இடி இறங்குவதற்கு முன்பிருந்த எங்கள் பூர்வீக வீடு - ஆதவன் தீட்சண்யா

தாத்தன் சொத்தில்
அப்பனுக்கு பாகமாகிப் பிரிந்த இங்கேதான்
ஏழுபேரையும் பெற்றெடுத்தாள்
எங்கள் தாய்

பூலாப்பூவும் ஆவாரங்கொத்தும்
வேப்பங்குழையோடு பண்ணைப்பூ சேர்த்து
நாலுமூலைத் தண்டையிலும் காப்புக்கட்டு சொருகினால்
அடுத்தப் பொங்கல்வரை அசைந்தாடும்
கிரீடத்தில் இறகுபோல

மாடக்குழிக்கு நேர்மேல்
சிம்னியின் கரிமண்டும் சுவற்றில்
பெயரெழுதும் சண்டையில் தினம் கெலிப்பான் தம்பி

விலக்குநாட்களில்
பெண்டுகள் ஒடுங்கவும்
கயிற்றுக்கட்டிலின் மீது இருமியே
தன் கடைசிநாட்களை பாட்டி கழிக்கவும்
பாந்தப்பட்டதாயிருந்தது வெளித்தாவாரம்

கோம்பைச்சுவற்று தூலத்திலிருந்து
எமபாணமாய் இறங்கிய கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடி
கால்களை அகட்டிக்கொண்டு கதறிய மூத்த அக்காளுக்கு
பனிக்குடம் உடைந்தும் தலைதிரும்பாமல்
செத்துப்பிறந்தது தலைச்சன்பிள்ளை

கிணறு சுண்டி தரை கொதித்த நாளில்
நடுவீட்டிலிருந்த குதிர்களைப் பெயர்த்து
தெருவில் போட்டுடைத்த பின்பு
அட்டிலிலும்
அடுக்களையிலும்
உருட்டி விளையாடிய எலிகள்
பின்னொருபோதும் திரும்பவில்லை எங்கள் வீட்டுக்குள்

உதிர்ந்த காரைக்குள் உருக்கொண்ட சித்திரமாய்
இப்படியான நினைவுகளாகி எஞ்சியிருக்கும்
எங்கள் பூர்வீக வீடு
இடி இறங்குவதற்கு முன்பும்
அப்படியொன்றும்
பிரமாதமாய் இருந்திருக்கவில்லை
இன்றில்லையாயினும்
இற்று விழுந்து நிர்மூலமாகியிருக்கும் நாளை

அதிகபட்சம்
அடுத்த மழைமோடத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக