திங்கள், ஜனவரி 2

லெனின் இல்லாத இலங்கை… - ஆதவன் தீட்சண்யா


இலங்கை மலையகத்தமிழர் ஒருவரோடு எனக்கு முதல் நேரடித்தொடர்பு என்றால் தோழர் ஜோதிகுமாருடன் தான் என்பதாக நினைவு. இந்தியா வந்திருந்த அவர் எழுதிக்கொண்டிருக்கும் எங்களில் சிலரை சவுத் விஷன் பாலாஜி மூலமாக சந்தித்துப் பேச ஏற்பாடாகியிருந்தது. இலக்கியத்தின் நோக்குகள் போக்குகள் பற்றி நீண்ட அந்த உரையாடலில், “மார்க்ஸை பலரும் படித்தார்கள். ஆனால் லெனின் என்றொருவர்  படித்ததும் அவரது எழுத்துக்கள் பெரும் புரட்சிக்கானதாகி விட்டதல்லவா? பின்னாளில் வரப்போகும் லெனின் என்கிற ஒரேயொரு வாசகருக்காகத்தான் மார்க்ஸ் எழுதிவிட்டுப்போனார் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்தும் தேவைப்படும், எழுதுங்கள்..” என்று எங்களிடம் ஜோதிகுமார் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. சொன்னதுதான் நினைவிலிருக்கிறது, அவர் கேட்டுக்கொண்டவாறு அந்தச் சந்திப்பில் பங்கெடுத்த நான் எழுதவில்லை- வேறு யாரும் எழுதினார்களா என்றும் தெரியவில்லை.

இதனிடையே அறிமுகமான தோழர் ந.இரவீந்திரன் புதுவிசை இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர் வழியாக அறிமுகமாகிய அபூர்வமான தோழர்தான் லெனின் மதிவானம். ந.ரவீந்திரனின் இந்துத்துவம் இந்து சமயம் சமூக மாற்றங்கள் என்ற நூல் மீது புதிய சிந்தனை கலை இலக்கியப் பேரவை நடத்திய கருத்தாடல் நிகழ்வுகளில் அவர் முன்வைத்த கருத்துகளை எனக்கு அனுப்பியிருந்தார். விசயங்களை மாறுபட்டு பார்க்கும் கண்ணோட்டம் அவரிடம் இருப்பதை உணர்ந்துகொள்ள அது போதுமானதாயிருந்து. அதன் தொடர்ச்சியில்தான் புதுவிசையிலும் கீற்று.காம் இணையதளத்திலும் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அவ்வகையில், கல்வியமைச்சகத்தின் தலைமை அலுவலர்களில் ஒருவராக தனது பணிச்சுமைக்கிடையிலும் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை எழுதிவந்தார்.

புலம்பெயர் இலக்கியம் – விவாதத்திற்கான புள்ளிகள் என்கிற எனது கட்டுரையைப் படித்ததுடன் அதை தனது கொழுந்து இதழிலும் மறுபிரசுரம் செய்திருந்த தோழர் அந்தனி ஜீவா, இந்தியா வந்திருந்தபோது என்னை தஞ்சையில் வைத்து சந்தித்து இலங்கை மலையகத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். வரவழைப்பதற்காக அவர் அனுப்பியிருந்த இலங்கை மத்திய மாகாண சாகித்ய விழா அழைப்பிதழ் ஒன்றை வைத்துக்கொண்டு கிளம்பிப்போய் ஹட்டன் நகரில் இருந்த ஜோதிகுமார் இல்லத்தில் தங்கியிருந்த எட்டுநாட்களில் (2009 அக்டோபர் 8-15) தான் தோழர் ந.இரவீந்தரனுடன் வந்து தோழர் லெனின் மதிவானம் நேரில் அறிமுகமானார். அவரது பெயரைப் போலவே தோற்றமும் கம்பீரமானது.  டிம்புல்ல வீதியில் என நினைவு- அவரது வீட்டிற்கு அழைத்துப்போனார். அம்மாவும் பிள்ளைகளும் பரஸ்பரம் தோழர் என்றே அழைத்துக்கொள்ளும் அதிசயத்தை நான் அங்குதான் பார்த்தேன். வீட்டிற்கு வரும் எல்லோரையுமே தோழர் என்றே விளிக்கும் சூழலில் வளர்ந்த- வாழ்கிற எங்களுக்கு, எங்களுக்குள் தோழர் என்பதற்குமப்பால் வேறு உறவுமுறையைச் சொல்லி விளிக்கும் அவசியமே எழவில்லை என்று அம்மாவும் மகனும் சொன்ன அந்த நொடியின் ஆச்சர்யம் எனக்கு இன்னமும் நீங்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களிடையே கம்யூனிஸ்ட் இயக்கம் அந்தளவுக்கு செல்வாக்கு செலுத்திய காலமொன்று இருந்திருக்கிறது.


பின்னொரு நாள் ஹைலெண்ட் ஸ்கூலுக்கும், அவரது பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக உழைத்த- அவர் தனது பால்யத்தைக் கழித்த கேஸில்ரீ எஸ்டேட்டுக்கு அழைத்துப் போனார் லெனின். அங்கு சென்றதுமே அவர் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டவராய் இருந்தார். இங்கிருந்த ஒரு சாமானிய தோட்டக்காட்டானின் பிள்ளைகளாகிய நானும் தம்பியும் ( தம்பி – ட்ராட்ஸ்கி மதிவானம். அப்போது நுவரேலியாவில் நீதிபதியாக இருந்தாரென நினைவு. தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி) இன்றைக்கு நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறோம் என்றால் அது கடந்த 200 ஆண்டுகளாக மலையகத்தமிழர்கள் நடத்திய போராட்டங்களினாலும் தியாகங்களினாலும் தான் என்று சொந்த வாழ்வை வரலாற்றுக்குள் பொருத்திப் பேசும்போது அவர் குரல் கம்மியது. கூலியுயர்வுக்காக, குடியிருப்புக்காக, கண்ணியமான பணியிடச் சூழலுக்காக, குழந்தைகளின் கல்விக்காக எல்லாவற்றுக்கும் மேலாக குடியுரிமைக்காக என்று இடையறாது போராடித்தான் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இன்றைக்கு மலையகத் தமிழர்கள் என்கிற ஒரு தேசியமாக உருக்கொண்டுள்ளார்கள் என்று ஜோதிகுமார், ஜேம்ஸ், மகேந்திரன், முத்துலிங்கம் போன்ற தோழர்கள் சொல்லியிருந்த வரலாற்றை மேலும் அடர்த்தியாக்குவதாய் இருந்தது அவரது பேச்சு. தோட்ட வாழ்வின் கொடூரங்களுக்கிடையிலும் தொழிலாளர்களிடமிருந்த அன்னியோன்னியம், கலையுணர்ச்சி, போர்க்குணம், தோழமை, தொழிற்சங்கங்களின் துரோகம் என்று சாப்பாட்டு மேசையிலும் பேசிக்கொண்டேயிருந்தார். போராட்ட குணம் நிறைந்த தனது பெற்றோர் குறித்து அவருக்கு அப்படியொரு பெருமிதம்.

புனைவிலக்கியத்தில் ஈடுபடுமளவுக்கு வாழ்வனுபவமும் கண்ணோட்டமும் மொழிவளமும் சொல்திறமும் கொண்டவரான லெனின் ஏனோ அதில் நாட்டம் காட்டாமல் ஆய்வுப்புலத்தில் தன்னை பொருத்திக்கொண்டார். மதிக்கத்தக்க ஆய்வாளரான தோழர் ரவீந்திரனுடனான அணுக்கம் அப்படியொரு ஈடுபாட்டை அவருக்குள் உருவாக்கியிருக்கக்கூடும். பாரதி, கைலாசபதி, கா.சிவத்தம்பி, இ.முருகையன், டானியல், டொமினிக் ஜீவா போன்றோரது எழுத்துகளில் நுணுகிய வாசிப்பும் வாசிப்பது பற்றி உடனே எழுதிவிடும் பழக்கமும் அவருக்கிருந்தது.  எனது சிறுகதைகள் குறித்தும்கூட பொருட்படுத்தும்படியான மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். அவ்வாறாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பினைக் கொண்டுவரவிருந்த நிலையில் அந்தக்கட்டுரைகளின் தேர்வு குறித்து என்னுடைய கருத்தினை கேட்டனுப்பியிருந்தார். படித்துவிட்டு நான் சொன்ன விமர்சனங்களையும் திருத்தங்களையும் மிகுந்த பொறுமையுடன் உள்வாங்கி அவற்றை உரியமுறையில் திருத்தியமைத்தார். அந்தளவுக்கு அவர் வெளிப்படைத்தன்மையும் விமர்சனங்களுக்கு செவிசாய்க்கும் பண்பும் கொண்டவராயிருந்தார்.

புதிய அமைப்பு முயற்சிகள், இணைய இதழ்கள், இலக்கிய நிகழ்வுகள் என்று இடையறாது இயங்கும் லெனினுக்கு நட்புவட்டம் பெரியது. மலையகம் தொடங்கி கொழும்புவரையுமாக – தெற்கே பதுளையிலும்கூட- அவர் பலருக்கும் நெருக்கமானவராய் இருந்தியங்கினார். திலகர் போன்ற தோழர்களின் அறிமுகம் அவரால்தான் எனக்கு கிடைத்தது.

லெனினுக்கிருந்த பரந்த இலக்கியத் தொடர்பின் தாக்கம் இலங்கையின் தமிழ்ப்பாடநூல் உருவாக்கத்தில் வெளிப்பட்டது. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கலைஞர்கள் பலரது ஆக்கங்களை பாடநூல்களில் அறிமுகம் செய்வித்தார்.

நான் இரண்டாம் முறை இலங்கை சென்றபோது லெனின் வீட்டில் தான் நானும் ரவீந்திரனும் தங்கினோம். காலனியாட்சியாளர்களால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்த்திக் கொண்டுபோகப்பட்ட தமிழர்களிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க ஏதாவது செய்தாக வேண்டும் தோழர் என்றார்.  ஆனால் அதுசார்ந்து ஏதும் செய்தாரா என்று தெரியவில்லை.

மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியேயான உரையாடல்களை,   இந்தியாவுக்கு வரப்போவதாக  சொல்லித்தான் முடிப்பார். இடையில் உடல்நலம் குன்றி வெளியுலகத் தொடர்புகளற்றவராக அவர் முடங்கியிருக்கும் விசயமறியாமல் - இரண்டொருதடவை பேச முயற்சித்தபோது பதிலற்ற நிலையில்- வேலைப்பளுவினால் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார் போல என்று நானாக நினைத்துக்கொண்டேன்.  ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருப்பதாக தோழர் பபி தெரிவித்தபோது மீண்டுவந்துவிடுவார் என்று நம்பினேன். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சற்றே தேறி நடமாடத் தொடங்கியுள்ளதாக செய்தி கிட்டியபோது வலுப்பட்ட அந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டு லெனின் மரணத்தைத் தழுவிவிட்டார்.

சகோதரனை – தோழனை இழந்திருக்கும் துயரத்தைப் பகிர ட்ராட்ஸ்கி அழைத்திருந்தார். தனது மகளுக்கு மார்க்ஸ் தீட்சண்யா என்று பெயரிடுமளவுக்கு என்மீது அன்புகாட்டும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்ல இலங்கைக்கு வருவதற்கு மனம் பறக்கிறது, வருவேன்.

நன்றி: லெனின் மதிவானம் : இளமை புதுமை இனிமை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...