இது ‘‘மேக்ரோ ஸ்கேன்’’ இணைய தளத்தில் பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள கட்டுரை. உலகப் பொருளாதாரத்தில் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்கிற வர்த்தகப் பற்றாக்குறை, நெருக்கடிகள், தீர்வுகள் குறித்து ஆழமான விஷயங்களை அவர் அதில் பகிர்கிறார். அதன் தொகுப்பு கேள்வி – பதில் வடிவில் இங்கே…
மூன்றாம் உலக நாடுகள் இன்று உலகப் பொருளாதாரத்தில் எதிர்கொள்கிற முக்கியப் பிரச்சனை என்ன? அதன் காரணங்கள் என்ன?
மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதிச் சந்தைக்கான கிராக்கி குறைந்து இருப்பது முக்கியப் பிரச்சனையாகும். அவற்றின் சரக்குகள், சேவைகள் இரண்டுமே இந்நெருக்கடியைச் சந்திக்கின்றன. இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
ஒன்று, உலகம் முழுவதிலுமுள்ள முதலாளித்துவ நெருக்கடி உலகப் பொருளாதாரத்தின் கிராக்கியை குறைத்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தியில் அந்நெருக்கடி பிரதிபலித்திருப்பதன் விளைவு இது. ஆகவே மூன்றாம் உலக நாடுகளின் மொத்த ஏற்றுமதி மதிப்பை எடுத்துப் பார்த்தால் இச்சரிவைப் புரிந்து கொள்ள முடியும்.
இரண்டாவது, அமெரிக்கா இன்று கடைப்பிடிக்கிற ‘‘சந்தைப் பாதுகாப்பு’’ கொள்கை. இதனால் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்கு அதிகமாகியுள்ளது. மற்றவர்களின் பங்கினைக் குறைத்துள்ளது.
இதன் தாக்கம் எவ்வாறு உள்ளது?
வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்கு கொண்டு சென்றுள்ளது. மூன்றாம் உலக நாடுகளின் இறக்குமதிகளின் அளவுகளும் இதற்கேற்ப குறையாததால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இச்சூழல் மூன்றாம் உலக நாடுகளுக்குள் வரக்கூடிய நிதி வரத்தையும் பாதித்துள்ளது. இதற்கு காரணம், அமெரிக்கா எடுத்துள்ள ‘‘சந்தை பாதுகாப்பு’’ நடவடிக்கைகள் நவீன தாராளமயம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்க வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதும் மூன்றாம் உலக நாடுகளுக்கான நிதி வரத்தை மேலும் பாதித்துள்ளது. இந்தியாவே இதற்கு உதாரணம். ஆகவே வர்த்தகப் பற்றாக்குறைகள் ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அந்நாடுகள் சொந்தமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
மூன்றாம் உலக நாடுகள் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
மிகச்சிறந்த நடவடிக்கை என்பது, இறக்குமதி மீதான தடுப்புக்களேயாகும். வரிகள் மூலமாகச் செய்யலாம். அளவுக் கட்டுப்பாடுகள் வாயிலாகச் செய்யலாம். பணவீக்கத்தை ஏற்படுத்தாதவாறு இதைச் செய்வதே முக்கியமானது. உதாரணமாக பெட்ரோலிய இறக்குமதிகள் மீது வரி போட்டால் அது நுகர்வோர் முதுகுகளுக்கே மாற்றப்படும். அது விலைவாசி உயர்வை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உற்பத்தி நடவடிக்கைகள் எல்லாவற்றின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் பெட்ரோலியம் என்பது பொருளாதாரத்தில் தவிர்க்க இயலாத உற்பத்தி உட்பொருள் ஆகும். ஆனால் கார்கள், தங்கம் இறக்குமதிகள் மீது வரி போடலாம். அத்தகைய ஆடம்பரப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகள் பொதுவான பணவீக்க உயர்வுக்கு வழி வகுக்காது. ஆகவே இறக்குமதியைக் குறைக்கிற நடவடிக்கைகளில் இத்தகைய அணுகுமுறை நமக்குத் தேவையாகும்.
இதைத் தவிர வேறு நடவடிக்கைகள் என்ன? அவற்றின் விளைவுகள் என்ன?
பணவீக்கத்தை ஏற்படுத்தாமல் இறக்குமதியைக் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகள் பற்றி பேசினோம். அத்தகைய வழிகளைக் கையாண்டால் சாதாரண உழைப்பாளி மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படாது. ஆனால் மற்ற நடவடிக்கைகள் பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக ‘‘பரிமாற்ற விகித தேய்மானம்’’. அதன் விளைவுகளை சாதாரண உழைப்பாளி மக்களின் வாழ்க்கைத்தரம் மீது பாதிப்பினை ஏற்படுத்தும்.
ஒரு குறிப்பிட்ட பொருள் மீது வரியோ, கட்டுப்பாடோ போடும்போது அப்பொருளின் விலை மீது மட்டுமே தாக்கம் இருக்கிற வகையில் அல்லது பணவீக்கம் எழாத வகையில் செய்ய முடியும். (உதாரணம்: கார், தங்கம் போன்ற ஆடம்பரப் பொருட்கள்) ஆனால் ‘‘பரிமாற்ற விகித தேய்மானம்’’ எல்லா பொருட்களின் விலை மீதும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
மூன்றாம் உலக நாடுகளைப் போல வளர்ந்த நாடுகளுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள்தானே இருக்கும்?
அங்குதான் ‘‘சந்தை பாதுகாப்பில்’’ உள்ள பாரபட்சம் குறுக்கே வருகிறது. இப்போது அமெரிக்கா, பல நாடுகளின் இறக்குமதிச் சரக்குகள் மீது வரிச்சுவர்களை எழுப்பியுள்ளது. சேவைகளை அவுட்சோர்சிங் செய்கிற பெரு நிறுவனங்கள் மீது தண்டத் தொகைகளை விதித்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க அவுட்சோர்சிங் நடவடிக்கைகளும் இதில் அடங்கும். ஆனால் இதேபோன்ற நடவடிக்கைகளை பிற நாடுகள் செய்வதை அமெரிக்காவோ, சர்வதேச நிதி மூலதனமோ ஏற்றுக் கொள்வதில்லை. ‘‘எல்லாவற்றையும் சந்தையின் செயல்பாட்டுக்கு விட்டுவிடுங்கள்’’ என்ற அமெரிக்காவின், சர்வதேச நிதி மூலதனத்தின்முழக்கம் வெற்று வார்த்தைகளே.
இப்படிப்பட்ட பாரபட்சத்தை மூன்றாம் உலக நாடுகள் மீற முடியாதா?
அதனால்தான் திணறுகிறார்கள். நாம் பொருளாதாரத்தில் மேலோட்டமாக பார்க்கிற நடவடிக்கைகள் ‘‘கண்களுக்குப் புலப்படும் கரங்கள்’’ ஆகும். ஆனால் அவற்றைவிட வலிமையானவையாக ‘‘கண்களுக்குப் புலப்படாத கரங்கள்’’ உள்ளன. இதனால் அமெரிக்காவும் சில வளர்ந்த நாடுகளும் ‘‘வரிச்சுவர்களை’’ நோக்கி நகர்கின்றன. ஆனால் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் ‘‘பரிமாற்ற விகித தேய்மானம்’’ அல்லது உள்நாட்டு ஊதியம்/ பணச்சுருக்கம் நோக்கி நகர்கின்றன. ஆனால் சீனாவால் எதிர்வினை ஆற்ற முடிகிறது. பதிலுக்கு வரிச்சுவர்களை எழுப்ப முடிகிறது. காரணம், ஏற்கெனவே சீனா ஏற்றுமதி உபரியை வைத்திருப்பது ஆகும்.
இது வளர்ந்த நாடுகளின் மேலாதிக்கத்தை காண்பிக்கிறதே!
ஆமாம். 19ஆவது நூற்றாண்டில் இருந்த காலனி ஆதிக்கத்திற்கு ஒப்பான நிலைமையாகும். இது இந்தியா போன்ற காலனி நாடுகள் மேலை உலக உற்பத்திகள் மீது வரி போட முடியாது. குறிப்பாக பிரிட்டன் மீது இந்தியாவில் செய்ய முடியாது. 1846 வரை இந்தியப் பெருங்கடல் மீது பெருமளவு வரிகளை பிரிட்டன் போட்டது. பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கு பின் சுதந்திரச் சந்தை நோக்கி நகர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் இறக்குமதி மீதான அவர்களின் வரிவிதிப்பு தொடர்ந்தன. இப்போதும் பழைய மேலாதிக்க முறைமையை நோக்கியே சர்வதேசப் பொருளாதாரம் நகர்வது போல் தோன்றுகிறது.
வேறு வழிகள் என்ன?
ஆட்சியாளர்கள் கூலியைக் குறைக்கிறார்கள். அதாவது மக்கள் கைகளில் புழங்கும் பணம் சுருங்கும் போது உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலைகளும் கட்டுக்குள் வரும். கிராக்கி குறைகிறது அல்லவா! இறக்குமதி பொருட்களின் விலைகளோடு போட்டி போடுகிற அளவுக்கு உள்நாட்டு விலைகளையும் கட்டுப்படுத்த முடியும். அதாவது 10 சதவீத வருமானம் குறைந்தால் அது 10 சதவீத விலைக் குறைப்பிற்கு வழிவகுக்குமென்பது கணக்கு. அதுவே ‘‘பரிமாற்ற விகித தேய்மானம்’’ 10 சதவீதம் இருந்தால் அத 10 சதவீதம் பண வீக்கத்தை உருவாக்கி இறக்குமதிப் பொருட்களை மேலும் அதிக விலையுள்ளதாக மாற்றும்.
இவை இரண்டும் வெவ்வேறு நடவடிக்கைகள் போலத் தோன்றினாலும் ஒரே விதமான பாதிப்பையே ஏற்படுத்தக்கூடியவை ஆகும். இரண்டுமே சாதாரண உழைப்பாளி மக்களை வதைப்பதாக இருக்கும்.
உழைப்பாளி மக்களைக் குறி வைக்கிற தீர்வுகளையே அரசு நாடுகிறதே!
ஆமாம். அரசு செலவினங்களை குறைப்பதென்ற பெயரால் மானியங்களை வெட்டுவது. ஏழைகளுக்கான மடை மாற்றங்களைத் தடுப்பது. அரசு ஊழியர்களின் சம்பளங்களை, பயன்களைக் குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறது. இவையெல்லாம் உழைப்பாளி மக்களின் உண்மை ஊதியங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இத்தாக்குதல்களைத் தொடுக்க தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் தாக்கப்படவேண்டும். பணி அமர்த்தவும், பணியை விட்டு விரட்டுவதற்குமான சுதந்திரம் தொழிலதிபர்களுக்கு தரப்பட வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
மூன்றாம் உலகைப் பொறுத்தவரையில்,‘சந்தை பாதுகாப்பு’ ஒப்பீட்டளவில் நல்ல கருவியாக இருக்கலாம். வர்த்தக இடைவெளியை எதிர்கொள்ள உதவலாம். ஆனால் நிலையான தீர்வுக்கு வழி வகுக்காது.
நிலையான தீர்வுக்கு என்ன செய்வது?
வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, உள்நாட்டு சந்தையை விரிவாக்குவது என்பதே ஆகும். மற்றபடி மேலே விவாதித்த எல்லா நடவடிக்கைகளுமே ஒப்பீட்ட அளவில் வேறுபட்ட பாதிப்புகளை உருவாக்குமே தவிர நிலைத்து நிற்கிற தீர்வுகளைத் தராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக