கருத்து
வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, ஒருவர் தனது எண்ணங்களையும் எதுவொன்றின் மீதான கருத்தையும்
எதன்பொருட்டும் தயக்கமும் அச்சமுமின்றி எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ தனக்குகந்த
வேறு வடிவங்களிலோ வெளிப்படுத்துவதையும் பரப்புவதையும் குறிக்கிறது. சிந்தித்தல், பேசுதல்,
எழுதுதல், படித்தல், விவாதித்தல், கருத்துகள் /தகவல்களைப் பெறுதல் ஆகியவற்றுக்கான இச்சுதந்திரமானது, இவற்றையெல்லாம்
செய்யாதிருக்கும் சுதந்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது.
முடியாட்சிக்
காலங்களிலும் காலனிய ஆட்சிக்காலத்திலும் தமக்கு மறுக்கப்பட்ட இந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அடைவதற்கான இந்திய
மக்களின் போராட்டம், நாட்டின் அரசியல் சுதந்திரத்தை அடையும் போராட்டத்திற்கு தலைப்பங்காற்றியது.
இவ்வகையில் கருத்துரிமையே இதர குடிமை உரிமைகளை கோருவதற்கான உள்வலிமையையும் தெளிவையும்
தனிமனிதர்களுக்கு வழங்குகிறது என்கிற பாடத்தை கடும் ஒடுக்குமுறைக்கூடாக இந்தியச் சமூகம்
கற்றுத்தேர்ந்தது. அதனாலேயே விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனம் கருத்துரிமையை நம்
ஒவ்வொருவருக்கும் உரித்தாக்கியது. ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரிய இந்த உரிமையே கட்டுத்தளையற்ற
கற்பனை வளம் கொழிக்கும் கலை இலக்கிய ஆக்கங்கள் உருவாவதற்கும் ஊடகங்களின் சுதந்திரமான
செயல்பாட்டிற்கும் ஆதாரம் என்றும் விரித்துரைக்கப்பட்டது.
அரசியல்
சாசனத்தை வரைவமைத்த நமது முன்னோர்களுக்கு, அரசியல் சாசனம் என்பது அரசாங்கம் மக்களை
கட்டுப்படுத்துவதற்கானது அல்ல, மாறாக அது அரசாங்கத்தை மக்கள் கட்டுப்படுத்துவதற்கானது
என்கிற புரிதல் இருந்தது. அரசியல் சாசனத்தின் 19 1(அ) பிரிவு கருத்து வெளிப்பாட்டுச்
சுதந்திரத்தை உறுதி செய்ததற்கு இந்தப் புரிதலும் மனித உரிமைகள் தொடர்பாக உலகளாவிய அளவில்
நெடுங்காலமாக நடைபெற்றுவந்த விவாதங்களுக்கு செவிமடுக்கும் திறந்த மனதும் அடிப்படையாய்
இருந்தன. ஆயுதங்களின்றி அமைதியாக ஒன்றுதிரளுதல், சங்கம் அமைத்து செயல்படுதல், நாடு
முழுவதும் தங்குதடையின்றி நடமாடுதல், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தங்குவதும் - குடியேறுதலும்,
விரும்பும் எந்தவொரு தொழிலையோ வர்த்தகத்தையோ செய்தல் ஆகிய உரிமைகளை கருத்துரிமையுடன்
இணைத்தே உறுதி செய்தது அரசியல் சாசனம். ஆனால் அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 17 மாதங்களுக்குள்ளாகவே
கருத்துரிமையை சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தவேண்டிய நிலைமை உருவாகிவிட்டதாக கூறியது
இந்திய அரசு.
*
நாட்டுப்பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஏற்பட்டிருந்த அசாதாராணமான
நிலையை கையாள்வதற்காக நேரு-லியாகத் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. நேரு அமைச்சரவையிலிருந்து
வெளியேறிய சியாமபிரசாத் முகர்ஜி நேருவை கடுமையாகச் சாடியதோடு மதக்கலவரத்தை தூண்டும்
வெறுப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். ரிலையன்ஸ் சேவக் சங் என்று இப்போது அறியப்படுகிற
ஆர்.எஸ்.எஸ். சார்பில் பிரிஜ் பூஷன் என்பவரால் அப்போது வெளியிடப்பட்டு வந்த ‘ஆர்கனைசர்’ இதழ் இந்த வெறுப்பரசியலை விசிறித் தள்ளிக்கொண்டிருந்தது. இதற்காக
1950ஆம் ஆண்டில் இவ்விதழ் முன்தணிக்கைக்கு ஆளானது. அச்சுக்கு அனுப்பும் முன்பாக இதழை
அரசின் பார்வைக்கு கொண்டுவந்து ஒப்புதல் பெறவேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை
உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று ரத்து செய்துவிட்டது.
