ஞாயிறு, நவம்பர் 22

GIG தொழிலாளர்கள்: ஒரே ஆட்டக்காரரின் இரண்டு வெட்டுக்காய்கள் - ஆதவன் தீட்சண்யா

தற்காலிக ஒப்பந்தங்களின் மூலம் தொழிலாளர்களையும் அதிகாரிகளையும் பணியமர்த்திக்கொண்டு நிரந்தரமாக, எப்போதும் தொடர்ந்து தேவைப்படுகிற ஒரு வேலையை அல்லது சேவையைச் செய்கின்ற பல நிறுவனங்கள் இப்போது ராப்பகலாக இயங்கி வருகின்றன. உணவு விநியோகம், இணையவழிச் சந்தைப் பொருட்கள் விநியோகம், வாடகை வாகனங்களை இயக்குதல், தவணைகள் மற்றும் கட்டணங்களை உரிய காலத்தில் செலுத்துதல் தொடங்கி வங்கி, நுண்நிதி நிறுவனங்கள், காப்பீடு வரையாக பல துறைகளை உட்கவர்ந்து இயங்கும் இந்த நிறுவனங்களில் கோடிக்கணக்கான இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.   

வேலைநேரம், நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், பணியிடை ஓய்வு, ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, மருத்துவ உரிமைகள், கண்ணியமான பணியிடச்சூழல், காப்பீடுகள், பணிப்பாதுகாப்பு உள்ளிட்டு தொழிலாளர் நலன் சார்ந்து நடப்பிலிருக்கும் எவ்விதமான சட்டப் பாதுகாப்புமற்றவர்கள் இந்தத் தொழிலாளர்கள் /  ஊழியர்கள் /  அதிகாரிகள்.  இவர்களது பொறுப்புகள் அலங்காரமான பல்வேறு பெயர்களில் விளிக்கப்பட்டாலும் சாராம்சத்தில், இவர்கள் செய்யும் வேலைகள் நிரந்தரமானவை, ஆனால் இவர்கள் தற்காலிகமானவர்கள். பெருகிவரும் வேலையின்மைக் கொடுமையிலிருந்து தப்பித்து வாழ்க்கைத்தேவைகளை ஈடுகட்ட இந்தக் குறுகியகால வேலைகளை இளைஞர்கள் தேர்வுசெய்தாக வேண்டிய நிலையில் உள்ளனர். பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்னும் உபதேசத்துடன் ஒதுங்கிக்கொண்ட ஓர் அரசின் குடிமக்கள் வாழ்ந்தாக வேண்டுமென்னும் பெருந்தவிப்பில் இந்த வேலைகளைத் தெரிவு செய்கிறார்கள். இவர்களது உழைப்பையும் மக்களின் தேவைகளையும் இணைக்கும் நிறுவனங்கள் இருதரப்பையும் ஒருசேர சுரண்டிக்கொழுக்கின்றன. அமர்த்து (சுரண்டு) துரத்து என்கிற அடிப்படையில் இயங்கும் இந்த நிலை, வேலைவாய்ப்புச் சந்தையில் விரும்பிய நிறுவனத்திடம், விரும்பிய நேரத்தில், விரும்பும் அளவுக்கு உழைப்புச்சக்தியை விற்றுக்கொள்ளும் சுதந்திரம் கொண்ட இளைஞர் பட்டாளம் என்பதாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.  

இணையதளங்கள் மற்றும் செயலிகள் வழியாக   வாடிக்கையாளர்களை அணுகி தமது சேவையைப் பெற்றுக்கொள்ள இணங்கவைப்பது தொடங்கி, தாமாக முன்வந்து தொடர்புகொள்ளும் வாடிக்கையாளரின் நுகர்வுத்தேவையை நிறைவேற்றுவது வரை பல்வேறு அடுக்குகளாக நடைபெறும் சங்கிலிக்கோர்வையான இவ்வேலைகளில் இந்தத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கண்ணி, ஆனால் அவர்களை இணைக்கும் உறவுகளோ உணர்வுகளோ எதுவுமில்லை. ஒப்பந்தப்படியான குறுகிய பணிக்காலத்திலும் வேலையில் நீடிப்பதும் ஊதியம் பெறுவதும் ஊதிய உயர்வுக்கு நகர்வதும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகளை எட்டுவதைப் பொறுத்தே என்கிற சூக்குமக்கயிறு எல்லோரையும் ஆட்டுவிக்கிறது.  ஒரு தொழிலாளி ஓடியடையும் இலக்கினால் எய்யப்படும் ஆதாயத்தில் பெரும்பகுதி அவரை பணியமர்த்தியுள்ள நிறுவனத்தையும் அற்பசொற்பமான கொசுறு இவரையும் வந்தடைகிறது. அவர் தனது தின/ வார / மாத வருமானம் குறைகிற போது தன்னுடைய ஊக்கமின்மையும் உழைப்புச்சோம்பலுமே காரணமென்று தன்னைத்தானே நொந்துகொண்டு அந்த மாய இலக்கை நோக்கி அன்னந்தண்ணி ஆகாரமின்றி ஓடுகிறார். பற்றாக்குறையை ஈடுகட்ட ஒரே நேரத்தில் பல்வேறு செயலிகளில் பணியாற்றுவதும், ஒரு வேலைநாளை பல்வேறு துண்டுகளாக்கி வெவ்வேறு நிறுவனங்களுக்காக உழைப்புச்சக்தியை விற்பதும் இயல்பாக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில், செயலிகளின் கட்டளைகளால் சொடுக்கப்பட்டு நுகர்வாளர்களை நோக்கி ஓடும் தொழிலாளி தானும் ஒரு நுகர்வுப்பண்டமாக மாறிக்கொண்டிருப்பதை நின்று நிதானித்து உணர்வதற்கான அவகாசமற்றவராயிக்கிறார்.   

இவ்வாறான தொழிலாளர்களின் அவலவாழ்வினை நானறிய தமிழில் பதிவுசெய்திருப்பது முனைவர் அ.இருதயராஜ் எழுதிய “உணவு டெலிவரிக் கதைகள்” என்ற நூல். இப்போது தோழர் ராஜசங்கீதன் இயக்கியுள்ள கிக் என்ற குறும்படம் இந்தத் தொழிலாளர்களின் வேலைமுறை என்னும் ஓரிழையைப் பிரித்தெடுத்து நம் முகத்துக்கு நேரே காட்டும்போது அதன் இயங்குத்தன்மையின் விகாரம் கண்டு நம் மனம் அலறுகிறது.  

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான  கோடி ரூபாய்களை வரிச்சலுகை, வாராக்கடன், தள்ளுபடி என்று அரசுகள் தாமாக வாரிவழங்குகின்றன. ஆனால் தவிர்க்கமுடியாத சூழல்களில் கடன்தவணையைச் செலுத்த முடியாத - செலுத்திவிடும் பொறுப்புணர்வும் பரிதவிப்புமுள்ள தனிமனிதர்களிடம் அதனை வசூலிக்க கையாளப்படும் அணுகுமுறை மனிதத்தன்மையற்றது. கடனை வாங்கச்செய்வதற்கு நைச்சியமாகவும் நாசூக்காகவும் தொடர்ந்து நச்சரித்தும் மக்களை கடனாளியாக்கிவிடுகின்ற நிதி நிறுவனங்கள், அதனை வசூலிப்பதற்கு எத்தகைய உளவியல் முற்றுகையை நடத்தி நிலைகுலையச் செய்கின்றன என்கிற குரூரத்தின் சாட்சியமாயுள்ளது இப்படம். ஆனால் வெறும் பதிவு என்பதாக சுருங்கிவிடாமல் அதற்கப்பாலும் நகர்ந்து அதற்குள் இயங்கும் மனிதர்களின் உளவியலைப் பேசி கடனாளியும் வசூலிக்க வந்தவனும் ஒரே ஆட்டக்காரரின் இரண்டு வெட்டுக்காய்கள் என்று நம்மை உணரச் செய்கிறது ராஜசங்கீதனின் கலைமனம். 

அத்தக்கூலி, அப்ரண்டீஸ், ட்ரெய்னி, பிரீ ட்ரெய்னி, சுமங்கிலித்திட்டம் என நானாவிதப் பெயர்களில் உழைப்பாளிகளின் ரத்தம் குடித்தவர்கள் இப்போது மரு வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் வந்திருக்கிறார்கள். ஹோமோ டிஜிடல்களிள் உலகம், ஐந்தாம் தலைமுறை தொழிற்புரட்சிக்காலம் என்பதான அவர்களது ஆரவாரங்களின் பின்னே அப்பட்டமான சுரண்டலைத் தவிர வேறொரு வெங்காயமுமில்லை என்பதை போதனையாகவோ பிரச்சாரமாகவோ அல்லாமல் தனிமனிதவாழ்வின் அன்றாடத்திலிருந்து நமக்குக் காட்டுகிறது பத்து நிமிடங்களுக்கும் குறைவான இப்படம். நீங்களும் நானும் எந்தச் செயலிக்காக, யாருடைய அல்காரிதங்களுக்காக யாரை வக்கிரமான சொற்களால் வதைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லது வதைபடுகிறோம் என்று இப்படத்தின் உள்ளோட்டத்தில் எழும் கேள்வி ஆன்மிகம் தொடர்பானதல்ல, அரசியல் பொருளாதாரம் தொடர்பானது. அந்தக் கேள்வியைப் பின்தொடர்கிறவர்கள், நவநாகரிக உடையலங்காரத்துடன் கடனாளியைத் தேடிப்போய் அவரை உலகின் ஒட்டுமொத்த ஆபாசச்சொற்களாலும் தாக்கி வீழ்த்துகிறவராகவோ அல்லது அந்தத் தாக்குதலின் மூர்க்கம் தாளாமல் தன்மதிப்பிழந்து கதறும் கடனாளியாகவோ அல்லது இருவருமாகவோ  தாமும் இருப்பதைக் கண்டடைவார்களாக.

https://www.youtube.com/results?search_query=gig+rajasangeethan

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

GIG தொழிலாளர்கள்: ஒரே ஆட்டக்காரரின் இரண்டு வெட்டுக்காய்கள் - ஆதவன் தீட்சண்யா

த ற்காலிக ஒப்பந்தங்களின் மூலம் தொழிலாளர்களையும் அதிகாரிகளையும் பணியமர்த்திக்கொண்டு நிரந்தரமாக , எப்போதும் தொடர்ந்து தேவைப்படுகிற ஒரு வேலையை ...