நம்பத்தகாத சம்பவங்களின் விளைநிலமாய்
நாடொன்று இருக்குமானால் அது லிபரல்பாளையம் தான். அதுவும், சாக்கிய வம்சத்தாரை கபடத்தால்
வீழ்த்தி ஆட்சிக்குவந்த காக்கிய வம்சத்தாரின் கடைசி மன்னரான ஹிட்லினி அன்றாடம் உறங்கப்போகும்
வேளையில் ஏதேனுமொரு அதிர்ச்சியை அறிவித்து உலகையே பரபரப்பில் ஆழ்த்தும் உச்சத்தை எட்டிப்
பிடித்திருந்தார். வியப்பிலாழ்த்தும் விரிமார்பன்ஜி (வி.வி.ஜி) என்கிற புனைப்பெயரால்
புகழ்ந்தழைக்கப்படும் அப்பேர்ப்பட்ட ஹிட்லினி ஆளும் நாட்டில் குடிமக்கள் மட்டும் சும்மா
இருப்பார்களா? இருந்திருக்கமாட்டார்கள் என்றே எல்லோரும் நினைப்பர். ஆனால் அவர்கள் சும்மாதான்
இருந்தார்கள். கோன் எவ்வாறோ குடிமக்களும் அவ்வாறே என்கிற முதுமொழியை பொய்யாக்கும் விதமாக
அவர்கள் சும்மா இருந்தார்கள்.
சும்மா இருந்தார்கள் என்றால் சும்மாவே
இருந்தார்கள் என்றில்லை. சோறு தின்றார்கள், வெளிக்கிப் போனார்கள், வேலை பார்த்தார்கள்,
வரிசைகட்டி வாக்களித்தார்கள், கலவி செய்தார்கள், கண்ணயர்ந்தார்கள், பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள்,
அதுகளை படிக்க அனுப்பினார்கள். பிறகு செத்தார்கள், பிறந்தார்கள், செத்துப் பிறந்தார்கள்
அல்லது பிறந்து செத்தார்கள். இப்படி இருக்குமிடம் தெரியாமல் இருந்துவந்த லிபரல்பாளையம்
குடிமக்களில் ஒருத்தியாகிய ஏதுமறியாள் இன்று அவர்களது மன்னர் ஹிட்லினி தருவதை விடவும்
பேரதிர்ச்சியை உலகத்திற்கு தந்திருக்கிறாள்.
ஏதுமறியாள், பன்னிரண்டிலக்கத்தார் பரம்பரையினள்.
அவளது தந்தையார் பில்லியனாரப்பன் பெரும் செல்வந்தர். நஞ்சைபுஞ்சை நாலுபக்கம் தோப்பு
என்று திரண்ட சொத்துகளுக்கு அதிபதி. நாட்டில் வருடத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்குமளவுக்கு
வசதி கொழுத்த நாலைந்து பேரில் அவரும் ஒருவர். ஏதுமறியாளின் தாய் நிமிராதேவியும் லேசுபாசான
குடும்பத்தவள் அல்ல. ஆனாலும் அவள் வெறும் திருமதி பில்லியனாரப்பன் அல்லது ஏதுமறியாளின்
அம்மா.
பில்லியனாரப்பன் - நிமிராதேவி தம்பதியருக்கு
தமது குடும்ப அந்தஸ்துக்கேற்ற மாப்பிள்ளையை தேடிப் பிடிப்பது பெரும்பாடாயிருந்தது.
கடைசியில் வாய்த்தது பெரிய இடத்து சம்பந்தம் தான். தொழிலதிபர் நாடுகாத்தான் என்றால்
ஊருலகத்திற்கே தெரியும். அரசு வங்கிகளில் ஏழெட்டாயிரம் கோடி கடன் வாங்கி முடித்ததும்
நாட்டை விட்டு ஓடிப்போய் தலைமறைவாக இருந்துவிட்டு அவ்வப்போது திரும்பி வந்து ஓடுமளவுக்கு
ஆளுங்கட்சியில் செல்வாக்கு மிகுந்தவர். அவரது மகனைத்தான் ஏதுமறியாளுக்கு கட்டி வைத்தார்கள்.
***
மன்னரின் பிறந்தநாளன்று தொடங்கப்பட்ட
ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி திட்டத்தின்கீழ் ஆறே மாதத்தில் குழந்தையை பெற்றெடுக்கும் நாட்டின்
முதல்பெண் ஏதுமறியாள். முழுமையாக வளர்ச்சியடைந்த ஆரோக்கியமான குழந்தையை ஆறேமாதத்தில்
பெற்றெடுக்கப் போகிறோம் என்கிற பூரிப்பு அவளுக்கு. போட்டி நிறைந்த உலகத்தில், நொடியிலும்
குறைவான பொழுதில் பல மாற்றங்கள் நிகழும் இக்காலத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னமே
பிறப்பதால் லிபரல்பாளையம் குழந்தைகள் அடையப்போகும் நற்பயன்களை மனதிற்கொண்டு மன்னர்
அறிவித்த இந்தத் திட்டம் தன்னிலிருந்து தொடங்குவது குறித்த பரவசத்தில் அவள் திளைத்திருந்தாள்.
ஆறுமாதமோ ஆறுவருசமோ காலஅளவு எதுவாயினும் கர்ப்பந்தரிப்பது பெண்தான். ஆனாலும் அவஸ்தைப்படும் காலத்தின் அளவு குறைகிறதே என்று ஏதுமறியாளைப் போலவே
நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் மன்னருக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தாள்.
சுண்டைக்காய் விற்பது முதல் சுடுகாட்டுச்
சாம்பல் அள்ளுவது வரையான ஒப்பந்தம் எதுவாயினும் மன்னரை நிழலெனத் தொடரும் நண்பர்கள்
இருவருக்கே என்பதுதான் அங்குள்ள நியதி. அதன்படி 128 பில்லியன் டாலர் மூதலீட்டிலான இந்த
ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி திட்ட ஒப்பந்தமும் அவர்களில் ஒருவரது ‘மியோ’ நிறுவனத்திற்கே தரப்பட்டது. ‘மேக் இன் லிபரல்பாளையம்’ இலச்சினையுடன் இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன உயிர்நுட்பங்களைக்
கொண்டு ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரியை வடிவமைத்த மியோ ‘புதிய மனிதர்களைப் படைக்கும் மன்னர்
கடவுளாகிறார், நாமோ அவரது பக்தர்களாகிறோம்’ என்கிற விளம்பரத்துடன்
களமிறங்கியது.
கருத்தரிப்பது முதல் மியோவின் மருத்துவக்கண்காணிப்பு வலையத்திற்குள்
இருப்பதற்கு சம்மதிக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்ட முதலாவது பெண்ணான ஏதுமறியாள் பிரசவத்திற்காக
அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதும் அந்த மருத்துவமனையை ஊடகத்தாரும் பாதுகாப்புப் படையினரும்
சுற்றி வளைத்திருந்தார்கள். பிரசவ அறைக்கு வெளியே பதற்றமாக நடமாடும் பாத்திரத்தை வகிக்க
வேண்டியிருந்ததால் ஏதுமறியாளின் கணவனும் அவனுக்கு ஒத்தாசையாக உறவினர்கள் சிலரும் மட்டுமே
மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஃபாஸ்ட் ட்ராக் பிரசவத்தின் முக்கியத்துவம்
கருதி குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது உயரதிகாரிகளுடன் அங்கு வந்திருந்தது
பலரையும் நெகிழச் செய்தது. அன்றாடம் எத்தனையோ ஊழல்களைச் செய்து முடித்தேயாக வேண்டிய
வேலைப்பளுவுக்கிடையிலும் அவர் ஒரு குடிமகளின் பிரசவநேரத்தில் இப்படி வந்து காத்திருப்பதைச்
சித்தரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருந்தது. இந்தத் திட்டம் வெற்றி
பெற்றால்தான் அடுத்தடுத்து பரிசீலனையில் இருக்கும் அல்ட்ரா ஸ்பீடு ஐந்து மாத டெலிவரி,
நானோ ஸ்பீடு நாலு மாத டெலிவரி போன்ற திட்டங்களை செயற்படுத்த முடியும் என்பதால் ஏதுமறியாளை
விடவும் அதிகமான படபடப்புடன் தான் இருப்பதாக அவர் அளித்த பேட்டியும் #மினிஸ்டர்வெயிட்டிங்
என்கிற ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டிங்காகிக் கொண்டிருந்ததது.
‘பக்கத்து நாடான
இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பெரியார், பெண்கள் கர்ப்பப்பையை அகற்றிக்கொள்ள
வேண்டும் என்றார். மனிதப்பிறப்பில் மகோன்னதப் பாய்ச்சலாக கர்ப்பக்காலத்தை குறைக்கும்
எமது அரசின் இம்முயற்சி பெரியாரின் வாக்கினை செயற்படுத்தும் முதற்படி’ என்று அந்தப் பேட்டியில் அவர் சொல்லியிருந்த கருத்து கடும் சர்ச்சையை
உருவாக்கியது. பெரியார் கர்ப்பப்பையை கத்தரித்து எறியச் சொன்னதன் பொருள் வேறு என்றும்,
மியோவிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு இதுபோன்ற பிறப்பணுச் சோதனைகளை அனுமதிக்கும் மோசடிக்கு
பெரியாரை துணைக்கழைக்கும் போக்கை அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கருப்புக்கொடி
காட்ட நினைத்தவர்களை அவ்வாறு நினைத்ததற்காகவே கைது செய்த போலிசார் அவர்களை ராஜவிரோதக்
குற்றத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.
இதனிடையே, மருத்துவமனை தலைமையதிகாரி
அரைமணி நேரத்திற்கொருமுறை வெளியிட்டு வந்த மருத்துவ அறிக்கையை விதவிதமான தலைப்புகளுடனும்
முற்சேர்க்கை பிற்சேர்க்கைகளுடனும் ஒளிபரப்பிய ஊடகங்கள் நாட்டின் அதிமுக்கிய நிகழ்வாக
ஏதுமறியாளின் பிரசவத்தை மாற்றிக் கொண்டிருந்தன. ஒரு அறிக்கைக்கும் மறு அறிக்கைக்கும்
இடைப்பட்ட நேரத்தில் உடற்கூறு வல்லுநர்கள், மகப்பேறு மருத்துவர்கள், மானுடவியலாளர்கள்,
ஆல் டாபிக் அளந்தான்கள் என்று பலதிறத்தாரும் கர்ப்பகாலத்தைக் குறைக்கும் இந்த ஃபாஸ்ட்
ட்ராக் பிரசவத்தின் சாதகபாதகங்கள் குறித்து நேரலையில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே ஒளிபரப்புக்கூடத்திற்குள் திமுதிமுவென நுழைந்த போலிசார்,
அரசாங்கம் கொண்டுவரும் திட்டம் எதுவானாலும் ஏற்றுக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமேயல்லாது
ஆதரித்தோ எதிர்த்தோ இப்படி விவாதிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் சட்டம்
தன் கொடுமையைச் செய்யும் என்றும் மிரட்டிய காட்சியும் நேரலையில் ஒளிபரப்பாகியது. போலிசாரின்
இந்த அத்துமீறலுக்கு எதிராக வீசிய கண்டன அலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் அங்கிருந்து
வெளியேறியதையடுத்து எல்லாம் இயல்புநிலைக்குத் திரும்பின.
புரோகிதர் கணித்தருளிய புண்ணியவேளையாம்
காலை 10.59.41 மணிக்கு குழந்தை பிறந்துவிட்டது என்கிற நற்செய்தியுடன் கூடிய கடைசி மருத்துவ
அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நள்ளிரவைத் தாண்டியும் அறிக்கை
வராததால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல் நாடு தத்தளித்தது. ‘பிரசவ வலி எடுத்தும்
தாமதமேன்?’, ‘இன்னும் தலை திரும்பவில்லையா?’, ‘தாயும் சேயும் நலமா?’ என்று ஊடகங்கள்
பல்வேறு யூகங்களை கிளப்பின. இவ்வளவு காலமும் பத்துமாதம் பொறுத்திருக்க முடிந்த நாம்
இப்போது சிலமணி நேரங்கள்கூட காத்திருக்க முடியாமல் ஏன் பொறுமையற்றுப் போனோம் என்று சிலர் கூறிய புத்திமதி அங்கு யாருக்கும் தேவைப்படவில்லை.
மருத்துவமனைக்கு வெளியே இருந்த ஏதுமறியாளின் உறவினர்களும் நண்பர்களும் தம்மை உள்ளே
அனுப்பும்படி அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். பராக்கு பார்க்க வந்திருந்தவர்களும் இவர்களோடு
சேர்ந்துகொண்டதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலிசார், லேசான தடியடி நடத்தி பலரது
மண்டையை உடைத்து காலை முறித்து கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஃபாஸ்ட் ட்ராக்கில் முதலாவது குழந்தை
பிறந்தது என்கிற உயிர்நுட்பச் சாதனையை உலகுக்கு அறிவிப்பதற்காக மன்னரே இங்கு தனிவிமானத்தில்
வந்து கொண்டிருப்பதாகவும் அதற்காகவே மருத்துவமனை நிர்வாகம் காலங்கடத்துவதாகவும் ஒரு
தகவல் கசிந்தது. இதையடுத்து அமைச்சர்கள் பலரும் அங்கே வரத்தொடங்கிய சற்றைக்கெல்லாம்
மருத்துவமனை மொட்டை மாடியில் மன்னரின் தனி விமானம் வந்திறங்கியது. தனிவிமானம் என்பது பெயருக்குதான்.
ஆனால் மியோ நிறுவனரும் உடன் வந்திருந்தார். தனது இரண்டு நண்பர்களில் ஒருவராவது உடன்
வராமல் பாத்ரூம் போவதற்கும்கூட பழகியிருக்காத மன்னர், இந்த பிரசவத்தோடு நேரடி தொடர்புடைய
மியோ நிறுவனரை இங்கு அழைத்துவந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
மன்னருடனேயே வந்திருந்த செய்தியாளர்கள்
அவர் விமானத்தை விட்டு இறங்கிய நொடியிலிருந்து நேரலை ஒளிபரப்பை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்கள்.
மருத்துவமனைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த அகன்ற பெருந்திரைகளில் அவரது ஒவ்வொரு அசைவும்
உடனுக்குடனே நேரடியாக ஒளிபரப்பாகியது. நாட்டுமக்கள் தொலைக்காட்சிகள் வழியாக உன்னிப்பாக
பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொட்டைமாடியிலிருந்து உள்ளுக்குள்ளேயே இறங்கி பிரசவ
வார்டுக்குள் போன மன்னர் ஏதுமறியாளின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். பின் அவர் மருத்துவர்களைப் பார்த்து கட்டை விரலை
பெருமிதத்தோடு உயர்த்திக் காட்டினார். இதற்காகவே காத்திருந்த மருத்துவர்கள் வார்டுக்கு
வெளியே சில நிமிடங்கள் காத்திருக்குமாறு மன்னரை பணிந்து வேண்டிக் கொண்டனர்.
வெளியே வந்த மன்னர் ஏதுமறியாளின் மாமனார்
நாடுகாத்தானை கண்டதும் பாய்ந்தோடி கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார். ‘நீங்க நாடு
திரும்புறப்ப நான் வெளியே போயிடுறேன். நான் திரும்புறப்ப நீங்க தலைமறைவா ஓடிப்போயிடுறீங்க’ என்று பாசத்தோடு கடிந்துகொண்ட மன்னர் ‘நாம் சந்தித்து எவ்வளவு
நாளாச்சு?’ என்று பெருமூச்செறிந்தார். நெகிழ்ந்துபோன நாடுகாத்தான், ‘ஓடுவதற்கு முன்னால்
நம் அமைச்சர்கள் எல்லோருக்கும் முறையாக தெரிவிக்க முடிகிற என்னால் உங்களிடம் மட்டும்
சொல்லிக்கொள்ள முடியாமல் போகிறதே என்கிற வருத்தம் எனக்கு எப்போதுமுண்டு. இன்று அந்தக்
குறையும் தீர்ந்தது. நீங்கள் வந்தது என் பாக்கியம்’ என்றார்.
அவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் போதே மருத்துவர்கள் புடைசூழ தாதியொருவர் பட்டுத்துகிலால்
சுற்றப்பட்ட குழந்தையை ஏந்திக்கொண்டு ஓட்டம் போல விரைந்து வந்தாள். மன்னர் எதிர்கொண்டோடி தாதியிடமிருந்து
குழந்தையைப் பெற்றுக்கொண்டார்.
தாய்வயிற்றுச் சூட்டின் கதகதப்பு கூட
இன்னமும் தணிந்திராத ஒரு பச்சிளம் குழந்தை தனது கைகளில் இருப்பதை எண்ணி மன்னர் உணர்வுக்கொந்தளிப்புக்கு
ஆளானார். பட்டத்தரசியோடு வாழாது போனதால் தவறவிட்ட இந்த அனுபவத்தை காலம் கடந்து இப்போதேனும்
தனக்கு வாய்க்கச் செய்த - இன்னமும் முகம்கூட பார்க்காத- அந்தக் குழந்தையின் மீது அவருக்கு
பேரன்பு சுரந்தது. ஆர்வமும் பரபரப்பும் பெருமிதமும் பொங்க பிறந்தநாள் பரிசுப்பொதியைப்
பிரிக்கும் சிறுவனின் பரவசத்தோடு குழந்தையைப் பார்க்க பட்டுத்துகிலை விலக்கினார். அந்தக்
குழந்தை தலையில்லாமல் இருந்தது.
குழந்தைக்கு பதிலாக தன்னிடம் தவறுதலாக
வேறெதையோ கொடுத்துவிட்டார்களோ என்று பதற்றமும் அதிர்ச்சியுமடைந்த மன்னர், சுதாரித்து
மறைப்பதற்குள் அந்தக் காட்சி நேரலையாக உலகத்தின் பார்வைக்குச் சென்றுவிட்டது. இதுபற்றிய
செய்திகள் மேலும் பரவாமல் தடுப்பதற்காக செயற்கைக்கோள் ஒளிபரப்புகளும் இணையச்சேவையும்
செல்போன் சேவையும் அதிரடியாக முடக்கப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆனாலும்
அதற்குள்ளாகவே ‘அந்த மருத்துவமனையில் இறப்பவர்களுக்கு கால் இருக்காது, பிறப்பவர்களுக்கு
தலை இருக்காது’, ‘நாட்டோட தலையைப் பார்க்க விரும்பாத குழந்தைத்தலை’, ‘முண்டத்தைக் காணவந்த முண்டம்’, ‘ஃபாஸ்ட்
ட்ராக் டெலிவரியில் தலையில்லை, நானோ டெலிவரியில்...?’ என்கிற மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில்
பதிவேறி வைரலாகிவிட்டதை அறிந்து மன்னர் கடுங்கோபமாகிவிட்டார்.
இப்படி துணிந்து எழுதுகிற யாரும் இன்னமும் இங்கு மிச்சமிருக்கிறார்களா அல்லது அண்டை
நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்திருக்கும் தேஷ்விரோதிகள் அங்கிருந்தபடியே இங்கு நடப்பதை
உன்னிப்பாக கவனித்து மக்களை தூண்டிவிடுகிறார்களா என்கிற குழப்பமும் அவரை பீடித்தது.
‘குழந்தை முகத்தை
முதன்முதல்ல நான் தான் பார்க்கணும்னு சொன்னது உண்மைதான். அதுக்காக அந்தக் குழந்தை தலையோடு
பிறந்திருக்கா இல்லையான்னுகூட பார்க்காம கொண்டாந்து என்கிட்ட தருவீங்களா? என்று மருத்துவக்குழுவை
கடிந்துகொண்டார். தலையில்லாமல் குழந்தை பிறந்தது மற்றும் அது தொடர்பாக ஏற்பட்டுள்ள
அசாதாரண நிலைமை, தேஷ்விரோதிகளின் சீர்குலைவு வேலைகள் ஆகியவற்றை விசாரிப்பதற்காக விசாரணை
ஆணையம் ஒன்றை அமைப்பதற்கான உத்தரவையும் அங்கிருந்தே பிறப்பித்த மன்னர் தாளாத உளைச்சலுடன்
தலைநகருக்கு புறப்பட்டார்.
***
தலையில்லாத முண்டம் தேநீர்க்கடைக்கு
வந்து டீ குடித்துவிட்டுப்போனது என்பதான வதந்திகளை உண்மையென நம்பி வீட்டு எரவாணத்தில்
வேப்பிலைக்கொத்தை செருகிவைத்த மக்கள், தலையின்றி ஒரு குழந்தை பிறந்திருக்கும் உண்மையை
எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இது ஏதோ கெடுங்காலத்தின் அறிகுறி என்ற அச்சம் நாடெங்கிலும்
பரவி பரிகாரப்பூசைகள் நடக்கத் தொடங்கின. கர்ப்பமுற்றிருந்த பெண்களோ தங்கள் குழந்தை
எதெது இல்லாமல் பிறக்கப் போகிறதோ என்கிற கவலையில் வாடினர். இதுகுறித்த உண்மையை அறிவியலாளர்கள்
வெளிப்படையாக சொல்லவேண்டும், ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி ஒப்பந்தப் பத்திரத்தை ரத்து செய்து
நார்மல் டெலிவரி மீட்புச் சட்டத்தை இயற்றவேண்டும் என்றெல்லாம் சொல்ல நினைத்தவர்கள்
பின்விளைவுகளுக்கு அஞ்சி கமுக்கமாயினர்.
ஏதேதோ மாறுபாடுகளோடும் அவயவங்கள் சிலதின்றியும்
குழந்தைகள் அவ்வப்போது பிறந்து கொண்டுதானிருக்கின்றன. தலை சிறுத்தும் பெருத்தும்கூட
குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் உலகத்தில் தலையே இல்லாமல் பிறந்த முதல் குழந்தை ஏதுமறியாளுடையதுதான்.
***
பிரசவ மயக்கம் தெளிந்த ஏதுமறியாள் தன்னருகில்
தலையின்றி கிடத்தப்பட்டிருந்த குழந்தையைக் கண்டு அலறித் துடித்தாள். எண்சான் உடம்புக்கு
சிரசே பிரதானம். ஆனால் எனது குழந்தையின் தலை எங்கே? பிரதமரிடம் காட்டும் பரபரப்பில்
வயிற்றைக் கிழித்த மருத்துவர்கள் கவனக்குறைவாக குழந்தையின் தலையைத் துண்டித்துவிட்டார்களா?
ஒருவேளை அப்படி துண்டான தலை வயிற்றுக்குள் கிடந்து உருண்டு தவிக்குமோ? பரிதவிப்பில்
வயிற்றைத் தடவித்தடவிப் பார்த்தாள். ஃபாஸ்ட் ட்ராக் திட்டம் குழந்தை திரண்டு வளர்வதற்குரிய
இயல்பான கால அவகாசத்தைக் கொடுக்காமல் துரிதப்படுத்தி தலை உருவாவதை தடுத்துவிட்டதா?
இது குறைப்பிரசவத்தின் மற்றொரு வகையா? அல்லது ஃபாஸ்ட் ட்ராக்கில் இந்தளவில்தான் குழந்தை
பிறக்குமா? யாரோ நடத்திப் பார்க்க நினைத்த விபரீதச்சோதனைக்கு நானும் என் குழந்தையும்
வெள்ளெலியாகிப் போனோமா? ஆற்றாமையும் அங்கலாய்ப்பும் நெட்டித்தள்ள குழந்தையை மாரோடு
அணைத்துக் கொண்டாள். ஊட்டப்படாமல் நெறிகட்டிக் கிடந்த பால் அந்த அழுத்தத்தில் குழந்தையின்
மீது பீறிட்டு வீணே வழிந்தது. அழுத பிள்ளைதான் பால் குடிக்குமாம். அழுவதற்கே வாயில்லாத
என் குழந்தை எப்படி பால் குடிக்கப்போகிறது என்று நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம்
பெருகியது.
தலையில்லாமல் பிறந்த தனது குழந்தையை
காட்சிப்பொருளாக்க வேண்டாம் என்று ஏதுமறியாள் விடுத்த வேண்டுகோள் யார் காதிலும் விழவில்லை.
செய்தியாளர்களும் குழந்தையை நேரில் காணும் ஆர்வத்தால் உந்தப்பட்டவர்களும் வந்தவண்ணமிருந்தனர்.
வருகிறவர்களின் கேள்விகளும் அவர்களது குத்தலான பேச்சுகளும் தலையில்லாத குழந்தையை எப்படி
வளர்ப்பது என்கிற குழப்பமும் கூடி அவளையும் அவளது குடும்பத்தாரையும் வெகுவாக தொந்தரவு
செய்தன. மன உளைச்சல் மிகுதியான ஒருகட்டத்தில் குழந்தையை கொன்றுவிடலாமா என்று யோசித்தாள்.
ஆனால் கொல்வதற்கான யாதொரு அவசியமுமின்றி குழந்தையே பிணம்போல தான் கிடந்தது.
***
‘வி.வி.ஜி.,
குழந்தைக்கு தலையில்லாததை பார்த்த நொடியில் நீங்க காட்டின பதற்றம்... உங்க முகத்துல
தெரிந்த திகைப்பு... விசாரணை கமிஷனை அறிவித்த வேகம்... அப்பப்பா... நேரலையில் பார்த்துக்கிட்டிருந்த
உலகமே நம்பிடுச்சு உங்களை...’
‘உலகம் எங்கே
நம்பியது? அப்படி நம்பியிருந்தால் நாம் இந்த கதிக்கு ஆளாகியிருப்போமா?’
‘கவலைப்படாதீங்க
ஜி, ஏதாவது குறுக்குவழியைக் கண்டுபிடிப்போம்...’
‘அந்தாள் சொல்லுற
குறுக்குவழியில் போய் போய்தான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம். நான் சொல்லும் குறுக்குவழி
என்னன்னா...’
நீதிமன்ற பணியாளர் “சைலன்ஸ்... ஹிட்லினி
வகையறா ஹிட்லினி வகையறா...”
ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி மூலம் அடுத்தடுத்து
பிறந்த குழந்தைகளும் ஏதுமறியாளின் குழந்தையைப் போலவே தலையின்றி பிறந்ததால் ஆவேசம் கொண்ட
மக்களைக் கொண்டு உருவான புதிய சாக்கியர் இயக்கம் விரிமார்பன்ஜி என்கிற ஹிட்லினியை வீழ்த்தி காக்கிய வம்சத்தின் ஆட்சியை
முடிவுக்கு கொண்டுவந்தது. புதிய சாக்கியர் ஆட்சி அமைத்த விசாரணை ஆணையத்தின் சம்மன்
பேரில் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு காத்திருந்த வேளையில் இப்படி உரையாடிக்கொண்டிருந்த
ஹிட்லினி, அவரது தளபது குமித்ஹோ, தொழிலதிபர்களாகிய நண்பர்கள் இருவர் ஆகிய நால்வரும்
விசாரணைக்கூண்டில் ஏறி நின்றார்கள். அந்த ஹிட்லினி
வகையறா நீதிபதி தூயாவிடம் கூட்டாக கொடுத்த வாக்குமூலம்:
“தலை என்பது வெறும் தலையல்ல. எங்களுக்கு
விரோதமாக மக்களை தயாரிக்கிற மூளை, கண், காது, வாய், நாக்கு அத்தனையும் அந்தத் தலைக்குள்தான்
இருக்கிறது என்பதை பார்க்கவே அச்சமாக இருந்தது. அதனால்தான் ஏதாவதொரு குற்றம்சாட்டி
நாடுமுழுக்க தலைவெட்டும் தண்டனையை அமல்படுத்தினோம். ஆனால் எத்தனை பேரின் தலையைத்தான்
வெட்டுவது என்று ஒரு கட்டத்தில் சலிப்பாகிப் போனது. தலையை வெட்டுவதையே ஒரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தால்
மற்ற வேலைகள் தடைபட்டன. எனவே தலையேயில்லாமல் குழந்தைகளை பிறப்பித்துவிட்டால் தலைவெட்டும்
வேலை மிச்சம், ஆட்சிக்கும் ஆபத்திருக்காது என்கிற நினைப்பில் ஃபாஸ்ட் ட்ராக் டெலிவரி
திட்டத்தைக் கொண்டு வந்து மறைமுகமாக சோதித்துப் பார்த்தோம். எல்லாம் எங்கள் திட்டப்படி
நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இந்த புதிய சாக்கியர்கள்...”
ஓவியங்கள்: மணிவண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக