வெள்ளி, அக்டோபர் 7

சென்னை மருத்துவக் கல்லூரியில்… ஆதவன் தீட்சண்யா

    காந்தியின் தீண்டாமை, ஆஷ் கொலை வழக்கு உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ள மருத்துவர் நா.ஜெயராமன் புனைவிலக்கிய முயற்சியாக சென்னை மருத்துவக் கல்லூரியில்…. என்கிற நாவலை எழுதியுள்ளார்புதுக்கோட்டையும் சென்னை மருத்துவக் கல்லூரியும் தான் கதையின் நிகழ்விடங்கள்.  இரண்டு மூன்றாண்டுகளை ரிபீட் கோச்சிங்கிற்காகவும் அதற்காக பெருந்தொகையையும் செலவழிக்க முடிந்தவர்களால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்கிற நீட் காலத்திற்கு சற்று முன்னதாக கதை நடக்கிறது.  தலையாரியின் மகன் பீமாசெல்வனும் தாசில்தார் மகள் சித்திரைச்செல்வியும் தான் முதன்மைப் பாத்திரங்கள். இப்படி சொன்னதுமே அவர்களுக்குள் காதல் என்பதைச் சுற்றிய கதையாக இருக்கக்கூடும் என்று யூகிப்பதில் தவறேதுமில்லை, காதலிப்பது மனிதசுபாவம் தானே… ஆனால் கதை அவர்களது காதலை தூரத்தில் எங்கோ வைத்து மற்றபல விசயங்களைப் பேசுவதாயுள்ளது. 

சாதிப்படிநிலையில் மேலேயும், அது வழங்கிய மூலதனமாக நிலவுடைமையும், கல்வியும், கூடுதலாக அரசு அதிகாரமும் அதற்கேற்ற தோரணையும் வாழ்முறையும் உலகியல் கண்ணோட்டமும் கொண்டுள்ளவர் தாசில்தார். அவரது மேற்சொன்ன நிலைகளுக்கு நேரெதிர்  நிலையில் வாழ்பவர் தலையாரி. இவர்களுக்கு ஒத்த அலைவரிசையில் இவர்களது இணையர்கள். மருத்துவராகிவிட வேண்டும் என்பதற்காக சித்திரைச்செல்வி நாமக்கல்லில் ஒரு மதிப்பெண் தொழிற்சாலையில் வைத்து தயார்  செய்யப்படுகிறாள். பீமாசெல்வன் உள்ளூரில் ஓர் அரசுப்பள்ளியில் படிக்கிறான். இருவரும் சமவயதினர், ஒரே படிப்பினர். ஆனாலும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளிலும் வாய்ப்புகளின் தரத்திலும் உள்ள வேறுபாடுகள் இரண்டு தனிப்பட்ட நபர்கள் சார்ந்தவையாய் அல்லாமல் சமூகப்பாகுபாட்டின் விளைவுகளாக இருப்பதை விரிவாகப் பேசுகிறது நாவல். வறுமை என்றில்லாவிட்டாலும் எளிய பொருளாதாரப் பின்புலமுள்ள குடும்பம், அரசுப்பள்ளி, ஆசிரியர்களின் வழிகாட்டுதல், பொதுநூலகம், புத்தகப்படிப்பு வழியாக உருவாகிவரும் பீமாவுக்கும், தனியார் பள்ளி, பாடப்புத்தகம், மனப்பாடம், எதுகேட்டாலும் கிடைக்கும்- கேட்காமலேகூட கிடைக்கும்- குடும்பப் பின்புலம் ஆகியவற்றினூடாக வளரும் சித்திரைச்செல்விக்கும் படிப்பின் வழியே எட்டவேண்டிய இலக்குகள் இயல்பாகவே வெவ்வேறானவை. சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களாக அவர்கள் இணைந்திருந்த காலம் நெடுக அவர்களிருவருக்குமிடையே நடைபெறும் உரையாடலில் அவள் பகுத்தறிவாதியாகவும் சாதி மறுப்பாளராகவும் தன்னை மறுவுருவாக்கம் செய்துகொள்கிறாள். இங்கு பீமா அவளை திருத்துகிறவனாகவோ நல்வழிப்படுத்துகிறவனாகவோ அல்லாமல் அவளது முயற்சிகளுக்கு உடனிருந்து உதவும் தோழனாக இருக்கிறான். 

என்னதான் ஓர் ஆணும் பெண்ணும் கல்வி, வேலை, பொருளாதார நிலை ஆகியவற்றில் சமமாகிவிட்டாலும் அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு சாதி ஒரு பெருந்தடையாக இருக்கிறது என்பதன் அவலசாட்சியமாக இவர்களது சகமாணவியும்-அவளது காதலனும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆதிக்கச்சாதியின் கெளரவத்திற்காக கொல்லப்படுவோம் என்கிற அச்சத்திலிருந்தே அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற உண்மையை எதிர்கொள்வதற்கு அந்தக் கல்லூரி வளாகம் திணறுவதையும் அதிலிருந்து மீள்வதற்காக கூட்டாக மேற்கொள்ளும் எத்தனத்தையும் நாம் கவனங்கொள்ள வேண்டியுள்ளது. காதலித்துவிட்டதற்காக திருமணம் என்றல்லாமல் திருமணம் செய்துகொள்வதற்காக சித்திரைச்செல்வியை காதலிக்கிற பீமா, தங்களுடைய காதலை வெற்றியடைந்த காதலாக்குவதில் உறுதியாக இருக்கிறான். சாதி மற்றும் அதிகாரப்பெருமிதத்தில் ஊறித் திளைத்துள்ள தனது பெற்றோரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி சம்மதம் பெறுவதற்கான போராட்டத்தை விடாப்பிடியாக நடத்தி இந்த வெற்றியை சாத்தியமாக்குகிறாள் சித்திரைச்செல்வி. 

மருத்துவக்கல்வியின் வரலாறு, மருத்துவப்பணியின் தனித்துவம், ரங்காச்சாரி போன்ற மருத்துவர்களிடமுள்ள அர்ப்பணிப்பு, அறிவியல் மனப்பான்மைக்குப் புறம்பான சாதியப் பிடிமானங்கள் என்று தனது துறைசார்ந்த பல விசயங்களையும் கதையின் போக்கிற்குள் வைத்தே கவனப்படுத்துகிறார் மருத்துவர் நா.ஜெயராமன். 

***

நாவலை படித்துவிட்டு தொலைபேசியில் தோழரை அழைத்து இந்த நல்லம்சங்களைத் தெரிவித்தேன். தொடர் உரையாடல் வழியாகவே கதையை வளர்ப்பது, அவனும் அவளும் ஒருவரையொருவர் மட்டுமீறி மதிப்பது, அவர்களுக்கிடையேயான உரையாடலில் பரஸ்பரம் புகழுரைகளை பரிமாறிக்கொள்வது, வயதுக்கு மீறி யோசிக்கிற/ பேசுகிற பீமா பாத்திரப் படைப்பு, முகப்போவியம் மற்றும் நூலாக்கத்தில் பாரதி புத்தகாலயத்தின் சிரத்தையின்மை போன்ற சில பலவீனங்களையும் தோழமையுடன் சுட்டிக்காட்டினேன். அடுத்தடுத்து எழுதுவதற்கு இந்த விமர்சனங்கள் உதவியாக இருக்குமென நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.  தொடர்ந்து எழுதட்டும்.


சென்னை மருத்துவக்கல்லூரியில்... 
மருத்துவர் நா.ஜெயராமன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:ரூ.220

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆய்வுதான் அறிவு - ஆதவன் தீட்சண்யா

                           பேரா. கா.அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிடாக வரவிருக்கும் தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் ...