக்கிற அல்லது இப்போதில்லாவிடினும் எப்போதேனும் ஆளாக நேரிடும் என்கிற அச்சத்தில் மனவுளைச்சலுக்கு ஆளாகிற எனது கவிதையின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும்? என் முன்னே நீட்டப்படும் குவளையில் உள்ள தண்ணீரில் மலம் கலந்திருக்காது என்று எந்த நம்பிக்கையில் நான் குடிக்கமுடியும்? இந்த இழிநிலையை அப்படியே வைத்துக்கொண்டு வாழ்க்கை உன்னதமானது என்றோ மனிதர்கள் மகத்தானவர்கள் என்றோ நான் எப்படி எழுதுவேன்? இந்த அவலத்திலிருந்து கடைசி மனிதரையும் விடுவிப்பதற்கான போராட்டம் நீடிக்கும் வரை, அந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்கிற - அதன் நியாயத்தைப் பரந்த சமூகத்தின் முன்வைத்து உரையாடுகிற பணியை விடவும் மேலான நோக்கம் எதுவும் எனது கவிதைக்கு அவசியமில்லையெனல் கருதுகிறேன்.   

இந்திய / தமிழ்ச்சமூகத்தை மனிதாயமானதாகவும் ஜனநாயகப் பண்புடையதாகவும் தகுதிபடுத்தி ஒளிதுலங்கும் நற்காலத்திற்கு இட்டுச்செல்லும் வரலாற்றுக்கடமை தலித்துகள் பெண்கள் மற்றும் உழைப்புச்சக்தியைத் தவிர வேறொன்றையும் உடைமையாகக் கொண்டிராத உழைப்பாளி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கு குறைவான எதுவொன்றிலும் நிறைவடைய முடியாத அவர்கள் தமது நெடிய போராட்டத்தினூடாக ஈட்டிவரும் வெற்றியினால் தான் இந்தியாவுக்கு உலக சமூகத்தின் முன்னே கொஞ்சநஞ்ச மரியாதையாவது மிஞ்சியிருக்கிறது. வரலாற்றுக் கட்டாயம் அல்லது தவிர்க்கவியலாத தன்மையினால் தமது வாழ்நிலையில் மாற்றம் நிகழ்ந்துவிடும் என்கிற கோட்பாட்டு தர்க்கங்களுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளாமல் இந்த நாட்டை அவர்கள் தமது இலக்கை நோக்கி இழுத்துப்போவதில் அங்குலம் அங்குலமாக முன்னேறி வருவதைத்தான் நீங்கள் குறிப்பிடும் ஒளியாக விளங்கிக்கொள்கிறேன். அந்த ஒளி என்றோ ஒரு நாளின் முடிவில் காணக்கூடியதாக அல்லாமல் அன்றாடம் சுடரக்கூடியதாய் இருக்கிறது.

 உங்களது கவிதைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

யாவருக்கும் பிடித்தமான, பொத்தாம்பொதுவான கவிதைகளை எழுதத் தெரியாதவனாக இருப்பது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பொம்மைக்கண்களைக் பொருத்திக் கொண்டவன் போல் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் எல்லாவற்றையும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க ஏலாமல் தத்தளிப்பவன் நான். என்னை சமநிலை தவறச் செய்கிற அல்லது எழுதத் தூண்டுகிற புறநிலை  விசயங்களிலிருந்து என் சொந்த அனுபவத்துடன் இழைகிற அல்லது அவ்வாறு உட்கிரகித்துக்கொள்ள முடிகின்றவற்றை மட்டுமே எழுதுகிறேன். எனது கவிதையின் மூலகங்கள் யாவும்  எனது மொழியிலிருந்தும், எனது நிலப்பரப்பிலிருந்தும், எனது சக மாந்தர்களிடமிருந்தும் எனது வாழ்நிலையிலிருந்தும் பெறப்பட்டவை. ஆகவே, என்னை ஆற்றுப்படுத்திக்கொள்ள அல்லது இயல்புக்குத் திருப்பிட நான் எழுதிக்கொள்ளும் கவிதை எனக்கு மட்டுமேயானதாக இருக்கமுடியாது, இருக்கக்கூடாது எனக் கருதுகிறேன். அந்தக் கவிதையில் உங்களில் யாரேனும் உங்களைக் காணமுடிந்தால் என் கவிதையின் இலக்கு அதுவேயென பலம் பெறுகிறேன். 

எப்படி எழுதத் தொடங்கினீர்கள்?

உண்மையில் இதற்கான பதில் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி: நான் கருவிலே திருவுடையவன் அல்ல. எனது பேனா எந்த தெய்வத்தினாலும் அருளப்பட்டதல்ல. மாணவப்பருவத்தில் எழுதப்பட்ட என் முதல் கவிதையின் முதலடி அசரீரியிலிருந்து பெறப்பட்டதல்ல. என் கவிதையின் பாடுபொருளும் மொழியும் வாசகர்களும் மனிதர்கள் தான். 

ஊரக வாழ்வும் நகர்ப்புற வாழ்வும் ஒன்றையொன்ரு எதிர்க்கும் இருமைகளாக உள்ளன. நகரமயமாக்கம் சமுக வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

பென்னம்பெரிய கட்டிடங்களும், அகன்ற சாலைகளும் வெள்ளமெனப் பொழியும் விளக்கொளியும், வாகனங்களும், தகவல் தொடர்பும், வணிக வளாகங்களும் அவற்றில் குவிந்திருக்கும் பொருட்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், குடிநீர் இணைப்புகளும் தொழிற்கூடங்களும் கல்விச்சாலைகளும் மருத்துவமனைகளுமாக நகரங்கள் விரிவடைந்த வண்ணமுள்ளன. ஐ.நா. சொல்லும் ஒரு கணக்கின்படி இந்த வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள 475 பெருநகரங்களிலும் 7935 சிறு நகரங்களிலும் 2030ஆம் ஆண்டில் 40 கோடிக்கும் மேலானவர்கள் வசிப்பார்கள் என கணிக்கப்படுகிறது. 

இந்த நகரங்கள், கிராமங்களுக்குக் கிட்டாத பல வசதி வாய்ப்புகளையும்  உள்கட்டமைப்பினையும் பெற்றிருந்தபோதிலும் இவற்றைப் பகிர்ந்து கொள்வதில் சாதி, மதம், பாலினம், வர்க்கம் சார்ந்து ஒவ்வொரு நகரமும் தன்னளவில் திட்டவட்டமான பாகுபாடு நிறைந்ததாக உள்ளது. காலநிலை மாற்றங்கள், வேளாண்மை நசிவு, கடன்சுமை, சாதிக்கொடுமை உள்ளிட்ட பல காரணங்களால் கிராமங்களிலிருந்து வெளியேறி நகரங்களுக்கு வருகின்றவர்கள் மீது (ஆண்டுதோறும் சுமார் 2 கோடி பேர்) இந்தப் பாகுபாடு மேலும் மூர்க்கமாக வெளிப்படுகிறது. 

வாழ்வாதாரம் தேடியலையும் உள்நாட்டு இடப்பெயர்வுகளை, நகரங்களை ஆக்கிரமிக்கும் சதியாகவும் சட்டவிரோதமாகவும் பார்க்கும் குரோத மனப்பான்மை நீதிமன்றங்களையும் பீடித்துள்ளது.  இட நெருக்கடி, வளங்களின் பற்றாக்குறை, சூழல் மாசு போன்ற பிரச்னைகள் இல்லாத வகையில் அனைவரையும் உள்ளடக்கிய திட்டமிடலுடன் நகரங்களை உருவாக்குகிற – விரிவாக்குகிற அணுகுமுறை இங்கு ஏட்டளவிலானவை. 

உலகமயமாக்கலுக்குப் பிந்தைய இந்த முப்பதாண்டுகளில் கல்வி, பொது சுகாதாரம், மருத்துவம், குடிநீர் விநியோகம், மின் விநியோகம், கழிவுநீர் அகற்றம், பொதுப்போக்குவரத்து ஆகியவற்றை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து அரசுகள் வெளியேறுவதுடன் இப்பொறுப்புகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் வாழ்க்கைச் செலவினம் கூடி நகரவாசிகளின் வாழ்க்கைத் தரம் குறைகிறது. அதிலும் குறைந்த வருமானமுள்ளவர்களின் துயரம் சொல்லி மாளாதது. 

இதெல்லாம் ஒருபுறமிருக்க, நகரங்களின் பெரும்பாலான மனிதர்கள் – குறிப்பாக மேட்டுக்குடியினரும் நடுத்தர வர்க்கத்தினரும் அப்படியொன்றும் கிராமத்தார்களைவிட மேம்பட்ட நவீனமான சிந்தனை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் நகரத்தின் எல்லா வாய்ப்புகளையும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் பயன்படுத்தி நிலவுடைமைச் சமூகத்தின்- முடிந்தால் அதற்கும் முந்தைய காலக்கட்டங்களின் மதிப்பீடுகளை உள்வாங்கிய நகரங்களைத்தான் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது வீடுகளில் குடும்ப ஜனநாயகம் பேணப்படுவதில்லை. தனது அண்டை வீட்டில் வேறு பண்பாட்டுப் பின்புலம் உள்ளவர் வசிப்பதை சகித்துக் கொள்ள மறுக்கிற சராசரி இந்தியரிலிருந்து நகரவாசிகள் எவ்வகையிலும் வேறுபட்டவர்களாக இல்லை. உணவு, வழிபாடு, நம்பிக்கைகள் சார்ந்து சகமனிதர்களை ஒதுக்குவதிலும் இதே நிலை தான். பெருவீதமான திருமணங்கள் சொந்தசாதிக்குள் மட்டுமே நடக்கின்றன. 1970ஆம் ஆண்டு நடந்த மொத்த திருமணத்தில் 5% மட்டுமே சாதிக்கலப்புத் திருமணங்கள் என்றால் அது ஒரு சதவீதம் அதிகரித்து 6% ஆவதற்கு 42 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. பெண்கள் மீதும் தலித்துகள் மீதும் 15 நிமிடங்களுக்கு ஒரு வன்முறை நிகழ்த்தப்படும் தேசிய சராசரியிலிருந்து நகரவாசிகள் வேறுபட்டிருப்பதாக சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் ஒடுக்குமுறையின் வடிவங்களில் நுட்பங்கள் கூடியிருக்கலாம். 

 தமுஎகச செயல்பாடுகள், அமைப்பின் அக்கறைகள் பற்றி?

1975 ஆம் ஆண்டு ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட அவசரநிலைக் காலத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்து உருவான அமைப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச). உருவான காலந்தொட்டு சமூகத்தின் மதிப்புமிக்க கலை இலக்கிய ஆளுமைகளும் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் இவ்வமைப்பில் இணைந்து பணியாற்றிவருகிறார்கள். மூன்றாண்டுகளுக்கொரு முறை கிளை முதல் மாநிலம் வரை ஜனநாயக முறைப்படி மாநாடுகளை நடத்தி செயல்திட்டங்களை உருவாக்கிக் கொள்கிறோம். தற்போது 22 ஆயிரம் பேர் உறுப்பினர்கள். 

சமூக அரசியல் பண்பாட்டு வெளிகளில் முனைப்படைந்து வரும் பிரச்னைகளில் தலையிடுவது, விவாதங்களின் வழியே கருத்துருவாக்கம் செய்வது, கலை இலக்கிய முகாம்களையும் நூல் விமர்சனக் கூட்டங்களையும் புத்தகக் கண்காட்சிகளையும் நாடகவிழாக்களையும் நடத்துவது என எமது செயல்பாடு தொடர்கிறது. தமிழ்ச்சமூகத்தின் பாரம்பரியக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்து மேடையேற்றுகின்ற கலை இரவு என்கிற வடிவம் தமுஎகசவின் கொடையாகும். ஆண்டுதோறும் உலகத் திரைப்பட விழாவையும், குறும்பட – ஆவணப்பட விழாவையும் நடத்தி வருகிறோம். ஒவ்வோராண்டும் சிறந்த நூல்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் ஆளுமைகளுக்குமான 15 விருதுகளும், சிறந்த 3 திரைப்படங்களுக்கான விருதுகளும் வழங்கப்படுகின்றன. 

சமூகம் பலமுனைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றங்களையும் கருத்தியல் வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளுகிற வலதுசாரி கருத்தியல் மேலெழுந்து வரத்தொடங்கிய காலம் முதலே அதன் வெறுப்பரசியலையும் பிளவுவாத அபாயத்தையும் எதிர்த்து பல வடிவங்களில் பரப்புரை செய்து வருகிறோம். தேசிய கல்விக்கொள்கை வரைவறிக்கையாக முன்வைக்கப்பட்ட நாள்முதலே அதற்கெதிராக மாநில அளவில் இயக்கங்களையும் கல்வி உரிமை மாநாட்டையும் நடத்தி உண்டாக்கிய அழுத்தம் மாநிலத்திற்கென்று தனியாக கல்விக்கொள்கையை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் திருத்தச் சட்டம், திரைப்பட தணிக்கைச் சட்டம், பீமா கோரேகான் பொய்வழக்கு ஆகியவற்றுக்கெதிரான போராட்டங்களிலும் எம்மை இணைத்துக் கொண்டிருக்கிறோம்.  

கொரானா பொதுமுடக்கக்காலம் எங்களது செயல்பாடுகளை பன்மடங்காக்கியது. இணைய வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தினோம். வாழ்வாதாரம் இழந்த நாட்டுப்புறக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் பாதுகாத்திட எம்மாலான அனைத்தையும் செய்தோம். இணையவழியில் திரைப்பள்ளியையும், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நாடகப் பள்ளியையும் நடத்தினோம். தற்போது தஞ்சாவூரில் நிரந்தர திரைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ்த் திரையுலகில் கவனம் பெற்றுள்ள ஆளுமைகள் பலரும் இதன் ஆசிரியர்களாக பங்கேற்கின்றனர்.  

வீடுதோறும் உறுப்பினர், வீதிதோறும் கிளை என்கிற இலக்குடன், தமிழ்நாட்டில் தமுஎகச இல்லாத ஊரே இல்லை, நிகழ்ச்சி நடக்காத நாளே இல்லை என்கிற அளவுக்கு எமது செயல்பாட்டை விரிவுபடுத்திவருகிறோம். 

தமிழ்நாட்டில் புத்தகங்களின் பரவல் எவ்வாறுள்ளது?

பெரும்பாலான தமிழர்களின் வீடுகளுக்குள் முதலில் வந்த அச்சடிக்கப்பட்ட காகிதம் பஞ்சாங்கம் அல்லது அரசுக்கு வரியோ வட்டியோ செலுத்திய ரசிதுகளாக இருக்கக் கூடும். எழுதப்பட்ட முதல் காகிதமாக ஜாதகம் அல்லது நில ஆவணங்கள் இருக்கலாம். (விதிவிலக்காக சிலரது வீடுகளில் அரிதான ஓலைச்சுவடிகள் இருந்திருக்கின்றன). இவற்றுக்கு அடுத்தக்கட்டத்தில் வந்துசேர்ந்தவை பாடப்புத்தகங்கள். இவையல்லாத வேறு புத்தகங்களை நூலகத்தில் வேண்டுமானால் பார்க்கலாமேயொழிய அவை வீடுகளுக்குள் நுழைவதற்கான சூழல் சமீபகாலம் வரை இல்லை. சமூகநீதிக் கண்ணோட்டத்தில் கல்வியும் வருமானமும் ஜனநாயகப்படத் தொடங்கியதன் தொடர்ச்சியில்தான் செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்களின் பரவலாக்கமும் நடைபெறத் தொடங்கியது. அதாவது சொந்தமாக பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கும் சக்தியுடைய ஒரு மக்கள் தொகுதி இங்கு உருவானது. அவர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கியதில் இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய  இயக்கங்களுக்கு பெரும் பங்குண்டு. சோவியத் இலக்கியங்கள், பகுத்தறிவு நூல்கள்,  விடுதலைக் கருத்தியல்கள் என இந்த இயக்கங்கள் திறந்துகாட்டிய உலகத்தின் விசாலத்தில் உருவான தலைமுறையினர் தான் தமிழ்ச்சமூகத்தின் அறிவியக்கத்திற்கு முன்னோடிகளானார்கள். 

பதிப்பாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் பெருநகரங்களில் மட்டுமே புத்தகச் சந்தைகளை நடத்திவந்த நிலையில் தமுஎகச, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற இயக்கங்கள் அடுத்த நிலை நகரங்களுக்கும் சிற்றூர்களுக்கும் தமது சொந்த வலுவுக்கேற்றபடி புத்தகச்சந்தைகளை கொண்டுசேர்த்தன. கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எமது அமைப்பு வெளியிட்ட “அரசியல் கட்சிகளுக்கு கலை இலக்கியச் சமூகத்தின் கோரிக்கை சாசனத்தில்”, குறைந்தபட்சம் மாவட்டத் தலைநகரிலாவது மாநில அரசே செலவழித்து புத்தகச்சந்தைகளை நடத்தவேண்டும் என்று கோரியிருந்தோம். இது வேறு பலரது கோரிக்கையும் கூட. இப்போதைய தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகக்கண்காட்சியை நடத்தத் தொடங்கியுள்ளது. முதன்முதலாக  இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காட்சியினையும் சிறப்பாக நடத்தியுள்ளது. ஆண்டொன்றுக்கு சராசரியாக நூறு கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்களை வாங்கும் தமிழ்நாட்டவர்கள் அவற்றை படித்து தமது கருத்துலகத்தை செம்மைப்படுத்திக் கொள்வதற்கான தனித்த ஏற்பாடுகள் தேவைப்படுகிறது. 

நாளொன்றுக்கு சராசரியாக 4.15 மணி நேரம் செல்போன் மூலமாக சமூக ஊடகங்களிலும் இன்னபிற இணையதளங்களிலும் உலவும் இந்தியர்கள் / தமிழர்களிடையே அவர்கள் அணுகத்தக்க வடிவங்களில் புத்தகங்களை வெளியிடுவது அவசியமெனத் தோன்றுகிறது. 

உங்களது எழுத்தின் அரசியலை எப்படி தொகுத்துப் பார்க்கிறீர்கள்?

மாணவப்பருவந்தொட்டு என்னை பிணைத்துக்கொண்டுள்ள இடதுசாரி இயக்கத்தின் கருத்தியலும் எனது சொந்த முயற்சியில் நான் கற்றுவருகிற அம்பேத்கரியமும் பெரியாரியமும் என்னை வழிநடத்துகின்றன. கூருணர்ச்சியுடனும் தன்மதிப்புடனும் வாழ்வதற்கான உள்வலுவை அவற்றிடமிருந்தே பெறுகிறேன். என் காலத்திற்கு முன்பாக நடந்துமுடிந்துவிட்ட நிகழ்வுகள் அல்லது சொல்லப்பட்டுவிட்ட கருத்துகளில் நான் தலையிடும் சாத்தியமில்லை. எனவே அவற்றை அந்த காலச்சூழலுக்குள் வைத்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அவற்றின் மீது எனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கிறேன். சமகால நடப்புகளை உன்னிப்பாக கவனித்து சாத்தியமானவற்றில் நேரடியாகவும் எழுத்தின் வழியாகவும் பங்கெடுக்கிறேன். ஒரு தனிமனிதனாக என்னால் மாற்றியமைக்க முடியாத எதார்த்தங்களை எனது புனைவுகளுக்குள் மாற்றியமைக்கிறேன். புனைவில் முன்வைக்கும் மாற்றங்களை நடப்புண்மையாக மாற்றுவதற்கு தனிமனிதனாகவும் கூட்டாகவும் என்னாலானதைச் செய்துகொண்டுமிருக்கிறேன்.  

வாழ்வின் மூர்க்கங்களையும், அதிகாரத்தின் அட்டூழியங்களையும், கண்காணிப்பினால் உண்டாகும் பதற்றத்தையும், சூழலைச் சகித்துகொள்ளவியலாத கணத்தில் தோன்றும் ஆவேசத்தையும் எனக்குள்ளான முரண்களையும் தொடர்ந்து எழுதுவதை எனது கடப்பாடாக ஏற்றுள்ளேன். 

 புகைப்படம்: பிரியா கார்த்தி 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...