மறு கண்ணிலும் வெண்ணெய் அல்லது இரு கண்ணிலும் சுண்ணாம்பு -ஆதவன் தீட்சண்யா


...டபிள்யூ.டி.வைட்சரின் ‘பூஜ்ஜியத்திற்கு முன்னால் இலக்கமிடுதல்என்கிற கதையை நினைவுபடுத்தி இங்கு பேசிப் பார்ப்போம்.

‘‘பெண்கள் மனிதகுலத்தில் சரிபாதி. சிலநாடுகளில் ஆண்களை விடவும் பெண்கள் கூடுதலாகவே இருக்கின்றனர். மாறிய பாலினத்தவரின் விருப்பப்படி அவர்களையும் பெண்களோடு சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் கூடும். தங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வீதத்தில் சொத்துரிமையோ வாக்குரிமையோ அரசியல் பிரதிநிதித்துவமோ இல்லை என்பது குறித்துப் பெண்கள் வெளிப்படுத்திவரும் அதிருப்தி ஒரு கோபாவேசமாக உருத்திரளக் கூடும் என்று வைட்சர் யூகிக்கிறார் அல்லது விரும்புகிறார். எனவே பெண்கள் ஓட்டு பெண்களுக்கே என்கிற தீவிர முழக்கத்தோடு பெண்களுக்காக மட்டுமேயான கட்சி ஒன்றை உருவாக்கி அவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி எல்லாவற்றையும் நேர் செய்வதாக அந்தக் கதையில் குறிப்பிடுகிறார். சமூகத்தை வழி நடத்துவதில் புராதனக்காலம் தொட்டு பெண்களுக்குள்ள தலைமைப்பண்புகளை சுவைபடச் சொல்லிப்போகும் வைட்சர் அந்த நிலையைப் பெண்கள் மீட்டெடுத்துக் கொள்ளவேண்டும் என்று தூண்டிவிடவில்லை. ஆனால் கதை அதைத்தான் செய்தது. தங்களுக்கென தனிக்கட்சி ஒன்றை தொடங்கியாக வேண்டும் என்று வைட்சருக்கும் முன்பாகவே பெண்களில் பலரும் யோசித்திருக்கக்கூடும். ஆனால் இவர் எழுதிவிட்டார். இதெல்லாம் நடக்கிற விசயமா என்று எழுந்த கேள்விக்கு இது ஏன் நடக்கக் கூடாது என்று பதில் கேள்வி எழுப்பும் நிலையை அவரது கதை உருவாக்கிவிட்டது. உண்மையில் அப்படியொரு நிலை உருவாக விடமாட்டோம் என்று ஆணாதிக்கவாதிகள் ஒடுக்குமுறையை வன்மையாக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் விதமாகப் பெண்களின் போராட்டம் புதுப் பரிமாணத்துடன் வெளிப்படும். அல்லது, தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் பெண்களுக்குத் தோன்றுவதைத் தவிர்ப்பதற்காக அதிகாரங்களையும் உரிமைகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டாக வேண்டிய நிர்ப்பந்தம் ஆணாதிக்கவாதிகளுக்கு உருவாகும்...’’

- வைட்சர் என்று எழுத்தாளர் யாருமில்லை, இது மீசை என்பது வெறும் மயிர் என்கிற நாவலில் நான் எழுதியது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடங்களை ஒதுக்கும் சட்ட முன்வரைவு சட்டமாக்கப்படாமல் இருபதாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்திற்குள் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் அதன்மீதான ஓர் அழுத்தத்தை உருவாக்கும் விதமாக பெண்களும் பாலினச்சமத்துவச் செயற்பாட்டாளர்களும் வினையாற்றாமல் இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்தில் இவ்வாறு எழுதிப் பார்த்தேன். நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து நிறுவனங்களிலும் அதிகார மையங்களிலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சொத்திலும் கலைஇலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளிலும் பெண்கள் தமது எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது அதிகப்படியான கோரிக்கையல்ல. அவ்வகையில் 33% என்பதும்கூட பொருத்தமற்றதே. மிச்சமிருக்கும் 67% இடங்களில் பெண்கள் போட்டியிடலாமேயன்றி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பேதும் இல்லை என்பதாலும்இவ்வாறு எழுதினேன்.

இதைப் படித்த சில அன்பர்கள் எனது கருத்து விஷமத்தனமானது, பாலின அடிப்படையில் சமூகத்தில் பாகுபாட்டையும் பிளவையும் உருவாக்கக்கூடியது என்று குற்றம்சாட்டினர். இது உண்மையல்ல. சமூகம் ஏற்கனவே சாதியத்தாலும் ஆணாதிக்கத்தாலும் பிளவுண்டு கிடப்பதால்தான் இப்படி எழுதவேண்டியிருக்கிறது. சமூகத்தின் அனைத்து வெளிகளும் சாதியடுக்கின் மேலே இருப்பவர்களின் நலனுக்கும் ஆண்களின் நலனுக்கும் உகந்தவாறு பாகுபடுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்ணை ஆணுக்கு அடங்கியவளாக காட்டி பொதுவெளியை மறுத்ததன் மூலம் எடுத்தயெடுப்பில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சொத்துரிமையிலும் 50% போட்டியாளர்களை  பார்ப்பனீயம் கழித்துக்கட்டிவிட்டது என்பார் அண்ணல் அம்பேத்கர். ஆகவே இங்கு பெண் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது தற்செயலானதல்ல.

இங்குள்ள கட்சிகளில் பெரும்பாலானவை, சமூகத்தை பாழ்படுத்திவரும் சாதிய, ஆண்மையவாதக் கருத்தியலில் ஊறி நொதித்துக்கிடப்பதால் பெண்களுக்கான உரிமைகள் பாலினச்சமத்துவம் என்பதெல்லாம் அக்கட்சிகளின் நிகழ்ச்சிநிரலிலேயே இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் அக்கட்சிகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஆமாம், இருக்கிறார்கள். கொள்கை முடிவெடுக்கும் மட்டங்களில் அழுத்தம் செலுத்தி தமது கண்ணோட்டத்தை முன்வைக்கும் வலுவின்றி அடையாளப்பூர்வமாக இருக்கிறார்கள். பெண்களின் நலன்கள் மீதும் கவனம் குவிக்கும்படி தமது கட்சியை நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக கட்சி சொல்வதை பெண்களிடம் பரப்புகிறவராக குறுக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சிகளின் பொறுப்புகளையும் பதவிகளையும் பெண்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் பாரபட்சம் நிலவுகிறது. தங்களுக்கான பிரதிநிதித்துவம் தேவை என்று பெண்கள் கோருகிறபோது, உழைத்து மேலே வருகிறவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும் என்று சால்ஜாப்பு கூறிசாதுர்யமாக மறுக்கப்படுகிறது. பிரதிநிதித்துவம் என்று இடங்களை  ஒதுக்கிவிட்டால் தகுதியானவர்களை காலம் கொண்டுவந்து நிரப்பிவிடும் என்கிற புரிதலே இல்லை.

பெண்களுக்கும் சேர்த்து தாங்களே சிந்திப்பதாக கூறிக்கொள்ளும் ஆண்களின் சபைகளாக உள்ள இப்படியான கட்சிகள் பெண்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே கருதுகின்றன. பெண்களின் வாக்கு அவர்களது உரிமைகளை மறுக்கிற, அவர்களை ஒடுக்குகிற சக்திகளுக்கே வலுசேர்க்கப் பயன்படுகிறது. மாறாக அந்த வாக்குகளை பெண்களே தமக்காக திரட்டிக் கொண்டால் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா என்று சோதித்துப் பார்க்கும்படி தூண்டுவதற்காகத்தான் கதையிலாவது பெண்கள் தனிக்கட்சி தொடங்கி அதிகாரம் பெற்று  அசமத்துவத்தை நேர் செய்யட்டுமே என நான் எழுதிப் பார்த்தேன். செயற்திறன் கொண்ட பெண்களில் சிலரோ வளர்நிலைக்கு நகர்ந்து 2018ஆம் ஆண்டு முடியும் இத்தருவாயில் ‘தேசிய பெண்கள் கட்சியை புதுதில்லியில் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் கட்சியைத் தொடங்கியிருப்பவர்கள் எவரும் என் நாவலை வாசித்திருக்கப் போவதில்லை. அது அவசியமும் இல்லை. தொடரும் புறக்கணிப்பின் வலியை உணர்கிறவர்கள் தவிர்க்கவியலாமல் இவ்வாறான முடிவுக்குதான் வந்து சேர்வார்கள் என்பதற்கு இதுவொரு நிரூபணம்.

எங்க சாதி ஓட்டு உங்க சாதிக்கு இல்லை என்கிற ஆணவக்குரலுக்கும், எங்க சாதியின் ஓட்டுகூட எங்களுக்கு பயன்படாதா என்கிற ஆதங்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறவர்களால் பெண்களுக்கென கட்சி ஒன்று உருவாவதன் பின்னுள்ள உளவியலை புரிந்துகொள்ள முடியும்.பெண்களால் தொடங்கப்பட்ட, பெண்களால் தலைமை தாங்கப்படுகிற பல்வேறு கட்சிகளையும், பெண்கள் மட்டுமே அங்கம் வகிக்கிற சங்கங்கள், நிறுவனங்களையும் தமது நலனுக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளும் கயமை கொண்ட ஆணாதிக்கம், இந்தக் கட்சியையும் கூட உள்வாங்கிச் செரித்துக்கொள்ளக்கூடும். ஆனால், எல்லோருக்கும் பொதுவானவை என்று பீற்றிக்கொள்ளும் கட்சிகள் உண்மையில் அப்படி இல்லை என்கிற விமர்சனத்தின் ஒரு புள்ளியில் இப்படியொரு கட்சி உருவாகியுள்ளது. அதன் இலக்கு செயல்பாடுகள் தாக்கம் மீது தீர்ப்பு சொல்ல இப்போதே நாக்கை நீட்டுவது அவசியமற்றது. தாங்கள் தன்மதிப்புடனும், சமத்துவமாகவும் வாழத் தகுதியுடையவர்கள் என்கிற எளிய உண்மையின்கீழ் அணிதிரண்டு அதிகாரப்பகிர்வுக்கான பேரத்தை நடத்துவதற்கு பெண்கள் மேற்கொண்டுவரும் தொடர் முயற்சியில் இது பொருட்படுத்தத் தகுந்ததொரு கட்டம். பொருட்படுத்துவோம்.

புதிய தலைமுறை இதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக