ஒரு தனிமனிதரின் வாழ்வனுபங்கள், அவரது வாழ்விடம் மற்றும் காலத்தின் வரலாற்றை நிறைவு செய்யும் பகுதியாக பொருந்திவிடுகிறது. அவ்வகையில் தோழர் ஷாகுல் பிறந்துவளர்ந்த சிற்றூரான உன்னதபுரம் என்கிற மெலட்டூர், அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தஞ்சை நகரம் ஆகியவற்றுக்கிடையேயான அவரது வாழ்வைப் பேசும் இக்கட்டுரைகள் தன்வரலாற்றுக்குறிப்பு என்பதற்குமப்பால் அப்பகுதியின் சுமார் 50 ஆண்டுகால வரலாற்றின் பகுதியாகிறது. இன்னும் விரிவடைந்து அவரது கொள்ளுப்பாட்டி மற்றும் தாத்தா காலம்வரை நமக்கு அறிமுகமாகிறது. அக்காலத்தின் ஆடை அலங்காரங்கள், ரசனை, பொழுதுபோக்கு, விருப்பமான உணவுகள், அரசியல் நிலியப்பாடுகள் -செயற்பாடுகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், ஆளுமைகள் குறித்தான செய்திகள் அந்த நிலப்பரப்பின் புதிய அடையாளங்களை நமக்குள் எழுப்புகின்றன.
பொதுவாக, அரசர்களும் கோட்டைகளும் அரண்மனைகளும் இருக்கிற ஊர்/ பகுதியைச் சேர்ந்தவர்கள் அவற்றையெல்லாம் தன் அடையாளத்தோடு சேர்த்துப் பெருமிதமாகப் பேசும் அலுப்பூட்டும் வழக்கத்திற்கு மாறாக, ஷாகுல் தன் குடும்பம், அண்டை அயலார், தெரு, ஊர், நண்பர்கள் வழியே தன் நினைவுகளைப் படர்த்துகிறார். ஊருக்குள் வசிக்கும் ஒரேயொரு முஸ்லிம் குடும்பமாக இருந்தபோதிலும் அவரது குடும்பம் அவ்வூரின் பண்பாட்டு வாழ்வுக்குள் இழைந்திருந்ததையும் உள்ளூர் சமூகத்தில் நிலவிய மத நல்லிணக்கத்தையும் மதப்பாகுபாடற்ற மனித உறவுகளையும் சாகுல் விவரிக்கிற போது, இப்படியான தமிழ்ச்சமூகத்தை வெறுப்பரசியலும் சகிப்பின்மையும் சூழ்ந்துவிடாமல் தடுத்தாக வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெறுகிறது. ஒரு சிறுபான்மைச் சமூகத்தவர் தன்னை அவ்வாறு தனித்துணராதவாறு பெரும்பான்மைச் சமூகம் இருப்பது சிறப்பித்துக் கூறவேண்டிய நற்பண்பல்ல, அதுதான் மனித இயல்பு. ஒற்றுமையாய் விரும்பி வாழ்வதற்கும் ஒற்றைத்தன்மையாய் வாழும்படி நிர்ப்பந்திப்பதற்குமான வேறுபாட்டை உணர்த்துகின்றன ஷாகுலின் கட்டுரைகள்.
தனது
குடும்பத்திற்குள்ளும் மதத்திற்குள்ளும் தன்னை வைத்து வெளிப்படையாகப் பல விசயங்களைப்
பேசும் ஷாகுல், அந்தத் தார்மீக பலத்தில் சமூகம் மீதான விமர்சனத்தை வைக்கிறார். மெல்லிய
குறுநகையோடு ஒருமூச்சில் படித்து முடிக்க வைக்கிறது எள்ளலும் துள்ளலுமான ஷாகுலின் மொழிநடை.
மீன்பிடிக்கும் மாமுராய் தாத்தா, சுருட்டு புகைக்கும் பல்கீஸ் கிழவி தொடங்கி அய்யாத்துரை
பட்டாச்சார்யா வரையாக இவரது கட்டுரைகளில் வரும் மனிதர்கள் பலரும் புனைவெழுத்துக்குள்
இயங்கும் பாத்திரங்களைப் போல நமக்கு நெருக்கமாகிறார்கள். நீங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி
அவர்களை நேரடியாகச் சந்தியுங்களேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக