வியாழன், செப்டம்பர் 29

பாசறை என்பது காரணப்பெயர் - ஆதவன் தீட்சண்யா

வெளிவரவிருக்கும் தோழர் பாசறை செல்வராஜ் அவர்களின் 
சுடர்ப்பயணம் நூலுக்கு எழுதிய அணிந்துரை

தலித் இலக்கியத்தில் தன்வரலாற்றுக்கென ஓர் இடமுண்டு. கருவிலேயே திருவுடையவராக தம்மைக் காட்டிக்கொள்ள எழுதப்படும் சுயசரிதை என்கிற ஜம்பக்கோப்புகளிலிருந்து அசலான வாழ்வனுபவத்தைக் காட்டும் தலித் தன்வரலாறுகள்  முற்றிலும் மாறுபட்டவை. அலங்காரமான மொழியோ உவமைகளோ ஒப்பீடுகளோ பொய்யோ புனைசுருட்டோ இல்லாமல் தன் வாழ்வை வாழ்ந்த- வாழ்ந்துகொண்டிருக்கிற விதமாகவே முன்வைப்பவை இந்தத் தன்வரலாறுகள். அதனாலேயே அவர்கள் தங்களைப் பற்றி பகிரும் எந்தவொரு செய்தியும் சாதியமைப்பின் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதுமான குற்றப்பத்திரிகையாக அமைந்துவிடுகிறது என்பதற்கு தோழர் பாசறை செல்வராஜ் அவர்களின் இந்நூல் பொருத்தமானதோர் எடுத்துக்காட்டு.   

காலனிக்காரங்க, சேரியாளுங்க, எஸ்.சி, அரிஜனம், தீண்டத்தகாதவர்கள் என்றெல்லாம் தம்மீது சுமத்தப்பட்ட அடையாளங்களின் பாரத்தால் நசுங்கிக்கிடந்த மக்கள் திரளினர், ஆதியில் பெளத்தர்களாயிருந்து பார்ப்பனீயத்தால் பெளத்தம் வீழ்த்தப்பட்டதன் தொடர்ச்சியில் நொறுக்கப்பட்ட ஆதிக்குடி என்னும் வரலாற்றைப் பொதித்த தலித் என்கிற அடையாளத்தைத் தெரிவு செய்யும் நிகழ்வுப்போக்கு முனைப்படைந்த காலக்கட்டத்தில் செல்வராஜ் பொதுவாழ்வுக்குள் தீவிரமாக நுழையும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார். தனது வாழ்நிலை எழுப்பிய கேள்விகளுக்கு விடைதேடும் தீவிரத்தின் வழியாக உள்திரண்ட கூருணர்வினால் அவர் மிக இளம்வயதிலேயே சாதியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தன் வாழ்வினை ஒப்புக்கொடுத்திருக்கிறார்.  

அக்ரஹாரமும் அதைச் சுற்றி ஊரும், ஊருக்கு வெளியே  சேரியுமாக உள்ள மூன்று நிலப்பரப்பில் தலித்துகளின் வாழ்விடம் சேரி. அக்ரஹாரத்தவர்கள் பெருநகரங்களுக்கு நகர்ந்து அங்கு மானசீகமாக பல அக்ரஹாரங்கள வலுவாக உருவாக்கிக் கொண்டுவிட்ட நிலையில் இப்போது எஞ்சியிருப்பவை ஊரும் சேரியும். உயர்வு தாழ்வு, மேலோர் கீழோர், புனிதம் தீட்டு, தூய்மை கலப்பு என சாதியும் சனாதனமும் கட்டமைத்த எதிர்மைகளால் ஊராட்களுக்குள் ஓராயிரம் பிரிவினைகள் இருந்தாலும் சேரியாட்களை ஒதுக்குவதிலும் ஒடுக்குவதிலும் அவர்களுக்குள் அபார ஒற்றுமை நிலவுகிறது. எனவே ஊருக்கும் சேரிக்குமான உறவு வரலாறு நெடுகிலும் மோதலாகவே இருந்துவருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து சகோதரத்துவத்துடன் வாழ்வதன் அவசியத்தை தலித்துகள் புகட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை செல்வராஜூவும் நிரூபிக்கிறார்.

ஒரு வாழ்விடம் என்றால் அங்கு இருந்தேயாக வேண்டிய எந்தவொரு அடிப்படைக் கட்டமைப்பும் சேரியில் இருப்பதில்லை. அவற்றை உருவாக்கித் தரவேண்டிய அரசு மிக வெளிப்படையாகவே தன்னை  ஊர்க்காரர்களுக்கு மட்டுமேயானதாக கீழ்ப்படுத்திக் கொண்டுள்ளது. ஆகவே கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வேலை, பொழுதுபோக்கு உள்ளிட்ட வாழ்வாதாரத் தேவைகளைத் தேடி அடுத்துள்ள நிலப்பரப்பான  ஊருக்குள் சேரிக்கார்கள் நுழைந்தாக வேண்டியிருக்கிறது. அவ்வாறு நுழைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் அவர்கள் ஊர்க்காரர்களின் கடும் எதிர்ப்பையும் வசவையும் தாக்குதலையும் அவமதிப்பையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வேற்றுநாட்டவர் ஆக்கிரமிப்பை அல்லது அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் பட்டாளத்தவருக்கு நிகராக, தம்மையும் தமது வாழ்நிலத்தையும் நீர்நிலைகளையும் வழிபாட்டுத்தலங்களையும் கடவுளையும் சாதி மேன்மையினையும் தீட்டாக்க வரும் சேரிக்காரர்களை தடுத்தாக வேண்டும் என்று ஊர்க்காரர்கள் களமிறங்குகின்றனர். இன்னைக்கு  இதைத் தடுக்காம விட்டா நாளைக்கு வூடேறி வந்து பொண்ணு கேட்பானுங்க என்று ஒவ்வொன்றையும் தடுக்கும் இந்தப் புனிதப்போரில் பங்கெடுக்குமாறு யாரும் யாருக்கும் கட்டளையிட வேண்டிய அவசியமின்றி ஒவ்வொருவருமே ஓராள் படையாக தம்மை வரித்துக் கொண்டு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.

சேரிக்காரர்கள் மீதான தாக்குதல் ஆயுதத்தாலும் இருக்கலாம், காகிதத்தாலும் இருக்கலாம். ஊரெல்லையில் மோரிக்கல் மீது உட்கார்ந்து கொண்டு அந்தப்பக்கம் போய் வருகிற சேரிக்கார்களை மறித்து ஏளனம் பேசி வம்பிழுத்து சுய அரிப்பைத் தீர்த்துக்கொள்கிற அதே மனநிலையில் தான் இன்று சமூக ஊடகங்களில் பலர் உலாவுகிறார்கள். இவங்களுக்கெல்லாம் வந்த வாழ்வைப் பார்த்தாயா? இவங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்கப் போவுது? படிச்சு பட்டம் பதவி வாங்கிட்டா அதுக்காக நாங்க மதிக்கணுமோ? என்று மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவன் அம்பேத்கர் சிலையை அவமதிக்கிற அதே வன்மத்தைத் தான் இவர்கள் மொழிக்குள் பதுங்கி எழுதிக் குமிக்கிறார்கள். இவர்களது எழுத்துகளுக்கெல்லாம் பொழிப்புரை எழுதினால் அது பழிப்புரையாக இழிவதைக் காணலாம்.  

 ஆனால் இதற்காகவெல்லாம் பணிந்து சேரிக்காரர்கள் சேரிக்குள்ளேயே தம்மை முடக்கிக் கொள்வதில்லை. தமது இயல்புரிமைகளுக்காக அவர்கள் சேரியைத் தாண்டி கண்ணுக்குத் தெரிந்த/ தெரியாத தடுப்புகளை தகர்த்துக்கொண்டு ஊருக்குள் நுழைந்தபடியே இருக்கிறார்கள். அவ்வாறு செல்வது ஊர்தான் உயர்ந்தது என்கிற பிரமையிலிருந்து அல்ல, இந்தப் பூமியின் எவ்விடத்திற்கும் சென்றுவர தமக்கும் உரிமையுள்ளது என்பதை அறிவிப்பதற்காகவே. தம்மை ஒதுக்கிவைத்துவிட்டு பொது என்று பம்மாத்துச் செய்யும் ஊரின் போலித்தனத்தை கேலி செய்கிறார்கள். நிலம் நீர் காற்று தெய்வம் பண்டிகை கொண்டாட்டம் இடுகாடு என்று மனிதவாழ்வுடன் தொடர்புடைய அனைத்தையும் உண்மையாகவே பொதுவில் வை என்கிறார்கள். இருதரப்பும் ஒருதரப்பாக உணர்வதற்குத் தடையாக உள்ள சாமிகளையும் ஆசாமிகளையும் கருத்தாக்கங்களையும் தூக்கிப்போட்டு மிதிப்போம் வாவென இருகரம் விரித்து அழைக்கிறார்கள். இப்படியான பேராளுமைகளில் ஒருவராக உயர்ந்து நிற்கும் தோழர் பாசறை செல்வராஜ் அவர்களின் தன்வரலாறாக விரிகிறது இந்நூல்.

 காஞ்சிபுரம் மாவட்டம் புத்தகரம் சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வராஜ், ஏழாம் வகுப்பு படிக்கும்போதே சாதியத்திற்கெதிரான தனது போராட்டத்தை தொடங்கிவிட்டிருக்கிறார். பள்ளிக்கூடத்தில் நிலவும் பாகுபாட்டையும் தீண்டாமையையும் ஏற்கப் பொறுக்காமல் சக மாணவர்கள் சிலருடன் சேர்ந்து பள்ளிக்கூட புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கிறார். அது சேரியாட்கள் மீதான ஊராட்களின் வன்கொடுமை என்று திட்டவட்டமாக புரிந்துகொள்ள முடியாத வயதென்றாலும்        தாங்கள் உணர்ந்த வலியை அப்படியே புகார்மனுவாக எழுதி வாலாஜாபாத்துக்கு நடந்தே சென்று பி.டி..அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார். அப்போது தொடங்கி இன்றுவரை ஓயாது தொடரும் தனது பயணத்தில் எழுப்பிவரும் ஒரே முழக்கம் சமத்துவம் என்பது மட்டுமே.

 நாம் இவ்விடத்தில் கவனம்கொள்ள வேண்டிய விசயம், ஏழாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவன் சமத்துவம் என்பதை எந்தவொரு தத்துவம் அல்லது அமைப்பின் வழியாக அல்லாமல் தனது சொந்த வாழ்வனுபவத்திலிருந்தும் தேவையிலிருந்துமே கோரியிருக்கிறான். பெண்களும்கூட சமத்துவத்தை இவ்வாறே கோருகின்றனர். வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் பூமியின் ஒவ்வொரு அங்குலத்திலும் பாரபட்சத்தையும் ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ளும் இவர்கள்  சமத்துவத்திற்கும் குறைவான எதுவொன்றையும் வேண்டவில்லை. இவர்களைப் பொறுத்தவரை சமத்துவம் என்பது புரட்சிகர முழக்கமோ அரசியல் இயக்கத்தின் இலட்சியமோ அல்ல, அன்றாட வாழ்விற்கு ஆதாரமான தேவை. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் பெண்களுக்கும் சமத்துவத்தின் மீதுள்ள இந்த இயல்பான விழைவை உள்ளுறையாகக் கொண்டே இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்திட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சமத்துவத்தை சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் அடைந்தாக வேண்டுமென்கிற தமது தவிப்பும் தேவையும் மார்க்சீயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று நம்பியே தலித்துகள் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குள் அணிதிரள்கிறார்கள்.

செல்வராஜ் தொடக்கத்தில் எம்சிபிஐ என்கிற கட்சியில் கொஞ்சகாலம் இருந்து பார்த்திருக்கிறார். பிறகு அதிலிருந்த சாதிய சாய்மானம் கண்டு வெதும்பிப்போய் வெளியேறியிருக்கிறார். அந்தக் கட்சியின் ஆட்களை அளவீடாக வைத்து மார்க்சீயத்தை எடைபோடக்கூடாது என்கிற தெளிவு அவருக்குள்ளது. எனவே மார்க்சியத்தின் மீதான அவரது பற்று சற்றும் குறையாமல் வலுப்பட்டே வந்துள்ளது. வாய்ப்புள்ள களங்களில் இடதுசாரிகளுடன் இணைந்து செயல்படுவதிலும் அக்கறை கொண்டுள்ளார். பின்னாளில் அவர் புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என பல்வேறு அமைப்புகளில் செயல்பட்டு வந்திருந்தாலும் அவற்றையெல்லாம் அவர் சாதியொழிப்பு சமத்துவம் சார்ந்த தனது கருத்தியலைப் பரப்பும் களங்களாகவே கண்டுவந்திருக்கிறார்.

ஒரு தனிமனிதரின் அன்றாட வாழ்வு இவ்வளவு செயலடர்த்தியும் பரபரப்பும் பொதுநலமும் கொண்டதாக இருக்குமா என்று வியக்குமளவுக்கு அவர் தனது வாழ்வை வடிவமைத்துக் கொண்டுள்ளார். இயல்பானவை என சகித்தேற்கப்பட்ட பல விசயங்களில் அவர் கண்டுணர்ந்த பாகுபாடுகள், ஒவ்வொரு நாளும் அவரது கவனத்திற்கு வந்த பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், தீர்வுக்கான போராட்டங்கள், போராட்டங்களால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் தொந்தரவுகள், நிரந்தரமற்ற வேலை, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற இயலாத வறுமை, மன உளைச்சல், இத்தனைக்கிடையிலும் சமரசமில்லாத மனவுறுதி என்று இந்நூல் தொட்டுச்செல்லும் புள்ளிகள் நம்மை வெவ்வேறு உணர்வுநிலைக்குள் ஆழ்த்துகிறது. தனது நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர் தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளும் பாங்கு பொதுவாழ்வில் உள்ளவர்கள் கைக்கொள்ள வேண்டியதாகும்.

அம்பேத்கர் பாசறை தொடங்கப்பட்ட போது அதன் தலைவராக தோழர் செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுபற்றி கூறும்போது, தன்னை விடவும் இந்தப் பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் என்று தனது தோழர்களில் ஒருவரை குறிப்பிடுமளவுக்கு அவர் தன்னடக்கமும் ஜனநாயக உணர்வும் கொண்டவராக இருக்கிறார். அம்பேத்கர் பாசறை காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகம் முழுமையிலும் ஆற்றியுள்ள பணிகள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் அனைத்தையும் ஒருசேர தொகுத்துப் படிக்கையில் அந்த அமைப்பு நீடித்திருக்க வேண்டும் என்கிற ஏக்கம் மிஞ்சுகிறது. உள்ளூர் பிரச்னைகள் முதற்கொண்டு உலகளாவிய பிரச்னைகள் வரையாக அந்த அமைப்பின் தலையீடு காத்திரமாய் இருந்துள்ளது. அம்பேத்கரிய கண்ணோட்டத்தை வளர்க்கும் முகத்தான் அது முன்னெடுத்த விவாதங்கள் இன்றைக்கும் பின் தொடரத்தக்கவை. தலித்துகளிடம் தீண்டாமை கடைபிடிக்கும்  ஆதிக்கச்சாதியினர், தலித்துகளின் உழைப்பைச் சுரண்டுவதிலும் அவர்களது சொத்துக்களையும் நிலங்களையும் அபகரிப்பதிலும் தயங்குவதில்லை. அவ்வாறாக பெருமாள்சாமி .ஜி உள்ளிட்ட பலராலும் காரணை பகுதியில் அபகரிக்கப்பட்ட அறுநூற்றுச் சொச்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்பதற்காக அம்பேத்கர் பாசறை விடுத்த அறைகூவலை ஏற்று போராட்டக்களத்திற்கு வந்த தலித்துகள் மீது தான் போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரைக் கொன்றார்கள் என்கிற செய்தி அந்த கணத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய பதற்றத்துடனும் ஆவேசத்துடனும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.

தமது நிலங்களை மீட்டுக்கொள்ள போராடிய தலித்துகள் மீதான இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட அதிகாரி ஒரு தலித் என்கிற பதிவு முக்கியமானது. தலித்துகளைக் கொண்டே தலித்துகளை ஒடுக்குகிற கேவலமான உத்தியை ஆதிக்கசாதியினர் பலகாலமாக கைக்கொண்டுள்ளனர். பதவிகளிலும் பொறுப்புகளிலும் ஒட்டிக்கொண்டு பிழைப்பதற்காக தம்மை பொது ஆட்களாக காட்டிக்கொள்ள வெகுவாக பிரயத்தனப்படும் இம்மாதிரியான கருத்தியல் அடிமைகள் குடியரசுத்தலைவராக, உயரதிகாரிகளாக, கலை இலக்கியவாதிகளாக, கட்சியாட்களாக பல ரூபங்களில் இயங்குவார்கள். ஆதிக்கவாதிகளை நோக்கி வீசும் வாளை இவர்கள் குறுக்கே பாய்ந்து நெஞ்சில் தாங்கிக்கொண்டு அந்தக் காயத்தை தியாகமெனக் காட்டி ஏதேனும் ஆதாயம் தேடுவார்கள் என்பதற்கு மேலுமொரு சான்று. 

தோழர் பாசறை செல்வராஜ் அவர்களின் தனிப்பட்ட வாழ்வும் தமிழகத்தின் சமூக அரசியல் பண்பாட்டுத்தளங்களில் இந்த அரைநூற்றாண்டுக்காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களின் வரலாறும் ஒன்றையொன்று இடைவெட்டிச் செல்வதைக் காணமுடிகிறது. இவ்வாறாக அந்தந்த வட்டாரங்களில் சமூக அசைவியக்கத்தைத் தூண்டி அடுத்தக்கட்டத்திற்கு மேலெடுக்க உழைத்தவர்களின் வரலாறுகளை தொகுக்கும்போது உள்ளீடற்ற அதிகாரப்பூர்வ வரலாறுகளை நிராகரிக்கும் ஒரு மாற்றினை உருவாக்க முடியும்.

வரலாற்றின் ஒருபகுதியாக தோழரின் வாழ்க்கை மாறியதன் பின்னே அவரது குடும்பத்தாரின் உழைப்பும் தியாகமும் இருந்ததை சொல்லியாக வேண்டும். அவர் பொருட்டு அவர்கள் அடைந்த துன்பங்களின் பட்டியல் மிக நீண்டது. சிறைக்கம்பிகளுக்குப் பின்னே இருந்து இணையரையும் குழந்தைகளையும் தொட்டுணர்ந்த கணங்களைப் பற்றிய வரிகளைப் படிக்கிறபோது பெருகும் துயரம் அடுத்தடுத்தும் அவர் போர்க்குணம் குன்றாது போராட்டங்களை முன்னெடுத்தைப் படிக்கும்போது ஆவேசமாகிறது.

பொதுவாழ்வு என்பதை தனிப்பட்ட வாழ்வைச் செழிப்பாக்கிக்கொள்ள பொறுக்கித் தின்னும் வழியாக்கி பலரும் சீரழிந்துவரும் நிலையில் அவர் தன் வாழ்வு குறித்து வெளிப்படையாக முன்வைத்துள்ள விசயங்கள் அவர்மீதான மதிப்பை உயர்த்துகின்றன. பொருளியல் வறுமை என்பது அறிவுரீதியாகவும் நேர்மையாகவும் செயல்படுவதற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்று அவர் இதுகாறும் கடைபிடித்துவரும் அறம் மெச்சத்தகுந்தது. இவ்வளவு ஆளுமைமிக்க ஒருவரது நூலுக்கு அணிந்துரை எழுதுவதற்கான அருகதை எனக்குண்டா என்கிற கேள்வியுடனேயே இதை எழுதியுள்ளேன். படியுங்கள்.


27.09.2022, அரூர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆய்வுதான் அறிவு - ஆதவன் தீட்சண்யா

                           பேரா. கா.அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிடாக வரவிருக்கும் தமிழ்நாட்டு வரலாறு: பாதைகளும் பார்வைகளும் ...