சனி, அக்டோபர் 6

ஆளப்படுபவரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்கவேண்டும் - ஆதவன் தீட்சண்யா


Julio Carrión Cueva, Peru , toonmag
கால இட எல்லைகளைக் கடந்து எதுவொன்றின் மீதும் கருத்தை வெளிப்படுத்துவதும், அதை கவனித்து உள்வாங்குவதும் மனித சுபாவமாக இருந்துவருகிறது. தான் நினைத்ததை சைகை, குறி, ஓசை, ஓவியம், எழுத்து போன்ற வடிவங்களில் அச்சமின்றியும் வேறுவகையான குறுக்கீடுகள் இன்றியும் சுதந்திரமாக மனிதர்கள் வெளிப்படுத்தி வந்ததன் விளைவாகவே கலையும் மொழியும் எண்ணும் எழுத்தும் இலக்கியமும் உருவாகி வளர்ந்திருக்கின்றன. இந்த நிலை வளர்முகமேறி நீடிக்கவும் இதுவே நிபந்தனையாகிறது.  

சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் முடியரசுகள் உருவானபோது ஆட்சியாளர்கள் தம்மை வரம்பற்ற அதிகாரம் கொண்டோராகவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் கருதிக்கொண்டனர். ஒட்டுமொத்த சமூகத்தினரை விடவும் உயர்ந்த நிலையில் தம்மை இருத்திக்கொள்வதற்கான சட்டங்களை இயற்றிக் கொண்டனர். அவர்களது ஊதாரித்தனங்கள், உல்லாசங்கள், குணக்கேடுகள், அத்துமீறல்கள், அகங்காரம், ஆட்சி பரிபாலனத்தில் மலிந்திருக்கும் முறைகேடுகள், போர்வெறி, பாலியல் குற்றங்கள் போன்றவற்றை ராஜகுணங்களாக விதந்துரைத்து சமூகத்தில் பரப்புகிறவர்களை உடன்வைத்துக்கொண்டார்கள். நாட்டின் நிர்வாகமும் சட்டதிட்டமும் குடிமக்களின் வாழ்வும் அரசர் என்கிற தனிநபரின் விருப்புவெறுப்புகளால் தீர்மானிக்கப்பட்டன. அரசரை கடவுளின் அவதாரமாக முன்னிறுத்தும் அபத்தங்களுக்கும் பஞ்சமில்லை. (கடவுளே அபத்தம்தான் என்பதையும் மறந்துவிட வேண்டியதில்லை). அரசாட்சிக்கு விசுவாசத்தைக் கோரும் கருத்துகளைப் பரப்புவதற்கு மட்டுமே அனுமதி இருந்தது.

அரசருக்கு அடங்கி நடப்பது ராஜவிசுவாசமாகவும் அரசர்களை கண்டிப்பதும் விமர்சிப்பதும் தேச/ ராஜ நிந்தனையாகவும் கருதப்பட்டு கொடிய தண்டனைகள் வழங்கப்பட்டன. எனினும் இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, தனிமனிதர் தன்னளவில் பேணவேண்டிய அறங்கள், மனிதர்களுக்கிடையே நிலவவேண்டிய உறவின் தன்மை, அரசர்களின் கடமை, சமூகம் பேண வேண்டிய பொது ஒழுங்குகள், நீதி, குடிமக்களுக்குள்ள பொறுப்புகள் மற்றும் உரிமைகள் குறித்தான கருத்துகளை துணிச்சலோடு  வெளிப்படுத்தியவர்களும் காலத்துக்குக்காலம் இருந்தே வந்திருக்கிறார்கள். நடப்பிலிருந்த சமூக அமைப்பிற்கு ஒப்புதலையும் ஏற்பையும் வழங்கும்படியாக வெகுமக்களின் உளவியலை தகவமைக்கும் பொறுப்பிலிருந்த கடவுள் மதம் கல்வி குடும்பம் கலை இலக்கியம் உள்ளிட்டவற்றை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். இவ்வாறானவர்கள் அந்தந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட கருத்துரிமையின் அதிகபட்ச சாத்தியங்களைக் கைக்கொண்டு அதனிலும் முன்னேறிய சமூக அமைப்பு பற்றிய கனவை முன்வைத்து பரப்பியிருக்கிறார்கள். முடியாட்சிக்கு மாற்றாக குடியாட்சி என்கிற புதிய அரசியலமைப்பையும், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை அதன் அடிப்படைகளாகவும் முன்வைத்து முன்னேற்றகரமான மாற்றங்களுக்கு அடிகோலியவர்களும் இவர்களே. 

***
சுதந்திரம் என்பதை  சிவில் உரிமை, அரசியல் உரிமை எனப்  பகுக்கும் அம்பேத்கர், ‘சிவில் உரிமை என்பதை 1.சுதந்திரமாக இயங்கும் உரிமை- சட்டமுறைப்படியன்றி வேறுவகையில் சிறைப்படுத்த முடியாத உரிமை. 2.பேச்சுரிமை- சிந்தித்தல், எழுதுதல், படித்தல், விவாதித்தல். 3. செயலுரிமை எனச் சொல்லி அவற்றை மேலும் விளக்குகிறார். ‘முதல்வகை சுதந்திரம் அடிப்படையானது. மட்டுமன்று, இன்றியமையாதது. அதன் மதிப்பைப் பற்றி ஐயமேதுவும் இருக்கமுடியாது. இரண்டாவது வகைச் சுதந்திரத்தை  கருத்துச்சுதந்திரம் எனலாம். பல காரணங்களுக்காக அது முக்கியமானது. சமூக, அரசியல், தார்மிக, அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் காரணமாவது. கருத்துச்சுதந்திரம் இல்லாத இடத்தில் நிகழ்நிலை ஸ்தம்பித்துவிடுகிறது. அவசியமான சுய சிந்தனைகளும் ஊக்குவிக்கப்படுவதில்லை. செயலுரிமை என்பது, தான் நினைத்ததைச் செய்யும் உரிமை. செயலுரிமை ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது. அது உண்மையானதாக இருத்தல் வேண்டும். இப்பொருளில் செயலுரிமை என்பது குறித்தவற்றைச் செய்வதற்குரிய பயனுள்ள அதிகாரத்தைக் குறிக்கிறது. பயன்படுத்தும் நடைமுறைகள் இல்லாத சுதந்திரம் இருக்க முடியாது. சுரண்டல் ஒழிக்கப்பட்ட இடத்தில் தான், ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கியாள முடியாத இடத்தில்தான், வறுமையும் வேலையின்மையும் இல்லாத இடத்தில் தான், தான் விரும்பிய செயலின் விளைவால் தன் வேலை, வீடு, உணவு, ஆகியவற்றை இழந்துவிடுவோமா என்னும் அச்சம் இல்லாத இடத்தில்தான் உண்மையான செயலுரிமை இருக்க முடியும்...’. இவ்வாறு தனிச்சொத்துடமையும் சுரண்டலும் பொருளாதாரப் பாகுபாடும் அற்ற ஒரு சமூகத்தை சுதந்திரம் உயிர்ப்புடன் இருப்பதற்கான முன்நிபந்தனையாக்குவதன் மூலம், நடப்பிலிருக்கும் சமூக அமைப்பை தலைகுப்புற மாற்றியமைக்க வேண்டும் என்கிற கிடக்கையை வெளிப்படுத்துகிறார்.

அம்பேத்கரின் இக்கூற்றானது கருத்துச்சுதந்திரம் என்பது அதன் மெய்யான பொருளில் தன்னந்தனியாக இருந்துவிட முடியாது, அது ஒரு சமூகத்தில் குடிமக்களுக்குள்ள இன்னபிற சுதந்திரங்களின் ஏற்றயிறக்க நிலைகளோடு தொடர்புடையது என்பது விளங்குகிறது. மட்டுமல்ல, அது அரசியல் சுதந்திரத்தின் அங்ககக்கூறுகளில் ஒன்றாக இயங்குகிறது என்பதையும் அவர் விளக்குகிறார். அரசியல் சுதந்திரம் என்றால் என்ன என்று யோசித்து நாம் தடுமாறிக் கொண்டிருக்க இடமளிக்காமல் ‘அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்குகொள்வதற்கும், அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனிமனிதருக்குள்ள சுதந்திரமாகும்என்று அவர் தரும் வரையறையானது, அரசியலுரிமைகளை அடைவதற்கு கருத்துரிமை எந்தளவிற்கு அவசியமானது என்பதை உணர்த்துகிறது. மேலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது கலை இலக்கிய, ஊடகச் செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமே என்கிற மேம்போக்கான புரிதலை நிராகரித்து அது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உரியது, தேவைப்படுவது என்றும் அறியச் செய்கிறார் அம்பேத்கர்.

***
இந்திய அரசியல் சாசனத்தின் 19 1(அ) பிரிவு குடிமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால் இந்திய ஆளும் வர்க்கமும் அவர்களுக்காக நாட்டை ஆள்பவர்களும் இந்தச் சுதந்திரத்தை குடிமக்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து தடுத்துவருவதன் மூலம் அரசியல் சாசனத்தின் வாசகங்களை வெற்றலங்காரமாக மாற்றியுள்ளனர். அவர்கள் இந்தச் சுதந்திரத்தை  எப்போதும் அச்சத்துடனும் வெறுப்புடனுமே அணுகிவருகிறார்கள்.  நிலவக்கூடிய சமூக அமைப்பையும் ஆட்சிகளையும் தலைகுப்புற கவிழ்த்துப்போடக்கூடிய அல்லது அவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் அரசியல் கருத்தாக்கங்கள் ஏதும் இங்கு முனைப்படையாத நிலையிலும்கூட இந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை கருத்துச்சுதந்திரம் என்பது அவர்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான கருத்தியலை பரப்புவதற்கான சுதந்திரம்தானேயன்றி வேறல்ல. இந்த இடத்தில்தான் ஊடகங்கள் பற்றி குறிப்பிட வேண்டியுள்ளது.

ஜனநாயகத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றென  ஊடகங்கள் வர்ணிக்கப்படுகின்றன. இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் இங்குள்ள பெரும் தொழில்/ வணிகக் குழுமங்களால்  நடத்தப்படுகின்றன அல்லது இந்த ஊடகங்களே பெரும் தொழில்/ வணிகக் குழுமங்களாகிவிடுகின்றன. இதன் மூலம் அவை ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதியாகி ஊடகம் என்பதற்கான அடிப்படைப் பண்பையே இழந்துவருகின்றன.  சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய இதர தூண்களின் செயல்பாடுகளை காவல்நாயாக விழிப்புடனிருந்து கண்காணிப்பது, தவறுகளையும் போதாமைகளையும் சுட்டிக்காட்டுவது, பிரச்னைகளையும் தீர்வுகளையும் பாதிக்கப்பட்ட வெகுமக்களின் கண்ணோட்டத்தில் சமரசமின்றி முன்வைப்பது,  கலை இலக்கிய ஆக்கங்களையும் ஆய்வுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் நாட்டு நடப்புகளையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது என தமக்குள்ள வாய்ப்புகள் பொறுப்புகள் அனைத்தையும் இந்திய ஊடங்கள் வெட்கமற்று அப்பட்டமாக துறந்து வருகின்றன. அவை ஆளும் வர்க்கத்தின் கருத்தியலை- அதன் நலனை பரப்பி மக்களின் ஒப்புதலைப் பெறும் ஒருவழிப் பாதையில்  வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கும் பெரும் தொழில்/ வணிகக் குழுமத்தினருக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு எழுமானால் அதை நேர்செய்து நமக்குள் சண்டையெதற்கு என்று பஞ்சாயத்து செய்யவும் அவை தயங்குவதில்லை. நாட்டைச் சுரண்டும் தனது வேகத்திற்கு இணையான வேகத்தில் வரமுடியாத ஆட்சியாளர்களை கீழிறக்கவும் உகந்தவர்களை மேலேற்றவும்  ஆளும் வர்க்கம் ஊடகங்களையே பெரிதும் நம்பியுள்ளது.  நாட்டை நீண்டகாலம் ஆண்ட காங்கிரஸோ, தற்போதைய ஆளும் கட்சியான  பா.ஜ.க.வோ இப்போதுவரை தமக்கென தேசிய அளவில் தனியாக நாளிதழ் அல்லது தொலைக்காட்சி சேனல் வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இக்கட்சிகளுக்கான பிரச்சாரப் பொறுப்பை களத்தில் உள்ள ஊடக முதலாளிகள் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதே.

ஆளும் வர்க்கத்தின் கருத்தியலை பேசக்கூடிய பெரும்பாலான ஊடகங்களுக்கு உண்மையில் கருத்துச்சுதந்திரமே  தேவைப்படுவதில்லை, அல்லது தேவைக்கும் அதிகமாகவே அவற்றுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதை பயன்படுத்துவதில் அவர்களுக்குள் கைக்கொள்ள வேண்டிய ஒழுங்கு குலையும் போது சிற்சில உட்பூசல்கள் வெடிக்கும். தொலைக்காட்சிக் குடும்பங்கள் மீது வருமானவரி சோதனை, ஒருநாள் ஒளிபரப்பு நிறுத்தம், விற்பனைக்குப் போன பத்திரிகைகளை திரும்பப் பெற வைத்தல், வெளியிட்ட செய்தி/ காட்சிக்காக வருத்தம் தெரிவித்தல், கார்ட்டூனுக்காக கைது செய்தல் என்று இந்தப் பூசல் வெளிப்படும். இந்தப் பூசல் அனைவருக்கும் சம உரிமை கோரி நடைபெறுவதல்ல, இந்தியச் சமூகத்தில் ஆளும் வர்க்கத்திற்குரிய சிறப்புரிமைகளை பகிர்ந்துகொள்வதில் ஏற்படுகிற பிணக்கு.  நீதிமன்றத்துக்குள்ளேயோ அல்லது வெளியேயோ இந்த முறுகல்நிலை நேர்செய்யப்பட்டு இயல்பிணக்கம் உருவாக்கப்பட்டுவிடும்.

ஊடகங்களுக்குரிய இதே நிலை கலை இலக்கியவாதிகளுக்கும் கூட பொருந்தும். மானே தேனே பூவே புஷ்பமே என்று வாரத்துக்கு ஒரு வண்டி பாரமளவுக்கு எழுதிக்குவிக்க இங்கு சுதந்திரமுள்ளது. சொத்துடைமை உறவுகளைப் போற்றுகிற, மூடநம்பிக்கைகளை ஆதரிக்கிற, பாலின ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துகிற, சாதியத்தையும் அதன் ஒடுக்குமுறைகளையும் இயல்பெனக் கருதுகிற உள்ளடக்கத்தோடு நீங்கள் ஆடலாம் பாடலாம் ஓடலாம் உட்காரலாம் நடிக்கலாம் துடிக்கலாம், ஒரு பிரச்னையுமில்லை. இன்னும் சொன்னால் இப்படியான நடவடிக்கைகளை ஆளும் வர்க்கம் உவப்புடன் வரவேற்று கொண்டாடவே செய்யும். ஆனால் “இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழு”, “நாடு நல்லாத்தானிருக்கு, நீதான் அனுசரித்து மாறணும்” என்பதான இவ்வகை கருத்தாளர்களும் கூட தங்களது கருத்தை வெளிப்படுத்த முடியாத நெருக்கடியை பா.ஜ.க. ஆட்சி உருவாக்கியுள்ளது.

***
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதன் ஆதரவாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அவர்களது எஜமானர்களான ராஷ்ட்ரீய சர்வநாச சங்கம் என விளிக்கவேண்டிய அளவுக்கு கேடுகளை விளைவிக்கும் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை அள்ளிக்கொட்டுகிறார்கள். இட்டுக்கட்டிய கதைகளை வரலாறெனத் திரிக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரீகத்தை ஆரிய நாகரீகமெனப் புளுகுவதன் மூலம் ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகள் என்று புனையும் மோசடியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள கல்விநிலையங்களில் பாடப்புத்தகங்களை பொய்களால் நிரப்புகிறார்கள். போட்டோஷாப் உள்ளிட்ட கணினி நுட்பங்களைப் பயன்படுத்தி போலிப்பெருமிதங்களை உருவாக்கி இணையவெளியில் உலவவிடுகிறார்கள். சமஸ்கிருதமே இந்தியாவின் தொன்மையான மொழி, பகவத் கீதையே புனித நூல் என்கிற பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி திணிக்கப் பார்க்கிறார்கள். பிற மத வெறுப்பை அரசதிகாரத்தைப் பயன்படுத்தியே விதைக்கிறார்கள். நாட்டை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்கும்படியாக சர்ச்சைகளை கிளப்புவதும் சமூகத்தை பாகுபடுத்துவதும் அவர்களது அன்றாட நிகழ்ச்சிநிரலாகியுள்ளது. பசு காவலர்கள், லவ் ஜிகாத் எதிர்ப்பாளர்கள், இந்து கலாச்சார பாதுகாவலர்கள் என நானாவித போலி அடையாளங்களோடு சட்டவிரோதமான ஆயுதம் தாங்கிய கும்பல்கள் நாட்டில் நிகழ்த்திவரும் வரும் வன்முறை, கொலை போன்ற குற்றங்களையும் மனிதவுரிமை மீறல்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள். குடிமக்களுக்கு  அவர்களது உடல் மற்றும் உயிர் மீதும் கூட உரிமை இல்லை என்று நீதிமன்றங்களில் வாதாடும் அளவுக்கானது அவர்களது எதேச்சதிகாரம்.

சுதேசியம் பேசிக்கொண்டே அந்நிய கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு நாட்டை விலைபேசும் தேச துரோகத்திலும் ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட சில தொழில்/ வணிகக் குழுமங்கள் கொழுப்பதற்காக நாட்டின் வளங்களையும் பொதுச்சொத்துக்களையும் திருப்பிவிடுவதற்கு அரசதிகாரத்தை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள். குடிமக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக தலையிட்டு அவர்களது இயல்பான வாழ்க்கையை குலைத்துப்போடும் விதமான திட்டங்கள் பலவற்றை பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மூலம் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை நோக்கி வீழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆலை மூடல் வேலையின்மை விளைநிலப் பறிப்பு மூலம் சொல்லொணாத்துயரங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பாஜக உள்ளிட்ட சங் பரிவாரத்தினரின் இப்படியான அட்டூழியங்கள் அவர்களின் கூட்டாளிகளாலும்கூட சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே இன்று அவர்களும்கூட சங்பரிவாரத்தை எதிர்க்கவும் விமர்சிக்கவும் வேண்டிய நெருக்கடிக்காளாகியுள்ளனர்.

சங் பரிவாரத்தினர், தமது அமைப்புகளுக்கும் ஆட்சிக்கும் எதிரான கருத்துகள் எந்த தளத்திலும் வெளிப்பட்டுவிடக்கூடாது என கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். அதேவேளையில் எல்லா தளங்களிலும் தமது கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிடும்படியான கெடுபிடியை உருவாக்கியுள்ளனர். மாற்று/ எதிர் கருத்தாளர்களை தேசவிரோதிகள், நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பவர்கள், மத நம்பிக்கையை - பண்பாட்டை இழிவுபடுத்தி மனதை புண்படுத்துகிறவர்கள், பயங்கரவாதிகள், அன்னிய உளவாளிகள் என்றெல்லாம் அபாண்ட பழி சுமத்தி சிறையிலடைத்து சித்திரவதை செய்கிறார்கள். சமூக ஊடகங்களில் அவதூறுகளையும் அச்சுறுத்தலையும் பரப்பி மாற்றுக் கருத்தாளர்களையும் அரசியல் செயல்பாட்டாளர்களையும் இழிவுபடுத்தி முடக்குவது ஒரு தொழிலாகவே நடக்கிறது. இப்படியான கொடுநிலைக்கு அஞ்சி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் தம்மைத்தாமே சுயதணிக்கைக்கு உட்படுத்தி ஒடுங்கிப்போகும் நிலை உருவாகியுள்ளது.

பா.ஜ.க.வின் கைப்பிள்ளையாக அடிபணிந்துள்ள மாநில ஆட்சி கருத்துரிமையை மறுக்கும் ஜனநாயக விரோதப்பாதையில் இன்னும் ஒருபடி மேலே பாய்கிறது. அது தன்னை எதிர்த்துப் பேசுகிறவர்களை   வாயிலேயே சுட்டுக் கொல்கிறது. விமர்சிப்பவர்களை கொசுக்களும் மூட்டைப்பூச்சியும் நிறைந்த தனிக்கொட்டிலில் அடைத்து சித்ரவதை செய்கிறது. தமது வாழ்வாதாரமான நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ள  வாதாடுகிற விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி போலிஸ் வேனில் வீசுகிறது. கழுத்தை அறுத்துக்கொண்டும் தீக்குளித்தும் கிணற்றில் பாய்ந்தும் மக்கள் வெளிப்படுத்தும் துயரத்தை அது பரிகாசத்துடன் ரசிக்கிறது. அந்த மக்களைச் சந்தித்துப் பேசச் செல்லும் அரசியல் கட்சியினரையும் துண்டறிக்கை மூலம் விமர்சிக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் சிறையிலடைக்கிறது. ஊடகவியலாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தனது சொந்தத் தொகுதி மக்களைச் சந்திக்கவும் அனுமதிக்காமல் முடக்கிப் போடுகின்றது. இன்னும் எடுத்து முடிக்கப்படாத ஒரு ஆவணப்படத்திற்காக அந்தப் படத்தின் இயக்குநர் வீட்டை பெரும் படையோடு முற்றுகையிட்டு கைது செய்ய துரத்துகிறது - பொய்வழக்கு பதிந்து அலைக்கழிக்கிறது. கண்டனம் தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் ஆள் நடமாட்டமில்லாத பொட்டலை கொடுப்பதோடு அரசை விமர்சிக்கக்கூடாது என எழுதிக்கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கிறது. ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடக்கும் அரங்கைச் சுற்றி ஸ்ட்ரைக்கிங் போர்ஸ் படையினரை நிறுத்தி இயல்பைக் குலைக்கிறது. மறுபடியும் ஆட்சிக்கு வந்து அதிகாரத்தை துய்ப்பதற்கான வாய்ப்பை இந்த மக்கள் வழங்கப் போவதில்லை என்பதை அறிந்து கொண்டதாலோ என்னவோ முடிந்தமட்டிலும் இந்த மக்களைத் தாக்கி சூறையாடிவிட்டுப் போவதென ஆடுகிறது அதிமுக ஆட்சி.

எனில் இங்கு கருத்துச்சுதந்திரம் யாருக்குதான் தேவை என்றொரு கேள்வியை எழுப்பிக் கொண்டோமானால், அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேச விரும்புகிற ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது என்பதே அதற்குரிய பதில். அதிகாரம் இங்கு பாலினம், சாதி, மதம், இனம், மொழி, பொருளாதாரம் என பல நிலைகளில் பற்பல வடிவங்களில் இயங்குகிறது. அதை இயல்பானதென ஏற்றுக்கொள்ளும்படி நெடுங்காலமாக இங்கு பரப்பப்பட்டு வந்துள்ள கருத்தியலை எதிர்த்து மாற்றுக்கருத்தியலை முன்வைக்கத் துணிவோருக்கு இங்கு கருத்துரிமை தேவைப்படுகிறது.  “வாழ்வுரிமை, சுதந்திரம், இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்றமுடியாத உரிமைகளைத் தனிமனிதருக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்காகவென்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெறுகிறது. எனவே ஆளப்படுபவரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்க வேண்டும்” என்கிற அம்பேத்கரின் கூற்றை ஆட்சியாளர்களுக்கு சொல்ல விரும்பும் எவரொருவருக்கும்  உடனடித்தேவை கருத்துரிமை. ஒரு கருத்து மக்களின் மனதை கவ்விப்பிடிக்குமானால் அது ஒரு பெளதிகச்சக்தியாய் மாறிவிடு்ம் என்றார் மார்க்ஸ். அப்படி மனதை கவ்விப்பிடிக்கும்படியாக/ன கருத்தை சொல்லிவிடத் தவிப்பவர்கள் கருத்துரிமை மறுக்கப்படும் நிலையிலும்கூட சொல்லிவிடும் சூட்சுமங்களை அறிவர்.

நன்றி: மகளிர் சிந்தனை, செப் 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...