வியாழன், ஜனவரி 15

கெட்டும் பட்டணம் சேர். சரி, சேர்ந்து…? - ஆதவன் தீட்சண்யா

ஏழு நுழைவாயில்கள் கொண்ட தேபன் நகரைக் கட்டியது யார்?

வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன அரசர்களின் பெயர்கள்

அரசர்களா சுமந்து வந்தனர்  கட்டிட வேலைகளுக்கான கற்களை?

பலமுறை நிர்மூலமாக்கப்பட்டது பாபிலோன் நகர்

மீண்டும் மீண்டும் அதை நிர்மாணித்தவர் யார்?

பொன்கதிர் வீசும் லிமா நகரத்தில் 

எவ்விதமான வீடுகளில் வாழ்ந்தனர் தொழிலாளிகள்? 

சீனச்சுவர் கட்டி முடித்ததும் கொத்தர்கள் 

மாலையில் எங்கே சென்றனர்?

மாபெரும் ரோம் நகரத்தில் எங்கும் வெற்றி வளைவுகள் 

அவற்றை கட்டியவர் யார்?

யாரை வென்றனர் சீசர் பேரரசர்கள்?

பெருமளவில் புகழப்பட்ட பைஸான்ஸ் நகரத்தில் 

குடிமக்கள் எல்லோரும் மாடமாளிகைகளிலா இருந்தனர்?

இதிகாசப் புகழ் அட்லாண்டிஸ்ஸைக் கடல் விழுங்கிய இரவில் மரணத்தின் பிடியிலிருந்தோர் 

அடிமைகளின் உதவியை நாடி கூக்குரல் இடவில்லையா?

காளை அலெக்சாண்டர் இந்தியாவை வென்றான் 

அவன் தனியாகவா?

அப்போது ஒரு சமையல்காரன் கூடவா இல்லை அவனோடு?

ஸ்பெயின் நாட்டு அரசன் அழுதான் 

அவனுடைய கப்பல் சாகரத்தில் மூழ்கும் போது 

வேறு யாருமே அழவில்லையா?

இரண்டாவது ஃபிரடரிக் ஏழு ஆண்டுப் போரில் வென்றான் 

அவனைத் தவிர வேறு யார் வென்றார்கள்?

ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வெற்றி

வெற்றி விழா உணவு சமைத்தவர் யார்?

பல ஆண்டுகளுக்கொரு முறை ஒரு மாவீரன் 

இவர்களின் செலவுக்கு முதலீடு செய்தவர் யார்?

கணக்கில் அடங்கா சாதனைக் கட்டுரைகள்

கணக்கில் அடங்கா கேள்விகள்.

- “படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேள்விகள்” என்ற இந்தக் கவிதையில் பெர்டோல்ட் ப்ரக்ட்டும், இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் ஜி.செல்வாவும் எழுப்பும் கேள்விகள் ஒன்றெனத் தோன்றுகிறது எனக்கு. சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டு நெருக்கடிகளின் அழுத்தம் தாளாது மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு இடம்பெயர்ந்து இந்த மாபெரும் நகரத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் தம்முழைப்பால் கட்டியெழுப்பிய, இன்றைக்கும் உயிர்ப்புடன் இயக்கி வருகிற அடித்தள மக்களுக்கு இந்த நகரம் எப்படியான வாழ்க்கையினை அருளியுள்ளது என்பது பற்றி களத்திலிருந்து காட்டுகிறார் செல்வா. ஆனால், இருக்கும் நிலைமையினைத் துல்லியமாக காட்டுவதோ, துயரம் பொங்கப் பேசுவதோ இங்கு போதுமானதல்ல என்கிற அரசியல் தெளிவு அவருக்குள்ளது. எனவே, விவரணைகளையும் வியாக்கியானங்களையும் விட்டொதுக்கி, மனித மாண்புகளுக்குப் புறம்பான அந்த நிலைமைச் சகித்துக் கொள்ளக்கூடியதல்ல, மாற்றியமைக்கப்பட வேண்டியது என்று மக்களை உணர்வேற்றி ஆற்றல்படுத்தி தானும் தான் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சியும் நடத்திய போராட்டங்களின் அனுபவங்களையும் படிப்பினைகளையும் இத்தொகுப்பின் பல கட்டுரைகளில் பேசியுள்ளார். 

பெருநகர மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டங்களை வகுக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் காலனியாட்சிக் காலந்தொட்டு இன்றளவும் விரிவடைந்துகொண்டே வரும் இந்த சென்னை நகரம் யாருக்கெல்லாமானது என்கிற சங்கடமான கேள்வியைக்கூட எழுப்பிக்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் சென்னை சொத்துள்ளவர்களுக்கும் சொத்து வாங்க வக்குள்ளவர்களுக்குமானது. எனவே, அவர்கள் நகரில் அரசுக்குரிய - பயன்பாட்டில் இல்லாததும் பயன்படுத்த இயலாததுமான இடங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்துவரும் அடித்தட்டு மக்களை ஆக்கிரமிப்பாளர்கள், சட்டவிரோதக் குடியேறிகள் என முத்திரைக் குத்தி அவர்களது வாழ்விடங்களை புல்டோசர்களால் இடித்துத் தரைமட்டமாக்குகின்றனர். ஆனால் இவர்களின் பொங்கும் வீரமும்  புல்டோசர்களும் பன்னாட்டு/ உள்நாட்டுப் பெரு நிறுவனங்களின் முன்னே பொம்மை புல்டோசர்களாக சிறுத்துப்போகின்றன. “இது புல்டோசர் அரசு அல்ல; மக்களுக்கான அரசு’ என்று முதலமைச்சர் உறுதியளித்ததற்கு மாறான அணுகுமுறையை களத்தில் எதிர்கொள்ளும் சீற்றத்துடன் நினைவூட்டும் செல்வா, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டதாக அண்ணாவும், குடிசை மாற்று வாரியம் அமைக்கையில் கலைஞரும் சொன்னதையாவது நிறைவேற்றும்படி வலியுறுத்துகிறார்.      

குடிசைவாசிகளையும் நடைபாதை மற்றும் தலைச்சுமை வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளவர்களையும் நகரப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திட தமிழக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மேற்கொள்ளும் அணுகுமுறை, மாவோஸ்ட்டுகள்/ அர்பன் நக்சல்கள்/ ஜிகாதிகள்/ தேசவிரோதிகள் என்று ஒருவருக்கு முத்திரை குத்திவிட்டு அவரை எப்படி ஒடுக்கினாலும் சமூகம் ஏற்றுக் கொள்ளும் என நம்பும் பாஜக ஆட்சியாளர்களின் அதிகாரிகளின் அணுகுமுறையுடன் வெகுவாகப் பொருந்திப்போவதை இந்தக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. முந்தைய ஆட்சி செய்த அட்டூழியங்களால் வாழ்விடங்களை இழந்தவர்களின் துயர் துடைக்கப்படும் என இன்றைய ஆட்சியாளர்கள் கொடுத்த பல வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே தேங்கிக்கிடப்பதை சுட்டிக்காட்டும் செல்வா, அவற்றைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நடக்கும் போராட்டங்கள், வெற்றிகள், நிவாரணங்கள், மக்களிடையே வலுப்பெறும் நம்பிக்கைகள் ஆகியவற்றை கவனப்படுத்துகிறார். 

சென்னையின் குடிசைவாழ் மக்கள் மீது எவ்வித தாக்குதல் நடந்தாலும் அதைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்விட உரிமையைப் பெறுவதற்கும் செங்கொடியை ஏந்திக் கொண்டு களத்திற்கு விரைகிற முதல் போராளியாக உருவெடுப்பதற்கான உள்வலுவை செல்வா மார்க்சியத்திலிருந்துப் பெற்றிருப்பதை கட்டுரைகளினூடே உணரமுடிகிறது. 

கொரானா பொதுமுடக்கக் காலத்தில் உழைப்பாளி மக்களின் வாழ்நிலையில் ஏற்பட்ட அரிமானம், குழந்தைகளின் கற்றல்திறன் குறைபாடு, சிறார்களும் இளையோரும் உழைப்பாளிகளாக மாறிய அவலம், பெண்குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு, ஆசிரியர் பணி நியமனத்தில் காணப்படும் குளறுபடிகள் மற்றும் உழைப்புச் சுரண்டல்,   அனைவருக்கும் சுகாதார உரிமை வழங்குவதில் உள்ள பாரபட்சம் – அதைக் களைவதற்கு கம்யூனிஸ்ட்கள் எழுப்பிய உலகளாவிய குரல், எட்டு மணி நேர வேலை நாள் என செல்வாவின் செயல் எல்லை பல தளங்களை ஊடறுத்து விரிவதைக் காட்டும் வேறு சில முக்கியக் கட்டுரைகளும் தொகுப்பில் உள்ளன. தனித்தும் கம்யூனிஸ்ட்களுடன் இணைந்தும் நடத்தியப் போராட்டங்களுக்குள் வைத்து அண்ணல் அம்பேத்கரைப் பேசும் கட்டுரை புதிய திறப்புகளைக் கொண்டுள்ளது. 

பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பாகுபடுத்துகின்ற மநுவாதிகளும் அவர்களின் தொங்குசதைகளாக உள்ள வட்டார முகவர்களும் பெரியார் மீது வரலாற்றுப் பகைமை கொண்டுள்ளனர். பாலின, சாதிய, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பார்ப்பனீய மேலாதிக்கத்தை எதிர்த்து பெரியார் நடத்திய கருத்தியல் போராட்டத்தினாலும் களப்போராட்டத்தினாலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத மநுவாதக்கூட்டம், அதன் பொருட்டு பெரியாரை முதன்மை இலக்காகக் கொண்டு அன்றாடம் பல அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர். இந்நிலையில் பெரியாரின் பங்களிப்பை காய்தல் உவத்தலின்றி மதிப்பீடு செய்து, அவரை நாம் கொண்டாடுவதற்கான நியாயங்களை செல்வா தொகுத்தளித்துள்ளார். பெரியாரோ அம்பேத்கரோ வெறும் பெயர்களோ படஙகளோ அல்ல, அவர்கள் சமூகத்தில் நடந்துள்ள பல மாற்றங்களுக்கு வழியமைத்தவர்கள் என்கிற செல்வாவின் உணர்த்துதல் முக்கியமானது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, வி.எஸ்.அச்சுதானந்தன் மார்க்சியச் சிந்தனையாளர் அய்ஜாஸ் அகமது, சகோதரர்களும் கட்சித் தோழர்களுமான என்.சங்கரய்யா, என், இராமகிருஷ்ணன் ஆகியோரின் வாழ்வை மதிப்பூறும் சொற்களால் எழுதியுள்ளார் செல்வா. 

அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை, மனிதவுரிமை, விடுதலை எனப் பொதுவான நியாயங்களிலிருந்து வினையாற்றாமல், குறிப்பான பிரச்னை அல்லது பேசுபொருள் குறித்த புரிதலை உருவாக்கிக் கொள்வதற்காக படிப்பதும், அதுபற்றிய சமகால அறிவுடன் முன் தயாரிப்புச் செய்துகொண்டு களத்திற்குச் செல்வதும் அவசியம் என செல்வா உணர்ந்திருப்பதை அவர் பல்வேறு ஆவணங்கள், கட்டுரைகள், நூல்களை மேற்கோள் காட்டுவதிலிருந்து அறிய முடிகிறது. முதலாளித்துவம் ஐந்தாம் தலைமுறை தொழிற்புரட்சி வந்துவிட்டதாக ஆர்ப்பரிக்கும் இந்நாளில் அதை வீழ்த்தும் வல்லமை கொண்டதாக தொழிலாளி வர்க்கத்தை அணி திரட்டுவதற்கும் ஆற்றல்படுத்துவதற்கும் அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கட்சியின் ஊழியர் சமகாலத்தன்மையுடனும் சமரசமற்றப் போர்க்குணத்துடனும் இயங்கவேண்டியிருப்பதையும் செல்வாவின் கட்டுரைகள் உணர்த்துகின்றன. 

நான் இந்த முன்னுரையை எழுதி முடிக்கும் இவ்வேளையில் “குடிமனைப் பட்டா கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்கும் இயக்கத்திற்கு” மக்களைத் திரட்ட சென்னையின் ஏதாவதொரு இண்டுஇடுக்கில் சந்துபொந்தில் செல்வா அலைந்து கொண்டிருக்கக்கூடும்.  ஆம், அவரது சென்னை வரைபடமும் நிலக்காட்சிகளும் அத்தகையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கெட்டும் பட்டணம் சேர். சரி, சேர்ந்து…? - ஆதவன் தீட்சண்யா

ஏழு நுழைவாயில்கள் கொண்ட தேபன் நகரைக் கட்டியது யார்? வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன அரசர்களின் பெயர்கள் அரசர்களா சுமந்து வந்தனர்  கட்டிட வேலை...