முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருந்துச்சீட்டே நோயை குணப்படுத்திவிடாது - ஆதவன் தீட்சண்யா


PC;newdelhivoice
சாதியை விட காதல் முக்கியமா, காதலைவிட சாதி முக்கியமா என்கிற தலைப்பிலான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். எனக்குரிய நேரத்துக்கும் முன்பாகவே அரங்கிற்குள் சென்றுவிட்ட நான் படப்பிடிப்பையும் விவாதத்தின் போக்கையும் கவனிப்பதற்காக காட்சி சட்டகத்துக்கு வெளியே பார்வையாளர் பகுதி என்பது போன்றிருந்த ஓரிடத்தில் அமர்ந்துகொண்டேன். நிகழ்வின் பங்கேற்பாளர்களுடன் வந்திருந்த பலரும்கூட அங்குதான் அமர்ந்திருந்தார்கள். மேடையில் இருதரப்பாரும் சமமான எண்ணிக்கையில் இருந்தாலும், ஒலி/ஒளிப்பதிவுக்குள் வராத இப்பகுதியில், சாதியே முக்கியம் என்கிற தரப்பினருக்கு ஆதரவானவர்கள் பெரும்பான்மையினராகவும், காதலே முக்கியம் என்னும் தரப்பாருக்கு ஆதரவானர்கள் மிகச்சொற்பமாகவும் இருந்தனர். இது ஒருவகையில் சமூகத்தின் அசலான நிலையை விளக்குவதற்குரிய மாதிரித்தோற்றம் போல எனக்கு தோன்றியது.

பொதுவாக நம் கவனம் மேடைகளிலேயே குவிந்துவிடுகிறது. இங்கும் அதுதான் நடந்தது. காமிராவுக்கு முன்பாக பேசுகிறோம்- அது பொதுவெளியில் ஒளிபரப்பாவிருக்கிறது என்று தெரிந்தே ‘நாங்கள் விடுக்கிற எச்சரிக்கையையும் மீறி எங்கள் சாதிப் பெண்களிடம் பழகினால் கொல்லத்தான் செய்வோம்என்று பகிரங்கமாக பேசிவிட்ட ஒரு இளைஞரைப் பற்றியே ஆவேசமான விமர்சனங்கள் வந்தன. விளைவுகள் என்னவெனத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படையாக பேசிவிட்ட அவரை உடனேயே குற்றவாளியாக பார்ப்பதற்கு நம் கண்கள் பழகிவிட்டிருக்கின்றன. ஆனால் தன் சாதிக்காக கொலை செய்யவும் தயங்கமாட்டேன் என்று கொக்கரிக்குமளவுக்கு அந்த இளைஞரின் மனசில் நஞ்சும் வன்மமும் பாய்ச்சியவர்கள் யார்? அவர்கள் காமிராவுக்கு வெளியே இருந்தார்கள். படப்பிடிப்புக்கு தொந்தரவில்லாமல் ஓர் ஓரத்தில் பார்வையாளர்கள் என்பவர்களாக எனது அருகாமையில் அமர்ந்திருந்தார்கள்.

பார்வையாளர்கள் எனப்படுவோர் உண்மையில் பார்வையாளர்களல்ல, அவர்கள்தான் சமூகத்தின் உளவியலை சட்டெனக் காட்டிவிடுபவர்கள் என்பதை நான் உணர்ந்த தருணமது. அவர்களது கருத்துகள் மேடையில் சொல்லப்பட்டதைவிடவும் வெளிப்படையாகவும், சமூகத்தின் உள்ளோட்டத்தை காட்டவல்லதாகவும் இருந்தன. அவர்கள் தங்களது வார்ப்பில் ஒரு கொலையாளி மேடையில் உருத்திரண்டு வெளிப்படுவதை ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். அதேவேளையில், சாதியைவிட காதலே முக்கியம் என்று சிலர் வாதிட்ட போது அவர்கள் எதிரடியாக வசவுகளையும் பொறுமலையும் உடல்மொழியில் பரிகாசத்தையும் வெளிப்படுத்தினார்கள். தங்களது சாதிக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்று அவர்கள் தமக்குள் சன்னக்குரலில் கடுமையாக பேசிக்கொண்டார்கள். சட்டத்தின் பார்வையில் குற்றம் என்பதற்காக தமது சாதியின் / குடும்பத்தின் தூய்மையை - கௌரவத்தைக் காப்பதற்காக கொலை செய்வதை நிறுத்திக்கொள்ள முடியாது என்று அவர்கள் உறுதிபட நம்புகிறார்கள். நாடெங்கும் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றொழித்து வரும் இந்த நம்பிக்கைதான் ஒசூர் சூடுகொண்டப்பள்ளி நந்தீஷ் - சுவாதி காதல் தம்பதியரையும் இப்போது கொன்றிருக்கிறது.

***

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் சிவனசமுத்திரம் வழியாக பாய்கிறது சிம்ஷா ஆறு. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்மின் திட்டத்தின் மதகுக்கு அருகில் 13.11.18 அன்று 25 மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத - கைகால் கட்டப்பட்ட- ஊறி நொதித்த நிலையிலான ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதாக பெலகாவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் வருகிறது. இதேபோல, ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சற்று தள்ளி 15 ஆம் தேதி 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலமும் கைகால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. சடலமாக கிடந்த ஆணின் உடலில் காணப்பட்ட நீலநிற பனியனில் அம்பேத்கர் படமும் ‘ஜெய்பீம் - சூடகானப்பள்ளிஎன்கிற ஆங்கில வாசகமும் அச்சிடப்பட்டிருப்பதை துப்பாக வைத்துக்கொண்டு தேடத்தொடங்கிய பெலகாவல்லி காவல்நிலையத்தினர் வந்து சேர்ந்த இடம் ஒசூர் சூடுகொண்டப்பள்ளி.

சூடுகொண்டப்பள்ளி, ஒசூர் வட்டத்தின் உள்ளொடுங்கிய சிற்றூர்களில் ஒன்று. இங்கு சாதிவாரியாக வன்னியர்கள் 40, ஆதிதிராவிடர் 18, நாயுடு 15, குரும்பர் 15, அருந்ததியர் 1 என்கிற எண்ணிக்கையிலான குடும்பங்கள் வசிக்கின்றன. பட்டியல் சாதியினர் யாருக்கும் குறிப்பிடும்படியாக நிலம் இல்லை. எனவே அவர்கள் வாழ்வாதாரத்திற்காக பிற சாதியினரின் நிலங்களில் வேளாண் கூலிகளாக பணியாற்றிவருகின்றனர். இளைஞர்கள் அருகாமை நகரமான ஒசூருக்கு வந்து வேலை செய்து திரும்புகின்றனர். ஆதிதிராவிடர்களான திம்மக்கா - நாராணயப்பா தம்பதியரின் மகனான நந்தீஷ் (23) அவர்களில் ஒருவர்.  இதே ஊரைச் சேர்ந்தவர் சீனிவாஸ். வன்னியரான இவர் தன் சொந்த சாதிக்கு வெளியே போய் நாயுடு சாதியைச் சேர்ந்த சின்னம்மாவை திருமணம் செய்துகொண்டவர். இவர்களது சாதிக்கலப்பில் பிறந்த பெண் சுவாதி (21).

கிருஷ்ணகிரி கல்லூரியில் படித்துவந்த சுவாதியும் நந்திஷூம் நான்காண்டுகளாக காதலித்துவந்ததை அறிந்த சுவாதியின் பெற்றோர் நந்திஷையும் அவரது குடும்பத்தாரையும் இதன் பொருட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த நந்திஷ் சுவாதியிடமிருந்து விலகிச் சென்றிருக்கிறார். ஆனால் சுவாதி உறுதியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறி வந்த நிலையில் இருவரும் 2018 ஆகஸ்டில் கோயிலில் மணம் செய்துகொண்டனர். பிறகு சூளகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்திருக்கின்றனர். 

பொதுவாக இவ்வாறான சூழலில் தங்கள் பெண் காணாமல் போய்விட்டதாகவோ, யாரோ கடத்திப் போய்விட்டதாகவோ சாதியாதிக்கவாதிகள் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். உள்ளூர் காவல் நிலையங்கள் பெரும்பாலானவற்றில் இவர்களுக்கு தொடர்பும் செல்வாக்கும் இருக்குமாதலால் காவல் துறையினர் இந்தப் புகாரின் பேரில் பெண்ணையும் அவளது காதலன் / கணவனை  தேடிப் பிடித்து விடுவார்கள். பிறகு காவல்துறையினரே பெண்ணை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ளும்படி பையனை மிரட்டி பணியவைப்பார்கள். சில நேரங்களில் நீதிமன்றமே கூட இப்படியான வேலையைச் செய்வதுண்டு. இவ்வாறு பிரித்து  அழைத்துச் செல்லப்படும் பெண் நாளடைவில் என்னவாகிறாள் என்று யாரும் கவனிப்பதில்லை. தீராத ‘வயிற்றுவலியால்அவதிப்பட்டு வந்த இளம்பெண் தற்கொலை என்று வரும் செய்தியானது ஏற்கனவே கொல்லப்பட்ட அவளது காதலின் தொடர்ச்சிதான் என்று அடையாளம் காணப்படுவதில்லை. (அரிதாக, சில புகார்களில் காவல்துறையும் நீதிமன்றமும் சாதிக்கலப்பு தம்பதியரை காப்பாற்றும் பொறுப்பை மேற்கொள்கின்றன.)

சுவாதியின் குடும்பத்தார் இப்படியான புகார் எதையும் தரவில்லை. இதன் பொருள் அவளது காதல் மணத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதல்ல. அல்லது தொலையட்டும் இத்தோடு என்று தலைமுழுகிவிட்டனர் என்பதுமல்ல. கமுக்கமாக இருந்து தீர்த்துக்கட்டுவது என்கிற கொடூர முடிவுக்கு ஏற்கனவே வந்துவிட்டதால் தான் அவர்கள் புகார் கொடுத்து வெளியுலகத்தின் கவனத்தை ஈர்க்கவேண்டாமென இருந்திருக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் அறியமுடிகிறது. சில ஊடகங்களில் சொல்லப்படுவது போல நந்திஷ் சுவாதி இருவரையும் தற்செயலாக பார்த்ததும் அந்நேரத்தில் மூண்ட ஆத்திரத்தில் கூட்டிப்போய் அவர்கள் கொலை செய்துவிடவில்லை. எங்கே வைத்து கொல்வது, சடலங்களை எங்கே கொண்டு போய் மறைப்பது, காணாப்பிணமாகவோ அனாமதேயமாகவோ மாற்றுவதற்கு செய்யவேண்டியது என்ன என்பது போன்ற விசயங்களை மிகத் தெளிவாக முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டையும் ஊரையும் விட்டு வெளியேறிப் போய் ஒசூரில் வசித்துவந்த மகளையும் அவளது கணவனையும் பின்தொடர்ந்து கண்காணித்தபடியே இருந்திருக்கிறார்கள்.

தோதான தருணமெனக் கருதி நந்திஷ் சுவாதி தம்பதியரை 10.11.18 இரவு கடத்தியிருக்கிறார்கள். சாதிக்கலப்பு நடந்ததால் ஏற்பட்ட தீட்டினை பரிகாரச்சடங்கு செய்து கழித்துவிட்டு வீட்டுக்கு அழைத்துக்கொள்வதாகக் கூறி நயவஞ்சகமாக அழைத்துப் போனார்கள் என்றொரு தகவல் இருக்கிறது. ஒருவேளை அப்படி சொன்னதை இந்தத் தம்பதியர் நம்பி வண்டியில் ஏறிக் கொண்டார்களா அல்லது பலவந்தமாக ஏற்றப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. ஆனால் தாங்கள் கடத்தப்பட்டிருக்கும் தகவலை 11.11.18 அதிகாலை 2.14 மணிக்கு தனது கடை முதலாளிக்கு நந்தீஷ் ‘அண்ணா, கிட்னாப் ணா, கனகபுராஎன்கிற குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார். அந்நேரம் வரைக்கும் அவரது கையில் செல்போன் பறிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது என யூகிக்கமுடிகிறது.

அகாலத்தில் வந்த அந்தச் செய்தியை அப்போதே பார்த்து நடவடிக்கை எடுத்திருந்தால்கூட இவர்களை காப்பாற்றியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஏனென்றால், ஒசூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் அவர்களது வாகனம், போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் அதிகமில்லாத கனகபுரா வழியில் சென்றிருக்கிறது. அடிக்கடி சென்று பரிச்சயப்பட்டவர்களால் மட்டுமே அந்த வழியில் அந்நேரத்திற்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் கனகபுரா மார்க்கம் என்பதும்கூட முன்கூட்டியே தெரிவு செய்யப்பட்டதுதான் என்கிற முடிவுக்கு வரமுடியும்.  நந்தீஷ்  அனுப்பிய குறுஞ்செய்தியின் அடிப்படையில் அவரது முதலாளியும் நந்தீஷின் தம்பி சங்கரும் அவர்களை 11.11.18 காலையிலிருந்தே பல இடங்களிலும் தேடியதோடு காவல் நிலையத்திலும் தெரிவித்திருக்கிறார்கள். பின்பு எழுத்துப்பூர்வமாக புகாரும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே - 11.11.18 அன்று விடிவதற்குள்ளாகவே நந்திஷ் சுவாதி தம்பதியரை சுவாதியின் குடும்பத்தினர் கொன்று முடித்திருக்கின்றனர் என்பது பிற்பாடுதான் தெரியவந்தது.

***

சிவனசமுத்திரம் அருவியையடுத்த பவர் ஹவுஸ் மதகடியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் நந்திஷ் - சுவாதி தம்பதியர் தான் என்று கண்டறியப்பட்டது,  இதன் தொடர்பில் சுவாதியின் தந்தை சீனிவாஸ் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டது, தலைமறைவாக உள்ள இன்னும் நால்வரை காவல்துறை தேடிவருவது உள்ளிட்ட செய்திகள் 16.11.18 பிற்பகலில் ஊடகங்கள் வழியே பரவத் தொடங்கின. சடலங்களின் கதியைக் காட்டும் புகைப்படங்கள் கொலையாளிகளின் குரூரத்தைக் காட்ட போதுமானதாக இருந்தன.

சாதிமறுப்பு திருமணத்தை ஏற்க மறுத்து செய்யப்பட்ட இக்கொலைகளைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் களத்திற்கு வந்தன. அன்று மாலையே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒசூரில் மறியலில் ஈடுபட்டது. மறுநாள் 17.11.18 காலையில் சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், அ.இ.ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.சுகந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் பிரவீன் குமார்,  நீலம் பண்பாட்டு மையம் சார்பில் திரை இயக்குநர் பா.ரஞ்சித், தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சாதியொழிப்புச் செயற்பாட்டாளர் கௌசல்யா, ஜெய்பீம் பேரவையினர் உள்ளிட்டோர் நந்தீஷின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்தினர். நந்திஷ் குடும்பத்திற்கு பாதுகாப்பு, 1 கோடி ரூபாய் நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஆணவப்படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை, வழக்கை தமிழகத்திற்கு மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை செய்தியாளர் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் முன்வைத்தார்.

பின்னர் மேற்சொன்ன அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரும் இணைந்த குழு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சென்று ஒசூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இதே கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக முன்வைத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், இக்கொலைகள் சாதியாணவப் படுகொலைகளே என்று சொல்வதற்கான முகாந்திரம் இருப்பதால் அந்தக் கோணத்திலேயே விசாரணை நடத்துவதற்கு காவல்துறை அறிவுறுத்தப்படுவதாகவும் கோட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆணவப்படுகொலையே நடப்பதில்லை என்று துணைமுதல்வரே கூறிவந்த நிலையில் இப்படியொரு எழுத்துப்பூர்வ உறுதிமொழியைப் போராட்டக்களத்தில் பெற முடிந்ததை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

***

ஒசூர் பகுதியில் இப்படியொரு ஆணவப்படுகொலை நடந்திருப்பது இதுவே முதல்தடவை என்பது போல உள்ளூரில் ஒரு கருத்து நிலவுகிறது. ஒருவேளை, கடைசியாக அணிந்திருந்த ‘ஜெய்பீம்- சூடகானப்பள்ளிஎன்கிற நீலநிற பனியனுடன் நந்திஷின் உடல் கிடைத்திருக்காவிட்டால் இருவரும்  அனாமதேயப் பிணம் என்று கர்நாடகத்தில் எரிக்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டிருக்கும். காணாமல் போனவர்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்கிற புகார் தமிழகத்தில் நிலுவையில் தூசிமண்டி கிடந்திருக்கும். ஊராருக்கு பயந்து எங்கோ கண்காணாத தொலைவுக்கு ஓடிப்போய் விட்டார்கள் போல என்று நந்தீஷின் குடும்பத்தாரும்கூட தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கும். ஆனால் அந்த பனியன் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து ஒசூர் பகுதியில் சாதியின் கொடூரத்தை அம்பலப்படுத்திவிட்டது.

சிம்ஷா ஆற்றில்  சிவனசமுத்திரம் அருவிக்கும் பவர் ஹவுசுக்கும் இடைப்பட்ட - முதலைகள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் சடலங்களை வீசுவது என்கிற இந்த இடத்தேர்வு சில கேள்விகளை எழுப்புகிறது. அதாவது, எங்கோ ஒசூரில் உள்ளொடுங்கிய ஒரு சிற்றூரில் இருக்கிற சுவாதியின் குடும்பத்தினருக்கு இந்த இடம் தோதானது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் இந்த இடம் பற்றி நன்கு பரிச்சயமான, கொலை செய்து பிணங்களை எறிவதற்கு உகந்த இடம் என்பதை அறிந்த சிலரது உதவியின்றி இந்தக் கொலைகளைச் செய்திருக்க முடியாது. எனில் அவர்கள் யார்? கைதாகியுள்ள எழுவரில் அவர்களும் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் இன்னும் விசாரணை வளையத்திற்குள் வரவேயில்லையா? இன்னின்னரால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று தனது உறவினர்கள் 22 பேரின் பெயர்களை குறிப்பிட்டு சுவாதி எழுதிய கடிதம் ஒன்று அவளது நாட்குறிப்பில் இருந்ததாக கூறப்படுவதை போலிசார் கவனம் கொண்டிருக்கிறார்களா? மைசூரில் இருக்கும் சுவாதியின் உறவினர்கள் ஆறுபேருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருக்கலாம் என நந்தீஷின் தம்பி சங்கர் எழுப்பிய வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நடக்கிறதா? அடுத்த சிலதினங்களுக்குள்ளாகவே நந்தீஷ் -சுவாதியின் சடலங்கள் கரையொதுங்கிய அதேயிடத்தில் ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் பிணம் கரையொதுங்கியது. கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதி கே.வி.எம்.தொட்டியைச் சேர்ந்த ஜோதி என்கிற அந்தப்பெண்ணை அவளது பெற்றோர், தாத்தா, பாட்டி, மாமா ஆகியோர் கடத்தி கொன்று அந்த இடத்தில் வீசியதாக சொல்லப்படுகிறது.  சுவாதியும் ஜோதியும் கொல்லப்பட்ட விதத்தில் காணப்படும் ஒப்புமைகள் தற்செயலானதுதானா?

ஒரு தொழிற்பேட்டையாகவும் பெங்களூரு என்கிற பெருநகரத்தின் ஒருபகுதி போலவும் ஒசூர் மாறிக் கொண்டிருந்தாலும் இங்கு சாதியச் செயல்பாடுகள் முனைப்பாகவே இருக்கின்றன. குடும்ப விழாக்கள் என்கிற பெயரில் பல்வேறு சாதிச்சங்கங்களின் அணிதிரட்சி நடக்கின்றன. நகரத்தின் சொத்துகள், தொழில்கள், வணிகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் சமூக அந்தஸ்திலும் அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவதை ஒசூரில் மட்டும் எப்படி தவிர்த்துவிடமுடியும்? அதேபோல கிராமப்புறங்களில் நிலவுடைமையில் நிலவும் பாரபட்சம் சாதிய பாரபட்சத்துடன் பின்னிப்பிணைந்ததாக இருக்கிறது. சூடுகொண்டப்பள்ளியும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு தலித்துகள் சாதிரீதியான ஒடுக்குமுறைகளையும் பல்வேறு விதமான தீண்டாமைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியில்தான் நந்திஷ்-சுவாதி படுகொலையைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒசூரின் சுற்றுவட்டாரங்களில் சமீபத்தில் மட்டுமே 7 படுகொலைகள் சாதிரீதியாக நடந்திருக்கின்றன என்று தோழர் திருமாவளவன் 20.11.18 அன்று ஒசூர் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்ததையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.  

ராஜலஷ்மி, சௌம்யா படுகொலைகள் குறித்த படபடப்பு அடங்குவதற்குள் நந்தீஷ் - சுவாதி படுகொலை. கஜா புயல் என்கிற பேரிடர் உண்டாக்கியுள்ள துயரத்தின் அழுத்தத்தில் இந்தப் படுகொலைகள் மீது உரிய கவனம் குவியாமல் திசைதப்பிய நிலையில் இதோ இப்போது நெல்லை வெள்ளாங்குழியில் மற்றுமொரு ஆணவக்கொலை. இசக்கி சங்கர் என்கிற கோனார் சாதி இளைஞர் அகமுடையார் சாதிப் பெண்ணை காதலித்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். மறுநாள்  அதிகாலையில் அந்தப்பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இசக்கி சங்கரை கொன்றதாக அந்தப் பெண்ணின் 16 வயது தம்பியும் அவனது வயதையொத்த நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்துவிட்டு எதுவும் நடவாதது போல பள்ளிக்கூடம் சென்று வகுப்பறையில் இயல்பாக இருக்குமளவுக்கு இந்த சிறார்களின் மனம் குற்றத்தன்மைக்கு பழகியது எப்படி? நந்தீஷ்- சுவாதி கொலையில் தொடர்புடையவர்களின் தோற்றத்தைப் பார்த்து ‘இவ்வளவு பூஞ்சையான இவர்களா இப்படி கொடூரமாக கொலை செய்தார்கள்?’ என்று கேட்டதைப் போலவே இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. சாதி யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கிவிடும். இவ்வளவு சிறிய வயதில்  தென்மாவட்டங்களில் வேறு சில சாதிரீதியான கொலைகளிலும் இவ்வாறு 18 வயதுக்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது? மைனர்கள் கொலைக்குற்றத்தில் ஈடுபடுகிறார்களா அல்லது வேறு நோக்கங்களுக்காக இவ்வாறு ஈடுபட்டதாக காட்டப்படுகிறார்களா?


வேறு சாதியில் மணம் புரிந்துகொண்ட சீனிவாஸ், தன் மகள் ஒரு தலித்துக்கு வாழ்க்கைத் துணையாவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளை கொல்கிறார். 16 வயது தம்பி தன்னை விட 9 வயது மூத்த அக்கா தங்கள் சாதிவரம்பை மீறி அவமானத்தை தேடித்தந்துவிட்டதாக கூறி அவளது காதலனை  கொல்கிறான். இந்த சாதி உளவியலை காவல்துறையும் நீதிமன்றங்களும் சட்டரீதியாக அணுகி என்ன செய்துவிட முடியும்? சமத்துவம் சாதியொழிப்பில் நம்பிக்கையுள்ள இயக்கங்கள் தலித்துகளை அணிதிரட்டுவதில் காட்டுவதைவிடவும் பன்மடங்குத் தீவிரத்தோடு இந்த சாதியவாதிகளிடம் தனிமனித அளவிலும் குடும்ப அளவிலும் தலையிட்டு அணுக்கமாக உரையாடாமல் என்ன மாற்றம் இங்கு வந்துவிடும்? பார்ப்பனீயத்தின் அடியாள்படையாக மாறிவிட்டிருக்கிற இடைநிலைச் சாதியினரை சாதிய உணர்விலிருந்து மீட்டு ஜனநாயகப் பண்புள்ளவர்களாக, பிறரோடு கலந்து வாழும் மனிதச்சுபாவமுள்ளவர்களாக மாற்றுவதற்கு அவர்களிடையே பணியாற்றும் திட்டம் ஒன்று உடனடித் தேவையாக இருக்கிறது. வேலைத்திட்டம் என்பது வேலை செய்வதற்குரிய திட்டம் என்கிற புரிதல் அதினிலும் கூடுதலாக தேவைப்படுகிறது.

நன்றி: செம்மலர், டிசம்பர் 2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மே 6 நீட் தேர்வை நிறுத்து - ஆதவன் தீட்சண்யா

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளாவின் எர்ணாகுளம், ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் உதய்பூர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருப்பதாக ஏப்ரல் 18ஆம் தேதி  சிபிஎஸ்இ அறிவித்தது. நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டிருந்த விவரக்குறிப்பின் அத்தியாயம் 2 விதி 4(சி)ல் குறிப்பிடப்பட்டிருந்த வழிமுறைகளுக்கு புறம்பாக தொலைதூர தேர்வு மையங்களை ஒதுக்கியதானது, மாணவர்களை அலைக்கழிப்பதாகவும் மனநிலையை சிதைப்பதாகவும் அவர்களது நிதிச்சுமையை கூட்டுவதாகவும் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வுமையம் ஒதுக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காளிமுத்து மயிலவன் பொதுநல வழக்கொன்றை தொடுத்திருந்தார்.    
இவ்வழக்கை கடந்த 27.04.18 அன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்களை ஒதுக்கவேண்டும் என்ற தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது, சம்பந்தப்பட்ட மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கடும் அலைச்சல் மற்றும் செலவினத்திலிருந்து தப்பிக்கவைத்து ந…

பீமா கோரேகான் - வரலாறும் நடப்பும் - ஆதவன் தீட்சண்யா

சத்ரபதி சிவாஜியும் அவரது வழிவந்த போன்ஸ்லே மன்னர்களும் தமது மராட்டிய அரசின் தலைமை அமைச்சர்களாக (பேஷ்வாக்களாக) முதலில் தேஷாஷ்ட பார்ப்பனர்களையும், பிறகு சித்பவன பார்ப்பனர்களையும் பணியமர்த்தினர். நாளடைவில் இந்த பேஷ்வாக்கள், போன்ஸ்லேக்களை பெயரளவில் ஒப்புக்கு மன்னர்களாக வைத்துக்கொண்டு ஆட்சியதிகாரத்தை தம் பொறுப்பில் முழுமையாக எடுத்துக்கொண்டனர். முதலாம் பாஜிராவ் என்கிற சித்பவன பார்ப்பனர்பேஷ்வாவாக இருந்த காலத்தில் புனே நகரத்தில் ‘ஷனிவார்வாடா’ என்கிற அரண்மனையைக் கட்டி அங்கிருந்து (சனிக்கிழமை அடிக்கல் நாட்டி மற்றொரு சனிக்கிழமையன்று திறக்கப்பட்டது) ஆட்சி நடத்தினார். இவர் கொங்கன் பகுதியில் ஜோதிடம், புரோகிதம் ஆகியவற்றை பரம்பரைத் தொழிலாக செய்துவந்த தமது சாதியினர் ஆயிரக்கணக்கானவர்களை சனிவார்வாடாவிற்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவரும் இவருக்கு அடுத்து வந்தவர்களும் நிர்வாகம், நீதி, சட்ட அமலாக்கம், ராணுவம் போன்றவற்றின் தலைமைப்பொறுப்புகள் அனைத்தையும் இந்த பேஷ்வாக்கள் தமது சித்பவனப் பார்ப்பனச் சாதியினரைக் கொண்டே நிரப்பினர். (இந்த சித்பவனப் பார்ப்பனச் சாதியிலிருந்து பின்னாளில் வந்த சாவர்க்கர், ஹெட்கேவார…

அம்பேத்கரின் வெளிச்சத்துக்கு வராத பணிகள் - ஆதவன் தீட்சண்யா

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதிகாரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கு அம்பேத்கரின், அம்பேத்கரியத்தின் பங்களிப்பு என்ன?
சாதியோ பொருளாதார நிலையோ ஒருவரின் கற்கும் ஆர்வத்தையும் அறிவார்ந்த சாதனைகளையும் தடுத்துவிட முடியாது என்கிற மிகப்பெரும் நம்பிக்கையே அவரது வாழ்க்கை நமக்கு தரும் முதற்பெரும் செய்தியாக இருக்கிறது. தனித்த திறமைகளையும் கல்வியறிவையும் சுயநலத்திற்காக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடவும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்காக சிந்திக்கவும் அர்ப்பணிப்பது என்பது இதேயளவுக்கு போற்றத்தக்க மற்றுமொரு செய்தி.
கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், தத்துவவாதியாகவும், வரலாற்றாளராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், தொழிலாளர்- பாசனம்- மின்சாரத்துறை அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் அவர் ஆற்றிய பணிகள் இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் நேரடியாகத் தொடர்புடையவை. வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை அவர் எழுப்பிய கோரிக்கையே. நிர்வாகத்துறையை ஜனநாயகப்படுத்த அவர் பட்டியல் சாதியினருக்கு கோரிய பிரதிநிதித்துவம் தான் அரசியல் சாசனத்தின் மூலம…