வியாழன், ஜனவரி 5

களத்தில்… - ஆதவன் தீட்சண்யா

நிமித்தம் பாராமலும்
நற்சொல் கேளாமலும் 
நெடுங்காலமாய்
நீ தொடுத்துவரும் போரினால் 
சமத்துவத்திற்கான பாதையில் 
முன்னகரும் நான் 
புறங்காட்டப்போவதில்லை
நான் 

உனது படைக்கலமனைத்தையும் முறித்துப்போட்டு
பாசறையை வெறுங்கூடாரமாக்கிய நாளில்
நீயோ
பீயை அள்ளிக்கொண்டு வருகிறாய்

ஆயுதம் எதுவென்றறியாத 
உன்னுடன் போரிடுவது அவமானம்
உன்னை
எதிரியென ஏற்குமளவு  
நாணமற்றுப் போகவில்லை நான்

நாசினியால் 
கைகளைக் கழுவித் தூய்மையாகு 
மலத்தை நினையாமல் 
சோறுண்ணப் பழகு
குடிநீரைப் பாழ்படுத்தும் 
குணக்கேடரல்ல யாம்
தைரியமாய் தண்ணீர் குடி
மலையேறி துவண்டிருக்கும் 
உன் சாமிக்கும் 
ஒரு முழுங்கு கொடு

இன்று போய் நாளை 
எதிரியாகும் தகுதியுடன் 
திரும்பி வா
எதிரியாவதற்கு 
நீ மனிதராக வேண்டும்
நான் காத்திருக்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒண்டிக்கொட்டாய் வாழ்விலிருந்து... ஆதவன் தீட்சண்யா

இனிய உதயம் 2025 செப்டம்பர் இதழுக்கு நான் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: புதுகை முருகுபாரதி  அலமேலுபுர ம் ஒண்டிக்கொட்டா யில் இருந்த சிறுவய...