சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துவிட்ட ஒருவரது கணினியிலிருந்து
அவரது மகள் எடுத்தனுப்பிய பதிவு இது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது பெயரும் அவரது
தந்தையார் பெயரும் மறைக்கப்பட்டுள்ளன. அவரது ஒப்புதலோடு உள்ளது உள்ளவாறே இங்கு வெளியிடப்படும்
இப்பதிவில், அடைப்புக் குறிக்குள் இடம் பெற்றுள்ள சில குறிப்புகள் மேலதிக விளக்கத்திற்காக
என்னால் எழுதப்பட்டவை.
கருப்பு கருணா (1963-2021) எனக்கு முகநூல் நண்பர். ஒருநாள் அவர் ‘லாக் டவுன் நைட்ஸ்: ஆதவன் தீட்சண்யா எழுதப்போகும் அடுத்த நாவல்’ என்று பதிவிட்டிருந்தார். ‘மீசை என்பது வெறும் மயிர்’ - ஒரு மொழிபெயர்ப்பு நூலா அல்லது அவரது நேரடி புதினமா என்று பிரித்தறியவியலாத குழப்பமே இன்னும் தீராத நிலையில் ஆதவனின் அடுத்த நூல் நாவல்தான் என்று முன்கூட்டியே தெரிந்து விட்டது நல்லதுதான்.
ஆதவனுடன் நேரடி அறிமுகமில்லை. ஒன்றிரண்டு இலக்கியக்கூட்டங்களில் ஒன்றாக பங்கேற்றிருந்த போதும்கூட பரஸ்பரம் அறிமுகமாகிக் கொள்ளாமலே இருந்திருக்கிறோம். தொடர்பெண்ணை தேடிப்பிடித்து அவரை அழைத்ததும் ‘சொல்லுங்க பேராசிரியர், எப்படி இருக்கீங்க?’ என்றார். ‘என் நம்பர் எப்படி உங்கக்கிட்ட!’ என்றதும் ‘புதுவிசை (நாங்கள் நடத்திய கலாச்சாரக் காலாண்டிதழ். 48 இதழ்களுக்குப் பிறகு வெளிவராமல் உறைநிலைக்குப் போய்விட்டது) தொடர்பா முன்பொரு முறை பேசியிருக்கீங்களே’ என்றார். இயல்பாக நீண்ட அந்த உரையாடலினூடாக ‘லாக் டவுன் நைட்ஸ் நாவல் வேலை எப்படி சார் போகுது?’ என்றேன். அபாரமான நகைச்சுவையைக் கேட்டவர் போல சிரித்த அவர், ‘நீங்களும் நம்பிட்டீங்களா’ எனக் கேட்டார். அப்படியொரு திட்டமே தனக்கில்லை என்றும் தன்னை எழுதத் தூண்டுவதற்காக கருணா கிளப்பிவிட்ட புரளி அது என்றும் கூறிய அவர், “அப்படியொரு நாவலை நீங்கள் ஏன் எழுதக்கூடாது?” என்று என்னிடம் கேட்டபோது நான் அதிர்ந்து போனேன். கல்விப்புலத்திற்குள் புழங்கும் ஆங்கில தனிச்சுற்று இதழ்கள் சிலவற்றில் ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்போது எழுதும் அனுபவம் எனக்கிருந்தாலும் புனைவாக இதுவரை ஒருவரிகூட எழுதியிருக்காத என்னிடம் அவர் இப்படி கேட்டது ஒருவேளை கேலிக்காக இருக்குமோ என்றுகூட தோன்றியது. ஆனால் அதன்பிறகான சில உரையாடல்களிலும் அவர் என்னிடம் புனைவெழுத்தின் சாத்தியங்கள் பற்றியே தீவிரமாக பேசிப்பேசி உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். விதையைப் போட்டுவிட்டாலே அது முளைத்துவிடுமா? அதற்கியைந்த ஒரு சூழல் தேவைதானே?
நேரடித்தன்மையுள்ள கட்டுரைகளால் உண்டான இன்னல்கள் பலவற்றை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த எனக்கு எழுதுவதையே நிறுத்திக்கொள்ளும் எண்ணம்தான் இருந்ததே தவிர புனைவுக்குள் மறைந்தெழுதுவது பற்றியெல்லாம் நான் யோசிக்கவேயில்லை. இவ்வாறு சொல்வதால் என்னை பயந்தாங்கொள்ளி என்று சிலர் ஏளனமாக நினைக்கக்கூடும். அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமையா மேதமையா என்றால் நான் பேதமை என்பேன். என் அச்சம் உயிர் சம்பந்தப்பட்டதா அல்லது செய்யவேண்டிய வேலைகளை நிறுத்துகிறோமே என்கிற கவலை பற்றியதா என்று திட்டவட்டமாக எந்த முடிவுக்கும் என்னால் வர முடியவில்லை. ஆனால் அச்சவுணர்வினால் சமநிலை குலைந்திருக்கிறேன் என்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
**
இன்னல்கள் என்றேனே- அந்த அச்சுறுத்தல்கள், அவதூறுகள், வசவுகள் எல்லாம் 2018 ஜனவரி 29ஆம் நாள் நடந்த பெங்களூரு டவுன் ஹாலில் நடந்த கெளரி லங்கேஷின் பிறந்தநாள் ஒன்றுகூடல் நிகழ்விலிருந்து ஒரு புதிய கட்டத்தை எட்டியது என்பது எனது அனுமானம்.
பிற்பகல் 2மணிக்குதான் நிகழ்ச்சி தொடங்கவிருந்தது. ஆனால் அதற்கும் முன்பாகவே மனிதவுரிமை அமைப்பினர், கௌரியைப் பின்தொடரும் ஊடகவியலாளர்கள், மாணவர்கள், தொழிற்சங்கத்தினர், மாதர் அமைப்பினர், கலைஇலக்கியவாதிகள், களச் செயற்பாட்டாளர்கள் என மக்கள் அரங்கை நிரப்பியிருந்தார்கள். உரியநேரத்திற்கு வந்தவர்கள் இருக்கைகளின்றி நடைபாதையிலும் ஓரங்களிலும் நெருக்கியடித்து நிற்கத் தொடங்கினார்கள். தளும்பும் உணர்வுகளால் திரண்டிருந்த அவர்களுக்கு இந்த அசௌகரியங்கள் ஒரு பொருட்டல்ல. கெளரி லங்கேஷ் என்கிற கருத்துரிமைப் போராளி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு வருகிற அவரது இந்த முதலாவது பிறந்தநாள் நிகழ்வில் பங்கெடுத்து ‘நானே கெளரி, நாம் ஒவ்வொருவரும் கெளரி’ என்கிற முழக்கத்தில் தம் குரலையும் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக அவர்கள் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்.
டீஸ்டா செடால்வட், ஹெச்.எஸ்.துரைசாமி, கெளரியின் தத்துவார்த்தக் குழந்தைகள் என்று செல்லமாக விளிக்கப்படுகிற ஜிக்னேஷ் மேவானி, கன்னய்யா குமார், ஷீலா ரசீத், உமர் காலித், பிரகாஷ் ராஜ், மருத்துவர் வாசு என்பதான உரையாளர்களின் கலவை இந்திய அரசியல்களத்தின் புதிய நிறக்கோலம் ஒன்றின் முன்மாதிரி போலிருந்தது. அவர்களின் ஒவ்வொரு சொல்லும் நமக்கு பதற்றத்தோடு உணர்த்தியது ஒரே விசயத்தைத்தான்- நாம் முன்னெப்போதுமில்லாத ஓர் அசாதாரணமான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
தோற்றத்திலும் சாராம்சத்திலும் மிகவும் உணர்வுபூர்வமானதாக அமைந்திருந்த அந்த நிகழ்வின் தொடர்ச்சியில் முனைவர் பொன்னமரனும், எனது கல்லூரி காலத்துத் தோழியும் இப்போது ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவு முதன்மை ஆசிரியருமான அன்னமும் அடுத்த வாரமே ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது அமர்வுதான் கடைசி. ‘நால்வரை கடந்துவரும் தோட்டா’ என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை உரைக்குறிப்பாக வைத்துக்கொண்டு பேசி முடிக்கும்போது மணி எட்டாகி விட்டிருந்தது.
எனது உரையின் மீதான கேள்விகள் சிலவற்றுக்கு நான் இன்னும்கூட பொறுப்பாகவும் நட்பான தொனியிலும் உணர்ச்சிவயப்படாமலும் பதிலளித்திருக்க வேண்டும் என்று மேடையை விட்டு இறங்கிய பிறகு தோன்றியது. கௌரியாக இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பார். எதுவொன்றை பற்றியுமான கேள்விகள்தான் நம்மை குறிப்பிட்ட அவ்விசயம் குறித்து மேலதிகமாக யோசிக்கத் தூண்டுகிறது அல்லது நம் புரிதலை சரிபார்த்துக்கொள்ள உதவுகிறது. ஆகவே கேள்விகளை நாம் வரவேற்க வேண்டும். கேள்வி எழாத இடத்தில் கேள்வி கேட்பதற்கான தூண்டுதலை உருவாக்கவேண்டும் என்பார் அவர். எந்தவொரு சந்திப்பிலும் உரையாடலிலும் எழுப்பப்படும் கேள்விகளை அவர் எதிர்கொள்ளும் விதம் அலாதியானது. தன் கருத்தை மேலும் ஐயந்திரிபற விளக்குவதற்கு கிடைத்த நல்வாய்ப்பாக கேள்விகளை அவர் கையாளும் லாவகத்தையும் அவர் குறித்தான இன்னபிற விசயங்களையும் நினைவுகூர்ந்தபடி சாப்பாட்டுக்கூடத்தில் பத்து மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். நண்பர்கள் எல்லோருக்கும் பேசிக்கொள்ள அவ்வளவிருந்தது. அன்னம், ஃபெரைரா போன்ற உள்ளூர் நண்பர்கள் தங்களுடன் தங்கி உரையாடிவிட்டு அதிகாலையில் ஊருக்குச் செல்லுமாறு விடுத்த வேண்டுகோளை சினேகமாக மறுத்துவிட்டு காரை கிளப்பினேன். மிதமான வேகத்தில் போனாலும்கூட அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் வீடு. (தனது ஊர் பற்றிய விவரம் எதையும் அவர் குறிப்பிடவில்லை. எனினும் சொல்லும் தூரத்தைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதி அல்லது பெங்களூருவின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடும்)
இரவென்பதால் சாலையில் அப்படியொன்றும் நெரிசல் இல்லை. பெரும்பாலும் லாரிகள் தான், மற்றபடி வாகனங்கள் குறைந்திருந்தன. சாலையோர இராச்சாப்பாட்டுக் கடைகளும்கூட ஒன்றிரண்டைத்தவிர மற்றவை மூடப்பட்டுக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. மேம்பாலங்களினடியில் அந்நேரத்திலும் யாரோ அடுப்புமூட்டி சமைத்துக் கொண்டிருந்தார்கள். புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கக்கூடும். கடைசிநேர உட்கொள்ளலுக்கும் கொள்முதலுக்குமாக குடிவிரும்பிகள் மதுவிடுதிகளுக்குள் வேகவேகமாக போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
நகர எல்லையைத் தாண்டியதும் பராக்கு பார்க்க எதுவுமில்லாமல் சாலை மட்டுமே நீண்டுக் கிடந்தது. கசிந்து தொடும் ஈரம் போன்று ஒலித்த சமீரா தஃபீக், ஷப்னம் விர்மானி பாடல்கள் அந்தப்பயணம் விரைவில் முடிந்துவிடாமல் நீளவேண்டும் என்கிற விருப்பத்தைக் கிளறின. ஆகவே, மெதுவாகப் போனால் போதும் என்பதுபோல வேகத்தைக் குறைத்து எனக்கு பின்னால் வந்துகொண்டிருந்த வண்டிகள் போகட்டுமென வழிவிட்டேன். ஆனால் என்னைத் தாண்டிப் போவதற்கான சந்தர்ப்பங்கள் பல அமைந்தும் கூட ஒரு ஸ்கூட்டர் வேகத்தைக் குறைத்துக்கொண்டு எனக்கு பின்னால் வருவதிலேயே தான் குறியாக இருந்தது என்பதை நான் மிகவும் தாமதமாகத்தான் உணர்ந்தேன்.
எனக்கு பின்னால் அந்த ஸ்கூட்டர் வந்துகொண்டிருப்பது தற்செயலானது என்றுதான் முதலில் நான் நினைத்துக்கொண்டேன். ஆனால் அது அப்படியல்ல என்று உணர்வதற்குள்ளாகவே பாதிதூரம் வந்துவிட்டிருந்தது. அதற்குப்பிறகு என்னால் இயல்பாக வண்டியோட்ட முடியவில்லை. வண்டியோட்டியை அல்லது பின்னிருக்கை நபரை குறைந்தபட்சம் வண்டியின் பதிவெண்ணையாவது பார்த்துவிடலாமென நான் வேகத்தை மேலும் குறைத்தால் அவர்களும் தமது வேகத்தைக் குறைத்துக்கொண்டு பின்தங்கினார்கள். பக்கவாட்டுக் கண்ணாடி வழியே அந்த ஸ்கூட்டரை பார்த்தபடியே வண்டியோட்டத் தொடங்கினேன். ஒருகட்டத்தில், கார் ஓட்டுவதாக போக்கு காட்டிக் கொண்டு நான்தான் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறேனோ என நினைக்கும் அளவுக்கு அவர்களைப் பார்ப்பதில் மும்முரமாய் இருந்தேன். இதனால் வண்டி ஓட்டுவதில் கவனம் தப்பி ஏதும் விபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்கிற பதற்றம் எனக்குள் இருந்தாலும் கண் என்னவோ முன்னே சாலையைப் பார்ப்பதைக் காட்டிலும் பின்னே வரும் அவர்கள் மீதேதான் பதிந்திருந்தது.
என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, டோல்கேட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக வண்டியை ஓரங்கட்டி அங்கேயே நின்று கொண்டார்கள். நான் வேகத்தைக் குறைத்து தாமததித்துப் பார்த்தேன். அவர்கள் வருவதாகத் தெரியவில்லை. என்னைப் பின் தொடராமல் அவ்வாறு அவர்கள் இடைவழியில் விலகிக்கொண்டது எனக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. அவர்களது கண்காணிப்பிலிருந்து தப்பிவிட்டதற்காக ஆசுவாசம் கொள்வதிற்கு பதிலாக நான் ஏன் இரையைத் தவறவிட்ட மிருகத்தைப் போல தவிக்கிறேன் என்று எனக்கே என் போக்கு விசித்திரமாக இருந்தது.
யார் அவர்கள், எதற்காக என்னைப் பின்தொடர்ந்தார்கள், ஏன் நின்றுகொண்டார்கள், வேறு வேலையாய் வந்தவர்களை நான்தான் அப்படி தப்பிதமாக புரிந்துகொண்டேனா என்றெல்லாம் அடுக்கடுக்காய் கிளம்பிய கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டவனாக போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று அவர்கள் என் வண்டிக்குப் பின்னால் வந்துவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும்கூட எனக்குள் இருந்ததுபோல. அதனால் முன்பு போல் இல்லாவிட்டாலும் அடிக்கடி பின்பக்கமாக கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே வந்த போதுதான், இப்போது மோட்டார் சைக்கிள் ஒன்று என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்கிற விசயமே உறைத்தது. அவர்களைப் போலவே இவர்களும் தங்களது வண்டியின் பதிவெண்ணை நான் கண்டுவிடக்கூடாத இடைவெளி விட்டே வந்து கொண்டிருந்தனர்.
முன்புபோலவே பதட்டமும் இனம்புரியாத பயமும் இவர்கள் யாரென அறிந்துகொள்ளும் குறுகுறுப்பும் வாங்கடா பார்ப்போம் என்கிற சாகசமுமாக அந்தக்கணத்தில் மாறிப் போனது என் மனம். எதிர்த்திசையில் கடக்கும் வண்டிகளின் வெளிச்சத்தில் இவர்கள் இருவருமே ஆண்கள் - இளவயதினர் என்பதை அனுமானிக்க முடிந்தது. தமக்குள் பேசிக் கொண்டே வருவதுபோல் தெரிந்தது. டோல்கேட் வரை அவர்களும் டோல்கேட்டுக்கு இந்தப்பக்கம் இவர்களுமா என்னை பின்தொடரும் வேலையைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்களா? டோல்கேட் கேமராவில் பதிவாவதை தவிர்ப்பதற்காக இப்படியொரு வேலைப்பிரிவினையைச் செய்துகொண்டார்களா? இவர்கள் கூட்டாளிகளா அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாதவர்களா? தற்செயலான விசயங்களை நானாகத்தான் இப்படி தேவையற்று தொடர்படுத்திக் கொள்கிறேனா? நேராக காவல்நிலையத்திற்கு வண்டியை விட்டால் அங்கும் பின்தொடர்ந்து வருவார்களா இவர்கள்? அப்படியே போனாலும் காவல்துறையினர் நான் சொல்வதை புகாராகத்தான் ஏற்கக்கூடியவர்களா? இப்போதெல்லாம் பலநேரங்களில் காவலர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாகிவிடும் நிலையில், அவர்களிடம் தஞ்சம் புகுவது உசிதமாகுமா? டால்ஸ்டாயோட போரும் அமைதியும் புத்தகம் வைத்திருப்பதையே தேச விரோதத்திற்குச் சான்றாக காட்டும் காவலர்களும் அதை ஏற்றுக்கொள்ளும் நீதிபதிகளும் -ஆதவன் இவர்களைத் தீர்ப்பன்கள் என்றே விளிப்பார்- நாட்டில் மலிந்துகொண்டிருக்கும் போது என் முறையீட்டை எவ்விதமாக பரிசீலிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டே வந்ததில் வீடு நெருங்கிவிட்டிருந்தது.
வாசலில் நான் வண்டியை நிறுத்தும்போது சட்டென வேகத்தை அதிகப்படுத்தி என்னை கடந்துபோன அவர்கள் தெருக்கோடியில் சென்று வண்டியை நிறுத்திக்கொண்டதை காருக்குள் இருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை அவர்கள் இதே வழியில் திரும்பி வரக்கூடும் என்று கொஞ்சநேரம் காத்திருந்தேன், அவர்கள் வரவில்லை.
நடந்த எதையும் நான் வீட்டில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. தெளிவுற அறியாத ஒரு விசயத்தைச் சொல்லி அவர்களுக்கும் பீதியை உருவாக்கவேண்டாம் என்று எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன். ஆனால் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. என் நடத்தையில் ஒருவகைப் பதட்டம் இருப்பதை மகள் கண்டு கொண்டாள். அவளது விசாரிப்புக்கு வெறும் பயணக்களைப்புதான் என்று பதில் சொல்லி சமாளித்துவிட்டு எனது அறைக்குள் புகுந்து கொண்டேன்.
அன்றிரவு நான் வெகுநேரம் தூங்காமலிருந்தேன். உண்மையைச் சொல்வதெனில் தூங்குவதற்கு அஞ்சினேன். சின்ன சத்தம் கேட்டாலும் மனம் பதறியது. வீட்டைக் கடக்கும் ஒவ்வொரு வாகனத்திலும் யாரோ என்னை வேவு பார்த்துவிட்டுப் போவதான நினைப்பு வந்து திகிலைக் கூட்டியது. இத்தனைக்கும் அயலார் யாரும் வீட்டைப் பார்க்கிற மாதிரி தெரிந்தால்கூட குரைத்து குலைநடுங்கச் செய்து விரட்டிவிடுகின்ற செவலை உலாவிக் கொண்டுதான் இருந்தது. எத்தனையோ தடவைகளில் விதங்களில் தன் காவல்திறனை வெளிப்படுத்திய செவலை இருக்கும்போது என் அச்சம் அனாவசியமானது என்று எனக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் பயம். எனக்கே என் பயந்தாங்கொள்ளித்தனத்தை எண்ணி மிகுந்த அவமானமாக இருந்தது.
ஒருவேளை அன்னமும் நண்பர்களும் சொன்னதுபோல இரவு அங்கே அவர்களுடனேயே தங்கிவிட்டு அதிகாலையில் கிளம்பி வந்திருந்தால் இப்படியொரு இக்கட்டான நிலை உருவாவதை தவிர்த்திருக்க முடியுமோ? பைக்கில் வந்த அந்த இரண்டு ஜோடிகளும் உண்மையில் என்னைத்தான் குறிவைத்துப் பின்தொடர்ந்தார்களா? எனில் அவர்கள் யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? அமைப்பேதும் சாராத உதிரிகளா? இதற்குமுன் எப்போதாவது இவர்கள் பின்தொடர்ந்து நான் கவனிக்காமல் விட்டுவிட்டேனா? இன்றைக்குதான் முதன்முதலாக பின்தொடர்கிறார்களா அல்லது நான் இன்றுதான் கவனித்தேனா? திடுமென என்னை பின்தொடரும் முடிவுக்கு அவர்கள் வந்திருக்க முடியாது. எனது முந்தைய நிகழ்ச்சிகளுக்கும் வந்து என்னை கண்காணிக்கிறவர்களாக அவர்கள் இருந்திருந்தாலொழிய இது சாத்தியமில்லை. அப்படியானால் எப்போதிருந்து? நான் அப்படியொன்றும் வெகுஜன செல்வாக்குள்ளவன் அல்லவே. அப்படியிருந்தும் ஏன் என்னை கண்காணிக்கிறார்கள். எழுதுவதற்கும் இயங்குவதற்கும் நானும் எனது தோழர்களும் கோரிவந்த சுதந்திரத்திற்கான விலையை நானே நேரடியாய் கொடுக்க வேண்டிய நேரம் அண்மித்துக் கொண்டிருக்கிறதா? கௌரிக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில் ‘நான் எனது சாவுக்கு 40கி.மீ. அருகாமையில் இருக்கிறேன்’ என்று ஆதவன் தோழர் எழுதியது போல நானும் எழுதுவதற்கான நேரமா இது?
இருளில் மறுகும் நெஞ்சத்தில் என்னென்ன கிலேசங்கள் தாறுமாறாக ஓடுமோ அத்தனையுடனும் கழிந்த அந்த இரவு அஞ்சத்தக்க எதுவுமற்ற பகலைக் கொண்டுவந்தது. ஆனாலும் என் இறுக்கம் தளர்ந்தபாடில்லை. நடைப்பயிற்சிக்கு போகும்போது குணநாதனிடம் என் ஐயங்களை பகிர்ந்தால்தான் என்னால் இயல்புக்குத் திரும்பமுடியும் என்றிருந்தது. அவன் வருவதற்கு இன்னும் சற்று நேரமிருந்தது. ஆனாலும் ஒரு நாளைக்கு சீக்கிரம் வந்தால்தான் என்ன கேடு என்கிற பதைப்புடன் அவனை போனில் அழைத்தேன். எப்போதும் ஊருக்குள்ளேயே உழப்பியடித்துத் திரிந்து கொண்டிருக்கும் அவனோ அன்றைக்குப் பார்த்து அவசரமான கோர்ட் வேலை ஒன்றுக்காக அதிகாலையில் கிளம்பி சென்னைக்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னான்.
ஞானாகரனது செல்பேசியோ அணைந்திருந்தது. தொழிற்சங்கக் கூட்டங்கள், நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை என்று எதிலாவது இருப்பான்.
முன்பு வார இறுதி நாட்களில் வெளியூர் போய்க்கொண்டிருந்தவன், இப்போது சங்கத்தின் மாநில நிர்வாகியாகவும் ஆகிவிட்டதால்
வீட்டிலேயே இருப்பதில்லை என்று அவனது மனைவியும் பிள்ளைகளும் புகார் சொல்கிறார்கள்.
குணநாதன் அல்லது ஞானாகரன் - இருவரில் ஒருவரிடமாவது விசயத்தை போனில் பேசலாமா? அது நேரில் பேசுவது போலாகாதே என்று சமாதானம் சொல்லிக்கொண்டு
வீட்டுக்குள்ளேயே கிடந்தேன். அன்று கல்லூரிக்கும் செல்லவில்லை.
உறக்கமின்மையால் உண்டாகியிருந்த அசதியில் மதிய உணவுக்குப் பிறகு படுத்தவன் எழும்போது மாலை ஐந்துமணியாகிவிட்டிருந்தது. தேநீர் அருந்தியபடியே என் மனவோட்டத்தை தொகுத்து பார்த்துக்கொண்டேன். இப்போது சற்று நிதானம் இருப்பதுபோல் பிடிபட்டது. விரும்பத்தகாத எதுவும் நடக்காதபோது வீணான கற்பனைகளால் சுயவதை செய்து கொண்டேன் போல. இணையரும் மகளும் இருந்த நடுக்கூடத்திற்கு வந்து அவர்களோடு இரவு உணவுவரை பேசிக் கொண்டிருந்ததில் ஆசுவாசம் கூடியது. அடுத்துவந்த நாட்களில் இயல்புக்கு திரும்பியிருந்தேன்.
ஹொன்னப்பவிடம் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி 11 ஆகியிருந்தது. வழக்கம் போல் மொட்டைமாடியில் இருந்து தெருவை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த செவலை, நான் வருவதைக் கண்டதும் கீழிறங்கி ஓடிவந்து மதில் சுவரில் கால்பதித்து எக்கி நின்று வரவேற்று செல்லமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டின் பின்புறம் வரை ஓடித் திரும்பி மறுசுற்றுக்குத் தயாரானது. இரவுப்பாதுகாப்புக்கு பொறுப்பெடுத்துக் கொண்டதாக செவலை தெரிவிக்கும் சமிக்ஞை இதுதான். கதவை அடைத்துக்கொண்டு வந்து படுத்தவன் அதிகாலை எழும்போது மணி நான்கு. வழக்கமாக எழும் நேரம்தான். அந்நேரத்திற்கு எழுந்துவிட்டால் படிப்பு எழுத்து என எல்லாமே கிரமப்படி நடப்பதாக எனக்கொரு நம்பிக்கை.
இணையரும் மகளும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். அவர்களுக்கு இடையூறில்லாமல் சமையலறைக்குப் போய் அன்றைக்கான டிகாக்ஷன் வடித்திறக்கி காஃபி போட்டு எடுத்துக் கொண்டு கணினி முன் அமர்ந்தேன். நேரமின்மையால் நேற்று முழுவதும் பார்க்காமல் விட்டிருந்ததில் ஐம்பதறுபதாக குவிந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்து சிலவற்றுக்கு பதிலும் எழுதி முடிக்கும் வேலை மும்முரமாகிப் போனதில் நடைப்பயிற்சிக்கு கிளம்பவேண்டிய நேரமாகிவிட்டிருந்ததை கவனிக்காமல் போனேன். குணநாதன் போனில் அழைத்ததும்தான் சுதாரித்தேன்.
குணநாதன் என்னைப் போன்றவனல்ல, பள்ளிப்பருவத்திலிருந்தே நேர ஒழுங்கை கடைபிடிப்பவன். அவனது நேரத்தை அவன் முறையாக பங்கிட்டு வைத்திருந்தான். இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கும் அவன், வீட்டிலிருந்து கிளம்பும்போது போனில் அழைப்பான். நான் தயாராகி செவலையுடன் பால்பூத் அருகில் அவனுடன் சேர்ந்து கொள்வேன். திரும்பும் போது என்னோடு வீட்டில் காஃபியோ சிற்றுண்டியோ முடித்துக் கொண்டு செல்வது அவன் வழக்கம். மகளும் இணையரும் இன்னமும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். அவர்கள் விழித்துக் கொள்ளாதபடி பூட்டிக்கொண்டு கிளம்பலாம் என்று மெதுவே கதவைத் திறந்தேன். எப்போதும் கதவைத் திறந்ததும் ஓடிவந்து தாவும் செவலையைக் காணவில்லை. வெட்டப்பட்ட அதன் தலை ரத்தம் வழிந்தோட வாசற்படியில் கிடந்தது.
***
குணநாதன் தான் ஞானாகரன் உள்ளிட்ட நண்பர்களுக்கு தகவல் சொல்லியிருந்தான். செவலை கொல்லப்பட்டதற்கா அல்லது நான் கொல்லாமல் விடப்பட்டதற்கா என்று என்னால் பிரித்தறிய இயலவில்லை, எனக்கு அழுகையான அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. இணையர் சுந்தரியும் மகள் கதிரொளியும் வெகுவாக நிலைகுலைந்திருந்தார்கள். அடுத்தடுத்தும் நண்பர்கள் பலரும் வந்து கொண்டேயிருந்தார்கள். யாரிடமும் பேசவியலாதபடி போலிஸ் அதிகாரிகளின் விசாரணை காலையிலிருந்து போய்க் கொண்டிருந்தது. தெருவிலிருந்த கண்காணிப்புக் காமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு தனக்கான துருப்பினை கண்டடைய ஆய்வாளர் எடுத்த முயற்சி பலனற்றுப் போனது. மூன்றில் ஒரு காமிரா வேலை செய்யவில்லை. மற்ற இரண்டும் அதிகாலை 3மணி 17நிமிடங்களுக்கு உடைக்கப்பட்டிருந்தன. உடைக்கப்படுவதற்கு முன்பாக பதிவாகியிருந்த காட்சிகள் மங்கலாக தெளிவற்றிருந்தன.
காமிராக்கள் மட்டுமன்றி தெருவிளக்குகள் இரண்டும்கூட உடைக்கப்பட்டிருந்தன.
நிச்சயம் இதை ஒரு ஆளால் செய்திருக்கவே முடியாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். மிகுந்த முன் தயாரிப்புடன் அவர்கள் வந்திருக்கிறார்கள்
என்றார் ஆய்வாளர். உங்கள் வீட்டுவாசலில் வைத்து நாயின் கழுத்தை அறுத்துக் கொன்று
போட்டிருக்கிறார்கள். தலையை இங்கே எறிந்துவிட்டு முண்டத்தை தெருக்கோடியில்
இழுத்துப் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கோ அக்கம்பக்கத்து
ஆட்களுக்கோ எந்தச் சத்தம் கேட்கவில்லை என்கிறீர்கள், ஆச்சர்யமாக இருக்கிறது என்று திரும்பத்திரும்ப அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
குறிப்பாக உங்களுக்கு யார் மீதாவது சந்தேகமிருக்கிறதா என்று அவர் கேட்டபோது தனிப்பட்ட முறையில் அப்படி யாரை குறிப்பிடுவது என்று எனக்குத் தெரியவில்லை. கடந்தவாரம் இரவுப்பயணத்தின் போது எனது கார் பின்தொடரப்பட்ட விசயத்தைச் சொன்னதும் அதுகுறித்து ஏன் புகாரேதும் தரவில்லை என்ற கடிந்துகொண்ட காவல் ஆய்வாளர் அந்தப் புள்ளியிலேயே நின்றுகொண்டு கேள்விகளை அடுக்கத் தொடங்கினார். பின்தொடர்கிறார்கள் என்று தெரிந்தபின் கொஞ்சம் சிரத்தையுடன் சமயோசிதமாக செயல்பட்டிருந்தால் அவர்கள் யாரென்று அப்போதே கண்டுபிடித்திருக்க முடியும் என்றார்.
என் எழுத்துகளால் ஆத்திரமடைந்துள்ள யாரோ என்னை மிரட்டி வைக்க இந்தக் கொலையைச் செய்திருக்கக்கூடும் என்று நான் சொன்னபோது காவல் ஆய்வாளர் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார். அப்படியும் இருக்கலாம். ஆனால், மிரட்டி வைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்க உங்களது நாயைக் கொல்லவேண்டிய தேவை என்ன இருக்கிறது? நாய்க்கும் அவர்களுக்கும் எவ்வித பகையும் இருக்க வாய்ப்பில்லாத போது அவர்களது குறி நாய் அல்ல. ஒருவேளை நடைப்பயிற்சிக்கு வெளியே வரும்போது தீர்த்துக்கட்ட உங்களுக்கு வைக்கப்பட்ட குறி, ஏதோ காரணத்தால் அப்போதைக்கு தடைபட்டுப்போக, அந்த ஆத்திரத்தில் அவர்கள் நாயைக் கொன்றிருக்கிறார்கள் என்கிற முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். நாயைக் கொன்றிருக்கும் குரூரத்தில் அந்த ஆத்திரம் தெரியவில்லையா உங்களுக்கு?
ஆய்வாளரின் கேள்வியில் இருந்த தர்க்கம் என்னையும் குடும்பத்தாரையும் நண்பர்களையும் பீதிக்குள் ஆழ்த்தியது. விசாரணையை முடித்துக்கொண்டு கிளம்பும் தருவாயில் அவர், சகிக்க முடியாமல் கொல்லுமளவுக்கு அப்படி என்னதான் எழுதிக்கிட்டிருக்கீங்க? நான் பார்க்கணுமே... முடிந்தால் யாரிடமாவது நகல்களை கொடுத்தனுப்ப முடியுமா எனக்கேட்டபோது நான் மறுக்கவில்லை.
செவலையில்லாத வெறுமையைக் கடக்க நாங்கள் பெரிதும் துயருற்றோம். அது சாகடிக்கப்பட்டிருந்த விதம் எங்கள் வீட்டில் இன்னொரு பலி நடக்கப்போவதன் முன்னறிவிப்பாக இருக்கிறது. எனவே ஊரிலிருந்து நெருங்கிய உறவினர்கள் பலரும்கூட பதறிப்போய் வந்திருந்து தைரியம் சொல்லிப்போனார்கள். மூத்த மைத்துனன் குடும்பத்தாரும் சித்தப்பாவும் மேலும் சிலநாட்கள் தங்கியிருந்தது ஆறுதலாக இருந்தது. நண்பர்கள் வந்திருந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். கௌரி கொலைவழக்கில் கைதாகியிருப்பவர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ள நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ள கொலைப்பட்டியலில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஆபத்தில்லை என்று நாம் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாதென்று எச்சரித்தனர். நாடெங்கும் மாற்றுக் கருத்தாளர்களையும் சுதந்திரச் சிந்தனையாளர்களையும் கண்காணிக்கவும் கொல்வதற்கும் பல்வேறு ரகசியக்குழுக்கள் இயங்கிவரும் விவரங்களை அவர்கள் தெரிவித்தபோது சற்றே திகிலாகத்தான் இருந்தது, ஆனால் இதற்காகவெல்லாம் நாம் அச்சப்பட்டு பணியவோ வேலைகளைக் கைவிடவோ கூடாது. கருத்துச்சுதந்திரம் பெயரளவில்கூட இல்லாத நிலையை நோக்கி நாடு தலைகுப்புற சென்று கொண்டிருக்கும் இந்தப் புதிய சூழலை விளங்கிக்கொள்வது அவசியம். அவர்கள் கொடுத்த தைரியம் எனக்குள்ளிருந்த பல தயக்கங்களை உடைத்தது.
அவர்கள் எச்சரித்துவிட்டுப்போன அன்றைக்குக்கூட கட்டுரைகளை கவனமாக எழுதவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டேனேயன்றி கட்டுரை எழுதுவதை நிறுத்திக்கொள்வது பற்றி நான் யோசித்திருக்கவில்லை. வெளிப்படையும் நேரடித்தன்மையும் கொண்ட கட்டுரைகளின் விவாதப்பொருளை வேறு எவ்வகையில் வெளிப்படுத்தலாம் என்கிற யோசனையை, அந்த காவல் ஆய்வாளர் மீண்டும் நடத்திய விசாரணைதான் எனக்குள் கிளப்பிவிட்டிருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
உங்கள் கட்டுரைகள் படிக்கக் கிடைக்குமா என்று கேட்ட மரியாதைக்காக எனது பிளாக்கில் இருந்த கட்டுரைகள் சிலவற்றின் இணைப்புச்சுட்டிகளை ஆய்வாளருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி நாலைந்து நாட்களாகியிருந்தன. அன்று நேரமிருக்கையில் அழைக்கவும் என்று அவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் முன் சந்திக்கலாமா என்று நான் அனுப்பிய பதிலுக்கு அவர் மாலை 6 மணி என்று நேரம் குறித்தனுப்பினார். முன்னாடியே போவதால் எதுவும் குறைந்துவிடப்போவதில்லை என்று 6மணிக்கும் முன்பாகவே நான் அவர் குறிப்பிட்டிருந்த உணவுவிடுதிக்கு சென்றேன். ஆனால் அவர் எனக்கும் முன்பாகவே வந்து தனித்தப் பேச தோதாக மூலையில் இருந்த இருக்கையை தெரிவுசெய்து அங்கு காத்திருந்தார். அதேவேளையில் அவர் சொல்லித்தான் நான் அங்கே வந்திருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள விரும்பாதவர் போலவோ அல்லது எங்கள் சந்திப்பு அங்கே தற்செயலாக நிகழ்கிறது என காட்டிக்கொள்ள விரும்புகிறவர்போலவோ இருந்தது அவரது நடவடிக்கை.
சொந்த ஊர்,
குடும்பம், படிப்பு, வேலை, ஆர்வங்கள், அரசியல் தொடர்புகள் என்று அவர் கோரிய விவரங்கள் தனிப்பட்ட
முறையில் தெரிந்துகொள்வதற்காக அல்ல என்பது அவர் கேட்ட விதத்திலேயே விளங்கியது. இவ்வளவு அடிமட்டத்துல இருந்து
படிச்சு இந்த இடத்துக்கு வந்திருக்கீங்கன்னா அதுக்கு உங்க அறிவும் உழைப்பும்தான்
சார் முழுமுதற் காரணம். ஆனா, அதையெல்லாம்
தக்கவச்சிக்கிட்டு நீங்க பீஸ்புல்லா
வாழணும்கிறது தான் என்னோட ஆசை. ஆனால் நீங்க கொடுத்துவிட்ட கட்டுரைகள முழுசா
படிச்சுப் பார்த்தப்ப இந்த ஆசை உங்களுக்கு துளியும் இல்லையோன்னு எனக்கு சந்தேகம்
வந்துடுச்சு. சார்,
உங்களோட அரசியல் கண்ணோட்டம், அடித்தட்டு மக்கள் மேல இருக்கிற கரிசனம், ஆளுங்கூட்டத்து மேல வைக்கிற விமர்சனம் எல்லாமே எனக்கும் உடன்பாடுதான். ஆனா
நீங்களும் நானும் மட்டுமே இந்த உலகத்துல இல்லைதானே என்று கேட்டுவிட்டு எனது
முகத்தையே பார்த்தார். நான் பதறிக்கொண்டு பதிலளிப்பேன் என்று அவர்
எதிர்பார்த்திருப்பார் போல. நான் அமைதியாய் இருந்ததும் அவரே பேசினார்.
சார், மேல இருக்கிறவங்களைப் பத்தி என்னைவிட உங்களுக்கு நல்லாத் தெரியும். அவங்க ஆரம்ப காலத்துல இருந்து என்னவெல்லாம் செய்து இன்னிக்கு இந்த நிலைக்கு வந்திருக்காங்கன்றதை ஆதியோடந்தமா அலசி ஆராய்ஞ்சு பிச்சி பீராய்ஞ்சு எழுதுறீங்க. ‘சித்தம் அழுகிச் சீழேறி நித்தம் கொலைவெறி நினைவாகி ரத்தம் குடித்து நரக்கறி தின்று...’ன்னு மேற்கோள் காட்டியிருக்கீங்களே ஒரு பாட்டு, அது அட்சரம்பிசகாமல் இவங்கள மனசுல வச்சு எழுதினதுதானே? பிறகு கவனமா இருக்க வேணாமா? அல்லது அவங்க உங்களை மட்டும் விட்டுருவாங்கன்னு நினைக்கிறீங்களா?
அன்னாடம் ஆயிரம் நாய்களாச்சும் அடிபட்டுச் சாகுதுங்க ரோட்ல. சில்லாபில்லையா சிதறிக்கிடக்கிற நாய்களோட உடல்மேல ஏறியிறங்காத சக்கரம் ஏதாச்சம் இங்கிருக்கா... உங்க செவலையும் அப்படி செத்திருந்தா நாங்க ஏன் இந்தளவுக்கு கவலைப்படப்போறோம்? அன்னிக்கு நான் என்ன சொன்னேனோ அதையே தான் எஸ்.பி.யும் சொல்றார்- அதாவது இது நாய்க்கு வைத்த குறியே அல்லன்றார். உன் லிமிட்ல எப்ப வேணும்னாலும் ஒரு அசம்பாவிதம் நடக்கும் ஆபத்திருக்குன்னு என்னை எச்சரிக்கிறார். இப்ப என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க...
என்கிட்ட என்ன பதிலை நீங்க எதிர்பார்க்கிறீங்கன்னு என்னால யூகிக்க முடியல சார் என்று நான் சொன்னதும் அதற்காகவே காத்திருந்தவர் போல ஆய்வாளர் மீண்டும் பேசத்தொடங்கினார். சார், மகாராஷ்ட்ரா போலிசும் கர்நாடக போலிசும் சேர்ந்து நடத்தின விசாரணையில தெளிவா தெரிஞ்ச விசயம் என்னன்னா நாலுகொலையிலும் சம்பந்தப்பட்டிருக்கிற ஆட்கள்ட கைப்பற்றப்பட்ட பட்டியலில் இருக்கிறவர்களை விடவும் கூடுதலாக பல பேரை அவர்கள் கொல்லப்போகிறார்கள் என்பதுதான் என்றார்.
துர்ஜன், ராஜ்விரோதிகள், தேஷ் விரோதிகள், தர்மவிரோதிகள், அர்பன் நக்ஸல்ஸ், ஆன்ட்டி இன்டியன்ஸ்னு அவங்கக்கிட்ட ஒழிச்சுக்கட்ட வேண்டியங்கன்னு விதவிதமான பட்டியல் இருக்கு சார். அதில் உங்க பேரும் இருக்கலாம்கிறதுதான் எங்களோட அனுமானம். அதனால கொஞ்சநாளைக்கு உங்க ஆக்டிவிட்டிசை நிறுத்திவைத்தால் நல்லதுன்றது என்னோட அபிப்ராயம்... என்றார். ஆக்டிவிட்டீஸ்னா என்று நான் தொடங்கியதுமே இடைமறித்த அவர் எழுதறது பேசுறது கூட்டம் போடுறதையெல்லாம் நிறுத்திவையுங்க, நிலைமை சீரான பிறகு பார்ப்பம் என்றார். அவர் சொன்னது ஆலோசனை போலல்லாமல் உத்தரவு என்கிற தொனியில் இருந்தது.
என்னை கொல்லத் திட்டமிட்டு வந்தவங்க யாரோ என் நாயைக் கொன்னுட்டுப் போயிருக்காங்க. அவங்க யாராயிருக்கக்கூடும்னு உங்களுக்குத் தெரியுது. அவங்க மேல சட்டரீதியா நடவடிக்கை எடுங்க, என்னோட உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கொடுங்க. எழுதவும் பேசவும் பொதுவெளியில நடமாடவும் கூட்டம் கூட்டவும் ஒரு குடிமகனா எனக்கு உரிமையிருக்கு. அந்த வேலைகளை சுதந்திரமா செய்யுறதுக்கு தடையோ அச்சுறுத்தலோ வந்தால் அதைத் தடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது உங்க பொறுப்பு. ஆனா நீங்களே இப்படி சொல்றது என்ன சார் நியாயம் என்று கேட்பதற்கு நுனிநாக்குவரை வந்துவிட்ட வார்த்தைகளை, இந்தாளிடம் சொல்லி என்ன ஆகப்போகிறதென்று நான் எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். நான் சொல்றதையெல்லாம் நீங்க அப்படியே கேட்டுக்குவீங்கன்னு நான் நம்பல. ஆனா உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன்னு நீங்க சீக்கிரமே தெரிஞ்சிக்குவீங்க.. என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிய கணத்தில், வெளிப்படையாக எழுதும் காலம் முடிவுக்கு வந்துவிட்டதென நான் உணர்ந்தேன். அந்த எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக வந்தது பீமாகோரேகான் வழக்கு. (தலித்துகள், பழங்குடிகள் மற்றும் முறைசாரா தொழிலாளர்களின் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, மனிதவுரிமைகள் பாதுகாப்பு, கனிமக்கொள்ளைகள் தடுப்பு, சட்டத்தின் ஆட்சி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றுக்காக உலகளாவிய அளவில் போற்றப்படும் 16 ஆளுமைகள் மீது பிரதமரைக் கொல்வதற்கு சதிசெய்ததாக அபாண்டமாக பழிசுமத்தி உபா சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தது அரசு. கைதிகளுக்குரிய எளிய உரிமைகளையும் கூட அவர்களுக்கு மறுத்துவிட்டது அரசு. ஸ்டேன்ஸ்சாமி என்பவர் சிறையிலேயே சாகும்படி விடப்பட்டார்).
மாயவெளி முழுக்க மறைந்தியங்கும் கண்காணிப்பின் எந்தவொரு வளையத்திலும் சிக்காமல் சீராக மூச்சுவிட்டுக்கொண்டு அது தானாக நின்றழியும் காலம்வரை பிழைத்திருந்துவிடலாம் என்கிற எனது நினைப்பையும் அந்த வழக்கு தகர்த்துவிட்டது. உளவுச்செயலிகள் மூலம் இவர்களில் ஒருவரது கணினிக்குள் ஊடுருவி சதித்திட்டம் என்கிற கோப்பினை உருவாக்கி அதை மற்றவர்களுக்கு அனுப்பியதே காவல்துறைதான் என்று அமெரிக்க தடயவியல் நிறுவனம் அம்பலப்படுத்தியதைப் பார்த்தப் பிறகு எனக்கு கணினியைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. உளவாளிகளின் கூடாரம்போல் தெரிந்த கணினியை உடைத்தெறிந்துவிட வேண்டும் என்று கை பரபரத்தது. வாழ்ந்ததற்கான தடயங்களைப் பதித்துச் செல்லும் கனவுகள் அழிந்து நான் வாழ்வதை நானே மறந்துவிட்டாற்போல எனக்குள் ஒடுங்க ஆரம்பித்திருந்தேன். எழுதாத காலத்தை என் வாழ்நாளில் கழித்துக்கொள்ளுங்கள் என்று யாரோ எழுதிய கவிதையை என் மகள் ஏன் எனக்குப் படித்துக்காட்டியபோது, என் வாழ்நாளை மொத்தமாக கழித்து கணக்குத் தீருங்கள் என்று கத்திவிட்டேன்.
**
ஆனாலும் என்ன, மனம் ஒன்றை மட்டுமே நினைத்து உறைந்துவிடுவதில்லையே? எதிராளிக்குப் பிடிபடாத புதிய மொழியில் புதிய வடிவில் நம் மக்களோடு உரையாடும் நுட்பங்களை நாம் கைக்கொள்ளவேண்டும் என்று ஆதவன் தோழர் முன்பு சொன்னதை இப்போது அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். அவர் எழுதாமல் விட்ட “லாக்டவுன் நைட்ஸ்” என்ற புதினத்தை நானே எழுதினால் தான் என்ன என்கிற யோசனையும்கூட வர ஆரம்பித்துள்ளது. மக்கள் திரும்பிப் பார்க்க விரும்பாத அந்தப் பெருந்தொற்றுக்கால கொடுமைகளை யாராவதொருவர் சொல்லத்தானே வேண்டும்?
நன்றி: நீலம், 2025 ஜூலை இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக