மனஅழுத்தம் என்றால் அது இன்னதுதான் என்று பகுத்துப் பார்த்து, அதற்கொரு தணிப்பையோ தீர்வையோ
நோக்கிப் போவதற்கான வாய்ப்பு எதுவும் எனக்கு கிடைத்ததில்லை. எனக்கு மட்டுமில்லை.. பெரும்பாலானோருக்கும்
அது கிடைப்பதில்லை. பிரச்னைகள் எவ்வளவு மன அழுத்தம் தந்தாலும் அதையெல்லாம் கடந்துபோக
வேண்டிய நெருக்கடிதான் எனக்கு வந்திருக்கிறது.
என்னுடையது பெரிய
குடும்பம். அதிலிருந்து முதல் தலைமுறை அரசு ஊழியராகிவிட்ட நான் ஒவ்வொரு சம்பள தினத்திலுமே
கடும் மன உளைச்சலுக்கும் தப்பிக்க முடியாத திணறலுக்கும் ஆட்பட்டிருக்கிறேன். உருட்டிப்புரட்டி வாழ்வது என்கிற அவஸ்தைமிக்க பற்றாக்குறை
வாழ்வை எதிர்கொள்ளக்கூடாத அவ்வளவு சின்ன வயதில் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம்
என்றாவதொரு நாள் தீர்வு கிடைக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதற்குக் கூட அப்போது
சூழல் இடம் கொடுக்கவில்லை. அப்போது நான் அடைந்த வேதனைகளைத் தான் நீங்கள் மன அழுத்தம்
என்று பகுப்பீர்களானால் அதற்கு எந்தவொரு நிவாரணத்தையும் தேடிக்கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே
மருகியபடிதான் அந்தக் கட்டத்தை நான் கடந்து வந்திருக்கிறேன். அது வெறும் பொருளாதாரரீதியான
பிரச்னை மட்டுமேயல்ல. அது எனது தெரிவுகளையும் விருப்பங்களையும் மட்டுப்படுத்தி அதற்குரிய
குணவியல்புகளைக் கொண்டவனாக என்னை மாற்றியிருக்கிறது. இன்றளவும் வழிநடத்துகிறது. அந்த
நாட்களை பின்னோக்கிப் பார்ப்பதற்குக் கூட எனக்கு
இன்னும் தைரியம் வரவில்லை.
என் வாழ்வின்
பிரிக்க முடியாத மற்றோர் அங்கம் அலுவலகம். நான் உட்பட ஊழியர்களும் அதிகாரிகளும் எங்களது
பொருளாதார நிலைகளை ஓரளவுக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்களை இந்த நிலைக்கு
உயர்த்திய துறை தொடர்ந்து நசிந்து கொண்டே வருவதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது. நாடு
முழுவதும் தகவல் தொடர்புச் சேவையை வழங்கும் ஒரு மிகப்பெரிய துறையை திட்டமிட்டே நசிவடையச் செய்கிறது அரசு. மக்களின் தேவையை ஈடு
செய்யும் வகையில் ஆளெடுப்பு இல்லாமல் அலுவலக இருக்கைகள் காலியாக கிடக்கின்றன. குடியிருப்புகள்
காலியாக கிடக்கின்றன. மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலில் இருப்பது போன்ற நிச்சயமற்றத்தன்மைக்குள்
தூக்கி வீசப்பட்டவர்களாக இருக்கிறோம். ஒரு
மாதச்சம்பளக்காரனாக காலந்தள்ளப் பழகிவிட்ட நிலையில் அதில் ஒரு இடையறுப்பு நடந்தால்
என்ன செய்வது என்று யோசனையும் கவலையும் மற்றெல்லா ஊழியர்களையும் போலவே எனக்கும் இருக்கத்தான்
செய்கிறது. ஆனால் அதற்கு பரிகாரமோ நிவாரணமோ ஏதும் இல்லை என்பதே உண்மை.
இவற்றைவிட
அதிகமான மனஅழுத்தம் தரக்கூடியது சமூக நிகழ்வுகள் தான். எப்போதாவது நடக்கிற ஏதோவொரு
நிகழ்வால் நீங்கள் பாதிக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிலிருந்து
நீங்கள் வெளியே வந்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம், இயல்புக்குத் திரும்பலாம். ஆனால், இப்போது நடக்கக்கூடிய
எந்தவொரு விஷயமுமே, நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கான நேரத்தையே கொடுப்பதில்லை.
அன்றாடம் ஒரு இழவு வீட்டில் இருப்பது போன்ற மனநிலையைத்தான் சூழல் உருவாக்கி வருகிறது.
இதிலிருந்து
வெளியேறும் ஒரு வழியாக, இதைவிட கொடூரமான, மிகுதியான வாதையைத் தருகிற வேறொரு பிரச்னைக்குள்
போய் தலையிடுவதாகத்தான் இருக்கிறது. தலையீடு என்றால், நேரடியாக களத்துக்குப்போவதுதான்
என்றில்லை. அந்தப் பிரச்னையில் மனம் மூழ்கி விடுகிறது. வேறு எது குறித்தும் யோசிக்க
முடியாமல் மூளை மரத்து போகிறது. உதாரணத்துக்கு, தருமபுரியில் மூன்று ஊர்கள் எரிக்கப்பட்டது
பற்றிய கவலை தீரும் முன்னே இளவரசன் மர்மமாக இறந்து போகிறான். பிறகு கோகுல்ராஜ். இதோ
இப்போது ராஜலட்சுமி, செளம்யா, நந்தீஷ் –சுவாதி…இசக்கி சங்கர்…
இருபத்தியோராம்
நூற்றாண்டின் ஆகச்சிறந்த வளர்ச்சிகளை அனுபவிப்பதாக, மேலும்மேலும் மனிதத்தன்மையுள்ள
ஒரு வாழ்க்கையை நோக்கி சமூகத்தின் ஒரு பகுதியினர் தொடர்ச்சியாக முன்னேறி போய்க்கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க்கையில் கொண்டாடத்தக்க எத்தனையோ தருணங்கள் இருக்கையில், `எங்களை அடிச்சிட்டாங்க..
எங்க வீட்டை எரிச்சுட்டாங்க.. எங்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கிட்டாங்க’
என்று, தொடர்ச்சியாக கதறிக் கொண்டும் புகார் சொன்னால் கேட்பதற்கான ஆட்களை தேடிக்கொண்டும் அலைகிறவர்களாகவும் உங்களை இந்தச்சமூகம்
நிறுத்தியிருக்கும் போது, எப்படி நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்?
15நிமிடங்களுக்கு
ஒரு சாதிய, பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டே இருக்கும் ஒரு சமூகத்தில், நான் ஆசுவாசம்
அடைந்து கொள்வதற்கான ஒரு இடத்தை வழியை நானே தேடினாலும் கிடைக்காது. சுற்றிலும் எதுவும்
நடந்துவிட்டுப் போகட்டும் என்று கண்டும் காணாமாலும் இருந்தால் மட்டுமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள
முடியும். சமூக நடப்புகளை ஓரளவு கவனித்துக்கொண்டிருக்கிற ஒருவரால் மனஅழுத்தத்திலிருந்து
தப்பவே முடியாது.
நான் ஒரு
வேலையில் இருக்கிறேன். என்னுடைய குடும்பமும், உறவினர்களும், நண்பர்களும் தோழர்களும்
என்னிடம் பிரியமாக இருக்கிறார்கள். என்னுடைய அமைப்பு எனக்கு பெரிய பலமாக இருக்கிறது.
இவை எல்லாமே என்னுடைய புறதோற்றத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான பாதுகாப்பைத்தான் வழங்க
முடியும். ஆனால், என்னுடைய உளவியலுக்குள் நிகழக்கூடிய விஷயங்களை அவர்கள் தீர்மானிப்பதில்லை.
அதை, வேறு யாரோ அதிகாரத்தின் மூலமாக தீர்மானிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களே
தொடர்ச்சியான மன நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள். வாழ்வின் கொண்டாடத்தக்க தருணங்களை
துன்பத்தில் உழலக்கூடிய தருணங்களாக அவர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாதிரியான
தொடர் மனஅழுத்தம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும்?
வெளித்தோற்றத்தில்
நாம் சிரிக்கிறோம். நண்பர்களோடு சந்தோஷமாக இருக்கிறோம். விழாக்களுக்கு செல்கிறோம்.
நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறோம். இவையெல்லாமே அகவயமான நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான
ஒரு கற்பிதமான முயற்சியோ என்கிற சந்தேகம் எனக்கு எப்போதுமுண்டு. ஏனென்றால் கலந்துகொள்வது
எல்லாமே இது தொடர்பானதாகவே இருக்கிறது. தீர்வுக்கான வழியே இல்லாததுபோன்று தொடர் அழுத்தங்கள்தான்
இருக்கின்றன. தொடர்ந்து கடிகாரத்தைப் போல ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். நின்றுவிட்டால்,
நீங்கள் செத்துப்போய்விட்டதாக ஆகிவிடும்.
இந்தப் புறவயமான
நெருக்கடிகளே அகவயமான நெருக்கடிகளை உருவாக்குகிறது. இதிலிருந்து தப்பித்து ஓடமுடியாது. தற்காலிகமாகவும் தப்பிக்கமுடியாது. அதை எதிர்கொள்வது மட்டுமே ஒரே வழி. அதை எதிர்கொள்ளும்
போராட்டத்தில் அல்லது முடிவில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் கூட இருக்கலாம்..
எதிர்பார்த்த மாற்றம் நிகழாமல் போகலாம். ஆனால், அந்த அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்கு
ஒரே வழி அதை எதிர்கொள்வது மட்டும்தான்.
அதற்கு பதிலாக,
படிப்பது, பாடல் கேட்பது, சுற்றுப்பயணம் செல்வது, இவை எல்லாமே கோயிலுக்குப் போனால்
மனம் சாந்தமாகிவிடும் என்று சொல்வது போன்ற, மூட நம்பிக்கை தான். இடைவிடாத சமூக நெருக்கடிகள்
இருக்கும் ஒரு காலகட்டத்தில் எதை நான் உண்ண வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படி இயங்க
வேண்டும், என்னுடைய அன்றாடத்தை எப்படி கழிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கக்கூடியதாக
வெளியே ஒரு சக்தி இருக்கிறது. எல்லாமும் கண்காணிப்புக்கு உள்ளான ஒரு காலத்தில், நான்
கண்காணிக்கப்படுகிறேன் என்று தெரியும்போது.. நான் எப்படி ஆசுவாசுமாக இருக்கமுடியும்?.
ஆசுவாசம் என்பதே இட்டுக்கட்டப்பட்ட, ஒரு மாயையான வஸ்துதான்!’’
அலையும் பெண்டுலத்திற்கு
அமைதி தேவையாம்
கடியாரம் நின்றுவிடுமே
(எனது முதல் தொகுப்பில் உள்ள ஒரு கவிதை)
நன்றி: விகடன்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக