புதன், மே 31

ஆளுநரே, நீங்கள் எந்தளவுக்கு சனாதனவாதி? -ஆதவன் தீட்சண்யா

தானொரு சனாதனவாதி என்று கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்தளவுக்கு சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவராக இருக்கிறார்?

பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி 1916ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘சனாதன தர்மம்’ என்கிற நூலின்படி, சனாதனம் என்றால் நித்திய மதம். ஆரியர்களின் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதால் இம்மதம் ஆரிய மதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரியர்களின் முதல் குடும்பங்கள் இப்போது இந்தியா என்றழைக்கப்படும் நிலத்தின் வடக்குப்பகுதியில் குடியேறின. ஆரியர்கள் குடியேறியதால் ஆரிய வர்தம் என்றான இந்நிலப்பரப்பு, கிழக்குப் பெருங்கடலில் இருந்து மேற்குப் பெருங்கடல் வரை, இரண்டு மலைகளுக்கு இடையே (ஹிமவான் மற்றும் விந்திய) பரவியுள்ளது. 

-இதன்படி, சனாதனம் ஆரியவர்தத்தில், ஆரியர்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகக்கூடியது. விந்திய மலைத்தொடருக்கு அப்பாலுள்ள கேரளத்திற்கும் இப்போது தமிழ்நாட்டிற்கும் வந்திருப்பதன் மூலம் ஆளுநர் ரவி, சனாதனத்தின் எல்லையை மீறிய குற்றத்தைச் செய்திருப்பதுடன், சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழ்நாடுதான் என்று பொய்யுமுரைக்கிறார்.  

சனாதனத்தை நித்திய மதம் என்கின்றனர். அந்தப் பெயர்கூட அநித்தியமாகி பின்னாளில் இந்துமதம் என மாறிப்போனது. சனாதனம் என்பதை ஒரு கோட்டையாகவோ குட்டிச்சுவராகவோ உருவகப்படுத்திக்கொண்டோமானல் அதன் அடித்தளம் ஸ்ருதி. அதன் நான்குச்சுவர்கள் ஸ்மிருதிகள். நான்கு வேதங்களிலிருந்து தேவர்களால் சொல்லப்பட்டு ஞானிகளாலும் ரிஷிகளாலும் கேட்டறியப்பட்டது ஸ்ருதி,. இவ்வாறு கேட்டறிந்து நினைவில் வைத்து சொல்லப்பட்டவை ஸ்மிருதிகள். தேவர்கள் எங்கிருந்து என்ன மொழியில் எதைச் சொன்னார்கள், ரிஷிகளும் ஞானிகளும் அதை எங்கிருந்து கேட்டு என்னவாக விளங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு என்ன மொழியில் போதித்தார்கள், போதனையின் மொழியும் பொருளும் கேட்டுக்கொண்டவர்களுக்கு புரிந்தனவா என்கிற கேள்விகள் ரவிகளுக்கு தேவைப்படுவதில்லை. ஏனெனில் கேள்விகள் பகுத்தறிவுடன் தொடர்புடையவை. சரி அந்தத் தேவர்கள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று கேட்டால் அதற்கு பதிலில்லை. ‘அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லீறாதிய’ என்கிற கதைதான். 

ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்கள், நான்கு ரிஷிகளால் எழுதப்பட்ட நான்கு ஸ்மிருதிகள் (மநு ஸ்மிருதி, யாக்ஞவல்லிய ஸ்மிருதி, ஷங்க லிகிதா ஸ்மிருதி, பராஸர ஸ்மிருதி), இரண்டு இதிகாசங்கள், வேதங்களைப் படிக்க முடியாதவர்களுக்காக/ கூடாதவர்களுக்காக(?) புனைந்துரைக்கப்பட்ட 18 புராணங்கள் ஆகியவற்றில் தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்து சொல்லப்படும் சட்டங்கள், ஒழுங்குகள், மதிப்பீடுகள் ஆகியவற்றை பின்பற்றி வாழ்வதுதான் சனாதன தர்மத்தின்படியான வாழ்க்கையாகும். இந்தச் சனாதன தர்மத்திற்கு எதிராக வாழ்வதற்கு வரலாறு நெடுகிலும் நடந்த போராட்டங்களின் ஊடாகத்தான் சமூகத்தின் இன்றைய எல்லா முன்னேற்றங்களும் சாதனைகளும் எய்தப்பட்டன. இதன் தொடர்ச்சியில்தான் ஆர்.என்.ரவியால் ஆட்சிப்பணி அதிகாரியாகவும் ஆளுநராகவும் ஆக முடிந்திருக்கிறது. ஆனால் இந்த நாடு சனாதனத்தாலும் ரிஷிகளாலும்தான் கட்டியெழுப்பப்பட்டது என்று உண்மைக்கு மாறாக கதையளக்கிறார். 

சனாதன தர்மம் ஆரியச்சமூகத்தை நான்கு வர்ணங்களாக பிரித்தது. இந்த வர்ணங்கள் ஆரியப்பெண்களுக்குக் கிடையாது. அவர்கள் திருமணத்திற்கு முன் தகப்பனின் வர்ணத்தையும் திருமணத்திற்குப் பிறகு கணவனின் வர்ணத்தையும், கணவனுக்குப் பிறகு மகனின் வர்ணத்தையும் சேர்ந்தவர்கள். படிநிலையான இந்த வர்ணப்பிரிவினை அந்தந்த வர்ணத்திற்கென வகுத்துள்ள வேலைகளைத்தான் செய்யவேண்டும் என்கிற நிலை இப்போதும் நீடித்திருந்திருந்தால் ஆர்.என்.ரவி என்ன படித்திருப்பார், என்ன வேலை செய்து கொண்டிருந்திருப்பார்? 

ஆரியச்சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்த சனாதனம், தனிமனித வாழ்க்கையை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு ஆஸ்ரமங்களாகப் பிரித்தது. ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வேலைப்பரிவினை செய்யப்பட்டுள்ளது. எனவே யாரொருவரும் எந்தக் கட்டத்தையும் இன்பத்தையும் விலக்கிச்செல்லக்கூடாது என்கிறது. 

ஆஸ்ரமத்தின் முதலாவது கட்டமான பிரம்மச்சரிய காலத்தில் உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து இருபிறப்பாளராவது அவசியம். இந்த உபநயனச் சடங்கினை பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமேயானதாக ஆக்கியதன் மூலம் பெண்களும் இதர வர்ணத்தவரும் கல்வி பெறுவதை சனாதனம் தடுத்துள்ளதை ரவியால் மறுக்கமுடியுமா? "வேதங்களையோ, இரண்டு வேதங்களையோ, ஒரு வேதத்தையோ முறைப்படி, மீறாமல் படித்தல் பிரம்மச்சரியம்” என்கிறது சனாதனம். இதன்படி, வேதங்களைத் தவிர மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், என்டயர் பொலிடிகல் சயின்ஸ் போன்ற வேறெதையும் படிக்கக்கூடாது; ஐஐடி, ஐஐஎம், மருத்துவக்கல்லூரி போன்றவற்றிலிருந்து வெளியேறுங்கள் என்று சொல்லிப் பாருங்களேன் ரவி!. 

“மாணவர் மது, இறைச்சி, வாசனை திரவியங்கள், மாலைகள், சுவையான - காரமான உணவுகள், பெண்கள், அமிலங்கள் ஆகிய உணர்ச்சிகளைக் காயப்படுத்தும் விசயங்களைத் தவிர்க்கட்டும்” என்கிற உபதேசத்தில் பெண்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை ரவி ஏற்கிறாரா? மாணவர்கள் தவிர்க்கவேண்டிய பட்டியலில் காமம், கோபம்,  பேராசை ஆகியவற்றுடன் நடனம், பாடல், இசைக்கருவிகளை வாசித்தல் போன்றவற்றையும் சேர்க்கிறது சனாதனம். எனில், இசை/ நடன/ நாடக/ திரை/ ஓவிய/ நுண்கலைப்பள்ளிகளை மூடிவிடலாமா ரவி? “வதந்திகள், அவதூறு, பொய்யிலிருந்து விலகியிருத்தல்” என்னும் சனாதனத்திற்கு விசுவாசமாக இருப்பதாக இருந்தால் முதலில் மாணவர் அமைப்பான ஏபிவிபியை மட்டுமல்ல ஒட்டுமொத்த சங்பரிவார அமைப்புகளையும் கலைக்க வேண்டியிருக்கும். ரவியேகூட பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். 

***

நான்கு ஆஸ்ரமங்களில் மற்ற மூன்றுக்கும் ஆதாரம் இரண்டாவதான இல்லற வாழ்வுதான் (கிருகஸ்தம்). எல்லா உயிரினங்களும் காற்றின் ஆதரவில் வாழ்வதுபோல, மற்ற ஆஸ்ரமத்தார் அனைவரும் குடும்பஸ்தர்களின் ஆதரவில்தான் வாழ்கின்றனர். அவர் மற்ற மூன்றையும் உண்மையாக ஆதரிக்கிறார். அனைத்து நீரோடைகளும் ஆறுகளும் ஓய்வெடுக்க கடல் நோக்கிப் பாய்வதுபோல், அனைத்து ஆஸிரமத்தாரும் ஓய்வெடுக்க இவர்களை நோக்கியே ஓடுகின்றனர்… தேவர்களை வழிபடுதல், கல்வி, தாங்கள் இருந்ததைப் போல ஒரு குடும்பத்தை வளர்ப்பதன் மூலமும் புதிய வாழ்க்கைக்கு உதவுவதன் மூலமும் பித்ருகளுக்குரிய கடனை திருப்பிச் செலுத்தும் கடமைகளிலிருந்து விலகக்கூடாது. இந்தக் கடமைகளின் கடுமையான சுமையைத் தாங்குங்கள் என்கிறது சனாதனம்.  வீட்டை விட்டு ஓடுபவர்களின் வேலை பாவத்தில் விழுகிறது. துறவு வாழ்க்கை நடத்துவதற்காக, உரிய காலத்திற்கு முன்பே இல்லற வாழ்விலிருந்து வெளியேறி காடுகளுக்குச் செல்லும் இளைஞர்கள் மீது பரிதாபப்பட்ட இந்திரன் ஒரு தங்கப்பறவையாக வடிவெடுத்து வந்து "இல்வாழ்வைப் பின்தொடருங்கள்” என்று வழிகாட்டியுள்ளார். ஆஸ்ரமங்கள்  அனைத்திலும் இல்லறத்தாரே உயர்ந்தவர் என்கிறது வேதம். 

ஏழைகளுக்கு உதவிய பிறகு எஞ்சிய உணவை உண்பதே உண்மையாக உண்பதாகும். தான் மட்டும் காளான் இறக்குமதி செய்து உண்பதெல்லாம் சனாதனத்தில் வராது. இல்லற வாழ்வைத் துறந்தவர்கள், பாதியில் கைவிட்டு ஓடியவர்கள் குறித்து சனாதனியான ரவியின் நிலைப்பாடு என்ன? இல்லற வாழ்வை மேற்கொள்ளாத மடாதிபதிகள், பீடாதிபதிகள், லோககுருக்கள், லோக்கல் குருக்களை சனாதன விரோதிகள் என்று எப்போது அறிவிக்கப்போகிறீர் ரவி? துறவொழுக்கத்தை கேலிக்குள்ளாக்கும்விதமாக ஆடம்பரத்திலும் சட்டவிரோதச் செயல்களிலும் திளைக்கும் கார்ப்பரேட் சாமியார்களின் நிகழ்வுகளில் பங்கெடுக்கும் தலைவர்களை ரவி கண்டிப்பாரா? வாழ்வின் ஒரு கட்டத்தைக் கடந்தவர்கள் முந்தையக் கட்டத்தை திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிறது சனாதனம். ஆனால் வரிசைக்கிரமமாக அல்லாமல் எடுத்தயெடுப்பில் நேரடியாக தட்கல் முறையில் சந்நியாசம் போய்விட்டு பின்னர் கிருகஸ்த நிலையை ஏக்கத்துடன் திரும்பிப்பார்த்து ரகசிய கேமராவில் சிக்கிக்கொண்டவர்கள், மடத்தை விட்டு வெளியேறி மீண்டும் இழுத்துவரப்பட்டவர்கள் சனாதனத்துக்கு ஏற்படுத்திய இழுக்கு பற்றி ரவி வாய்திறப்பாரா? 

*** 

இல்வாழ்வில் ஈடுபட்டுள்ளவர் தனது கடமைகளின் முழுச்சுமையையும் தன் மகன்களால் சுமக்க முடிவதைக் காணும்போது, மூப்பின் அறிகுறிகள் தோன்றும் போது, தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் தன்னைச் சுற்றி வருவதைக் காணும்போது, அவரும் அவரது மனைவியும் வீட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து, சுறுசுறுப்பான  உலகியல் வாழ்க்கையிலிருந்து விலகவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணரவேண்டும். தத்துவார்த்த நூல்களைப் படிப்பதற்காகவும், பிறருக்காக தியாகம் செய்யவும், நல்வழிப்படுத்தவும் கொடுக்கப்பட்ட அமைதியான, சற்றே ஒதுங்கிய வாழ்க்கையே மூன்றாவது ஆஸிரமமான வானப்ரஸ்தம்.  இந்த ஒரு விசயத்திலாவது சனாதன தர்மத்தை ஏற்று ரவி, மோடி, அமித்ஷா, மோகன் பகவத் போன்றவர்கள் அரசியலிலிருந்தும் பதவிகளிலிருந்தும் ஒதுங்கி காடுகளுக்குச் சென்று தவவாழ்வு மேற்கொண்டு சனாதனத்தில் தமக்குள்ள பற்றினை நிரூபிப்பார்களா? ஒருவேளை காடுகளுக்குப் போய் பழங்குடிகளுக்கு தொல்லை தரவேண்டாம் என்கிற நல்லெண்ணம் உதிக்குமாயின் காசி, ராமேஸ்வரம், கைலாயம் என்று எங்காவது ஆன்மிகப்பயணம் மேற்கொள்வது அவர்களது வீட்டுக்கு எப்படியாயினும், நாட்டுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் செயலாக அமையும். (அதற்குள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு விலகல் கடிதம் எழுதுகிறீர்கள் ரவி? கொஞ்சம் பொறுங்கள், நான் சனாதனத்தின் அத்தனை விசயங்களையும் பேசப்போவதில்லை, கட்டுரை முடியப்போகிறது). 

இறுதியாக, தனது தோலில் சுருக்கத்தையும், தலையில் நரையின் வெண்மையையும், குடும்பம் அடுத்தடுத்த சந்ததியினரால் நிறைந்திருப்பதையும் காணும் ஒருவர் அனைத்து பந்தங்களையும் துறந்து செல்போன், கேமரா எதுவுமின்றி காட்டிற்குச் சென்று தியானத்திலும் வழிபாட்டிலும் தனது கடைசி நாட்களைக் கழிக்கவேண்டும் என்கிறது சனாதனம். எப்போது கிளம்பப் போகிறீர்கள் ரவி?

நன்றி: 

தீக்கதிர் 2023 மே 7

விடுதலை 2023 மே 9


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...