செவ்வாய், அக்டோபர் 25

எது நடந்ததோ அது எப்படி நன்றாகவே நடந்திருக்கமுடியும்? -ஆதவன் தீட்சண்யா

பகவத் கீதையை மையப்படுத்தி மருத்துவர் நா.ஜெயராமன் எழுதி, விரைவில் வெளிவரவிருக்கும் நூலுக்கு நானெழுதிய முன்னுரை

வேதங்களில் இல்லாததோ சொல்லாததோ எதுவுமேயில்லை என்றொரு கோஷ்டி விளம்பித் திரியும். அப்படியா, என்னென்ன என்றொரு பட்டியல் கொடுங்களேன் என்றால் அது இது வந்து என்று இழுத்தார்கள். அப்பேர்ப்பட்ட வேத ஸ்லோகங்களை எங்களுக்கும் சொல்லுங்களேன்  புரிந்துகொள்கிறோம் என்றால் அபச்சாரம் அபச்சாரம், உங்களுக்கெல்லாம் சொன்னால் சொன்ன நாக்கு அழுகிரும் கேட்ட காது அவிஞ்சிரும் என்று சாபமிட்டார்கள். சரி, நாங்களே படித்துப் பார்த்து தெரிந்துகொள்கிறோம் புத்தகமிருந்தால் கொடுங்களேன் என்று கேட்டால் அது அசரீரியாக சொல்லப்பட்டது… சொல்லப்பட்டதை கேட்டு எங்களுக்குள் சொல்லிக் கொள்வோமே தவிர அச்சடிக்கும் பாபத்தை செய்யமாட்டோம் என்றார்கள். பிறகு ஒருவழியாக அதெல்லாம் புத்தகமாக வந்து பலரும் படித்து “இவ்வளவுகாலமும் உயர்வுநவிற்சியாய் ஏற்றிச்சொன்ன அளவுக்கு அதில் பெரிய தத்துவமோ வழிகாட்டுதலோ இல்லை; தங்களது தீவனமான கால்நடைகளுக்குத் தீவனம் தேடி பல்வேறு நிலப்பரப்புகளையும் தட்பவெப்ப நிலைகளையும் கடந்து  இந்தியாவுக்குள் வந்த ஆரியர்களின் வழிநடைப்பாடல்கள், சடங்குகள், மந்திரங்கள் தவிர அந்த வேதங்களில் வியந்து போற்றுமளவுக்கு ஒரு வெங்காயச் சருகுமில்லை” என்று அம்பலப்படுத்திவிட்டார்கள். ஆனாலும் இந்த ஆஹா ஓஹோ ஆலாபனை ஓய்ந்தபாடில்லை. 

வேதங்கள் பற்றி உலவவிடப்பட்ட கற்பிதங்களுக்கு சற்றும் குறையாதவை பகவத் கீதை பற்றிய கட்டுக்கதைகள். கீதை வழிகாட்டுகிறது, ஒளி கூட்டுகிறது, வாழ்வின் சாரத்தை விளக்குகிறது என்றெல்லாம் ஓயாமல் நம்மிடம் சொல்லப்பட்டு வருகிறது. போர்க்களமேகிய ஒருவனுக்கு சொல்லப்பட்ட போதனைகளின் தொகுப்பு என்று பார்த்தாலும்கூட அது ஒரு சத்திரியனுக்குச் சொல்லப்பட்டது தான். சொன்னவனான கிருஷ்ணன் பிராமண வர்ணத்தவனோ சத்திரிய வர்ணத்தவனோ அல்ல. வேளாண்மையோ வியாபாரமோ செய்பவனல்ல என்பதால் அவன் வைசியனாக இருக்கவும் வாய்ப்பில்லை. கால்நடை வளர்ப்பு, பால்பொருள் விற்பனை என்கிற வேளாண் காலத்திற்கு முந்தைய மேய்ச்சல் நாகரீகக்கட்டத்தில் தோன்றி – ஆனால் வேளாண் காலத்திற்குப் பிறகும் நீடிக்கிற-  உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடக்கூடிய குடும்ப/ குல வரலாற்றைக் கொண்டு பார்த்தால் தர்க்கப்படி அவன் சூத்திரனாக இருக்கவே வாய்ப்பதிகம். எனில் அவனெப்படி அர்ச்சுனன் வீட்டில் சம்பந்தம் கலந்தான் என்கிற கிளைக்கேள்வியை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், சத்திரியனல்லாத கிருஷ்ணனால்  சத்திரியனான அர்ச்சுனனுக்கு புத்திமதி சொல்லமுடியுமா என்கிற கேள்வி எழுகிறது. குறிப்பிட்டதொரு சூழலில் அவனது வர்ணதர்மத்துக்கேற்ப சொல்லப்பட்ட போதனைகள் என்றே சமாதானம் சொல்லிக் கொண்டாலும், வர்ணங்கடந்து காலங்கடந்து எப்படி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வழிகாட்ட முடியும் என்கிற கேள்வியும் ஒருபுறமிருக்க, பகவத் கீதையைப் பாடமாக்க வேண்டும், அதை இந்தியாவின் புனிதநூலாக அறிவிக்கவேண்டும் என்கிற பெருங்கூச்சலை எழுப்புகிறவர்கள் யாரெனக் கண்டால் அவர்களில் பலரும் பார்ப்பனர்களாயுள்ளனர். உலகத்திற்கே புத்தி புகட்டி பரிபாலிக்கும் பூதேவர்கள் என்று தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் பார்ப்பனர்கள், ஒரு சூத்திரனால் சத்திரியனுக்கு சொல்லப்பட்ட போதனைகளிலிருந்து அப்படி என்னத்தைக் கண்டார்கள், அதை ஏற்குமளவுக்கு அவர்கள் தத்துவ வறுமையில் உழன்றிருந்தார்களா, எதற்கதை பாதுகாக்கத் துடிக்கிறார்கள் என்று ஆராயப்புகுந்தால், பகவான் கிருஷ்ணனின் வாய்வழியே சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் மகாபாரதக் கதைக்குள் இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட பார்ப்பனீயச் சரக்குகளே என்பதை கண்டறிய முடியும். 

கீதை திரும்பத்திரும்ப மக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டால் அதில் முன்னிறுத்தப்படும் மதிப்பீடுகளும் உலகியல் கண்ணோட்டமும் அவர்களது அகவுலகத்திலும் நடத்தையிலும் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புராணங்களும் இதிகாசங்களும் இன்னபிற மதநூல்களும் கூட சமூகத்தில் தொடர்ந்து புழக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுவதும் இதற்காகவே தான். இவற்றின் வழியே சொல்லப்படும் தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தனிமனிதரோ சமூகக்குழுவோ அவற்றை உள்ளூர்த்தன்மையுடனும் சொந்தத் தேவைகளை அனுசரித்தும் மறுவுருவாக்கம் செய்து மீண்டும் புழக்கத்திற்கு விடுகின்றனர். இதனால்தான் புராண இதிகாசப் பாத்திரங்கள் பலவும் மக்களுக்கும் அந்தந்த வட்டாரத்திற்கும் நெருக்கமானவவையாக உணரப்படுகின்றன. பரவலாக புழக்கத்தில் உள்ள ஒரு கதையின் சூழமைவையும் கதைமாந்தர்களையும் தங்களிடம் உள்ள கதைக்குள் பொருத்துவது அல்லது அவற்றை வைத்துக்கொண்டு புதிய கதைகளைப் புனைவது என்பதில் மக்கள் எப்போதுமே முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்கள். இப்படி பல மகாபாரதக் கதைகளை உருவாக்கி புழக்கத்தில் விட்டிருக்கும் வெகுமக்கள் கீதை பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. அதை அவர்கள் மேட்டுக்குடிகளின் ஞானத்தேடல் பசப்புக்கானது என ஒதுக்கிவிட்டார்கள்.  

வெகுமக்களுக்கு மகாபாரதக் கதைதான் தெரியுமேயன்றி இடையில் நுழைக்கப்பட்ட இந்த கீதை தெரியாது. ஒருவேளை கீதையை தேவைப்படாதது எனவும் அவர்கள் கருதியிருக்கக் கூடும். ஆனால் பார்ப்பனீயர்களுக்கு மகாபாரதக் கதையை விடவும் கீதை தான் உசத்தி.  ஏனென்றால் கீதை தான் பார்ப்பனீய உலகியல் கண்ணோட்டத்தை  சமூகத்தின் மீது திணித்திட உகந்தது எனக் கருதுகிறார்கள். பார்ப்பனீயர்கள் விதந்தோதுவதனாலேயே அவர்களது கருத்தியல் அடிமைகளும் பகவத்கீதையை பலவாறாக உயர்த்திப் பேசுகிறார்கள். பழ கருப்பையா இப்படியானவர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக்கொண்டு பேசிய ஓர் உரையில் காந்தியின் வாழ்வை கீதையில் சொல்லப்படும் யோகங்கள் தான் நெறிப்படுத்தின என்று குறிப்பிட்டுள்ளார். கீதையைப் படித்து மகாத்மா ஆகிவிட முடியுமென்றால் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் நிலையில் ஏன் காந்திக்குப் பிறகு ஒரு மகாத்மாவைக் கூட இந்த நாடு கண்டடையவில்லை என்கிற கேள்வி இவ்விடத்தில் எழுவது இயல்புதான். ஆனால் அதையும் கடந்து, கீதையின் எந்த யோகம் காந்தியை ஈர்த்து, பின்பற்றச் செய்து அவரை விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பொறுப்புக்கும் மகாத்மா நிலைக்கும் இட்டுச் சென்றிருக்கும் என்கிற கேள்வியை எழுப்பி, கீதைக்குள் அப்படியெந்த யோகமும் இல்லை என்கிற உண்மையைப் போட்டுடைக்கிறது மருத்துவர் நா.ஜெயராமனின் இந்நூல். 

பகவத் கீதையும் காந்தியின் வாழ்வும் இந்நூலில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  கீதை உருவான காலம், தேவை, அதன் கருத்தியல், சமூக இருப்பு பற்றி அறிந்திட தமிழில் கீதை தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களிலான நூல்களைப் படித்து தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார் நூலாசிரியர். பகவத் கீதையில் முன்வைக்கப்படும் யோகங்கள் யாவை என்பதை நிரல்படுத்தி இவற்றில் எந்த யோகமும் காந்தியை ஈர்த்து வழிநடத்தியிருக்க வாய்ப்பே இல்லை என்பதை நிறுவுகிறார். இதற்காக காந்தியின் வாழ்க்கை  மற்றும் அவரது கருத்துலகம் சார்ந்து எழுதப்பட்டுள்ள முக்கிய நூல்களையும்  படித்து அவற்றிலிருந்து தனக்கான ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். 

அர்ச்சுனன் போர்க்களத்தில் நிற்கிறான். காந்தியும் விடுதலைப்போராட்டக் களத்தில் நிற்கிறார். இரண்டு களங்களிலும் போரை தொடுப்பவருக்கும் மறிப்பவருக்குமான அடிப்படைகள் வெவ்வேறானவை. ஆகவே அங்கு பேசப்படும் போர்நெறிகளில் ஏதும் இங்கு பொருந்தியதாக காந்தியால் சொல்ல முடியவில்லை. எதிரிகள் தாயாதிகள்தான் என்றாலும் கொல்லத் தயங்காதே என்று அதற்கான நியாயங்களைச் சொல்லும் கீதையிலிருந்து, வாழ்நாளெல்லாம் அஹிம்சையை பின்பற்ற முயன்ற காந்தி எதைப் பெற்றுக்கொண்டிருக்க முடியும்? 

விடுதலைப் போராட்டத்தின் தலைமையென அடையாளப்பட்ட அவரது வழிகாட்டுதலுக்கு நேரெதிர் மனநிலையில் நாடு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக வீறுகொண்டெழுந்து போராடிக்கொண்டிருந்தது. ஆயுதமேந்துதல் உள்ளிட்ட வழிகளில் போராடிக் கொண்டிருந்த அம்மக்களின் நடுவே காந்தியோ தனித்தொதுங்கி காலத்துடன் இழையாமல் அஹிம்சையைப் பேசிக்கொண்டிருந்தார். அவ்வகையில் பார்த்தால் காந்தியின் அஹிம்சை எனும் தனிப்பட்ட பிடிவாதம் வெகுமக்களுக்கு விரோதமான ஹிம்சையாக இருந்தது என்பதற்கான உதாரணங்கள் பல இந்நூலிலுண்டு. 

பகவத் கீதை என்கிற பெயரைக்கூட அறிந்திராத மக்கள் எதிரியை வீழ்த்த சமரசமற்று போராடிக் கொண்டிருந்த வேளையில், பகவத் கீதையை பழுதற கற்றறிந்த காந்தியோ பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்று பஜனிசைத்துக்கொண்டிருந்தார். இப்படி, தன்சொந்த வாழ்க்கையிலும் கூட பயன்படுத்த முடியாத பகவத் கீதையை காந்தி கடைசிவரை சுமந்து திரிந்ததையும் அதை நமக்கும் பரிந்துரைத்த அவலத்தையும் விரிவாக சுட்டிக்காட்டும் இந்நூல் இனியாவது பழ.கருப்பையாக்கள் பகவத் கீதை / காந்தியைப் பற்றி கவனமாக பேசும்படி வலியுறுத்துகிறது. 

கீதாசாரம் என்கிற ஸ்டிக்கரை நம் கண்ணின் கருவிழி மீது கூட ஒட்டிவைத்து அதன்படிதான் உலகமே சுழல்கிறது என்பதான மாயையை உருவாக்கும் முயற்சி நடைபெற்றுவரும் இக்காலத்தில், அதன் ஒருவரி கூட கீதையில் இல்லை என்றும், ஆளாளுக்கு இஷ்டப்படி பிழிந்தெடுத்து விளாவி விநியோகித்துக் கொண்டிருக்கும் அந்த கீதாசாரத்தில்  ஒரு சாரமும் இல்லை, அதன் ஒருவரி கூட வாழ்வில் பின்பற்றத்தக்கதல்ல என்றும் ஜெயராமன் செய்யும் கேலி ரசிக்கத்தக்கது.    

தனது மருத்துவத் தொழிலுக்கிடையில் நடப்புலகத்தை உன்னிப்பாக கவனித்துவரும் தோழர் ஜெயராமன், பேருழைப்பைச் செலுத்தி கீதையின் மகத்துவமென பூசி மெழுகப்பட்டுள்ள மாயையைகளை இந்நூல் வழியே கலைத்துப் போட்டுள்ளார்.  எப்போதும் போல் எளியதொரு சொல் அல்லது காட்சியிலிருந்து எழுதுவதற்கான பொறியைப் பெறும் அவர் எழுதத் தேர்ந்திடும் பொருள் குறித்த படிப்பினாலும் ஆய்வுகளினாலும் கருத்துலகை வளப்படுத்தும் நூலாக இதையும் எழுதியுள்ளார். புத்தகம் விரைவில் வரட்டும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆய்வுதான் அறிவு - ஆதவன் தீட்சண்யா

                           பேரா. கா.அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிடாக வரவிருக்கும் தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் ...