சனி, ஜூன் 3

ஆளுநரின் ஆன்மிகப்பொய் அல்லது ஆன்மிகமே பொய் - ஆதவன் தீட்சண்யா


லகமே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த மே 1 அன்று முன்னெப்போதுமில்லாத வழக்கமாக மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்கள் உருவான நாளை ஆளுநர் மாளிகை கொண்டாடியிருக்கிறது. மற்ற மாநிலங்கள் உருவான தினங்களை ரவி இவ்வாறு  கொண்டாடுகிறாரா, தமிழ்நாடு அல்லது வேறு மாநிலங்கள் உருவான தினங்களை மற்ற மாநிலங்களின் ஆளுநர்கள் கொண்டாடுகிறார்களா என்கிற கேள்விகள் ஒருபுறமிருக்க தமிழ்நாடு ஆளுநரின் இந்தக் கொண்டாட்டத்திற்கு தேவை என்ன வந்தது?   

இந்நிகழ்வில் சாதியத்திற்கெதிராகவும் சமத்துவத்திற்கும் போராடிய மகாத்மா ஜோதிராவ் பூலே, நாட்டின் முதலாவது ஆசிரியை சாவித்திரிபாய், சமூகநீதியின் ஓரங்கமாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய சாகு மகராஜ், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உலகிற்கே ஒளிபாய்ச்சும் அண்ணல் அம்பேத்கர், சுதந்திரப் போராட்டத்தில் மராட்டியரின் பங்கு, மும்பையை தம்முழைப்பால் வளப்படுத்திக் கொண்டிருக்கும் தாராவி தமிழ்மக்கள் – பற்றியெல்லாம் ஆளுநர் பேசியிருந்தால் இந்நிகழ்வை நடத்தியதற்கான நியாயம் இருந்திருக்கும். ரவியோ “சத்ரபதி சிவாஜி தமிழ்நாட்டில் படையெடுத்தார். ஆனால், உண்மையாக அவா் ஆங்கிலேயரிடமிருந்து ஆன்மிகம், கலாசாரத்தை பாதுகாக்க படையெடுத்தார்” என்று பேசியுள்ளார். உண்மையில் சிவாஜி ஆங்கிலேயர்மீது படையெடுத்தாரா, ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் மீட்டெடுத்தாரா? 

1674 ஜூனில் நடந்த சிவாஜியின் முடிசூடும் விழாவை நேரில் பார்த்த டாக்டர் ஃபிரையர் “ராஜா, இந்து மரபுப்படி தராசுத்தட்டில் தங்கத்தால் நிறுக்கப்பட்டார். அவரது எடை சுமார் 16000 வராகன்கள். இத்துடன் மேலும் ஒரு இலட்சம் வராகன்கள் சேர்த்து அவரது நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருந்த பிராமணர்களுக்கு அவர் முடிசூட்டிக் கொண்ட மறுநாள் விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கிறார். 

1676ஆம் ஆண்டின் இறுதியில் மராட்டியத்திலிருந்து பெரும்படையுடன் கீழை கர்நாடகம் நோக்கி புறப்பட்டார் சிவாஜி. இதற்கான காரணம் பற்றி “சிவாஜி அன்ட் ஹிஸ் டைம்ஸ்” என்ற நூலில் ஜதுநாத் சர்கார் விரிவாக விவாதிக்கிறார்.  முடிசூடும் விழாவினால் சிவாஜியின் கருவூலம் பெருமளவு காலியாகியிருந்தது. அடுத்தடுத்த படையெடுப்புகள் செலவைத்தான் இழுத்துவிட்டனவேயன்றி, சொல்லிக்கொள்ளும்படியான வருவாயை ஈட்டித் தரவில்லை. ஏற்கனவே இரண்டுமுறை சூரத்தின் வளம் முழுவதையும் உறிஞ்சியெடுத்தாகிவிட்டது. (இந்தச் சூறையாடலின் கொடூரத்தை அருணன் ‘காலம்தோறும் பிராமணியம்’ நூலில் ‘சூரத் கொள்ளை’ என்ற தலைப்பில் பதைபதைக்க விவரித்துள்ளார்). அருகாமை நாடுகளிலும் இனி கொள்ளையடிக்க வளப்பமில்லை. எனவே செல்வவளம் கொழிக்கும் புதிய பகுதிகள் தேவையாயிருந்தது சிவாஜிக்கு. 

கீழை கர்நாடகம் என்பது தமிழ்நாட்டின் கிழக்கு கடலோரப்பகுதி வரை நீள்கிறது. இப்பெரும்பரப்பின் வளம், துறைமுகங்களில் நடக்கும் அன்னிய வர்த்தகம், கனிமச்சுரங்கங்கள், அரசுகளின் பொறாமைப்படத்தக்க ஆண்டு வருமானம், தங்கத்தை பூமியில் புதைத்துவைக்கும் கர்நாடகத்தவர்களின் வழக்கத்தால் கிடைக்கும் புதையல்கள், பெருஞ்சொத்துடைய கோவில்கள், வெள்ளாமை கொழிக்கும் வயல்கள்– இவையெல்லாம் சேர்ந்து தங்கபூமி என்று அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இப்பகுதி சிவாஜியை சுண்டியிழுத்தது. 

வழிநெடுக உள்ள ஆட்சியாளர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் சிவாஜியின் வருகை தூதுவர்கள் மூலம் முன்கூட்டியே தரப்பட்டது. சிவாஜியின் படை ஊருக்குள் புகுந்தால் என்ன கதியாகும் என்கிற அச்சம் பரவியிருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைத்தது. இடைவழியில், 1677 பிப்ரவரியில் ஹைதராபாத்தில் கோல்கொண்டா சுல்தானை சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டார் சிவாஜி. அரச மரியாதையுடனும் விழாக்கோலம் பூண்டு  கொண்டாட்டத்துடனும் சுல்தானால் வரவேற்கப்பட்ட சிவாஜி அவரது விருந்தினராக மார்ச் முற்பகுதிவரை – சுமார் ஒருமாதம் தங்கியிருந்தார். 

பிஜப்பூர் சுல்தானின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளைத் தாக்கி  கைப்பற்றினால் அதிலொரு பகுதியை கோல்கொண்டா சுல்தானுக்கு தருவதாக சிவாஜி வாக்குறுதியளித்தார். இதற்கான ராணுவச்செலவினங்களை ஈடுகட்ட நாளொன்றுக்கு 3000 ஹன் தொகை மானியம், ஆண்டுதோறும் அன்பளிப்பாக ஒரு இலட்சம் ஹன், மராட்டியத்தின் தூதுவருக்கு சுல்தானகத்தில் இடம், 5000 பேர்கொண்ட படை, ஆயுதங்கள் ஆகியவற்றை தருவதற்கு சுல்தான் சம்மதித்துள்ளார். அங்கிருந்த செல்வந்தர்களும் மக்களும் சிவாஜிக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கியுள்ளனர். 

எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலான ஆதாயங்களுடன் ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய சிவாஜிக்கு கர்நூலில் 5இலட்சம் ஹன் திறையாக கிடைத்துள்ளது. பின் நல்லமலா காடுகளூடாக பயணித்தவர், இந்துக்களுக்கு மிகப்புனிதமான நிவ்ரிடி சங்கமத்தில் (கிருஷ்ணா நதியுடன் பவனிஷா நதி கலக்குமிடம்) நீராடி வழிபட்டிருக்கிறார். படைகளை அனந்தப்பூருக்கு அனுப்பிவைத்துவிட்டு தென்னிந்தியாவின் மிகத்தொன்மையான சிவத்தலமான ஸ்ரீசைலத்திற்கு 1677 மார்ச் 24 சென்று ஒன்பது நாட்கள் தங்கியிருந்து சிவனை வழிபட்டிருக்கிறார். ‘கைலாஷ்த்வாரா – கைலாயத்தின் நுழைவாயில்’ என்றழைக்கப்படும் அப்பகுதியின் இயற்கையழகிலும் அங்கு தவழ்ந்த அமைதியிலும் மனம் தோய்ந்த சிவாஜி, தான் இறப்பதற்கு இதைவிடவும் புனிதமான இடம் வேறெங்கும் இருக்கமுடியாது என்றெண்ணி அங்கேயே தன் தலையை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக (நவகண்டம்) படைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருடன் இருந்த அமைச்சர்கள் அவர் இந்து உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை எடுத்துரைத்து தடுத்துவிட்டதால், அவர் அங்கு ஸ்ரீகங்கேஷா என்ற மடாலயத்தைக் கட்டி லட்சக்கணக்கான பார்ப்பனர்களுக்கு உணவளிக்க பெருந்தொகையையும் கொடுத்திருக்கிறார். ஒருவேளை இதைத்தான், இந்து உலகத்திற்கு ஆற்றவேண்டிய கடமை, ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் மீட்டெடுக்கும் செயல் என்கிறாரா ஆளுநர்? 

1677 ஏப்ரல் முதல்வாரத்தில் ஸ்ரீசைலத்திலிருந்து அனந்தப்பூர் சென்று அங்கிருந்த தன் படையுடன் நந்தியால் கடப்பா திருப்பதி காளஹஸ்தி வழியாக திறை வசூலித்தபடி மே முதல்வாரத்தில் சென்னைக்கு மேற்கே ஏழுமைல் தொலைவிலுள்ள பெட்டபாலம் என்கிற ஊரை அடைந்த சிவாஜி அங்கு முகாமிட்டிருக்கிறார். அங்கிருந்துகொண்டே, மே9 அன்று முன்னோட்டப்படையாக 5000 பேரடங்கிய குதிரைப்படையை காஞ்சிபுரம் வழியாக பீஜப்பூர் சுல்தானின் வசமிருந்த செஞ்சிக்கு அனுப்பியிருக்கிறார். பின்பு நேரில் சென்ற சிவாஜி, பீஜப்பூர் படைகளின் தளபதிகளை தன்பக்கம் இழுத்துக்கொண்டு எளிதாக செஞ்சியைக் கைப்பற்றினார். அதே உற்சாகத்துடன் மே 23ஆம் தேதி வேலூரை வந்தடைந்த சிவாஜி அங்கு பீஜப்பூர் சுல்தானின் கீழிருந்த கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார். (14 மாதங்களுக்குப் பிறகு வசமானது).    

புதிதாக கைப்பற்றிய பகுதிகளை தனக்கு விட்டுக்கொடுக்காமல் சிவாஜியே வைத்துக் கொண்டதை ஒப்பந்த மீறலாக கருதிய கோல்கொண்டா சுல்தான், சிவாஜிக்கு கொடுத்துவந்த பணம் உள்ளிட்ட உதவிகளை நிறுத்திக் கொண்டார். இதனால் ஏற்பட்ட பணமுடையைச் சமாளிக்க சென்னை, பழவேற்காடு பகுதிகளின் செல்வந்தர்களிடமும், ஆட்சியாளர்களிடமும் 2இலட்சம் ரூபாய் கடன் கேட்டு சிவாஜி கடிதங்களை அனுப்பினார். இவர்களில் யாரும் தப்பமுடியாதபடி சிவாஜியுடன் வந்தவர்கள் மிரட்டி பலவந்தமாக வசூல் செய்தனர். அதுவும் போதாமல் தவித்த சிவாஜியின் பார்வை, தஞ்சாவூர் பக்கம் திரும்பியது. தஞ்சாவூரை அப்போது ஆண்டு கொண்டிருந்தது வேறு யாருமல்ல, சிவாஜியின் சொந்த தம்பி - அவரது தந்தையின் இரண்டாம் தாரத்துக்குப் பிறந்த எகோஜி என்கிற வெங்கோஜி. 

பீஜப்பூர் சுல்தானின் தளபதியான எகோஜி, சிவாஜிக்கு முன்பே தமிழ்நாட்டிற்குள் வந்து, 1676ஆம் ஆண்டு நாயக்கர்களிடமிருந்து தஞ்சையை கைப்பற்றி இங்கு மராத்தியர் ஆட்சியை நிறுவியிருந்தார். “…தனது நிலையை வலுப்படுத்த எண்ணிய அவர் வடக்கிலுள்ள மராத்தியர்களையும் அந்தணர்களையும் பதவியில் அமர்த்தி நிர்வாகத்தை மாற்றியமைத்தார். விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. இப்புதிய எஜமானர்கள் நல்ல நிலங்களை தங்களுக்கு வைத்துக்கொண்டு தமிழ் விவசாயிகளை குத்தகையாளர் நிலைக்கு மாற்றினர்… எகோஜி விளைச்சலில் நான்கில் மூன்று பகுதியை வரியாக வசூலித்தார்; செலுத்தவேண்டிய தொகையை பணமாக வசூலித்து, வரிகளை அதிகரிக்க பொருள்களின் விலையை தன்னிச்சைப்படி உயர்த்தி, தனக்கென பொக்கிஷங்களை கோயில்களில் ஒதுக்கிவைத்தார்…”. இதுதான் எகோஜி ஆட்சியின் லட்சணம். 

தம்பியைச் சந்திக்க தஞ்சாவூர் வரும் வழியில் வாலிகண்டபுரம் ஆளுநரான ஷெர்கானைத் தோற்கடித்த சிவாஜி, கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமால்வாடியில் முகாமிட்டார். அங்கு பிரஞ்ச் தூதர் எம்.ஜெர்மைன் சிவாஜியுடன் மூன்றுநாட்கள் தங்கி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் (ஆனாலும் சிவாஜி படையின் கொள்ளையிலிருந்து பிரஞ்ச் பகுதிகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை). தஞ்சாவூரிலிருந்து வந்துகொண்டிருந்த தம்பியை திருமானூருக்குச் சென்று எதிர்கொண்டு வரவேற்றிருக்கிறார் சிவாஜி. அண்ணனும் தம்பியும் திருமால்வாடியில் எட்டுநாட்கள் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். தங்களது தந்தை பாகப்பிரிவினையை பாரபட்சமாக செய்து தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக மனத்தாங்கல் கொண்டிருந்த சிவாஜி, இப்போது தனக்குரிய பங்கை நேர்செய்து தரும்படி தம்பியிடம் கேட்டிருக்கிறார். பணம், நகை, குதிரைகள், படை, ஆளுகைப்பரப்பு அனைத்திலும் நான்கில் மூன்று பங்கினைக் கோரிய அண்ணனிடம் மறுத்துப் பேசினால் தன் கதி என்னவாகும் என்றுணர்ந்த தம்பி ஜூலை 23 அன்று இரவோடிரவாக கொள்ளிடம் தாண்டி தஞ்சைக்கு தப்பியோடிவிட்டார். ஆத்திரத்திமுற்ற சிவாஜி, கொள்ளிடத்தின் வடகரையில் இருந்த எகோஜியின் பகுதிகளைக் கைப்பற்றினார். 

1677 ஜூலை 27 அங்கிருந்து கிளம்பி திட்டக்குடியில் இடைத்தங்கலிட்டவர், படையினரை எலவனாசூர் மீது ஏவியுள்ளார். பட்டுத்துணிகள், சந்தனக்கட்டைகள், வாசனை திரவியங்கள், மாலத்தீவு தேங்காய்கள், கையுறைகள், கூர்வாட்கள் உள்ளிட்ட அன்பளிப்புகளுடன் வந்திருந்த தேவனாம்பட்டணம் டச்சு தலைமை அதிகாரியைச் சந்தித்துள்ளார். பின் அங்கிருந்து தன் பரிவாரத்தினருடன் விருத்தாச்சலம் சென்று ஆகஸ்ட் 1-3 வரை தங்கி சிவன் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். (ரவி சொல்லும் ஆன்மிகத் தேடல் தலைப்பில் இதை வரவு வைப்போம்). இதனூடே சிதம்பரமும் விருத்தாச்சலமும் அடுத்த சில வாரங்களில் பரங்கிப்பேட்டையும் (போர்டோ நோவா), அக்டோபரில் ஆரணியும் சிவாஜியின் வசமானதையடுத்து தென்னாற்காடு, வடாற்காடு முழுவதும் அவரது ஆளுகைக்குள் வந்தது. 

***

தமிழ்நாட்டில் சுல்தான்களின் ஆளுநர்களுடனும் சொந்தத் தம்பியுடனும் போரிட்ட சிவாஜி ஆங்கிலேயர்களிடமிருந்து ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க போரிட்ட வரலாற்றைப் பார்ப்போம். 

சிவாஜி சென்னைக்குள் வந்தார் என்பதை நேரடியாக குறிப்பிடும் ஆவணம் எதுவும் இல்லை. “…வழியில் அவர் மதராஸ் வழியாக கடந்து சென்றார்…” என்கிற குறிப்பு சுட்டும் காலகட்டம் 1677 மே. சென்னைக்கு அருகாமையில் சிவாஜி முகாமிட்டிருந்ததற்கு பலநூல்களிலும் ஆதாரங்கள் உள்ளன. (இங்கு ஓர் இடைத்தகவல்: சென்னையில் தம்பிசெட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு 1677 அக்டோபர் 3 அன்று சிவாஜி வந்து அம்மனை தரிசித்துச் சென்றதாக கோவிலில் ஒரு கல்பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்நாளில் இரண்டுநாட்கள் நடையில் சென்னையை எட்டும் தொலைவில் சிவாஜி இருந்திருக்கிறார்.)   

பெட்டபாலத்தில் தங்கியிருக்கையில் சென்னையிலிருந்த ஆங்கிலேயர் கவுன்சிலுக்கு சிவாஜி தனது தூதுவர்களை (மகத்ஜி பந்த்) இரண்டுமுறை அனுப்பிவைத்திருக்கிறார். “14 மே 1677, இன்று ஒரு அந்தணர்  மற்றும் வேறு இரண்டு பிரஜைகள் மூலம் சிவாஜி மன்னரிடமிருந்து சில கிளர்ச்சியூட்டும் கற்களையும் விஷத்தை முறிக்கும் மருந்துகளையும் கேட்டு ஒரு செய்தியும் கடிதமும் கிடைத்தன. நாங்கள் எங்கள் தூதர் மூலமாக எங்கள் தோட்டங்களில் கிடைக்கும் சில பழங்களோடு அவர் கேட்டதையும் ஒரு உள்நாட்டுக் கடிதத்துடன் அனுப்பத் தீர்மானித்துள்ளோம். அந்தண தூதருக்கு மூன்று கெஜம் அகன்ற துணியையும் கொஞ்சம் சந்தனக்கட்டையையும் அளிக்க முடிவெடுத்துள்ளோம். அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும் இந்தச் சிறிய காணிக்கைகளுக்காக பணம்பெறுவது சரியல்ல என்று கருதுகிறோம். அவர் எவ்வளவு பெரிய நபர் என்றும் அவர் மேன்மேலும் வளரவளர மதிப்புமிக்க கம்பனிக்கு அவரது நட்பு எவ்வளவு பொருளுடையதாக இருக்கும் என்பதையும் கருத்தில்கொண்டே இவ்வாறு முடிவுக்கு வந்தோம்” என்கிறது பிரிட்டிஷ் ஆவணமொன்று. சிவாஜிக்கு அனுப்பப்பட்ட  இக்காணிக்கைகளின் மதிப்பு அறுபது வராகன்கள். இவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்துடன் இதேவகைப் பொருள்களை மீண்டும் கேட்டு மே 25ஆம் தேதி சிவாஜி வேலூரிலிருந்து ஆட்களை அனுப்பியுள்ளார். 52 வராகன் மதிப்பில் ஆங்கிலேயர்கள் கொடுத்தனுப்பியுள்ளனர். 

தென்னாற்காட்டிலிருந்து 1677 செப்டம்பர் 22ஆம் தேதி வாணியம்பாடி வந்தடைந்த சிவாஜி அங்கிருந்தபடியே சென்னையிலிருந்த ஆங்கிலேய கவர்னருக்கு கடிதமொன்றை எழுதினார். “கர்நாடகப்பகுதியில் புதிதாக பல கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்ட திட்டமிட்டுள்ளேன். துப்பாக்கி, வெடிபொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளைக் கட்டுவது, சுரங்கங்களைத் தோண்டுவது, கற்சுவர்களை தகர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கான நிபுணத்துவம் வாய்ந்த ஆட்கள் உங்களிடமிருந்தால் 20-25 பேரை குறைந்தபட்சம் 10 அல்லது 5 பேரையாவது அனுப்புங்கள். அவர்களுக்கு நல்ல ஊதியத்தைக் கொடுத்து எனது கோட்டைகளில் தங்கவைத்து  கவனித்துக்கொள்கிறேன்”. நடுநிலை வகிக்க வேண்டிய வணிகர்களாகிய தங்களால் இக்கோரிக்கையை ஏற்கவியலாது என்று பணிவுடன் மறுத்து பதில் வந்திருக்கிறது. அதன்பிறகு சிவாஜி ஆங்கிலேயர்களிடம் எதையும் கேட்கவில்லை. 

சிவாஜிக்கு செஞ்சி மற்றும் வேலூரில் இரண்டு வலுவான அரண்மனைகள், (இவற்றின் ஆண்டு வருமானம் 550 ஆயிரம் பவுண்ட்கள்), 72 மலைகள், சமதளத்தில் 14 கோட்டைகள், வீரர்கள், குதிரைகள், பெரும் நிலப்பரப்பு சொந்தமாகியிருந்தன. ஆனால் நிலத்தைவிடவும் தங்கம்தான் சிவாஜியின் இலக்கு. இதற்காக இப்பகுதி எலும்புவரைக்கும் உரிக்கப்பட்டது என்று புலம்புகிறது ஒரு கடிதம். இவ்வளவு பெரும் ஆதாயங்களுடன் 1677 நவம்பரில் – சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு- தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து தனது சொந்த நாட்டை நோக்கிப் புறப்பட்ட சிவாஜி ஆங்கிலேயர்களுடன் எங்குமே போரிடவில்லை. ஒன்றிரண்டு கோவில்களுக்குப் போனதெல்லாம் ஆளுநர் சொல்வதுபோல ‘ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் மீட்கும்’ கணக்கில் வராது. 

சிவாஜியால் தமிழ்நாட்டில் விட்டுச்செல்லப்பட்ட அவரது மகன் புதிய சிவாஜியின் படைகள் “காஞ்சீவரத்தைச் சூறையாடி ஏறத்தாழ 500 பேர்களைக் கொன்று நகரத்தைப் பாழாக்கிவிட்டதாகவும், அங்கு குடியிருந்தவர்களை ஊரைவிட்டு ஓடச்செய்ததாகவும் அவர்கள் இங்கும் அங்குமாக சிதறி ஓடியதாகவும் செய்தி வந்தது… கொள்ளையடிப்பவர்களே சொத்துக்களை வைத்துக்கொள்ளலாம் என்று ஊக்குவித்திருப்பதாகவும்”. சிவாஜிகளிடமிருந்து பெற்ற இந்த ஊக்குவிப்பை சங்பரிவாரத்தினர் நடத்தும் கலவரங்களில் காணமுடிகிறது. கோவில்நகரமாம் காஞ்சியில் நடத்திய கொலையும் கொள்ளையும் ஆன்மிகத்தில் வருமா? 

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கெதிரான போரில் கொல்லப்பட்ட திப்புவை தேசத்துரோகி என்றும் ஆங்கிலேயர்களுடன் இணக்கம் பேணி காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சிவாஜியை தேசபக்தராகவும் காட்டுவதன் காரணம், சிவாஜி பார்ப்பனீயக் கருத்தியலுக்கு  அடிமையூழியம் செய்தார் என்பதுதான். சிவாஜியின் படையெடுப்பால் அழிவையும் கொள்ளையையும் தவிர தமிழ்நாடு கண்ட பலன் என்னவென்று ஆளுநர் சொல்வாரா? 

உதவிய நூல்கள்:

1.    பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள் - ஜெ.டால்பாய்ஸ் வீலர்

2.    தமிழக வரலாறு - கு.ராஜய்யன் 

3.    சிவாஜி அன்ட் ஹிஸ் டைம்ஸ் - ஜதுநாத் சர்கார்

 

நன்றி: செம்மலர், 2023 ஜூன் இதழ்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...