*
வரலாற்றாளர் ரோமிலா தாபரின் சகோதரரும், பின்னாளில் செமினார் இதழைத் தொடங்கி நடத்தி
வந்தவருமான ரொமேஷ் தாபர் ஓர் இடதுசாரி. அவர் 1950களில் வெளியிட்டு வந்த ‘கிராஸ் ரோட்ஸ்’ வார இதழ், கம்யூனிஸ்ட்களின்
போராட்டங்களை நியாயப்படுத்தியும், நேரு அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தும்
எழுதிவந்தது. தெலிங்கானாவிலும் கேரளத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான போராட்டங்களால்
தகிப்பேறிய நிலையை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருந்த சென்னை மாகாண அரசாங்கம்
இந்த இதழ் சென்னை மாகாணத்திற்குள் வருவதை தடைசெய்தது. இந்தத் தடையுத்தரவு அரசியல் சாசனத்திற்கு
விரோதமானது என்று ரொமேஷ் தாபர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது.
*
ஒடுக்குமுறைகளுக்கும் இழப்புகளுக்கும் பணியாமல் நாட்டில் ரத்தப்புரட்சியை நடத்தியாக
வேண்டும் என்று அறைகூவல் விடுக்கும் வங்கமொழிப் பிரசுரமான ‘சங்காரம்’, புரூலியாவைச் சேர்ந்த ஷைலாபாலா தேவி என்பவரது ‘பாரதி பிரஸ்’ஸில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இப்பிரசுரம் வன்முறையையும் கொலைகளையும்
தூண்டுவதாகவும், அவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டால் ஈடு செய்திட 2000 ரூபாய் காப்புத்தொகை
கட்டவேண்டும் என்றும் பீகார் மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கெதிரான
வழக்கில் அச்சகத்திற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பளித்த போதிலும், இப்படி வன்முறையையும்
கொலையையும் தூண்டுகிற பிரசுரத்தைக்கூட கருத்துரிமையின் பேரால் நாம் அனுமதிக்கவேண்டியிருக்கிறதே என்கிற கவலையை
வெளிப்படுத்தியிருந்தார்.
அரசியல்
சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமையை உயர்த்திப் பிடிப்பதன் பெயரால் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்புகள்
அவற்றோடு தொடர்புடைய நிலைமைகளை கையாள்வதற்கு தடையாக இருப்பதாக நேருவும் படேலும் கருதினர்.
நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அண்டை நாடுகளுடான நல்லுறவு, நீதிமன்ற மாண்பு, அறநெறிகள்
ஆகியவற்றை சீர்குலைக்கக்கூடியவை என்று அரசால் கருதப்படக்கூடிய கருத்துகள் மீது நியாயமான
கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் முதலாவது சட்டத்திருத்தம்
நிறைவேற்றப்பட்டது. கருத்துரிமை நிபந்தனைக்கு உட்பட்டதே என்கிற முதலாவது சட்டத்திருத்தம்
இன்னபிற குடிமை உரிமைகளையும் நிபந்தனைக்கு உட்பட்டவையே என்று மாற்றுவதற்கு இட்டுச்சென்றது.
(இந்தத் திருத்தத்திற்கு மிகுந்த தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டு வரைவை தயாரித்தளித்த
சட்ட அமைச்சர் அம்பேத்கர் அந்த நேரத்திலும் மக்கள் பக்கம் நின்று, கட்டுப்பாடு என்பதற்கு
முன்னால் ‘நியாயமான’ என்கிற சொல்லை போராடிச் சேர்த்திருக்கிறார்.)
***
அரசியல்
சாசனத்தின் பெயரால் இயங்கும் அரசு மக்களுக்கு பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்கிறது என்பதை
எடுத்துரைக்கவும், வழி தவறும்போது இடித்துரைக்கவும் விரும்புகிற எவரொருவருக்கும் கருத்துரிமை
தேவைப்படுகிறது. மட்டுமல்ல, அரசியல் சாசனத்தின் நோக்கங்களை வெறும் எழுத்து என்கிற நிலையிலிருந்து
நடைமுறை உண்மையாக மாற்றுவதில் ஏற்படும் வளர்/தளர் நிலைகளை மக்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி
அவர்களது வழிகாட்டுதலையும் விருப்பங்களையும் ஆட்சியாளர்கள் அறிந்துகொள்வதற்கு கருத்துரிமையும்
ஊடகச்சுதந்திரமுமே வழியமைக்கின்றன.
குடிமக்களை
குற்றவாளிகளாகவே கருதி அவர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட காலனியச்சட்டங்களையும்
மதிப்பீடுகளையும் கையாண்டு பழகிய இந்திய அரசு இயந்திரம், சுதந்திரமடைந்த ஒரு நாட்டின்
விருப்பார்வங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக மாற்றியமைக்கப்படவில்லை. சொத்துடைமை வர்க்கத்தின்
நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் இப்படியான ஓர் அரசு
இயந்திரமே போதுமானதாகவும் தேவையானதாகவும் இருந்தது. மேலாதிக்க மனோபாவத்தைக் கொண்ட இவர்களது
சேர்மானம் தன்னியல்பாகவே வெகுமக்களின் கருத்துரிமைக்கு எதிரானதாகவே ஆட்சியையும் அரசு
இயந்திரத்தையும் வடிவமைத்தது. அதேவேளையில், ஆளும் வர்க்கத்தின் நலனுக்கான கருத்தியலை
மட்டும் பரப்புவதற்கான ஒருவழிப்பாதையாக திட்டமிட்டு கருத்துரிமை சிதைக்கப்பட்டது. இதற்கான அஞ்சத்தக்க உதாரணம் 1975 ஜூன் 26 அன்று
அமலுக்கு வந்த நெருக்கடி நிலை. இந்தியச் சமூகம் வரலாற்றுரீதியாக ஈட்டிய ஜனநாயக விழுமியங்கள்
அனைத்தையும் எதேச்சதிகாரத்தின் காலடியில் வீழ்த்தும் கெடுமுயற்சி அது. மக்களின் உயிர்வாழும்
உரிமை உட்பட அனைத்தையும் பறித்துக்கொண்ட அரசு, அதற்கான வியாக்கியானங்களையும் அச்சுறுத்தல்களையும்
மக்களின் நினைவில் பதியவைத்து பணிய வைப்பதற்கான கருத்துப்பிரச்சாரத்தை நடத்திக்கொண்டிருந்தது.
கருத்துரிமை எந்த வடிவில் வெளிப்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கத் துணிந்த அந்த
ஆட்சியை மக்களின் ஜனநாயக வேட்கை வீழ்த்தியதை இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்வது
அவசியம்.
***
நாட்டின்
விடுதலைக்காக நடைபெற்ற, சமூகத்தை நவீனப்படுத்த நடைபெற்று வருகின்ற எந்தவொரு போராட்டத்திலும்
பங்கெடுத்திராத சங் பரிவாரத்தினர் கைக்கு நாட்டின் ஆட்சியதிகாரம் போய்ச் சேர்ந்திருப்பது
தற்செயலானதல்ல. ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும்
இயல்பானது என்கிற கருத்தியலுக்கு எதிராக சமத்துவம் என்கிற கருத்தியலை முன்வைத்து ஒடுக்கப்பட்ட
மக்கள் இதுகாறும் ஈட்டிவந்த வெற்றிகளைக் கண்டு பொருமிக்கிடந்த ஒடுக்குமுறையாளர்களின்
எதிர்வினையே சங் பரிவாரத்தின் ஆட்சி எனப்படுகிறது. அதாவது சமத்துவம் என்கிற இடதுசாரி
கருத்தியல் வளர்ச்சியைத் தடுக்கும் வெறிகொண்ட இந்திய ஆளும் வர்க்கம் அதே நோக்கத்தைக்
கொண்டிருக்கிற வலதுசாரிகளின் பக்கம் சாய்ந்திருக்கிறது.
தொடக்ககாலம்
முதலே சங்பரிவாரத்தினர் கருத்துரிமையின் எதிராளிகளாக இருப்பதற்கான சொந்தக் காரணங்களுண்டு.
ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகமே, அவர்களது
சமஸ்கிருதமே இந்தியாவின் தொன்மையான மொழி, வேதமயப்பட்ட சடங்குகளே புனிதமானவை, பசு ஒரு
விலங்கல்ல - தெய்வம், சாதி என்பது ஒரு வாழ்க்கை முறை என்றெல்லாம் முன்பு எவ்வித ஆதாரங்களுமின்றி
சொல்லிவந்தவர்கள், இப்போது ஆட்சியதிகாரத்தின் துணைகொண்டு போலியாக ஆதாரங்களை உருவாக்குகிறார்கள்.
இதற்காக வரலாற்றை திரிக்கிறார்கள். சான்றுகளை அழிக்கிறார்கள். நாட்டின் பன்முகத்தன்மையை
அழித்து ஒற்றைத்துவப்படுத்த நாட்டின் எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றுகிறார்கள். இந்த
இழிமுயற்சியை அம்பலப்படுத்தும் கல்வியாளர்களும் வரலாற்றாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்படுகிறார்கள்.
அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே என்கிற விஷமப்பிரச்சாரத்தை செய்கிறவர்களும் கொலையாளிகளை
கொண்டாடுகிறவர்களும் சங்பரிவாரத்தின் துடுக்கான பிள்ளைகளென கொஞ்சப்படுகிறார்கள்.
இப்போது
சுதந்திரமாக நீதிபரிபாலனம் செய்யமுடியவில்லை என்பதை நீதிபதி லோயாவின் மர்மமரணம் அறிவிக்கிறது.
தேவைப்படும் விதமான தீர்ப்பினை பெறுவதற்காக விளையாட்டுகளில் மேட்ச் ஃபிக்சிங் போல நீதிமன்றங்களில்
பெஞ்ச் ஃபிக்சிங் நடப்பதாகவும், இதற்காக தகுதிவாய்ந்த நேர்மையான நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும்
குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளாலும்கூட தங்களது பிரச்னைகளை
உள்ளேயிருந்து பேசிக்கொள்ள முடியாமல் ஊடகங்களைச் சந்தித்து முறையிட வேண்டியிருந்தது.
முதலாளிகள்
சிலருக்கு சலுகை காட்டப்படுவதை அம்பலப்படுத்தும் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அவற்றின்
அலுவலகங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப் படுகிறது. அரசை விமர்சிக்கும் செய்தியாளர்கள்
வேலையிலிருந்து விரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். இதழ்களை முடக்கவும்,
ஒளிபரப்பை நிறுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
பாடப்புத்தகங்களில்
திரிபுகள், மதம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தை விதிகளாக்குதல், தேர்வுமுறைகளை மாற்றியமைத்தல்,
உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களாக தகுதியற்றவர்களை நியமித்தல், உயர்கல்விக்கான உதவித்தொகையை
வெட்டுதல், ஆய்வூதியத்தை குறைத்தல், கல்வி வளாகங்களை காவிப்படுதாவுக்குள் அடைத்தல்
என கல்வி நிலையங்களின் சுதந்திரத்தில் அரசின் குறுக்கீடு அதிகரித்து வருகிறது. இதை
விமர்சிக்கத் துணிந்தால் என்னவிதமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு ரோஹித்
வெமூலா முதல் அனிதா வரையான துக்கசாட்சிகள் நீள்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து
நிதியுதவி பெறும் கல்வி நிலையத்தைச் சேர்ந்த ஆசிரியர்களோ ஊழியர்களோ மாணவர்களோ அரசை
விமர்சிக்கக்கூடாது என்று ஆணை பிறப்பிக்குமளவுக்கு எதேச்சதிகாரம் பரவுகிறது.
அரசின்
கொள்கைகளை விமர்சிக்கிறவர்கள், மனித உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் “அர்பன் நக்ஸல்கள்”
என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பிரதமரை கொல்ல சதிசெய்ததாக
அவர்கள் மீது வழக்கு புனையப்படுகிறது. அவர்களது வீடுகள் சோதனையிடப்படுவதுடன் குடும்பத்தவர்கள்
சிறுமைப்படுத்தும் கேள்விகளால் துளைத்தெடுக்கப்படுகிறார்கள்.
ஸ்டெர்லைட்
ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி எங்களை மரணத்துக்குள் தள்ளுகிறது என்று சொல்வதற்கு திறந்த
வாயை தோட்டா கிழிக்கிறது. அப்பாவி மக்கள் அப்படி கொல்லப்பட்டது குறித்து ஐ.நா.மன்றத்தில்
புகார் செய்தவர் சிறையில் அடைபட்டு சித்ரவதைக்கு ஆளாகிறார்.
எட்டுவழிச்சாலைக்காக
எங்களது வாழ்வாதரமான நிலத்தைப் பறிக்காதே என்று முழங்குவதல்ல, முனகினாலும்கூட தடியடிக்கும்
சிறைத்தண்டைனைக்கும் விவசாயிகள் ஆளாகினர். நிலத்தை பறி கொடுக்கும் ஆற்றாமையில் கதறும்
அவர்களை சந்திப்பதற்கு இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் அனுமதியில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது தொகுதிக்குள் நடமாடவும் தொகுதி மக்களோடு
பேசவும் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது.
ஆட்சியின்
அவலங்களை பூடகமாக உணர்த்தும் ஒரு சொல் திரைப்படத்தில் இருந்தால்கூட திரையிடல் தடுக்கப்படுகிறது.
ஒக்கிப்புயல் போன்ற இயற்கைப்பேரிடர்களில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஆவணப்படுத்தி
படமெடுப்பதே குற்றம் என்று கைது செய்ய துரத்தப்படும் அவலம்.
இங்கு
துண்டறிக்கை விநியோகிக்க முடியாது. தொல்லிசைக்கருவிகளை முழக்கக்கூடாது. குறிப்பிட்ட இடங்களில் கூடுவது குற்றம். பேச விரும்பியதை
பேசமுடியாது. கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு அரங்கங்களை கொடுக்கக்கூடாதென
கெடுபிடி. மக்களின் புழங்கிடமும் நேரமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இரவு 11 மணிக்கு
மேல் வெளியில் யாரும் நடமாட முடியாதபடி அறிவிக்கப்படாத ஊரடங்கு அமலாகிறது. தேவைப்பட்டால்
செல்பேசி மற்றும் இணையதளச் சேவைகளை முடக்கி வெளியுலகத் தொடர்பே இல்லாமல் மக்களை தனிமைப்படுத்தவும்
முடியும்.
***
ஆட்சியாளர்கள்,
அதிகாரிகள், போலிஸ் மற்றும் ராணுவத்தினர், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கனிமக்
கொள்ளையர்கள், நிலவணிகர்கள், சட்டவிரோதச்செயல்களில் ஈடுபடுகிறவர்கள், மதவாதிகள் போன்றவர்களால்
தான் உலகளவில் கருத்துச்சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கருத்துச் சுதந்திரத்தை, சுதந்திரமான ஊடகச்செயல்பாட்டை
ஒடுக்குகிற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை நோக்கி முன்னேறுவது நாம் பெருமைப்படத்தக்க
விசயமல்ல.
பொதுவாக
கருத்துரிமை என்பதை கலைஇலக்கியவாதிகளுக்கும் ஊடகர்களுக்கும் மட்டுமே தேவைப்படுகிற உரிமையாக
குறுக்கிப் பார்க்கும் போக்கு உள்ளது. ஆனால் அரசியல் சாசனம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும்
இந்த உரிமையை (நிபந்தனைகளுடனாவது) வழங்கியுள்ளது. இதன்பொருள், வரலாற்றை மதிப்பீடு செய்வதற்கு,
சமகால நடப்புகளை விமர்சிப்பதற்கு, எதிர்காலம் பற்றிய கனவுகளை முன்மொழிவதற்கு நம் ஒவ்வொருவருக்கும்
இந்த உரிமை தேவை என்பதுதான். இந்திய மக்கள் தத்தமது இனத்தின், மொழியின், நிலப்பரப்பின்,
வாழ்முறையின் தனித்துவங்களைப் பேணுவதற்கும் அவற்றின் மாண்புகளை பரஸ்பரம் பகிர்வதற்கும்
தமக்கிடையே வரலாற்றுரீதியாக உருவாகி வந்துள்ள பொதுமைப்பண்புகளை கண்டுணர்வதற்கும் இந்த
உரிமை அவசியமென தமுஎகச நம்புகிறது. சகல ஆயுதங்களையும் அரசிடம் ஒப்படைத்த அரசியல் சாசனம்,
அதற்கு சமதையாக மக்களிடம் கருத்துரிமையை ஒப்படைத்திருக்கிறது என்பதை நினைவூட்டவும்
செம்மையாக்கவுமே ‘கருத்துரிமை போற்றுதும்.
நன்றி: தீக்கதிர், 16.10.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக